பகல் கனவு 

author
0 minutes, 0 seconds Read
This entry is part 5 of 19 in the series 3 அக்டோபர் 2021

 

வேல்விழி மோகன்

                                                           

“ஓம் நமச்சிவாய” என்றபோது அவர் அந்த கும்பலினால் தாக்கப்பட்டு தூக்கி வீசப்பட்டார். அவர் வீசப்பட்ட இடம் ஒண்ணுக்கு வாசனையடித்த இடம். உடனே அவர் எழுந்து “என் கிட்ட வராதீங்கடா..” என்று கால்களை தூக்கிக்கொண்டு கைகளை உயர்த்தி கராத்தே ஸ்டைலில் நின்றபோது இரண்டு பேர் தைரியமாக பக்கத்தில் வந்து அவர்கள் எதிர்பார்ப்பதற்கு முன்பு “இந்தா வாங்கிக்கோ..” என்று குத்தினார்.  அவர்கள் நெளிந்த நேரம் பார்த்து பக்கத்தில் சுவாரஸ்யமாக படம் பிடித்துக்கொண்டிருந்த மொபைலை பிடுங்கிக்கொண்டு ஓரே ஓட்டமாக ஓடி அந்த உயரமான கட்டிடத்தின் உச்சியிலிருந்து குதித்தார்.

கீழே பூச்சி மாதிரி கார்கள் ஊர்ந்துக்கொண்டிருந்தது.

                                    0000

அவர் திடுக்கிட்டு விழித்துக்கொண்டு அந்த பகல் கனவுக்காக வருத்தப்பட்டு ஆனால் அதே சமயம் வேகமாக அடித்துக்கொண்ட நெஞ்சையும் தடவிக்கொண்டார். வேறு யாராவது தடவினால் நன்றாக இருக்கும் என்று பார்த்தபோது அது பயத்தின் காரணமாக அந்த சமயத்தில் தேவைப்படும் ஒரு அவசர துணை என்று புரிந்துக்கொண்டு த்ததக்கா.. புத்தக்கா.. என்று எட்டிப்பார்க்கும் பேத்தியை பார்த்து பல்லைக்காட்டி “ஹி..ஹி..” என்றார்.

பேத்தி இவர் சிரிப்பதை பொருட்படுத்தாமல் ஒரு காலை தூக்கி காட்டியபோது அது தான் கற்றுக்கொடுத்ததே என்கிற வகையில் தன்னை தேற்றிக்கொண்டு ஆனால் “அப்புடியெல்லாம் கால தூக்கப்படாது..” என்று சொன்னதோடு நிற்காமல் “பெரியவங்கள பாத்து..” என்பதையும் சேர்த்திக்கொண்டார்.

உள்ளிருந்து ஒரு கனைப்பு கேட்டது. அநேகமாக அது அவருக்கு பதிலாக தோன்றியது. அதாவது “குழந்தைக்கு என்னா தெரியும்..?” என்பது போக மற்றொன்று “நீங்கதானே அறியா புள்ளைக்கு கத்து கொடுத்தீங்க..”

இவர் குழந்தையை பார்த்து கன்னத்தில் போட்டுக்கொண்டபோது அது வாயை திறந்து அகலமாக சிரித்தது. வாய்க்குள் உலகம் தெரிகிறதா என்பது போல பார்த்தபோது குழந்தை தமாஸ் பண்ணுகிறார் என்று இன்னும் பலமாக சிரித்தபோது இவர் அந்த கனவை மறந்துவிட்டதாக நினைத்துக்கொண்டார். நினைப்பிலேயே அந்த கனவை பற்றிதான் கவனம் ஓடிகிறது என்று தெரிந்த பிறகு பேசாமல் கட்டிடத்தின் உச்சியிலிருந்து கீழே விழும் வரை படம் பார்த்திருக்கலாம் என்று நினைத்துக்கொண்டபோது சிரித்துக்கொண்டார். அதாவது பத்திரமாக இறங்கும் வரை கனவை நீட்டித்திருக்க வேண்டும் என நினைத்துக்கொண்டபோது பத்திரமாக இறங்கியிருந்தால் சரி.. வேறு மாதிரி நடந்திருந்தால் என்று யோசித்தபோது அப்படித்தானே நடந்திருக்கும் என்றும் நடுநிலைமையோடு தனக்குத்தானே சொல்லிக்கொண்டார்.

அப்படியென்றால் என்ன நடந்திருக்கும்..? ரத்தம் சிதறி.. மண்டை உடைந்து.. உடல் சிதறி.. உம்.. இது சத்தியமாக கெட்ட கனவுதான். அல்லது கீழே விழும்போது பறக்கிற மாதிரி இறக்கை முளைத்திருக்குமா என்றும் தோன்றியது. அதே சமயம் கட்டிடத்தின் உச்சியிலிருந்து குதிப்பதற்கு முன்பு ஏதோ சேஷ்டைகள் செய்தது போலவும் அவருக்கு தோன்றியது. அது அவருக்கு புன்னகையை வரவழைத்தது. அப்படியானால் இந்த கனவுக்கு பயப்பட தேவையில்லை என்றும் நினைத்துக்கொண்டார். அவர் அப்படி நினைத்துக்கொண்டபோது அவருடைய கண்களில் பயத்தையும் பார்க்க முடிந்தது. முக்கியமாக கட்டிடத்தின் உச்சியிலிருந்து அவர் விழுவது..

அது ஏதோ ஒன்றின் அறிகுறியாக உணர்ந்தார். தன்னுடைய புது வியாபாரத்தில் சறுக்கல் வருமோ என்று தோன்றியது. அல்லது எங்கேயாவது போகும்போது அடிபட்டு.. உம்.. புரியாவிட்டாலும் பரவாயில்லை. உள்ளுக்குள் ஒரு பெருத்த பயம் அவருக்கு மந்தமாக தெரிந்தது.  தன்னுடைய உடம்பை துடைத்துக்கொண்டு புலன்களுக்கு விழிப்பு கொடுத்து தன்னை முன்புறம் இருந்த சிறிய கண்ணாடியை எடுத்து முகம் பார்த்தார். அந்த கண்ணாடிக்கு அருகில் ஒரு பல்லி வேகமாக ஓடி மறைந்தது. அதை கூட அபசகுணமாக கவனித்தார். அவருடைய முகத்தில் கூட வியர்வை தென்பட்டது. உள்ளே எட்டிப்பார்த்து மனைவி சிரிப்பது கேட்டது. இவர் திரும்பாமல் “என்னா சிரிப்பு..?” என்றார்.

“அதென்ன பழக்கமோ. கூடவே கண்ணாடிய வச்சுக்கிட்டு இருக்கறது..?”

“இத பல முறை சொல்லிட்டியாம்..”

“இப்பவும் சொல்லறேன்”

“சொல்லாத. உன் வேலைய பாரு..” என்றபோது அவள் நமட்டு சிரிப்பு சிரித்து “குமரன்னு நினைப்பு..”

“இருந்துட்டு போறேன்..”

“பகல் கனவு மாதிரி..” என்றதும் இவர் அவளை திரும்பி பார்த்து “என்னா சொன்ன..?”

“பகல் கனவு மாதிரின்னு..”

“கனவ பத்தி உனக்கு தெரியுமா..?”

“யாருக்குதான் தெரியும்..?”

“யாருக்கு தெரியும்..?”

“ஜோசியம் பாக்கறவங்களுக்கு.. டாக்டருங்களுக்கு..”

“டாக்டர்..?”

“முடியாம போனா அங்கதானே போயாகனும்..?” என்றபோது அவள் தன்னை கிண்டலடிப்பதை உணர்ந்து கோவமாக முகத்தை வைத்துக்கொண்டு “நான் மேல இருந்து விழறேன். கீழ அதல பாதாளம்.. காருங்க ஓடுது. புள்ளி புள்ளியா.. வேணுமுன்னே விழலை. நானா ஓடிப்போய் விழறேன். அவ்வளவு உயரமான கட்டடத்த நான் பாத்ததில்லை. பயமா தைரியமான்னு தெரியல. முழுச்சுக்கிட்டேன்..” என்றவர் அவள் இப்போது முழுமையாக உருவத்தை காட்டி முறுவலிப்பதை கவனித்து “கொஞ்சம் கிட்டே வாயேன்..” என்று சொல்லி அவள் கிட்டே வந்ததும் அவளை பிடிக்க கையை நீட்டியபோது அவள் ஒதுங்கிக்கொண்டு “அப்படின்னா காத்தாயிய பாருங்க..”

“காத்தாயி..?”

“புதினா தோட்டம் இருக்குது பாருங்க. அங்க பக்கத்துல யானை மலைக்கு போற வழியில..”

“யாரு அவ..?” என்றபோது அவள் சிரித்து தனது அகலமான உடம்பை குலுக்கி “உம்.. சூனியக்காரி..” என்று சத்தமாகவே இழுத்து சொன்னது இவருக்கு பிடிபடாவிட்டாலும் அதில் ஏதோ தகவல் இருப்பதை உணர்ந்து “நான் கேள்விப்பட்டதில்லையே..?”

“இப்போ பாருங்க போயிட்டு..”

“நீயும் வருவியா..?”

“பொண்ணு வந்திருக்கா. பேத்திய ஆஸ்பத்தரிக்கு கூட்டிக்கிட்டு போகனும். உங்க பையன கூட்டிக்கிட்டு போறது..?”

“வருவானா..?”

“வரலாம். நான் சொல்லறேன்..”

“என்னா ஸ்பெழலு அந்த பொம்பளைக்கிட்ட..?” என்றபோது நிச்சயமாக பேசுகிறோமா என்று தன்னை கேட்டுக்கொண்டார். எதிரில் மனைவி தள்ளி நிற்பது பிடிக்காமல் மறுபடி கையை நீட்ட அவள் விலகி நிற்பது வெறுப்பை தந்து வேகமாக அவளது இடுப்பில் கண்களை பதித்து “வர வர இடுப்பு பெருசாயிட்டே போகுது..” என்றார்.

“தொப்பையா..?”

“தொப்ப இல்ல. அகலம். உனக்கு தொப்ப வராது. சாப்பாடு அளவாதான் எடுத்துக்கறியாம். எனக்குதான் முந்திட்டு நிக்குது. கஸ்டமா இருக்குது உன்னைய கட்டிக்கும்போது..” என்றபோது அவள் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு முந்தானையை இழுத்துவிட்டுக்கொண்டு தன்னுடைய இடுப்பையும் சரி செய்துக்கொண்டு “பொண்ணு வெளியில இருக்கா..”

“இருந்துட்டு போகட்டும்..”

“வெக்கமில்லாத ஆசாமி..” என்று முணுமுணுத்தவள் தன்னுடைய உதடுகளை சுழித்துக்கொண்டு ஈரப்படுத்தி அதை அவர் ரசிப்பதை விரும்பாமல் “அந்த பொம்பளைய பாக்கறதுக்கு காத்திருக்கனும். ஒத்த ரூபாய உண்டியல்ல போடனும். போகும்போது ஒரு முட்டைய கொண்டு போகனும். வெளிய விப்பாங்க. அப்பறமா ஒரு டம்ளர்ல பால் மாதிரி தருவாங்க. அத குடிக்கனும்..”

“பாலா..?”

“சொன்னேனே.. பால் மாதிரின்னு..”

“பால் மாதிரி.. உம்..” என்று யோசித்தவர் நிச்சயமாகத்தான் பேசுகிறோமா என்பது போல யோசித்தபோது அதையே அவர் மனைவியும் நினைப்பது போல தோன்றியபோது லேசாக சிரித்து “உண்மையதான் சொல்லறேன்..”

“ஆனா உள்ளுக்குள்ளாற பயம் தெரியுது..”

“அப்படியா..?”

“ஆமா.. முகத்துல வியர்வை. வார்த்தைல குழப்பம். பையன கூட்டிக்கிட்டு போங்கோ..”

“இப்பவா..?”

“இப்ப கூடதான்..” என்றபோது அவர் கண்களில் தெரிந்த குழப்பம் அவளை உண்மையிலேயே வருத்தப்படவைத்து “இப்பதான் சொல்லறேன். மணி ரண்டு ஆகுது. எப்படியும் அஞ்சு மணி வரைக்கும் ஆபிசு தொறந்திருக்கும்..”

“ஆபிஸா..?”

“அதாவது அந்தம்மாவோட ஆசரமத்தை சொல்லறேன்”

“ஓ.. ஆசரமமா அது..?”

“ஆசரமம் மாதிரிதான்..”

“கோயிலா..?” என்றதும் “உஸ்ஸ்.. “ என்று அலுத்துக்கொண்டவள் தன்னுடைய உதடுகளை மறுபடி ஈரமாக்கி “கோயிலும் ஆசரமும் ஒண்ணுதான். சின்ன இடம்தான். வெளியில மரத்தடில பாய் போட்டிருப்பாங்க உக்கார. செருப்பு போட்டிருக்கக்கூடாது. அங்க நிறைய கன்னுக்குட்டிங்க சுத்தும். கேரட்டு.. கீரன்னு பக்கத்துல விப்பாங்க முட்ட விக்கற இடத்துல. அதுக்கு தீனி வாங்கித்தரலாம். பாவம் போயிடுமுன்னு சொல்லுவாங்க..”

“நீ போயிருக்கியா..?”

“இல்ல.. கேள்விப்பட்டதுதான்..” என்று அவள் திரும்பி நடக்கும்போது தன்னுடைய முதுகை அவர் வெறித்துப்பார்ப்பதை உணர்ந்து திரும்பி பார்த்தபோது அவர் இளித்தார். இவள் பேத்தியின் அழுகுரலை கேட்டு அவரிடம் “அங்க போறதுக்கு முன்னாடி யோசன பண்ணிட்டு போகனும்..”

“ஏன்..?”

“சாட்டையால அடிப்பாங்களாம்..”

                                    0000

தேங்காய் வியாபாரம் அவருக்கு புது வியாபாரம்தான். ஆனால் வியாபாரம் அவருக்கு பழக்கப்பட்டது. அதற்கு முன்பு வாழையிலை.. வாழைப்பூ.. வாழைப்பழம்.. வாழைத்தண்டு என்றுதான் விற்றுக்கொண்டிருந்தார். அவர் மார்க்கெட் பகுதியில் சைக்கிளில் பெரிய கூடையில் இதை செய்வதற்கு என்று தனியாக இடம் வைத்திருந்தார். வாழை வியாபாரி என்கிற பெயர் ஒரு சிலரை குழப்பி இவரை தேடி வந்து ஏமாந்து போகிறவர்களும் இருக்கிறார்கள். “தார் வச்சிருப்பீங்கன்னு நினைச்சோம்..” என்று அவர்கள் சொல்லும்போது பேசாமல் வாழைத்தார் வியாபாரத்துக்கு மாறிவிடலாமா என்று கூட நினைத்திருக்கிறார். ஆனால் உண்மை என்னவெனில் இந்த வியாபாரம் அவருக்கு ஒரு நிலைத்த இடத்தை கொடுத்திருந்தது.

மற்றவர்களிடம் கூட ஒரு சில சமயம் சலிப்பு தட்டும். ஆனால் அவரிடம் சலிப்பு வந்ததில்லை. வியாபாரம் முடித்து வீட்டுக்கு முன்னே பின்னே போனாலும் வெறும் கூடையோடுதான் போவார். இதற்காக சுற்று வட்டாரத்தில் ஏறக்குறைய நான்கைந்து வாழை தோட்டங்களை பிடித்து வைத்திருந்தார். நான்கைந்து வருட வியாபாரம். வாழை இலையில் ஆரம்பித்து வாழைப்பூ வரைக்குமான நுணுக்கம் அவர் அறிந்தது. தினசரி குடும்பத்தில் இவர் மட்டும் வாழை இலையில் சாப்பிடுவதும் வாழைப்பூ அல்லது வாழைத்தண்டு பொரியலோடு சாப்பாட்டை அள்ளி முழுங்குவதும் இவருக்கு பழக்கமாகிவிட்டது. அந்த தேங்காய் வியாபாரி மாரி சொன்ன பிறகுதான் தன்னை விட அதிகமாக சம்பாதிக்கிறான் என்பது தெரிந்து மற்ற வியாபாரத்தோடு ஒப்பிட்டு அவன் சொன்ன கணக்கை மனக்கணக்கில் ஓட்டிப்பார்த்து தன்னுடைய வியாபாரம் அவன் வியாபாரத்தை விட பலவீனமாக இருப்பதை புரிந்து அவனோடு சேர்ந்து ஒரு வியாழக்கிழமையாக பார்த்து தெங்காய் வியாபாரத்தை ஆரம்பித்தபோது அன்றையிலிருந்து வாழை இலையில் சாப்பிடுவதையும் தவிர்த்தார்.

அந்தம்மா தன்னுடைய உருண்டையான கண்களை இப்படியும் அப்படியுமாக ஆட்டி “என்னாச்சு உனக்கு..?” என்றாள். கோவமாக இருக்கும்போது அவள் ஒருமையில் பேசி ரசிப்பவர் அன்றைக்கும் ரசித்தவாறு அவளுடைய வெள்ளை உடையை ஓரக்கண்ணால் பார்த்தபடி அவளுடைய உடம்பில் அந்த உடை பொருந்தியிருக்கிற இடங்களை கர்வத்துடன் பார்த்தவாறு “இனிமே ரண்டு மடங்கு பணம் வரும்.. பணம் சேத்தறது ஈஸியா இருக்கும்.” என்றார்.

அவளுக்கு வியாபாரம் பற்றி தெரியாது. அதனால் அதை பெரியாக எடுத்துக்கொள்ளாமல் “நான் அதை கேக்கலை..”

“பின்ன..?”

“வாழை இலைலதானே சாப்பிட்டு இருந்தே..?”

“ஆமா..”

“அப்பறம் ஏன்..?”

“வேணாமுன்னு முடிவெடுத்துட்டேன். அதுக்கு காரணம்.. உம்..” யோசித்து “அதுல சாப்புட்டா குழப்பமா வருது..”

“என்னா குழப்பம்..?”

“என்னைய விட்டுட்டு தேங்கா வியாபாரமான்னு அது கேக்கற மாதிரி?” என்றபோது அவள் தன்னுடைய பருத்த கன்னத்தை தடவியபடி தன்னுடைய அகலமான இடுப்பை ஒரு பக்கமாக நெளித்து அதை அவர் கவனிப்பதை அறிந்து ஆனால் அதை கண்டுக்கொள்ளாமல் “எப்படியோ போ. ஆனா இலைல சாப்புடு..”

“இலை இனிமே வாங்கமாட்டேனே..?”

“அப்படின்னா நாங்களாவது சாப்புடறோம்..”

“இலைலேயா..?”

“ஆமா..” என்றபோது அவர் வியந்து பார்க்க அவள் மேலும் தன்னுடைய உடலை இன்னொரு பக்கமாக அசைத்து அந்த நெளிவில் அவர் ஒரு நொடி தன்னை இழந்து கையை நீட்டியபோது அவள் வழக்கம்போல அந்த கையை தட்டி “நானும் பையனும் கூட இலைலதானே சாப்புடறோம்..”

“நான் பாத்ததே இல்லையே..?”

“அது மதியம் மட்டும். சோறு.. பொரியலு.. சாம்பாரு.. ரசம்.. தயிருன்னு தரைல உக்காந்து உங்கள மாதிரியே ஒரு நாளு நானும் பையனும் விளையாட்டுத்தனமா சாப்புட்டு பாத்து பிறகு அதுவே பழகிருச்சு. வீட்ல வேஸ்ட் இலைய பிரிக்கறப்ப உனக்கு நல்ல இலையா எடுத்து வச்சுட்டு எங்களுக்கு சிறுசா எடுத்து வச்சுக்குவோம். வெளியில போடமாட்டோம். இன்னும் சிறுசா இருந்தா காலைல டிபனுக்கு வச்சுக்குவோம். நைட்ல சில சமயம் சப்பாத்திக்கும் பூரிக்குமா பையன் இலைல சாப்படறதை கவனிக்கலையா நீ..?” என்றபோது அவள் சொற்களில் இருந்த வாழையிலை வாசனை அவரை இன்னமும் குழப்பியது. வீட்டுக்கு வந்தால் அடிக்கும் வாழையிலை வாசனையும் வாழைப்பூ வாசனையும் பழுத்த கற்பூரவள்ளியின் வாசனையும் இல்லாதது அவருக்கு எதையோ இழுந்தது போலத்தான் தோன்றியது.

இருந்தாலும் மாரி சொன்ன மாதிரி முதல் நாளில் புழுங்கிய பணம் இது நாள் வரை தான் தேங்காய் வியாபாரம் செய்யாத வருத்தத்தை ஏற்படுத்தியபோது அவர் அந்த வாசனையை மறந்துவிட்டார். இலையில் சாப்பிடுவதையும் மறந்துவிட்டது போல அவர் உணர்ந்தபோது அது நடிப்பா அல்லது தானாக நினைத்துக்கொள்வதா என்று யோசித்து அந்த பழக்கம் நான்கைந்து வருட இயல்பாக இருப்பதும் அவ்வளவு எளிதாக அந்த இயல்பு மறையாது என்றும் உணர்ந்து எரிச்சலுடன்தான் சாப்பிட்டார் இலையில்லாமல்.

அந்த எரிச்சல் அவராக உருவாக்கிக்கொண்டதா அல்லது தானாக உருவானதா என்று யோசிப்பதை அவராக தவிர்ப்பதும் அவருக்கு எரிச்சலை உருவாக்கியது. மாரி இவர் சில சமயம் யோசனையுடன் இருப்பதை பார்த்து “என்னாண்ணே.. பலத்த யோசனை..?”

“வியாபாரம்தான்..”

“என்னாச்சு..?”

“வியாபாரம் நல்லாத்தான் இருக்குது. தெங்காய்ல. ஆனா..?” என்று இழுத்தபோது “கஸ்டமா இருக்குதா..?”

“அதெல்லாம் இல்லை”

“பின்ன..?”

“தொழிலுக்கு மாறினதான்னு தெரியல. எல்லாரும்தான் இப்படி பண்ணறாங்க. வியாபாரமுன்னு பண்ணறாங்க. ஆனா ஒரே மாதிரியில்லாம மாத்தி.. மாத்தி..”

“சரியாதான் சொன்னீங்க..”

“கேள்வியும் நானே பதிலும் நானே அப்படீங்கற மாதிரி..”

“ஆமாங்க..”

“எத்தன வருசமா தேங்கா வியாபாரம்?”

“என்னாங்க நீங்க.. பாத்துட்டுதானே இருக்கீங்க.. மூணு வருசமா செய்யறேனுங்க. மொதல்ல சரியா போகலை. அப்பறம் பெரிசாமிதான் சொல்லிக்கொடுத்தாரு. இப்படி பண்ணனமுன்னு..”

“அவரு என்ன ஆனாரு..?”

“வியாபாரத்த விட்டுட்டு வீட்டோட இருக்காரு. முடியறதில்ல. ஆனா வீட்டோட வியாபாரம் செய்யறாரு. வீட்டுக்கு பின்னாடி தேங்காய்க்குன்னு இடத்த ஒதுக்கி நிறைய வாங்கிப்போட்டு தினமும் ரொட்டேசன் பண்ணறாரு. அங்கேயும் நல்லாவே போகுது. அந்த மனுசன் எது செஞ்சாலும் சரியா பண்ணிக்கிறாரு. நிறைய கத்துக்கிட்டேன் அவருக்கிட்ட. எப்படி ஏமாத்தக்கூடாது அப்படீங்கறதையும்..”

“அப்படியா..?”

“ஆமாங்க. தேங்கா கெட்டுப்போனதா இருந்தா எப்புடி கண்டுபுடிக்கறது..? உள்ளாற பருப்பு இல்லன்னா எப்புடி தட்டிப்பாத்து தெரிஞ்சுக்கறது..? கொப்பற பதத்துல இருக்கறது எது..? ரொம்ப நாளைக்கு வரனமுன்னா எப்புடி காய பாதுகாக்கறது..? உரிச்ச தேங்கா எத்தன நாளைக்கு வருமுன்னு நிறைய சொல்லுவாரு. இப்போ எனக்கு அத்துப்படி.” என்றவன் அவரை உற்றுப்பார்த்து “நல்லா வருமானம்தாங்க. சில சமயம் நாலு மடங்கா கூட வரும். வேற பிசினஸ் செய்யனமுன்னு இதுவரைக்கும் தோணலை. பெரிசாமி மாதிரி வீட்டோட கூட வியாபாரம் ஆரம்புச்சு பொண்டாட்டிக்கு கத்துக்கொடுத்துடலாமுன்னு பாக்கறேன். ரண்டு வியாபாரம் நடக்கும் பாருங்க” என்றபோது இவருக்கு போன் வந்து எடுத்து பார்த்தபோது அந்த வாழை தோட்டம் வைத்திருப்பவர்களில் ஒருத்தர் என்று தெரிந்து தயக்கத்துடன் அழுத்தினார்.

“தோட்டத்துக்காரு பேசறேங்க..”

“தெரியுதுங்க..”

“நாலு நாளா ஆளையே காணோம்..”

“அப்படீங்களா வந்து.. உம்..”

“சொன்னாங்க.. தேங்காக்கு மாறிட்டீங்களாமே..?”

“ஆமாங்க. வந்து..”

“இருக்கட்டுமுங்க. உங்களுக்கு இனிமே தேவப்படாதுதானே எதுவும்..? அடுத்த ஆளுக்கு கொடுக்கலாம் பாருங்க..”

“அப்படீங்களா..?” என்றபோதே அந்த எண் துண்டிக்கப்பட்டு அவர் அந்த மொபைலையே பார்த்துக்கொண்டிருந்தார். மறுபடியும் அழைப்பு வரலாம் என்பது போல. மாரி அந்த பெரிய மார்க்கெட்டின் தேங்காய் வியாபார வரிசையில் இவருக்கு அருகில் உட்கார்ந்தபடி “வாங்க.. வாங்க” என்று நடந்து போகிறவர்களை கூப்பிட்டுக்கொண்டிருந்தான்.

இவருக்கு அது கூட புதிதாக இருந்தது. அதாவது சைக்கிளில் கூடையில் தள்ளியபடி இரண்டொரு இடங்களில் இருப்பதுதான் இவருக்கு பழக்கமானது. மார்க்கெட் பக்கம் அவர் வந்ததில்லை. அதை அவர் விரும்பியதில்லை. ஆனால் தோட்டத்திலிருந்து பழமோ.. இலையோ கிடைக்காதபோது இங்கு வருவார். அப்பொதெல்லாம் எல்லோருமே பழக்கம் என்பதை அவருடைய வேடிக்கையான பேச்சு உணர்த்தும். நான்கைந்து வருடங்களில் காய்கறி விற்பவர்களின்.. மார்க்கெட்டில் சாலையோர வியாபாரிகளின் வாழ்க்கையை இவர் தெரிந்து வைத்திருந்தார். அவர்களின் கொச்சையான பேச்சைக்கூட..

“அப்பால போ..”

“கஞ்சி கீதா..?”

“உக்காந்துட்டு எட மெசின சரிப்பண்ணு”

“நாளைக்கு வந்தூங்கீன்னா எடுத்தாரேன்..”

“கத்தரி ரேட்டு சொல்லுப்போவ்..”

இதெல்லாம் இவருக்கு பழக்கப்பட்டு அவர்கள் பெரும்பாலும் படிக்காதவர்கள் இல்லை என்பதை உணர்ந்து பேச்சு வழக்கம் இவருக்கும் அவர்களில் ஒன்றாக காட்டி அந்த பேச்சில் அவர்களோடு ஐக்கியமாகும்போது சந்தோழமாக இருக்கும். முக்கியமாக அந்த பெரியம்மாவோடு பேசும்போது அந்தம்மா பெரிய உடம்பை இப்படியும் அப்படியுமாக அசைந்து காய்கறிகளை சாதாரணமாக பேரம் பேசி கிலோ கணக்கில் எடைக்கு அள்ளி வைத்து எடை தட்டை அப்படியே தூக்கி மறுபடி வாங்குபவர்களுக்கு பையில் கொட்டி இருந்த இடத்திலேயே உடம்பை நீட்டி செய்யும்போது எப்படி முடியும் என தோணும். ஆனால் முடியும் என்று அந்த பெரியம்மா சலைக்காமல் செய்யும் வியாபார வேகத்தை பார்த்தபடி அல்லது ரசித்தபடி இவர் பேச்சு கொடுக்கும்போது இப்போது கூட “தேங்கா வியாபாரம் புடுச்சுருக்கா..?” என்றாள்.

“உம்..”

“பதிலையே காணோமே..?”

“சொன்னேனே.. உம்..”

“என்னாவோ..? பணம் வந்தா சரி..”

“வருது..”

“அதிகமாவா..?”

“ஆமா..”

“அப்படின்னா சரி..” என்றபோது அதே தேங்காய் வியாபாரத்தை ஏன் இந்த பெரியாம்மா செய்யக்கூடாது அல்லது செய்யலாம் என்று யோசிக்கக்கூடாது என்று நினைத்தபோது அதை கேட்டே விட்டார்.

“அதே வியாபரத்த ஏன் நீங்க செய்யக்கூடாது..?”

“இது பழகிருச்சு..”

“அதுல லாபம் அதிகம்”

“எல்லாம் அவ்வளவுதான். பொதுவா கஸ்டப்படனும். முன்ன பின்ன வியாபாரம் இருக்கலாம். ஆனா எல்லாத்திலேயுமே லாபம் இருக்குது..” என்றபோது அவளுடைய சாதாரணமான பதில் இவருக்கு ஆச்சரியத்தை தந்தது. “நிறையவே வருது..” என்றார் அழுத்தி.

“வரலாம். அது சகஜம். ஆனா ஒரே மாதிரியிருக்காது..” என்றதும் இவர் அதை உணர்ந்து “அது சரிதான்..”

“அது எல்லாத்துக்கும் பொருந்தும். நேத்து கூட இங்க வருமானம் இல்ல. இன்னிக்கு நாளு நாள் காய் போயிருச்சு. அப்படி பாத்தா நாளு நாள் பணம் வந்துருச்சு. நாளைக்கு எப்படின்னு சொல்லமுடியாது. ஏழு வருசமா செய்யறேன். பழகிருச்சு. என் குடும்பத்த வாழ வைக்குது” என்றபோது அவள் வியாபாரத்தில் கவனமாக இருக்க ஆரம்பித்தாள். இவர் எழுந்து நடந்தார். மீதியான தேங்காயை மூட்டையை கட்டி சைக்கிளில் வைத்திருந்தார். மார்க்கெட் கரைய ஆரம்பித்திருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்திருந்த மழைக்கு ஈரம் இன்னும் காயவில்லை. அங்கங்கே சேறாக இருந்தது. நெல்லிக்காயை கொட்டி சின்ன பலகையில் விலை எழுதியிருந்தார்கள். இரண்டு பேர் தக்காளி கூடையை தூக்கிக்கொண்டு “வழி விடுங்க” என்று போனார்கள்.

கோணக்காய் சிவப்பு நிறத்தில் பழுத்து பிதுங்கி “வாங்கிக்கோங்க” என்று சொல்லாமல் சொல்ல வைத்தது. ஒரு சின்ன வேன் புடலங்காய் மூட்டையுடன் நிதானமாக நகர்ந்தபோது சக்கரத்துக்கு அடியில் சேறு பிதுங்கி வெளியே தள்ளி நடைபாதையில் ஈரம் மேலும் கசிந்தது.

இவர் தன்னிடத்திற்கு வந்தபோது மாரி இல்லை. மற்ற தேங்காய் வியாபாரிகள் மூட்டையை கட்டிக்கொண்டு கிளம்பிக்கொண்டு இருந்தார்கள். இவர் புதிது என்பதால் ஒரு சிலரின் பார்வையில் புன்னகையும் ஒரு  சிலரின் பார்வையில் கிண்டலும் இருப்பதை கவனித்து இன்னும் ஒரு சிலர் யார் இவர் என்பதை போலவும் கவனித்தபோது அதுவும் புதிதாக இருந்தது இவருக்கு.  தன்னை அந்த இடத்தில் அந்நியமாக உணரும்போது மற்றவர்களும் ஆரம்பத்தில் அப்படித்தான் இருந்திருப்பார்கள் என்பதை அவர்களே மறந்துவிட்டபோது தான் ஏன் அந்நியமாக தன்னை உணரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இருந்தாலும் அதிலிருந்து உடனடியாக வெளியேற முடியாமல் அந்த அந்நிய உணர்விலேயே தன்னுடைய பாக்கெட்டை தடவிக்கொண்டபோது அது அன்றைக்கு நன்றாகவே புடைத்திருப்பதாக தோன்றியது. அப்போது வாழையிலை வியாபாரத்திலுமே அவ்வாறு பருத்து வீட்டுக்கு போகும்போது குஷியை உண்டாக்கும் என்பதையும் உணர்ந்து லேசான குழப்பத்தையும் அடைந்தார். பிறகு மெதுவாக சைக்கிளை தள்ளியபடி கிளம்பியபோது நேற்றைக்கு விட மூட்டை குறைந்திருப்பது லேசான சந்தோழத்தை கொடுத்தது.

இப்போது அவர் மார்க்கெட்டுக்கு வெளியே வந்திருந்தார். நிதானமாக சைக்கிளை தள்ள ஆரம்பித்தார். மணி ஒன்று இருக்கும். இந்த நேரத்தில் சாப்பாட்டுக்கு போய் மூன்று மணிக்கு திரும்பவும் திரும்புவார். அந்த வழக்கமான இடங்களில் அப்போது நடமாட்டம் அதிகமாக இருக்கும். ஐந்து மணிக்கு வியாபாரம் ஏறக்குறைய முடிகிற மாதிரி இருக்கும். சில சமயம் ஆறு மணியை கடந்துவிடும். சில சமயம் ஏழு கூட. இப்போது அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. தேங்காயோடு அந்த வழக்கமான இடத்துக்கு போக விரும்பினார்.

அப்போது அந்த கனவு மீண்டும் நினைவுக்கு வந்தது.

                                          0000

அந்த இடம் ஒரு முச்சந்தி சாலை. அருகில் வரிசையாக கடைகள். அவர் சைக்கிளை நிறுத்தும் இடம் ஒரு காலியிடம். பின்புறம் ஒரு கடைக்கான இடம் என்றாலும் ஒதுக்குபுறமாகவே அவருடைய சைக்கிள் நிற்கிறது. இப்போது பரபரப்பாக அவரை பல கண்கள் மொய்ப்பதாக அவர் நினைத்துக்கொண்டார். அது அவருக்கு ஆச்சரியத்தை தந்தபோது பின்புறமிருந்து ஒரு குரல் வந்தது. “ஏனப்பா.. எங்கப்பா நாலு நாளா ஆளைய காணோம்..?” என்றுபோது இவர் திரும்பி பார்க்காமல் “தேங்காய்க்கு மாறிட்டேன்..”

“சொன்னாங்க..”

“வியாபாரம் பரவாயில்லை..”

“நிறைய பேரு வந்துட்டு பாத்துட்டு திட்டிட்டு போறாங்க..”

“அப்படியா..?” என்றபோது அவர் மூட்டையை பிரித்து சைக்கிளுக்கு முன்புறமாக வைத்து ஒரு கோணியை விரித்து காயை இரண்டாக பிரித்து வேகமாக எடுத்து வைத்து “தேங்கா.. தேங்கா..” என்றார்.

அவருக்கு அப்படி சொன்னது ஆச்சரியம் தரவில்லை. மார்க்கெட்டில் அப்படி கத்தி இந்த நான்கு நாட்களில் பழக்கமாகிவிட்டது. அப்போதுதான் கவனித்தார். அருகில் சற்று தள்ளி இவரை மாதிரியே கூடையில் வாழையிலை.. பழம்.. பூ.. தண்டு வைத்துக்கொண்டு ஒருத்தன் இரண்டு பேருக்கு இலையை எடுத்து தந்தபடி வியாபாரம் செய்வதை. இப்போது அவர் சம்பந்தமில்லாமல் அந்த கனவை நினைத்துக்கொண்டு அவனையே கவனித்துக்கொண்டிருந்தார். தன்னை அவனாக உணர்ந்தார். அதே மாதிரியான கூடை. அதே மாதிரியான சைக்கிள். அதே மாதிரியான வியாபாரம். அங்கு வாங்குகிறவர்கள் இவருக்கு பழக்கமானவர்கள். இவரிடம் தினமும் வந்து பூவோ.. தண்டோ வாங்குகிறவர்கள். இவருக்கு ஏனோ எரிச்சலும் கோவமும் வந்து அதை எங்கு யார் மீது காட்டுவது என்று தெரியாமல் பின்புறம் குரல் கொடுத்தவரை திரும்பி கவனித்தபோது அந்த கடைக்காரர் “சைக்கிளை கொஞ்சம் தள்ளி நிறுத்தறது..?” என்றது இவருக்கு பிடிக்காமல் போனது.

இப்படி அந்தாள் எப்போதும் சொன்னதில்லை. இவருக்கு ஏதோ சங்கடமாக நடந்துக்கொண்டிருப்பதாக தோன்றியது. அது இயல்பாக இருப்பது தனக்கு அப்படி தோன்றுகிறதா என்றும் தனக்குள் கேட்டுக்கொண்டபோது அதற்கு பதில் கண்டறிவதற்குள் அந்த வியாபாரியை சுற்றி இன்னும் நான்கு பேர் சேர்ந்தது இன்னும் எரிச்சலை கிளம்பியது. அப்போது மறுபடி அந்த குரல் கேட்டது. “கொஞ்சம் தள்ளி நிறுத்துப்பா சைக்கிள..”

“சரிங்க..” என்று அவர் சைக்கிளை இன்னும் பக்கமாக தள்ளியபோது பக்கத்து கடைக்காரன் எட்டிப்பார்ப்பது தெரிந்தது. அவன் வழக்கமாக சிரித்தபோது இவரும் சிரித்தாலும் இவனும் ஏதாவது சொல்லுவானோ என்று தயக்கமாக சைக்கிளை நிறுத்தினார். ஆனால் கவனம் அந்த வாழையிலை வியாபாரியின் மீது போனது. அவன் இப்போது தன்னை சுற்றி யாருமில்லாமல் இருந்தாலும் இவரை ஒரு முறை கவனித்து ஆனால் கவனிக்காதவன் போல வேறு பக்கமாக திரும்பி அங்கேயே பார்த்துக்கொண்டிருந்தான்.

இவருக்கு தன் பக்கமாக ஆட்கள் வராதது ஒரு குறையாக தெரிந்தபோது அவன் கண்டுக்கொள்ளாமல் இருந்தது மற்றொரு பெரிய குறையாக தெரிந்தது.  இப்போது அவனிடம் பேச வாயை திறந்தபோது பின்புறமிருந்து பக்கத்து கடைக்காரன் “ஏம்பா தேங்கா.. என் கடைதான் கிடைச்சுதா..?” என்று சிரிப்பதும் கூட வேறு யாரோ அந்த சிரிப்போடு சேர்ந்து மற்றொரு சிரிப்பாக சிரிப்பதும் கேட்டபோது அவர் பேசாமல் அங்கிருந்து கிளம்பிவிடலாமா என நினைத்துக்கொண்டார். “இதாங்க போறேன்..” என்று சைக்கிளை தள்ளி என்ன செய்வது அடுத்து என்று சைக்கிளை பிடித்தவாறே நின்றிருந்தபோது இரண்டு பேர் அவரை கடந்தார்கள். இரண்டு பேரும் தினமும் இலை வாங்க வருகிறவர்கள். கூடவே பழமும் வாங்குவார்கள். “அய்யா தேங்கா..?” என்றபோது அவர் குரலில் பலமில்லை. ஆனால் அவர்கள் திரும்பி பார்த்து லேசாக சிரித்தவாறு “வேணாம்..” என்பது போல தலையாட்டிக்கொண்டே அந்த வியாபாரி பக்கமாக போனதை பார்த்து மறுபடியும் யோசித்தார். இவர் யோசிப்பதை அந்த கடைக்காரன் கவனித்துக்கொண்டே இருப்பதை கவனித்து சட்டென்று சைக்கிளை நிறுத்தி கீழே குனிந்து மொத்தமாக அந்த தேங்காய்களை அள்ளி பழைய மூட்டையில் கொட்டி அந்த கோணியை சுருட்டி பின்பக்கமாக அடியில் வைத்து தேங்காய் மூட்டையை கட்டி அதன் மீது வைத்து கயிறு போட்டு ஒரு இழு இழுத்து கட்டி தள்ளினார். அந்த வாழையிலை வியாபாரியை கடந்தபோது அந்த இரண்டு பேரும் இவரை காட்டி ஏதோ பேசுவதும் அவன் இவரை ஒரு நொடி பார்த்து மறுபடி வியாபாரத்தில் கவனமாக இருப்பதையும் கவனித்து அவன் மீது எரிச்சல் ஏதும் வராமல் வியாபாரம் அவனுக்கு நன்றாக நடந்தால் சரி என்று நினைத்தது ஆச்சரியமாக இருந்தது. அவன் தொடர்ந்து எதன் மீதும் கவனம் இல்லாமல் வியாபாரத்தின் மீதே கவனமாக இருப்பதே அப்படி நினைத்ததற்கு காரணமாக இருக்கலாம் என்று இவராக புரிந்துக்கொண்டு வீட்டை நோக்கி வண்டியை தள்ளினார். ஒரு இடத்தில் தரையில் கோணியை விரித்து அந்த ஏரியாவில் தேங்காய் வியாபாரம் செய்யும் ஆள் இவரை பார்த்து சிரித்தபோது இவரும் சிரித்து “தேங்காதான் நானும்..” என்றார்.

“சொன்னாங்க. மார்க்கெட்லேயா..?”

“ஆமா..”

“நானும் வரனும். ஒண்ணும் கட்டுப்படியாகல. ரண்டு மாசமா வியாபாரமில்ல. அங்க உன் இடத்துல ஒருத்தன் நின்னுக்கிட்டு உன் வியாபாரத்த கவனிச்சிட்டிருக்கான் பாத்தியா..?”

“ஆமா.. ஆள் புதுசா தெரியுது..”

“ஆள்தான் புதுசு. வியாபாரம் தெரியும் போல. வேற ஏதாவது செஞ்சிருக்கலாம். தக்காளி.. காயி.. கீறன்னு.. இப்ப இதுக்கு வந்திருக்கான். ரண்டு நாளா வர்றான். பரவாயில்லை போல. அநேகமாக உன்னோட இடத்த புடுச்சுடுவான்னு நினைக்கறேன். ஏன் அதைய விட்டுட்டே..?” என்றபோது இவர் முன்னே பின்னே யோசிக்காமல் பளிச்சென்று வேகமாக “நான் விடலை..” என்றார்.

“அப்ப இது..?” என்று பின்புறம் மூட்டையை காட்டியபோது “இது பொண்டாட்டிக்காக..” என்று மறுபடி வேகமாக சொன்னவர் “வீட்லேயே செய்யலாமுன்னு. சும்மா மார்க்கெட்டு பக்கமா எடுத்துட்டு போனேன். பரவாயில்ல. அந்தம்மா அப்பவே சொல்லுச்சு..”

“எந்தம்மா..?”

“அங்க ஒண்ணு இருக்குது. எல்லாமே ஒரு மாதிரிதான்னு. மாறினாலும் முன்ன பின்னதான் வருமானம் இருக்குமுன்னு. அதில்லாம அந்தம்மா மாறாம ஒரு மாதிரிதான் வியாபாரம் செய்யுது..” என்றபோது அந்த தேங்காய் வியாபாரி சிரித்தான்.

“எதுக்கு சிரிக்கறே..?”

“நான் பத்து வருசமா இத செய்யறேன். ஒரே வியாபாரம்தான்” என்றபோது அப்போதுதான் புரிந்தது போல இவர் தலையாட்டி “அப்போ மார்க்கெட்டுக்கு வர்றேன்னு சொன்னது..?”

“இடத்தைதானே மாத்தறதா சொன்னேன். வியாபாரம் அதேதான்..” என்று சொல்லிவிட்டு அந்தாள் இவரை உற்றுப்பார்த்து “ஏதோ குழப்பத்துல இருக்கற மாதிரி தெரியுது..”

“அப்படியில்லை” என்று தள்ளிக்கொண்டே நகர்ந்தார். ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி போனை எடுத்து “தோட்டத்துக்காரா?”

“ஆமாங்க..”

“நான் நாளைக்கு வருவேனுங்க..”

“அப்படியா..?”

“இது பொண்டாட்டிக்காகங்க. அவங்களும் வியாபாரத்துல இறங்கிட்டா கொஞ்சம் வருமானம் பாக்கலாமுன்னு. வீட்டிலேதாங்க..”

“தேங்காயா..? சரிதான். வீட்ல இடம் இருந்தா போதும். மொத்த வியாபாரம் பண்ணலாம். ஒரு தேங்கா மேல குறைந்தபட்சம் ஒரு ரூபான்னா கூட உங்களுக்கு லாபம் இருக்குது. வீட்டையும் கவனிச்சா மாதிரி இருக்கும். வியாபாரத்தையும் கவனிச்சா மாதிரி இருக்கும்”

“அது சரிதாங்க..”

“உங்களுக்கு இத விட்டா வேற பொழப்பு நல்லாருக்காதுங்க. வாழையிலையும் நீங்களும் ஒண்ணு. அதே வாசனைதான் உங்க மேலேயும்..”

“அது சரிதாங்க..”

“நாலு நாளா இங்க நீங்க வந்து போகாம இருக்கறது தெரியுதுங்க. வேற தோட்டத்துக்காரங்க போன் பண்ணலையா..?”

“பண்ணலைங்க. ஒருத்தரு இல்லைன்னா இன்னொருத்தரு..”

“அது சரிதாங்க” என்று பேச்சு நின்றதும் இவர் ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி ஒரு ஓரமாக நிழலில் நின்றார். அந்த இடமும் கடைகள் இருந்தாலும் அவர் இருந்த இடத்தில் கடை மூடப்பட்டு இவர் நிற்பதற்கு வசதியாக இருந்தது. ஒரு ஆள் எதிரிலிருந்து “வாழத்தண்டு வச்சுருக்கியா?” என்றபோது தன்னிச்சையாக “நாளைக்கு..” என்றார்.

நாளை வழக்கமாக வியாபாரம் செய்யும் இடத்தில் அந்த கடைக்காரர்கள் இவர் வழக்கமாக செய்யும் வாழையிலை வியாபாரத்துக்கு ஏதும் சொல்லமாட்டார்கள் என்று நினைத்துக்கொண்டார். அதே போல இன்றைக்கு இருந்த அந்த இன்னொரு வாழையிலை விபாயாரி நாளை முதல் வரமாட்டான் என்றும் நினைத்துக்கொண்டார். மாரி தொடர்பு கொண்டால் “வீட்டிலேயே பொண்டாட்டி மூலமா வியாபாரம் நடக்குது..” என்று சொல்லிவிடலாம் என்று நினைத்துக்கொண்டார். ஆனால் அது பொண்டாட்டிக்கான வியாபாராமா என்று ஒரு கணம் யோசித்தபோது அவருக்கு எதுவும் பிடிபடவில்லை. ஆனால் அந்த மாதிரியான பகல் கனவு இனிமேல் வராது என்றும் மற்றவைகளோடு சேர்த்து நினைத்துக்கொண்டபோது எல்லாமே பகல் கனவு போலதான் இருக்கிறது என்கிற மாதிரியும் தோன்றியது. அவர் தன்னுடைய சைக்கிளை தள்ளிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார். அப்போது தன்னுடைய இடது கையால் மேல் பாக்கெட்டை தொட்டு பார்த்தார்.

வழக்கம் போல புடைத்துக்கொண்டிருக்கிற மாதிரிதான் இருந்தது. ஏதும் வித்தியாசம் தெரியாமல். அப்போது தன் மீதான வாழையிலை வாசனையை அவர் உணர்ந்தார். நாளையிலிருந்து வாழையிலை சாப்பாடு மறுபடியும் என்று நினைத்துக்கொண்டபோது அவருக்கு சைக்கிளை வீடு நோக்கி தள்ளுவதில் குஷியாக இருந்தது.

அப்படி நினைத்ததும் அந்த சந்தோழமும் அந்த சூனியக்காரி காத்தாயி பற்றி மனைவி சொன்னது உட்பட இன்றைக்கு நடந்த அனைத்தையும் பற்றி அவருக்கு ஒரு சந்தேகம் இருந்தது. தானாக அதை முணுமுணுத்துக்கொண்டார்.

“எல்லாமே பகல் கனவு மாதிரியே தெரியுதே..”

                                    0000

 

 

 

Series Navigationஎங்கே பச்சை எரிசக்தி  ?விடியாதா 
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *