வேல்விழிமோகன்
இன்றைக்கு வேலையில்லைன்னு மேஸ்திரி சொன்ன பிறகும் நான் அங்கேதான் நின்னுட்டு இருந்தேன். அவன் அப்பப்போ என்னைய பாத்துட்டுதான் இருந்தான். அவனுக்கு நான் அங்கிருந்து போயிடனும் அப்படீங்கங்கற ஆசையை கண்ணால காட்டிக்கிட்டே இருந்தான். நான் ஒதுங்கி அந்த கொத்தனார் சாலையை தாண்டி.. ம்.. இருங்க.. கொத்தனார் சாலை அப்படீங்கறது நாங்களா வச்சுக்கிட்டது. அதுக்கு பேரு வேற.. அதாவது காமராஜ் சாலையோ அல்லது பெரியார் சாலையோ.. ஏதோ ஒரு பேரு.. ஆனா எங்களுக்கு கொத்தனார் சாலை.. காரணம் இங்க வந்திட்டுதான் ஆளுங்களை கூட்டிக்கிட்டு நகரம் முழுக்க வேலைக்கு போவாங்க.. ஒரு இடத்துல இல்லைன்னா இன்னொரு இடத்துல பாக்கலாம். அங்கங்க அந்த பூங்காவை சுத்தி பெரிய மேஸ்திரிங்க.. ஒப்பந்தம் எடுத்தவங்க நின்னுட்டு இருப்பாங்க. இல்லைன்னா போன் பண்ணுவாங்க. பெரும்பாலும் அந்தந்த மேஸ்திரிக்கட்டதான் போவோம். சில சமயம் வேல இல்லாதப்ப சொல்லிடுவாங்க. அவங்களே கூட வேற மேஸ்திரிக்கிட்ட அனுப்பி வைப்பாங்க. இல்லைன்னா அக்கம் பக்கம் விசாரிச்சு சொல்லுவாங்க. நாமளே செய்யறது நல்லது. காரணம் நாலஞ்சு பேருக்கு அவங்க கேட்டு சொல்லறதுக்குள்ள தாமதமாயிடும். அப்ப எங்கேயும் வேலை இல்லாம அந்த பூங்கா ஏரியாவே பிசோன்னு ஆயிடும். ஏன் இந்த இடத்தை தேர்ந்தெடுத்தாங்கன்னு சுலபமா சொல்லலாம். பூங்கா பெரிய இடம். உள்ளாற உக்காரலாம். படுத்துக்கலாம். வேலை இல்லைன்னா அப்படியே தூங்கிடலாம். இல்லைன்னா அரட்டை அடிக்கலாம். பூங்கா பூராவும் மரம். நிழல். தண்ணி பைப்பு இருக்குது. பூங்காவை பாத்துக்கற ஆளு ரொம்ப நல்ல மனுசன். தப்பு பண்ணறவங்களை தவர மத்தவங்களை கண்டுக்கமாட்டான். அதனால அவன் இருந்தா சந்தோசப்படுவாங்க எல்லாரும். இன்னொரு பொம்பள இருக்குது. அதுக்கு உறுத்திட்டே இருக்கும். ‘இங்க என்னா வேலை உங்களுக்கு..?’ன்னு கேக்கும். ஒரே இடத்துல இருந்தா அப்பப்போ வந்து முறைச்சுக்கிட்டே இருக்கும். இதுக்கு நிறைய பேரு சண்டைக்கு போயிடுவாங்க. அதுவும் பதிலுக்கு மல்லு கட்டிக்கிட்டு நிக்கும். ஒரு நாளு அதைய புடுச்சு கெட்ட வார்த்தைல திட்டிட்டது ஒரு பொம்பளை. அப்பலிருந்து அது அதிகமா பேசறதலைன்னாலும் அந்த முகத்தை காட்டி முறைக்காம இல்லை. இப்ப நான் வேலை இல்லைன்னு தெரிஞ்சு அந்த பூங்காவுல இருக்கலாமுன்னுதான் நினைச்சேன். ஆனா அந்த பொம்பளை முகத்தை நினைச்சுக்கிட்டு அங்கிருந்து கிளம்பிட்டேன். வேலை இருந்தா அந்த மேஸ்திரி போன் பண்ணுவான். அவனுக்கு என்னைய ஆகாது. நான் அடிக்கடி அவன் பண விழயத்துல..மத்ததுல.. ஏமாத்தறதை வெடுக்குன்னு கேட்டுடுவேன். அதனால ஒதுக்கி வச்சிருக்கான் என்னைய. ஆனா வேல தெரிஞ்ச ஆளு அப்படீங்கறதால என்னைய விடாம வச்சிருக்கான். அவனுக்கு எனக்கு வேலை இல்லைன்னா ஒரே சந்தோசம். இப்ப கூட நான் காத்திருந்தப்போ அதுக்கு கூட சந்தோசப்பட்டுக்கிட்டு என்னைய ஓரக்கண்ணால பாத்துக்கிட்டு இருந்ததா தோணுச்சு எனக்கு.. அதை ஒதுக்கி தள்ளிட்டு பூங்காவை தாண்டினப்போ வழியில அங்கங்க இருந்தவங்களை பாத்துக்கிட்டே வந்தேன். ஒரு இடத்துல அந்த மேஸ்திரி ‘இன்னிக்கு வீட்டு வேலையா..?’ன்னு கேட்டு சிரிச்சான்..
வேலை இல்லைன்னா வீட்டுக்கு போயிட்டு வேலை செய்யனும் அப்படீங்கற அர்த்தத்துல. நான் சிரிச்சுக்கிட்டே ‘வேலை இருந்தா சொல்லுங்க..’
‘இல்லை. ராமு இப்பதான் போன் பண்ணான். போறியா?’
‘ராமுவா..?’
‘ஆமா.. ஏரிப்பக்கமா வீட்டு வேலை. ரண்டு நாள் வேலை இருக்காம்’ னு சொன்னப்ப நான் தயக்கமா ‘வேணாமுங்க..’
‘இல்லைப்பா. வேற இடத்துல வேலை இல்லை’
‘எல்லாம் போயிட்டாங்க’
‘ஆமா.. தெரியுதுல்ல’
‘ஆனா ராமு? ..ம்..’ ன்னு மறுபடியும் தயங்கினப்போ ‘போப்பா.. அவன்னா எல்லாம் தயங்கறீங்க’
‘அவன் பணம் தரமாட்டானுங்க..’
‘எல்லாம் தர்றான் போப்பா.. சங்கத்துல கூட சொல்லியிருக்குது. கூப்புட்டு பேசியிருக்காங்க. குடுத்துடுவான்..’
‘இல்லீங்க. வேணாம்’ என்று நகர்ந்தபோது ‘உன்னிஷ்டம்’ என்கிற பதில் வந்தது. அந்த ராமுவுடன் ஏக முடியாது. ஒரு வருசத்துக்கு முன்னாடி ஒரு நாள் வேலைக்கு அவனிடம் போனவர்கள் கூட இன்னமும் காசு வாங்க முடியாமல் காறி துப்பிவிட்டு ஒதுங்கிவிட்டார்கள். அவனிடம் நிரந்தரமாக யாரும் போகமாட்டார்கள். அவனுக்கு வேலை கிடைக்கிற இடத்தை சேர்ந்தவர்கள் பாவம் என்றுதான் எல்லோருடைய நினைப்பும். ஆச்சரியமாக அவனுக்கு தொடர்ந்து வேலை கிடைச்சுட்டேதான் இருக்குது. அதனால அவன் மேல ஒரு மரியாதையும் இருந்தது. அந்த மரியாதைய காப்பாத்திக்கனும் அப்படீங்கறதை பத்தி அவனுக்கெல்லாம் கவலையில்லை. காரணம் நான் சொன்ன மாதிரி நல்ல மேஸ்திரிங்க கூட வேலை இல்லாதப்ப அவன் மட்டும் வேலை செய்யறதுதான். இதுக்கெல்லாம் காரணம் வேலைல அவன் கெட்டிக்காரன்னும் பண விழயத்தல மட்டும்தான் மோசமுன்னும் பேசிப்பாங்க எல்லாரும்..
நான் ஒதுங்கி வந்துட்டாலும் ஒரு நாளு கூலி போதேன்னு கவலையா இருந்தது. ஒரு நாள் கூலி ஏறக்குறைய நானூறு ரூபாய். அதிகமா கூட கிடைக்கலாம். ஆனா அதுக்கு கம்மி இல்லை. பொண்டாட்டிக்கிட்ட வீட்டு செலவுக்கு இதை சேத்தி தரலைன்னா முகத்தை.. முகத்தை பாப்பா. அவ கவலை அவளுக்கு. பொண்டாட்டியோட இந்த கவலை என்னைய பாதிக்கும். அதனால அந்த கவலை முகத்துல வராம பெரும்பாலும் பாத்துக்குவேன். ஏன் அந்த ராமுக்கிட்ட போகக்கூடாதுன்னு முடிவு பண்ணி நானே போன் பண்ணேன். அவன் எடுத்துட்டு ‘வாப்பா கிருஷ்ணா.. இப்பதானே அங்கிருந்து வந்தேன்..’னு கொத்தனார் ரோடை பத்தி பேசினான்.
‘வேலை இருக்கறாப்ல இருக்குதே’
‘ஆமாப்பா. சொல்லிட்டுதான் வந்தேன்’
‘இங்க இன்னொரு மேஸ்திரி சொன்னாரு’ ன்னு சொல்றதுக்குள்ள அவனே முந்திக்கிட்டு ‘வந்திடு ஏரிக்கர பக்கமா. மேட்ல குதிரைக்காரு வீடுன்னு கேளு. சொல்லிடுவாங்க’ ன்னு சொல்லிட்டு வச்சுட்டான்.
இவன்கிட்ட பணத்தை ஒழுங்கா குடுத்திடனும்னு எப்படி பேச முடியும் பாருங்க.. அவன் போனை வச்சதுக்கு என்னா அர்த்தமுன்னு நினைக்கறீங்க..? நாம போகலைன்னா அவன் கண்டுக்கமாட்டான். ஆள் இல்லாம எப்படி வேலை செயைவான்னு யோசிக்கக்கூடாது. அது அவனோட திறமைன்னு எடுத்துக்கலாம். இனிமே நாம போறது நம்ம கைலதான் இருக்குது. நான் உன்னைய கூப்பிடலையேன்னு சொன்னாலும் சொல்லிடுவான் பின்னாடி.. அதனால எதுவும் உறுதியில்லாமதான் அங்க போய்ட்டு சேந்தேன். பஸ்ல ஒரு பத்து நிமிசம் பயணப்பட்டு ஏரிக்கரை ஸ்டாப்பிங்கல இறங்கி அங்கிருந்து பாத்தப்ப வீடுகளுக்கு நடுவுல தெரிஞ்ச அந்த வீடுதான்னு தோணுச்சு. மேல ரண்டு பேரு நின்னுக்கிட்டு இருக்காங்க. கீழ இருந்து சிமெண்டு பாண்டலு மேல போறது நல்லாவே தெரியுது. நான் அந்த ரோடை தாண்டி பள்ளத்துல இறங்கி ஒத்தையடி பாதைல நடக்கும்போது பக்கத்துல அந்த வீட்டுக்கு போறதுக்கு புதுசா தார் ரோடு இருக்கறதும் தெரிஞ்சது. நான் அங்க போயிட்டு சேந்தப்ப மூணு பேரு இருந்தாங்க. அந்த ராமு இல்லை. அவங்க என்னைய பாத்துட்டு சிரிச்சுக்கிட்டே வாப்பான்னு சொல்லற மாதிரி தலையாட்டறாங்க..
நான் இப்ப ‘ராமு எங்க..?’ன்னு கேக்கறேன்..
‘இப்பதானே போனாரு.. குறுக்கால வரலையா..?’ன்னு ஒரு பொம்பளை சொல்லுது. நான் அவனுக்கு போன் பண்ணறேன் மறுபடியும். எடுத்துட்டு ‘வந்துட்டுயா..?’ன்னு கேக்கறான்
‘ஆமாப்பா.. அங்கதான் இருக்கேன்’
‘மேல போயிடு.. வேலைய ஆரம்பி. நான் பத்து நிமிசத்துல வந்துடறேன்’
‘சரிப்பா..’ன்னு சட்டைய கழட்டினப்ப ஒரு ஆளு ‘பேசினாரா மேஸ்திரி?’
‘ஆமாப்பா..’
‘எங்கிட்ட யாரும் வரமாட்டாங்கன்னு சொன்னாரே..?’
‘நான் இப்பதானே பேசினேன் உங்க முன்னாடி..’
‘அவரு இப்பதாங்க சொல்லிட்டு போனாரு..’ ன்னு சொன்னதும் நான் சட்டையை மறுபடி மாட்டிக்கிட்டேன். எல்லாரும் சிரிச்சாங்க. தமாஸ் பண்ணறாங்களோன்னு தோணுச்சு. ஆனா அவங்க சிரிச்சுக்கிட்டே ‘உண்மையாவே அப்படிதாங்க சொன்னாரு. அப்பறம் உங்க இஸ்டம்’ னு எச்சரிக்கற மாதிரி சொன்னாங்க. அவங்களுக்கு பழக்கம் போல. நான் ஓரமா செங்கல் அடுக்கியிருந்த இடத்துல போய் உக்காந்திட்டு மறுபடி அவனுக்கு போன் பண்ணேன்..
எடுக்கலை..
0000
இப்ப என்னா செய்யறதுன்னு எனக்கு தெரியலை. சட்டைய கழட்டிட்டு வேலைல இறங்கிடலாம். ஆனா அவன் குழப்பிட்டு போயிருக்கான். அதனால பேசிட்டுதான் முடிவு பண்ணனும்னு மறுபடி அவனுக்கு போன் பண்ணறேன்.
அவன் இப்பவும் எடுக்கலை. இப்ப நேரமாயிடுச்சு. வேலைல இறங்கலைன்னா லேட்டாயிடுச்சுன்னு கூலிய பாதி நேரத்துக்குதான் தருவாங்க.. இப்ப ஒரு அரை மணி நேரம் முன்ன பின்ன இருந்தாலும் பெரிய விசயமில்லை. நான் உடனே அந்த இடத்துல இருந்து எழுந்திருச்சு மறுபடியும் சட்டைய கழட்டறதை பாத்து கீழ சிமெண்டு கலக்கிட்டிருந்த பொம்பளை சிரிச்சது. மேல இருந்த பொம்பளை கூட.. எனக்கு அந்த சிரிப்புக்கு அர்த்தம் என்னான்னு தெரியலை ஆனா ஒரு விசயம் தெரிஞ்சுக்கனமுன்னு தோணுச்சு.. அது என்னதுன்னா இவங்க அந்த ராமுக்கிட்ட தினசரி வேலைக்கு வர்றவங்களான்னு.. அப்படி யோசிச்சப்ப மறுபடியும் அவங்க சிரிப்பை பத்தி நினைச்சுக்கிட்டேன்.. அந்த சிரிப்புக்கு நானா ஒரு அர்த்தம் எடுத்துக்கிட்டேன்.. அதாவது அப்பாவின்னு.. அதாவது ராமு என்னைய பத்தி சொல்லவேயில்லை.. ஆனா நான் சட்டைய கழட்டிட்டு நிக்கறேன்.. எனக்கு கொஞ்சம் கஸ்டமா இருந்தாலும் தெளிவா ‘அவரு மறந்திருக்கலாம்.. நான் பேசிட்டுதான் வந்தேன்..’னு சொன்னதும் மேல இருந்த பொம்பளை ‘நாங்க எதுவும் சொல்லலையே..’ என்றாள்..
அந்தாளும் தலையாட்டி ‘மேல வாப்பா..’ என்பது போல சொன்னபோது நான் ஒரு பக்கமா ஒதுங்கி மேல ஏறினேன். அப்பதான் அந்த இடத்தை முழுசா பாக்க முடுஞ்சது. நல்ல இடம்தான். தூரத்தல நிறைய விவசாயம் தெரிஞ்சது. நிலத்துல ஈரப்பசை இந்த இடத்துல தண்ணி பிரச்சனை இல்லைங்கிறதை காட்டினது. புதுசு.. புதுசா நிறைய வீடுங்க இருந்தது.. பெரும்பாலான வீடுங்க சமீபத்துல கட்டி முடுச்சா மாதிரி.. ஒரு சில வீடுங்க கட்டிக்கிட்டிருக்காங்க.. ரண்டு.. மூணு இடத்துல கடகால் போட்டிருந்தாங்க.. ஒரு இடத்துல கல்லு வைக்கறதுக்கு குழி தோண்டிட்டு இருந்தாங்க.. ஒரு இடத்துல பசங்க தென்னந்தோப்புக்குள்ளாற மட்டை விளையாடிட்டு இருந்தாங்க.. ஒரு சில பொம்பளைங்க மாடில தெரிஞ்சாங்க. ஏரிக்கரைல ஒரு ஆளு வண்டில எதையோ வச்சுக்கிட்டு கத்திட்டு போறான்.. நிறைய மாடுங்க அங்கங்க மேஞ்சுக்கிட்டு இருக்குது.. ஒரு லாரி ஏரிக்கர மேல போகுது.. இனிமே வேலைய பாக்கலாமுன்னு அந்த ஆள்கிட்ட ‘என்னா செய்யட்டும்..?’ ன்னு கேக்கறேன். அவன் சிரிச்சுக்கிட்டே ‘உன்னைய பத்தி தெரியாதா..? நான் என்னா செய்யறேனோ அதேதான்.. தரையை பூசறது.. ஒரு பக்கமா நீ பூசு.. இன்னொரு பக்கமா நான் பூசறேன்..’ னு சொல்லிட்டு அவனா வேலைய தொடர்ந்து செய்யறான்.. அவன் பேரு மறந்து போச்சு எனக்கு.. யோசிச்சப்போ ஞாபகத்துக்கு வரலை.. திடீருன்னு வரலாம்.. பெரும்பாலும் எல்லா முகங்களும் பாத்ததுதான்.. பழகலைன்னாலும்.. இந்த பொம்பளைங்கள கூட பாத்திருக்கேன்.. அவங்களுக்கு கூட என்னைய தெரிஞ்சிருக்கலாம்.. இந்த இடத்துல ஒரு ஒத்துமை இருக்கற மாதிரி தெரிஞ்சது.. நான் வேலை செய்யற இடத்துல இப்படி தோணாது.. அது தானா தெரியும்.. மனசுக்குள்ள ஒரு இது வரணுமில்லையா..? என்னது..? ம்.. அதை எப்படி சொல்லறது.. ஒரு ஆச.. இங்க நல்லாயிருக்குதுன்னு.. அந்த மாதிரி நான் வேலை செய்யற இடத்துல வராது.. நான் பாட்டுக்கு வேலை செஞ்சுட்டு கிளம்பிடுவேன்.. ஆளுக்கு ஒண்ணு பேசுவாங்க.. எதுலேயும் கலந்துக்கமாட்டேன்.. அவங்க பேச்சு எனக்கு புடிக்காது.. எதுவும் நிரந்தர பேச்சு கிடையாது.. மாத்தி மாத்தி பேசுவாங்க.. அரை மணி நேரம் லேட்டா வந்தாக்க கூட பேச்சோட சொல்லி காட்டுவாங்க.. அவங்களுக்கு பேச்சுதான் முக்கியம்.. ஆனா அந்த பேச்சுல எதுவுமே இருக்காது.. சப்புன்னு.. கேட்டதையே திரும்ப.. திரும்ப கேட்டுக்கிட்டு.. ஆனா இங்க அப்படி தோணலை.. நான் சட்டுன்னு அப்படி முடிவெடுக்க கூடாதுன்னு நினைச்சுக்கிட்டேன்.. ஒரு கரண்டிய எடுத்து அவன் கொடுக்கும்போது ஒரு பொம்பளை ‘ஏம்பா சின்னு.. தண்ணிய இன்னும் கொஞ்சம் சேக்கவா..?’ ன்னு கேக்குது.. சின்னுங்கற பேரு எனக்கு புதுசா தெரிஞ்சது.. அவனோட நான் இதுவரைக்கும் பேசினதில்லை.. ஆனா பெரும்பாலும் அடுத்தவங்க பேரை சொல்லி பக்கத்துல பேசும்போது இவங்கதான் அவங்கன்னு ஒரு நினைப்பு இருக்கும்.. ஆனா இந்த பேரு புதுசா இருந்தப்போ எம் பேரையும் அவங்களுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லைன்னு தெரிஞ்சுக்கிட்டு ‘எம் பேரு கிருஷ்ணன்..’னு சொல்லறேன்..
அதுக்கு அந்த சின்னு ‘தெரியுமே..’ன்னு சொல்லறான்.. அந்த பொம்பளைங்க மறுபடியும் சிரிக்கறாங்க.. அவங்க இதுக்கும் சிரிச்சது எனக்கு வேடிக்கையா பட்டப்ப ஒரு பக்கமா இருந்து வேலை செய்ய எனக்கு தனியா சிமெண்டு கலவை வந்தது.. கீழ உக்காந்திட்டு ஒரு கரண்டிய அள்ளிப்போட்டு அப்படியே தடவறேன்.. கான்கிரீட் போட்டு சிமெண்டு தடவலைன்னா சரிப்படாது.. அந்த இடத்தை பாத்தப்ப இன்னும் ரண்டு நாளு வேலையாவது இருக்குமுன்னு தோணுச்சு.. நான் தடவறதை பாத்து அந்த சின்னு சிரிச்சுக்கிட்டே ‘உங்கிட்ட இருந்தும் நான் கத்துக்கறது இருக்குது..’ன்னு சொன்னான்..
அவன் தமாஸ் பண்ணறானோன்னு நினைச்சப்ப ‘நீ கரண்டிய புடிக்கற மாதிரி எனக்கு வர்றதில்லை..’ன்னு புடுச்சு காட்டினான்.. உடனே நானு ‘ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பழக்கம்..’ னு சொன்னப்ப அவன் நான் செய்யறதை கொஞ்ச நேரம் வேலைய நிறுத்திட்டு கவனிச்சான். அப்ப பலமா காத்து அடிச்சது. அவன் இருமிட்டே ‘இங்கன காத்து அதிகம்..’னு சொல்லிட்டே மறுபடியும் வேலைல இறங்கிட்டான்.. அவன்கிட்ட ஒரு சின்ன குறைய பாத்தேன் நான்.. அவன் பிடிப்புக்கு அப்பப்ப விரலுக்கு வலி வந்திடும்.. அதனாலதான் அவன் என்னோட பிடிப்பை பத்தி பேசினான்னு நினைச்சுக்கிட்டு ‘நீ சொன்னது சரிதான்..’னு சொன்னப்ப நான் அவன் வேலை செய்யறதை கவனிக்கறேன்னு புருஞ்சுக்கிட்டு ‘ஆனா எனக்கு பழகிருச்சு..’ன்னு சொல்லறான்..
இப்ப எனக்கு அந்த இடத்துல வேலை ஓடினாலும் ஏதோ ஒரு உறுத்தலு இருந்துட்டே இருந்தது.. அது அந்த ராமு விழயம்தான்.. வேலைக்கு உதிரி ஆளுங்க வரமாட்டாங்கன்னு இவங்ககிட்ட சொல்லியிருக்கான்.. ஆனா என்கிட்ட செய்யின்னு சொல்லறான்.. ஒரே குழப்பமா இருந்தது.. நானூறு ரூபாய நினைச்சுக்கிட்டேன்.. அதுக்கு ஒரே வழி இவங்ககிட்ட பேசிட வேண்டியதுதான்..
எப்படி ஆரம்பிக்கறது..? புரியலை.. ஆனா வேலை பாட்டுக்கு ஓடுது.. அந்த சின்னு மறுபடியும் கொஞ்ச எழுந்து நின்னுக்கிட்டு வேற எங்கேயோ பாக்கறான்.. நான் அவனை நிமுந்து பாத்து ‘பிரச்சனை கைல இல்லை..’ன்னு சொல்லறேன்..
‘’பின்ன..?’
‘உக்கார்ற விதம்தான் காரணம்..’
‘எப்படி..?’
‘என்னைய மாதிரி உக்காருங்க..’ ன்னு சொல்லறேன். அவனுக்கு அந்த பொம்பளை முன்னாடி நான் கத்துக்குடுக்கறதா நினைப்பு வந்திடக்கூடாதுன்னு நினைக்கறது எனக்கு தெரிஞ்சது.. அதனால உடனே பேச்சை மாத்திட்டு ‘உன்னைய மாதிரிதான் நானும்.. ஆனா கை வலிச்சுட்டே இருக்கும்.. அப்பறம்தான் ஒருத்தரு சொன்னாரு.. அதாவது ஒரு பக்கமா உக்காரனமுன்னு.. அப்பதான் புருஞ்சது.. நான் சரியாதான் செய்யறேன்.. ஆனா உக்கார்றதலுதான் பிரச்சனை..’ன்னு சொன்னதும் அவன் அந்த பொம்பளைய பாத்து ‘பாத்தியா.. நான்தான் சொன்னேனில்ல..’ என்றான் சம்பந்தமில்லாமல்..
அவளும் விட்டுக்கொடுக்காமல் ‘அதானே பாத்தேன்..’ என்றாள் ஒப்புக்கு.. இப்ப வழக்கமாக பேசாம வேலை செய்யற நான் இப்ப தொடர்ந்து பேசலாமுன்னு முடிவு பண்ணி ‘இந்த இடம் நல்லாருக்குது..’ ன்னு சொல்லறேன்..
அவன் என்கிட்ட பேசலை.. ஆனா நான் உக்கார சொன்ன மாதிரி உக்காந்திட்டு செய்ய ஆரம்பிக்கறான்.. ரொம்ப ஈஸியா இருந்தது அவனுக்கு அது.. ஆனா வழக்கமா செய்யற மாதிரி மறுபடி உடம்பு மாறும்போது தனக்கு தானே சிரிச்சுக்கிட்டு மறுபடி முயற்சி பண்ணதை பாத்தும் பாக்காத மாதிரி வேலை செய்யறேன்.. அவன்கிட்ட பேச்சு கொடுத்து பதில் வராததால அந்த பொம்பளைய ஒரு முற நிமுந்து பாக்கறேன்.. அதுவும் என்னைய பாத்து ‘சரியாப்போச்சா சிமெண்டு கலக்கினது..?’ன்னு கேக்கறா..
அது ஒப்புக்குதான்னு சொன்னாலும் எல்லாம் பழக்க தோசம்தான்.. இல்லைன்னா வேலைலேயே கவனமா இருந்து சலிப்பு வந்திருமுன்னு நிறைய பேருக்கு நினைப்பு.. எனக்கு அப்படி தோணலை.. காரணம் எனக்கு அப்படி பழகிருச்சு.. நிறைய பொம்பளைங்க வீட்டு விழயத்தை நிறைய பேசுவாங்க.. அதுல பெரும்பாலும் குறைங்கதான் இருக்கும்.. எல்லாத்தையும் தனக்கு சாதகமா எதிர்பாத்து பேசிட்டே இருப்பாங்க.. ஒண்ணுத்துக்கு ஒண்ணு ஒட்டாம இருக்கும்.. ஆனா அதையும் கேட்டுக்கிட்டேதான் வேல செய்வாங்க.. சில சமயம் புடிக்கலைன்னாலும்.. நடுவுல நிறுத்திட்டா ‘சொல்லு என்னாச்சு..?’ன்னு விடாம கேப்பாங்க..
ஊர் வம்புன்னு சொல்ல முடியாது.. கவனம் மாறுமுன்னும் சொல்ல முடியாது.. அது பழகிருச்சு.. ஆனா எனக்கு அதுல உடன்பாடில்ல.. காரணம் நிறைய கற்பனைங்க இருக்கும் அதுல.. நல்லவங்க கெட்டவங்க ஆவாங்க.. கெட்டவங்க நல்லவங்க ஆவாங்க.. மரியாதை இருக்காது.. அந்தரங்கம் நிறைய வரும்.. அதுல நிறைய பொய்யி இருக்கும்.. கடைசில போகும்போது பேசுன இடத்துல அந்த பேச்சுங்க குப்பை மாதிரி நிரம்பி கிடக்கறதா எனக்கு தோணும்.. இங்க கூட அந்த புத்தி இருக்கலாம்.. அந்தம்மா பேச்சு கொடுத்தது அதுக்காக கூட இருக்கலாம்.. ஆனா நான் புதுசு அப்படீங்கறதால எங்கிட்ட அதிகமா பேசிக்கமாட்டாங்கன்னு நினைச்சுக்கிட்டேன்.. அப்ப மறுபடி அந்த ஞாபகம் வந்தது.. ராமுவை பத்தி எப்படி கேக்கறதுன்னு யோசனை ஒரு பக்கமா இருந்துக்கிட்டே இருந்தப்போ கீழ ஒரு வண்டி வந்து நிக்கற மாதிரி இருந்தது..
எனக்கு அப்பாடான்னு ஆச்சு.. ராமு வந்துட்டா நேர்ல வேலை செய்யறத பாத்துட்டான்னா அப்பறம் காசு விழயத்துக்கு போயிடலாம்னு நினைச்சுக்கிட்டேன்.. அந்த பொம்பள வண்டி சத்தத்த கேட்டு ‘வீட்டுக்காரு வந்திருக்காரு போல..’ன்னு சொல்லிட்டு சிரிக்குது.. எனக்கு சப்புன்னு ஆயிடுச்சு.. ஆனா பத்து நிமிசத்துல வந்திடறேன்னு சொன்னானேன்னு சட்டுன்னு இதை பயன்படுத்திட்டு ‘நான் மேஸ்திரியோன்னு நினைச்சுட்டேன்..’னு சொல்லறேன்.. அதுக்கு அந்தம்மா ‘அது அப்படிதான் சொல்லும்.. ஆனா எப்ப வருமுன்னு சொல்ல முடியாது.. வராம கூட போலாம்..’னு சொன்னப்ப திக்குன்னு ஆயிடுச்சு..
என்னைய திரும்பி பாத்தான் சின்னு.. அவனுக்கு என்னோட முக வாட்டம் தெரிஞ்சிடுமோன்னு நினைக்கறப்ப அவன் ‘கொஞ்சம் கொஞ்சமா வருதுங்க.. கை வலி கூட வித்தியாசம் தெரியுது..’’
‘வலிக்காது..’
‘ஆமாங்க..’ ன்னு சொல்லிட்டு அவன் அதே மாதிரி நிதானமா செய்யறான்.. இப்ப மாடில காலடி சத்தம் கேக்குது பரக்..பரக்குன்னு.. செருப்பு சத்தம்தான்.. நான் திரும்பி பாக்கல.. பாக்கறதுக்கு என்னா இருக்குது..? அந்தாளு வந்து வேடிக்க பாக்கறது தெரியுது.. பெரும்பாலும் வீட்டுக்காரங்க வேடிக்க பாக்கறதுக்கு வந்து நிப்பாங்க.. திருப்தியா இருந்தா போயிடுவாங்க.. இல்லைன்னா குறை சொல்லிட்டே இருப்பாங்க.. அப்பறமா வாய் வார்த்தை.. சண்டைன்னு முடியும்.. வேலை தள்ளிப்போகும்.. வேற மேஸ்திரிய பாப்பாங்க.. இல்லன்னா பஞ்சாயத்து நடக்கும்.. வேல நேரத்துல கூட பேசிட்டே இருந்தா சண்டை வந்துடும்.. அப்படியே வேலை நின்னுடும்.. அப்பறமா அதை மறந்துட்டு மறுபடியும் வேலைல இறங்குவானுங்க.. சில சமயம் அடிச்சுக்குவானுங்க.. அப்பறம் சாராயக்கடைல ஒண்ணா உக்காந்து பேசி மறுநாளு ஒரே வண்டியில வருவானுங்க.. சாராயக்கடை பழக்கமில்லாதவங்க மறுபடியும் பேச ரொம்ப நாள் எடுத்துக்குவானுங்க.. இல்லைன்னா சுத்தமா பிரிஞ்சிருவானுங்க.. இதுல பொம்பளைங்களும் அடக்கம்.. சில இடத்துல மேஸ்திரிங்க குரங்கு வித்தையெல்லாம் பண்ணி பொம்பளைங்கல ஒரு மாதிரி சரிப்பண்ணி வச்சிருப்பானுங்க.. அவ வேற ஒருத்தன் கூட பேசினா சொந்த பொண்டாடிய பறிகொடுத்தா மாதிரி குதிப்பானுங்க.. சரியில்லாத பொம்பளைங்கெல்லாம் இருக்காளுங்க.. அவங்களால நிறைய இடத்துல குஸ்தியெல்லாம் நடக்கும்.. நமக்காகதான் குஸ்தின்னு தெரிஞ்சா மாதிரி காட்டிக்கமாட்டாளுங்க.. ஒரு சில பொம்பளைங்க இருக்காங்க.. கண்ல ஒத்திக்கலாம்.. கிட்டக்க நெருங்க முடியாது.. அந்த பார்வதியெல்லாம் அப்படிதான்.. வார்த்தைங்கள கூட கவனிப்பா.. மேஸ்திரிங்களை பொட்டச்சிக்கு அலையற பசங்கன்னு சாதாரணமா சொல்லுவா.. புடுச்ச மேஸ்திரின்னா தலைல தூக்கி வச்சு ஆடுவா.. ஒரு மாதிரி ஓரமா பாக்கற மேஸ்திரிங்களும் சரி.. மத்த கரண்டி வேலை.. மண்வெட்டி வேலைய செய்யறவங்களும் சரி.. அவக்கிட்ட உசாரா இருப்பாங்க.. அந்த மாதிரியும் நிறைய பொம்பளைங்க இருக்காங்க.. வீட்ல வீட்டு வேல.. பகல்ல கட்டட வேல.. தன்னையும் காப்பாத்திக்கனும்.. உடம்பு தொல்லை வேற.. கண்டிப்பா சொல்லறேங்க.. நாம என்னவோ ஆம்பளைங்க உடல் பளு பத்தி பேசறோம்.. ஆனா பொம்பளைங்கதாங்க பளுவானவங்க.. மனசால.. ஒரு ஆம்பளை வீட்டுக்கு வந்தா நீண்டுக்குவான்.. ஆனா பொம்பளைங்க வீட்டுக்கு வந்துட்டு முகம் கழுவிட்டு அடுப்பை பத்த வச்சு சாப்பாடு செஞ்சு அப்படியே துணிமணி சுத்தத்தையும் பாத்து பசங்களையும் கவனிச்சு தன்னையும் கவனிச்சுக்கிட்டு மறுபடியும் காலைல இதே வேலைய மறுபடி வீட்ல செஞ்சுட்டு தன்னையும் தயார் பண்ணிட்டு வேலைக்கு கிளம்பி..
யோசிச்சு பாருங்க.. யாருக்கு சக்தி அதிகமுன்னு.. ஆம்பளைங்களுக்கு பெரும்பாலும் உடம்பு பலம் மட்டும்தாங்க.. பொம்பளைங்களுக்கு புத்தி பலமுங்க.. அதுவும் அந்த பார்வதி மாதிரி சுத்தமான பொம்பளைங்களுக்கு புத்திக்கு மேல புத்திங்க.. பார்வதி மாதிரி பொம்பளைங்கல பாக்கும்போது ரட்டிப்பு சந்தோசமா இருக்கும்.. ஒரு நல்ல மனுஷிய பாக்கற மாதிரி.. ஒரு இடத்துல அந்த வீட்டு ஓனரை கன்னத்துல அவ அறைஞ்சது ரொம்ப பிரபலமுங்க.. சும்மா இருந்தாதானே….? அவள பாத்துட்டு குட்டி போட்ட பூன மாதிரி அவளையே சுத்தி சுத்தி வந்தா.. விட்டா ஒண்ணு.. ஓனருங்களும் அங்கங்க வாலை ஆட்டத்தான் செய்யறாங்க.. இந்த ஓனரு பின்னாடி ஒரு பார்வை பாத்துட்டு திரும்ப நடக்கறது எனக்கு கேக்குது..
ஆனா நான் திரும்பி பாக்கல.. படியில செருப்பு சத்தம் இறங்கி போறது கேக்குது.. எனக்கு அப்ப அந்த சின்னு மேல கவனம் போகுது.. நிதானமா என்னைய திரும்பி திரும்பி பாத்துட்டே வேலை செய்யறான்.. நான் சாதாரணமா முகத்துல எதையும் காட்டாம என்னோட பக்கமா வேலை நடக்கறது அவனை தாண்டி போகும்போது அவன் அதை கண்டுக்காம புது முயற்சில நிதானமா இருக்கறது எனக்கு அவன் மேல ஒரு மரியாதையை வரவழைச்சது.. இப்ப அந்த வீட்டுக்காரன் திரும்பி போறது கேட்டது. பழையபடி எலி குடைற மாதிரி அந்த ராமு வந்து குடைய ஆரம்பிச்சுட்டான்.. காசு கிடைக்குமா கிடைக்காதா..? அது கூட அப்பறம்.. மொதல்ல வருவானா..? வரமாட்டானா..?
அவன் வரலைன்னா போன்ல பேசனும்.. நாளைக்கு அவனைய பிடிக்கனும்.. அவன் கொத்தனாரு ரோட்ல கிடைச்சான்னா பணத்த கேக்கனும்.. அவன் அப்ப ஆள் புடிக்கற வேலைல இருப்பான்.. அப்பறமா பேசறேன்னு சொல்லுவான்.. இல்லைன்னா அப்பறமா பணத்தை தர்றேன்னு சொல்லுவான். மறுபடியும் ரண்டு நாளைக்கு கண்ல படமாட்டான். இப்படியே ஒரு வாரம் ஆயிடும்.. அப்பறம் ஒரு மாசம்.. ஒரு வருசம்.. சும்மா செய்யறோமோன்னு எரிச்சலா வந்தது.. ஆனா அந்த பொம்பளைங்களையும் சின்னுவையும் பாத்து என்னைய தேத்திக்கிட்டேன்..
நம்மளை ஏமாத்தறவன் இவங்களையும் ஏமாத்த மாட்டானான்னு..? ஆனா அதிலேயும் ஒரு விசயம் இருக்குது.. இவங்க தினமும் வர்றவங்களா இருக்கலாம்.. அப்படி பாத்தா அவங்களை ஏமாத்த முடியாது.. ஆனா நம்மளை ஏமாத்தலாம்.. நான் நாளைக்கு வழக்கமா போற ஆளுக்கிட்ட போயிடுவேன்.. அப்ப இவனால தட்டி கழிக்க முடியும்.. என்னடா இதுன்னு ஒரு நொடி அமைதியா இருந்தப்ப அந்த சின்னுவோட முகமலர்ச்சிய பாத்து எனக்கு ஒரு தெம்பு வந்துருச்சு.. அவன் திரும்பி பாத்து ‘உங்களால ஒரு சாதாரண தப்பை திருத்திக்கிட்டேன்..’னு சொன்னப்ப சந்தோசமா இருந்தது..
ஆனது ஆகட்டுமுன்னு ராமுவை பத்தி நினைக்கறத விட்டுட்டு வேலைல கவனமா இருக்கு ஆரம்பிச்சேன்.. அப்ப பக்கத்துல இருந்த பொம்பள என்னைய அப்பப்ப பாத்துக்கிட்டது எனக்கு தெரிஞ்சது.. அதெல்லாம் மனுசனுக்கு தானா வரும்.. யாரோ நம்மளை பாக்கறாங்கன்னு.. நான் அங்க கவனத்தை கொண்டு போகாம வேலையும் கண்ணுமா இருந்தேன்.. அடுத்த முற அவ சிமெண்டு கலவைய பக்கத்துல வச்சப்ப பூ வாசன வந்தது.. அந்த வாசன எனக்கு புடிக்கும்.. ஆனா அதுக்காக வந்த இடத்துல புத்திய காட்ட முடியுமா..? எனக்கு அந்த புத்தியும் கிடையாதே..?.. நான் இப்ப மூணு அடிக்கு பின்னாடி இருக்கேன் சின்னுவை தாண்டி.. சின்னு திரும்பி பாத்து அதே பொறுமையா சிமெண்டை இழுத்துட்டு வர்றான்.. நான் அவனை பாத்து சிரிச்சப்ப எனக்கு பக்கத்துல அவ நின்னுக்கிட்டு வேடிக்கை பாக்கறா.. அப்ப சின்னு ‘எனக்கு இப்ப புதுசா கத்துக்கிட்ட மாதிரி இருக்குது..’ன்னு சொன்னதோட இல்லாம வேகமா செய்ய ஆரம்பிக்கறான்.. ஒரு சில நிமிசம் கழுச்சு பாத்தா அவன் சீக்கரமா படபடன்னு இழுத்துக்கிட்டு வர்றான்..
பழைய ஸ்டைல்ல..
அட என்னடான்னு உத்து பாத்தா அதே பழைய மாதிரிதான்.. சட்டுன்னு ஒரு பக்கமா கையை உதறிட்டு மறுபடி அதே மாதிரி இழுக்கறான்.. மறுபடி கீழ உக்காந்துட்டு மறுபடி இழுத்துட்டு மறுபடி எழுத்து நிக்கறான்.. கைய புடுச்சுக்கறான்.. அந்த பொம்பள சிரிக்குது.. இப்பவும் நான் அவளை கவனிக்கல.. ஆனா அவ சிரிப்புல அப்பாவித்தனம் தெரிஞ்சது.. இப்பதான் அவளை நான் நிமுந்து பாக்கறேன்.. அவ கண்ல கூட அந்த அப்பாவித்தனம் தெரிஞ்சது.. நான் நிமுந்து பாக்கறதும் சின்னு வேகமா பழைய மாதிரி சிமெண்டை வழிக்கறதும் அவளுக்கு தாமாசா போயிட்டு சிரிக்கறா.. உடனே நான் எழுந்து சின்னுவோட ரண்டு பக்கமும் முதுகு பக்கமா அவனோட கைகள புடுச்சுக்கிட்டு ‘பொறுமை.. பொறுமை..’ன்னு சொல்லறேன்..
இப்ப அந்த பொம்பளை இன்னமும் சிரிக்குது.. ஒரு குழந்தை மாதிரி.. நான் அவனை தப்பா நினைச்சதுக்கு ரொம்ப வருத்தப்பட்டேன்.. சின்னு தடுமாறினதுக்கும் சேத்து.. சின்னுவும் வருத்தப்படற மாதிரி முகத்தை வச்சுக்கிட்டு ஏன் அவசரப்பட்டோம் அப்படீங்கற மாதிரி பாக்கறான்.. நான் மறுபடி என்னோட இடத்துக்கு வந்து வேலைய தொடங்கறேன்.. சின்னு இப்ப மறுபடி பொறுமையா வேற மாதிரி உக்காந்திட்டு அந்த புதுசா செஞ்ச மாதிரி செய்ய ஆரம்பிக்கறான்..
இனிமே அவன் தப்பு செய்யமாட்டான்னு தோணுச்சு.. ஆனா ஏன் அவன் திடீருன்னு அந்த பழைய தப்பையே பண்ணான்னு யோசிச்சப்ப அந்த பொம்பள என் பக்கத்துல நின்னது கூட காரணமா இருக்குமோன்னு தோணுச்சு.. இவன் வேற.. அவ வேற.. அவ ஒரு குழந்த.. இவன் உள்ளாற ஏதோ வச்சுக்கிட்டு அவளைய பத்தி தப்பான எண்ணத்தோட இருக்கானோன்னு தோணுச்சு எனக்கு.. அப்ப அவன் மேல பரிதாபமும் வந்தது.. அவன் அந்த பொம்பளைய பத்தி நல்லவிதமா நினைக்கனமுன்னு என்னையறியாம உள்ளுக்குள்ளாற சொல்லிக்கிட்டேன்..
அப்ப இன்னொரு வண்டி வந்து நின்ன மாதிரி இருந்தது.. அது கண்டிப்பா அந்த ராமுதான்னு நான் நினைச்சப்ப..
0000
இல்லீங்க.. மறுபடியும் அந்த வீட்டுக்காரனே.. அவன் மாடில வர்றது பரக்.. பரக்னு மறுபடி கேக்குது.. அதே மாதிரி பின்னாடி வந்து நிக்கற சத்தமும் கேக்குது.. அப்பறம் அமைதி.. அந்த பொம்பளை கூட சிரிக்காம வேலைய செய்யறா.. அப்பறம் அந்த செருப்பு மறுபடி பின்னாடி நகந்து படியில இறங்கி போகுது.. இப்ப எம் முன்னாடி அந்த பொம்பளை ஒரு கடலை மிட்டாய் பாக்கெட்டை நீட்டறா.. அந்த வண்டி மறுபடி கிளம்பி போகுது.. அவ அந்த மிட்டாய குடுக்கும்போது ‘இது அடிக்கடி இங்க சாப்புடறதுக்கு குடுப்பாங்க..’ ன்னு சொன்னப்ப அந்த சின்னு தலையாட்டிக்கிட்டே ‘ஆமாங்க.. பக்கத்துல செய்யறாங்க.. உடைஞ்சது.. தூளானதுன்னு தனியா பாக்கெட்டு பண்ணி பத்துருபாக்கு தருவாங்க.. அடிக்கடி மேஸ்திரி வாங்கி தருவான். இந்த வீட்டு ஓனரும்.. சாப்புட்டு பாருங்க..’ன்னு சொன்னப்ப எனக்கு ஒரு விசயம் புருஞ்சுது.. அதாவது ராமு இவங்களுக்கு சாப்புட வாங்கித்தர்றான்..
எனக்கு அது ஆச்சரியமா இருந்தது.. ஏனோ பணம் வந்துருமுன்னு தோணுச்சு.. ஆனா அப்பறமா அந்த பொம்பள சொன்னதுதான் திக்குன்னு ஆயிடுச்சு.. அவ அந்த சின்னுவை பாத்து ‘மேஸ்திரி எங்க வாங்கி கொடுத்தான் உனக்கு..? உனக்கு வேணுமுன்னா வாங்கி கொடுத்திருப்பான்.. கஞ்சப்பய..’ன்னு சொல்லிட்டு சிரிச்சது.. சின்னு அதுக்கும் தலையாட்டிட்டு ‘ஆமா.. ஆமா..’ன்னு சொன்னப்ப எனக்கு ஒரு மண்ணும் புரியல.. மொத்தத்துல வேல செய்யற ஆச சுத்தமா போயிடுச்சு.. அந்த நேரமா பாத்து கீழ கலவைய கலக்கிட்டிருந்த பொம்பள சத்தமா பேசுது..
‘நேரமாயிடுச்சா டீ குடிக்க..?’
‘இரு கேட்டு சொல்லறேன்..’ னு அந்த பொம்பள சின்னுவை பாக்க.. அவன் அதே பொறுமையோட ‘ஆச்சு.. ஆச்சு..’ன்னு சொல்லறான்..
அப்பறமா வேலையெல்லாம் சட்டுன்னு நிக்குது.. நான் எழுந்திருச்சு வெளிய கீழ பாக்கறேன். கீழ இருந்த பொம்பள ஒரு தூக்கு பாத்தரத்தை தூக்கிட்டு மெதுவா நடந்து போகுது.. இந்த பொம்பள என்னைய பாத்து சொல்லுது..
‘இந்த தெரு முனைல ஒரு டீக்கட இருக்குது..’
‘இப்ப அங்கதான் போகுதா..?’
‘ஆமா..’
‘அதுக்கு பணம்..?’
‘மேஸ்திரி கொடுத்துடுவான்..’ னு சின்னு சொன்னப்ப உர்ர்ர்..ருன்னு பாத்துட்டு அந்த பொம்பள ‘கடன் குடுத்துருக்கியா மேஸ்திரிக்கு நீ..? டீ எப்பய்யா வாங்கி குடுத்தான் உனக்கு..? கஞ்சப்பய..’ன்னு மறுபடியும் சொல்லறா.. என்கிட்ட திரும்பி ‘எல்லாம் ஓனரு கணக்குங்க..’
நான் சோந்து போயிட்டு மெதுவா அவளை தாண்டி கீழ இறங்கி வர்றேன்.. அந்த சிமெண்டு கலவை பக்கமா இருந்த தண்ணில கைய கழுவிக்கிட்டு பக்கத்துல அந்த நிழல்ல ஒரு மரத்துல கீழ தொங்கிட்டிருந்த சட்டைய மாட்டிக்கிட்டு கிளம்பறேன்.. அந்த டீ வாங்க போற பொம்பளை பின்னாடியே..
அப்ப மேலயிருந்து அந்த பொம்பள சொல்லுது.. ‘அவரு பீடி அடிக்க போறாரு போல..’ன்னு சின்னுக்கிட்ட..
ஒரு இடத்துல நடந்துக்கிட்டே இருந்தப்போ அந்த டீக்கு போற பொம்பள நேரா போகுது.. நான் அந்த குறுக்கு வழியா பிரிஞ்சு நடக்கறேன்.. பேசாம வீட்டுக்கு போயிருக்கலாமுன்னு நினைச்சுக்கறேன்.. நடக்கறதுக்கு வெறுப்பா இருக்குது.. புத்தி சரியில்லை எனக்குன்னு நினைச்சுக்கறேன்.. பிறகு நிதானமா நடக்கறப்ப கையை சரியா கழுவாதது தெரியுது.. பரவாயில்லைன்னு தொடர்ந்து நடக்கறேன்.. ஒரு மேடு வருது.. ஒரு கழுதை மேயுது அங்க.. ஒரு ஆளு கட்டில்ல வெளில புளிய மரத்தடில படுத்துக்கிட்டு கிடக்கறான்.. அந்த மேட்டை தாண்டி ஏரிக்கர.. அங்க இருந்து திரும்பி பாக்கறேன்.. அந்த மாடி தெரியுது.. யாருமில்லை.. கீழ இருக்கலாம்.. அப்படியே நடந்து ஒரு அஞ்சு நிமிசம் வேடிக்க பாத்துட்டே போறேன்.. முன்னாடி அந்த ராமு வருவானோன்னு பாத்துக்கிட்டே கூட.. அந்த பஸ் ஸ்டாப்பு வருது.. பக்கத்துல ஒரு டீக்கடை.. டீ வாசனையும் வருது.. குடிக்கனும் போல தோணுச்சு.. பாக்கெட்டுல பணம் இருக்குது.. கூடவே பருப்பு வட வாசனையும் சேந்து வருது.. டீயும் வடையும் எனக்கு புடிக்கும்.. ஆனா ஏனோ அப்ப வாங்க தோணலை.. ரண்டு நிமிசம் தனியா அந்த பஸ் ஸ்டாப்புல நிக்கறேன்.. அப்ப கூட அந்த ராமுவா இருக்குமோன்னு கொஞ்ச தூரத்துல ரோடு வளையற இடத்துல வண்டிங்க ஓட்டிட்டு வர்றவங்கள பாக்கறேன்.. அப்படி தெரியல..
ஒரு பஸ்ஸூ வர்ற சத்தம் மட்டும் கேக்குது..
0000
நான் வீட்டுக்கு வந்திட்டேன். வரும்போது பசங்களுக்கு பலகாரம் வாங்கனப்போ அந்த கடலை மிட்டாய் பாக்கெட்டை அங்கேயே விட்டுட்டு வந்திட்டது ஞாபகத்துக்கு வந்தது.. அந்த இடத்தை பத்தி மறுபடி நினைச்சு பாக்கக்கூடாதுன்னு நினைச்சுக்கிட்டப்போ அந்த பொம்பள.. அப்பறம் சின்னு.. அப்பறம் கீழ கலவை கலக்கறவ.. எல்லார் மேலேயும் பாவமா வந்தது.. அவங்களை தனியா விட்டுட்டு வந்துட்ட மாதிரியும் இருந்தது.. அப்ப எனக்கு சிரிப்பு வந்துருச்சு.. காரணம் நான் அவங்கள பத்தி நினைக்கறது இருக்கட்டும்.. அவங்க என்னைய பத்தி என்னா நினைப்பாங்க..? லூசுன்னுதானே.. வந்தான்.. போயிட்டான்னுதானே.. எனக்குன்னு ஒரு டீய வச்சுக்கிட்டு வருவான்னு காத்திருந்திட்டு அப்பறம் யாராவது ஒருத்தரு குடிச்சிருப்பாங்க.. இப்ப மறுபடி அதையெல்லாம் மறந்துட்டு வேலைல இறங்கியிருப்பாங்க.. கண்டிப்பா அந்த சின்னு இனிமே தப்பு பண்ணமாட்டான்.. அந்த அப்பாவி பொம்பளைக்கிட்டேயும் தப்பா நினைக்காம இருந்தா சரி.. அப்படி நான் நினைக்கறது தப்பா கூட இருக்கலாம்.. தப்பா இருந்தா நான் நினைக்கறது சரிதான்.. அப்படியில்லைன்னா அவன் என்னைய மன்னிக்கனும்னு நினைச்சுட்டு வீட்டுக்கு வந்தப்ப அதை மறந்துடுவேன்னு நினைச்சுக்கிட்டிருந்தேன்..
ஆனா அந்த நினைப்பு போகவே இல்லை.. டிவி பாக்கறப்ப.. ரண்டு பொண்ணுங்களையும் கொஞ்சறப்ப.. சாப்பிடறப்ப.. பொண்டாட்டிய ஓரக்கண்ணால பாக்கறப்ப.. அந்த தயிரை தண்ணில கலந்து கலக்கி உப்பையும் பச்ச மிளகாயும் கலந்து குடிக்கறப்ப.. கொஞ்சம் கொஞ்சமா பொழுது போறப்ப.. லேசா கண்ணசந்தப்ப.. திடீருன்னு முழிச்சிக்கிட்டப்ப.. டிவி போரடிச்சு பசங்க அவங்க வேலைய பாத்துக்கிட்டு பொண்டாட்டியும் வெளிய எங்கேயோ கிளம்பி போனப்ப.. தனியாயிட்டு பேக்க பேக்க முழிச்சுக்கிட்டு உக்காந்திருந்தப்ப.. பகல் போயி இருட்டு வர்ற மாதிரி தெரிஞ்சப்ப..
என்னைய ராமு ஏமாத்திட்டான்னு நினைச்சுக்கறேன்.. மத்தவங்கள ஏமாத்தின மாதிரி.. அதாவது ஏமாந்தவங்க லிஸ்டுல நானும் ஒருத்தனா.. அதாவது ஏமாந்த சோனகிரிங்க பட்டியல்ல நானும் ஒருத்தனா.. ஆனா என் விழயத்துல அவனைய தப்பு சொல்ல முடியுமா..?.. அது தப்பு.. தப்பு என்னோடது.. அவனா கூப்புட்டான் என்னைய..? இனிமே அந்த ராத்திரி நேரத்துல வீட்ல பசங்களையும் பொண்டாட்டியையும் பாத்துக்கிட்டு டிவில புடுச்சது வந்தா அதையும் ரசிச்சு பாத்துக்கிட்டு தெமேன்னு இருக்கற ராத்திரியா அது இல்லாம போறதை வேடிக்க பாக்கற மாதிரி ஆயிடுச்சேன்னு நினைச்சுக்கிட்டு புழுங்கிட்டிருந்தப்போ போன் வருது.. ஒரு வெறுப்புலதான் எடுத்து அந்த ஆறு மணி வாக்குல எவனா இருப்பான்னு பாத்தா அந்த ராமு பையதான்..
எரிச்சலா வந்து மொபைல ஒரு ஓரமா போட்டுடலாமுன்னு பாக்கறேன்.. இப்பதான் என்னைய தெரிஞ்சதாக்கும்..? போன் பண்ணி நடுவுலேயே போனதுக்கு குதிச்சான்னா நான் என்னா செய்ய..? தேவையில்லாம வார்த்த விளையாட்டுல சிக்க நான் விரும்பல.. எடுக்கலை நான்.. அப்படியே தூக்கி வச்சுட்டேன்.. மறுபடியும் அடிச்சது.. இப்ப வேகமா எடுத்து ‘என்னா..?’ன்னு அதே வேகத்துல கேக்கறேன்..
அவன் வார்த்தைய இறுக்கமா விட்டு ‘கிச்சா.. ஏதாவது பிரச்சனையா..?’ன்னு கேக்கறான்.. அவன் வார்த்தைய கேட்டு வேகத்த குறைச்சுக்கிட்டு நான் பதில் சொல்லறதுக்குள்ள அவனே தொடர்ந்து ‘கொத்தனாரு ரோடுக்கு வந்துரு.. கூலிய எடுத்து வச்சுருக்கேன் உனக்கு.. எறநூரு ரூபாய..’ன்னு சொல்லறான்..
எனக்கு ஒன்னும் புரியல.. மறுபடி பேசறதுக்கு முயற்சி செஞ்சப்ப அவனே ‘சீக்கரம் வாப்பா.. என்னவோ ஏதோன்னு நினைச்சுக்கிட்டேன்.. சீக்கரம் போயிட்டியாமே..? உடம்புக்கு ஏதுமில்லையே..?’ன்னு கேக்கறான்.. மறுபடியும் நான் பதில் சொல்றதுக்குள்ளாற அவனே மறுபடியும் ‘இப்பவே வந்துடு.. பாதி வேலைக்கு பாதி காசு.. குதரை சிலைக்கிட்ட மசாலா பூரி சாப்பிட்டுகிட்டு இருக்கேன்.. ஏதாவது வண்டில வந்துடு.. காலைல வாங்கிக்கலாமுன்னு இருந்துடாதே.. செலவாயிடும்..’னு சொல்லிக்கிட்டே கட் பண்ணிட்டான்..
நான் அப்படியே கொஞ்ச நேரம் அந்த மொபைல பாத்துட்டு இருக்கேன். நான் ஒரு மணி நேரம்தான் வேல செஞ்சிருப்பேன்.. அப்படி பாத்தா எனக்கு நூறு ரூபாதான் கரெக்டு.. நூறு ரூபாய சேத்தி சொல்லறான்.. அதையும் சேத்தி வாங்குனா நான் அவனைய ஏமாத்தின மாதிரி ஆயிடும்.. என்ன செய்யறதுன்னு தெரியல.. வண்டி ஏதும் இல்ல எங்கிட்ட.. ஆனா பக்கத்துல இருந்து வாங்கிட்டு போகலாம்.. இருந்தாலும் போக தோணல.. நான் போகலைன்னா அவன் போன் பண்ணமாட்டான் இனிமே.. இருந்தாலும் நான் கிளம்பலை.. அப்படியே படுத்துக்கிட்டப்போ இரவு வந்துட்ட மாதிரி இருந்தது.. தூக்கமும் நல்லா வருமுன்னு தோணுச்சு.. அப்படியே வேற ஏதோ தோணுது.. காலைல அவனைய பாக்கறப்ப பணத்த வாங்கிக்கலாமுன்னு நினைக்கறேன்.. அப்படி இல்லைன்னா அடுத்த நாளு.. இல்லன்னா அடுத்த வாரம்.. இல்லைன்னா அடுத்த மாசம்.. இல்லன்னா அடுத்த வருசம்.. அவன் எப்ப குடுத்தாலும் சரின்னு நினைக்கறப்ப ஒரு விசயத்தல மட்டும் தீர்மானமா இருந்தேன்.. நூறு ரூபாய்க்கு மேல வாங்கிரக்கூடாதுன்னு.. அதே சமயம் இன்னொன்னையும் நினைச்சுக்கறேன்..
அவன் பணத்த குடுக்கலைன்னாலும் பரவாயில்லைன்னு..
0000
- ஒரு கதை ஒரு கருத்து – சிவசங்கரியின் ‘வெள்ளிக்கிழமை ராத்திரி அவள் செத்துப் போனாள்’
- இந்தியாவின் பிரமாஸ் வான்வெளி நிறுவகம் லக்னோவில் ஓர் உற்பத்தி தொழிற்சாலை நிறுவத் திட்டம்.
- வடமொழிக்கு இடம் அளி
- சிறுவர் இலக்கிய கர்த்தா துரைசிங்கம் விடைபெற்றார்
- குஜராத்: அசோகனின் கட்டளையும் அசோகனின் வைத்தியசாலையும்
- கலியுக அசுரப்படைகள்
- விடிந்த பிறகு தெரியும்
- குடை சொன்ன கதை !!!!!
- மரங்கள்
- குருட்ஷேத்திரம் 7 (அர்ச்சுனனின் ஆன்மாவாக கிருஷ்ணன் இருந்தான்)
- குருட்ஷேத்திரம் 8 (பீஷ்மரின் மரணத்திற்குக் காரணமாக அமைந்த அம்பா)
- நவீன பார்வையில் “குந்தி”
- மீண்டும் மிதக்கும் டைட்டானிக்!
- கூலி
- தொலைக்காட்சித்தொடர்களின் பேய்பிசாசுகளும் பகுத்தறிவும்
- யாப்பிலக்கணச் செல்வி சாப்போ
- ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் இரு கவிதைகள்
- பெரிய கழுகின் நிழல்