குருட்ஷேத்திரம் 20 (சத்தியர்களை கருவருத்த ரெளத்ர ரிஷி)

This entry is part 13 of 19 in the series 3 அக்டோபர் 2021

 

வாழ்க்கை தூண்டில் போடுகிறது இரைக்கு ஆசைப்பட்டு மாட்டிய மீன்கள்தான் நாமெல்லோரும். கரையை முயங்கிச் செல்லும் அலைகளுக்கு ஒருநாளும் காமம் சலிப்பதேயில்லை. பரிதியை மேகங்கள் மறைக்கலாம் ஆனால் சிறையெடுக்க முடியுமா? ஏழைகளின் சுவர்க்கக் கனவுகள் நிறைவேறாத கனாவாகத்தான் போய்க்கொண்டு இருக்கிறது. வருடம் முழுவதும் வசந்தகாலமாக இருக்க முடியாதுதான் ஆனாலும் வேர்களுக்கு ஒருமுறை கூடவா நீர்வார்க்க கூடாது. மனித உடல் வெறும் கூடுதான் எது எங்கிருந்து அவனை ஆட்டுவிக்கிறது. நதி என்றால் இருகரைகள் இருக்க வேண்டுமல்லவா? உள்ளம் பக்குவப்பட்டால் உன் வீட்டுப் கொல்லைப்புறத்தில் ஓடும் நதிகூட உனக்கு கங்கையாகத்தான் தெரியும். நிலம் பார்த்து பெய்யும் மழை எந்த தேசம் என்று பார்த்தா பெய்கிறது. பறவைகள் வழிதவறியதாய் நாம் கேள்விப்பட்டதுண்டா? பறவைகள் பருவகாலங்களை எப்படி உணர்ந்துகொள்கிறது. மத நம்பிக்கை எதனை அடித்தளமாகக் கொண்டு தோன்றியது. மரணத்தைப் பற்றிய அச்சமே மதம் தோன்ற காரணமாக இருந்திருக்கிறது. மரணம் என்ற ஒன்றை மனித இனம் சந்திக்கவில்லையென்றால் உலகில் கோயில்கள், தேவாலயங்களும், மசூதிகளும் இருந்திருக்காது.

 

மனிதர்களை ரட்சிப்பதற்காகவே பிறப்பெடுத்து இருக்கிறேன் என்று சொல்லும் குருமார்களெல்லாம் பூமியில் மரணவியாபாரிகளாகத்தான் நடமாடுகின்றனர். கர்மம் எப்படி இப்பூமியில் தொழில்படுகிறது என்பது கடவுளுக்கே கூட தெரியாத ரகசியமாக இருக்கலாம். மரணம் விடுதலை தரவில்லையென்றால் வாழ்க்கை சிறையாகத்தான் இருக்கும். காமத்திலிருந்து விடுதலை பெறவில்லையென்றால் பிறவி சுழற்சியிலிருந்து விடுபட முடியாது. பிறந்து வளர்ந்து இறந்து பிறந்து வளர்ந்து இறந்து என போய்க் கொண்டே இருக்க வேண்டியது தான். கனிகள் சுவையாக இருந்தால் அதற்கு வேர்தான் காரணம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. நீ காப்பாற்றபட வேண்டுமென்றால் அதலபாதாளத்தில் நீ விழுந்து கொண்டிருந்தாலும் உன்னைக் காப்பாற்ற மரக்கிளை உன் கைகளில் தட்டுப்படும். விதியை மாற்ற நினைப்பதும் நாய் வாலை நிமிர்த்துவதும் ஒன்றுதான். துன்பம் தான் இன்பத்தைத் தேடி ஓட வைக்கிறது. காமமும் செல்வமும் திருப்தி தராதவை. இந்த இரண்டினால் தான் இவ்வுலகில் பாபகாரியங்கள் நடைபெறுகின்றன. ஆதாமின் சந்ததிகளான நாம் பாவச்சேற்றில்தான் மூழ்கிக் கிடக்கின்றோம். குலப்பிறப்பே உயர்வு தாழ்வினை நிர்ணயிக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

 

பிருகு வம்ச ஜமத்க்னி முனிவரின் மகன்களில் இளையவர் பரசுராமர். தந்தையிடம் வேத வித்தையையும், அஸ்திரக் கலையையும் பயின்றார். காமத்தால் பாபம் நிகழ்கிறது, கோபத்தால் பழி வந்து சேருகிறது. அடிப்பவர்களிடம் சீறவேண்டுமேத் தவிர நஞ்சை உமிழக்கூடாது என்று பாம்புக்கு பாடம் நடத்த முடியாது. விதைத்தது ஒன்று முளைத்தது ஒன்றாக இருந்தால் சிக்கல் தானே. உடையவர்களிடமிருந்து பொருளைக் கவர்ந்து செல்வது கொலை பாதகத்துக்குச் சமமானது. பெரும்பாலும் தேசத்தை ஆள்பவர்கள்கூட சில்லரைத்தனமாகத்தான் நடந்து கொள்கிறார்கள். சத்ரியனின் வீரத்துக்கு நான் மதிப்பளிக்கும்போது, நீ பிராமணனின் துறவறத்துக்கு பங்கம் ஏற்படாதபடி நடந்து கொள்ளவேண்டும் இல்லையா. உடை மட்டுமல்ல மனமும் வெள்ளையாக இருப்பவர்களால் உலக நடப்புகளை ஒத்துக் கொள்ள முடியாது. மனிதர்களின் ஈனச் செயல்களை அவர்களால் ஜீரணித்துக் கொள்ள முடியாது. பரசுராமர் இந்த ரகம். தன்னைவிடவும் சத்தியம் பெரிதென மதிப்பவர். அவர் கையில் சிவனிடமிருந்து பெற்ற பரசு என்ற ஆயுதம் இருந்தது அதனால் தான் அவர் பரசுராமர்.

 

ஏகய தேசத்து அரசன் கார்த்தவீரியன் ராவணனையே தன் போர்த்திறமையால் சிறையெடுத்தவன், படைகளுடன் அவன் காட்டிற்கு விஜயம் செய்தபோது தனது பர்ணசாலையில் ஆயிரம் பேர்களுக்கும் ஜமத்க்னி முனிவர் விருந்து உபசரித்தார். கார்த்தவீரியன் உபசரித்ததற்கு நன்றிபாராட்டிவிட்டுச் செல்லாமல் இவரால் எப்படி முடிந்தது என நரித்தனமாக யோசித்தான். அப்போது கேட்டதைக் கொடுக்கும் காமதேனு ஜமத்க்னி முனவரிடம் இருப்பதை அறிந்து கொண்டான். இரவோடு இரவாக கார்த்தவீரியன் காமதேனுவை அபகரித்துச் சென்றான். ஒரு மாமன்னன் நாட்டை பறித்துக் கொள்ளலாம் முனிவரிடம் அவர் தவஆற்றலால் கிடைத்த ஒன்றை போய் அபகரித்துச் செல்வது வெட்கக்கேடானது அல்லவா. எந்த செயலுக்கும் பின்விளைவுகள் இல்லாமல் போகாது. வினை பலன் கொடுக்கும் வரை வித்து வடிவில் இருக்கும். மனம் தன்னை பேரழகன் என்கிறது என் மனைவி ரதி என்கிறது உலகில் எது உயர்ந்ததோ அது தன் உடைமையாக இருக்க வேண்டும் என்கிறது. வேண்டுமானால் யாசகம் கேட்கலாம் அதற்காக திருடனைப் போல் கவர்ந்து சென்றால் குளத்தில் கல்லெறிந்துவிட்டால் அலைகள் எழும்பாமல் இருக்குமா?

 

சீற்றம் கொண்ட பரசுராமர் படையெடுத்துப் போய் கார்த்தவீரியனைக் கொன்று காமதேனுவை மீட்டு வந்தார். நியதி என்கிற விஷயம் ஆளாளுக்கு வேறுபடுகிறது. உங்கள் கோணத்திலிருந்து என்னால் உலகைப் பார்க்க முடியாது அது போல. ஒரு வினைக்கு எதிர்வினை ஆற்றிக் கொண்டே போனால் அது எங்கு சென்று முடியும். வேதியன் கையில் ஆயுதம் ஏந்தலாமா என வருத்தப்பட்ட ஜமத்க்னி பரசுராமரை ஓராண்டு சேத்ராடனம் செய்யப் பணித்தார். விதித்தது நடப்பதற்கு ஏதுவாகத்தான் காலம் காய் நகர்த்துகிறது. பரசுராமர் இமயபர்வதத்தில் இருக்கையில் கார்த்தவீரியன் வாரிசுகள் ஜமத்க்னி முனிவரைக் கொன்று தாய் ரேணுகாதேவியை தாக்கி குற்றுயிராக விட்டுச் சென்று பரசுராமர் கார்த்தவீரியனைக் கொன்றதற்கு பழிதீர்த்துக் கொண்டனர். பரசுராமர் வரும்வரை உயிரைப் பிடித்து வைத்திருந்த ரேணுகாதேவி அவர் மடியில் உயிர்விட்டார். மனத்திற்கு மரணஅடி விழும்போது அது கடவுளை நோக்கித் திரும்புகிறது. உலகை வெல்லும் வீரம் பரசுராமருக்கு உண்டு என்று கடவுள் அறிந்திருந்தார். நடப்பவைகளுக்கு என்ன மூலகாரணம் என்று தான் நாம் பார்க்க வேண்டும். சதுரங்க காய்கள் நகர்த்தப்பட்டு விட்டது. மைதானத்தில் பந்து இப்போது பரசுராமர் கையில் வந்தது,

 

சிவனை நோக்கி தவம் செய்து பரசுராமர் பரசு என்ற ஆயுதத்தைப் பெற்றார். தனது தாயின் உடலில் இருபத்தொரு இடத்தில் அம்பு குத்தியதை நினைத்துக் கொண்டார். இந்த பரசுவினால் சூரிய குல சத்திரியர்களின் இருபத்தொரு பேரைக் கொன்றழிப்பேன் என சபதம் கொண்டார். கோபமும், காமமும் தன்னுள்ளே இருந்து வேறொரு விசை செயல்பட அனுமதி அளித்து விடுகிறது. கோபாக்னியில் எதிரிகள் மட்டுமல்ல அதற்கு நாமும் இரையாகிறோம். அதன் பிறகு அவர் கையிலிருந்த பரசு இரத்தத்தைத்தான் ருசித்தது. வேதியனுக்கு உதிரத்தின் நெடி சாதாரணமாகிப் போனது. மனித உயிர் புழுவைப் போல துடித்தது கண்டு பரசுராமர் உள்ளம் உவகை கொண்டது. இருபத்தொரு சத்தியர்களின் இரத்தத்தை ஐந்து மடுக்குகளில் சேகரித்து சமந்த மஞ்சகம் என்ற இடத்தில் வைத்தார்.

 

இரத்த ருசி கண்ட அந்த இடத்தில் தான் பின்னாளில் குருட்சேத்திர யுத்தம் நடந்தது. பரசுராமர் சத்ரியர்களை வென்று உலகத்தை தன் காலடியில் கொண்டுவந்தார், அதை காசியபருக்கு தானம் செய்தார். அஸ்திர வித்தை முழுவதையும் வறுமையால் திண்டாடிக் கொண்டிருந்த துரோணருக்கு வழங்கினார். பரசுராமருக்குப் பயந்து சத்திரியர்கள் பதுங்கினார்கள். உலகை தானம் பெற்ற காசியபர் பரசுராமரிடம் ஒரு வரம் வேண்டினார். தானம் கொடுத்த உலகில் நீங்கள் பிரவேசிப்பது நியதியல்ல எனவே நீங்கள் வெளியேற வேண்டும் என்றார். பரசுராமர் அதை ஏற்றுக்கொண்டார். பூமியற்ற பரசுராமர் தம் பரசை வீசி எறிந்தார். அது விழுந்த இடமே இன்றைய கேரளதேசம். மரணமற்ற சிரஞ்சீவியான பரசுராமர் மகேந்திர பர்வதத்தில் இன்றும் வாழ்கிறார். பூமியில் அறத்தை நிலைநிறுத்த முயன்றவர்களுக்கெல்லாம் மரணமே இல்லை அல்லவா?

Series Navigationஎழுத மறந்த குறிப்புகள்: “ மாலன்  “  என்னும் பன்முக ஆளுமை !குருட்ஷேத்திரம் 19 (பாஞ்சாலியின் பிறவிக்கு மூலகாரணமான துரோணர்)
author

ப மதியழகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *