வரலாறு தன் வாரிசாக சில பேரை வரித்துக்கொள்கிறது. சாம்ராஜ்யங்கள் உருவாகுவதற்கும் அழிவதற்கும் காலம் தான் காரணம். மகாபாரதத்தில் நடமாடும் கதாபாத்திரங்கள் மூலம் வியாசர் நீதியையே முன்நிறுத்துகிறார். தனது சந்ததிகள் ஒருவொருக்கொருவர் சண்டையிட்டு செத்தது வியாசரின் கண்முன்னே நிகழ்ந்தது. எது வெற்றி? இதைத்தான் பாரதம் சொல்ல வருகிறது. பள்ளத்தை நோக்கி தண்ணீர் ஓடுவதைப் போல மனிதர்கள் வெற்றியின் பின்னே ஓடுகிறார்கள். ஓடும்எல்லை வரை நிலம் சொந்தம் என இதுபோதும் என்ற திருப்தி ஏற்படாமல் ஓடிக்கொண்டே இருப்பவன் ஆறடி நிலத்தில் விழுந்து சாகிறான். இருப்பவன் தான் சட்டைப் பையிலிருந்து பணத்தை எடுக்க பயப்படுகிறான். ஏழைகளுக்கு கிடைப்பது சொற்பமாயினும் அவனுக்கு பிறருக்கு கொடுக்க வேண்டும் என்ற மனம் இருக்கிறது. விதி ஒருவனுக்கு நீண்ட ஆயுளைத் தருகிறது ஆனால் முடமாக்குகிறது ஒருவனை வீழ்த்துகிறது பிறகு அவனையே சில காலங்களுக்கு பிறகு உயர்த்துகிறது. புத்தரை வாழும் போது கையேந்த வைத்தது இறந்த பிறகு அவரே உலகை வென்றவர் என்று போற்றும்படி செய்கிறது. இயேசுவுக்கு முன் மரணத்தின் சின்னமாக கருதப்பட்ட சிலுவை இன்று ஒரு மதத்தின் அடையாளமாக முன்நிறுத்தப்படுகிறது.
வைகறை யமுனை ஸ்படிகமாக ஓடிக்கொண்டிருந்தது. சத்யவதி அன்று பின்னிரவிலேயே எழுந்துவிட்டாள். அவள் நாசியின் வழியே வித்தியாசமான நறுமணத்தை உணர்ந்தாள். தோட்டத்து மலர்களின் மணமாக இருக்கும் என்று தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டாள். சத்யவதியின் மனம் ஏனோ இன்பத்திலாடியது அன்று. மாற்றுத் துணியையும், சோத்துக் கட்டையும் எடுத்துக் கொண்டாள், யமுனையை நோக்கி நடந்தாள். யமுனையில் மூழ்கி எழுந்ததும் குளிர்விட்டது. உடைகளை அணிந்து கொண்டாள். படகில் அமர்ந்து காலை உணவினை உண்டாள். அக்கரைக்கு போகவேண்டுமென ஒரு தம்பதி கைக்குழந்தையுடன் வந்தார்கள். அவர்களுடன் பேசிக் கொண்டே துடுப்பை வலித்தாள். கல்யாணத்துக்கு போவதாக அவளிடம் சொன்னார்கள். கரைவந்ததும் படகுச் சத்தம் கொடுக்க வந்தார்கள். சத்யவதி வாங்க மறுத்துவிட்டாள். கூலிக்காக இதைச் செய்யவில்லை பெரியோர்கள், ரிஷிகள், பாமரஜனங்களை அக்கரைக்கு கொண்டு போய் விடுவதை ஒரு தொண்டாக செய்து வருகிறேன் என்று கூறி விடை கொடுத்தாள்.
படகை கரையில் நிறுத்திவிட்டு மரத்தின் நிழலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது மேற்கு மலையிலிருந்து திமிலுடன் மச்சக்காளை வருவது போல ஒரு உருவம் நதியை நோக்கி வந்து கொண்டிருந்தது. நதியை நெருங்கிய போதுதான் அவ்வுருவம் ஒரு முனிவர் என்பதை உணர்ந்தாள். கையில் கமண்டலத்துடன் காணப்பட்ட அவரிடமிருந்து காலையில் தான் முகர்ந்த நறுமணம் வீசியதை உணர்ந்து சத்யவதியின் மனம் விதிர்த்தது. முனிவர் படகுக்காரர் யாரென விசாரிக்க சத்யவதி ரிஷியே அமருங்கள் நானே உங்களை அக்கரைக்குக் கொண்டுபோய் விடுகிறேன் என்றாள். அப்போது கரை சேர்த்துவிடுங்கள் என கடவுளிடம் வேண்டவேண்டாமென்கிறாய், நங்கையே உன் பெயரென்ன என்ற ரிஷியிடம் தன் பெயரை சத்யவதி என்று பதிலளிக்கிறாள்.
காந்தம் போல் வசீகரித்த முனிவரின் விழிகள் சத்யவதியின் ஆன்மாவுக்குள் ஊடுருவிப் பார்த்தது. சத்யவதி துடுப்பு வலிக்க படகு நட்டாற்றை நெருங்கிக் கொண்டிருந்தது. அதுவரையில் பார்த்திராத இனம் காண முடியாத விநோதமான பறவையொன்று முனவரின் தலைக்கு வெகுஅருகாமையில் வந்து சென்றது. மேகக்கூட்டம் ஸ்பரிசத்தை தொட்டுவிடும்படி வானம் கைக்கு எட்டும் தூரத்தில் வந்தது. ரிஷி உள்முகமாகப் பார்க்க கண்களை மூடினார். பெண்களிலேயே சத்யவதிக்குத் தான் முனிவரின் தவக்கோலத்தை அருகிலிருந்து பார்க்கும் பாக்கியம் கிட்டியிருக்க வேண்டும். மெல்ல கண்விழித்த முனிவர் சத்யவதியைப் பார்த்து நான் சத்தி மகன் பராசரன். என் மூலமாக உன்னிடமிருந்து பிரம்மரிஷியொருவன் வெளிப்பட வேண்டுமென்பது விதி. அதற்கு நாம் இருவரும் கருவியாக செயல்படுவதைத் தவிர வேறுவழியில்லை. இதை நீ மறுக்கக்கூடாது என்றார். சத்யவதிக்கு அச்சம் தொற்றிக் கொண்டது. என் அம்மா கட்டிக் கொடுத்த வெல்லக்கட்டி கரையாமல் நான் வீடுபோய்ச் சேர வேண்டுமென்றாள். கன்னியாக படகுத்துறைக்கு வந்து கன்னித்தன்மையை இழந்து எப்படி வீட்டுக்குச் செல்வது, என் அம்மாவும் யுவதிதானே என் நடத்தையை வைத்தே ஏதோ நடந்திருக்கிறது நம்மிடம் மறைக்கிறாள் என்று கண்டுபிடித்துவிட மாட்டாளா என்றாள் பதைபதைப்புடன்.
ரிஷியோ என் தவவலிமையால் நீ இழந்த கன்னித்தன்மையை மீண்டும் பெறுவாய் என்று உறுதியளித்தார். திரும்பிச் செல்லும்போது தாய்மை அடைந்ததற்கான எந்த அறிகுறியும் உன் உடலில் வெளிப்படாமல் மறைந்துவிடும் என்றார். சத்யவதியின் மனம் இளகியது. படகு நின்ற இடம் தீவானது. இருவரும் சங்கமித்ததற்கு ஐம்பூதங்களும் சாட்சியாக இருந்தன. சூல்கொண்ட மேகங்கள் பாரத்தை இறக்கி வைத்தன. ரிஷி எழுந்தார் எது நடக்க வேண்டுமோ அது நடந்திருக்கிறது சத்யவதி என்றார். விதி நம் இருவரையும் அதற்காக தேர்ந்தெடுத்து இருக்கிறது. எதுவுமே காரணகாரியமின்றி இவ்வுலகில் நிகழ்வதில்லை. நாம் இணைந்ததற்கு வானமும் பூமியுமே சாட்சி. உலகில் அறத்தை நிலைநிறுத்த உன்னிடமிருந்து ஒருவன் இவ்வுலகில் பிரவேசிக்கப் போகிறான். இத்தனை இரவு பகலும் அவன் பிறப்பதற்காகவே கடந்து சென்றது. குருவம்சம் விருத்தியடைய அவன் காரணமாக இருப்பான் என்றார் பராசரர். வியாசர் பிறந்தார். பராசரர் வானத்தைப் பார்த்தார் நட்சத்திரங்கள் என்றுமில்லாமல் இன்று பிரகாசமாக ஜொலித்துக் கொண்டிருந்தன.
சத்யவதி அவனை கிருஷ்ணா என்றழைத்தாள். அவள் உள்ளம் முழுவதும் அவனே நிறைந்து இருந்தான். சத்யவதியின் வாழ்க்கை வட்டம் கிருஷ்ணனையே சுற்றிச் சுற்றி வந்தது. பராசரன் என்ற நீரின் உயரமே கிருஷ்ணா என்கிற நீர்ப்பூவின் உயரம். பராசரன் கிருஷ்ணனின் உள்ளுக்குள் கனன்று கொண்டிருந்த ஞான அக்னியைக் கண்டுகொண்டான். அவனுடைய ஞானத்தேடலுக்கு தன்னுடைய அருகாமை மிக உதவியாக இருக்கும் எனவே தன்னுடன் அவன் இருப்பதே சிறந்தது என முடிவெடுத்தான். இருவரும் பயணத்துக்கு தயாரானார்கள். சத்யவதி விடைகொடுக்க மனமில்லாமல் கிருஷ்ணாவை அணைத்துக் கொண்டு அழுது புலம்பினாள். குழந்தை அவள் கண்ணீரைத் துடைத்தது. சத்யவதியிடம் என்னைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணமே என்னை உங்கள் முன் கொண்டுவந்து நிறுத்தும் என ஆறுதல் வார்த்தை கூறி விடைபெற்றது. காலச்சக்கரம் எல்லாவற்றையும் கடந்து ஓடிக்கொண்டிருந்தது. பிள்ளையின் நினைப்பாகவே இருந்த சத்யவதி அதிலிருந்து விடுபட்டவளாய் தன் வாழ்க்கையைத் தொடந்தாள். கரையைக் கடக்க வரும் ரிஷிகளும், சாதுக்களும் கிருஷ்ணாவின் மகிமையை பேசிக் கொண்டு வருவதை கேட்டாள் தன் மகனை மகான் என்றும் வேதங்களை தொகுப்பவன் என்பதால் வியாசன் என்றும் அவர்கள் புகழ்ந்தது அவளை உச்சிக் குளிரவைத்தது.
சத்யவதி நதியோரத்தில் குருதேசஅரசன் சாந்தனுவைக் கண்டாள். சாந்தனு அவள் மீது மையல் கொண்டான். சத்யவதியை சாந்தனுமகாராஜாவுக்கு தாரை வார்க்கும்படி குருதேச இளவரசனான பீஷ்மன் வந்து நின்றான். சத்யவதி தனது தகப்பனின் ஆலோசனைப்படி ஒரு நிபந்தனை விதித்தாள். தனக்குப் பிறக்கப்போகும் மகனைத் தான் சாந்தனுவுக்கு பிறகு பட்டாபிஷேகம் செய்துவிக்க வேண்டும் என்று பீஷ்மரிடம் சத்தியம் பெற்றாள். பீஷ்மன் காமத்தையும், தேசத்தையும் துறந்தது அவன் விதி போலும். சாந்தனு அற்ப வயதில் இறந்துபோனான். அவனுக்குப் பிறகு பட்டத்துக்கு வந்த விசித்திரவீரியன் வாரிசின்றி அம்பிகை, அம்பாலிகை என்ற தன் இருமனைவியரை விட்டு யெளவனத்திலேயே மரணத்தைத் தழுவினான். தலையில் இடிவிழுந்தது போலிருந்தது சத்யவதிக்கு. குருவம்சம் தன்னோடு முடிந்துவிடக்கூடாது என பீஷ்மர் பரிதவித்தார். சிற்றன்னையிடம் நீங்கள் அரியணையில் அரசியாய் அமருங்கள் நான் உங்களுக்கு பக்கபலமாக இருக்கிறேன் என்று யோசனை தெரிவித்தார்.
அதற்கு சத்யவதி தம்பியின் மனைவியரை உன்னுடைய மனைவியாகக் கொண்டு குலத்தை தலைக்கச் செய்து சந்திரவம்சத்தை பேரழிவிலிருந்து நீ காக்கக் கூடாதா என தனது யோசனையை பீஷ்மரிடம் முன்வைத்தாள். பீஷ்மர் அக்கோரிக்கையை ஏற்கவில்லை. கங்கையில் விழுந்து இறப்பேனே ஓழிய இந்த தர்மத்துக்கு எதிரான திட்டதுக்கு தன்னால் துணை போக முடியாது என சொல்லிவிட்டார். தனது பிரம்மச்சரிய விரதத்தைக் காப்பாற்றிக் கொள்ள பீஷ்மர் வேறொரு திட்டத்தை முன்வைத்தார். வாரிசு இல்லாத ராஜவம்சத்தினர் முனிவர்கள் மூலம் வம்சவிருத்தி செய்து கொள்ளலாம் என்று பரசுராமர் காலத்தில் ஏற்பட்ட வேறொரு நடைமுறையைச் சுட்டிக் காட்டினார். சத்யவதிக்கு தன் மகன் வியாசன் ஞாபகத்திற்கு வந்தான். வியாசர் தாயின் வேண்டுகோளை ஏற்றார். சூரியனுக்குப் பிறந்தது சூரியனாகத்தான் இருந்தாக வேண்டுமென சத்யவதி எண்ணினாள் ஆனால் நிகழ்ந்தது வேறு. வேடன் வலைவிரிக்க கர்மவலையில் மீன்களைப் போல் உயிர்கள் மாட்டிக் கொள்கின்றன வலையை அவன் இழுக்கும் வரை தான் நாம் தலையை சேற்றில் புதைத்துக் கொண்டு சுகமாக இருக்கமுடியும். அம்பிகைக்கு அந்தகனாக திருதராஷ்டிரன் பிறந்தான். அம்பாலிகைக்கு ரோகியாக பாண்டு பிறந்தான். ஒரே ஆறுதல் பணிப்பெண்ணின் மகனாக விதுரர் பிறந்தது.
கண்ணெதிரே நடப்பதெல்லாம் ராஜமாதாவான தமக்கு சரியாகப்படவில்லை இது பெரும் கலகத்தில் தான் போய் முடியும், இதற்கு என்னதான் தீர்வு என வியாசரை வேண்டி நின்றாள் அன்னை சத்யவதி. வியாசனோ நிதானமாக பதில் சொன்னான் காலில் தூசு படிந்தால் அதற்காக காலையேவா வெட்டி விடுகிறோம் உதறிவிட்டு நடப்பதில்லை. அன்னையே எதிலும் உன்னை சம்பந்தப்படுத்திக் கொள்வதை விட்டுவிடம்மா உதறிவிட்டு முன்னேறுவதே மேலம்மா என்று. வியாசன் ராஜரிஷி எதையும் யோசிக்காமல் பேசமாட்டான். சத்யவதி அரண்மணையைவிட்டு வெளியேறினாள். யமுனையில் இறங்கினாள் நீரோட்டம் அன்று மிகுந்திருந்தது சத்யவதியின் கால்கள் சேற்றில் அமிழ தலைக்கு மேலாக வெள்ளம் சென்றது. அதே யமுனைதான் இன்று சத்யவதி படகுக்காரி அல்ல குருவம்சத்தின் ராஜமாதா. காலச்சக்கரம் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு முடிவை நோக்கி விரைந்து கொண்டிருந்தது. குருதேசத்தின் தலையெழுத்து இனி எப்படி இருக்கப் போகின்றது என்பதை வியாசரே அறிவார்.
- தமிழ்,மலையாள கவிதை சங்கமம்
- சாணி யுகம் மீளுது
- குருட்ஷேத்திரம் 22 (கிருஷ்ணர் என்ற புரிந்துகொள்ள முடியாத மனிதர்!)
- குருட்ஷேத்திரம் 21 (வியாசரின் சுயசரிதமே பாரதம்)
- ரொறன்ரோவில் எருமை மாட்டின் தலைகள்
- பாரதி தரிசனம் – யாழ்ப்பாணத்திலிருந்து மாஸ்கோ வரையில் !
- ஹைக்கூ தெறிப்புகள்
- அவரவர் நியாயங்கள்
- சுவர்
- ஜெர்மனி தூய செயற்கை கெரோசின் ஜெட் விமான எரித்திரவம் தயாரிக்கும் உலக முதன்மையான தொழிற்சாலை நிறுவகம்
- கடலும் கரையும்
- கறிவேப்பிலைகள்
- ஹவாய் தீவுகளில் தமிழர் கலாச்சாரம்