அமெரிக்க விமானத்தில் ரஸ்யாவின் சிகப்பு நட்சத்திர சின்னமா?

author
0 minutes, 2 seconds Read
This entry is part 8 of 17 in the series 2 ஜனவரி 2022
குரு அரவிந்தன்
அலாஸ்காவின் மிகப் பெரிய நகரமான அங்கரேய்ச்சுக்குச் சென்றபோது, அங்கே உள்ள அருங்காட்சியகத்திற்கும் ஒருநாள் சென்றிருந்தேன். வடஅமெரிக்காவின் பழங்குடி மக்கள் பற்றிய, வரலாற்று முக்கியம் வாய்ந்த பல அரிய பொருட்களை அங்கே காணமுடிந்தது. வட அமெரிக்காவின் முதற்குடிமக்களான இவர்கள், பல்லாயிரக் கணக்கான வருடங்களின் முன் ஆசியாவுடன் இருந்த நிலத் தொடர்பு காரணமாக, ஆசியாவில் இருந்து நிலம் வழியாக நடந்து வந்து இங்கு குடியேறினர். இவர்களைப் பற்றிய நிறைய தகவல்களை இந்தக் காட்சியகத்தில்  சேகரிக்க முடிந்தது.
 
இந்தக் காட்சியகத்தில் விபத்தில் சந்தித்த மிகப் பழைய விமானங்களின் சிதைவுகளையும் ஓரிடத்தில் காட்சிப்படுத்தி இருந்தார்கள். அந்த விமானங்களின் சிதைவுகள் என்னைக் கவர்ந்ததற்குக் காரணம், ‘என்ன சொல்லப் போகிறாய்?’ என்ற எனது நாவலிலும் அலாஸ்காவில் விபத்தில் சந்தித்த ஒரு விமானம் முக்கிய இடம் பெற்றிருந்தது. அதனால்தான் அங்கே காட்சிக்கு வைக்கப்பட்ட ஒரு விமானத்தின் உடைந்த ஒரு பகுதி என்னைத் திரும்பிப் பார்க்க வைத்தது. அது என்னவென்றால் ரஸ்யா நாட்டின் சிகப்பு நட்சத்திரம் பெரிதாகப் பொறித்த, இரண்டாம் உலக யுத்தத்தின் போது சுட்டு வீழ்த்தப்பட்ட ஒரு விமானத்தின் பாகமாகும். இரண்டாம் உலக யுத்தத்தின் போது ரஸ்ய விமானத்தை இவர்கள் சுட்டு வீழ்த்தினார்களா என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. ஆனால் அங்கே எழுதப்பட்டிருந்த பதாதையைப் பார்த்த போது, அந்த விமானம் உண்மையிலே அமெரிக்காவின் விமானம் என்பதுதான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அமெரிக்காவுக்குச் சொந்தமான யுத்த விமானத்தில் ரஸ்யாவின் சிகப்பு நட்சத்திரமா?, எப்படி அது நடந்தது, எப்படி இது சாத்தியமாயிற்று என்ற கேள்வி எனக்குள் அப்போது எழுந்தது.
 
இரண்டாம் உலக யுத்தத்தின் பின் பிறந்தவர்கள் என்பதால், சிறுவயதில் பெரியவர்கள் தங்கள் அனுபவங்களைப் பற்றிச் சொன்னதைத் தவிர, அதைப் பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை. இந்த யுத்தத்தின் போது ஜெர்மனியால் சுட்டுவீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானத்தில் ரஸ்யாவின் சிகப்பு நட்சத்திர சின்னம் எப்படி வந்தது என்ற கேள்வி எழுந்தபோது, அதைப்பற்றி அவர்கள் போட்டுக் காட்டிய விவரணப் படத்தையும் காத்திருந்து பார்த்தேன், அதன் பின் கணனியிலும் அதைப்பற்றித் தேடுதலும் செய்தேன். அப்போதுதான் எங்கள் காலத்திற்கு முந்திய பழைய வரலாற்று நிகழ்வுகள் சில தெரிய வந்தன. இரண்டாம் உலக யுத்தத்தின் போது, அமெரிக்கா முதலில் யுத்தத்தில் ஈடுபடவே இல்லை என்பதும் ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலை அமெரிக்காவை உள்ளே இழுத்திருந்தது என்பதும் தெரிய வந்தது.
 
 காட்சியகத்தில் பார்த்த சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானத்தின் பாகத்திற்கு ரஸ்யாவின் சிகப்பு நட்சத்திரம் பதிக்கப்பட்டிருந்ததால், வரலாற்றில் இருந்த ஆர்வம் காரணமாக அதைப்பற்றி வினாவிய போது, பல விடயங்கள் தெரிய வந்தன.
இந்த உலக யுத்தத்தின்போது ஐரோப்பாவில் ஜெர்மனியும், இத்தாலியும் ஆசியாவில் யப்பானும் ஒன்று சேர்ந்து நாடுகளைப் பிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டன. அதாவது 80 வருடங்களின் முன், அமெரிக்காவின் எதிரிகளாக ஜெர்மனியும், யப்பானுமே இருந்தன. உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த பேர்ள் ஹாபர் தாக்குதலால் உத்வேகம் பெற்ற யப்பான் நாடு 1942 ஆம் ஆண்டு அலாஸ்காவுக்குச் சொந்தமான மேற்கேயுள்ள அலுற்ரியன் தீவுக் கூட்டத்தில் அற்ரூ, கிஸ்கா என்ற இரண்டு சிறிய தீவுகளைக் கைப்பற்றி, அங்கு இராணுவ முகாமமைத்து அதைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருந்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த 40 அலுற்ரியன்களையும் யப்பான் சிறைப்பிடித்துச் சென்றது. அலாஸ்காவில் இருந்து 1200 மைல்களுக்கு அப்பால் இத்தீவுக் கூட்டம் இருக்கின்றது. 1943 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்க கடற்படை யப்பானின் ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கான உதவிகளை முதலில் தடுத்து நிறுத்தி முற்றுகையிட்டது. யப்பானிடம் பறிகொடுத்த அமெரிக்காவின் நிலம் இது ஒன்றுதான். இது அமெரிக்காவின் மானப்பிரச்சனையாக இருந்ததால், முற்றுகையைத் தொடர்ந்து 1943 ஆம் ஆண்டு மே மாதம் அமெரிக்கா படைகள் திரும்பவும் யப்பானுடன் போரிட்டு அந்தத் தீவுகளை மீட்டெடுத்தன. அந்த யுத்தத்தைக் கொண்டு நடத்திய யப்பானிய பிரபலமான கேணல் யமாஸாக்கி இறந்ததும் இந்த யுத்தத்தில்தான். இந்த விபரங்களையும் காட்சியகத்தில் உள்ள படங்கள், மற்றும் பதாதைகளில் இருந்து தெரிந்து கொண்டேன்.
 
இது ஒருபுறம் நடக்க, இதே நேரத்தில் மறுபக்கத்தில் ஹிட்லரின் கட்டளைப்படி ஜெர்மனி, ரஸ்யா மீது போர் தொடுத்து, ரஸ்யாவின் பகுதிகளை ஒவ்வொன்றாகக் கைப்பற்றிக் கொண்டிருந்தது. ஜெர்மனியின் நவீன யுத்த விமானங்களான  Luftwaffe விமானங்களோடு ரஸ்யாவின் யாக்-3 விமானங்கள் சரிசமனாகப் போரிட்டதால், ஜெர்மனிக்குப் பெரும் தலையிடியாக இருந்தது. இதனால் ரஸ்யாவின் ரெட் எயபோஸ் விமானங்களைச் சுட்டு வீழ்த்துவதில் அதிக கவனம் செலுத்திப் பெருமளவில் ஜெர்மனி அவற்றை அழித்திருந்தது. விமானங்கள் எல்லாவற்றையும் இழந்த நிலையில் ரஸ்யா அமெரிக்காவின் உதவியை எதிர் பார்த்தது நின்றது. ஜெர்மனியை வீழ்த்த வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு இருந்த அமெரிக்கா இரகசியமாக ரஸ்யாவுக்கு உதவ முன்வந்தது. அதனால் ஜனாதிபதி பிராங்கிளின் றோஸ்வெல்ட்டின் ஆலோசனைப்படி சுமார் 8,000 விமானங்ளை 1942 ஆம் ஆண்டு ரஸ்யாவின் ‘ரெட் எயபோஸ்’ விமானப்படைக்குக் குத்தகை அடிப்படையில் கொடுக்க அமெரிக்கா முன்வந்தது. ஆனால் அப்போது ரஸ்யாவின் அதிபராக இருந்த ஸ்டாலின் விமானங்களை மட்டுமே தரும்படியும், அமெரிக்க விமானிகளை உள்ளே அனுமதிக்க முடியாது என்றும் வேண்டுகோளை விடுத்தார். இதனால் அலாஸ்காவில் வைத்து ரஸ்ய விமானிகளுக்குப் பயிற்சிளை அமெரிக்கா கொடுத்தது. இதன் போது குத்தகைக்குக் கொடுக்கப்பட்ட அமெரிக்க விமானங்களில் ரஸ்யாவின் சிகப்பு நட்சத்திர சின்னங்கள் பதிக்கப்பட்டன.
 
 
யுத்தகாலத்து இராணுவம் சம்பந்தப்பட்ட அரசியல் நடவடிக்கைகள் என்பதால், வெளிநாடுகளுக்கு இது தெரிந்திருக்கவில்லை. ரஸ்யாவின் விமானப்படையை அழித்துவிட்டதாக நம்பிய ஜெர்மனி, ரஸ்ய விமானப் படையின் தாக்குதல் இருக்காது என்ற நம்பிக்கையில், ரஸ்யாவில் அகலக்காலை வைக்கத் தொடங்கியது. திடீரென ரஸ்யாவின் சிகப்பு நட்சத்திரம் பதித்த அமெரிக்க விமானங்களை ஓட்டிய, அமெரிக்காவில் பயிற்சி பெற்ற ரஸ்ய விமானிகள் ரஸ்யாவின் வான்பரப்பைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததும் ஜெர்மனி குழம்பிப் போய் விட்டது. ஜெர்மனியின் உளவுத்துறையின் தகவலில் எங்கோ தப்பு நடந்து விட்டதை ஹிட்லர் புரிந்து கொண்டாலும், கடும் குளிர்காரணமாக, தாக்குப் பிடிக்க முடியாத ஜெர்மன் படைகள் ரஸ்யாவில் இருந்து பின்வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
 
யுத்தம் முடியும் வரையும் மேலதிகமாக 3,400 விமானங்கள் அமெரிக்காவில் இருந்து ரஸ்யாவுக்குக் கொடுக்கப்பட்டன. ரஸ்யாவின் ‘ரெட் எயபோஸ்’ என்ற விமானப்படைக்கு 20 சதவீதமான விமானங்கள் அமெரிக்காவால் குத்தகைக்குக் கொடுக்கப்பட்டது. அலஸ்காவில் இருந்து சைபீரியாவுக்குச் செல்லும் விமானப் பாதையையே இவர்கள் பாவித்தார்கள். இதில் கனன் துப்பாக்கிகள் பொருத்திய பெல் பி-39 எயகோப்ரா விமானங்களே அதிகமாகக் கொடுக்கப்பட்டன. ஜெர்மனியின் விமானப்படை விமானங்களைச் சுட்டு வீழ்த்த இவ்வகை விமானங்கள் அவர்களுக்குப் போதுமானதாக இருந்தது. 48 ஜெர்மனிய விமானங்களைச் சுட்டு வீழ்த்திய ரஸ்ய விமானியான அலெக்ஸாந்தர் பொக்கிறிஸ்கின் இந்த விமானங்களைப் பற்றிப் பெருமைப்பட்டார். அதிலும் கியூ-5 ரகவிமானங்கள் அதிக வசதிகளோடு மேலானவையாக இருந்ததால் அவர்களுக்குத் திருப்தியாக இருந்தது. மொத்தமாகக் கொடுக்கப்பட்ட  விமானங்களில் 4719 பெல் பி-39 விமானங்கள் ரஸ்யாவுக்குக் குத்தகைக்குக் கொடுக்கப்பட்டன. யுத்தம் முடிந்த போது, இதில் 1030 பி-39 விமானங்களை ரஸ்யா இழந்திருந்தது. யுத்தத்தின் போது, பிரான்ஸ் விமானிகள் பாவித்த ரஸ்யாவின் 37 யாக்- 3 விமானங்களைப் பிரான்சுக்கு அன்பளிப்பாக ரஸ்யா கொடுத்திருந்தது.
 
 
1945 ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் திகதி மேற்கிலும், 9ஆம் திகதி கிழக்கிலும் ஜேர்மனி முற்றாகச் சரணடைந்தது. இதைத் தொடர்ந்து 1945 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 2 ஆம் திகதி, அமெரிக்காவின் அணுக்குண்டுத் தாக்குதலால் மிகவும் மோசமாகப் பாதிப்படைந்த யப்பான் நாடும் சரணடைந்தது. அத்துடன் 2 ஆம் உலகயுத்தத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
Series Navigationஎஸ். பொன்னுத்துரையின் எழுத்துகள்குரு வந்தனம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *