அழகர்சாமி சக்திவேல்
ஆற்றங்கரை அதனில் முன்னம் ஒருநாள் – எனை
அழைத்துத் தனி இடத்தில் பேசியதெல்லாம்
தூற்றி நகர் முரசு சாற்றுவேன் என்றே
சொல்லி வருவையடி தங்கமே தங்கம்!
கண்ணன் மனநிலையை தங்கமே தங்கம்
கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்
(சுப்பிரமணிய பாரதியார்)
இந்த உலகில் உள்ள ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு சில தனிச்சிறப்புக்கள் இருக்கின்றன. இந்து மதத்திற்கும், அப்படிப்பட்ட சில தனிச்சிறப்புக்கள் உண்டு. மற்ற மதங்களில் இல்லாத, ஆனால் இந்து மதத்தில் மட்டும் இருக்கும் சில சிறப்புக்களில், குறிப்பட்ட ஒரு தனிச்சிறப்புத்தான், நாம் இங்கே, இந்தக் கட்டுரையில் பேசப்போகும், மதுரபாவம் என்ற பக்திமார்க்க நிலை ஆகும். மதுரபாவம் என்ற இந்த வகை பக்திமார்க்க நிலை, இந்து மதம் போற்றும் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானதுதான். என்றாலும், நமது இந்தக் கட்டுரை, ஆண்களே, பெண்களாய்த் தங்களை பாவித்துக் கொண்டு, அந்தக் கடவுளுக்கே மனைவியாகத் தங்களைக் கற்பனை செய்துகொண்டு, அல்லது கடவுளின் காதலியாக, தங்களைக் கற்பனை செய்துகொண்டு, பக்தித் தொண்டு செய்த, இப்போதும் செய்கின்ற, மதுரபாவ ஆண்கள் குறித்து, சற்றே விரிவாய் ஆராய முற்படுகிறது.
நாம், மதுரை மீனாட்சியம்மன் கோவில் குறித்து, நன்கு அறிவோம். அங்கே நடக்கும் சொக்கநாதர்-மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் குறித்தும், நம்மில் பலருக்குத் தெரிந்து இருக்கும். அம்மை பார்வதிக்கும், அப்பன் சிவனுக்கும் நடக்கும் அந்தத் திருக்கல்யாணத்தில், அய்யன், அம்மைக்குத் தாலி கட்டிய பின்னர், தம்பதியர் சமேதரராய், ஒருவருக்கொருவர், மாலை மாற்றிக் கொள்ளும் ஒரு சம்பவம் அரங்கேறும். மேற்படி சம்பவத்தின் போது, சொக்கனாதரைப் பிரதிநிதித்து, ஒரு ஆண் பூசாரி நிற்பார். அந்த ஆண் பூசாரியின் எதிரில், மீனாட்சி அம்மனைப் பிரதிநிதித்து, இன்னொரு ஆண் பூசாரி நிற்பார். பரமன் சொக்கநாதரை மனதில் நினைத்துக் கொண்டு, ஒரு ஆண் பூசாரி இன்னொரு ஆண் பூசாரிக்கு மாலை இடுவார். எதிரில் நிற்கும் அந்த இன்னொரு பூசாரி, மீனாட்சி அம்மனை நினைத்துக்கொண்டு, சொக்கநாதரின் பாவத்தில் நிற்கும், ஆண் பூசாரிக்கு மாலை இடுவார். பின்னர், இரு ஆண் பூசாரிகளும், தம்மை, சொக்கநாதர்-மீனாட்சி தம்பதி சமேதரராக பாவித்து, அக்கினியை வலம் வருவர். கடவுளின் வாழ்க்கைத் துணையாக, தங்களையே பாவித்துக் கொள்ளும் அந்த இரு ஆண் பூசாரிகளும், மதுரபாவத்தின் எடுத்துக்காட்டா என்று கேட்டால், நாம் ஒரு வகையில் ஆம் என்று பதில் சொல்லலாம். எனினும், மதுரபாவம் குறித்து, சைவமதம், வைஷ்ணவ மதத்திற்கு ஈடாக, அவ்வளவு பேசவில்லை என்பதே உண்மை ஆதலால், மதுரபாவம் என்ற பக்திநிலை குறித்து, வைஷ்ணவ மதம், என்ன சொல்கிறது என்பது பற்றியே, இனிப் பார்ப்போம்.
சைதன்ய மகாப்பிரபு தோற்றுவித்த, வைஷ்ணவ பக்திமார்க்கத்தின் பெரும்பிரிவுகளில் ஒன்றான கவுடிய வைஷ்ணவம், மனிதனின் பக்தியை, வைதீக பக்தி, ராகானுக பக்தி என்று இரண்டாகப் பிரிக்கிறது. வேதங்களையும், அது சார்ந்த நூல்களையும் தெரிந்துகொண்டு, அதன்வழியே நடந்தொழுகி, இறைவனை அடைய நினைக்கும் பக்தியையே, வைதீக பக்தி என்று நாம் அழைக்கிறோம். மாறாய், மனிதருக்குள் இருக்கும் இயல்பான அன்பின் அடிப்படையில், ஒரு வித ஆனந்தப் பரவச நிலையோடு, கடவுளை, மிக மிக நெருக்கமான நிலையில் நாடும் பக்தியே, ராகானுக பக்தி என்று வைஷ்ணவத்தால் அழைக்கப்படுகிறது. இன்னும் கொஞ்சம் நாம் சொல்ல வேண்டும் என்றால், கண்ணன் பிறந்த பிருந்தாவனத்தில், கண்ணனோடு மிகவும் நெருங்கிப் பழகி வாழப் பெரும்பேறு பெற்ற ஜீவாத்மாக்கள் போன்று, நம்மை மாற்றிக்கொண்டு, பரந்தாமனுக்குப் பணிவிடை செய்து, அன்பு கலந்த வாழ்க்கையின் வழி, நாம் கடவுளை அடைதலையே, ராகானுக பக்தி என்று வைஷ்ணவ நெறி அழைக்கிறது.. மேற்படி ராகானுக பக்தியை, ஐந்து உபபிரிவுகளாக, மறுபடியும் பிரிக்கிறது, கவுடிய வைஷ்ணவம்.
- சாந்த பாவம் – புறவிசைகளை ஒதுக்கி, மனதை ஒருமுகப்படுத்தி, முனிவர்கள் போன்ற சாந்த நிலையில் கடவுளை அடைய முயற்சி செய்யும் நிலை, சாந்த பாவம் என்று அழைக்கப்படுகிறது. ஐந்து பாவங்களுக்கும் அடிப்படை பாவமாய், இந்த சாந்த பாவம் இருக்கிறது.
- தாஸ்ய பாவம் – இறைவனுக்குப் பணிவிடை செய்யும் தொண்டனாய், தன்னை மாற்றிக்கொண்டு, கடவுளுக்கு ஒரு அடிமையாய் மாறிப் போகும் மனப்பக்குவமே, தாஸ்ய பாவம் என்று அழைக்கப்படுகிறது.
- சாக்கிய பாவம் – கடவுளின் உற்ற தோழனாக நட்புப் பாராட்டி, சிநேக பாவத்தில் மகிழ்ந்து, இறைவனுக்கு நெருக்கம் ஆகும் நிலையே, சாக்கிய பாவம் என்று அழைக்கப்படுகிறது.
- வாத்சல்ய பாவம் – கண்ணனை வளர்க்கும் பெரும்பேறு பெற்ற, தாய் யசோதை போன்ற தாய் உள்ளத்துடனோ, அல்லது நந்தகோபர் போன்ற தந்தை உள்ளத்துடனோ, இறைவனை, தம் பிள்ளையாய் நினைத்து, அன்பொழுக, பக்திமார்க்கத்தில் ஈடுபடுதல், வாத்சல்ய பாவம் என்று அழைக்கபடுகிறது.
- மதுர பாவம் – மதுர பாவத்தின் நிலைகள் இரண்டு. அதில் ஒன்று, கண்ணனைக் காதலித்து வாழ்ந்த கோபியர் பெண்களின், காதல் நிலைக்குள் சென்று பரவசமாதல். இன்னொன்று, கண்ணனின் அன்பு மனைவியான, ராதை ஆகவே, தன்னை பாவித்து, இறைவனை நாடும் நிலை.
மேற்சொன்ன ஐந்து பக்திமார்க்க பாவங்களில், ஐந்தாவதாக சொல்லப்படும், மதுரபாவமே, தலைசிறந்த பக்திப்பெருநிலை என, கவுடிய வைஷ்ணவம், நமக்குச் சொல்லி நிற்கிறது. இந்த ஐந்து பக்திமார்க்க பாவங்களிலும் தன்னை நிலைநிறுத்திகொண்டு, அந்த பாவத்தில், தன்னை முற்றிலும் மெய்மறந்து, கண்ணன் பாடல்கள் புனைந்தவர்கள், இந்தியாவில் பலர் இருக்கிறார்கள். இருந்தாலும், “கண்ணன் என் சற்குரு” என, சாந்த பாவத்திலும், “கண்ணன் என் ஆண்டான்” என தாஸ்ய பாவத்திலும், “கண்ணன் என் தோழன்” என சாக்கிய பாவத்திலும், “கண்ணன் என் குழந்தை” என வாத்சல்ய பாவத்திலும், “கண்ணன் என் காதலன்”, “கண்ணன் என் காந்தன்” என மதுரபாவத்திலும் பாடல்கள் பாடிய ஒரே தமிழ்ப்புலவர், எனக்குத் தெரிந்து, சுப்பிரமணிய பாரதியே என்று, இங்கே நான் சொல்ல விழைகிறேன். அதிலும், மதுரபாவத்தில் அவர் இயற்றிய கண்ணன் கவிதைகள், தேனினும் இனிமையானது என்று நான் சொல்லி, உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை.
மதுரபாவத்தில் பாடல்கள் எழுதியோர் பலர் இருக்கலாம். ஆனால், மதுர பாவத்தில், பாடல்களும் பாடி, மதுர பாவத்திலேயே, வாழ்ந்தும் காட்டிய பெண்கள் என்று நாம், சொல்ல நினைத்தால், ஒன்று பக்த மீராவையும், இன்னொன்று சூடிக்கொடுத்த நாச்சியார் ஆன ஆண்டாளையும், நாம் உடனே சொல்லிவிடலாம்.
உள்ளே யுருகி நைவேனை
உளளோ இலளோ வென்னாத
கொள்ளை கொள்ளிக் குறும்பனைக்
கோவர்த் தனனைக் கண்டக்கால்
கொள்ளும் பயனொன் றில்லாத
கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட் டவன்மார்வில்
எறிந்தென் அழலை தீர்வேனே
“கண்ணனுக்காய், என் உள்ளமும் உடலும் சேர்ந்து, உருகி உருகி நைந்து போய்க்கொண்டிருக்கிறது அப்படி நொந்து போன என்னை, இவள் உயிரோடுதான் இருக்கின்றாளா, அல்லது செத்துப் போய்விட்டாளோ என்ற ஒரு கேள்வியும் கேட்காத, என்னைக் கொள்ளை கொண்ட அந்தக் குறும்பனை, கோவர்த்தன மலையைத் தூக்கிய அந்தக் கோவர்த்தனனைக் கண்டீர்கள் என்றால், அவனை அடையாமல், எந்தப் பயனற்றும் கிடக்கின்ற என் கொங்கைகளை, வேரோடு பிடுங்கி அள்ளிப் பறித்து, அவன் மார்பில் எறிந்து, காமத்தினால் வந்த எனது வெப்ப நோய் தீர்வேனே”. இதுதான், மேலே சொன்ன ஆண்டாள் பாட்டிற்கான விளக்கம் ஆகும். இந்தப்பாட்டில்தான், என்னே ஒரு மதுரபாவம் தொக்கி நிற்கின்றது!. ஆண்டாளைப் போலவும், பக்த மீராவைப் போலவும், மதுரபாவத்தில் வாழ்ந்த ஆண்கள் பலரும், இந்தியாவில் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர். பரமஹம்சரின் மதுரபாவ அனுபவத்திற்குள் நாம் நுழையுமுன், மதுரபாவத்தில் திளைத்து நிற்க, நாம் என்ன செய்யவேண்டும் என, கவ்டில்ய வைஷ்ணவம் சொல்லும் விளக்கம் பற்றி, நாம் இன்னும் கொஞ்சம் பார்ப்போம்.
கிருஷ்ணனின் காதலில் திளைத்தவர்கள், ஸ்வாக்கியா, பராக்கியா என இரண்டு நிலைகளில் பிரிக்கப்படுகிறார்கள். கடவுளின் காதலில் நிலைத்து, அவரைத் திருமணம் செய்துகொண்ட ராதா, ருக்மணி போன்ற பெண்கள், ஸ்வாக்கியா என்றும், கடவுளின் காதலிலிலேயே நிலைத்து நின்றாலும், வேறொருவரை மணந்து கொண்டோர், அல்லது கண்ணனின் காதலோடும், கன்னித்தன்மையுடனும் வாழும் கோபியர் போன்றோர் பராக்கியா என்றும் பிரிக்கப்படுகிறார்கள். இந்த ஸ்வாக்கியா என்ற பத்தினி நிலை அல்லது பராக்கியா என்ற கோபியர் களவு நிலை, இதில் ஏதாவது ஒரு நிலையைத் தேர்ந்தெடுத்து, அந்தப் பெண் போல வாழும், ஒரு ஆணின், உன்னதமான மதுரபாவ நிலையையே, சைதன்ய மகாப்பிரபுவும், அவரது சீடரான ரூப கோஸ்வாமியின் ‘உஜ்வல நீலமணியும்’, நமக்குச் சொல்லவரும் பக்தி நிலைகள் ஆகும்.
கிருஷ்ணனைக் காதலிக்கும், ஒரு பெண்ணின் மதுரபாவ நிலையில் திளைத்து நிற்கும் ஒரு ஆண் என்னவெல்லாம் செய்வான்? இந்த இடத்தில் தான், நாம், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் வாழ்க்கை பற்றி, சற்று விரிவாகத் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறோம். ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், வங்கதேசத்தில் பிறந்த ஒரு மகான். ஆன்மீகத்தில் பல நிலைகளை, அனுபவித்து, வாழ்ந்து மறைந்த அந்த மகானுக்கு, உலகெங்கும் பக்தர்கள் இருக்கிறார்கள். உலகம் போற்றும் ஆன்மீகச் சிந்தனைச் சிற்பியான, சுவாமி விவேகானந்தரின் குருவானவர்தான் நம் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர். 1861-இல், பைரவி பிராமணி என்ற ஒரு பெண்குருவிடம், தாந்திரிகங்களைக் கற்றுத் தேர்ந்த பரமஹம்சர், அந்தப் பெண்மணியையே, தாயாக பாவித்து, அவர் மூலமாகவே, கவுடிய வைஷ்ணவத்தையும், சைதன்ய மகாப்பிரபுவையும், அறிந்து கொண்டார் பரமஹம்சர். 1864-இல், கவுடிய வைஷ்ணவம் சொன்ன, வாத்சல்ய பாவத்தை, முதன்முதலில், அனுபவிக்கத் தொடங்கினார் பரமஹம்சர். மதுர பாவத்தின் முந்தைய நிலையான, இந்த வைஷ்ணவ மார்க்கத்தில், ஸ்ரீ இராமபிரானையே, தனது மகனாக பாவிக்கும் ஒரு தாயாக வாழ்ந்து காட்டினார், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர். இராமனின் குழந்தை வடிவச் சிலையை தனது முன்னர் வைத்து, ஜடாதாரி என்ற வைஷ்ணவ குருவின் துணையோடு, இராமன் என்ற குழந்தையை, சீராட்டிப் பாராட்டி மகிழ்ந்தார் பரமஹம்சர்.
அதன்பின்னர், வாத்சல்ய பாவத்துக்கு, அடுத்த நிலையான மதுரபாவத்தில் திளைத்தார் பரமஹம்சர். பரமஹம்சரின் தீவிர பக்தரான மதுர் என்ற ஓர் மூத்தவர், பரமஹம்சருக்கு, பெண் அலங்காரம் செய்துவிடுவார். மதுரபாவத்தில், பரமஹம்சர் இருந்த அந்தக் காலங்களில், தினம் தினம், பரமஹம்சருக்கு, அழகான சேலை அணிவித்து, ரவிக்கை அணிவித்து, பரமஹம்சருக்கென ஒரு பிரத்யேக முடி அலங்காரம், சடை அலங்காரம் செய்து, நிறையத் தங்க ஆபரணங்களைப் பூட்டி, சாட்சாத் ஒரு பெண்ணாகவே, பரமஹம்சரை மாற்றி விடுவார், பரமஹம்சரின் பக்தரான மதுர். அப்படிப் பெண் வேடமிட்ட பரமஹம்சரின், நடை உடை பாவனைகளும், ஒரு பெண்ணாகவே மாறிப் போகும். பரமஹம்சரின் பெண்பாவ மாற்றத்தைக் கவனித்துக் கொண்டிருந்த சில பார்வையாளர்கள், ஆண் மதுருக்கும், பரமஹம்சருக்கும் உள்ள உறவில் சந்தேகம் கொண்டு, குசுகுசுக்காமல் இல்லை. ஆனால், அந்தச் சந்தேகங்களை ஒரு பொருட்டாக மதியாது, அவைகளைப் புறந்தள்ளி, பக்தர் மதுர், பரமஹம்சருக்கு, தொடர்ந்து பெண் வேடம் இட்டுக்கொண்டு இருந்தார்.
கவுடிய வைஷ்ணவம் சொன்ன மதுரபாவத்தின் இரண்டாம் நிலையான, பிருந்தாவனத்தின் விரஜகோபியராய் வாழ ஆரம்பித்தார் பரமஹம்சர். “கிருஷ்ணா, கிருஷ்ணா” என்ற அவரது பெண்மையின் ஏக்கம், நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போனது. இடது காலை முதலில் தூக்கிவைக்கும், பெண்ணின் நடை, பெண் போன்ற கனிவான பேச்சு, பெண் போலவே, கிருஸ்ணனுக்கு, நந்தவனத்தில் பூப்பறித்து, மாலை கோர்த்து வழிபடுதல், போன்ற பல பெண்மை நிலைகளில் மாறிப்போன பரமஹம்சர், பிருந்தாவனத்தில், கோபியர், கண்ணனுக்குச் செய்யும் அத்தனை பணிவிடைகளையும், ஒருவித பெண்மைக் காதலோடு, தான் இருந்த இடத்திலேயே, நாள்தோறும் செய்துகொண்டு வந்தார். அவ்வப்போது, பரமஹம்சர், தனது ஆதரவாளரும், பக்தர் மதுரின் அத்தையும் ஆன, ராணி ராசமணி வீட்டுக்குப் போவதுண்டு. அங்கேயே தங்குவதும் உண்டு. அங்கிருந்த பெண்களோடு, தானும் ஒரு பெண்ணாய், பாசத்துடன் பேசிப்பழகுவதும் உண்டு. பரமஹம்சரின் பெண்மை கண்டு, அங்கிருந்த பெண்கள், ஒருபோதும், வித்தியாசம் பாராட்டாமல், அவரை, ஓர் தேவியின் வடிவமாகவே பார்த்தனர். ‘ஒரு ஆணுக்கு அருகில் இருக்கிறோம்’ என்ற கூச்சமோ, தயக்கமோ, அந்தப் பெண்களிடம், ஒருபோதும் எழுந்ததில்லை.
ராணி ராசமணியின் மருமகனான பக்தர் மதுருக்குப் மகள்கள் உண்டு. அந்த மகள்களைக் கல்யாணம் செய்துகொண்ட மருமகன்கள், அடிக்கடி, ராணி ராசமணியின் இல்லத்துக்கு, வருவதும் உண்டு. அதுபோன்ற நேரங்களில், அந்தப் பெண்களுக்கு, பரமஹம்சரே அலங்காரம் செய்து, அணிகலன்கள் இட்டு, தங்களது கணவர்களிடம், அன்புடன் எப்படி நடந்து கொள்ளவேண்டும், எந்த வகையில், அவர்தம் கணவரைத் திருப்திப்படுத்த வேண்டும் என்றெல்லாம், அன்பொழுக, அந்தப்பெண்களின் ஒரு சகியைப் போலப் பேசுவார் பரமஹம்சர். “என்னுள் இருந்த பெண்மை மற்றும் அந்தப் பெண்களின் முன்னால், நான் அவர்களுக்கு ஒரு உற்ற தோழியாக நடந்து கொண்ட விதம், இவை எல்லாம், அந்தப் பெண்களுக்கு, ஒரு போதும், கூச்சத்தையோ, தயக்கத்தையோ ஏற்படுத்தவில்லை” எனப் பரமஹம்சரே ஒருமுறை சொல்லி இருப்பதாக, ஒரு செய்தி நமக்குச் சொல்லுகிறது. ஆண், பெண் என்ற எந்தப் பாலினமும் சாராத ஒரு நிலையை, தான் மதுரபாவத்தில் அடைந்ததாக, பரமஹம்சர், மதுரபாவம் குறித்துக் குறிப்பிட்டு இருக்கிறார். ஆறு மாதங்கள் தொடர்ந்த இந்த ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின், மதுரபாவம் குறித்து, பிந்தைய நாளில், பல விமர்சனங்கள் எழாமல் இல்லை.
1995-இல், ஜெப்ரி கிருபால் என்பவர், “காளியின் குழந்தை – ராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கைக்குள்ளும், போதனைகளுக்குள்ளும் இருக்கும் மாய மற்றும் சிற்றின்ப உணர்வு” (Kali’s Child: The Mystical and the Erotic in the Life and Teachings of Ramakrishna) என்று ஒரு புத்தகம் எழுத, அந்தப் புத்தகம், சிகாகோ பல்கலைக்கழகத்தின் பதிப்பகத்தால், வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகத்திற்கு, அமெரிக்க மதஆராய்ச்சி கல்விக்கூடத்தின் (American Academy of Religions) உயரிய விருதும், ஜெப்ரி கிருபாலுக்குக் கொடுக்கப்பட்டது. மனவியல் ஆராய்ச்சியை, அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்ட அவரது புத்தகத்தில், “ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரின் உணர்வில், homo erotic என்ற ஒரு ஓர்பால் ஈர்ப்பு உணர்வும் இருக்கிறது” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதற்கான ஆதாரமாய், பல ஆதாரங்களை, ஜெப்ரி கிருபால், அந்த புத்தகத்தில், குறிப்பிட்டு இருந்தார். முக்கியமாய், மதுரபாவத்தில் வாழ்ந்த, ராமகிருஷ்ண பரமஹம்சருக்கும், பெண் வேடம் இட, உதவியாய் இருந்த மதுர் என்ற ஆணுக்கும், ஓரினச்சேர்க்கை உறவு இருந்தது என்று, அந்தப் புத்தகம் பேச, அதற்கு உடனே, பல்வேறு ஆன்மீக ஆராய்ச்சியாளர்களிடம் இருந்து, பலத்த எதிர்ப்பு கிளம்பியது. கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் நீடித்த அந்த வார்த்தைப் போரில், பல ஆன்மீக ஆராய்ச்சியாளர்கள், ஜெப்ரி கிருபால் கருத்துக்களை, எதிர்த்துப் பேசினாலும், ஜெப்ரி கிருபால், அதை மறுத்து எழுதிக்கொண்டே வந்தார் என்பது ஒரு வரலாற்றுச் செய்தி.
என்னைப் பொறுத்தவரை, நான், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் மீது, மிகுந்த மரியாதை உள்ளவன். அவர், ஆன்மீக வாழ்க்கை குறித்துப் பேசும் அளவிற்கு, எனக்குப் பரந்த அறிவு இல்லை. ஆனாலும், என்னிடம் ராமகிருஷ்ண பரமஹம்சர் வாழ்க்கை தவிர்த்த, மதுரபாவம் குறித்த, ஒரு பொதுவான கேள்வி உண்டு. ஒரு ஆண், விரஜ கோபியராக, தன்னை பாவித்துக்கொண்டு, இறைவனுக்குத் தொண்டு செய்தால், அதனை நாம், மதுரபாவம் என்று அழைக்கிறோம். அதைப்போலவே, ஒரு ஓரினச்சேர்க்கை ஆண், மதுரபாவத்தில் திளைத்து, இறைவனுக்குத் தொண்டு செய்ய நினைத்தால், அவன் எந்த நிலையில், தன்னை பாவித்துத் தொண்டு செய்யவேண்டும்? ஆணாகவா அல்லது பெண் ஆகவா?. முதலில், மதுரபாவத்தில் திளைக்க, ஒரு ஓரினச்சேர்க்கை ஆணுக்கோ அல்லது ஒரு லெஸ்பியன் பெண்ணுக்கோ உரிமை உண்டா? அப்படி ஓரினசேர்க்கை வாழ்க்கை வாழ்பவர்கள், கண்ணனை நினைத்து எழுதும் மதுரபாவப் பாடல்களுக்கு, இந்த உலகத்தில் முக்கியத்துவம் கிடைக்குமா? என்பதே, எனது அந்தக் கேள்வி.
இரண்டாவதாக ஒரு செய்தி. சைதன்ய மகாப்பிரபு குறித்தும், கவுடிய வைஷ்ணவத்தின் மதுரபாவம் குறித்தும், சிந்தனைச் சிற்பியும், உலகின் தலைசிறந்த ஆன்மீகவாதியான, விவேகானந்தரிடம், ஒரு முறை கேள்வி எழுப்பப்பட்டது. Swami Vivekananda’s Conversation and Dialogues (the Complete works, Vol. V) என்ற, சுவாமி விவேகானந்தரின் உரையாடல்கள் புத்தகம், மதுரபாவம் குறித்த கேள்விக்கு, சுவாமி விவேகானந்தர், கீழ்க்கண்டவாறு பதில் சொன்னதாக, நமக்குச் சில கருத்துக்களைக் குறிப்பிடுகிறது.
“ஸ்ரீ சைதன்ய மகாப்பிரபு, ஒரு முற்றும் துறந்த, பற்றற்ற பெரும் துறவி. பெண்கள் குறித்தோ, சிற்றின்பப் பசி குறித்தோ, அவர் சிறிதும் அறியாதவர். ஆனால், பிற்காலத்தில் வந்த வைஷ்ணவ ஆச்சாரியார்கள், சைதன்யருடைய வாழ்விலிருந்த உண்மையான துறவுநிலையை வற்புறுத்திப் போதிப்பதை விடுத்து, அவருடைய மதுர பாவக் கொள்கையையே, சாதாரண மக்களிடையே போதிப்பதில் தங்களது ஆர்வம் முழுவதையும் செலுத்தினார்கள். மதுரபாவம் என்ற அந்த உயர்ந்த கொள்கையை, அந்தத் தெய்வீக அன்பின் மகத்துவத்தை, சாதாரண மக்கள் புரிந்து கொண்டு, ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. ஆதலால் ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள சாமானிய சிற்றின்ப உறவாக, மதுரபாவத்தை நினைத்து இழிவடைந்தார்கள். அத்தகைய முயற்சியினால் என்ன விளையும் என்பதை அறிந்துகொள்ள வேண்டுமாயின் நம்முடைய தேசத்தின் இன்றைய நிலையைப் பாருங்கள். மதுரபாவ அன்பு மார்க்கத்தைப் பரவலாகப் போதித்ததால், நமது மக்கள், ஆண்மையை இழந்து பெண்தன்மை பீடித்த இனத்தவராகி விட்டார்கள். ஒரிஸ்ஸா மாகாணம் முழுவதும், வீரியமற்ற கோழைகள் வாழும் நாடாக மாறிவிட்டது. ராதா பிரேமையை, கடந்த நானூறு ஆண்டுகளாகப் பரப்பி வந்ததால், அதன் பின்னால் ஓடிச்சென்று, வங்காளம், தனது ஆண்மைத் தன்மையை அநேகமாக முற்றிலும் இழக்கும் நிலைக்கு வந்துவிட்டது. அழுவதிலும் ஓலமிடுவதிலும் தான், மக்கள் திறமை உள்ளவர்களாக இருக்கிறார்கள். அதுவே, அவர்களது தேசிய சுபாவமாகி விட்டது. நாட்டு மக்களின் கொள்கைகளுக்கும் கருத்துகளுக்கும் நிச்சயமான அறிகுறியான அவர்களது இலக்கியத்தைப் பாருங்கள். சென்ற நானூறு ஆண்டுகளில் வங்கமொழிக் கவிதைகளில், அழுகையும் ஓலமுமே மையக் கருத்தாக அமைந்துள்ளன. உண்மையான வீர உணர்ச்சியைத் தூண்டுகிற பாடல்களை அவை வழங்கவில்லை” என்பது, சுவாமி விவேகானந்தரின் கருத்துக்கள் ஆகும்.
ஆன்மீக நலனையும், தேசநலனையும், ஒருசேரப் பார்க்கும், சுவாமி விவேகானந்தரின் இந்த அருளுரையின்படி, ‘மதுரபாவக் கொள்கையால், வீரம் மலிந்துபோனது’ என்ற அவர் வார்த்தையில் சற்றே உண்மை இருக்கலாம் என்றாலும், வீரம் என்பது, என்னைப் பொறுத்தவரை, பாலினம் கடந்தது ஆகும். ஆண், பெண், மூன்றாம் பாலினம் என அனைத்துப் பாலினங்களிலும், வீரர்கள் இருக்கிறார்கள், என்பது உண்மை. அத்தோடு, காதல் செய்யும் ஆண்களிலும், பெண்களிலும், மூன்றாம் பாலினத்திலும், பலர், வீரர்களாக இருந்து இருக்கிறார்கள் என்பதையும் நாம் அறிவோம். அப்படிப் பார்க்கும்போது, வீரத்திற்கும், மதுரபாவத்திற்கும் சம்பந்தம் இல்லை, என்பதே எனது கருத்து. தவிர, கடவுளுக்கும், தனக்கும் உள்ள நெருக்கத்தை, மிக மிக இறுக்கமாக்கும் மதுரபாவ மனோநிலை, தேசநலன் கடந்த, ஒரு சுயநலம் என்பதும், அது இறைவனை விரைவில் அடைய நினைக்கும் ஒரு பேராசை என்பதால், விவேகானந்தர் மேலே குறிப்பிடும் வீரம், மதுரபாவத்திற்கு முக்கியம் இல்லை என்பதும் எனது தாழ்மையான கருத்து.
மதுரபாவம், சைதன்ய மகாப்பிரபுவால் உருவானது என்பது வரலாறு என்றாலும், 1966-இல், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா என்ற, இஸ்கான் (ISKCON) இயக்கம் தொடங்கப்பட்ட பின்னர்தான், அது வேறொரு நிலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது என்பதும், இன்னொரு வரலாற்றுச் செய்தி ஆகும். 1965-இல், கவுடிய வைஷ்ணவத்தின் வழிவந்த, பக்த வேதாந்த சுவாமி பிரபுபாதா, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் காலடியெடுத்து வைத்தபோது, அங்கே, ஏற்கனவே, மேற்கத்திய ஹிப்பி கலாச்சாரம், பரவலாக வேரூன்றி இருந்தது. மதங்கள் விதித்த கட்டுப்பாடுகளில் இருந்தும், சமூகம் போதித்த, காமம், ஒழுக்கம் போன்ற கட்டுப்பாடுகளில் இருந்தும், தம்மை விடுவித்து, தமக்குப் பிடித்த, ஆனந்த வாழ்க்கையில் வாழ்வதே, மேற்கத்திய ஹிப்பி கலாச்சாரத்தின் அடிப்படை நோக்கமாக இருந்தது. கண்ணனை அடைய, கட்டுப்பாடுகள் அற்ற, ஆனந்த மதுரபாவ நிலை குறித்து, பக்த வேதாந்த சுவாமி பிரபுபாதா, அமெரிக்காவின் ஹிப்பிக்கள் முன்னர் பேசிய போது, அவரது வைஷ்ணவக் கருத்துக்களில் மயங்கி, எண்ணற்ற ஹிப்பிக்கள், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தில், தங்களை இணைத்துக் கொண்டனர். அதன்பின்னர், அந்த பக்தர்கள் யாவரையும் ஒன்றாக்கி, இஸ்கான் (ISKCON) என்ற இயக்கத்தை உருவாக்கினார், சுவாமி பிரபுபாதா.
சுவாமி பிரபுபாதாவின் முதல் மூன்று சீடர்கள் என அறியப்படுபவர்களில், ஒருவர் ஹோவர்ட் வீலர் ஆவார். இன்னொருவர் கீத் ஹாம் ஆவார். ஹோவர்ட் வீலரும், கீத் ஹாமும் ஓரினச்சேர்க்கை காதலர்கள் ஆவார்கள். இவர்கள் இருவருக்கும், கிருஷ்ண பரமாத்மாவின் லீலைகளும், அவரை அடையும் ஆனந்த நிலையான மதுரபாவமும், மிகவும் பிடித்துப்போக, இருவருமே, சுவாமி பிரபுபாதாவின் சீடர்கள் ஆகி, வைஷ்ணவ மார்க்கம் தழுவினர். சுவாமி பிரபுபாதாவைப் பொறுத்தவரை, கடவுளின் முன், ஆண் பெண் என்ற பேதம் இல்லை என்ற அடிப்படையில், அவர் ஓரினச்சேர்க்கையை, ஆரம்பத்தில் மறுத்துப்பேசவில்லை. நியூயார்க்கில் இருந்த ஹிப்பிகள், சுவாமி பிரபுபாதாவின் சீடர்கள் ஆனதற்கு, வைஷ்ணவத்தின் கொள்கைகளே அடிப்படைக் காரணம் என்ற போதும், ஓரினச்சேர்க்கை குறித்த, சுவாமி பிரபுபாதாவின் ஆதரவுப் பேச்சும் இன்னொரு காரணம் ஆக இருக்கலாம் என்பது, என்பது தாழ்மையான கருத்து. இஸ்கான் தோன்றிய பல நாட்கள் கழித்து, பிறிதொரு உரையில், சுவாமி பிரபுபாதா, ஓரினச்சேர்க்கை குறித்து, எதிர்மறையாகப் பேசிய போதும், இன்றளவும், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தில், ஓரினச்சேர்க்கை எதிர்க்கப்படுவதில்லை என்பதே உண்மை. இன்னும், சொல்லப்போனால், 2001-இல், சுவாமி பிரபுபாதாவின் சீடரான, அமரா தாஸ் வில்ஹெம் என்பவரால், GALVA என்ற, மகிழ்வன் மற்றும் மகிழ்வி வைஷ்ணவ இயக்கம் (Gay and lesbian Vaishnava Association) ஒன்று தொடங்கப்பட்டு, இன்றளவும் அது தனது மூன்றாம் பாலினம் தழுவிய கடவுள் தொண்டுகளைச் செய்துகொண்டு வருகிறது என்பதும் உண்மை. இந்த ஓரினச்சேர்க்கை வைஷ்ணவ இயக்கத்தின் பெரும்பான்மையான உறுப்பினர்கள், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தில், இயங்கிக்கொண்டு இருப்பவர்கள் ஆவார்கள். மதுரபாவத்திற்கு, பாலினம் ஒரு பொருட்டே அல்ல என்பது, இவர்களது கொள்கை ஆகும்.
ஓரினச்சேர்க்கை பாவமானது என்று சொல்லப்பட்ட அந்தக் காலங்களில், பெண்தன்மை மிக்க ஆண்கள், சமூகத்திடம் இருந்து, தங்களை மறைத்துக்கொள்ள, தாம் சார்ந்த மதங்களையே தேர்ந்தெடுத்து, அம்மதம் சார்ந்த இறைவனுக்குத் தொண்டு செய்யும் பணியில் தம்மை அர்ப்பணித்துகொண்டு, வாழ்ந்து இருக்கிறார்கள் என்பதில் ஓர் உண்மை இருக்கிறது. இந்த மதுரபாவ நிலையில் வாழ்ந்த, பெண் தன்மையுடைய ஆன்மீக ஆண்கள், கிறித்துவ மதம், இந்து மதம் உள்ளிட்ட எல்லா மதங்களிலுமே இருக்கிறார்கள் என்ற உண்மையை, அவ்வப்போது வரும் உலகச்செய்திகள் மூலம், நாம் அறிந்தும் இருக்கிறோம். கோவில்களில் வாழ்ந்த தேவதாசிகளின் மதுரபாவ நிலை போலவே, அதே கோவில்களில் இறைப்பணி செய்து வாழ்ந்த, பெண்தன்மை மிக்க பூசாரிகளின் மதுரபாவ நிலை குறித்து, வரலாறு, அதிகம் பேசுவது இல்லை.
எனினும், மதுரபாவம் என்ற ஓர் மகோன்னதமான ஒரு ஆன்மீக நிலையை, பதினைந்தாம் நூற்றாண்டிலேயே எடுத்துரைத்த, சைதன்ய மகாப்பிரபுவிற்க்கும், கடவுளுக்கு மிக நெருக்கமான நிலையில், நம்மைக் கொண்டு செல்லும் மதுரபாவத்தினை, போற்றி நிற்கும், கவுடிய வைஷ்ணவ சமயத்திற்கும், வேறு எந்த மதத்திலும் இல்லாத, கடவுளையே காதலிக்கும் ராகானுக பக்தியை, தன்னுள் உள்ளடக்கிய இந்து மதத்திற்கும், எனது அனந்த கோடி வணக்கங்கள்.
அழகர்சாமி சக்திவேல்
- உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை பன்னாட்டு கருத்தரங்கு அமர்வுகள்
- பாரதியின் மனிதநேயம்
- ஸ்பேஸ் X ஏவிய விண்சிமிழ் முதன்முதல் நான்கு சுற்றுலா பொதுநபரை ஏற்றிச் சென்று பூமியை மூன்று நாட்கள் சுற்றி மீண்டது.
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 254 ஆம் இதழ்
- கிண்டா
- ப.தனஞ்ஜெயன் கவிதைகள்
- குருட்ஷேத்திரம் 16 (தருமனால் ஏற்பட்ட தலைகுனிவு)
- குருட்ஷேத்திரம் 15 (சாத்வீக மனம் கொண்ட பாண்டு)
- கருங்கோட்டு எருமை
- பாரதியை நினைவுகூர்வோம் – பாரதியாரின் மூன்று கவிதைகளும் டாக்டர்.கே.எஸ். சுப்பிரமணியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பும்
- தற்கால சிறுகதை, புதினங்களில் காலத்தின் சுவடுகள்
- மதுர பாவம்
- ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- கவியின் இருப்பும் இன்மையும்
- ஒரு கதை ஒரு கருத்து – கு.ப.ராவின் கனகாம்பரம்
- அஞ்சலிக்குறிப்பு: எழுத்தாளர் நந்தினிசேவியர் விடைபெற்றார் !
- நெருடல்
- குருட்ஷேத்திரம் 13 (திருதராஷ்டிரன் என்ற யானைக்கு அங்குசமாக இருந்த காந்தாரி)
- குருட்ஷேத்திரம் 14 (யாதவ வம்சமும் கிருஷ்ணனும் துர்வாசரின் சாபத்தால் அழிந்தார்கள்)