குரு அரவிந்தன்
இம்முறையும் கனடா தேர்தல் முடிவுகள் ஜட்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்குச் சாதகமாக வந்திருக்கின்றன. இப்படித்தான் வரும் என்று முன்பு எழுதிய கட்டுரையிலும் குறிப்பிட்டது போலவே, நடந்திருக்கின்றது. 170 ஆசனங்கள் இருந்தால்தான் இங்கு தனியாக ஆட்சி அமைக்க முடியும். லிபரல் கட்சிக்கு 156 ஆசனங்களே கிடைத்திருக்கின்றன. ஏனைய எதிர்கட்சிகள் கொள்கையின் அடிப்படையில் ஒன்றுசேர வாய்ப்பில்லை என்பதால், லிபரல் கட்சிதான் இம்முறையும் கனடாவில் சிறுபான்மை ஆட்சி அமைக்க இருக்கின்றது.
இச்சந்தர்ப்பத்தில் நடந்த இந்தத் தேர்தல் பற்றி குறிப்பிடலாம் என நினைக்கின்றேன். செப்ரெம்பர் மாதம் 15 ஆம் திகதி 6மணி வரை முற்கூட்டியே வாக்களிக்கும் வசதிகளை தேர்தல் கனடா ஏற்பாடு செய்திருந்தது. அதனால் முற்கூட்டியே வாக்களித்தவர் தொகை 5.8 மில்லியனாக இருந்தது. இதைவிட சுமார் ஒரு மில்லியன் மக்கள் தபால் மூலமும் வாக்களித்திருக்கிறார்கள். 2019 ஆண்டு நடந்த தேர்தலைவிட இம்முறை அதிகமாக வாக்களித்திருந்தனர். இம்முறை சுமார் 37 மில்லியன் வாக்காளரின் பெயர்கள் பட்டியலில் பதிவாகி இருந்தது. கோவிட் – 19 காரணமாக கடைசிவரை காத்திருப்பதை தவிர்ப்பதற்காக முற்கூட்டியே அதிக மக்கள் வாக்களித்திருந்தனர். இறுதி நாளான 20 ஆம் திகதி மாலை 9:30 வரை வாக்குச் சாவடிகள் திறந்திருந்தன. எந்தக் கட்சியாக இருந்தாலும், தனியாக அரசமைப்பதற்குக் குறைந்தது 170 ஆசனங்கள் தேவை. முதலாவது தேர்தல் முடிவு சுமார் 7:10 மணியளவில் வெளிவந்தபோது லிபரல் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தபால் வாக்குகள் எண்ணப்பட்டால், முடிவுகளில் சிலசமயம் மாற்றங்கள் ஏற்படலாம்.
கனடா தேர்தல் முடிவுகள்: 2021
2021 – 2019 – 2015
லிபரல் 158 157 184
கொன்சவேட்டிவ் 119 121 99
குபெக்குவா 34 32 10
என்.டி.பி 25 24 44
கிறீன் 2 3 1
மக்கள் கட்சி – 1 –
20 ஆம் திகதி சுமார் 3 மணியளவில் எனக்கொரு தொலைபேசி அழைப்பு வந்திருந்தது. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட செய்தியாக இருந்தது. ‘லிபரல் கட்சி முன்னணியில் நிற்கின்றது. எங்களுக்கு இந்தத் தேர்தலில் மாற்றம் தேவை, மறந்திடாமல் உடனே சென்று வாக்களியுங்கள்’ என்று ஒரு பெண்ணின் குரல் கேட்டது. முகநூலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் முகத்திற்குக் கறுப்பு நிறம் பூசி, தலையில் தலைப்பா அணிந்து ஒரு அரேபியர் போலப் படத்தைப் போட்டு அவரை ஒரு கோமாளி என்றும் சிலர் கேலி செய்திருந்தார்கள். பிரதமர் ‘பெண்களை மதிக்கத் தெரியாதவர்’ என்றும் பரவலாகச் செய்திகளை ஒரு கூட்டத்தினர் அனுப்பிக் கொண்டிருந்தார்கள். எப்பொழுதுமே தவறான நோக்கத்தோடு போராடக் கிளம்புபவர்கள், தங்கள் இயலாமையை வெளிக்காட்டப் பெண்களையும், குழந்தைகளையும்தான் பலிக்கடாவாக்குவார்கள். இது எங்கள் கடந்தகால வாழ்க்கையில் மட்டுமல்ல, சரித்திரமும் எமக்குச் சொல்லித்தந்த பாடம்.
பெரும்பான்மை இல்லாமல் இதுவரை ஆட்சி செய்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆட்சியைக் கலைத்துவிட்டு புதிய அரசை அமைக்க விரும்பினார். மக்களின் வரவேற்பு இருக்கும் என்றுதான் அவர் எதிர்பார்த்தார். ஆனால் கோவிட்-19 ஐ சாட்டாக வைத்து தடுப்பூசி போட்டுக் கொள்ள விரும்பாத சிலர் எதிப்பு ஊர்வலங்கள் நடத்த முற்பட்டனர். ‘இப்போது தேர்தல் தேவையா?’ என்றும் குரல் எழுப்பினர். சிலர் வன்முறைகளிலும் ஈடுபடத் தொடங்கினர். இப்படியான வன்முறையாளர்களிடம் ஆட்சிப் பொறுப்பு சென்றால் என்ன நடக்கும் என்பதை வாக்காளர் நன்கு உணர்ந்திருந்தார்கள்.
எத்தனையோ நாடுகள் தடுப்பூசி கிடைக்வில்லையே என்று ஏங்கிக் கொண்டிருக்க கனடாவில் ஒரு கூட்டத்தினர் தடுப்பூசி போடமாட்டோம் என்று எதிப்பு ஊர்வலங்கள் நடத்தினார்கள். எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல, இதை எதிர்கட்சியினர் தேர்தல் பிரச்சாரமாக மாற்ற முயற்சிகள் செய்தும் பார்த்தார்கள். பிரதமர் ட்ரூடோவை மட்டுமல்ல, திருமதி. ட்ரூடோவையும் தகாத வார்த்தைகளால் பொதுவெளியில் திட்டுவதற்கும் தொடங்கியிருந்தனர். ஒரு சந்தர்ப்பத்தில் தங்கள் இயலாமையை வெளிக்காட்டும் நோக்த்தோடு, பிரிட்டிஷ் கொலம்பியாவில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ட்ரூடோவின் மனைவியை ‘மோசமான பெண்’ என ஒருவர் திட்டிய போது, ட்ரூடோ மிகவும் கோபமாக அவருக்குப் பதிலளித்தார். என்னதான் இருந்தாலும், பெண்களைத் தரக்குறைவாகப் பேசினால், கனடியப் பெண்களால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாது. இதனால் பெண்ணிய வாதிகள் கட்சி பேதம் பார்க்காது வெகுண்டெழுந்தனர். பெண்களின் எதிர்பைச் சந்தித்தால் என்ன நடக்கும் என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் வெளிப்டையாகக் காட்டியிருக்கின்றன. கோவிட் – 19 பேரிடர் ஒரு முக்கிய காரணமாக தேர்தல் பிரச்சாரத்தில் இடம் பெற்றாலும், கதைகளில் வரும் திடீர் திருப்பத்தைப் போல, கனடா தேர்தலில் பெண்கள்தான் திருப்பத்தை ஏற்படுத்தி இருந்தார்கள்.
தடுப்பூசி என்பது உலகநாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டதொன்று. கோவிட் – 19 பரவாமல் இருப்பதற்குத் தற்போது கிடைத்திருக்கும் பாதுகாப்பு இந்தத் தடுப்பூசி ஒன்றுதான். இங்கே எல்லா வசதிகள் இருந்தும், தடுப்பூசிகள் இலவசமாகக் கிடைத்தும் அதைப் போட்டுக் கொள்ள மறுப்பவர்களை என்ன செய்யலாம்? சமூகத்தோடு ஒன்றிப் போகமறுக்கும் இவர்கள் எப்படியானவர்கள் என்பதை அந்தந்தச் சமூகங்கள் புரிந்து கொண்டிருந்தன. இப்படியான ஒரு இடர்காலத்தில் இதைவிடப் பெரிதாக எந்தவொரு அரசும் சாதித்துவிடப் போவதில்லை என்பதை மக்கள் புரிந்து கொண்டதால், தேர்தல் முடிவுகளும் அதற்கேற்ப அமைந்திருக்கின்றன.
கனடாவில் சென்ற திங்கட்கிழமை நடந்த 338 தொகுதிகளுக்கான தேர்தலில், தமிழ் வேட்பாளர்களில் ஆறு பேர் ஒன்ராறியோ மாகாணத்திலும், இருவர் பிரிட்டிஸ் கொலம்பியா மாகாணத்திலும், ஒருவர் சஸ்கச்சுவான் மாகாணத்திலும், இன்னும் ஒருவர் குபெக் மாகாணத்திலும் போட்டியிட்டனர். இவர்களில் இருவர் சுயேட்சையாகப் போட்டியிட்டனர். முதற்தடவையாக அதிக தமிழர்கள் போட்டிபோட முன்வந்திருந்தது பாராட்டுக்குரியது. ஏற்கனவே அங்கத்தவராக இருக்கும், லிபரல் கட்சியில் போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரி 16,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கின்றார். இNதுபோல, ஏற்கனவே அமைச்சராக இருக்கும் அனிதா ஆனந்தும் 14,511 வாக்குகள் பெற்று ஓக்வில் தொகுதியில் வெற்றி பெற்றிருக்கின்றார். வான்கூவரில் என்.டி.பியில் போட்டியிட்ட அஞ்சலி அப்பாதுரை, மற்றும் கொன்சவேட்டிவ் கட்சியில் ஸ்காபரோ மத்தியில் போட்டியிட்ட மல்கம் பொன்னையன் ஆகியோர் இரண்டாவதாக வந்திருக்கிறார்கள். இவர்களைவிட லிபரல் கட்சியில் சஸ்கச்சுவானில் அல்போன்ஸ் ராஜகுமார், புதிய கிறீன் கட்சியில் அர்ஜ+ன் பாலசிங்கம், சஜந்த் மோகனகாந்தன், மக்கள் கட்சி சார்பாக ஜோர்ச் அன்ரனி, குபெக்குவா சார்பாக ஷோபிகா வைத்தியநாதசர்மா, சுயேட்சையாக பிராம்டன் மேற்கில் சிவகுமார் ராமசாமி ஆகியோரும் போட்டியிட்டனர்.
- இனிய நந்தவனம் – கனடா சிறப்பிதழ் வெளியீடு
- ஊரடங்குப் பூங்கா
- சீதைகளைக் காதலியுங்கள்
- எங்கே பச்சை எரிசக்தி ?
- பகல் கனவு
- விடியாதா
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 255 ஆம் இதழ்
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- புரிதல்
- கனேரித் தீவில் திடீரென எழுந்த தீக்குழம்பு எரிமலைக் காட்சி
- தமிழ்க் கவிதைகள் தரமான ஆங்கிலத்தில்! – மொழிபெயர்ப்பாளர் ஸ்ரீவத்ஸாவின் ஆரவாரமில்லாத அரும்பணி!
- எழுத மறந்த குறிப்புகள்: “ மாலன் “ என்னும் பன்முக ஆளுமை !
- குருட்ஷேத்திரம் 20 (சத்தியர்களை கருவருத்த ரெளத்ர ரிஷி)
- குருட்ஷேத்திரம் 19 (பாஞ்சாலியின் பிறவிக்கு மூலகாரணமான துரோணர்)
- என்ன தர?
- ஒலிம்பிக் வளையங்களுக்குள் ஒளிந்திருக்கும் வளையங்கள்
- என்னவோ நடக்குது
- கனடா தேர்தல் முடிவுகள் – 2021 – லிபரல் கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது
- கோதையர் ஆடிய குளங்கள்