அஞ்சலிக்குறிப்பு: எழுத்தாளர் நந்தினிசேவியர் விடைபெற்றார் !

author
0 minutes, 6 seconds Read
This entry is part 16 of 19 in the series 19 செப்டம்பர் 2021

 

 

 

  இறுதிவரையில் முகநூலில் வலம் வந்தவர்

                                                                            முருகபூபதி

 “ Sino pharm 2nd dose . தடுப்பூசி  கடுப்பேத்தி படுக்கையில் வீழ்த்திவிட்டது. எதுபற்றியும் சிந்திக்கவோ எழுதவோ முடியவில்லை. மீண்டு எழுவேன். வருவேன். எழுதுவேன். இனிப்போதும். எனக்கே சலிக்குது. எழுத இன்னும் பலது உண்டு.  “  

மேற்குறிப்பிட்ட வரிகள்,   எமது எழுத்தாளர் நண்பர் நந்தினி சேவியர், ( செப்டெம்பர்  16 ஆம் திகதி )   மறைவதற்கு முன்னர் எழுதி முகநூலில்  பதிவேற்றியவை !

என்னிடம் இந்த முகநூல் கணக்கு இல்லை.  இந்த வரிகளை சிட்னியிலிருந்து எழுத்தாளர் கானா. பிரபா எனக்கு அனுப்பும்போது, நானும் மதிய உறக்கத்திலிருந்தேன்.

அண்மைக்கால தொடர் மெய்நிகர் சந்திப்புகளினால், நடுச்சாமம் கடந்து உறங்கச்செல்லும் வகையில் எனது வாழ்க்கை முறையையும் இந்த கொரோனோ காலம் மாற்றிவிட்டது.

மாலைவேளையில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தபோது, எனது துயிலை மெல்பன் இலக்கிய நண்பர் நடேசன் தொலைபேசி ஊடாக களைத்துவிட்டு,  நண்பர் நந்தினி சேவியர் மறைந்த செய்தியைச்  சொன்னார்.

அதன்பின்னர்  உறங்கத்தான் முடியுமா..?  “ மீளாத்துயரத்தை தந்துவிட்டு மீளாத்துயில் கொண்டுவிட்டார்  “  என்று மரண அறிவித்தல்தான் எழுதமுடியுமா..?

இது கொரோனோ காலம் மட்டுமல்ல, அஞ்சலிக்குறிப்பு காலமும் ஆகும் என்று கானா. பிரபாவுக்கு பதில் எழுதிவிட்டு, பிரான்ஸ் நேரத்தை பார்க்கின்றேன்.

நந்தினி சேவியரின் நீண்டகாலத்  தோழர், பிரான்ஸில் வதியும் எழுத்தாளர்  வி. ரி. இளங்கோவனை  துயில் எழுப்பி, துயரத்தை பகிர்ந்தபோது, அவருக்கும் நந்தினி சேவியர் மறைந்த செய்தி அதுவரையில் தெரியாது.

இறுதிவரையில் முகநூலில் குறிப்புகள் எழுதிக்கொண்டிருந்த நந்தினிசேவியர்,  “ இனிப்போதும், எனக்கே சலிக்குது  “ என்று அவர் எழுதும்போதே தான் விடைபெறும் நேரத்தை கணித்துவிட்டார்போலும்.  “ என்றார் இளங்கோவனும் !

வடபுலத்தில் தென்மராட்சிப் பிரதேசத்தில் மட்டுவிலில் 1949 ஆம் ஆண்டு பிறந்திருக்கும் நந்தினிசேவியர் ,  மட்டுவில் கல்வயல் சைவப்பிரகாச வித்தியாசாலை, மட்டுவில் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை, சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி, வதிரி திருஇருதயக் கல்லூரி ஆகியவற்றில் கற்றவர். பின்னர் யாழ் . தொழில்நுட்பக் கல்லூரியிலும் பயின்றார்.

இந்தத்தகவல்களை  தமிழ் விக்கிபீடியா தெரிவிக்கின்றது. எனக்கு முன்பே இலக்கியப்பிரதிகள் எழுதத்தொடங்கிய நந்தினிசேவியரை நான் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்வதற்கு முன்னர் ஒரு சில சந்தர்ப்பங்களில்தான் யாழ்ப்பாணத்தில் சந்தித்திருகின்றேன்.

இலங்கையில் முற்போக்கு எழுத்தாளர்கள்  மாஸ்கோ சார்பு – சீன சார்பு என்று பிளவுபட்டு  அணிவகுத்து நின்ற காலப்பகுதியில்தான் நந்தினி சேவியர் எனக்கு 1975 இற்குப்பின்னர் அறிமுகமானார்.

நான் மல்லிகையில், அதன் ஆசிரியர் டொமினிக்ஜீவாவினால்  அறிமுகமாகியிருந்தமையாலும் , நானும் மாஸ்கோ சார்புதான் என்று வெளியே  அறியப்பட்டமையாலும் , நந்தினிசேவியர் என்னுடன் சற்று ஓதுங்கித்தான் உறவாடினார்.

எனினும், எமக்கிடையே என்றைக்கும் வாதப்பிரதிவாதங்கள் நிகழவில்லை.  இவரும் வி.ரி.இளங்கோவன், நல்லை அமிழ்தன், தேவி பரமலிங்கம், டானியல் அன்ரனி, பொன்ராசா ஆகிய எழுத்தாளர்களும் ஈழத்தின் மூத்த எழுத்தாளர்கள் கே. டானியல், என்.கே. ரகுநாதன், பீக்கிங் சின்னத்தம்பி, ஆகியோருடன் நெருக்கமான உறவைப்பேணியவர்கள். இவர்கள் அனைவரும் சீன சார்பு அணியில் தோழர் சண்முகதாசனுடன் நின்றவர்கள்.

நான் வெளிப்பிரதேச எழுத்தாளன் என்றவகையில் என்னுடன் நல்லுறவை  தொடர்ந்தும் பேணியவர்கள். 

நந்தினி சிறந்த படைப்பாளி.  அவரது  சிறுகதைகள், நாவல்கள், குறுநாவல்கள், கட்டுரைகளில் அவரது எழுத்தாளுமைப்பண்புகள் வெளிப்பட்டிருக்கும்.

ஈழநாடு பத்திரிகையின் 10 ஆவது ஆண்டு நிறைவையொட்டி அகில இலங்கை ரீதியில் நடத்தப்பட்ட நாவல் போட்டியில் ‘மேகங்கள்’ என்ற அவரது  நாவல் இரண்டாம் பரிசு பெற்றது.

பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கம் 50  ஆவது ஆண்டு நிறைவையொட்டி நடத்திய நாவல் போட்டியில் ஒரு வயதுபோன மனிதரின் வாரிசுகள் என்ற குறுநாவல் தங்கப் பதக்கத்தை முதற்பரிசாகப் பெற்றது.

1993 இல் வெளிவந்த சிறந்த சிறுகதைத்தொகுப்புக்கான முதற்பரிசை விபவி சுதந்திர இலக்கிய அமைப்பு அவரது  அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்  என்ற நூலுக்கு வழங்கியது.

உள்ளுராட்சித் திணைக்களம் நடத்திய ‘தமிழின்பக் கண்காட்சி’ யில் ‘அயல்கிராமத்தைச் சேர்ந்தவர்கள்’ நூலுக்கு முதற்பரிசு வழங்கியது.

அவரது இலக்கியப் பங்களிப்புக்காக 2011 இல் கிழக்கு மாகாண முதலமைச்சர் விருதும்  கிடைத்தது.

கொழும்பில் 2015 இல்  கொடகே வாழ்நாள் சாதனையாளர் விருதும் பெற்றார்.  

2012 இல் வடமாகாண சிறந்த நூல் பரிசுத்திட்டத்தில் , அவரது நெல்லிமரப்பள்ளிக்கூடம் (சிறுகதைத் தொகுதி) தெரிவாகியது.

தேசிய சாகித்திய விருதையும் அதே ஆண்டு  நெல்லிமரப் பள்ளிக்கூடம்  பெற்றது.

கிழக்குமாகாண சிறந்த நூல் பரிசு (பல்துறை) – நந்தினி சேவியர் படைப்புகள்

கலாபூஷணம் விருது – 2013

பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்ச் சங்கம் 2014-2015 ஆம் ஆண்டுக்கான “சங்கச் சான்றோர் விருது” வழங்கிக் கெளரவித்தது.

இந்தத் தகவல்களை நாம் தமிழ் விக்கிபீடியாவில் தெரிந்துகொள்ள முடியும். 

நந்தினி சேவியர், தன்னை மாத்திரம் முன்னிலைப்படுத்தாமல்,  சக எழுத்தாளர்களின் சிறுகதைகளையும் தொடர்ந்து படித்து, அவற்றிலிருந்து நூறுக்கும் மேற்பட்ட சிறந்த சிறுகதைகளை தனது தேர்ந்த வாசிப்பு அனுபவத்தின் ஊடாக அடையாளம் காண்பித்தவர். இந்தப்பணி அவரது கடும் உழைப்புக்கு சிறந்த சான்று.

அவரது தெரிவில் மாறுபட்ட அபிப்பிராயம் எவருக்கும் நேர்ந்தாலும் கூட, சிறந்த சிறுகதைகளை அடையாளம் காண்பித்த அவரது  பண்பு முன்மாதிரியானது.

இந்தப்பணியை தமிழ்நாட்டு எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனும் மேற்கொண்டுள்ளார். சமகாலத்திலும் எதிர்காலத்திலும் சிறந்த சிறுகதைகளை தொகுத்து படிக்கவிரும்பும் வாசகர்கள், பல்கலைக்கழகங்களில் சிறுகதை இலக்கியம் தொடர்பாக விரிவுரையாற்றும் பேராசிரியர்கள், மற்றும் MPhil ஆய்வுகளில் ஈடுபடும் மாணவர்களுக்கும் உசாத்துணையாக  நந்தினி சேவியரின் இந்த கடும் உழைப்பு திகழும்.

எனவே,  நந்தினிசேவியர் ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் தனது தீவிர வாசிப்பு அனுபவத்தின் ஊடாக நற்பணியை செய்துவிட்டே விடைபெற்றிருக்கிறார் என்ற செய்தியையும் இச்சந்தர்ப்பத்தில் தெரிவிக்கவேண்டியுள்ளது.

இந்தப்பணி அஞ்சலோட்டத்திற்கு ஒப்பானது. அவருக்குப்பின்னர் இதனை யாராவது ஒருவரோ, அல்லது சிலரோ தொடரவேண்டும்.

நந்தினிசேவியரின் வாழ்க்கை சவால்களை எதிர்நோக்கியிருந்தது.  இறுதியாக அவரை 2010 ஆம் ஆண்டு  இறுதியில் திருகோணமலையில் நான் சந்தித்தபோது,  மிகுந்த  மனவலியுடன் காணப்பட்டார்.  ஒரு சம்பவத்தில் அவரது மகன் காவலர்களினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட துயரத்தில் மூழ்கியிருந்தார்.

என்னைக்கண்டதும்  அணைத்து கதறி அழுத காட்சி இன்னமும் எனது  மனக்கண்ணை விட்டு அகலவில்லை. அவரைத்தேற்றுவதற்கு வார்த்தைகளை தேடிய அந்தக்கணங்கள் மிகவும் கொடியது.

எனினும்,  அவர் காவலர்கள் மீதிருந்த கடும்கோபத்தில் தனது மனைவியை  காவல் துறை சார்ந்த பணியிலிருந்து விலகச்செய்ததையிட்டு கண்டித்தேன்.

தனக்கு ஒரு வேலை தேடித்தருமாறு கேட்டார்.  அவரிடம் செல்வதற்கு எனக்கு வழிகாட்டியாக வந்திருந்த நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பின்                                ( Voluntary Organisation for Vulnerable Community Development ) தலைவர் திரு. கணேஷிடம்,  “ இவருக்கு உங்கள் அமைப்பில் ஒரு வேலை தரமுடியுமா..?  “ எனக்கேட்டேன்.

 “ வவுனியா கிளைக்கு இவர் வந்தால், தரமுடியும்  “ என்றார் கணேஷ். அதன்பிரகாரம் சிறிது காலம் வவுனியா சென்று அங்கே குறிப்பிட்ட தன்னார்வத்  தொண்டு நிறுவனத்தில் நந்தினி சேவியர் பணியாற்றினார்.

எனினும்,  அங்கும் அவர் நீடித்திருக்கவில்லை என்பதை பின்னர் அறிந்தேன்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மறைந்த எழுத்தாளர்கள் மல்லிகை ஜீவா, மா. பாலசிங்கம் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் மெய்நிகர் ஊடாக நடந்தபோது நந்தினிசேவியரும் இணைந்து கருத்துக்களை தெரிவித்தார்.

 “ இனி… என்னைப்பற்றியும் மெய்நிகரில் பேசுங்கள்  “ என்று சொல்லாமல் சொல்லிவிட்டு விடைபெற்றுவிட்டார்.

 

நந்தினி சேவியரின் திடீர் மறைவு,  குறிப்பிட்ட தடுப்பூசியை கேள்விக்குட்படுத்துகிறதா..?

 

அல்லது, அவருக்கு ஏற்கனவே இருந்த உபாதைகளின் எதிரொலியா..? 

 

தடுப்பூசி பெற்ற பலர் மறைந்துள்ளனர்.

பல பெயர்களில் தடுப்பூசிகள் வருகின்றன.

இதற்குள்ளும் ஒருவகை பொருளாதார சுரண்டல் இழையோடுவது போலத்தெரிகிறது.

 

பூகோள அரசியலுக்குள் இந்த வைரஸ் சிக்கியிருக்கிறது.

ஒவ்வொருவரும் தமக்குத்தாமே நோய் எதிர்ப்புச்சக்தியை பெருக்கிக்கொள்ளவேண்டிய தேவை வந்துள்ளது. 

 

நந்தினி சேவியரின் எழுத்துக்கள், தொடர்ந்து பேசப்படும்.

அவரது மறைவால் ஆழ்ந்த துயரத்திலிருக்கும் அவரது மனைவி, மற்றும் மகள் உட்பட நந்தினிசேவியரை நேசித்த இலக்கியவாதிகளின் சோகத்தில் பங்கேற்று இந்த அஞ்சலிக்குறிப்புகளை எழுதுகின்றேன்.

——-

அன்னாருக்கான அஞ்சலிக் கூட்டம்  20. 09.2021  திங்களன்று இலங்கை நேரம் காலை 11.00 மணிக்கு ZOOM   வழியாக நடைபெறும்.

 

தலைமை பேராசிரியர் சி.மௌனகுரு.

—0— 

 

Series Navigationஒரு கதை ஒரு கருத்து – கு.ப.ராவின் கனகாம்பரம்நெருடல்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *