கதிர் அரிவாள்    

This entry is part 11 of 12 in the series 12 செப்டம்பர் 2021

 

 

ஜோதிர்லதா கிரிஜா

(29.8.1982 கல்கியில்  வந்தது.  ஞானம் பிறந்தது எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ் – இன் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றது,)

 

வள்ளியம்மா, ‘காதுக்கடுக்கன் தாரேன், கெண்டை போட்ட வேட்டி தாரேன், வாங்க மச்சான், வாங்க மச்சான், வாங்க மச்சான் திருநாளுக்கு’ என்று மெல்லிய குரலில் பாடியது கேட்டு முத்தழகு சிரித்துக்கொண்டார். வள்ளியம்மா சாதாரணமாகப் பாட்டெல்லாம் பாட மாட்டாள். வயலில் நாற்று நடும் போதும், கதிர் அறுக்கும் போதும், களத்து மேட்டில் நெல் தூற்றும் போதும் மற்ற ஆண் பெண்களுடன் சேர்ந்து அந்தந்த நேரத்துக்கு ஏற்ற கிராமியப் பாடல்களைப் பாடுவதோடு சரி. வீட்டுக்கு வந்து விட்டால், பாட்டுக்கும் கூத்துக்கும் அவளுக்கு நேரம் இருந்ததில்லை. பாட்டுக்கும் கூத்துக்கும் தனியாக நேரம் ஒதுக்காமல், ஏதேனும் வேலையைச் செய்துகொண்டே கூடப் பாடலாம்தான் என்றாலும், அவள் இன்று போல் எதனாலோ பாடியதே இல்லை. இன்று அவள் பாட்டும் சிரிப்புமாக இருந்ததற்குக் காரணம் இருந்ததுதான் முத்தழகைப் புன்னகை கொள்ளச் செய்தது. 

“என்ன, பாட்டெல்லாம் பலமா இருக்குது?”

வள்ளியம்மா வெட்கப்பட்டுக்கொண்டே அவரைப் பார்த்தாள். பதில் சொல்லவில்லை. அவள் ஒன்றும் சொல்லாமலேயே அவளது மனநிலை அவருக்குப் புரிந்ததில், அவரது புன்னகை அதிகமாக விரிந்தது.

“பட்டணத்துக்குப் போற தெம்பா?”

வள்ளியம்மா ஒப்புக்கொண்டதன் அடையாளாமாக மேலும் அதிகமாக வெட்கப்பட்டுப் புன்னகை செய்தாள்.

“அப்ப? இனிமேப்பட்டு அதப் பிடிச்சுக் கை செவக்க வேணாம், இல்லியா?’

அவர் “அத” என்று சுட்டிக்காட்டிய திசையில் அவளது பார்வை நகர்ந்தது. சுவரில் துருப்பிடித்த ஆணி ஒன்றில் தொங்கிக்கொண்டிருந்த கதிர் அரிவாள் மீது விழுந்த பார்வையை நீக்கி, “ஆமாங்க. பட்டணத்துல இதுக்கெல்லாம் இனிமேப்பட்டு வேலை இல்லைதான்! இனிமேயாச்சும் சொகமா இருக்கலாங்க. நம்ம ஏளுமலைதான்  கை நெறையச் சம்பாரிக்கிறானே?” என்று, அவர் சொன்னதை ஒப்புக்கொண்டவளாய், அவள் மலர்ச்சியுடன் சிரித்தாள்.

அவர் பதில் சொல்லாமல் பெருமூச்செறிந்தார். சற்றுப் பொறுத்து பெட்டி, படுக்கை, சாமான்களை மூட்டை கட்டும் வேலையில் ஈடுபட்டார்கள். சாமான்கள் நிறைய இல்லாமையால், ஒரு படுக்கை, ஒரு பெரிய தகரப் பெட்டி, ஒரு சாக்கு மூட்டை, ஒரு பை ஆகியவற்றோடு அவர்களுடைய மூட்டை முடிச்சுகள் முடிந்து போயின.

குடியிருந்த குடிசையின் சாவியை எதிர்க் குடிசைக்காரர்களிடம் கொடுத்து, யாரேனும் வாடகைக்கு வந்தால் குடியிருக்கச் செய்யுமாறு பணித்துவிட்டு முத்தழகு மனைவியுடன் கிளம்பத் தயாரானார். புறப்படும் போது வள்ளியம்மா பையிலிருந்து ஒரு சிறு கண்ணாடியை எடுத்து அதில் முகம் பார்த்துப் பொட்டைச் சரிபண்ணிக்கொண்டாள். முத்தழகு பெரிதாய்ச் சிரித்து, “உன் அளகுக்குக் கண்ணாடி கேக்குதோ?” என்று கேலி செய்தார். வள்ளியம்மாவுக்குத் தான் அழகில்லை என்பதோடு, இன்னும் சொல்லப் போனால் அவலட்சணம் என்பது புரிந்திருந்ததால், கோபித்துக் கொள்ளாமல்,  “புருசன் இருக்கிற வரையில பொட்டைச் சரியா வச்சுக்கிறணுமில்ல?” என்று சிரித்தாள். அவளது குணத்துக்காகவே அவளைக் கல்யாணம் கட்டியிருந்த முத்தழகு அவள் பெருந்தன்மையாகச் சிரித்ததால், சற்று வருத்தமுற்றார். தான் அவளை அவளது அவலட்சணம் குறித்து இனிமேல் கேலி செய்யலாகாது என்று நினைத்துக்கொண்டார். அவளைச் சமாதானப் படுத்தும் வகையில், “அவனவனுக்கு அவனவன் பொஞ்சாதி அளகுதான்,” என்றார்.

கண்ணாடியைப் பைக்குள் வைத்தவண்ணம், “நீங்க சொல்லிட்டாப்ல நான் அளகாயிறுவேனா? என் மொகரக்கட்டை எனக்குத் தெரியாதா?” என்று வள்ளியம்மா சிரித்த போது, எந்தப் பெண்ணுக்கும் இருக்கமுடியாத பெருந்தன்மையாக அதை நினைத்து முத்தழகு அவள்பால் குழைந்துபோனார்.

நல்ல கறுப்பு என்பதோடு, வள்ளியம்மா  “மூக்கும் முழியுமாக” இல்லைதான். சப்பையான மூக்கும், வாய்க்கு வெளியே துருத்திக்கொண்டிருந்த இரண்டு பெரிய முன்பற்களுமாக அவள் அவருக்குத் திருஷ்டி கழிக்க வந்த சோளக்கொல்லை பொம்மை மாதிரிதான் இருந்தாள். சின்ன வயதிலிருந்தே சேர்ந்து பழகி, அத்தை மகளான அவளின் குணநலன்களை நன்கு புரிந்து கொண்டிருந்ததாலும், வெளியழகைப் பொருட்படுத்தாத மன முதிர்ச்சி தம்மிடம் இயல்பாகாவே இருந்தமையாலும்தான் அவர் அவளை முழு மனத்துடன் மணந்துகொண்டார்.  ஊரில் எத்தனையோ பேர் அவரை அது குறித்து எவ்வளவோ கேலி செய்ததுண்டு. ஆனால் அவரோ யாரையும் சட்டை செய்யவில்லை.

வள்ளியம்மாவுக்கும் தனது தோற்றம் பற்றிய நியாயமான கணிப்பு இருக்கவே செய்தது. அவளே அடிக்கடி அது குறித்துத் தன்னைத்தானே கேலி செய்துகொள்ளுவதுண்டு. இருந்தாலும் தான் கேலி செய்திருக்க வேண்டாம் என்று அவர் எண்ணினார். … அவர்களின் ஒரே மகன் ஏழுமலைக்கு ஆறு மாதங்களுக்கு முன்னால்தான் திருமணம் நடந்தது. பட்டணத்தில் அவன் பியூனாக இருந்தான். பத்தாவது படித்து முடித்ததும் அந்த வேலைதான் கிடைத்தது. எனினும் கொஞ்ச நாள் கழித்து ஏதோ பரீட்சையில் தேறினால் எழுத்தன் வேலை கிடைக்கும் என்று சொல்லியிருந்தான். பரம்பரைத் தொழிலை அவன் செய்து சோற்றுக்கும் துணிக்கும் அல்லாடும்படி நேராது என்பதில் இருவருக்கும் மனம் கொள்ளாத மகிழ்ச்சி. மருமகள் கிளி மாதிரி இருந்தாள்.  மாநிறம். பெரிய கண்கள். துருதுருவென்று அழகாய் அலையும் கண்கள். கூர்மையான மூக்கு. கிட்டத்தட்ட ஏழுமலையின் உயரத்துக்கு இருந்தாள்.  அவளும் படித்திருந்தாள்.  ஏதோ சர்க்கார் அலுவலகத்தில் அவளும் நான்காம் வகுப்பு ஊழியையாக வேலை செய்து கொண்டிருந்தாள். அவளும் கூடக் கொஞ்ச நாள் கழித்து எழுத்தர் வேலைக்குப் போகலாம் என்று அவர்கள் கேள்விப்பட்டிருந்தார்கள். இதனால், தங்கள் துன்பங்கள் இறந்த காலத்துப் பழங்கதையாக மாறப் போவதை எண்ணி இருவருமே நிம்மதியடைந்திருந்தனர். கல்யாணம் ஆன புதிதில் மகனும் மருமகளும் ஒரு வாரம் போல் இவர்களுடன் இருந்த போது வள்ளியம்மாள் விழுந்து விழுந்து வேலைகள் செய்து மருமகளின் நகம் கூட அழுக்கு ஆகாமல் பார்த்துக் கொண்டாள். சரோஜாவும் அவளுடைய உபசாரங்களை ஏற்றுக்கொண்டு சிரிப்பும் களிப்புமாக இருந்துவிட்டுக் கணவனுடன் சென்னைக்குக் கிளம்பிப் போனாள். அங்கே வீடு கிடைத்ததும் காகிதம் எழுதுவதாக ஏழுமலை சொல்லியிருந்தான். 

கிடைத்து விட்டதாகவும் புறப்பட்டுவருமாறும் அவனிடமிருந்து காகிதம் வந்ததன் பேரில் இருவரும் புறப்பட்டுவிட்டார்கள். 

படி இறங்கித் தெருவுக்கு வந்ததும், “எதுக்கும் கருதறுக்குற அரிவாளை எடுத்து வச்சுக்கிறலாம். நான் போய்ச் சாவியை வாங்கிட்டு வாறேன்,” என்று கூறிய முத்தழகை அவள் வியப்புடன் பார்த்தாள்.

“அது என்னத்துக்கு? கருதும் கிருதும் பட்டணத்துல எங்கிட்டு அறுக்கப் போறமாம்? நீங்கதானே சொன்னீய இனிமே
அதப் பிடிக்க வாணாமின்னு?”

“அது சரிதான், பிள்ளே.  ஆனாலும், எங்க முப்பாட்டன் காலத்து அரிவாளாச்சே? ஞாபகத்துக்கு எடுத்து வச்சுக்குறலாம். ஆணியில தொங்கினா குடிசைக்குக் குடி வர்றவங்க எடுத்துக்கிறுவாங்க. … நீ இங்ஙனவே இரு. நான் போயாறேன்.”

… சிறிது நேரத்தில் அவர் அரிவாளுடன் திரும்பி வந்தார். தெருவிலேயே வைத்து மூட்டையைப் பிரித்து அதற்குள் கதிர் அரிவாளை வைத்துக் கட்டினார்.

பட்டணத்து வாழ்க்கை இருவருக்கும் ஒரு மாறுதலாக இருந்தது. மருமகள் வேலைக்குப் போனதால் வள்ளியம்மா முழுக் குடும்பப் பொறுப்பையும் மனமுவந்து ஏற்றுக்கொண்டாள். முத்தழகுக்குத்தான் அவ்வளவாகப் பொழுது போகவில்லை. நேரம் நகருவேனா என்றது. வள்ளியம்மா ஒரு தாய்க்கும் மேலாக நடந்துகொண்டதால், மருமகள் சரோஜாவுக்கு அவளிடம் தனது இயல்பான துடுக்குத்தனத்தைக் காட்டவே வாய்ப்பு இல்லாது போயிற்று.  மகனுக்கும் அவளுக்கும் அடிக்கடி வார்த்தைகள் தடித்தாலும், இருவரும் நாசூக்காக ஒதுங்கி இருந்தனர். சில நேரங்களில் வள்ளியம்மா மகனையே கோபித்தாள். ‘சின்னப் பொண்ணு. அதுக்கென்ன தெரியும்? நீதான் அனுசரிச்சுக்கிட்டுப் போகணும்,’என்று அவனுக்கு அறிவுரை சொன்னாள்.  முத்தழகு மட்டும் எதிலும் பட்டுக்கொள்ளாமல், அக்கம்பக்கத்தில் இரவல் வாங்கிய பத்திரிகைகளைப் படித்தும், எதிரில் இருந்த டீக்கடையில் அமர்ந்து டீக்கடைக்காரருடன் வம்பு வளர்த்தும் பொழுது போக்கிக்கொண்டிருந்தார்.

விளையாட்டுப் போல் ஒரு வருடம் ஓடிவிட்டது. பெட்டியைத் திறந்த போதெல்லாம் கண்ணில் பட்ட கதிர் அரிவாளை எடுத்து ஓர் அருமைக் குழந்தையைத் தடவிக் கொடுப்பது மாதிரி முத்தழகு தடவுவார். அதற்கு முத்தம் கொடுக்காததுதான் பாக்கி. அதில் கொஞ்சம் கொஞ்சமாகத் துரு ஏறத் தொடங்கிவிட்டிருந்தது. எனினும் அதற்கு இனி வேலை இல்லாததால் சாணை பிடிக்காமலும், பளபளவென்று எண்ணெய் போட்டுத் துடைக்காமலும் இருந்தார்.

அன்று இரண்டாம் சனிக்கிழமை. ஏழுமலைக்கும் சரோஜாவுக்கும் விடுமுறை. பிற்பகல் சாப்பாட்டுக்குத் தன் அலுவலக நண்பர்கள் மூவரை ஏழுமலை அழைத்திருந்தான். நன்றாகச் சமையல் செய்யுமாறு தாயிடம் பணித்திருந்தான். சரோஜா வழக்கம் போல் இந்தத் துரும்பை எடுத்து அந்தப்பக்கம் போடாமல் குசாலாக நடை பழகிக் கொண்டிருந்தாள். 

சமையற்கட்டிலிருந்து கிளம்பி வந்த வாசனைகள் பசி இல்லாதவர் வயிற்றை கூடக் கிளறுவதாக இருந்தன. ஏழுமலை எட்டிப் பார்த்து, “என்ன இருந்தாலும் உங்க கைமணமே தனிதாம்மா. சரோஜாவுக்கு ஒண்ணுமே தெரியாது. நீங்க வர்ற வரைக்கும் நான் ஓட்டல்காரனுக்குத்தான் பெரும்பாலும் அளுதுக்கிட்டிருந்தேன். என்னிக்காச்சும் அரைகுறையா எதையாச்சும் சமைச்சேன்னு பேர் பண்ணும், அம்புட்டுத்தேன்,” என்றான். குரல் தாழ்வாகவும், மருமகளுக்குக் கேட்காதவாறு கவனத்துடன் சொல்லப்பட்டதையும் பார்த்து வள்ளியம்மா சிரித்துக்கொண்டாள். ‘பொஞ்சாதிக்கு இம்புட்டு பயமா?’ என்று எண்ணிக்கொண்டாள்.

சாப்பாடு பரிமாறுவதை மட்டுமாவது சரோஜா செய்யட்டும் என்று ஏழுமலை சொல்லிவிட்டதால், நண்பர்கள் வந்து அமர்ந்ததும் இலைகளைப் போட்டு அவள் ஒவ்வொன்றாய்ப் பரிமாறத் தொடங்கினாள். அவ்வப்போது வள்ளியம்மா அடுக்களையிலிருந்து தலையை நீட்டி எட்டிப் பார்த்து, ‘இந்த இலை காலி, அந்த இலை காலி, இதைப் பரிமாறு, அதைப் பரிமாறு’ என்று மெல்லிய குரலில் சொல்லிக் கொண்டிருந்தாள். 

சரோஜா அவ்வப்போது மாமியாரை மறைத்தார்ப்போல் நின்றாள். அவள் எட்டி எட்டிப் பார்த்தது அவளுக்குப் பிடிக்கவில்லை. முத்தழகு பசி இல்லை என்று சொல்லி இருந்தார். அவர்கள் எல்லாரும் சாப்பிட்ட பிறகு தாம் சாப்பிடுவதாகச் சொல்லிவிட்டார்.  வழக்கம் போல் தெருவை வேடிக்கை பார்த்துக்கொண்டு கையில் ஒரு பத்திரிகையுடன் வாசற்புறத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தார்.

எல்லாரும் சாப்பிட்டு முடித்து நடுக்கூடத்தில் உட்கார்ந்து வெற்றிலை போடலாயினர். 

 “டே, ஏழுமலை! சாப்பாடு ஏ ஒன்றா! யாரு அந்தம்மா? எந்த ஊர்க்காரங்க? நல்லா சமையல் பண்றாங்களே!” என்று ஒருவன் விசாரித்தான்.

சரோஜா கண நேர இடைவெளியும் விடாமல் குறுக்கிட்டு, “அவரு ஊர்ப் பொம்பளைதாங்க….”என்றாள்.

எல்லாம் காதில் விழுந்த அதிர்ச்சியிலும் ஆத்திரத்திலும் முத்தழகு செய்தித்தாளை நழுவ விட்டவாறு எழுந்து நின்றார். மகன் என்ன சொல்லுகிறான் என்பதைக் கேட்கக் காதுகளைத் தீட்டி வைத்துக்கொண்டார்.  அவன் ஒன்றும் சொல்லாதது அவரது ஆத்திரத்தை அதிகமாக்கிற்று.  கூடவே, அவனால் என்ன செய்திருக்க முடியும் என்கிற கேள்வியும் தோன்றியது. நாலு பேருக்கு முன்னால் ரசக்குறைவாக அவளை அவனால் ஒன்றும் பேசியிருக்க முடியாது என்பது புரிந்தது.  ‘அவங்க ஒண்ணும் ‘யாரோ பொம்பளை’ இல்லை. எங்கம்மா’ என்கிற உண்மையைச் சொல்லி மனைவியை அவமானப்படுத்த மகனால் முடியாதுதான். எனினும் அவர்கள் எல்லாரும் கிளம்பிப் போன பிறகு அவன் அது குறித்து என்ன செய்வதாக இருந்தான் என்பதைப் பொறுத்தே தமது வருங்காலம் அமையும் என்பதை மட்டும் அவர் உடனே தீர்மானித்துக் கொண்டு விட்டார். மருமகள் சொன்னது வள்ளியம்மாவின் காதில் விழுந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், கிணற்று ராட்டினம் கடகடத்துக்கொண்டிருந்த ஓசையிலிருந்து அவள் பின்கட்டில் இருந்ததை அவர் தெரிந்து கொண்டார்.

அவர் திண்ணையிலே கண் மூடிப் படுத்தார். விருந்தினர்கள் போனதும், “என்னங்க? நான் அப்படிச் சொல்லிட்டேனேன்னு கோவமா? எனக்குச் சட்னு உங்கம்மான்னு சொல்லிடப் போறீங்களேன்னு பயமாயிறுச்சு. …” என்று சரோஜா மகனிடம் குழைந்தது கேட்டது. முத்தழகின் காது மடல்கள் விறைத்துக்கொண்டன.

 “அதனால என்ன? பரவாயில்லே. ஆனா நாளைக்குத் தெரியவந்தா உனக்குத்தானே அசிங்கம்?” என்று ஏழுமலை பதில் சொன்னதும் அவருக்குப் படபடக்கத் தொடங்கிற்று. ‘அசட்டையாகவும் அலட்சியமாகவும் தாயைச் சமையல்காரப் பெண்பிள்ளை என்று சொன்னது, இவ்வளவு சாதாரணக் குரலில், ‘போனாப் போகுது’ என்கிற முறையில் மன்னிக்கக்கூடிய விஷயமில்லை என்பதால் அவரது மார்பின் துடிப்பு மிகுந்து போனது. ‘படிப்புக்கும் குணத்துக்கும் சம்பந்தமே இல்லை’ என்று எண்ணினார்.

எழுந்தார். கூடத்துக்குப் போனார். மகனும் மருமகனும் என்னவோ பேசிச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். தலையைக் குனிந்துகொண்டு அவர்களைக் கடந்த அவர், “சாப்பிடல்லையாப்பா நீங்க? அம்மாவும் நீங்களும் உக்காருங்களேன்,” என்று மகன் உபசரித்ததைக் காதில் வாங்காதவர் போல் பெட்டியைத் திறந்து கதிர் அரிவாளை எடுத்துக் கல்லுரலின் முனையில் வைத்துத் துரு நீங்க அதைத் தீட்டத் தொடங்கினார்.

…….                      

                                   

Series Navigationமுன்மாதிரி ஆசிரியை அஸ்வினியும் மாண்டிசோரி கல்விமுறையும்!உப்பு பிஸ்கட்
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *