இறுதிப் படியிலிருந்து  –   பீஷ்மர்  

author
0 minutes, 8 seconds Read
This entry is part 13 of 13 in the series 15 ஆகஸ்ட் 2021

                                                                                                         

                             ப.ஜீவகாருண்யன்

(பீஷ்மர்-கதை எனது -உயிர்க்குமிழ்- என்னும் சிறுகதைத் தொகுப்பில்-அம்புப்படுக்கையில்-  என்னும் தலைப்பில் வெளியானது என்பதும்  இந்த பீஷ்மர் கதையே என்னை -இறுதிப் படியிலிருந்து – என்னும் பொதுத் தலைப்பின் கீழ் மற்ற கதைகள் எழுத தூண்டுதலாக இருந்தது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.)

குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் பத்தாம் நாள் போர் இருதரப்புக்கும் பெருஞ் சோகத்தை ஏற்படுத்துவதாக முடிந்து விட்டது. பத்து நாட்கள் நடந்த போர்களிலும் கெளரவர் அணிக்காக உறுதிபட நின்று சமர் புரிந்த பிதாமகர் பீஷ்மர், ஆணுமற்ற பெண்ணுமற்ற சிகண்டியை எதிர் கொள்ள விருப்பமில்லாமல் செயலற்றவராய் நின்று சிகண்டியின் தாக்குதலில் நிலை குலைந்த பிறகு கிருஷ்ணனின் தூண்டுதலில் அர்ச்சுனனின் அம்புக்கு ஆட்பட்டு தேர்த்தட்டிலிருந்து தெறித்துக் கீழே விழுந்தார். துரியோதனனை முதலாக வைத்து துரோணர் உட்பட்ட கெளரவ முக்கியஸ்தர்களும்  பாண்டவர்களும் கலங்கிய நெஞ்சும் கண்ணீருமாக பீஷ்மரைச் சூழ்ந்து நின்றனர். ‘எப்போதும் என்னை இழித்துப் பேசுவதையே வழக்கமாகக் கொண்டிருக்கும் பீஷ்மர் போரிலிருந்து விலகினால்தான் ஆயுதத்தைக் கையிலெடுப்பேன்!’ என்று இத்தனை நாட்களும் களத்திற்குள் காலடி வைக்காதிருந்த கர்ணனும் பீஷ்மரின் அருகிலே வந்து நின்றான். பிதாமகருக்கு அர்ச்சுனன் கையால் சரதல்பம்– அம்புப்படுக்கை- அமைத்துத் தரப்பட்டது.

அனைவரும் அதிசயிக்க, “கர்ணா, நதிகளுக்குச் சமுத்திரம் போல, விதைகளுக்கு மண்ணைப் போல நீ நண்பனுக்கு மாறாத ஆதாரமாக விளங்குபவன்! துரியோதனனுக்காக காம்போஜர்களை, இமய துர்க்கங்களின் ராஜாக்களை வென்ற திறன் மிகுந்தவன்! இன்று துரியோதானன் தானே தனக்கு வலியைத் தேடிக் கொண்டிருக்கிறான். அவனைக் காப்பாற்று!” என்று கர்ணனிடம் நயந்து பேசிய பீஷ்மர் துரியோதனைப் பார்த்துச் சொன்னார்.

“துரியோதனா, இனியேனும் அறிவுத் தெளிவு பெறு. பாண்டவர்களுடன் சமாதானமாகப் போ. தாமதிக்க வேண்டாம். வீணாக உயிர்ப் பலி வேண்டாம். பாழும் இந்த யுத்தம் என்னோடு – பீஷ்மன் என்னோடு முடியட்டும். அப்பனே, நான் சொல்வதைக் கேள். பாண்டவர்களுடன் சமாதானம் செய்து கொள்!”

கனிவு கூடிய பீஷ்மரின் அறிவுரையை துரியோதனன் காதுகளில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை. நோயாளிக்கு இறக்கும் தறுவாயிலும் மருந்து பிடிக்காது. ‘கசக்கிறது’ என்பான். அவ்வாறே துரியோதனனுக்கும் பிதாமகரின் அறிவுரை – அறவுரை அறவே பிடிக்கவில்லை. ‘சரிதான் கிழவா! மூடு வாயை!’ என்பது போல் கூடியிருந்தவர்கள் அனைவரும் பீஷ்மரின் இறுதி குறித்துக் குமைந்து கிடந்த அந்தத் தருணத்திலும் அவன் கொஞ்சமும் இளகாமல் இறுக்கமாகவே இருந்தான்.

காக்கை – கழுகுகளுக்கு, நாய் – நரிகளுக்குப் பட்சணம் ஆகாத வகையில் இறந்து பட்ட போர் வீரர்களையும், யானைகள், குதிரைகளையும் ஹிரண்யவதி நதிக்கரையோரம் புதைப்பதற்காக இத்தனை நேரம் களத்தில் ஊடாடிய கோவேறு கழுதைகள் பூட்டிய வண்டிகளும் தங்கள் வேலையை முடித்து ஓய்ந்து ஒதுங்கி விட்டன. வாரியிறைத்த சோளப் பொரிகளைப் போல் வானத்து நட்சத்திரங்கள் பளிச்சிட்ட காலக்கணக்கில் அடுத்த நாள் போர் குறித்த யோசனையுடன் பிதாமகரைச் சூழ்ந்திருந்தவர்கள் அவரிடம் கண்ணீருடன் விடை பெற்றனர்.

சரதல்பத்தில் கண்மூடிக்கிடந்த பிதாமகரின் காதுகளில், “தாத்தா!” என்றொரு அழைப்பு ஈனஸ்வரமாகக் கேட்டது.

“யாரப்பா, அர்ச்சுனனா? இன்னுமா இங்கே நிற்கிறாய்? பாசறைக்குச் சென்றவர்களுடன் நீயும் சென்றது போல் தெரிந்ததே! பாசறை சென்று திரும்பி விட்டாயா? களைப்பாக இருக்கிறது. கண்களைத் திறக்க முடியவில்லை, அர்ச்சுனா. அர்ச்சுனா, ‘தாத்தாவை இறுதி முடிவுக்காக சரதல்பத்தில் படுக்க வைத்து விட்டோமே!’ என்று வருந்துகிறாயா? இதில் வருத்தப்படுவதற்கு என்ன இருக்கிறது? மண்ணில் பிறந்த உயிர்கள் அனைத்துக்கும் மரணம் ஒன்று மட்டுந்தானே நிச்சயம்? அந்த நிச்சயமான மரணம்–சிகண்டியின் தாக்குதல்களால் நீசமாக நிகழ்ந்திருக்க வேண்டிய மரணம்–வீர புருஷன் உன் வழியில் நான் விரும்பி ஏற்றுக் கொள்ளக் கூடியதாக-வீர மரணமாக விளைந்திருக்கிறது. எட்டாம் நாள் போரில் நீ கூட உன் மனைவி (நாக கன்னிகை) உலூபிக்குப் பிறந்த அரவானை அலம்புஷனிடத்தில் பறி கொடுத்து விட்டாய். வருத்தப்படுவதால் போன உயிர் திரும்ப வந்துவிடவா போகிறது? நீ வீரனே ஆனாலும் பீமனைப் போல் மன உறுதியில்லாதவன். அதனால் தான் மரணத்தின் வாசலில் நிற்கின்ற கிழவனைத் தனித்தவனாகத் தேடி வந்து, ‘தாத்தாவின் சாவுக்கு நாம் காரணமாகி விட்டோமே!’ என்று  தவிதவித்து நிற்கின்றாய்.

இந்த விஷயத்தில் உன்னைவிட உன் அண்ணன் யுதிஷ்டிரன், கிருஷ்ணன், உனது தம்பிமார்கள், துரியோதனன் வகையறாக்கள் அனைவரையும் விட பீமனைத் தான் எனக்கு மிகவும் பிடிக்கிறது. ‘மண்ணாசையால்-ஆட்சியதிகார போதையால் ஒன்றல்ல, இரண்டல்ல என்னும் வகையில் பாண்டவர்கள் உங்களுக்கெதிராக துரியோதனன் மேற்கொண்ட மோசமான காரியங்கள் அத்தனைக்கும் துணை நின்றவன்–அவனது அத்தனைக் காரியங்களையும் ஆமோதிப்பவன் போல செயலற்றுக் கிடந்த கிழவன் தாத்தாவாகத்தான் இருக்கட்டும், வேறு யாராகத்தான் இருக்கட்டும். சாகும் தறுவாயில் கிடக்கிறான் என்பதற்காகக் கண்ணீர் சிந்துவதா?’ என்னும் எண்ணத்தில் எனது இறுதி நிலையைப் பார்க்க விரும்பாத பீமனின் மன உறுதி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

 ‘துரியோதனன், பாண்டவர்கள் உங்களைப் பூண்டறுத்து விட வேண்டும்’ என்னும் எண்ணத்தில் அரக்கு மாளிகையில் வைத்து எரிக்க முயற்சித்தது முதற்கொண்டு, மூர்க்கன் சகுனி மூலமாக நடந்தேறிய கள்ளப் பகடை, ஆண்கள் மட்டுமே கூடி நின்ற அரசவையில் துச்சாதனன் பாஞ்சாலியின் ஆடை களைய முயற்சித்த விபரீதம், பதின்மூன்று ஆண்டுகள் வனவாசம்-ஓராண்டு அஞ்ஞாத வாசம் என்று அடுக்கடுக்காக அடுத்தடுத்து திருதராஷ்டிரனை உடந்தையாகக் கொண்டு விளைவித்த அநியாயங்கள்–அக்கிரமங்களுக்கெதிராக அதிகாரம் ஏதுமற்ற விதுரன் காட்டிய கோபத்தில், அதிகாரம் கையில் உள்ளவன் போலிருந்த நான் ஆறில் ஒரு பங்கு-ஆறில் ஒரு பங்கு கூட வேண்டாம் நூறில் ஒரு பங்கேனும் காட்டியிருந்தால், ‘அப்பா, துரியோதனா! நீ செய்தது தவறு! செய்வது தவறு!’ என்று சொல்லியதை விடுத்து, ‘துரியோதனா! ஏனிப்படி செய்தாய்? இனிமேல் இப்படி இழிந்த காரியங்கள் செய்யாதே! மீறியும் செய்தால் விளைவு விபரீதமாகும்! தாத்தா எச்சரிக்கிறேன்!’ என்று இடித்துப் பேசியிருந்தால்–உரத்துப் பேசியிருந்தால், ‘பிதாமகர் பீஷ்மர் மரணப் படுக்கையில் கிடக்கிறார்!’ என்னும் மனப் பதற்றத்துடன் பீமன் ஓடோடி என்னை வந்துப் பார்த்திருப்பான். நியாயம் பேசாத–நியாயம் செய்யாத மனிதனின் மரணத்திற்கு மனமுருகுவதற்கு நியாயமில்லாத நிலையில் பீமன் என்னைப் புறக்கணித்தது மிகவும் நியாயத்திற்குட்பட்ட சங்கதிதான்; ஏற்றுக் கொள்ள வேண்டிய விஷயந்தான்.

சரி, அர்ச்சுனா! பீமன் விஷயம் இருக்கட்டும். நூறு ஆண்டுகள் கடந்து  பெரு வாழ்வு வாழ்ந்து விட்டுத்தானே கிழவன் நான் இறக்கப் போகிறேன்? எனக்காக ஏன் நீ வருந்த வேண்டும்? துஷ்யந்தன்-சகுந்தலை இவர்களின் மகன், பரதன். பரதன்-காசி அரசன் மகள் சுனந்தை.  இவர்களின் மகன் பூமன் என்கின்ற குரு. இந்த வழியில் குரு வம்சத் திலகமாக வந்த எனது தந்தை சந்தனு மகாராஜன், தனது முதல் மனைவி கங்கா, ‘எனக்கு விதிக்கப்பட்டதொரு சாபம்!’ எனச் சொல்லித் தனக்குப் பிறந்த ஏழு குழந்தைகளையும் கங்கையில் எறிந்து கொன்ற வரிசையில் எட்டாவதாகப் பிறந்த என்னையும் கொல்ல முயற்சித்த போது தவியாய்த் தவித்து மீட்காமல் போயிருந்தால் பிறந்த போதே எனக்கு மரணம் நேர்ந்திருக்கும். தாயின் கரங்களால் ஏற்படவிருந்த சாவிலிருந்து தந்தையால் தப்பிப் பிழைத்தேன்.

கார்த்த வீரியார்ச்சுனன் என்னும் க்ஷத்திரியனைக் காதலித்த காரணத்தால் கணவர் ஜமதக்னி முனி, மனைவி ரேணுகாவைக் கொல்ல மகன் பரசுராமனை ஏவிய கோபத்தின் விளைவு குறித்து நீ கேள்விப்பட்டிருப்பாய். ‘தாயைக் காதல் கொள்ள வைத்த கார்த்த வீரியார்ச்சுனனின் க்ஷத்திரிய வம்சத்தை வேரறுப்பேன்!’ என விபரீதமாக சபதம் பூண்டு கண்ணில் பட்ட க்ஷத்திரியர்களையெல்லாம் கொன்றழித்துக் கொண்டு வந்த பரசுராமனிடம் தோற்றிருந்தால் குழந்தையில் என்னைத் தப்ப விட்ட மரணம் தனது இரண்டாவது முயற்சியில் இளைஞன் என்னைத் தன் பிடியில் எப்போதோ ஆட்கொண்டிருக்கும். மரணத்தின் இரண்டாவது தேடுதலில் பரசுராமனைத் தோற்கடித்து அவனைப் பதறியோடச் செய்து மீண்ட என்னை அதன் பிறகு எத்தனையோ பத்தாண்டுகள் கழித்துத் தானே–கிழவனாகத் தானே மரணம் சந்தித்திருக்கிறது. பிறகு, இதில் வருத்தப் படுவதற்கு என்ன இருக்கிறது?

அர்ச்சுனா, ஏற்படப்போகும் மரணம் குறித்து எள்ளளவும் எனக்கு வருத்தமில்லை. ஆனால், குறையாமல் நூறு ஆண்டுகள் வாழ்ந்து ஹிரண்யவதி நதியின் மடியில் இந்த குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் சரதல்பத்தில் படுத்திருக்கும் நிலையில் இதுவரை வாழ்ந்த வாழ்க்கை குறித்து யோசிக்கும் போதுதான், ‘இப்படி வாழ்ந்திருக்கலாமே! இப்படி வாழ்ந்திருக்க வேண்டாமே!’ என்னும் வகையில் குழப்பம் கூடியதாகக் கொஞ்சம் வருத்தமேற்படுகிறது.

 ‘இப்படி  வாழ்ந்திருக்கலாமே! இப்படி வாழ்ந்திருக்க வேண்டாமே!’ என்று  மரணத்தின் வாசலில் நிற்கும் நான் இப்போது இரண்டு வகையாக யோசிக்கின்றேன். ‘இப்படியெல்லாம் வாழ்ந்திருக்க வேண்டியவன். வாய்ப்புகள் தாமாகத் தேடி வந்து வாசலைத் தட்டியும் எப்படியெப்படியோ இங்கிதமில்லாமல் வாழ்ந்து விட்டேனே!’ என்று யோசித்துப் பார்க்கின்றேன்.

எட்டாம் நாள் போர் முடித்துப் பாசறை திரும்பியதும் துரியோதனன் என்னிடம் பதை பதைப்புடன் ஓடி வந்தான்.

‘தாத்தா, போர்க்களத்தில் என்ன நடக்கிறது? இதுவரை நடந்து முடிந்த எட்டு நாள் போர்க்களத்தில் இழக்கக் கூடாதவர்களையெல்லாம் இழந்து விட்டோம். ‘எட்டு நாள் போரிலும் இழப்புகள் நம் பக்கமே அதிகமாயிருக்கிறது! அதிலும்  ஏழு நாள் போரினும் இன்றையப் போர் எனது துயரத்தை அதிகமாக்கி விட்டது. விருகோதரன்–பெருவயிற்றுக்காரன் ஒற்றைப் பீமனின் பிடியில் அகப்பட்டு இலவ மரத்திலிருந்து உதிர்கின்ற பிஞ்சுக்காய்களைப் போல் எனது உயிருக்குயிரான பதினாறு தம்பிகள் அநியாயமாக துடிதுடித்து இறந்து விட்டனர். பிதாமகர் உங்களைப் பெரிதாக நம்பினேன். பெருஞ் சேனாதிபதி பட்டம் சூட்டினேன். எனது நம்பிக்கை பொய்த்து விட்டது. ‘போர்க்களத்தில் கெளரவர்கள் எக்கேடு கெட்டாலென்ன?’ என்று கைகளைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் போல் இருக்கிறது. பதினோரு அக்ரோணிய சேனைக்காரன் ஏழு அக்ரோணிய சேனைக்காரர்களுக்கு இளப்பமாகி விட்டேன். மோசம் போனேன்.’ என்று ஏதேதோ புலம்பினான்.

நான் துரியோதனனிடத்தில் பொறுமையாகச் சொன்னேன்.

‘துரியோதனா, இன்றையப் போரில் அர்ச்சுனன் மகன் அரவான், அலம்புஷனின் பிடியில் அகப்பட்டு இறந்து போனானே! எந்த வகையில் பார்த்தாலும் அரவானின் மரணம் பாண்டவர்களுக்குப் பேரிழப்புதானே! போர் என்று வந்த பிறகு எண்ணிக்கை மாறுபாட்டைத் தவிர இழப்பு என்னவோ இருபுறத்திலுந்தான். பிறகு ஏன் நீ இப்படி அழுது புலம்புகிறாய்? அதுவுமில்லாமல் வினை விதைத்தவன் வினையைத்தானே அறுக்க வேண்டும். விதைத்தது அறுவடையாகிக் கொண்டிருக்கிறது. காலம் கடந்து இப்பொழுது அழுது அரற்றுவதால் என்ன பயன்? பதறாதே! நாளைய குருக்ஷேத்திரம் எனது கையில்! போய் வா!’ என்று அனுப்பி வைத்தேன். ஆனால், ஒன்பதாம் நாள் போர் இருதரப்புக்கும் குறிப்பிடத் தக்க இழப்பு எதுவுமில்லாமல் பிசுபிசுத்துப் போய் விட்டது.

துரியோதனனிடம் சொன்ன வகையில் இன்றையப் போர்க்களத்தை எனது கட்டுக்குள் அடக்கத்தான் முயற்சித்தேன். போர்க்களத்தில் சூறைக்காற்றில் அகப்பட்ட பஞ்சுக் குவியல் போல் பாண்டவர்கள் உங்கள் சேனை என்னிடம் தாறுமாறு படத்தான் செய்தது. எனது முயற்சிக்கு–கிழவன் எனது வீர விளையாட்டுக்கு சிகண்டி முதல் தடையாகிப் போனாள்(ன்). இரண்டாவதாக எனது முயற்சிக்கு எதிராக இருகரங்களாலும் அம்பெய்யும் திறத்தானாகிய–சவ்யசாசியாகிய நீயும் கிருஷ்ணனும் கைகோர்த்து நின்றீர்கள். சீறி நிற்கும்   இளஞ் சிங்கங்களுக்கெதிராக கிழவன் நான் – கிழச் சிங்கம் நான் என்ன செய்ய முடியும்? ஆனாலும் நான் துரியோதனனுக்கு வாக்களித்தது குறைவுறாத வகையில்–என்னாலியன்ற வரையில் முயற்சித்தேன். இறுதியில் இந்த அம்புப் படுக்கையில் இடம் பிடித்தேன்.

நேற்றைய, இன்றைய போர்க்களங்கள் குறித்த நினைவு எனது நெடிய வாழ்க்கை குறித்த சிந்தனைக்குக் குறுக்கீடாகி விட்டது. ஆமாம், அர்ச்சுனா! நான் நினைத்திருந்தால்–விரும்பியிருந்தால் இந்த நெடிய தவ வாழ்க்கையிலிருந்து விலகி முற்றிலும் வேறு வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம்; எப்படியெல்லாமோ வாழ்ந்திருக்கலாம்.

பேரன் அர்ச்சுனன் உன்னிடம் சொல்ல நான் வெட்கப்பட வேண்டியதில்லை. என் மனம் என்னைக் கேட்கிறது.

‘தேவவிரதன், சத்தியவிரதன், காங்கேயன், பீஷ்மன், பிதாமகன் இப்படியெல்லாம் பெயர்கள் கொண்டதாகப் பிதற்றுகிறாயே! பெருவாழ்வு வாழ்ந்து விட்டோமென்று பீற்றிக் கொள்கிறாயே! அப்படியென்ன நீ பெருவாழ்வு வாழ்ந்து கிழித்து விட்டாய்? ‘பயங்கரன் பரசுராமனை வென்றேன்! அவர்களை வென்றேன்! இவர்களை வென்றேன்!’ என்று ஏதேதோ வீரப் பிரதாபங்களை அள்ளி வீசுகிறாயே! இந்த வீரப் பிரதாபங்களால் நீ கண்ட பலன்தான் என்ன? எதாவது பெரிய அல்லது சிறிய தேசத்துக்கு அதிபதி என்று முடிசூட்டிக் கொண்டாயா? ஆட்சி-அதிகாரம் கண்டாயா? என்ன பலனைக் கண்டாய்? கடைசி வரையிலும், ‘பிதாமகர்! பிதாமகர்!’ என்றொலித்த வெற்று வார்த்தைகளில் வெகுவாகக் குளிர்ந்து போனாய். வேறென்ன கண்டாய்?’

அர்ச்சுனா, இதுமட்டுமல்ல. மனம் வேறொன்று குறித்தும் குதர்க்கமாகக் கேள்வி எழுப்புகிறது. ‘ ‘பெரு வாழ்வு வாழ்ந்து விட்டேன்!’ என்று பிதற்றுகின்ற நீ வாழ்க்கையின் பேரின்பமான-வாழ்க்கை என்கின்ற சகடத்தின் அச்சாணியான ஆணுக்குப் பெண், பெண்ணுக்கு ஆண் என்கின்ற பேரின்பத்தின் அடிச்சுவடு-அரிச்சுவடி கூட அறியாதவனாக அஸ்தமிக்கப் போகின்றாயே! இது குறித்து–பெண் என்னும் பேரின்ப ரசத்தில் ஒரு துளியும் பருகாதவனாக மரணத்தைக் கைப்பிடிக்கப் போகின்றாயே! இது குறித்து என்ன சொல்லப் போகின்றாய்?’ என்று கேள்வி எழுப்புகிறது.

என்ன பதில் சொல்வது?

அர்ச்சுனா, ‘பல பெண்களின் உள்ளத்தை–உடலைக் கொள்ளை கொண்டவனாக, காதல் மன்னனாக நீ வாழும் வாழ்க்கை மிகச் சரியானது.’ என்று நான் எண்ணுகிறேன். அர்ச்சுனா, நான் உண்மையாகத்தான் சொல்கிறேன். வேதங்கள், சாஸ்திரங்களைக் கடந்து, உறுதியாகச் சொல்ல முடியவில்லையென்றாலும் புல்லாக, பூண்டாக, புழுவாக, பூச்சியாக, அதுவாக, இதுவாக, எதுவாகவேனும் பிறப்பெடுக்கும் உயிர்கள் அனைத்துக்கும் பிறப்பு ஒருமுறைதான் இருக்குமென்று கருதுகிறேன். அப்படியானால் புல்லுக்கும், பூண்டுக்கும், புழுவுக்கும் பிறவி என்பது ஒன்றாகின்றபோது மகத்தான மனிதப் பிறவிக்கு மட்டும் இன்னொரு பிறவியா இருந்துவிடப் போகிறது? ‘இன்னுமொரு முறை பிறக்கப் போவதில்லை’ என்னும் உறுதிப்பாட்டில் இதுவரை நான் வாழ்ந்த வாழ்க்கையை-அதுவும் பெண் வாசனை என்பதையே அறியாதவனாக வாழ்ந்த வாழ்க்கையை அர்த்தமற்ற வாழ்க்கையாகத்தான் கருத வேண்டியிருக்கிறது.

நீண்ட நெடிய வாழ்க்கையில், அடடா! எத்தனை எத்தனை அழகழகான பெண்களைச் சந்தித்தேன்! தேவலோகத்து அழகிகளாகச் சொல்லப்படும் ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை போன்ற அழகிகளையெல்லாம்–அழகிய தேவ கன்னியர்களையெல்லாம் மிகச் சாதாரணமானவர்களாக்கி விடும் பேரழகிகளெல்லாம் என் எதிர்ப்பட்டிருக்கிறார்கள்; என்னைத் தேடி வந்திருக்கிறார்கள். அர்ச்சுனா, ‘என்னடா இந்தக் கிழவன் இப்படியெல்லாம் சொல்கிறானே!’ என்று என்னைத் தவறாக எண்ணிவிடாதே.

யமுனைக் கரையில் எனது தந்தை சந்தனுவுக்கு மச்சகந்தியாக  அறிமுகமான அந்த மீனவப்பெண், எனது தந்தைக்கு அறிமுகமான தருணத்தில் என் சம வயதுக்காரியாகத்தான் இருந்தாள். ‘அரசே, ஏற்கனவே உங்களுக்கு மகன் தேவவிரதன் இருக்கின்றார். என் மகளை  நீங்கள் திருமணம் செய்து கொண்டால் அவள் வயிற்றில் பிறக்கும் பிள்ளைக்குப் பட்டத்துக்குரியவனாவதற்கு உத்தரவாதம் எங்கே இருக்கிறது?’ என்று என் தந்தையிடம் மச்சகந்தியின் வளர்ப்புத் தந்தை மீனவன் உச்சைச்ரவஸ் கேட்ட தருணத்தில், தேவயானியின் தந்தை சுக்கிராச்சாரியாரின் சாபத்தால் முதுமையுற்ற யது வம்ச முன்னோடி, தந்தை யயாதிக்கு தன் இளமையைக் கொடுத்து தந்தையின் முதுமையைத் தனதாக்கிக் கொண்ட ‘பூரு’வின் தியாகம் எனது சிந்தனையில் அலையாடிற்று. நான் வாழ்க்கை குறித்து ஆராய்ந்து பார்க்காதவனாக சிறு பிள்ளைத் தனமாக பூருவின் வழியில் தியாக சீலனாகி விட்டேன். ‘ஏழு குழந்தைகளைக் கொன்ற தாயிடமிருந்து எட்டாவதாகப் பிறந்த என்னை மீட்டெடுத்து உயிர்ப்பிச்சை அளித்த தந்தைக்கு பிரதிக்கடன் செய்ய வேண்டும்’ என்னும் பெரிய எண்ணத்தில் எனது வாழ்க்கையைப் பாழடித்துக் கொண்டேன்.

‘இளவரசே! எனக்கொன்றும் ஆட்சேபமில்லை. மச்சகந்திக்கு சமவயதாகத்தானே தெரிகிறீர்கள். வேண்டுமானால் மச்சகந்தியை நீங்கள் திருமணம் செய்து கொள்ளுங்கள்!’  என்று மச்சகந்தியின் தந்தை என்னிடம் சொன்ன போது, ‘ஐயோ, தந்தை விரும்பிய பெண்ணை நான் மணம் புரிந்து கொள்வதென்பது…’ என்று தயங்கியவன், மச்சகந்தியின் தந்தையிடம் அவன் அதிர்ச்சியுறுகின்ற வகையில், ‘நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். பிரம்மச்சரியம் கடைபிடிப்பேன். ஆட்சி-அதிகாரத்தில் பங்கு கொள்ள மாட்டேன்.’ என்று சத்தியம் செய்து அவனுக்கு வியப்பை ஏற்படுத்தினேன். எனது தியாகத்தினால் எனது தந்தைக்கு வாழ்க்கைப்பட்டு சத்தியவதியாக பெயர் மாற்றம் கொண்ட அந்த மீனவப் பெண் எனக்கு சிற்றன்னையாகிப் போனாள்.

ஆமாம், அர்ச்சுனா! சரியாகச் சொல்லப் போனால் ஒருவகையில் நான் கிறுக்கன் தான். ‘தியாக சீலர்! தியாகச் செம்மல்!’ என்று பெயர் பெற விரும்பிய கிறுக்கன். இல்லையென்றால் தேடி வந்து, ‘என்னைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்!’ என்று காலில் விழுந்து கதறிய–கெஞ்சிய அழகுப் பெண் அம்பையை நான் புறக்கணித்திருப்பேனா? அந்த அப்பாவிப் பெண்ணின் சாவுக்குக் காரணமானவனாக மாறியிருப்பேனா? இன்று நினைக்கையில், ‘அன்று ஏன் அப்படிச் செய்தோம்?’ என்று நெஞ்சம் குமுறுகிறது. ‘பீஷ்மா, நீ ஒரு பித்துக்குளி!’ என்று என்னுள்ளே ஒரு குரல் உரத்து ஒலிக்கிறது; ஏளனம் செய்கிறது.

 ‘நாலு பேருக்கு நல்லது நடக்குமென்றால் தயங்காமல் பொய்யுரைக்கலாம்!’ என்றல்லவா பெரியோர்கள் புகல்கிறார்கள்? சத்தியம் என்ன சத்தியம்! நல்லதொரு வாழ்க்கைக்கு இடர்ப்பாடு ஏற்படுகையில் மீறப்பட வேண்டியதல்லவா சத்தியம்? மீறுவதற்கான தருணங்கள் நிறையவே நேர்ந்தன. ஆயினும் சத்தியசந்தன் நிலைப்பாட்டிலிருந்து சற்றும் நான் மீறவில்லை. மனைவியாக வாழத் தகுதியிருந்தும் எனது தியாக அலட்சியத்தால் எனக்கு சித்தியாகி விட்ட சத்தியவதிக்குப் பிறந்து தந்தையை இழந்து நின்ற தம்பிகள் சித்திராங்கதன், விசித்திரவீரியன் இந்த இருவருக்கும் நான் தந்தையைப் போல் மாற்றம் கொண்டேன். சகோதரர்கள் இருவர் நலன் மட்டுமே குறிக்கோளாக்கி வாழ ஆரம்பித்தேன். விசித்திரமாக, சித்திராங்கதன் என்று பெயர் கொண்ட கந்தர்வன் ஒருவனுடன் ஏற்பட்ட போரில் தம்பி சித்திராங்கதன் கொல்லப்பட்ட பிறகு இளைய தம்பி விசித்திரவீரியனை அரவணைத்து நின்றேன். விசித்திரவீரியனுக்காகக் காசி அரசனின் அழகிய மகள்கள் அம்பை, அம்பிகை, அம்பாலிகை மூவரையும், எதிர்த்தவர்களை வீழ்த்தி ஒருங்கே ரதத்தில் தூக்கி வந்தேன். மூன்று பெண்களுமே கண்களைக் கொள்ளை கொள்பவர்களாக, கட்டழகுச் சித்திரங்களாகத்தான் இருந்தார்கள்.  மூவரில் மூத்தவள் அம்பை, தான் செளபல -சாளுவ- தேசத்தரசன் சால்வனைக் காதலிப்பதாகவும் அவனையே திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் என்னிடம் சொன்னாள். தவறு செய்து விட்டதை உணர்ந்த நான் அம்பையை சால்வனிடம் திருப்பி அனுப்பி விட்டுத் தம்பி விசித்திரவீரியனுக்கு அம்பிகை, அம்பாலிகையைத் திருமணம் முடித்து வைத்தேன்.

சால்வனிடம் சென்ற அம்பை சுவரில் எறிந்த பந்து போல மீண்டும் என்னிடம் ஓடோடி வந்தாள். ‘ ‘பீஷ்மன் கைப்பட தூக்கிச் சென்ற உன்னை எப்படி நான் திருமணம் செய்வது?’ என்று சால்வன் என்னைப் புறக்கணித்து விட்டான். ஆகவே, நீங்கள் என்னைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்!’ என்று என்னிடம் கெஞ்சினாள். நான் திடுக்கிட்டுப் போனேன். ‘அழகிய இந்தப் பெண்ணின் வாழ்வுக்கு அநியாயமாகக் கேடு செய்து விட்டோமே!’ என்று மனம் நொந்து போனேன். மச்சகந்தியின் தந்தையிடம் நான் செய்து தந்த சத்தியம் குறித்து அம்பையிடம் சொன்னேன். ‘திருமணம் செய்து கொள்வது இயலாது!’ என்றேன். அதிர்ந்து போன அம்பை ஆற்றொணாத் துயரத்துடன் பலவாறாக என்னைச் சபித்தாள். பிறகு கண்ணீரும் கம்பலையுமாகச் சென்றவள் தன்னைத் தானே எரித்துக் கொண்டு பிணமாகிப் போனாள்; பக்குவமின்றிப் பாவி நான் செய்த அநியாயக் காரியத்தினால் பேரழகி அம்பை வாழ வேண்டிய வயதில் பிணமாகிப் போனாள்.

இன்று யோசித்துப் பார்க்கிறேன். இளம் பெண் ஒருத்தியை எரித்துக் கொன்றதைத் தவிர சத்தியவிரதன் பீஷ்மன் எனது சத்தியம் வேறென்ன சாதித்துக் கிழித்தது?

திருமணம் முடிந்து ஏழு ஆண்டுகள் ஆன நிலையில் இரு மனைவியரிருந்தும் பிள்ளையில்லாத குறையுடன் விசித்திரவீரியன் கொடிய க்ஷய ரோகத்தில் உருக்குலைந்து இறந்து போனான். பெண் சுகம் அறிவதற்கு அப்பொழுது எனக்கொரு வாய்ப்பு தேடி வந்தது. என்ன காரணத்தாலோ பிள்ளையில்லாத பெருங்குறை இந்த குரு வம்சத்தில் ஓரிரு அரசர்களுக்கான இடைவெளியில் அவ்வப்பொழுது நேர்ந்து விடுகிறது. பிறகு எப்படியோ நிவர்த்தியாகிறது.

‘பிள்ளையில்லாத சூழலில் நெருங்கிய உறவினர் அல்லது யாரோ ஒரு  பிராமணர் கருதானம் செய்யலாம்!’  என்னும் நியோக முறை ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்த காரணத்தில் விதவைகளாகி விட்ட மருமகள்கள் இருவருக்கும் கருதானம் செய்யச் சொல்லி சிற்றன்னை சத்தியவதி என்னை வற்புறுத்தினாள்; வேண்டினாள். நான் மறுப்பு தெரிவித்ததும், ‘நல்லவற்றுக்காக-நல்ல காரியங்களுக்காக சத்தியங்களை மீறலாம். ஆகவே, தயங்காதே! அம்பிகையும், அம்பாலிகையும் உனது தம்பி மனைவிகள்தானே? அவர்களுடன் உறவு கொள்ள உன்னை விடத் தகுதியானவர்கள் வேறு யாரிருக்கிறார்கள்? பெரியவர்கள்–முன்னோர்கள், ‘நியோகம் அவசியத்தின் பேரில் ஏற்றுக் கொள்ளக்கூடியது’ என்றுதானே கூறியிருக்கிறார்கள். பிறகு யோசிக்க என்ன இருக்கிறது?’ என்று தனது மருமகள்களிடம் உறவு கொள்ளும்படி என்னைத் தூண்டினாள்; என்னிடம் வேறு ஏதேதோ சொன்னாள்.

   ‘நல்லவற்றுக்காக சத்தியங்களை மீறலாம்!’ என்று அன்று சிற்றன்னை சொன்னது எனது செவிப்புலனில் பதியவில்லை போலிருக்கிறது. ஒரு வேளை சிற்றன்னையின் தூண்டுதல் செவிப்புலனில் பதிந்திருந்தாலும் நான் அந்தக் தூண்டுதலைப் புதியதொரு தியாகத்தின் பேரில்,  ‘மிகப் பெரிய மனிதர்!’ என்னும் பேரில் கொண்ட காதலில் புறக்கணித்து விட்டதாகத்தான் தெரிகிறது. எனது புறக்கணிப்புக்குப் பிறகு அம்பிகை, அம்பாலிகை விஷயத்தில் சிற்றன்னை சத்தியவதி, எனது தந்தை சந்தனுவை மணப்பதற்கு முன் யமுனையில் படகோட்டிக் கொண்டிருந்த காலத்தில் பரிமளகந்தியாக பராசர முனிவருடன் உறவு கொண்டதில் பிறந்து, பராசர முனிவரால் வளர்க்கப்பட்ட தனது முத்த மகன் கிருஷ்ண துவைபாயன வியாசன் மூலமாக மருமகள்களுக்கு புத்திர பாக்கியத்திற்கு ஏற்பாடு செய்தாள்.

அம்பிகை, அம்பாலிகை இருவருடன் உறவு கொள்ளக் கிடைத்த வாய்ப்பு குறித்து இன்று எனக்குள் ஏற்படும் குழப்பம் அன்று சிற்றன்னை, ‘சகோதரனின் மனைவிகளுக்குக் கர்ப்பதானம் செய்!’ என்ற போது ஏற்பட்டிருந்தால் கலகத்தில் நீதி பிறப்பது போல் குழப்பத்துக்கிடையில் ஒரு தெளிவு ஏற்பட்டிருக்கும்; தேடி வலிய வந்த இரு பெண்களுடன் உறவு சித்தித்திருக்கும்; பெண் சுகம் என்றால் என்னவென்று புரிந்திருக்கும். ஆனால், பெண்களுடன் உறவு கொண்டு பேரின்பப் பயணம் போவதற்குத் தெளிவாக வழி இருந்தும் வழியில் எனக்கு நானே தடையை ஏற்படுத்திக் கொண்டேன். அப்படிப் பெண்களுடனான உறவுக்கு நான் தடை ஏற்படுத்திக் கொண்டதன் விளைவு! அர்ச்சுனா, சொல்கிறேனென்று கோபித்துக் கொள்ளாதே! அப்படித் தேடி வந்த பெண்களின் உறவைத் தவிர்த்ததன் விளைவு! கண்களில்லாதவனாக  திருதராஷ்டிரன்.  திரேகம் வெளுத்தவனாக  பாண்டு.

‘கர்ப்பதானம் செய்ய வருபவன் அழகனாக, இளைஞனாக இருப்பான்!’ என்று எண்ணியிருந்ததற்கு மாறாக தாடியும் மீசையுமான துறவிக் கோலத்தில் தன்னைப் புணரும் கிருஷ்ண துவைபாயனனைச் சகித்துக் கொள்ள முடியாமல் அம்பிகை கண்களை மூடிக் கொண்டதின் விளைவில் குருடனாக திருதராஷ்டிரனும், ‘ஐயோ! என்ன இந்தத் துறவி!’ என்று அம்பாலிகை விதிர்த்து வெலவெலத்துப் போனதின் விளைவில் திரேகம் வெளுத்துப் போனவனாகப் பாண்டுவும் பிறந்தார்கள். வியாசனை விரும்பி வரவேற்றுக் கொண்டதின் காரணத்தில் அம்பிகையின் வேலைக்காரி மாதரிக்கு உடல், உள்ளம் இரண்டிலும் குறைகளற்றவனாய்ச் சூதன் விதுரன் பிறந்தான்.

சிற்றன்னை ஒருமுறை என்னிடம் வருத்தமுடன் சொன்னாள்.                                                                                            

‘பீஷ்மா, நான் கேட்டுக் கொண்டவகையில் நீ அம்பிகை, அம்பாலிகையுடன் உறவு கொண்டிருந்தால் அவர்களுக்குக் குறையில்லாத குழந்தைகள் பிறந்திருப்பார்கள். திருதராஷ்டிரனும், பாண்டுவும் குறைகள் கொண்டவர்களாகப் பிறந்ததற்கு நீதானே காரணம்?’ என்று என் மீது குற்றம் சாட்டினாள். சிற்றன்னையின் கேள்வியின் நியாயத்தில் அன்று வாய் மூடி மெளனியாக நின்ற நான் இன்று யோசித்துப் பார்க்கிறேன்.

ஆமாம், எத்தனைப் பெரிய தவறைச் செய்து விட்டேன். ஆக, மொத்தத்தில் நூறு வயதுகள் குறையாத நீட்சியுடன் இத்தனைக் காலமும் நான் தியாகத்தின் பேரில் வெற்று வாழ்க்கை வாழ்ந்து விட்டேன். ஆமாம், வெற்று வாழ்க்கை வாழ்ந்து விட்டேன். விதைக்க வேண்டிய காலத்தில் வெறுமனே இருந்து விட்டு அறுவடைக் காலத்தில், ‘ஐயோ! இழந்தேனே!’ என்று அழுவதால் என்ன பயன்? யோசிக்க வேண்டிய காலத்தில் சரியாக யோசிக்கத் தவறிவிட்டேன்.

வயதுக் காலத்தில் சரியாக யோசிக்கத் தவறிய காரணத்தால் பெண் சுகம் என்பதை மட்டுமல்ல துரியோதனனுக்கு அடங்கி நடக்க வேண்டியவனாக,  ‘துரியோதனா, நீ இப்படித்தான் நடக்க வேண்டும்!’ என்று இடித்துரைக்கச் சக்தியற்றவனாக–உரத்துக் கூறும் உரிமையற்றவனாக எனது சுயத்தை இழந்து நின்றேன். பல நல்ல சந்தர்ப்பங்களில் நிராயுத பாணி போல நிர்க்கதியாகத் தவித்து நின்றேன். ஆமாம், பல சந்தர்ப்பங்களில். குறிப்பாக மாபெரும் சபையில் திரெளபதியின் ஆடையை துச்சாதனன் களைய முயன்ற தருணத்தில், துவாரகை கிருஷ்ணன் பாண்டவர்கள் உங்களின் தூதுவனாக உங்களுக்குரிய பாகம் கேட்டு வந்த தருணத்தில் மற்றும் …

முறையற்ற காரியங்களில் துரியோதனன் ஈடுபட்டதைக் கண்டித்து– துரியோதனன், திருதராஷ்டிரன் இருவரையும் எச்சரித்து விதுரன் சபையை விட்டு வெளியேறிய தருணங்களில் கூட நான் ‘பிதாமகர்!’ கெளரவம் கருதியவனாக சிம்மாசனத்தை விட்டு இம்மியும் அகல மனமில்லாமல் அவையை அலங்கரித்திருந்தேன்.

  ‘கசடன் கர்ணனின் சொல் கேட்டு துஷ்டன் துரியோதனன், துச்சாதனன் மூலம் திரெளபதியின் ஆடை களைய முயன்ற வகையில் திரெளபதிக்கு, பாண்டவர்கள் நமக்கு மாபாதகம் செய்து விட்டான்.  இப்படி ஒரு இழிநிலை ஏற்படுவதற்கு இதோ இந்த யுதிஷ்டிரன் தான் காரணம். தம்பி, சகாதேவா! தாமதிக்காதே! எரிதழல் கொண்டு வா! அண்ணன் கையை எரித்திடுவோம்!’ என்று பீமன் கொந்தளித்த அந்தத் தருணத்திலும், ‘திரெளபதிக்கு தீங்கு செய்யாதீர்கள்!’ என்று சொல்லத்தான் முடிந்தது என்னால். அதே போல கிருஷ்ணன் தூதுவனாக வந்த போது துரியோதனனையும் மீறி தூதுவன் கிருஷ்ணனை வரவேற்றேனே தவிர-துரியோதனன், கிருஷ்ணனை ‘இடையன்! மடையன்!’ என்று பலவாறாக இழித்துப் பேசிய போது, ‘துரியோதனா, தூதுவனை இழித்துப் பேசுவது சரியல்ல!’ என்றேனே தவிர அன்றும் வேறெதுவும் செய்ய முடியவில்லை. ஆட்சி-அதிகாரம் இல்லாத காரணத்தில் இன்று வரை துரியோதனனுடன் பல் பிடுங்கப் பட்ட பாம்பு போலத்தான் இருக்க முடிந்தது.

‘தாத்தா, தூதுவன் விஷயத்தில் நீங்கள் தலையிடாதீர்கள்!” என்று துரியோதனன் என்னை அவமதித்த நிலையிலும் நான், தாயைப் பழித்ததற்காகத் தனது வில்லை வாளால் வெட்டியெறிந்து அவையிலிருந்து வெளியேறிய விதுரனைப் போல் வெளியேறவில்லை. துரியோதனனைக் கண்டித்துச் சொல்ல என்னிடமிருந்து வார்த்தைகள் வரவில்லை.

அர்ச்சுனா, இப்பொழுது யோசித்துப் பார்க்கிறேன். எத்தனையோ நல்ல சந்தர்ப்பங்களில் நான் இழிந்த மனிதனாகத்தான் இருந்து விட்டேன். ‘தாயாதி பங்காக பாண்டவர்களுக்குப் பாதி ராஜ்யம் கூட வேண்டாம். ஐந்து கிராமங்களாவது கொடுங்கள்!’ என்றிறங்கி கிருஷ்ணன் தூது பேசிய நிலையிலும், ‘பாண்டவர்களுக்கு ஊசி குத்தவும் இடம் தர மாட்டேன்!’ என்று மூர்க்கமாய் நின்ற துரியோதனனை எதிர்த்து என்னால் எதுவும் செய்ய இயலவில்லை. போர் என்று வந்த பிறகும் என்ன காரணத்தாலோ நியாயவான்கள் உங்கள் பக்கம் நான் நிற்கத் துணியவில்லை. போர்க்களத்தில் யாருடனும் பொருத விருப்பமில்லாமல், ‘யுத்தம் வந்தால் இருதரப்பிலும் எதிர்கொள்ள இயலாத இழப்புகளும், பெருந் துக்கமும் நேரும்! அதுவுமில்லாமல், துரியோதனனால் ‘விதுரன் பாண்டவர்களுக்கு ஆதரவாகப் போர் புரிந்தான்’ என்னும் பழியும் சேரும்!’ என்று துரியோதனன், திருதராஷ்டிரனை எச்சரித்து இரு அணியிலும் யாரையும் சாராமல் கிருஷ்ணனின் அண்ணன் பலராமனுடன் தேச யாத்திரை புறப்பட்ட விதுரனைப் போல் நான் அரண்மனையை விட்டு வெளியேறவில்லை.

அர்ச்சுனா, எப்படியோ அறிந்தோ, அறியாமலோ அல்லது அறிவீனத்தினாலோ பாதகன் துரியோதனனுக்கு உடந்தையாக நின்று அடுக்கடுக்காக உங்களுக்கெதிராக பாதகங்களை அரங்கேற்றிவிட்டேன். அநியாயமாக துரியோதனன் கொண்ட பாழும் மண்ணாசை, குருதிக் களமாகிக் கிடக்கும் இந்த குருக்ஷேத்திர பூமியில் கடந்து போன பத்து நாள் போரிலேயே கணக்கற்ற உயிர்களைக் காவு கொண்டு விட்டது. இந்தப் போர்க்கள பூமி இன்னும் எவ்வளவு உயிர்களைக் காவு கொள்ளக் காத்திருக்கிறதோ-ஆசைப்படுகிறதோ தெரியவில்லை. ‘இத்துடன்– இன்றுடன்–பீஷ்மன் எனது முடிவுடன் பாழும் இந்தப் பங்காளிப் போர் முடிந்து விடக்கூடாதா?’ என்று மனம் பதறுகிறது.

‘பீஷ்மர்தானே போய் விட்டார். அதனாலென்ன? இன்னும் ஆசாரியர் துரோணர், கிருபர், அசுவத்தாமா, கர்ணன், சல்லியன், சகுனி போன்ற அசகாய சூரர்கள் இருக்கிறார்கள். துடிப்புடன் துச்சாதனன் இருக்கிறான். தம்பிமார்கள் இருக்கிறார்கள்.’ என்னும் இறுமாப்புடன் துரியோதனன் இருக்கும் நிலையில், ‘இன்றுடன் போர் முடிந்து விடக் கூடாதா?’ என்று நான் வருந்துவது எனக்கே பைத்தியக்காரத் தனமாகத்தான் தெரிகிறது.  ‘வாழ்க்கைப் பயணம் திருத்தங்கள் – திருப்பங்கள்  நிறைந்தது’ என்பது காலம் கடந்து இப்போதுதான் எனக்குப் புரிகிறது.  துரியோதனன் ஆயிரம்–பல்லாயிரம் வகையில் முயற்சித்தாலும் இறுதியில் காலம் நியாயத்தின் பக்கம் வெற்றியைத் தீர்மானிக்கப் போகிறது!”

                                                                    ***

“அர்ச்சுனா, வெகு நேரமாக இங்கேயே நின்று கொண்டிருக்கிறாய். பாசறையில் தேடுவார்கள். எனது இறுதி குறித்து இதற்கு மேல் ஏதும் வருத்தப் படாதே! இறுதி வெற்றி பாண்டவர்கள் உங்கள் பக்கம் என்பது உறுதி! போய் வா!”

“தாத்தா!”

“என்ன அர்ச்சுனா?”

“தாத்தா, சற்றே கண் திறந்து பாருங்கள்!”

“ஏன் அர்ச்சுனா?”

“இத்தனை நேரம் இங்கே நின்று கொண்டிருப்பது அர்ச்சுனன் அல்ல, தாத்தா. நான் பீமன் தான்  நின்று கொண்டிருக்கிறேன்.”

“என்ன? இத்தனை நேரம் இங்கே நின்று கொண்டிருப்பது அர்ச்சுனன் அல்ல பீமனா!”

“ஆமாம், தாத்தா.”

திடுக்கிட்டுக் கண்களைத் திறந்த பீஷ்மர், ‘இந்தப் பீமன் சிறிது நேரத்திற்கு முன் நான் சரதல்பத்தில் படுத்த நேரத்திலும் அண்ணன் மற்றும் தம்பிகளுடன் வந்திருந்தானோ? பார்க்க மறந்தேனோ?’ என்னும் கேள்விகளுடன் பீமனை வாஞ்சையுடன் பார்த்தார். தணிந்த குரலில், “பீமா, பிறவிப் பயன் பெற்று விட்டேன்! நான் பாக்கியசாலி!” என்றார். மீண்டுமொரு முறை பீமனைக் கண்கள் மலரப் பார்த்தவர் கண்களில்  நீர் தளும்ப கண்களை இறுக மூடிக் கொண்டார்.

                                                            ***            

 

Series Navigationஅதுதான் சரி !
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *