கிறிஸ்டி நல்லரெத்தினம் – மெல்பன்
புதுமைப்பித்தனின் ‘ஆற்றங்கரை பிள்ளையார்’ படித்திருக்கிறீர்களா? அவர் ஒரு புதிய எழுத்து வடிவை இக்கதையில் அறிமுகப்படுத்தினார்.
ஒரு ஆற்றங்கரையில் ஒரு பிள்ளையார் சிலை. அச்சிலையைச் சுற்றி ஊழிக்காலம் முதல் நிகழ்காலம் வரை நடைபெறும் மாற்றங்களை சிறு சம்பவக்குறியீடுகள் மூலம் கோர்த்து கதை புனைந்திருப்பார்.
இந்து சமயத்தில் பல நூற்றாண்டுகளாக ஏற்பட்ட வழிபாட்டு முறை மாற்றங்களை நாசுக்காக சொல்வதே அவர் நோக்கம். புதுமைப்பித்தனின் இக் கதையை படிக்கும் போது ஆவணப்படங்களில் இன்று கொட்டிக்கிடக்கும் ‘ நேரம் தப்பிய படப்பிடிப்பு’ (Time-lapse photography) பார்த்த அனுபவம் கிட்டும்.
ஒரு காட்சி, கால நீரோட்டத்தில், எப்படி எல்லாம் மாறுகிறது என்பதை இந்த தொடர்காட்சிகள் சித்திரிக்கும். புதுமைப்பித்தனின் இந்த யுக்தி அவரின் எழுத்துப்புரட்சியின் ஒரு பரிமாணம்.
இலங்கையின் மூத்த நதி எனும் பெருமையை சூடிக்கொண்ட களனி கங்கையைச் சுற்றி பல ஆண்டுகளாக ஏற்பட்ட சமூக, பொருளாதார, கலாசார மாற்றங்களை ஒரு தொடர் காட்சி ஆவணப்படம் போல் படைத்து எம் கைகளில் ” நடந்தாய் வாழி களனிகங்கை” எனும் நூலாக தவழவிட்டிருக்கிறார் எழுத்தாளர் முருகபூபதி. புதுமைப்பித்தன் கண்ட ஆற்றங்கரை பிள்ளையாரை களனி கங்கையில் காண்கிறார் ஈழத்தின் இந்த மூத்த எழுத்தாளர்.
களனி கங்கை அமைதியாக ஓடிக்கொண்டிருக்க, அதன் இரு மருங்கிலும் தன்னை புதுப்பித்துக் கொள்ளும் ஒரு உலகம் எப்படி மாற்றங்களுக்கு தன்னை அர்ப்பணித்து புதிய மனிதர்களையும் அவர்கள் படைப்புகளையும் காலச்சக்கரத்துடன் இணைத்தது என்பதே இந்நூலின் கரு.
பதினேழு அத்தியாயங்களிலும் எழுபத்தியெட்டு பக்கங்களிலும் பொதிந்துள்ள தகவல்கள்தான் எத்தனை!?
ஒரு கலைக்களஞ்சியத்தை படித்த களைப்பு. எம் மனக்கல்லறையில் ஆழத்தோண்டி நீளப்புதைத்துவிட்ட நினைவுக்கோர்வைகளை மீளத்தோண்டியெடுத்து எம் கண்முன்னே படைக்கிறார் முருகபூபதி.
தொப்பிக்குள் இருந்து முயலெடுக்கும் மந்திரவாதியைப் போல் காலம் மறந்த எத்தனையோ மானுடர்களை எமக்கு மீள அறிமுகப்படுத்தி வியக்கவைக்கிறார். இவை சாதாரண காட்டு முயல்கள் அல்ல. அவை இலங்கை சரித்திரத்தையே மாற்றிப் போட்ட மகுடமணிந்த முயல்கள். அதே தொப்பிக்குள் இருந்து சில அரசியல் குள்ள நரிகளையும் எடுத்துப்போடும்போதுதான் நாம் வாயைப்பிளக்கிறோம்!
வாசகன் தோளில் கைபோட்டு எழுதும் நையாண்டி நடை, வார்த்தைச் சிக்கனம், நறுக்கென நயம்பட சொல்லும் பாணி…
வார்த்தைக்கு வண்ணம் பூசி பந்திக்கு பாவாடை கட்டி பல்லக்கில் ஏற்றிப்பார்க்காமல் சொல்ல வந்ததை சொல்லும் கண்ணியம். இவைதான் இந்நூலின் சிறப்பு. இவர் எழுத்தின் சிறப்பு என்பேன்.
சாண்டில்யனைப்போல் ‘ மன்னன் மகளின்’ இடையில் இருபது நிமிடங்கள் செலவிடாத நடை.” விசயத்துக்கு வாருங்கள்” என்று நீங்கள் சொல்லும் முன்பே விசயத்தை சொல்லி கடந்து போயிருப்பார். துரத்தித்தான் பிடிக்கவேண்டும்!
பல சரித்திர சம்பவங்களை லாவகமாக களனி கங்கையுடன் இணைப்பது ஒரு புது யுக்தி. அதுவே இக் கட்டுரைகளின் சிறப்பு என்பேன். ஒரு நெசவாளியின் கரிசனையுடன் மிக நேர்த்தியாக பின்னப்பட்ட ‘கட்டுரை நூல் கம்பளத்தை’ எம் கண் முன்னே விரித்துப்போட்டு ‘ஏறிக்கொள்’ என்கிறார் முருகபூபதி.
அலாவுதீனின் கம்பளமாய் அது மாறி எம்மை ஒரு கனவுலகிற்கே அழைத்துச் செல்லும் மாயையை என்னவென்று சொல்வதாம்?
(‘கெளனி பாலம்’ நாடகம்)
1949 இல் நடந்த குதிரைப் பந்தயப்பணம் நான்கு இலட்சம் ரூபாய் கொள்ளை, ‘கெளனி பாலம’ நாடகப்பின்னணி, களனி ரஜமகா விஹாரைக்கு கொளதம புத்தரின் விஜயம். பிரதமர் பண்டாரநாயக்காவின் கொலைச் சதி, மேர்வின் சில்வாவின் ‘வாங்க மச்சான் வாங்க’, சீதையை மீட்ட ஸ்ரீராம பக்த ஹனுமான், சேர். பொன்னம்பலம் அருணாசலம் பூர்வீகம், ஜிந்துப்பிட்டியின் மான்மீகம், தேசிய சுவடிகள் திணக்களத்தின் ‘எங்கட நவசோதி’, களனி டயரின் கதை, சினிமாஸ் குணரத்தினத்தின் குறும் சரித்திரம், ஜே.ஆர் – வீரகேசரி தொப்புள்கொடி உறவு, சவர்க்காரத்தின் சரித்திரம், ஆமர் வீதி அஸ்பஸ்டஸ், கிங்ஸ்லி செல்லையா – எம்.ஜி.ஆர் நட்பு, சிங்கள திரைப்பட துறையில் தமிழர் பங்கு, ஜனாதிபதி பிரேமதாசாவின் முடிவு, ராஜா ஸ்டூடியோ ராஜப்பன், எம்.ஜி. ஆர்- சரோஜாதேவி இலங்கை விஜயம் என பல ருசிகரமான தலைப்புக்களை தடவிச் செல்கிறது இந்த மாயக் கம்பளம்.
(களனி ரஜமகா விஹாரை)
இந்த எழுபத்திஎட்டுப் பக்கக் கட்டுரைகளை நூறாக, ஏன் இருநூறாகக்கூட எழுதி நீட்ட முடியும்.
இரு வரி திருக்குறளுக்கு பக்கம் பக்கமாக உரை எழுதவும் முடியும். அதே நேரம் பதினாயிரம் பாடல்களை அடக்கிய கம்பராமாயணத்தை கவிஞர் கண்ணதாசன் சுருக்கியது போல் இரு வரிகளில் இப்படி சொல்லவும் முடியும்:
கோடு போட்டு நிற்கச் சொன்னான்
சீதை நிற்கவில்லையே!
சீதை அன்று நின்றிருந்தால்
இராமன் கதை இல்லையே!
தமிழின் செழுமை இது. ஆனால் விரிக்கும் போது பொருள் கிழிந்து விடாமலும் சுருக்கும் போது அது சிதைந்துவிடாமலும் காப்பதே படைப்பாளியின் திறன் .
(பண்டாரநாயக்கா கொலைச்சதியின் குற்றவாளி மாபிட்டிகம புத்தரகித்த தேரோ)
இந்நூலில் ஆசிரியர் சுருக்க வேண்டிய இடத்தில் சுருக்கியும் விரிக்க வேண்டிய இடத்தில் விரித்தும் எழுதியது அவரின் எழுத்தாண்மைக்கு சான்று.
சம்பவங்களைச் சுருக்கி எழுதும் போது ஆசிரியர் உங்களின் தேடலின் வேட்கையின் திரியில் ஒரு தீப்பொறியை பற்றவைத்து கடந்து போகிறார். இங்குதான் உங்கள் ஆய்வுத் தேடல் ஆரம்பம்!
வாழைப்பழத்தை உரித்து வாசகனின் வாயில் வைப்பது ஒரு படைப்பாளியின் தொழிலல்லவே?
கட்டுரையின் கட்டமைப்பு வாசகனை சுண்டி இழுப்பதாய் அமைய வேண்டும் என்பது நியதி. புனைகதைகளில் பாத்திரப்படைப்பே இதைச் செய்துவிடும். ஆனால் கட்டுரையின் தூண்டில் புழுதான் அதன் முதல் வசனம். இந்நூலில் அடங்கியுள்ள கட்டுரைகளின் முதல் வசனங்கள் ஒரு முதுமொழியாகவோ அல்லது பழைய பாடல் வரிகளாகவோ இருப்பது மட்டுமல்லாமல் இனி வரவிருக்கும் கதைதான் என்ன என்ற ஈர்ப்பை வாசகன் மனதில் விதைக்கிறது. சில அத்தியாயங்களில் ஒரு விடுகதை போல் ஒரு முடிச்சை கட்டுரையின் ஆரம்பத்தில் போட்டுவிடுகிறார் ஆசிரியர். கட்டுரையின் கடைசி வரியில்தான் இந்த முடிச்சு அவிழும். முடிவைத்தேடி ஓடும் கண்களுக்கு அந்த அவிழ்ந்த முடிச்சு விருந்து படைக்கிறது.
முருகபூபதியின் எழுத்து நடையை விட அவரின் எழுதும் வேகம் எப்போதும் என்னை வியக்கவைப்பதுண்டு. அவருடன் பேசும் போது ” இப்போதுதான் இரண்டு கட்டுரைகள் எழுதி அனுப்பிவிட்டு வந்திருக்கிறேன் ” என்று சாவகாசமாய் சொல்லும்போது அத்தொனியில் ஒரு படைப்பாளியின் பிரசவவேதனை துளியும் இருக்காது. இந்த எழுபதைத்தாண்டிய இளைஞனுக்கு எங்கிருந்துதான் வந்ததாம் இந்த சக்தி என நான் வியந்ததுண்டு.
வரிசையில் வந்து காத்து நிற்கும் வார்த்தைகளின் கழுத்தைப் பிடித்து காகிதத்தில் உட்காரவைப்பதுதான் இவர் வேலையோ என நான் எண்ணுவதுண்டு.
ஆச்சரியக் குறிகளை அள்ளித்தெளித்து, ஆரவாரம் தேடும் எழுத்துக்கள் அல்ல முருகபூபதியின் எழுத்துக்கள். அமைதியாக ஓடும் நீரோடையாக நெஞ்சை நனைத்துச் செல்லும் நித்திய வரிகள் அவை.
இந்நூலில் வரும் பல நிஜ மனிதர்களுடன் ஆசிரியர் நேரடித் தொடர்பில் இருந்திருப்பது வாசிக்கும் போது புலனாகிறது. இது இவருக்கு வீரகேசரி தந்த வெகுமதி என எண்ணுகிறேன். பல நினைவுகளை தன் சொந்த சந்திப்பு அனுபவங்களில் இருந்து அவர் எடுத்து பரிமாறும் போது அந்த புதிய வார்ப்புகள் எமக்கு தித்திக்கின்றன. நமக்கு மடி முட்டி நுரை தள்ள பால் குடித்த பசுக்கன்றின் திருப்தி.
இந்நூலில் பல வருடங்களும் மாதங்களும் திகதிகளும் கொட்டிக்கிடக்கின்றன. அவைதான் உங்கள் மனக்குதிரையை கட்டிவைக்கும் இலாயங்கள். ‘அட, நான் அப்போது எங்கிருந்தேன்?’ எனும் உங்கள் சுயதேடலின் கேள்விக்கு விடை தேடி நூலில் விரித்த சம்பவத்துடன் இணைத்து மகிழும் உணர்வு இன்பமானது.
ஆனால், இந்த நாட்குறிப்புகள் தானாய் வந்து கட்டுரையில் குந்திக்கொள்ளவில்லை. ஆசிரியரின் கடின ஆய்வுத்தேடலின் ஊதியமே இவை. இவை இந்நூலுக்கு மேலும் கனதியை தருகின்றன என்பது ஒரு மறுக்கமுடியாத உண்மை.
இலங்கையின் நவீன கால வரலாறுகள் சமய, அரசியல் அல்லது பொருளாதார கண்ணோட்டத்தில் எழுதப்பட்டவை. ஆனால் இவ்வரலாறுகளின் பின்னால் உள்ள சம்பவக் கோர்வைகளே சரித்திரத்தின் செங்கற்கள். இவை பத்திரிகை செய்திகளாக வெளிவந்து பின்னர் பழைய பேப்பர்காரனிடம் கிலோ கணக்கில் நிறுத்து விற்றுவிட்ட சந்ததி நாம்.
நாம் இழந்த செய்தித் துணுக்குகளை இந்த ரசஞானி மீளத்தொகுத்து நூலாய் தந்திருக்கிறார். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தோற்றம், தமிழ் பத்திரிகைத்துறையின் கூர்ப்பு, சிங்கள சினிமாவுக்கு தமிழரின் பங்களிப்பு, தமிழ் தொழிலதிபர்கள் எதிர்நோக்கிய சவால்கள் என இந்த செய்திப்பட்டியல் நீளும்.
நடந்தாய் வாழி களனி கங்கை முதலில் கிழக்கு இலங்கையிலிருந்து வெளியான அரங்கம் இதழில் தொடராக வந்துள்ளது. அதன் ஆசிரியர்
சீவகன் பூபாலரட்ணம் இந்நூலுக்கு எழுதியிருக்கும் அணிந்துரையில், “அந்த மண்ணில் வாழ்ந்த மக்களின் கதையை, உழைப்பை, உயர்வை, சுமையை, சோகத்தை, அழிவை, இரத்தத்தை தன்னுள் கலந்து ஓடும் களனி கங்கை தனது தீரத்தில் பார்த்த கதை இது ” என பொருத்தமாகவே சான்றிதழ் வழங்கியுள்ளார்.
முன்னுரையில் முருகபூபதி, “மலையிலிருந்து ஊற்றெடுத்து, காடு, நகரம், கடந்து வரும் போது கரையோரத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் சம்பவங்களை கண்டும் காணாமலும் தன்பாட்டில் ஓடிக்கொண்டிருக்கிறது. அதன் எழிலையும் அதன் கரைகள் சொன்ன கதைகளையும் எழுதினேன். “ என தன்னடக்கத்துடன் சொல்லிவைக்கிறார்.
இந்நூலின் பின்புற அட்டையில், சுபாஷினி சிகதரன் பின்வருமாறு எழுதியுள்ளார்:
“களனியின் கரையோரம் எங்கனும் நடந்த கதைகளைச் சொல்லும் நூல். அரசியல், வர்த்தகம், கலை, எனக்கலந்து தருகின்ற கட்டுச்சாதக்கூடை. நாம் முன்பு அறிந்திராத பல வரலாறுகளின் உண்மைப்பின்னணிகளை இலக்கியச்சுவையுடன் பதார்த்தங்களாக்கிப் பரிமாறப்பட்டுள்ளது. ஆற்றின் போக்கையும் வேகத்தையும் அங்கங்கே மாற்றியமைக்கும் பாறைக்கற்கள் போல, ஆன்மீகம், தொடங்கி ஆடல் – பாடல் – திரையரங்குகள் வரை “அரசியல் “எனும் ஒன்று , அடியில் இருந்து ஆட்டிவைப்பதை எல்லா அத்தியாயங்களும் குறிப்பிடுகின்றன. “
கொழும்பு குமரன் புத்த இல்லம் கனகச்சிதமாக இந்நூலை வடிவமைத்து வெளியிட்டுள்ளது.
புதுமைப்பித்தன் ஆற்றங்கரை பிள்ளையாரில் கண்ட அதே சமூக மாற்ற காட்சிகளை முருகபூபதி, களனி கங்கையில் கண்டார்.
அக்காட்சிகளை மிகச் சுவாரசியமாக நனவிடை தோய்ந்து எழுதிய இந்நூல் எம் நினைவுச் சக்கரத்தின் அச்சாணியாய் அமையும் என்பதில் ஐயமில்லை!
குமரன் புத்தக இல்லம்
39, 36 ஆவது ஒழுங்கை, கொழும்பு – 06, இலங்கை.
—0—
- மெக்சிக்கோ தென்மேற்கு கடற்கரை அகபுல்கோவில் நேர்ந்த M 7.1 ஆற்றல் பூகம்பம்
- பிழை(ப்பு)
- வாசிப்பு அனுபவம்: முருகபூபதியின் புதிய நூல் நடந்தாய் வாழி களனி கங்கை…… ஒரு பார்வை
- பன்முக நோக்கில் பாரதியாரின் படைப்புகள் !
- எம்.ரிஷான் ஷெரீப்பின் நூலுக்கு ‘இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருது’
- ஒரு கதை ஒரு கருத்து – கே.பாரதி, ஏ.எஸ். ராகவன்
- ஐஸ்லாந்து
- குருட்ஷேத்திரம் 12 (கர்ணனின் முடிவுக்கு குந்தியே காரணம்)
- குருட்ஷேத்திரம் 11 (பாரதப் போருக்கு வித்திட்ட பாஞ்சாலியின் சபதம்)
- முன்மாதிரி ஆசிரியை அஸ்வினியும் மாண்டிசோரி கல்விமுறையும்!
- கதிர் அரிவாள்
- உப்பு பிஸ்கட்