திருமந்திர சிந்தனைகள்: பெருவுடையாரின் மூலமும் ஸ்ரீஅரவிந்தரின் குறிப்பும்

This entry is part 10 of 17 in the series 7 நவம்பர் 2021

 

 

விஜய் இராஜ்மோகன்

 

சிறு வயது முதல் cliché ஆக கேட்ட வாக்கியம், ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பது. ரொம்ப வருடங்கள் கழித்துதான் இது திருமூலர் சொல்லிய வாக்கியம் என்பது தெரிந்தது. இவ்வாறு பாடுகிறார் திருமூலர்:

 

“யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே”

 

தன்னைப் பற்றியும் தான் ஏன் திருமந்திரத்தை பாடுகிறேன் என்று சொல்லிவரும்போது இதை சொல்லுகிறார் திருமூலர் – தான் அனுபவித்த இன்பத்தை உலகில் உள்ள எல்லோரும் அனுபவிக்க வேண்டும் என்று.

 

திருமூலர் கடவுளை நோக்கிய அகப்பயணத்தின் இலக்காக சுட்டுவது இந்த நிலையைத்தான் – திருமூலருக்கு பின்பு வந்த மாணிக்கவாசகரும் திருவாசகத்தில் சிவனை  ’ஆராத இன்பம் அருளும்’ இறைவனாக கூறுகின்றார்.

 

திருமூலர் காலம் எதுவென்று தெளிவாகத்தெரியவில்லை எனினும் எப்படியும் ஆயிரத்து இருநூறு ஆண்டுகள் முன்பாகவாவது இதை எழுதியிருப்பார். பின்பு ஆயிரமாண்டுகள் கழித்து வந்த ரமணரும் இதையே சொல்கின்றார். அவர் சொல்வது என்னவென்றால், மனம் அடங்கி நிற்கும் நிலையில் உணர்வுடன் ஒன்றியிருப்போமேயானால் தானாக மனத்தினால் மறைக்கப்பட்டு இருக்கும் பேரான ந்த நிலை கிட்டும். அப்படி நாம் அனுபவிக்கும் இன்பமானது பெரிய, புலன்களால் அளவிட முடியாத இன்பம் என்று சொல்லிவிட்டு புலன்களின் இன்பம் என்பது தென்னைமரக்கீற்றுக்கிடையே தெரியும் சந்திரனின் ஒளியைப் போன்றது என்ற உவமையையும் சொல்கின்றார்.

 

இதை படிக்கும்போது இன்னொரு திருமூலரின் பாடல் நினைவுக்கு வந்தது:

 

”ஆரறி வார் எங்கள் அண்ணல் பெருமையை

யாரறி வார்இந்த அகலமும் நீளமும்

பேரறி யாத பெருஞ்சுடர் ஒன்றதின்

வேரறி யாமை விளம்புகின் றேனே”

 

ரமணர் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு சொன்னதை திருமூலர் ஆயிரத்து இருநூறு வருடங்களுக்கு முன்பு சொல்கிறார் – இறைவன் என்பது என்ன? அது அளவிட முடியாத பெரிய, புலன்களுக்கு அப்பாற்பட்ட விவரிக்க முடியாத பெரும் இன்ப நிலை. அந்த நிலையே ஒரு ஆன்மீக முயற்சியாளன் (சாதகன்) இறுதி இலக்கு என்று. பெரும் ஆனந்தமான இந்த நிலையையே பெரும் ஒளியாக விளம்புகிறார் திருமூலர்.

 

பல ஆண்டுகளுக்கு முன்பாக அப்போது திருச்சியில் வருமான வரித்துறையில் பிரின்ஸிபல் கமிஷனராக இருந்த திரு. செந்தாமரைக் கண்ணனுடன் கங்கைகொண்ட சோழபுரம் சென்றிருந்தேன். அங்கே சில வருமானவரித்துறை ஆய்வாளர்கள் வந்திருந்தனர், வரலாற்றார்வலர்கள். அதில் ஒருவர் அங்கிருந்த பெரிய துவாரபாலகர் சிலையை காண்பித்து, அந்த துவாரபாலகர் காலில் பாம்பு சுற்றியிருந்தை காண்பித்தார் பின்பு அந்த பாம்பு ஒரு யானையை விழுங்குவதை காண்பித்தார். அதாவது, யானை என்பது மனிதனை விட பெரியது, விலங்குகளிடையே மிகப் பெரியது. அந்த யானையை ஒரு பாம்பு விழுங்குவதாக இருந்தால், அந்த பாம்பு எவ்வளவு பெரியதாக இருக்கவேண்டும். அந்த பாம்பு ஒருவரது காலை சுற்றுவதாக இருந்தால் அந்த மனிதர் எவ்வளவு பெரியதாக இருக்க வேண்டும் என்று விளக்கிவிட்டு, பின்பு அந்த மிகப்பெரிய துவாரபாலகரது கையில் இருந்த முத்திரை ‘உள்ளே இருப்பவர் எவ்வளவு பெரியவர் என்பதை என்னால் விவரிக்க முடியாது’ என்று சொல்கிறது என்றார். உள்ளே இருக்கும் சிவன் மிகப்பெரியவர் – பிருஹதீஸ்வரர்.

 

சிவலிங்கம் என்பது இன்பத்தின் குறியீடு. ஆதிமனிதன் மிக எளிமையாக இந்த குறியீட்டை இன்பத்தின் குறியீடாக மொழியும் சொல்லும் உருவாகாத காலத்தே தனது சந்ததியினருக்கு சொல்லியிருக்க வேண்டும். இந்த பிரபஞ்சமென்பதே சிவம், ஆனந்தம். காணும் பொருளுடன் (சக்தி), பின்னால் இருக்கும் சிவம் கலந்து இந்த கலவை ஆனந்த நிலையாக இருக்கிறது என்று சுட்டிக்காட்டியிருக்க வேண்டும்.  பின்னால் எவ்வளவோ மாற்றங்கள் வந்தபின்பும் சிவலிங்கம் நம்மிடையே இன்றும் வழக்கில் இருக்கிறது.

 

மீண்டும் ஸ்ரீஅரவிந்தருக்கு வருவோம் – வேதத்தில் இந்த பிருஹத் குறிப்பிடப்படுகிறது என்கிறார். ப்ருஹத் என்றால் பெரியது. பிருஹத் த்யெளஸ் என்பது பெரும் சுவர்க்கம் என்கிறார் அரவிந்தர்.

 

“there is also a greater Heaven (Brihad Dyau) called also the Wide World, the Vast (Brihat), and typified sometimes as the Great Water, Maho Arnas. This “Brihat” is again described as “Ritam Brihat” or in a triple term “Satyam Ritam Brihat” (The Secret of the Vedas – Sri Aurobindo).

 

பிரகதீஸ்வராக நாம் அறியும் நம் மூதாதையர் இராஜராஜ சோழனின், இராஜேந்திர சோழனின் பெருவுடையார்கள்,  நம்மையும் அறியாமலே அம்மாமன்னர்களுக்கு பல நூற்றாண்டுகள் முன்பு வாழ்ந்த திருமூலர் காலத்துக்கும், இன்னும் பின்னே போய் வரலாற்றுக்காலத்திற்கு முன்பு இருந்த மாமூதாதை, ஆதி மனிதனின் உள்ளுணர்வுக்கு, அகதரிசனத்துக்கு அழைத்துச் செல்கின்றனர். மீண்டும் மீண்டும் நம் இலக்கு என்ன என்பதை நினைவுறுத்திக்கொண்டே இருக்கின்றனர்.

 

 

Series Navigationஇயக்கி – புதினத்தின் முதல் அத்தியாயத்தின் முக்கிய பகுதி“தையல்” இயந்திரம்

2 Comments

  1. Avatar ஸ்ரீதர்

    தின்னை மிகவும் அருமை விஜய். இது மென்மேலும் சிறப்பாக பல அரிய கருத்துக்களை சமுதாயத்தில் பரப்பும் தளமாக மாற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.

  2. Avatar Mahesh

    அருமையான கட்டுரை. (த்யௌஸ் அல்ல.. த்யோ அல்லது த்யௌ: என்றால் சுவர்க்கம்..என நினைக்கிறேன். )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *