லத்தி     

author
5 minutes, 4 seconds Read
This entry is part 14 of 15 in the series 1 ஆகஸ்ட் 2021

 

           ஜனநேசன்

    கோடை விடுமுறை  முடிந்து  பள்ளி திறக்கப்பட்டது. நாற்பது நாள்களாக   பள்ளியை  மறந்து  இருந்ததால்  விரிந்த  சிறகுகளைச் சுருட்டி, மனசுக்குள்  மறைத்து   வகுப்புக்குள்  நுழைவது  வருத்தமாகத் தான்  இருந்தது .வெளிச் சுவரிலிருந்து  உள்ளே வகுப்பறைச்  சுவர்கள்  வரை பளிச்சென்று  வெள்ளை அணிந்திருந்தது . வெளிவாசல் நுழைவு வளைவில் நீல வண்ண பின்புலத்தில்  வெள்ளை  எழுத்தில் பசுபதீஸ்வரா நகராட்சி உயர்நிலைப் பள்ளி , கரூர் . பி எம் எச் எஸ்  என்று  அடைப்புக் குறிக்குள்   இருந்தது. அந்த பள்ளியே  சீருடை அணிந்தது போலிருந்தது. செவ்வாகைபூக்களும், மஞ்சள் கொன்றைப் பூக்களும் ,அகன்ற இலை களுக்குள் மறைந்தும் மறையாமலும் கண் சிமிட்டிய கருஞ்சிவப்பு பாதாங்காய்களும்   மனதுக்கு இதமாக வரவேற்பு கூறுவது போல் இருந்ததன .                                                             ஆறாம் வகுப்பிலிருந்து எழாம் வகுப்புக்கு  போகிறோம்  என்ற சந்தோசம்  பள்ளி தந்த எல்லாச் சள்ளை  சடவுகளையும்  மறக்கச் செய்தது .           ‘ ஆண்டுத்தேர்வில்  தேர்வானவர்கள்  உயர் வகுப்பில் அவரவர் பிரிவில் ,  எ பிரிவு  மாணவர்கள் எ பிரிவிலும்  , பி பிரிவு மாணவர்கள்  பி பிரிவிலும்  என்ற விதத்தில்  அமருமாறு அறிவுறுத்தப்  படுகிறது  ‘ என்று தகவல் பலகை அறிவித்தது. என்  எழாம் வகுப்பு சி பிரிவுக்கு  யார் வகுப்பாசிரியர்  என்று  அறிய  ஆர்வம்  பொங்கியது.

எழாப்பிலிருந்து  எட்டாப்புக்கு  போகும் அண்ணன்களிடம் கேட்டோம். அவர்கள்  ஒவ்வொருவரும்  ஒவ்வொரு வாத்தியார் பேரு சொல்லி மனசைக் கலக்கினார்கள். தமிழ் வாத்தியார்  அம்மையப்பன்  வந்தால்  தமிழ் ,சரித்திர பூகோளப் பாடங்களை  கதை கதையாய்ச்  சொல்லி நடத்துவார். கணக்குவாத்தியார்  வைத்தியநாதன் வந்தால் கூட நல்லது தான்  அவர் சிரிக்க சிரிக்க  கணக்கும் ,இங்லிசும் சொல்லிக் குடுப்பார் . விஞ்ஞான வாத்தியார் அப்துல் சுபான் வந்தால் கூட கதைகளாகச் சொல்லி சிரிப்பு மூட்டி பாடம் நடத்துவார். ஆனால்  இந்த அண்ணன்கள் பயமுறுத்துறான்களே  என்று கவலை வதைத்தது .

வகுப்பறைக்கு போகும் முன்  .பள்ளி விளையாட்டு மைதானத்துக்குப்  போனோம். கால்பந்து, கூடைப்பந்து கம்பங்கள் வெள்ளையும் கருப்புமாய் புதியதாய் மினுக்கின. நாங்கள்  கபடி விளையாடும் மைதானம்  அமராவதி ஆற்று புதுமணல்  பரப்பி மணத்தது. .கால்கள் பரபரத்தன. விளையாடலாமுன்னு ஆசைதான். மணி  அடித்து விட்டது. வகுப்பறைக்குப் போனோம். வேப்பமரத்தின் கீழுள்ள வகுப்பறை. குளிர்ச்சியாய் வேப்பம்பூ வாசமடித்தது. ஓடிப்போய்  அவரவருக்கு பிடித்த வரிசையில்  உட்கார்ந்து கொண்டோம்.

ஆறாப்பில்  வகுப்பாசிரியராய்  இருந்த  அம்மையப்பன்  வந்தார். எங்களுக்கு  ரொம்ப சந்தோசம் .  எந்திருச்சு நின்னு  ஒரே குரலில்  வணக்கம் சார்  சொல்லி உட்காந்தோம். அம்மையப்பன் வாத்தியார்  பாஸான எல்லோருக்கும்  வாழ்த்து சொன்னார் .                                 ” பெரிய பிள்ளை களாயிட்டீங்க .நல்லா படிச்சு  பெத்தவங்களுக்கும் ,,எங்களுக்கும், பள்ளிக்கூடத்துக்கும், இந்த நாட்டுக்கும்  நல்ல பெயர் வாங்கித் தரணும். இனிமேல் தான்  உங்களுக்கு  புது நண்பர்கள் வருவார்கள்.  புது வகுப்பாசிரியர்  வருவார். எனக்கு  ஒத்துழைப்புக் குடுத்து எல்லாரும்  படிச்சு  பாஸான மாதிரி  அவருக்கும்  ஒத்துழைப்பு குடுக்கணும்” என்று சொன்னார்.                                          நாங்கள்   இறுக்கமாக  இருந்தோம். “ என்ன , புது வகுப்பாசிரியருக்கு  ஒத்துழைப்பு கொடுப்பீங்களா “ ன்னு  திரும்பவும்  கேட்டார். நாங்கள்   அமைதியாக  இருந்தோம்.

அவர்  என் முன் கை காட்டி ,” என்ன  சொல்லு .” எனக்கு  தொண்டை  அடைத்துக் கொண்டது. குரல்  வரவில்லை.  அவர் புருவத்தை உயர்த்தி  ஆள்காட்டி விரலை  ஆட்டினார். மெல்ல   தொண்டையைச்   சரி செய்து கொண்டு , “ நீங்க தான்   எங்களுக்கு  வகுப்பாசிரியரா  வரணும்   சார் “ என்று சொல்லுவதற்குள்  கண்ணீர்  உருண்டது. எல்லா மாணவர்களும்  ,நீங்கதான்  எங்களுக்கு  வகுப்பாசிரியரா வரணும் சார் . என்று குரல் எழுப்பினர்.     

“ ரொம்ப நன்றி. ஆனால்  வகுப்பாசிரியர்  யாருங்கிறதை  எச்,எம் தான்  முடிவு செய்வார் .”

“நாங்க எச் எம் சார் கிட்டப்   போய் பேசுறோம் சார் “ என்றேன். எல்லா மாணவர்களும்  எழுந்து  நின்றனர்.

“உட்காருங்க. ஆர்வக் கோளாறில்  எனக்கு கெட்ட பெயர் வாங்கி தந்துறா தீங்க”.

என்னை  எழுந்திருக்கச்  சொல்லி , “ புது வகுப்பாசிரியர்  வர்றவரை  நீதான்  இந்த வகுப்பு லீடர் . சத்தம்  வராமப்  பார்த்துக்க. நான்  எச்.எம்  ரூம் வரை  போயிட்டு  வர்றேன் “  வெளியே  போனார். எங்களுக்கு  ஏமாற்றமாக  இருந்தது.  பக்கத்தில்  இருந்தவர்கள் , நான் லீடர் ஆக்கப் பட்டதற்கு கைகுலுக்கி  மகிழ்ச்சி  தெரிவித்தனர்.  வகுப்பறைக்குள்  ,யார்  புதிய வகுப்பாசிரியர்  என்று கிசுகிசுப்புகள்  பரவி இருந்தது.

  கொஞ்ச நேரத்தில் , ஐந்து  மாணவர்கள்  எங்கள்  வகுப்பறைக்குள்  வந்தனர். அவர்களுள்  தேவதாஸ்  இருந்தான்.  அவன் ஆறாப்பிலே  எங்க கூடப் படிச்சவன்தான். அவுங்க அப்பா  போலீஸ்  ஏட்டாக  இருக்கிறார். அவனை எங்களோடு  விளையாட்டில்  சேர்த்துக் கொள்ளவில்லை என்றாலும் , நாங்கள்  சாப்பிடும்  தின்பண்டங்களை  அவனுக்குக்  கொடுக்கவில்லை என்றாலும் ,” எங்கப்பா  கிட்ட சொல்லி  லத்தி அடி வாங்கித் தந்திருவேன் ‘ என்று  மிரட்டுவான்.  அவன்  சுமாராத்தான்  படிப்பான். இந்த வருஷம்  எங்க வகுப்பில்  இல்லை எனத் தெரியவும் , அவன் வேற ஸ்கூலுக்குப் போயிட்டான்   என்றிருந்தோம் .. அவன்  போன வருசமே  சொன்னான் . எங்க அப்பா கிட்டச்  சொல்லி ,ஏழாப்பு எம்.எச் எஸ் க்கு போயிருவேன். இந்த கூரைக் கட்டிடத்தில் படிக்க மாட்டேன்னு  சொன்னான். எம்.எச்.எஸில்  நல்ல படிக்கிறவங்களை , அதிகாரிக பிள்ளைகளைத்தான்  சேர்த்துக்குவாங்கன்னு பேச்சு .இவனுக்கு  அந்த ஸ்கூலில்  கிடைக்குமாங்கிறது  சந்தேகம் தான். சரி  எப்படியோ எங்களை பயமுறுத்தாம தொலைஞ்சா போதும்  என்று சந்தோசப்பட்டோம் .படுபாவி  வந்திட்டானே  என்று  எங்கள்  நண்பர்களுக்கு வருத்தம்.

ஆபிஸ் பியூன்  கந்தசாமி  வந்தார். அவர்  ஐந்து மாணவர்களது  பெயர்களை வாசித்து  அவர்களை  டி பிரிவுக்குப்    போய்  உட்காரச் சொன்னார். கந்தசாமி  எங்கள்  தெருவில்தான்  குடியிருக்கிறார். அவர் பள்ளிக்கூடத்தை பற்றி எது கேட்டாலும் ,  தெரிந்ததைச்  சொல்லுவார். அவரிடம்  கேட்டேன். இன்னும்  யார்  வகுப்பாசிரியர் என்று முடிவாகவில்லை. புது சிலபஸ் கொண்டு வந்திருக்காங்க . நல்ல திறமையா வகுப்பு எடுக்கிறவங்களை ஒம்பது ,பத்து, பதினோராம் வகுப்புகளுக்கு  மாத்திட்டு  அடுத்த நிலையில்  உள்ளவர்களை அடுத்தடுத்த கீழ் வகுப்புகளுக்கு  போடுவார்கள்  என்று சொல்லிப்  பறந்தார். தலைமை ஆசிரியர் கூட்டம்  இருப்பதால் அன்று  அரைநேரம்  தான்  பள்ளி. எல்லோரும்  வீட்டிற்கு  குதியாட்டதோடு ஓடினோம்.

அன்று  இரவு ஏழுமணி வாக்கில் பியூன்  கந்தசாமி  வீட்டுக்குப் போனேன். ஏழாப்பு ‘ சி ‘கிளாசுக்கு  யாரு  வாத்தியாருன்னு  கேட்டேன். ரகோத்தம ராவ்  என்கிறவரை  போட்டுருக்காங்க. அவரு  போன வருசம் வரைக்கும்  இந்தி பண்டிட்டாக  இருந்தவர். இந்தி மொழியை பாடத் திட்டத்திலிருந்து  எடுத்திட்டாங்க . ரெண்டு  இந்தி பண்டிட்டுகளை  ரெண்டு கிளாசுகளுக்கு  வாத்தியார் ஆக்கிட்டாங்க  என்றார். சரி புது வாத்தியாரிடம்  புதுசா படிப்போமுன்னு  வந்திட்டேன். 

மறுநாள்  ரகோத்தம ராவ்  சார்  வகுப்புக்கு  வந்தார். தேங்காய் போன்ற பின் குடுமி  முடிந்திருந்தார். கன்னமெல்லாம்  நரைத்த முடியும் குங்குமப் பொட்டும் வெற்றிலை குதப்பிய  கரகரத்த குரலில்  ராகமாய்ப்  பேசும் பாணி எங்களுக்கு புதுசு. நாங்கள்  சந்தித்த  வாத்தியார்களை  விட  வித்தியாசமாக  இருந்தார். அவரது பின்னால்  வந்த ஒரு பையன்  ஒரு பிரம்பைக்  கொண்டு வந்து  மேஜையில்  வைத்துப்  போனான். அவரது  தோற்றத்தைப் பார்த்து அதிர்ந்து போயிருந்த  எங்களுக்கு  அவரது  பிரம்பை  பார்த்ததும்  பயம் பற்றிக் கொண்டு விட்டது. வகுப்பு  அசாதாரணமான  அமைதியில் ஆழ்ந்தது.

அவர்  ஒவ்வொரு மாணவராக எழுந்து  பெயரைச்  சொல்லப்  பணித்தார். ஒவ்வொருவரும்  நடுங்கும் குரலில்  மின்னலாக எழுந்து பெயர் சொல்லி அமர்ந்தனர் . அவர்  கரகரத்த குரலில் , “ பேஷ் ,முப்பது பேரும் நொடியில் சொல்லீட்டிங்க .இப்படித்தான்  சமர்த்தா படிக்கணும். நான்  உங்களுக்கு  இங்லிசும் , ஹிஸ்டரியும்  படிப்பிப்பேன் . இந்தக்  கிளாஸின்  முப்பது பயல்களும்  என் கண்ட்ரோல்.  கவனமா  படிக்கிறவர்களுக்கு  பேஷ் சொல்லுவேன். படிக்காதவங்க, வீட்டுப் பாடங்களைச் செய்யாதவங்க கிட்ட  எனக்கு பதிலாக  இந்த  பிரம்பு பேசும். இந்த பிரம்பை தினம் ஒருத்தன்  வகுப்புக்கு வரும்போது  கொண்டு வரணும் , முடிஞ்சதும் கொண்டுபோய்  ஸ்டாப் ரூமில் எனதிடத்தில்  வச்சிறணும். எவனாவது  இதை ஓடிச்சாலோ ,ஒளிச்சாலோ   அவன்  ஒழிஞ்சான். “                   எல்லாரும்  நடுங்கிப் போனோம்.அவரோட  பிரம்பை  யாரும் எடுத்த வர மனசில்லை. அவராக  எடுத்துட்டு வரச் சொல்லவும் ,தேவதாஸ்  தான் போனான். அவன்  கையில் ஆட்சிக்கோல்  இருப்பதுபோல் பீற்றிக் கொள்வான்

பயத்தோடே  படிச்சோம். பயத்தோடு  வீட்டுப் பாடம்  எழுதிப் போவோம். எழுதாம  வந்தவனை  வலக்கையை  நீட்டச் செய்வார். உள்ளங்கையிலும் அடிவிழும், புறங் கையிலும்  அடிவிழும். இடக்கையை நீட்டினால்  “அபிஸ்டு  இந்தக் கையில்  தான் சாப்பிடுவாயா  “ என்றபடி  இடக்கையிலும் வலக்கையிலும்  அடிவிழும். ரத்தத்தால் கோடு போட்டது போல் தடிப்பு காந்தும். ஒருத்தன்  அடிவாங்கும் போது  மற்ற இருபத்தொன்பது பேரும் மனசுக்குள்  கதறுவார்கள். அவர்  லீவு  எடுக்கிற நாள்  இந்த வகுப்புக்கே தீபாவளி  மாதிரி  மகிழ்ச்சி மத்தாப்புகள் பூக்கும்.!

ஒரு நாள் , லத்தி தேவதாஸ்  வீட்டுப்பாடம்  எழுதின நோட்டை வீட்டில்  வச்சிட்டு  வந்திட்டேன்  என்றான்.  என்டா படவா ,  வீட்டுப்பாடம்  எழுதாம இருந்திட்டு  நோட்டை வச்சிட்டு வந்திட்டேன்னு  பொய்யா சொல்றே , போய்  எடுத்துண்டு வாடா  என்கவும் , தேவதாஸ்  திருதிருன்னு  விழித்தான். “எழுதாம ,படுவா பொய்யா சொல்றே “ என்று  அவனை  கையை நீட்டச் சொல்ல  அவன்  இடது கையை நீட்டி விட்டான். இடது கையிலும் அடி ,வலது கையிலும் அடி தாங்காமல் கையை  பின்னால்  இழுத்தான் . வலது  தொடையிலும் முழங்காலிலும்   பட்ட அடி தீயாக எரிந்தது. அலறினான். இதைப் பார்த்த  சில மாணவர்கள்  சிரித்து விட்டனர்.

அவருக்கு  கண்களில் கோபம்  கொப்பளிக்க  , “எவன்டா  சிரிச்சது ,? எந்திரிடா. “ யாரும் எழுந்திருக்கவில்லை.

“ எவனும்  சொல்லலைன்னா , வகுப்பில இருக்கிற  எல்லாத்துக்கும்  அடிவிழும் “  எந்த மாணவரும்  எழுந்திருக்க வில்லை. அவருக்கு  கோபத்தில்  உச்சந்தலை  அதிர  முகத்தைக் கோணலாக வைத்துக் கொண்டு காவிக்கரை படிந்த பற்கள் நற நறக்க  அந்த பிரம்பால்  மேஜையில்  அடித்தார். சாக்பீஸ் துகள்கள்  வெண்மேகமாய் பறந்தது. பயத்தைக்  கிளறியது.

நான்  மெல்ல  எழுந்து  சொன்னேன் .” சார்,  கோபிச்சுகாதீங்க. யாரு  சிரிச்சாங்கன்னு   தெரியாது. ஆனா  ஏன்  சிரிச்சாங்கன்னு  தெரியும்  சார்.”  அவர்  , சொல்லு  என்பதைப் போல் தலையை மேல்நோக்கி  அசைத்தார்.

“இந்த  தேவதாசோட  அப்பா   போலீஸ் ஏட்டு .  தேவதாஸ்  கேட்கிற  தின்பண்டத்தை  நாங்க குடுக்கலைன்னாலும்,  விளையாட்டில்  அவனை  சேத்துக்கலைன்னாலும்  தன்  அப்பாவிடம்  சொல்லி லத்தியடி வாங்கித்  தந்திருவேன்னு   மிரட்டுவான்  சார் . உங்க பிரம்பை அனுதினமும் அவன் எடுத்திட்டு வர்றதினால  நீங்க  அவனை  அடிக்க மாட்டீங்கன்னு  பெருமை பேசினான் சார். இப்போ  அவனே  சக்கையா அடி வாங்கிறான் இல்ல.  அதுக்காகத்தான்  பசங்க  சிரிச்சாங்க   சார். “ நான்   சொன்னதைக்  கேட்ட  தேவதாஸ்  தேம்பித் தேம்பி   அழுதான்.

வாத்தியார்  அவனைப் பார்த்ததும்  தேவதாஸ்  தலையைக்   குனிந்து  கண்களைத் துடைத்துக்  கொண்டான். அவர்  தலையை இடப்பக்கமாக அசைத்தார். அவன்  முகத்தை சட்டை நுனியில்    துடைக்கிற பாவனையில்   வகுப்பின்  இருபக்கமும்  இருக்கிற  பையன்களை  ஒரு கழுகு பார்வையில் நோட்டமிட்டபடி   அவனிடத்துக்குப் போனான்.. பையன்கள்  சிரிப்பை மறந்து இப்படியொரு  அடி யாரும்  வாங்கக் கூடாது என்று  இரக்கம்  சுரந்திருந்தனர் .  அவன்  டெஸ்கில் தலையை வைத்து  முகத்தை மூடிக் கொண்டான்.                               வாத்தியார் பிரம்பை  மேஜை மீது போட்டார் . சாக்பீஸ் துகள்கள் வெள்ளைக் கொடியை ஆட்டுவது போல்  பறந்தன .அவர் ஐந்து நிமிஷம் கண்களை மூடி உட்கார்ந்திருந்தார். பின்  அவர்  எழுந்து  போர்டில்  எழுதியதை அழித்தார்.  குடுமி அவிழ்ந்து  தொங்கியது. அவர்  ஆங்கில புத்தகத்தை விரித்தார். நாலாவது பீரியட்  முடிந்ததற்கான   மணி அடித்தது. ரகோத்தமன்  சார்  மௌனமாக வெளியேறினார். அந்த பிரம்பை எடுத்துக்  கொண்டு  யாரும்  அவர் பின்  செல்லவில்லை.

நானும்  நண்பர்களும்  தேவதாசுக்கு  ஆறுதல்  சொல்ல நெருங்கினோம்.  “ எந்த  மயிரானும்  கிட்ட வராதீங்க,  அப்புறம்  எனக்கு கெட்ட கோபம்  வந்துரும்  “ என்று  தேவதாஸ்  கொதித்தான். அவன்  சுவர் பக்கம் திரும்பி  தனியாக  உட்கார்ந்து  சாப்பிட்டான். அவன்  முன்னால்  சிரித்துப் பேசியபடி சாப்பிட்டால்  அவன்  மேலும்  கோபப்படுவான்  என்று  மரத்தடிக்குப் போய்ச்  சாப்பிட்டோம்.  அன்று  மதிய வகுப்புகள்  ரகோத்தமன் சாருக்கு  இல்லை.

மறுநாள்  வகுப்புக்கு  ரகோத்தமன் சார்  வரவில்லை. லீவ்  என்றார்கள். அதற்கடுத்த  நாள்களும்  அவர் வரவில்லை. வெவ்வேறு  வாத்தியார்கள்  வந்தனர். எங்களுக்கு   மகிழ்ச்சியாக  இருந்தது. ஆனால்  கால்பரீட்சை  நெருங்குவதால்  கவலையாகவும்  இருந்தது. தேவதாஸ்  சொல்லி அவனப்பா  மிரட்டியதால் தான்  ரகோத்தமன் சார்  லீவில போயி                விட்டாருன்னு  அவன்  சொல்லித் திரிந்தான். நான்  பியூன் கந்தசாமி  வீட்டில்   ரகோத்தமன்  சார் பற்றி  விசாரித்தேன். அவர்  அன்றைக்கு வகுப்பில்  என்ன நடந்தது  என்று  விசாரித்தார். சொன்னேன்.

 கந்தசாமி என்ன நடந்ததென்று சொன்னார் ; “ அன்று  மதிய உணவ சாப்பிடும் போது ,ரகோத்தமன்  சார்  தேவதாஸின்  அப்பா  பற்றி  விசாரித்திருக்கிறார். அவுங்கப்பா  ஏட்டு செல்லமுத்து , இந்தி எதிர்ப்பு போராட்ட  சமயத்தில  போராட்டக்கார்களை  லத்தி கொண்டு  அடிச்சதில  நிறைய பேருக்கு  மண்டை  உடைந்து ரத்தம் கொட்டியது பலருக்கு  கைகால் எலும்புகள்  முறிந்தன. போராட்டக்காரர்கள்  அவரைச் சூழ்ந்து கொண்டனர் . மலபார் போலிஸ் பட்டாளம்  தலையிட்டு  அவரை மீட்டது. அவரது  போட்டோ போட்டு  எல்லா நியுஸ் பேப்பர்களிலும்  வந்து பெரிய அளவில் பேசப்பட்டது  சாதாரண போலிசாக இருந்தவருக்கு  அரசாங்கம் ஏட்டு  பதவி உயர்வு  கொடுத்தது. இந்தத்  தொகுதி எம்பி ,எம் எல் எ  எல்லாம் அவரு  சாதிக்காரங்க  என்று  அவரது  பின்னணியைச்  சொல்லக் கேட்டதும்   ரகோத்தமன்  சாருக்கு  ரத்தக்கொதிப்பு  அதிகமாகி  மயக்கம் போட்டுட்டார். அப்புறம்  பெரியாஸ்பத்திரியில்  சேர்த்திருக்கு. அதனாலதான் அவரு  வரலை. அவரு  இனி இந்த ஸ்கூலுக்கு வரமாட்டார். திருச்சிக்கு  வேலை மாத்தி வாங்கிட்டுப் போயிருவாருன்னு  பேசிக்கிறாங்க. “ இந்த விஷயத்தை  நான்  யாருக்கிட்டவும்  சொல்லலை.

.எச்.எம்  சார்  இங்க்லீஷ் பாடம்  எடுத்தார். அப்துல் சுபான் வாத்தியார்  சரித்திரம் நடத்தினார். படிப்பு பற்றி கவலை இல்லை.தேவதாஸ்  சண்டியர் மாதிரி  மிரட்டலாகத்  திரிந்தான். எங்களுக்கு  வர்ற வாத்தியாருக  அடிப்பவர்கள்  யாருமில்லை .மிரட்டுவார்கள். பெஞ்சு மேல ஏறி நிற்கச் செய்வாங்க. இம்போசிசன் ஐம்பது, ,நூறு தடவைன்னு  எழுதச் செய்வாங்க. மிஞ்சிப் போனால்  அப்பா, அம்மாவை  அழைத்து வரச் சொல்லுவர்கள். ஒரு நாள்  வீட்டுப்பாடம்  தேவதாஸ்  எழுதிவரலைன்னு  எச் எம் சார்  அவனது  அப்பாவை  அழைத்து வந்தால் தான்  ஸ்கூலுக்குள்ளே  நுழைய முடியும். ரெண்டு நாளில்  அப்பாவை அழைத்து வரலைன்னா  டிசி கொடுத்து  அனுப்பிருவேன். அப்புறம் இந்த வருஷம் எங்கேயும்  சேர்ந்து படிக்க முடியாது  என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார்.

தேவதாஸ்  போய்  அழுகவும்  அவனது அப்பா வந்து விட்டார். ஏட்டு செல்லமுத்து  வர்றதைப் பார்த்ததும் ஒரு  லத்தி காக்கி சீருடையும் கத்தி மாதிரி விறைத்த  காக்கி  ட்ரவுசரும் ,வட்டக்கூம்பு தொப்பியும்  அணிந்து  வந்தது போலிருந்தது . ஆபிசே  அதிர்ந்து உறைந்து நின்றது. ஏட்டு   நுழைந்ததும் எச் எம்க்கு  சல்யூட்  அடித்தார். கொஞ்சம் இருங்க ,இந்த பைலை  முடிச்சிட்டு வந்திர்றேன்  என்றார்  தலைமை ஆசிரியர்.                                                 ஏட்டு  செல்லமுத்துக்கு  முகம்  சிவந்து போனது. பல்லை கடித்து    உதட்டை இறுக  மூடிக்கொண்டு  தலைமை ஆசிரியர் அலுவலகச்  சுவற்றில்  பதிக்கப்பட்ட  பள்ளி வரலாறு, வாங்கிய கேடயங்கள் , பள்ளிக்கு வந்த முக்கிய பிரமுகர்கள் படங்கள்,அவர்களிடம்  விருது பெற்ற மாணவர்களது போட்டோக்கள்   எல்லாம்  பார்த்தார். பெருமூச்சு விட்டார். முப்பது  நிமிடங்கள்  ஊர்ந்திருந்தது.                                                     அரசுச் சின்னம் பொறித்த  சிகப்பு, நீலநிறப் பட்டைகள் பொதிந்த வட்டத்தில் கூம்பு போன்ற வடிவத்  தொப்பியை கையில் எடுத்துக் கொண்டு , “சார், எம்மகன்  என்ன தப்பு செய்தாலும்  கண்ணு, காது, மூக்கை விட்டுட்டு அடிச்சு தோல் உரிச்சிருங்க சார். நான் ஏன்னு  கேட்க மாட்டேன், அவனை  எப்படியாவது படிக்க வச்சிருங்க சார்” என்று  ஏட்டு  செல்லமுத்து  சொல்லும்போது  அவரது முகமெல்லாம்  வியர்வை  அருவியாய் உருண்டது  .வேர்வை கோர்த்த மீசை நமநமத்தது. காக்கிச்சட்டை பின்புறம்  நனைந்து இருந்தது.

“ சார், நாங்க  எங்க மாணவர்களை  அடிக்கிறதில்லைன்னு  முடிவு         எடுத்திருக்கோம் . அடிக்கிறதினால  ஒருத்தரை  திருத்தியிறலாம் என்கிறதில  நம்பிக்கை இல்லை. உங்க பைய்யன்  ஒழுங்கா பள்ளிக்கு வந்து அக்கறையா  படிக்கிறதுக்கு  பெற்றோர்கள் கவனிப்பும்  ஒத்துழைப்பும் இருந்தால்  போதும் .”

  கருப்பு  வைரமாக  பளபளக்கும் பூட்சுக்குள் சிறைப்பட்டிருந்த  ஏட்டு  செல்லமுத்துவின்  விறைப்பான   கால்கள் வேர்த்து  தளர்ந்து  அதிர்ந்தன அவரது  லத்தியை  யாரோ பிடுங்குவது  போல் உணர்வு.

 

Series Navigationஅறிஞர் அண்ணா போற்றிய அக்கிரகாரத்து அதிசய மனிதர்!ஒடுக்கம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *