முன்மாதிரி ஆசிரியை அஸ்வினியும் மாண்டிசோரி கல்விமுறையும்!

author
0 minutes, 3 seconds Read
This entry is part 10 of 12 in the series 12 செப்டம்பர் 2021

 

 

 

லதா ராமகிருஷ்ணன்

சில வாழ்க்கைத்தொழில்களைப் பொறுத்தவரை அவை வெறும் வருமானமீட்டித் தருபவையாக மட்டும் பார்க்கப்படலாகாது. அர்ப்பணிப்பு மனோபாவத்தோடு அதில் ஈடுபடவேண்டியது இன்றியமையாததாகிறது. ஆசிரியர் பணி அவற்றில் முக்கிய மானது. அதுவும் ஐந்து வயதிற்குட்பட்ட காலகட்டத்தில் ஒரு குழந்தை கற்றுக்கொள்வது காலத்திற்கும் அதன் ஆளுமையில் தாக்கம் செலுத்துவதாக அமைகிறது என்னும்போது மழலையர் கல்வி, குழந்தைகளுக்கான கற்பித்தல் முறை எத்தனை கவனமாகக் கட்டமைக்கப்படவேண்டும்! அப்படி குழந்தைகளை, அவர்களுடைய இயல்புகளை, நடவடிக்கைகளை, அறிதிறனை, ஆர்வங்களை பார்த்துப்பார்த்து மரியா மாண்டிசோரி அம்மையார் உருவாக்கிய கல்வித்திட்டமே மாண்டிசோரி முறை.

 

(*விக்கிபீடியாவிலிருந்து: 

 

மரியா மாண்ட்டிசோரி (ஆகஸ்ட் 311870 – மே 61952இத்தாலியைச் சேர்ந்த கல்வியாளர், மனோதத்துவ மருத்துவர். இத்தாலியில் மருத்துவ பட்டம் பெற்ற முதல் பெண். இவர் சிறு குழந்தைகளை பயிற்றுவிக்க ஒரு புதிய முறையை உருவாக்கி ஜனவரி 61907 இல் ரோம் நகரில் தனது பள்ளியில் அறிமுகப்படுத்தினார்.

 

இவரது முறையை பின்பற்றி கல்வி கற்ற குழந்தைகள் சிறு வயதிலேயே விளையாட்டை விட வேலையில் சாதிக்க அதிக ஆர்வம் காட்டினர். தொடர்ந்து மூளைக்கு வேலை கொடுத்தாலும் அதிகம் களைப்படைவதில்லை. இதனால் இவரது முறையை ஐரோப்பா முழுவதும் பயன்படுத்த துவங்கினர்நெதர்லாந்தில் மிக புகழ் வாய்ந்த ஆசிரியப்பயிற்சி பள்ளியை நிறுவினார். பின்னாளில் 1939 முதல் 1947 வரை இந்தியாவிலும் இலங்கையிலும் பணியாற்றினார்.

மாண்டிசோரி முறைக் கல்வி

இந்த கல்வி முறை குழந்தைகள் தாமாக முன்வந்து செயல்படுவதற்கும், தனது தேவைகளை தானே செய்து கொள்ளவும் வழி செய்கிறது. இந்த முறையில் நடக்கும் வகுப்புகளில் ஆசிரியர்கள் இல்லை, மாறாக அவர்கள் வழிநடத்துபவர்கள் என்றே கருதப்படுகிறார்கள்.

 

குழந்தைகள் புதியவற்றை தாமாக முன்வந்து ஆர்வமுடன் கற்றுக் கொள்ளவும். அவர்கள் தவறான பழக்கங்களை கற்றுக் கொள்ளாமலும், குழந்தைகளின் முயற்சிகள் வீணாகிப் போகாமலும் பார்த்துக் கொள்வதே இந்த வழிநடத்துபவர்களின் (ஆசிரியர்களின்) பணி. இவரது மிகச்சிறந்த புத்தகங்கள் “The Absorbent Mind”, “The Discovery of the Child”.

 

மாண்டிசோரி அம்மையாரின் எண்ணத்திற்கு மாறாக காலப்போக்கில் அவருடைய கல்விமுறை வசதிபடைத்த குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கான பள்ளிகளில் மட்டும் கற்பிக்கப்படுவதாக மாறியது. சென்னையில் இயங்கிவரும் ஸ்ரீ ராம சரண் அறக்கட்டளையின் முன்முயற்சியில் சென்னையிலுள்ள மநகராட்சிப் பள்ளிகளின் மழலையர் வகுப்புகளில், உலகிலேயே முதன்முறையாக என்று சொல்லத்தக்க அளவில், மாண்டிசோரி கல்விமுறை அறிமுகப்படுத்தப்பட்டு குழந்தைகளிடமும் பெற்றோர்களிடமும் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. 

ஸ்ரீ ராம சரண் அறக்கட்டளையின் சார்பில் இந்த மழலையர் வகுப்புகளில் ஆசிரியராக நியமிக்கப்பட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர் அஸ்வினி. மாண்டிசோரி ஆசிரியப் பயிற்சி பெற்றவரான இவர் அத்தனை அன்பும் அக்கறையுமாக அந்தச் சின்னஞ்சிறு குழந்தைகளோடு பேசுவதும், பழகுவதும், அவர்களுக்குக் கதைகள் சொல்வதும், பாடல்களும் வாழ்க்கைப் பயிற்சிகளும் கற்பிப்பதும் குழந்தைகளை ஆர்வத்தோடும் மகிழ்ச்சியோடும் பள்ளிக்கு வரச் செய்யும்!

”இன்று மழலையர் பள்ளி என்று நடக்கும் எதையும் மாண்டிசோரி பள்ளி என்று குறிப்பிடுவதும், பெயரிடுவதும் வழக்கமாக உள்ளது. இது மிகவும் தவறு. மாண்டிசோரி பயிற்றுமுறையின் தனித்துவமும் மகத்துவமும் இவ்வாறு மதிப்பழிக்கப்படலாகாது”, என்று அழுத்தமாக எடுத்துரைக்கும் அஸ்வினி மாண்டிசோரி கல்வி முறையில் பயிற்சி பெற்ற ஆசிரியை. முழு அர்ப்பணிப்போடு குழந்தைகளுக்குக் கற்பிப்ப்பவர். 

சில வருடங்களுக்கு முன் அஸ்வினிக்குத் திருமணமாகியது. அதன் பின் வேலையை விட்ட அஸ்வினி இன்று இரண்டு சின்னக் குழந்தைகளுக்குத் தாய்.  இந்தக் கரோனா காலகட்டத்தில் அக்கம்பக்கத்திலுள்ள குழந்தைகள் என்ன செய்வதென்றே தெரியாமல் அலைந்து திரிந்துகொண்டிருப்பதை, அலைபாய்ந்து கொண்டிருப்பதைப் பார்த்த பின் அவருக்குள்ளிருக்கும் என்றுமான மாண்டிசோரி ஆசிரியையால் எப்படி வாளாவிருக்க முடியும்? 

”அக்கம்பக்கத்திலுள்ள குழந்தைகளுக்கும் என்னுடைய குழந்தைகளுக்கும் மாண்டிசோரி கல்விமுறையின் நன்மைகளும், கல்வி கற்கும் இனிய அனுபவங் களும் கிடைக்கவேண்டும் என்ற எண்ணம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துகொண்டே வந்தது. இதோ, மூன்று மாதங்களுக்கு முன் என் வீட்டின் மாடியிலேயே மாண்டிசோரி கல்விமுறையில் இங்குள்ள குழந்தைகளுக்குப் பயிற்சிவகுப்புகள் நடத்த ஆரம்பித்துவிட்டேன். இரண்டு சிறு அறைகளும் திறந்தவெளியும் கொண்ட இந்த மாடிப்பகுதியை  வாடகைக்கு விட்டால் வரக்கூடிய பணம் எங்கள் குடும்பத் துக்கு உதவும். இருந்தாலும், என் ஆர்வத்தைப் புரிந்துகொண்டு, குழந்தைகளுக்கு மிகச் சிறந்த மாண்டிசோரி கல்விமுறையின் பயன் கிடைக்கவேண்டும் என்ற என் விருப்பத்திற்கு மதிப்பளித்து இந்த மாடிப்பகுதியை அதற்காகக் கொடுத்திருக்கும் என் அன்புக்கணவருக்கும் அருமை மாமியாருக்கும் என் என்றுமான அன்பு உரித்தாகிறது”, என்று நெகிழ்வோடு குறிப்பிடும் அஸ்வினி “இப்படி மாண்டிசோரி கல்வி முறையில் இங்குள்ள குழந்தைகளுக்கு பயிற்சி வகுப்புகள் எடுக்கப் போகிறேன் என்று சொன்னதுமே அதற்காகத் தன்னால் இயன்ற நன்கொடையளித்து தன்னை ஊக்கப்படுத்திய ஸ்ரீ ராம சரண் அமைப்பின் பொருளாளர் ஜெயந்தியையும் நன்றியோடு நினைவுகூர்கிறார்.

’புரிகிறதோ இல்லையோ பாடத்தை மிக மிகக் கஷ்டப்பட்டு மனப்பாடம் செய்து ஒப்பிப்பதையும், ’எழுதுவதையுமே கற்குந்திறன் என்று பாவிக்கும் போக்கு பெரும் பாலான பெற்றோர்களுக்கு இருப்பது வருந்தத்தக்கது. இந்த மனப்போக்கினால் குழந்தைகளுக்கு ஏற்படும் அக, புற பாதிப்புகள் ஏராளம். போட்டிகள் நிறைந்த உலகிற்கு ஏற்றவனாக பிள்ளையை மாற்றுவதான பெருவிருப்பில் கல்வி என்ற பெயரில் பிள்ளைகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் அனேகம். இத்தகைய மனோபாவத்தினாலேயே பிள்ளைகள் பள்ளிகளில் பயமுறுத்தப்படுகிறார்கள்; மதிப்பழிக்கப் படுகிறார்கள். தன்னம் பிக்கையிலிருந்து தொலைதூரத்திற்குத் தள்ளப்படுகிறார்கள்’, என்கிறார் அஸ்வினி.

மிகவும் நுண்ணுணர்வோடு, மென்மனதோடு மனிதமன ஊசலாட்டங்களைப் படம்பிடித்து எழுதும் படைப்பாளிகளில் சிலர் கூட ‘எங்கள் காலத்திலெல்லாம் தோலை உரித்து உப்பு தடவாத குறையாக ஆசிரியர்கள் பிரம்பால் விளாசிப் படிக்கவைத்ததால் தான் நாங்கள் உருப்படியாக வளர்ந்தோம் என்று ஈவு இரக்கமற்று கருத்துரைப்பதைப் படிக்கும்போது மிகவும் வருத்தமாயிருக்கிறது. 

”இன்றும் பல பள்ளிகளில் குழந்தைகள் இத்தகைய கொடுமைகளையெல்லாம் அனுபவிப்பது தொடர்கிறது. ஆனால், மாண்டிசோரி கல்விமுறையில் குழந்தைகள் மதிக்கப்படவேண்டும் என்பதே எங்களுக்கு முதலில் சொல்லித்தரப்படுகிறது. மதிக்கப்படும் குழந்தைதான் தன்னம்பிக்கையோடு  வளரும். மாண்டிசோரி கல்வி முறையில் ஆசிரியர்கள் உண்மையாகவே குழந்தைகளின் நட்பினர். நாங்கள் கையில் குச்சியை வைத்துக்கொண்டு குழந்தையை அச்சுறுத்த மாட்டோம். அன்போடு குழந்தைக்கு விளையாட்டுகள் மூலமாகவும், வாழ்க்கைப் பயிற்சிகள் மூலமாகவும் கல்வி கற்பிப்போம். இந்த கல்வி முறையில் ‘ஹோம் வர்க்’ இல்லையே, மனப்பாடமோ ஒப்பித்தலோ இல்லையே – இப்படி விளையாட்டுபோல் எதையோ செய்துகொண்டிருந்தால் குழந்தை என்ன கற்றுக்கொள்ளும் என்று கவலையோடு கேட்கும் பெற்றோர்களுக்கு இந்தக் கல்விமுறையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து என்னால் முடிந்தவரை தெளிவேற்படுத்தி நம்பிக்கையூட்டுவேன். நாளடைவில் தங்கள் குழந்தைகளிடம் காணக்கிடைக்கும் மாற்றங்களை அவர்கள் கண்டுணர்வார்கள் என்பது என் திடமான நம்பிக்கை” என்று கூறும் அஸ்வினியின் குரலிலிருக்கும் உள்ளார்ந்த உறுதி மாண்டிசோரி ஆசிரியையாக அவர் பணிபுரிந்தபோது பெற்ற நேரடி அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டது!

இரண்டு இரண்டரை வயதிலிருந்தே பொருட்களைக் கையாண்டு அவற்றின் வடிவங்களை அறிந்துகொள்ளும் குழந்தைகள் ஏழாவது எட்டாவது படிக்கும்போது ஜியோமிதி வடிவங்கள், கணிதத் தேற்றங்கள் போன்றவற்றை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். ஏனெனில் மழலையராக இருக்கும்போது பார்க்கும் தொட்டுணரும் வடிவங்கள் அவர்களுடைய மனங்களில் தங்கிவிடும். எனவே, அவை அந்நியமாகத் தோன்றாது. புலனார்ந்த செயல்பாடுகள், குழந்தைகளுடைய அறிவாற்றலை செயல்திறனை வளர்க்கக்கூடியவை. என்று மாண்டிசோரி கல்விமுறையின் நற்பயன்களை அடுக்கிக்கொண்டே போகும் அஸ்வினிக்குப் போதுமான நிதியுதவி கிடைத்தால் அவர் வசிக்கும் பகுதியின் சுற்றுவட்டாரங் களிலுள்ள குழந்தைகள் பலர் நன்மையடைவார்கள் என்பது உறுதி!

மாண்டிசோரி கல்வி உபகரணங்களின் தொகுதி _ கணிதம், மொழி கற்றல், புலனார்ந்த செயல்பாடுகளைக் கற்றல் போன்றவற்றுக்கான கல்வி உபகரணங்கள் வாங்குவதற்கு குறைந்தபட்சம் ஒன்றரை லட்சம் ரூபாய் தேவைப்படும். குழந்தைகள் அமர மாண்டிசோரி கற்றல் முறைக்குரிய சிறிய சிறிய பாய்கள் தேவை. தரமான கதைப் புத்தகங்கள் – குழந்தைகளுக்கானவை – பிற புத்தகங்கள், இந்த உபகரணங்களை வைக்க அடுக்குகள்…. போதிய நிதியுதவி கிடைத்தால் மாடியிலிருக்கும் திறந்தவெளியில் மேலே ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் கூரை போடலாம். அல்லது, இன்னும் ஓரிரு அறைகள் கட்டலாம்…. எனக்கு ஊதியம் என்று எதுவும் எடுத்துக்கொள்ள மாட்டேன். ஆனால், நிதியுதவி கிடைத்தால் நிறைய குழந்தைகளின் மனங்களை என்னால் மலரச்செய்ய முடியும்; அவர்களுக்கு கற்றல் ஒரு சுமையல்ல என்று புரியவைக்க முடியும், என்று ஆர்வத்தோடு கூறுகிறார் அஸ்வினி.

குழந்தைகளின் மகத்துவத்தையும், மாண்டிசோரி கல்வியின் மகத்துவத்தையும் உணர்ந்தவர்கள் ஆசிரியை அஸ்வினிக்குத் தங்களால் இயன்ற உதவியைச் செய்ய முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

 

மாண்டிசோரி கல்வித் திட்டத்தில் குழந்தைகளுக்கு ஒரு சுய ஆளுமை, சுதந்திர உணர்வு வரவாகும். நல்ல பழக்கவழக்கங்கள், ஒழுங்கமைவு கூடிய நடத்தை, பொருட்களை அதனதன் இடத்தில் வைத்தல், வாயை மூடிக்கொண்டு தும்முதல், எப்பொழுதும் சுத்தமாக இருத்தல், தோழமையோடு பழகுதல், போன்ற பல நற்குணங்கள் இந்தக் கல்வித்திட்டத்தின் மூலம் குழந்தைகளிடம் இயல்பாகவே உள்ளார்ந்து இடம்பெற்றுவிடுகின்றன. இந்தக் கல்வியில் கத்திரிக்கோல், கத்தி முதலியவற்றைக்கூட குழந்தைகள் நேர்த்தியாகக் கையாளகாய்களை வெட்டவும், காகிதத்தைக் கத்தரிக்கவும் அன்னபிற ஆக்கபூர்வமான வேலைகளைச் செய்யவும்) கற்றுத்தரப்படுகிறது. எது வினியோகிக்கப்பட்டாலும் ஆலாய்ப் பறக்காமல், ஒருவரையொருவர் மோதித்தள்ளி பறித்துக்கொள்ள முயலாமல் பொறுமையாய் தங்கள் முறை வருவதற்குக் காத்துக்கொண்டிருக்கும் பொறுமையும், பக்குவமும், பகிர்ந்துண்ணலும், ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளலும் இயல்பாகவே குழதைகளிடம் இடம்பெற்று விடுகின்றன”, 

 

குழந்தைகள் ஐந்து வயது நிறைவதற்குள் பெறுகின்ற அனுபவங்கள் அவர்களுடைய வாழ்நாளுக்கும் அவர்களிடத்தில் தாக்கம் செலுத்துவதாக உளவியலாளர்கள் கூறுகிறார்கள். எனவே, இந்த வயதுக் குழந்தைகளை நாம் மிகவும் கவனத்துடன் நடத்தவேண்டியது மிகவும் அவசியம். ஆனால், நிறைய பள்ளிகளில் சிறுநீர் கழித்தல், மலங்கழித்தல் என்பன போன்ற இயற்கை உபாதைகளுக்குக் கூட குழந்தைகளை குற்றவாளிகளாக உணரச்செய்யும் அவலப்போக்கைப் பரவலாகப் பார்க்க முடிகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு குழந்தை தன்னையும் மீறி வகுப்பிலேயே சிறுநீர் கழித்துவிட்டால் உடனே அதன் தலையில் நறுக்கென்று குட்டுவது, முதுகில் பேயறை அறைவது, “வெட்கமில்லே உனக்கு, சனியனேஎன்று ஆங்காரமாக வசைபாடுவது இவையெல்லாம் அந்தக் குழந்தையை மிகவும் கடுமையாக உளவியல்ரீதியாய் பாதிக்கும். தேவையான கல்வி உபகரணங்கள் இல்லாத நிலை ஒரு குறைபாடு என்பது உண்மை. ஆனால், அதை விட முக்கியம் இந்த மழலைச் செல்வங்களின் பொறுப்பாளர்களாக உள்ள பெற்றோர்கள், பெரியவர்கள், பள்ளி ஆசிரியைகள், ஆயாக்கள் குழந்தைகளை அலட்சியமாகவோ, முரட்டுத்தனமாகவோ, மதிப்பழிப் பதாகவோ நடத்தாமலிருக்கவேண்டும். இதற்கான sensitization programmes, விழிப்புணர்வுப் பயிற்சிகள், இயக்கங்கள் தொடர்ந்த ரீதியில் துறைசார்ந்தவர்களிடமும், பொதுமக்கள் மத்தியிலும் நடத்தப்பட வேண்டும். குழந்தைகள் நம்மை அண்டியிருப்பவர்கள், அவர்களை நாம் எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம் என்ற மனோபாவம் பெரியவர்களிடம் இருக்கலாகாது. அன்பின் காரணமாகவே தன் மகனுக்கு சூடு போடும் தாயையும் பார்க்க முடிகிறது. இந்தப் பிள்ளைகளினால் தான் நமக்கு வேலை என்ற உண்மையை உள்வாங்கிக் கொள்ளாமல் அவர்களைத் தொந்தரவாகப் பார்க்கும் ஊழியர்களையும் பார்க்க முடிகிறது. ஒரே நாளில் நாம் விரும்பும் புரிதலை எல்லோரிடமும் கொண்டுவர முடியாது. ஆனால், அதற்காகத் தொடர்ந்து பாடுபட்டுக்கொண்டேயிருக்க வேண்டும்.

Series Navigationகுருட்ஷேத்திரம் 11 (பாரதப் போருக்கு வித்திட்ட பாஞ்சாலியின் சபதம்)கதிர் அரிவாள்    
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *