லதா ராமகிருஷ்ணன்
கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்ற பழமொழி அனைவருக்கும் தெரிந்ததே.
விஜய் தொலைக்காட்சி சேனலுக்கு அப்படித்தான் தன்னை பகுத்தறிவு வாதியாகவும் காட்டிக்கொள்ள வேண்டும். அதேசமயம் பேய் பிசாசு பூதம் இத்தியாதிகள் இடம்பெறும் மெகா தொடர்களையும் ஒளிபரப்பவேண்டும்.
அதனால், சிகரெட் விளம்பரங்களில் புகைபிடிப்பது உடல்நலத்திற்குத் தீமை பயப்பது என்று போடுவதுபோலவே, ரம்மி விளையாடச்சொல்லி அவசரப்படுத்தும் விளம்பரங்களில் ’இதில் இழப்புகள் அதிகம் – பொறுப்பு ணர்ந்து விளையாடவும்’ என்பதாய் அறிவுரை தருவது போலவே விஜய் தொலைக்காட்சியில் வரும் செந்தூரப்பூவே தொடரில் கதாநாயகனின் இறந்துபோய்விட்ட முதல் மனைவி ஆவியாக வந்து வீட்டைக் காக்கும் போதெல்லாம் பாம்புபோல் நீளமாய் நெளிந்து “இது வெறும் பொழுதுபோக்கு நிகழ்வே. நாங்கள் மூடநம்பிக்கைகளை ஆதரிப்பவர்களல்ல” என்ற வாசகம் திரையில் குறுக்குமறுக்காய் ஓடிக்கொண்டே யிருக்கிறது.
இது என்ன அபத்தம்? ஒன்று, கொள்கையளவில் இத்தகைய தொடர்களை ஒளிபரப்பக் கூடாது. அல்லது, சம்பந்தப்பட்ட மெகாத்தொடர்காரர்களிடம் இப்படிப்பட்ட காட்சிகள் இடம்பெறலாகாது என்று கண்டிப்பாக முன்கூட்டியே சொல்லிவிட வேண்டும். இல்லையென்றால், வாயைப் பொத்திக்கொண்டிருக்க வேண்டும்.
இதைவிட மோசம், சமீபத்தில் ஆரம்பமாகியிருக்கும் தமிழும் சரஸ்வதியும் தொடரில் (தண்டம், தண்டம் என்று குறை சொல்லிக்கொண்டே விஜய் தொலைக்காட்சி மெகாத் தொடர்களைப் பார்த்துக்கொண்டேயிருக்கிறீர்களே என்று கேட்பவர்கள், அப்படி யென்றால் மற்ற சேனல்களின் மெகாத்தொடர்கள் எந்த அளவுக்கு மகா தண்டம் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.) காதலிக்கத் தெரிந்த இளைஞன் திருமணத்திற்கு அம்மாவின் சம்மதம் அவசியம் என்று கூறி அதே வாயால் அம்மா காதல் திருமணத்தை ஆதரிக்க மாட்டாள் என்றும் கூற அவன் காதலி கையை வெட்டிக்கொண்டு இறக்கப் பார்க்க பெண்ணின் தாய் தன் பெண்ணுக்கும் அவளுடைய காதலனுக்கும் பதிவுத் திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறாள். படித்து கலெக்டராக பதவி வகித்த அந்த அம்மாவை வில்லியாக்கி விட்டார்கள். [இப்போதெல்லாம் படித்த பெண் படிக்காத ஆணை மணந்து அவனுக்கு ‘தீமிதிக்காத குறையாக பணிவிடை செய்வதுதான் இந்த மெகாத் தொடர்களில் ட்ரெண்டாகி யிருக்கிறது. இந்த அரதப்பழசு கதைக்கருவை இந்த தொலைக்காட்சி சேனல்களின் கதைப் பட்டறைகளில் உருக்கி உருக்கி மாளவில்லை.]
அது தெரிந்து பதிவுத் திருமண வளாகத்திற்கு வரும் அந்த இளைஞனின் ‘நல்ல அம்மா’ கதாபாத்திரம் ”எதற்கு இந்தத் திருட்டுக் கல்யாணம் – ஊரறிய ஜாம் ஜாம் என்று கல்யாணத்தை நடத்துவோம்’ என்று திரும்பத்திரும்ப பதிவுத்திருமணத்தை திருட்டுக்கல்யாணம் என்று பேசுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
கடன் வாங்கி சக்திக்கு மீறி செலவழித்து ஆடம்பரமாக நடத்துவதுதான் நல்ல திருமணமா? இந்த mindsetஐ எப்படி மாற்றுவது?
இன்னுமொன்று. இந்தத் தொடர்களிலெல்லாம் வில்லி மாமியார், நல்ல மாமியார் தவிர்க்கமுடியாத அங்கமாக இருப்பது போலவே இப்போதெல்லாம் சிறுமிகளும் கதாபாத்திரங்களாக வருவது நடக்கிறது. அந்தச் சிறுமிகளை பாசமழை பொழிவதான பெயரில் நாடகத்தில் வரும் தாத்தா, அப்பா, இத்தியாதி கதாபாத்திரங்கள் கட்டிய ணைத்துக் கன்னத்தில் முத்தம் கொடுத்துக் கொஞ்சுவதும் கண்டிக்கத்தக்கது. ஒரிரு வருடங்களுக்கு முன்பு பெரிய திரை, சின்னத்திரை, சினிமாக்கள், நாடகங்கள், விளம்பரங்களில் சிறுவர் சிறுமியர் நடிப்பதும் குழந்தைத் தொழிலாளர்கள் என்பதில் தானே அடங்கும் என்று ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார். பிறகு அது என்ன ஆயிற்று தெரியவில்லை.
ஒரு பக்கம் Good Touch, Bad Touch என்று பேசிக்கொண்டே இன்னொரு பக்கம் தேவையில்லாமல் நாடகத்தில் நடிக்கும் இந்தச் சிறுமிகளை நாடகத்தில் வரும் கதாபாத்திரங்கள் கட்டிப் பிடிப்பதும் கன்னத்தில் முத்தமிடுவதுமாய் காட்சிகளையும் அமைத்தால் எப்படி? வீட்டிலிருக்கும் சிறுமிகள் இந்தக் காட்சிகளைத் திரும்பத் திரும்பப் பார்க்கும்போது அன்பைத் தெரிவிக்க இப்படித்தான் யாரும் கட்டிப் பிடிப்பார் கள் போலும் என்று எண்ணிக்கொள்ள மாட்டார்களா?
ஹமாம் விளம்பரத்தில் தாய் மகளிடம் கராட்டே கற்றுக்கொள்ள வைத்தால் போதும் அவள் தன்னைக் காத்துக்கொள்வாள் என்று கரகரவென்று இழுத்துக் கொண்டுபோய் கராத்தே பள்ளியில் சேர்த்துவிடுகிறார். எப்படி புத்திசாலித்தனமாக நடந்துகொண் டேன் பார்த்தீர்களா என்று நம்மைப் பார்த்துவேறு கர்வமாக புன்னகைக்கிறார். நம் திரைப்பட நாயகர்கள் ஒற்றையாளாய் இருபது பேரை அடித்துதுவைக்கும் உண்மைக் குப் புறம்பான காட்சிகள் நினைவில் வந்து நம்மை அலைக்கழிப்பதைப் பற்றியெல் லாம் ஹமாம் விளம்பரக்காரர்களுக்கு என்ன கவலை?
கொரானோ வந்து எளிமையான திருமணத்தைக் கட்டாயமாக்கியிருக்கும் நிலை எத்தனையோ ஏழைப் பெற்றோர்களுக்குப் பெருவரம். ஆனால், மெகாத் தொலைக் காட்சிக்காரர்கள்தான் தூங்கும்போதுகூட பெண் கதாபாத்திரங்களை அட்டிகையும் ஒட்டியாணமும் கெட்டி ஜரிகைப் புடவையுமாகவே இருக்கச் செய்பவர்களாயிற்றே.
இந்த மெகாத்தொடர்களெல்லாம் சமகாலத்தில் நடப்பவை என்பதை சுட்டிக் காட்டும் அறிகுறிகளை ஏராளமாகக்கொண்டவை. திடீரென்று ஒரு கதாபாத்திரம் முகக்கவசம் அணிந்துவரும். அதாவது, கதை நிகழ்வு இப்போதைய கொரோனா காலகட்டத்தி னூடாய் நகர்கிறது. ஆனால் இந்தத் தொடர்களில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் கொரானோ குறித்த எந்தப் பிரக்ஞையும் இல்லாதவர்களாகவே இயங்குவார்கள். அதற்கான அடிப்படையான பாதுகாப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிந்து கொள்ளுதல், கை கழுவுதல், போன்ற எதையும் கடைப்பிடிக்க மாட்டார்கள்.
திடீரென்று ஞாபகம் வந்தால் போல் கொரோனா பற்றி ஏதேனுமொரு கதாபாத்திரம் ஏதேனுமொரு முத்துதிர்க்கும். அவ்வளவே.
நமக்கு இந்தப் பிரக்ஞையெல்லாம் ஏன் இருக்கிறது என்று கேட்காமலிருக் கிறார்களே என்று திருப்திப்பட்டுக்கொள்ளவேண்டியதுதான்.
- ஒரு கதை ஒரு கருத்து – சிவசங்கரியின் ‘வெள்ளிக்கிழமை ராத்திரி அவள் செத்துப் போனாள்’
- இந்தியாவின் பிரமாஸ் வான்வெளி நிறுவகம் லக்னோவில் ஓர் உற்பத்தி தொழிற்சாலை நிறுவத் திட்டம்.
- வடமொழிக்கு இடம் அளி
- சிறுவர் இலக்கிய கர்த்தா துரைசிங்கம் விடைபெற்றார்
- குஜராத்: அசோகனின் கட்டளையும் அசோகனின் வைத்தியசாலையும்
- கலியுக அசுரப்படைகள்
- விடிந்த பிறகு தெரியும்
- குடை சொன்ன கதை !!!!!
- மரங்கள்
- குருட்ஷேத்திரம் 7 (அர்ச்சுனனின் ஆன்மாவாக கிருஷ்ணன் இருந்தான்)
- குருட்ஷேத்திரம் 8 (பீஷ்மரின் மரணத்திற்குக் காரணமாக அமைந்த அம்பா)
- நவீன பார்வையில் “குந்தி”
- மீண்டும் மிதக்கும் டைட்டானிக்!
- கூலி
- தொலைக்காட்சித்தொடர்களின் பேய்பிசாசுகளும் பகுத்தறிவும்
- யாப்பிலக்கணச் செல்வி சாப்போ
- ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் இரு கவிதைகள்
- பெரிய கழுகின் நிழல்