மரமும் கொடியும் 

This entry is part 14 of 18 in the series 31 அக்டோபர் 2021

 

 

 

ஸிந்துஜா 

சார்லஸ் எட்டாங் கிளாசுக்கு வந்த போது சாரா டீச்சரைப் பார்த்தான். அவள்தான் அவனுடைய வகுப்பு ஆசிரியை என்று பள்ளிக்கூடம் ஆரம்பித்து ஒரு வாரம் சென்ற பின் அவள் லீவிலிருந்து வந்த போது தெரிந்தது. சாரா டீச்சர் பள்ளிக்கூடம் ஆரம்பிக்கும் போதே லீவில் இருந்ததற்குக் காரணம் பள்ளி திறக்கப் பத்து நாள்கள் முன்பு அவளுக்குத் திருமணம் ஆயிற்று. பைரதி கிராஸில் இருந்த சி எஸ் ஐ சர்ச்சில்தான் திருமணம் நடந்தது என்று அவனுடன் படிக்கும் மைக்கேல் சொன்னான். அவனுடைய சித்தி அவர்களின் பள்ளி லைப்ரரியில் வேலை பார்த்தாள். 

 

சாரா டீச்சரைப் பார்த்ததும் சார்லசுக்கு அவளை மிகவும் பிடித்துப் போய் விட்டது. எப்போதும் சிரிப்பில் மலர்ந்த முகத்தை அவள் கொண்டிருந்தாள். அப்படி இருப்பவர்கள் சுற்றி இருப்பவர்களையும் அதே மனோ நிலைக்குக் கொண்டு போவார்கள் என்று ஒரு தடவை ஃபாதர் ஜேக்கப் ஞாயிற்றுக் கிழமை பிரார்த்தனையின் போது சொன்னதை அவனும் கேட்டிருந்தான். வகுப்பில் மட்டுமல்ல, அவன் ஒரு நாள்  லூலூவில் சாமான்கள் வாங்க அவனுடைய அம்மா மார்த்தாவின் கூடப் போன போது, சாரா டீச்சர்  எதிர்ப்பட்டு அவனைப் பார்த்துச் சிரித்தாள். சாரா டீச்சருடன் அவளது கணவன் வாரனும் இருந்தான். இவன் தனது அம்மாவையும், அவள் தனது கணவனையும் அறிமுகப்படுத்திய போது அவள் கணவன் சார்லசுடன் கை குலுக்கினான்  வாரன் அப்படி சார்லசின் கையைக் குலுக்கிய போது அது அழுத்தமாக, இரும்புப் பிடியாக இருந்தது. 

 

வீட்டுக்குத் திரும்பிய பின் சார்லசின் அப்பாவிடம் அவனது அம்மா சாரா டீச்சரையம் வாரனையும் பார்த்தது பற்றிச் சொன்னாள்.”ரெண்டு

பேரையும் பக்கத்துலே நிறுத்தி வச்சுப் பாத்தா புளிய மரத்து மேலே மல்லிப்பூக் கொடியை படர விட்ட மாதிரி இருக்கு.”

                                                                                

சார்லஸ் அவன் வகுப்பில் நடக்கும் விஷயங்களைப் பற்றி அவனுடைய அம்மாவிடம் வந்து தினமும் கதைப்பான். சாரா டீச்சர் ஆங்கில வார்த்தைகளை எப்படிச்  சரியாக உச்சரிக்க வேண்டும் என்று ஒரு நாள் சொன்ன கதையைச் சொன்னான்.

 

ஒரு நாள் ஒரு பள்ளிக்கூடத்துக்கு இன்ஸ்பெக்டர் வந்தார். அந்த ஸ்கூலில் ஆறாவது வகுப்பிலிருந்த மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஆறாம் வகுப்புக்குள் நுழைந்த போது ஆங்கிலப் பாட வேளை. கொஞ்சம் மறைவாக வாசலில் நின்றபடியே இன்ஸ்பெக்டர் ஆசிரியர் நடத்துவதைக் கேட்டார். 

 

ஆசிரியர்  மாணவர்களிடம் ஒரு கத்தியைக் காண்பித்து “திஸ் ஐஸ் க்னைஃப்!” என்று சொன்னார். ஐந்தாறு முறை அப்படியே சொல்லி விட்டு ஒரு மாணவனை எழுந்து நிற்கச் சொன்னார். அவனிடம் “வாட் இஸ் திஸ்?” என்று கேட்டார். அவன் பதில் சொல்லாமல் முழித்தான். மீண்டும் அவனிடம் கேட்டார். அவன் “ஐ டோன்ட் க்னோ சார்” என்றான். வெளியிலிருந்து உள்ளே வந்த இன்ஸ்பெக்டர் இருவரையும் பார்த்து “போத் ஆர் உராங்” என்று சத்தம் போட்டார். 

 

சார்லஸ் அதைச் சொல்லி முடித்ததும் மார்த்தாவால்  சிரிப்பை அடக்க முடியவில்லை. சார்லஸ் அவளிடம் “எங்க கிளாஸ் பூராவும் இப்படித்தான் சிரிச்சாங்க” என்று சொல்லிச் சிரித்தான். 

 

ஒரு நாள் வகுப்பு ஆரம்பிக்க இருக்கையில் சார்லசின் வகுப்பி

லிருந்த மார்ட்டின் அவனுக்குப் பக்கத்திலிருந்த சாலமனை அடித்து விட்டான். மார்ட்டினின் அப்பா பெரிய பணக்காரர். அந்தச் செல்வம் மார்டினின் கைக்கு அதிக நீளத்தைத் தந்திருந்தது.  அடித்த அடியில் சாலமனுக்கு உதட்டில் காயம் பட்டு ரத்தம் வந்தது. மார்ட்டின் மறுபடியும் சாலமனை அடிக்கக் கையை ஓங்கிய போது சார்லஸ் அவன் கையைப் பிடித்துத் தடுத்து விட்டான். இதனால் கோபங் கொண்ட மார்ட்டின் சார்லசைத் தாக்கியத்தில் சார்லஸ் கீழே விழுந்து விட்டான். அப்போது வகுப்புக்குள் நுழைந்த சாரா திடுக்கிட்டு “டேய், டேய் என்னடா நடக்குது இங்கே?” என்று மார்ட்டின் அருகே வந்து அவன் கையைப் பிடித்து நிறுத்தினாள். அவன் அவளிடமிருந்து முரட்டுத்தனமாகத் தன் கையை விடுவித்துக் கொண்டான். 

 

வகுப்பிலிருந்த மற்றவர்கள் டீச்சரிடம் மார்ட்டின் செய்த தவறைச் சொன்னார்கள். எல்லோரும் மார்ட்டினை டீச்சர் வகுப்புக்கு வெளியே நிற்கச் சொல்லுவாள் அல்லது முட்டிக்கால் போடச் சொல்லுவாள் அல்லது அவளது மேஜை மேல் வைத்திருக்கும் உருண்டைத் தடியால் அவனைக் கையை நீட்டச் சொல்லி நாலு அடியாவது கொடுப்பாள் என்று எதிர்பார்த்தார்கள்.

 

டீச்சர் அவனிடம் “ஏண்டா நீ இப்பிடி இவங்க ரெண்டு பேரையும் அடிச்சே? என்று கேட்டபடியே வகுப்பிலிருந்த முதலுதவிப் பெட்டியைத் திறந்து பஞ்சையும் சுத்தநீர் பாட்டிலையும் எடுத்தாள். நீர் நனைத்த பஞ்சினால் சாலமனின் உதட்டில் வழிந்திருந்த ரத்தத்தைத் துடைத்தாள்.”வலிக்குதா?” என்று அவனிடம் கேட்ட போது அவன் ஆமென்று தலையை அசைத்தான். கண்களில் நீர் நிறைந்து கொட்டி விடவா என்று கேட்டது. டீச்சர் அவள் கைப்பையிலிருந்து ஒரு கைக்குட்டையை எடுத்து அவன் முகத்தைத் துடைத்து விட்டாள்.

 

அவள் மார்ட்டினைப் பார்த்த போது அவன் பதில் எதுவும் சொல்லாது நின்று கொண்டிருந்தான். அவள் மறுபடியும் கேட்டதற்கு அவனிடமிருந்து பதில் இல்லை. சாரா அவனிடம் “சரி, உன் புஸ்தகப் பையை எடுத்துக்கோ” என்றாள். அவன் உடனே பெஞ்சு டிராயரிலிருந்து அவனது பையை எடுத்துக் கொண்டான். அவனை அவள் வீட்டிற்கு அனுப்பி அவனது பெற்றோரைக் கூட்டிக் கொண்டு வரச் சொல்லுவாள் என்று அவனும் மற்ற மாணவர்களும் நினைத்தார்கள்.

 

“நீ கடைசி பெஞ்சில் போய் உக்காரு” என்றாள் சாரா. அவன் கடைசி வரிசையில் இருந்த மாணவர்களின் பக்கத்திற்குச் சென்றான். 

 

“அங்கே இல்லே. இன்னும் கடைசியா இருக்கிற பெஞ்சியிலே போய் உக்காரு” என்றாள். கடைசி வரிசை மாணவர்களுக்குப் பின்னால் மூன்று வரிசைகளில் காலி  பெஞ்சுகளும் நாற்காலிகளும் இருந்தன. அவன் தனிமைப்படுத்தப் பட்டவனாகக் கடைசிப் பெஞ்சில் போய் உட்கார்ந்தான்.

 

அன்று மாலை சார்லஸ் அம்மாவிடம் மார்ட்டின் தன்னையும் சாலம

னையும் அடித்துக் கீழே தள்ளி விட்டதைக் கூறினான்.

 

“உங்க டீச்சர் சும்மாவா விட்டாங்க அவனை?” என்று சற்றுக் கோபத்

துடன் கேட்டாள் மார்த்தா. “நல்லா அடி கொடுத்து சவட்டினாதான் இந்த மாதிரிப் போக்கிரிங்களுக்குப் புத்தி வரும்.” 

 

சார்லஸ் அம்மாவிடம் சாரா டீச்சர் மார்ட்டினுக்குக் கொடுத்த

தண்டனையைப் பற்றிக் கூறினான். அவள் ஆச்சரியப்பட்டு “பரவா யில்லையே உங்க டீச்சர். அடிச்சிருந்தா எப்பவும் வாங்குற பனிஷ்

மெண்டு தானேன்னு அவனும் துடைச்சு விட்டுப் போயிருப்பான் இல்லே?” என்று கேட்டாள்   

 

மார்ட்டின் தன் தவறுக்கு டீச்சரிடம் மன்னிப்புக் கேட்கவில்லை. பத்து நாள்கள் சென்றிருக்கும். அவ்வளவு நாள்களிலும் மார்ட்டின் கடைசிப் பெஞ்சில்தான் உட்கார வைக்கப்பட்டான். காலையில் வரும் மாணவர்

களும் மாணவிகளும் மார்டினைக் காட்சிப் பொருளைப்  போலப் பார்க்க அவன்  வெட்கித் தலை குனிந்திருந்தான். அம்மாவிடம் சொன்ன போது அவள் சாரா டீச்சரை மிகவும் புகழ்ந்தாள்.   

 

 

அன்று அன்னை தெரசா ஃபீஸ்ட் என்று பள்ளியில் லீவு விட்டார்கள். சார்லசின் வீட்டில் எல்லோரும் காலையில் சீக்கிரம் எழுந்து குளித்து விட்டு ஹாலுக்கு வந்தார்கள். அங்கே சுவற்றில் ஆட்டை அணைத்தபடி பெரிய ஃ பிரேமில் இருந்த இயேசுவின் படத்துக்குக் கீழே ஒரு மேஜை போடப்பட்டு அன்னை தெரசாவின் புகைப்படம் நிறுத்தப்பட்டிருந்தது. ரோஜா, மல்லிகைஆகிய மலர்களால்  அலங்கரிக்கப்பட்டிருந்த அன்னையின் படத்துக்கு முன்பாக மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டிருந்தன. சார்லஸின் தந்தையுடன் மற்ற இருவரும் நின்று பிரார்த்தனை செய்து முடித்தார்கள்.  

 

மார்த்தா முந்திய தினத்திலேயே செய்து வைத்திருந்த கப் கேக்குகளை எடுத்துப் பிள்ளைக்கும் கணவனுக்கும் தந்தாள். இனிப்பாகவும் சுவையாகவும் இருந்த கேக் இன்னும் ஒன்று வேண்டும் என்று கேட்டு அவன் வாங்கிச் சாப்பிட்டான்  

 

அன்று மாலை அவன் “அம்மா, நான்  எங்க டீச்சருக்குப் போய் கேக்  

கொடுத்திட்டு வரட்டா?” என்று கேட்டான். சாரா டீச்சர் வீடு அவர்கள் குடியிருந்த நாராயணபுரா கிராசில் கிறிஸ்து ஜெயந்தி காலேஜுக்குப் பக்கத்தில் இருந்தது. மார்த்தா அவனிடம் நான்கு கேக்குகளை அழகாகப் பேக் செய்து கொடுத்தாள்.

 

அவன் டீச்சர் வீட்டை அடையும் முன் மைக்கேல் எதிர்ப்பட்டான். .

 

“மைக்கேல், டீச்சர் வீட்டிலே இருக்காங்களா?” என்று சார்லஸ் கேட்டான்.

 

மைக்கேல் சார்லசின் கையில் இருந்த அட்டைப் பெட்டியைப் பார்த்

தான்.

 

“டீச்சர் வீட்டுக்கு கேக் எடுத்திட்டுப் போறியா?”

 

ஆமென்று சார்லஸ் தலையை அசைத்தான்.

 

“இப்ப போகாதே” என்றான் மைக்கேல். “அவங்க வீட்டிலேந்துதான் 

நான் வரேன்.”

 

“ஏன் போக வேணாங்குறே?”

 

“நானும் கேக் கொடுக்கத்தான் போனேன். வாங்கிட்டு ‘தாங்ஸ், கொஞ்சம் இரு. டீ போட்டுத் தரேன்’னு உள்ளே போனாங்க. நா வாசல் ரூமுக்குள்ளே இருந்த சேர்ல உக்காந்தேன். திடீர்னு 

உள்ளேருந்து சத்தம். ரெண்டு நிமிஷத்திலே பெரிய சத்தமா

யிருச்சு. டீச்சரோட ஹஸ்பண்டுதான் அப்பிடி சத்தம் போட்டாரு. அவரு பணம் கேட்டு டீச்சர் குடுக்கலேன்னு கெட்ட வார்த்தை சொல்லித் திட்டினாரு. ‘கையை விடுங்க, முறுக்காதீங்க, ஐயோ வலிக்குதே’ன்னு டீச்சர் முனகுறாங்க. அப்ப அடிக்கிற சத்தம் கேட்டுச்சு. ‘அடிக்காதீங்க அடிக்காதீங்க’ன்னு டீச்சர் சொல்லுறதைக் கேக்காம அடி விழுந்துகிட்டே இருக்குற சத்தம். நான் பயந்து வெளிலே ஓடி வந்திட்டேன்” என்றான் மைக்கேல். அவன் பேச்சிலும் முகத்திலும் பயத்தின் சாயல் இருந்தது.

 

சார்லஸ் திகைத்து நின்றான்.

 

“நீ போகாதே” என்று மைக்கேல் திரும்பவும் சொன்னான். “வேணு

மின்னா கேக்கை நாளைக்கு ஸ்கூல்லே கொண்டு போய்க் கொடுத்

திரலாம்.”

 

சார்லஸ் “சரி வீட்டுக்குப் போவோம் வா” என்றான்,

 

அப்போது சாரா டீச்சர் வீட்டை விட்டு வெளியே வந்தாள். சற்றுத் தூரத்தில் நின்ற இவர்களைப் பார்த்து நின்று விட்டாள். சார்லஸ் அவள் முகத்தில் புன்னகை இல்லாமல் இருந்ததைக் கவனித்தான். கசங்கலாகத் தோன்றிய அவள் முகத்தைப் பார்த்து சார்லசுக்கு வாரன் மேல் கோபம் கோபமாய் வந்தது. ‘முட்டாள், ராஸ்கல்’ என்று மனதுக்குள்ளேயே வாரனைத் திட்டினான். டீச்சர் அவர்களைப் பார்த்துக் கையை அசைத்துக் காண்பித்து விட்டு அவர்கள் இருந்த திசைக்கு எதிர் திசையில் நடந்து சென்றாள்.

 

சார்லஸ் வீட்டுக்கு வந்த போது மார்த்தா அவன் கையில் இருந்த பெட்டியைப் பார்த்து விட்டு “ஏன் உங்க டீச்சர் வீட்டிலே 

இல்லையா?” என்று கேட்டாள். சார்லசின் தந்தையும் அவனை 

ஆச்சரியத்துடன் பார்த்தார். 

 

சார்லஸ் மைக்கேல் அவனிடம் கூறியதை அம்மாவிடம் தெரிவித்தான். அவள் திடுக்கிட்டு “நான்தான் அன்னிக்கே சொன்னேனில்லே அவன் அவளுக்குப் பொருத்தமில்லேன்னு!” என்றாள் கணவனிடம். 

 

சார்லஸ் அவன் அம்மாவிடம் “மார்ட்டினுக்கு செஞ்ச மாதிரி எங்க டீச்சர் அந்த ஆளுக்கும் செய்யணும்மா” என்றான்.

 

————————————-

T R Natarajan (ஸிந்துஜா) 

A 701, Carnation Apartments

K Narayanapura Cross

Hennur Main Road,

Bangalore 560077

Mob: 9844101135

 

           

 

 

 

Series Navigationஎனது கவிதை தொகுப்பான சாத்தானின் வேதம் பற்றிடாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனுக்கு எங்கள் எளிய நினைவஞ்சலி
author

ஸிந்துஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *