ஒரு கதை ஒரு கருத்து – கே.பாரதி, ஏ.எஸ். ராகவன்

author
0 minutes, 5 seconds Read
This entry is part 6 of 12 in the series 12 செப்டம்பர் 2021

 

 

 

அழகியசிங்கர்

(ஏ.எஸ். ராகவன்)

இந்த முறை இரண்டு கதைகளைப் பற்றிக் கூற உள்ளேன்.  ஒன்று ‘கே.பாரதி‘யின் ‘பக்கத்து வீட்டில் ஒரு சந்திப்பு’ என்ற கதையை எடுத்துக்கொண்டுள்ளேன். இரண்டாவது கதை பின்னணி என்ற ஏ.எஸ். ராகவன் கதை. 
நான் இப்போது லீனியர் நான் லீனியர் என்று இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்துகிறேன்.  இதை முறையான கதை முறையற்ற கதை என்று பிரிவுகளில் கொண்டு வரலாமென்று நினைக்கிறேன்.
பாரதி கதை லீனியர் கதை.  கோமதியம்மாளிடமிருந்து கதை ஆரம்பமாகிறது.  லீனியர் கதையில் ஒரு ஆரம்பம், ஒரு தொடுப்பு, ஒரு முடிவு என்று இருக்கும். 
முன்பின் தெரியாத ஒரு விருத்நாளிக்காக நிறையத் திட்டமிட வேண்டியிருக்கிறது.  கோமதி அம்மாள் தன் பெண்ணையும் பேரனையும் பார்க்க வந்திருக்கிறாள்.
பக்கத்துவீட்டில்தான் அவளுடைய பெண் புவனாவின் குடும்பம் இருக்கிறது.  யாருக்கும் அவள் வந்ததைத் தெரியக்கூடாது ரொம்ப ஜாக்கிரதையான திட்டமிடுதல் இது.
ஏன்?

‘ஒற்றை மனிதரின் கண்பார்வைக்கு, எப்படியெல்லாம் பயப்பட வேண்டியிருக்கிறது.  அதுவும் ஏதோ தப்பு காரியம் செய்வதுபோல்’. யார் அந்த ஒற்றை மனிதன்.  புவனாவின் கணவன்.
பக்கத்து வீடாக இருந்தாலும் கதைசொல்லிக்கு அதிகப் பழக்கமில்லை.  வீடு, வங்கி வேலை, சிவா, ஸ்கைப்பில் வரும் கணவர் என்று அத்தனையும் சமாளித்துக் கொண்டிருப்பவள் கதைசொல்லி.  
நான்கு நாட்களுக்கு முன்பு வீட்டு வாசலில் வந்து நின்ற இளைஞனை அடையாளம் தெரியாமல் விழித்தாள் கதைசொல்லி.
அப்போதுதான் தெரிந்தது. கோமதியம்மாளûப் பற்றி. பெண் புவனாவையும், பேரனையும் அவள் கணவனுக்குத் தெரியாமல் வந்திருக்கிறாள் என்று.  அதற்கு அடைக்கலமாக  கதைசொல்லியின் வீடு.   கோமதியம்மாள் புவனாவைப் பார்த்து மூன்று வருடம் மேல் ஆகிறது. 
துணிப்பையைத் துழாவி ஒரு கட்டு அப்பளத்தையும், சிறிய சம்புடத்தையும் எடுத்தாள் கோமதியம்மாள்.   கோமதியம்மாள் கொடுத்ததை மேல் எடுத்து வைத்தாள் திரட்டுப்பால். இரட்டை அப்பளாம்.  இவற்றை பூவனாக்கு கொடுக்க முடியாது.  அவள் கணவன் கண்டுபிடித்து விடுவான் என்ற பயம் கோமதி அம்மாளுக்கு.
கோமதி அம்மாள் சொல்கிறாள்.  ‘மூணு வருஷத்துக்கு முன்னாலே குரோம்பேட்டையில் ஒரு வீட்ல குடியிருந்தா.  அங்கேயும் அக்கம்பக்கத்து ஒத்தாசையில் போய் பார்த்தேன்.  பொறுக்காதே அவனுக்கு.  உடனே வீட்டை மாத்திட்டான்.  அந்தப் பிள்ளை ரமேஷ் இதுவரைக்கும் ஒன்பது ஸ்கூல் மாறியிருக்கான்னா பார்த்துக்கோயன்.’
புவனாவையும் ரமேஷையும் பாட்டி கோமதியம்மாளைச் சந்திக்க ஏற்பாடு செய்து விட்டு, கதைசொல்லி  மூன்று மணிக்கு வருவதாக சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டாள்.
அவர்களைச் சந்திக்க வைத்ததில் கதைசொல்லிக்கு ஒரு திருப்தி. 
மூன்று மணிக்குத் திரும்பி வரும்போது கோமதியம்மாள் மட்டும் சுருண்டு படுத்துக்கொண்டிருந்தாள். எல்லாத் திட்டமும் பாழாகி விட்டது.  அவள் கணவன் ஆபிஸ் போகாமல் திரும்பி வந்ததால் இந்தப் பிரச்சினை.

சரியாக பதினைந்து நாட்களில் பின் வீட்டு ஜன்னல் வெறிச்சிட்டது என்று முடிக்கிறார் கதாசரியை. இதுதான் கதை.  ஒரு நிகழ்ச்சி நடக்குமென்று ஏற்பாடு செய்த பின்னே நடக்காமல் போய்விட்டது. என்னதான் இருந்தாலும் இப்பாடியெல்லாமா ஒரு மனுஷன் இருப்பான் என்ற கேள்வி நமக்குள் எழுகிறது.  அமுதசுரபியில் 2014ல் வெளிவந்த கதை. இது ஒரு முறையான கதை. இதன் முடிவை எப்படி வேண்டுமானாலும் மாற்றி இருக்கலாம்.
புவனாவும், பேரனையும் பார்த்துவிட்டு கோமதி அம்மாள் நிம்மதியாகப் போனதாகக் கூட முடித்திருக்கலாம்.  முறையான கதையில் முடிவை எப்படி வேண்டுமானாலும் கொண்டு போகலாம்.
இனி அடுத்த கதையைப் பார்ப்போம்.
சமீபத்தில் இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற 50 சிறந்த சிறுகதைகள் என்ற (1970-2019) என்ற சிறுகதைத் தொகுப்பைப் படித்தேன்.  அதில் 1970ல் சிறந்த கதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதை கலைமகள் பத்திரிகையில் ஆகஸ்ட் 1970ல் வந்திருக்கிறது.
கதையின் பெயர் ‘பின்னணி.’  எழுதியவர் ஏ.எஸ்.ராகவன். 
அதெல்லாம் நடந்து ஆண்டுகள் பலவாகி, அதெல்லாம் நடந்ததா என்பதே மறந்து போய், நினைவில் புல்கூட முளைத்து விட்டது என்று கதை ஆரம்பமாகிறது.
கவுண்டர் பாதைத் தடுமாறி வந்து விடுகிறார்.  மங்கிய நிலவொளி அவரைப் பார்த்து நகைத்தாற் போலிருந்தது.  ஒரு குப்பலாய் இட்டேரி வளைவில் வந்து மோதிய காற்று காதில் கிசு கிசுத்தாற் போலி ருந்தது.
‘எஞ்சாமி, எனக்கு மூளை பிசகிப் போச்சா? இந்தப் பாளாப்போன காட்டு வளியிலே கால் வெப்பனா இல்லாட்டி? என்று நொந்து கொள்கிறார் கவுண்டர். 
நடந்து வருகையில் கவுண்டர் நின்றே விட்டார்.  ஏஞ்சாமி அதே இடத்துக்கே வந்துட்டேனே.  என்று பீதியுடன் தனக்குள் முணுமுணுத்துக்கொள்கிறார்.  
காட்டு முள்வேலிக்குக் கீழ்ப்புறம் ஓர் உருவம் அமர்ந்து அவரை உற்றுப் பார்ப்பது தெரிந்தது.

ஏன் பயப்படுகிறார் கவுண்டர்?  ராக்காயி புருசனை நினைத்துத் தான் பயப்படுகிறார்.  அது ராக்காயி புருஷனின் ஆவியா என்று அவருக்குப் பயம் ஏற்படுகிறது.  காலம் எவ்வளவு ஆனால் என்ன? எல்லாம் நேற்று நடந்தாற்போலத்  துல்லியமாய்ப் புரண்டு வருகின்றன கண்முன்.  அவர் இதே இட்டேரியில்  ராக்காயி புருசனை கொன்று தீர்த்தது ஊராருக்கு இலை மறைவுக் காய் மறைவாகத் தெரிந்து இப்போது மறந்து போனதாக இருந்தாலும், அவரளவில அது மறக்கவொண்ணாப் பாவந்தானே?
உள்ளம் உருக ராக்காயி புருஷனை நினைத்து வேண்டுகிறார்.  பணத்துக்கு ஆசைப்பட்டு அவனைக்கொன்ற குற்றத்தை அவர் நினைவுப் படுத்திக்கொள்கிறார்.
பொம்மக் கவுண்டன் காட்டு நாய் இரைக்க இரைக்க ஓடிவந்து அவர் பயத்தை நீக்குகிறது.
நாய் என்ன செய்தது தெரியுமா? அந்த ராக்காயி புருசனை அலக்காகத் தூக்கிக்கொண்டு வேஙூக்கால் ஓரமாகவே நடந்து விட்டது.
கவுண்டர் முதலில் ஏதும் புரியாமல் வாயைப் பிளந்தார்.  அப்புறம்தான் விளங்கிற்று.  காட்டு முள்வேலிக்குக் கீழே இருந்தவன் ராக்காயி புருசனே அல்ல. ஒரு கிழிந்த பழைய கந்தல் வேட்டி.  இந்த நிலவொளியில் அந்த இருட்டில் அப்படி ஒரு பிரமைத் தோற்றம் தந்து அவரைப் பாடாய்ப் படுத்திவிட்டது.
கவுண்டர் பல ஆண்டுகளுக்கு முன்னால் ராக்காயி புருஷனைக் கொலை செய்துவிட்டு, அதை இந்த நேரத்தில் நினைத்துப் பயப்படுகிறார். 
இன்னொரு இடத்தில் இப்படி நினைக்கிறார்.
பணம் யாருக்குச் சொந்தம்? அதை ஆளத் தெரிஞ்சவனுக்கு.  இல்லையா? ராக்காயி புருசனுக்கு என்ன தெரியும்? என்ற எண்ணமும் அவருக்குள் ஏற்படுகிறது. 
அவர் சொத்து சேர்த்தது இது மாதிரி தீய வழியில்.
ஒரு இடத்தில் ஒரு வரியைக் குறிப்பிடுகிறார் கதாசிரியர்;.  தெய்வத்தை ஏமாற்றுவதில் கூட அவர் சாமர்த்தியசாலிதான் என்று.

அவருடைய பெண் ராசாத்திக்கு அடுத்த வாரம் கல்யாணம். வெள்ளியணையில் இருக்கிற அவருடைய மைத்துனன் மகனுக்குக் கொடுக்கிறதாக முடிவாகியிருக்கிறது.
அவர் வீட்டைப் பற்றி விவரிக்கும்போது எல்லாம் அவருடைய பெருமையின் சின்னங்கள் என்கிறார் கதாசிரியர்.  இவற்றுக்குப் பின்னாலே எங்கோ ஒரு சிறுமை ஒளிந்து கொண்டிருந்தால் அவருக்கு என்ன? அதை யார் எண்ணி மறுகுவார்? என்கிறார் கதாசிரியர்.
வீட்டுக் கதவைத் திறந்து வீட்டிற்குள் போகிறார்.  மைத்துனன் வந்தான் வேகமாக, வெள்ளியணை மைத்துனன்.  சம்பந்தியாகப் போகிறவன்.  பதட்டத்துடன் அவர் மைத்துனன் காளி,’ராஜாத்தியை ரெண்டு நாளாக் காணோம்,  மாமா’ என்கிறான் கவுண்டரிடம்.
ராக்காயி மவன் பொன்னுவையும் காணோம்.  ரெண்டு பேருமா ஊரை விட்டு போயிட்டாங்கன்னு தெரியுது.  
திரும்பவும் ராக்காயி புருசன் அவர் முன்னே வந்து விட்டான்.
‘ராக்காயி புருசா.. உன் சொத்தை நான் கொள்ளையடிச்சேன்னு இத்தினி நாள் காத்திருந்து இப்ப என் சொத்தைக் கொள்ளையடிச்சிடிட்டியா’ என்று பெருங்குரலில் கத்தியவர் அப்படியே நிலைகுலைந்து விழுந்தார்.
அப்புறம் அவர் கண் விழிக்கவே இல்லை என்று முடிக்கிறார் கதாசிரியர்.
இக் கதை நேர்க்கோட்டுக் கதை இல்லை.  .  உண்மையில் இக் கதையில் அவர் மனசாட்சிதான் அவரைக் கொலை செய்து விட்டது.
இது முறையற்ற கதை.  உருவமே தெரியாத ராக்காயி புருசன் முக்கிய கதாபாத்திரமாக வருகிறான்.  செய்த கொடுஞ்செயல் கவுண்டரைத் துரத்திக்கொண்டு வருகிறது.  கவுண்டரின் மனசாட்சியே அவரைக் கொன்று விடுகிறது. ‘பின்னணி’ என்ற இக் கதை தலைமகளில் 1970ல் வந்துள்ளது.
    

Series Navigationஎம்.ரிஷான் ஷெரீப்பின் நூலுக்கு ‘இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருது’ஐஸ்லாந்து
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *