குருட்ஷேத்திரம் 10 (வசுதேவ கிருஷ்ணனின் தந்திரத்துக்கு அஸ்வத்தாமன் தந்த பதிலடி)

This entry is part 7 of 12 in the series 5 செப்டம்பர் 2021

 

ப.மதியழகன்

அஸ்வத்தாமன் துரோணரின் ஒரே மகன். துரியோதனனின் உற்ற நண்பன். கர்ணன் துரியோதனனுக்கு வலதுகண் என்றால் அஸ்வத்தாமன் இடதுகண். பிராமண குலத்தில் பிறந்த அஸ்வத்தாமன் சத்ரியனாக ஆசைப்பட்டான். பால்யத்தில் வறுமையின் கோரப்பிடிக்கு அஸ்வத்தாமனும் தப்பவில்லை. துரோணர் கெளரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் குருவாக நியமிக்கப்பட்ட பின்புதான் அவர்கள் வாழ்வில் சுபிட்சம் பிறந்தது. பாஞ்சாலதேச மன்னனாகும் வாய்ப்பு கிடைத்தும் துரியோதனன் மீது கொண்ட பற்றினால் அதை அலட்சியப்படுத்தி வந்தான். துரியோதனனுக்கும் அஸ்வத்தாமனுக்கும் பொது எதிரி பாண்டவர்கள் தான். துரோணர் தனது மகன் மீது வைத்த ஒப்பற்ற அன்பினால் பிரம்மசிரஸ் என்ற ஆயுதத்தை அவனுக்கு உபதேசித்தார். இதற்கு முன்பு அர்ஜூனனுக்கு மட்டுமே அது உபதேசிக்கப்பட்டது. உபதேசிக்கப்பட்ட ஆயுதம் யாருக்கு எதிராக உபயோகப்படுத்தப்படப் போகின்றது என்பதை காலம் அறிந்தே இருந்தது.

 

துரோணரும் அஸ்வத்தாமனும் உயிரும் ஆன்மாவாகவும் இருந்தனர். அஸ்வத்தாமன் பேரரசனாக விளங்க வேண்டுமென்று துரோணர் விரும்பினார். பாண்டவர்கள் எப்படி எதிரியோ அவர்களது நிழலாக விளங்கும் வசுதேவ கிருஷ்ணனையும் பகைத்தான் அஸ்வத்தாமன். அஸ்வத்தாமன் கடைசி வரை துரியோதனன் பக்கம்  நின்றான் செஞ்சோற்றுக் கடனைத் தீர்ப்பதைத் தவிர வேறென்ன வாழ்க்கை. பாண்வர்கள் அஸ்வத்தாமனை அலட்சிப்படுத்தினாலும் வசுதேவ கிருஷ்ணனுக்கு தெரிந்திருந்தது அஸ்வத்தாமனின் பலம் என்னவென்று. கெளரவர்கள் பக்கத்தில் வசுதேவகிருஷ்ணனின் குள்ளநரித்தனத்தை அறிந்தவன் அஸ்வத்தாமன் மட்டும்தான். கிருஷ்ணனின்மாயாவித்தனம் அஸ்வத்தாமனிடம் பலிக்காமல் போனது. துரியோதனனுக்காக அவதாரத்தையே எதிர்த்து நிற்பது நீங்களும், நானும் செய்யக்கூடிய காரியமா?

 

துரியோதனனை வசுதேவ கிருஷ்ணனிடமிருந்து எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டுமென்று பேயாய் அலைந்தான் அஸ்வத்தாமன். குருட்ஷேத்திர போரில் பாண்டவர்களுக்காக வசுதேவ கிருண்ணன் யுத்த தர்மத்தை மீறிய போதெல்லாம் பதிலடி கொடுக்க சமயம் பார்த்து காத்திருந்தான் அஸ்வத்தாமன். தவமிருந்து சிவனிடமிருந்து பெற்ற பிரம்மசிரஸ் என்ற ஆயுதம் மூலம் அபிமன்யூ மனைவி உத்தரையின் வயிற்றிலிருந்த கருவைக் கொன்றதன் மூலம் பாண்டவர்களை மீளாத்துயரில் ஆழ்த்தினான் அஸ்வத்தாமன். துரியோதனனுக்காக அஸ்வத்தாமன் வசுதேவ கிருஷ்ணனை எதிர்த்தான் தான் ஆனால் இருவருக்கும் ஜென்மப்பகை இருந்திருக்க வேண்டும். கர்ணனுக்கு யாசகம் கேட்பவருக்கு அள்ளித்தரும் பாகீனம் இருந்தது. துரோணருக்கு தனது மகன் மீது வைத்துள்ள பாசமே பலகீனமானது.

 

துரோணரைக் கொன்றுவிட்டால் அஸ்வத்தாமனை வழிக்கு கொண்டு வந்துவிடலாம் என்பது வசுதேவ கிருஷ்ணன் கணக்கு. பதினாறாம் நாள் போரில் வசுதேவகிருஷ்ணன் தருமனை அணுகி மாளவதேசத்து பட்டத்து யானையை பீமன் கொன்றுவிட்டான் அந்த யானையின் பெயர் அஸ்வத்தாமன் நீ சென்று துரோணரின் காதில் விழும்படியாக பீமன் அஸ்வத்தாமனை கொன்றுவிட்டான் என்று சொல் என்று கூறினான். தர்மநெறிப்படி அது தவறென்ற போதிலும் வேறு வழியின்றி ஒத்துக்கொண்டான் தருமன். தருமன் அந்தச் சேதியை சொல்லியதும் நிலைகுலைந்து போனார் துரோணர். துரோணர் என்ற மதம் கொண்ட யானையின் காதில் எறும்பு புகுந்தாற் போல் ஆயிற்று. இதுதான் தக்க சமயமென்று திருஷ்டத்துய்மனை அம்பெய்ய சொன்னான் வசுதேவ கிருஷ்ணன். குருவம்சம் வில்வித்தை கற்றுத்தந்த ஆசாரியரையே சூழ்ச்சியால் கொன்றது.

 

துரோணரின் மரணச் செய்தி அஸ்வத்தாமனின் மீது இடிபோல் இறங்கியது. இது வசுதேவகிருஷ்ணனின் சூழ்ச்சி என்பதையும் அறிந்து கொண்டான். இரவில் கடும்சினத்துடன் மரத்தினடியில் படுத்துக் கொண்டிருந்தபோது மரத்தில் ஒரு ஆந்தை காக்கையை கொத்திக் துன்புறுத்துவதைக் கண்டான். இருளை ஆந்தை தன் எதிரியை வீழ்த்த சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதைக் கண்டான். அஸ்வத்தாமனுக்கு ஒருதிட்டம் உதித்தது. சூழ்ச்சியால் தானே வசுதேவகிருஷ்ணன் எனது தகப்பனைக் கொன்றான் என்று வாளை உருவியபடி பாண்டவர்கள் பாசறைக்கு ஓடினான். ஒரே வீச்சில் திருஷ்டத்துய்மனின் தலை தனியாகப் பறந்தது. பாண்டவர்களின் ஐந்து புதல்வர்களும் அஸ்வத்தாமனின் ரெளத்திரத்திலிருந்து தப்பவில்லை. பாண்டவர்கள் இந்த தாக்குதலிலிருந்து தப்பினாலும் இந்த இழப்பின் வடு அவர்கள் இறுதிக்காலம் வரை இருந்து கொண்டிருக்கும்படி செய்துவிட்டான் அஸ்வத்தாமன். வசுதேவ கிருஷ்ணனைப் போல் சூழ்ச்சியால் மாயவலை பின்னாமல் உற்ற தோழனுக்காக அவதாரத்தை எதிர்த்த அஸ்வத்தாமன் தான் ஆண்மகன்.

 

Series Navigationகுருட்ஷேத்திரம் 9 (திருதராஷ்டிரனால் காலத்தின் கையில் ஊசலாடிய குருதேசம்)அசுரப் பேய்மழைச் சூறாவளி ‘ஐடா’ வட கிழக்கு அமெரிக்காவில் விளைத்த பேரழிவுகள்
author

ப மதியழகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *