கவிஞர் பா.தென்றல்
சிறகில் இருந்து பிரிந்த இறகு..
பாரதி பாடினான் அன்று, ‘தனியொருவனுக் குணவிலை யெனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று இன்று சொந்த நிலம் வேண்டி ஓர் இனமே உணவு, உடை, உடைமை ஆகியவை தொலைத்து, உறைந்து வாழ இடமில்லாமல் தவிக்கும் போராட்டம். இந்நிலை கண்டு நெஞ்சு பொறுப்பதில்லை, கண்மூடிக் கிடப்பதில்லை அச்சமில்லை, அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்று துணிவோடு பிறந்திருக்கிறது இந்நூல்.
குரு அரவிந்தனின் எழுத்துக்களில் தென்றலின் மென்மையும், புயலின் வன்மையும் கலந்து வீசுகின்றது. நகைச்சுவைச்சிற்றாறும், கோபப் பெருங்கடலும் சங்கமித்து ஓடுகின்றன. இடம், பொருள், நிகழ்ச்சி, பாதிப்பு, மனவெழுச்சி, தன்மானம் என்னும் வழித்தடங்களில் தனது தடம் மாறாது பயணிக்கிறது இவரது எழுதுகோல். கட்டுரையா? புதினமா? என்று வாசிப்பவர் ஐயுறும் வண்ணம் நகர்கின்றன அத்தியாயங்கள்.
புலம்பெயர்ந்த தமிழரொருவர், தமது தாயகத்தில் நிகழ்ந்தவற்றை மனதில் சுமந்து பாரம் தாங்காமல் புத்தகச் சுமைதாங்கிக் கல்லிலதை இறக்கி வைத்திருக்கிறார். ஆறாம் நிலத்திணை என்று புத்திலக்கணம் படைக்கிறார். பனியும் பனி சார்ந்த இடமும் பனிப்புலம் என்று இந்தியா இலங்கை ஆகிய நாடுகளுக்கு அடுத்ததாக தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் ஒன்றான கனடா நாட்டினைக் கவனப்படுத்தி இருப்பது புதுமை. புதியதொரு திணையை உருவாக்கி சங்க இலக்கியத்தின் ஐந்து திணைகளுக்கும் அடுத்ததாக ஆறாம் நிலத்திணைக்கும் உரிய முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள்களும் குறிக்கப்பட்டு, பொதுப்பண்பாக உருகலும், உருகல் நிமித்தமும் என்று குறிப்பிடப் பட்டிருப்பது சிறப்பு.
தமது பிறந்தகமும், வளர்ந்தகமும் நெய்தலும், மருதமும் என்று பெருமிதமாய்ச் சொல்லிக் கொள்ளும் வேளையிலே புலம் பெயர்ந்த மக்கள் இழந்தவற்றையும், வாழ்நாளில் திரும்பவும் பெறமுடியாத எத்தனையோ சுகங்கள் அவர்களிடம் இருந்து பலவந்தமாகப் பறித்து எடுக்கப்பட்டிருக்கிறது என்பதையும், தாய்மண்ணின் பெருமிதங்களையும், கடந்தகால வாழ்க்கை முறைகளைப் பற்றியும் அடுத்த தலைமுறையினர் தெளிவாய் இன்னும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று காலத்தே ஆவணப்படுத்தி இருக்கிறார்.
ஒன்றாரியோ ஏரிக்கரையில் அமர்ந்து சீகல் கடற்பறவையை இவர் ரசித்துக் கொண்டிருந்த நேரத்தில் அந்த அச்சமறியாப் பறவையும் ஆங்கிலக் கவிஞர் தாமஸ் ஹார்டி எழுதிய ‘வாலாட்டும் குருவியும் குழந்தையும்’ (Wagtail and Baby) என்ற பாடலில் இடம் பெற்ற, மனிதனைக் கண்டால் மட்டுமே பயந்து சிறகடித்துப் பறந்த அந்தப் பறவையும் என் நினைவுப் பரப்பில் சிறகடித்துப் போயின. தாயகத்தில் சீகல் பறவையாக வாழ்ந்தவர்கள், மனிதநேயமற்றவர்களைக் கண்டுதானே வாலாட்டும் குருவியைப் போலப் பல பகுதிகளுக்கும் பறந்து செல்ல வேண்டியதாயிற்று.
அமைதிக்கு எதிர்வினை என்ன? என்று தன்னைத்தானே வினவிக் கொள்ளும் எழுத்தாளர், ஆர்ப்பாட்டமா? போராட்டமா? என்று கேட்டு, அமைதியான ஆர்ப்பாட்டமாக, போராட்டக்களத்தில், தாம் வாழ்ந்த இடத்தில் நடந்த சில விடயங்களைப் பதிவு செய்திருக்கின்றார். தொல்காப்பியர், சங்க இலக்கியப் புலவர்கள், பட்டினத்தார், ஒளவையார், திருவள்ளுவர், கவியரசர் கண்ணதாசன், கவிப்பேரரசு வைரமுத்து, முத்துக்குமாரக்கவிராயர், நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் ஆகியோரின் சொற்களையும் அணைத்துக் கொண்டு இலங்கைக்கும் கனடாவுக்குமாகப் பயணம் நடக்கிறது. சுருக்கமாக இதனைப் பிரமிள் கவிதை வரிகளில் சொல்லலாம்:
சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது.
தற்காலிகப் பிரிவென நினைத்து தாயகம் விட்டுப் பிரிந்து அயலகத்தில் குடியேறினாலும், அது நிரந்தரம் என்று தெரிந்த போது, பள்ளிகூடம், கல்லூரி, நண்பர்கள், கடந்து சென்ற பெண் மயில்கள், பார்த்து ரசித்த காங்கேயன்துறை கடற்கரை, மற்றும் சண்டிலிப்பாய் வயல்வெளிக்கரை, படமாளிகைகள், சபை சந்தி என நினைவு இறகுகள் ஒவ்வொன்றாக மீட்டெடுத்துப் புதிய சிறகில் ஒட்டி வைத்துக் கொள்ள முயலும் மனிதப் பறவையின் எழுத்து இது.
போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆகியோரெல்லாம் ஒரு கோட்டைகூடக் கட்ட முடியாமல் மக்களின் எதிர்ப்புக் காரணமாகப் பின் வாங்கிய சிறப்பு மிகுந்த காங்சேந்துறை கலங்கரைவிளக்க ஒளியும், சீமெந்துத் தொழிற்சாலை சங்கொலியும் ஒலியொளிக் காட்சிகளாகின்றன. இவரது எழுத்தில் ராணுவப்படை முகாம்களைக் கடந்து பாடசாலைக்குச் செல்லும் ஒரு மாணவியின் மனநிலை எப்படி இருக்கும் என்பதைச் சொல்லும் வரிகளில் ஒரு தகப்பனின் வலி தெரிகிறது.
நீராவியில் இயங்கும் கரிக்கோச்சிகளின் சோகமான நிலை, நில ஆக்கிரமிப்புகள், திட்டமிடப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள், நண்பன் சிவாவின் சயனைடு தற்கொலை, இன்ஸ்பெக்டர் குமரேசனும் அவரது மகளும், பாடசாலைப் பிரிவுகள், புதிய தரப்படுத்தல் முறையால் தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் வாய்ப்பை இழக்கத் தொடங்கியது, இதன் காரணமாக ஏற்பட்ட விரக்தியில் அதிக இளைஞர்கள் இயக்கங்களில் இணைந்தது, அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படும் போதெல்லாம் வரும் கந்தசாமியின் நினைவு ஆகிய பல்வேறுபட்ட துயரமும் துக்கமும் நிறைந்த நிகழ்வுகளையும், வண்ணம் கொண்ட வேலி நிலா, ஊரே களைகட்டும் திருமணவிழா, மற்றும் ஊஞ்சல் திருவிழா ஆகிய குதூகலத்தையும், கலந்தே உரையாக்கம் செய்திருக்கிறார்.
சண்டிலிப்பாயில் விவசாயம், சகாதேவனும் மாபிளும், வகுப்பில் தேவாரம் பாடமாக்காத மாணவர்களுக்குப் பின்னணி கொடுத்தது என்று பலவற்றையும் தம் நினைவிலிருந்து மீட்டு தொகுத்தளித்தவர் இறுதியில் புரியாத புதிர் ஒன்றைச் சொல்லியிருப்பதையும், வாசகர்கள் படித்து தெளியவேண்டும்.
இந்நூலின் அடுத்த பகுதியாக, ‘கள்ளிக்காடும் கண்ணீர் நாடும்’ என்ற தலைப்பில் கவிப்பேரரசு வைரமுத்துவின் வைரவரிகளோடு கட்டுரையைத் தொடங்கி, ஈழத்திணையின் பண்புகளை, கள்ளிக்காட்டு இதிகாசத்தோடு ஒப்புமைப்படுத்தி எழுதியிருக்கும் பக்கங்களில் ஒவ்வொரு தமிழனும் மறக்க முடியாத ஈழத்தில் நடந்த நிகழ்வுகளை கண்ணீரும், செந்நீரும் கலந்து எழுதியிருக்கிறார். ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல, உலகெல்லாம் பரந்து வாழும் ஒவ்வொரு தமிழரும் படிக்க வேண்டிய நூல் இது.
எரிக்கப்பட்ட காடு நாம்/ ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது / எஞ்சிய வேர்களில் இருந்து. இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் / தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் / இல்லம் மீழ்தலாய் / மீண்டும் மீண்டும் வாழும் ஆசையாய் / சுதந்திர விருப்பாய் / தொடருமெம் பாடல் என்ற கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனின் மொழியில் தொடரட்டும் குரு அரவிந்தனின் எழுத்துப் பயணம். வாழ்த்துக்கள்.
இனிய நந்தவனம் பதிப்பகம் அலைபேசி: 9443284823
- கவிதையும் ரசனையும் – 20 – சுகந்தி சுப்ரமணியன்
- நான் புதிதாக எழுதிய அன்பே அகல்யா என்ற குற்ற புலனாய்வு புதினம் அமேசானில் கிடைக்கும்.
- ஆவணப்பட விமர்சனப் போட்டி
- சில நேரங்களில் சில சில மனிதர்கள்
- எனக்குப் புரியவில்லை
- கடிதம் கிழிந்தது
- குரு அரவிந்தனின் ஆறாம் நிலத்திணை
- குடிகாரன்
- பயங்கரவாதி – மொழிபெயர்ப்புக் கவிதை
- இறுதிப் படியிலிருந்து – சார்வாகன்
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 252 ஆம் இதழ்
- மௌனம் ஒரு காவல் தேவதை
- ஜப்பானில் பேரழிவு செய்த அமெரிக்காவின் முதல் கோர அணுகுண்டுகள்
- பரிதாப மானுடன்
- கவிதைகள்
- கனத்த பாறை
- அஞ்சலிக்குறிப்பு: மாத்தளை கார்த்திகேசு விடைபெற்றார் – இலங்கை மலையக மக்களின் ஆத்மாவின் குரல் ஓய்ந்தது !
- இருளும் ஒளியும்
- சோமநாத் ஆலயம் – குஜராத்
- இறுதிப் படியிலிருந்து கர்ணன்
- குருட்ஷேத்திரம் 3 (கிருஷ்ணர் மூலம் வியாசர் சொல்ல நினைப்பது என்ன)