‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் இரு கவிதைகள்

0 minutes, 9 seconds Read
This entry is part 17 of 18 in the series 29 ஆகஸ்ட் 2021

 

 

 

  1. நாத்திகாத்திகமும் நாமும்

புல்லாங்குழலை யொரு அரூப ஓவியமாய் வரைந்தவர்

அதைத் தன் வீட்டின் வரவேற்பறையில் மாட்டினார்.

 

வந்துபோகும் விருந்தாளிகளெல்லாம் வாயாரப் பாராட்டியபோது

விகசித்துப்போனது மனம்.

 

யாரைப் பற்றியது என்று புரியுமோ புரியாதோ என்ற பரிதவிப்பில்

குட்டிக் கண்ணனின் அகலத்திறந்த வாயில் அகிலக்கோளம் காணும்படியாக

இன்னொரு படத்தைப் பாமரனுக்கும் புரியும்படியாகத் தெளிவாக வரைந்து

எங்கெங்கோ தேடி வெல்வெட்டாய் மின்னும் மயில்வண்ணச்

சட்டமிடும் கடையொன்றைக் கண்டுபிடித்து

காத்திருந்து கையோடு பிரேம் போட்ட படத்தை

வாங்கிக்கொண்டு வந்தவர் வீட்டின் நுழைவாயிலின்

நேர்மேலேயிருந்த ஆணியில் அதை மாட்ட

ரத்தக்கொதிப்பில் தலைசுற்றுவதற்கான

வாய்ப்பிருக்கும் நிலவரத்தையும் புறக்கணித்து

ஒரு உயரமான மர முக்காலியில் ஏறி

திருத்தமாக மாட்டிய பின்

சுற்றும் தலையை நிலைப்படுத்த சுவரைப் பற்றிக்கொண்டு.

திருப்தியோடு கீழிறங்கினார்.

 

பாவம் ஓடி விளையாடவேண்டிய குழந்தைக்கண்ணனை

உயரத்தில் ஆணியறைந்து நிறுத்திவிட்டோமே என்றெல்லாம்

அவர் மனம் அனத்தவில்லை.

 

இவரே எத்தனையெத்தனை புகைப்படங்களில் எப்படியெப்படியெல்லாம் நின்றுகொண்டும் உட்கார்ந்துகொண்டுமிருக்கிறார்!

அப்படியப்படியேதான் பொழுதன்னைக்கும்

மறைவாகச் சென்று ஒரு சிகரெட் குடிக்கக்கூட வழியில்லாமல்

நின்றது நின்றபடியிருக்கிறாரே என்று அவர் நண்பர் யாரேனும்

ஆதங்கப்பட்டால்

ஆமாமாம் என்று ஒருவேளை பொய்யாக உதட்டைப் பிதுக்கினாலும்

பகபகவென்று சிரிப்புவந்து கும்பி குலுங்காதோ?

 

முடிந்த முடிவான பிரிவின் இறுதிக்கணத்தில்

இடிந்துபோய் நின்ற காதலியோ காதலனோ

கவிதையில் அப்படியே நின்றுகொண்டிருக்கலாம்.

காலவழியில் காதலி ஐஸ்கிரீமை அனுபவித்துச் சாப்பிட்டுக்கொண்டிருக்க

காதலன் ஜாலியாகப் போய்க்கொண்டிருக்கலாம்

தன் எதிர்காலம் நோக்கி.

 

உறைவும் நகர்வுமே வாழ்வு.

 

கடவுளைத் திட்டித்திட்டி குட்டிக்குட்டி கல்லெறிந்து காயப்படுத்தி

சூட்சுமமறிதல் மறந்து சொல்லெறிந்து சோப்ளாங்கியாக்கி

அவரவர் சொப்புவிளையாட்டில் ’கப்’புகளாக்கி

அவற்றில் பால் டீ காப்பி கூல் டிரிங்க்ஸ் நிஜ டிரிங்க்ஸ்

என்று கலந்துகட்டி சிலர்ஊற்றி ஊற்றிக்

கொடுத்தவண்ணமிருக்க_

 

’தீர்ப்பளிக்காதே நாமெல்லோருமே பாவிகள்’

என்று சொல்லும் கடவுளர்கள்

’Contempt of Court’க்கு உரியவர்கள் என்று காரசாரமாய்

பிரபல தொலைக்காட்சி சேனலொன்றில்

புதிதாக இடம்பெற்றிருந்த நபரொருவர்

ஆரவாரமாய் முழங்கிக்கொண்டிருக்க _

 

A SPADE NEED NOT ALWAYS BE JUST A SPADE

IT CAN BE MORE THAN A SPADE

OR LESS THAN A SPADE

OR MORE OR LESS A SPADE

என்று குலுக்கப்படும் சீட்டுக்கட்டுக்குள்ளிருந்து

ஜோக்கர் பாட்டுப் படிக்க_

 

நடுநிலையாளராகும் அதிதீவிர விருப்பிலொருவர்

கைபோன போக்கில் ‘லைக்’ போட்டவாறிருக்க_

 

‘உனக்குத் தெரியாததா என்ன வாழ்வெனும் முப்பரிமாணக் கலை’

என்று ஓவியனிடம் கேட்டபடி

உயிர்ப்பின் உறைவை செதுக்கத் தொடங்கினார் ஸ்தபதி.

 

  1. நாயென்பது நாய் மட்டுமல்ல

நாய் என்பது சிலருக்கு சக உயிர்;

சிலருக்கு தன் அந்தஸ்தை உயர்த்திப் பிடிக்கும்

அலங்கார பொம்மை.

 

பைரவக்கடவுளென்றாலும் யாரும்

நாயைத் தொட்டுக் கும்பிட்டுப் பார்த்ததில்லை.

 

கையிலிருக்கும் காசையெல்லாம் பொறைவாங்கித்

தெருநாய்களுக்கெல்லாம் ஒவ்வொன்றாய்

அத்தனை பரிவோடு தருபவரைப் பார்த்திருக்கிறேன்.

 

நாய் வைத்திருப்பவர் தமது நாயை அவள், அவன்

என்று உயர்திணையிலும்

அடுத்தவர் நாயை அது என்று அஃறிணையிலும்

பேசுவது வழி வழி மரபு.

 

தன்னால் முடியாத நீளந்தாண்டுதல்

அகலந்தாண்டுதல்

தொலைவோட்டம் பந்துகவ்வல் என்றெல்லாவற்றையும்

செய்யமுடிந்த ஒன்றைத்

தன் கைப்பிடிக்குள் வைத்திருக்கும்

அதிகாரம் அலாதியானது.

 

அத்தனை அன்பையும் தன் எஜமானனுக்கே தரும் நாய்

என்பது எத்தனை தூரம் உண்மையென்று

வளர்த்தவரின் பட்டறிவுக்கே தெரியும்.

 

எனில், பட்டறிவு பொய் சொல்லாது என்று

என்ன நிச்சயம்?

 

எத்தனை பெரிய செல்வந்தர் வீட்டு நாயானாலும்

தெருவோர வீட்டுச் சுவரோரமாகவோ

அருகிலுள்ள வேறெந்த வீட்டுக்குச் சொந்தமான

காரின் டயரிலோதான்

ஒற்றைக்காலைத் தூக்குகிறது இன்றளவும்.

 

வளர்ப்புநாய்க்கென்று எந்த மாளிகையிலேனும்

தனி கழிப்பறை என்பது

நம்பிக்கையாகவியலா நம்பிக்கையாய்.

 

மேலுக்கு அவரவர் செல்லப்பிராணிகளைப் பற்றி

பரஸ்பரம் குசலம் விசாரித்துக்கொண்டாலும்

நாய் வளர்ப்பவர்கள் பூனையை வளர்ப்பவர்களை

ஒருவித எள்ளலோடு பார்ப்பதுபோல் தோன்றும்.

பூனை வளர்ப்பவர் அணில் வளர்ப்பவரை

அணில் வளர்ப்பவர் நோஞ்சான் கிளி வளர்ப்பவரை…

.

ஒரு அல்சேஷன் நாயின் கழுத்துப்பட்டையிலிருந்து

நீளும்சங்கிலியைப் பிடித்திழுத்தவாறே

தெருவீதி வலம் வருபவர்களில் சிலர்

தம்மை ஆண்டைகளாகவும்

எதிரே வருவோரை அடிமைகளாகவும்

எண்ணிக்கொள்வது

எத்தனை இயல்போ அத்தனை இயல்பு

குட்டிவாலை ஆட்டியபடி தன்பின்னால்

ஓடிவரும் பப்பியை  ஒரு சின்னப்பையன்

தன் ஆருயிர்த்தோழனாகக் கட்டிப்பிடித்துத்

துள்ளிக்குதிப்பதும்.

 

நாயின் ஊளையை விட நெஞ்சையறுப்பது

அதன் கண்களில் தெரியும் அடர்தனிமை.

 

நாய்க்கு நினைவிருக்குமா

அது ஓநாயின் வழித்தோன்றல் என்பதும்

கானகப்பெருவெளியும்….

.

என்றேனுமொருநாள் சங்கிலிக்குள் பொருந்தி

யிருக்கும் கழுத்துக்குரிய விலங்கு

மீண்டும் ஓநாயாக மாறுவதாய்

தவிர்க்கமுடியாமலொரு நினைவெழ

நடுக்கத்தோடு காலெட்டிப்போடுகிறேன்.

 

பின்னால் கேட்கும் புலியின் உறுமல்

என் முதுகுத்தண்டைச் சில்லிடவைக்கிறது.

 

Series Navigationயாப்பிலக்கணச் செல்வி சாப்போபெரிய கழுகின் நிழல்
author

ரிஷி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *