சிறுவர் நாடகம்

This entry is part 7 of 15 in the series 9 ஜனவரி 2022

 


குரு அரவிந்தன்
…………………………………………..
 

 
(பிரதியாக்கம், இயக்கம் : குரு அரவிந்தன்)
 
புலம்பெயர்ந்த மண்ணில் பொங்கலோ பொங்கல்..!
 
 
காட்சி – 1   (அப்பா, அம்மா, மகள், மகன்)
 
(வீட்டின் படுக்கை அறை. காலை நேரம், அண்ணன் கட்டிலில் படுத்து நித்திரை கொள்ளும் காட்சி. வாசலில் நின்று தங்கை அண்ணாவை நித்திரையால் எழுப்பவேண்டும். வெளிச்சம் வட்டமாக கட்டிலில் விழவேண்டும். சுப்ரபாதம் பாடல் மெதுவாகக் கேட்கவேண்டும்)
 
தங்கை: அண்ணா எழும்புங்கோ. இண்டைக்குத் தைப்பொங்கல் எல்லே.. எழும்புங்கோ அண்ணா…
 
அண்ணா: (குறட்டை ஒலி கிர்… கிர்…. என்று கேட்கவேண்டும்)
 
தங்கை: அண்ணா எழும்புங்கோ…!
 
அண்ணா: (மீண்டும் குறட்டை ஒலி)
 
தங்கை: அம்மா..! அண்ணா எழுபுறாரில்லை..!
 
(அம்மா உள்ளே வருதல்)
 
அம்மா : மகன் எழும்புங்கோ, இண்டைக்கு தைப்பொங்கல்எல்லே, எழும்பி குளிச்சிட்டு  வாங்கோ    
 
       (மகன் எழும்பாது பிரண்டு படுத்தல்)
 
தகப்பன்: விடியமுந்தி அவனை ஏன் எழுப்பிறியல். இரவிரவாய் படிச்சிட்டுப் படுத்த பிள்ளையெல்லே, விடுங்கோ கொஞ்சம் பொறுத்து எழுப்பலாம்.
 
தாய்:  இப்படியே சொல்லிச் சொல்லி அவனைப் பழுதாக்குங்கோ. நல்ல நாளில எண்டாலும் நேரத்தோட எழும்பினால் என்ன.. எழும்பு ராசா..
 
தகப்பன்: இப்ப அவன் எழும்பி என்ன செய்யப்போறான். நாங்கள் உள்ளுக்குச் சமையலறையிலதானே பொங்கப்போறம். பொங்கினாப்பிறகு எழுப்புவம்.
 
தாய்:  ஒவ்வொரு வருஷமும் இப்படி ஏதாவது சாட்டுச் சொல்லி பிள்ளைகளுக்கு எங்கட கலாச்சாரம் பண்பாடு எதுவுமே தெரியாமல் வளர்க்கப்போறீங்கள்.
 
தகப்பன்:  இப்ப என்னை என்ன சொல்லச் சொல்லுறாய்..?
 
தாய்:  நாhளைக்குப் பிள்ளைகள் ஒண்டும் சொல்லித்தராமல் தங்களை வளர்த்திட்டம்   எண்டு எங்களைக் குறை சொல்லக்கூடாது.
 
தகப்பன்: சரி சரி நல்ல நாளும் அதுவுமாய் ஏன் கத்திறாய், அவனை எழும்பிக் குளிக்கச்  சொல்லு..
தாய்:  எழும்புராசா, விடிஞ்சு போச்சு.. எழும்பி;க் குளிச்சிட்டுவா..
 
     (மகன் எழுந்து கட்டிலில் இருந்தபடி கண்ணைக் கசக்கிக் கொட்டாவி விட்டு உடம்பை முறிக்க வேண்டும். நித்திரைத் துக்கத்தில்…)
 
மகன்: என்னம்மா, விடிஞ்சு போச்சோ..? எங்களுக்குத்தான் இன்னும் விடிவு வரயில்லை எண்டு ஒவ்வொரு நாளும் கதை சொல்லுவிகளே..?
 
தாய்:  அந்த விடிவு வேற மகன், அது எங்கட இனத்தின்ர விடிவு. இண்டைக்குத் தைப்பொங்கல். இது தமிழருடைய திருநாள். கெதியாய் எழும்பிக் குளிச்சிட்டு வா.. பொங்கிச் சூரிய நமஸ்காரம் செய்யவேணும்..
 
மகன்:  சூரிய நமஸ்காரமோ..? என்னம்மா சொல்லுறிங்கள்..? இது கனடாவில தைமாதமெல்லே..? வெளியில பனி கொட்டுது. என்னண்டு சூரியனைப் பாக்கிறது..?
 
தாய்:  சூரிய பகவானைத் தெரிஞ்சால்தான் கும்பிட வேணுமே?  பாக்காமல் கும்பிட ஏலாதே..? தாய் மண்ணைவிட்டு நாங்கள் இங்கே வந்தாலும் எங்கடை பண்பாடு, கலாச்சாரத்தை மறக்கக்கூடாதெல்லே..
 
மகள்:  ஏனம்மா தைப்பொங்கல் எண்டு சொல்லுறது..?
 
தாய்:  தைமாதத்தில் வாறபடியால் தைப்பொங்கல் எண்டு சொல்லுவினம்.
 
மகள்:  ஏனப்பா நாங்கள் தைப்பொங்கலைக் கொண்டாடுகிறனாங்கள்.
 
தகப்பன்: ஊரிலை நாங்கள் இரண்டு நாள் கொண்டாடுவம். முதல் நாள் விவசாயத்திற்கு உதவி செய்த சூரியனுக்கு நன்றி சொல்லுறநாள்தான்  தைப்பொங்கல். அதாவது இஞ்சை கொண்டார்ற ‘தாங்ஸ்கிவ்விங்டே’ மாதிரி, மறுநாள் மாடுகளுக்கு நன்றி சொல்லுற நாள். சுருங்கச் சொன்னால் இயற்கையை வணங்குவது.
 
மகன்:  ஏனப்பா மாடுகளுக்குப் பொங்கிறது..?
 
தகப்பன்: அந்த நாட்களில் விவசாய இயந்திரங்கள் இருக்கவில்லை. மாடுகள்தான்  மனிதருக்கு விவசாயத்தில் உதவியாக இருந்தன. அதனால்தான்  மாடுகளுக்கு மறுநாள் நன்றி சொல்வார்கள்.  
 
மகள்: அப்ப இண்டைக்குத் தைப்பொங்கல், நாளைக்கு மாட்டுப் பொங்கல் அப்படித்தானே, வாங்கம்மா, நாங்கள் பொங்குவம்.
 
தாய்: மாட்டுப் பொங்கலைப் பட்டிப் பொங்கல் எண்டும் சொல்லுவினம். சரி, நாங்க பொங்கலுக்கு ஆயத்தப்படுத்துவம், குளிச்சிட்டு ஓடிவா ராசா..
 
மகன்: சரியம்மா, நான் குளிச்சிட்டு வாறன்..
 
     (தாய் சமையலறை நோக்கிச் செல்ல, மகன் துவாயை எடுத்துக் கொண்டு மறுபக்கம் செல்ல வேண்டும்)
 
 
காட்சி – 2
 
(தாய், தகப்பன், மகன், மகள் சமையலறையில் பொங்கும் காட்சி.)
 
மகள்: ஊரிலை எப்படி அம்மா பொங்குவீங்க?
 
தாய்:  ஊரிலை காலையில எழுந்து குளிச்சு, முற்றத்தில கோலம் போட்டு, அடுப்புக் கல்லை வெச்சு, புதுப்பானையிலை பொங்கி, படைச்சு சூரியனை வணங்குவம். இந்த உலகம் இயங்குவதே சூரியனால்தான் என்று எமது முன்னோர்கள் அன்றே கண்டறிந்திருந்ததால்தான் நாங்க சூரியனை வணங்குகின்றோம்.
 
(அதன் பின் மறுபக்கத்தில் சுவாமி அறையில் பழத்தட்டு, குத்துவிளக்கு, பொங்கிப் படைக்கும் காட்சி)
 
மகன்: அம்மா, ஊரிலை எண்டால் பொங்கேக்கை வெடிஎல்லாம் கொழுத்துவமெல்லே
 
தகப்பன்: அது ஊரிலை ராசா, இங்கை வீடுகளில வெடி கொளுத்த விடமாட்டினம்.  அப்படி கொழுத்துவதெண்டால் அனுமதி எடுக்க வேணும்.
 
மகன்:  அப்ப, பட்டம் விடலாமா?
 
தகப்பன்: ஓ ஊரிலை பொங்கலுக்குப் பட்டம் பறக்க விடுவம், இங்க இப்ப பனிக்காலம்,  பட்டம் விட முடியாது, அதனாலதான் நாங்கள் இதை ஆறாம் நிலத்திணை என்று சொல்லுறனாங்கள்.
 
மகள்: அண்ணா வெடி கொழுத்தேக்க உங்களுக்குப் பயமில்லையே..?
 
மகன்: பயமோ.. எனக்கென்ன பயம், இப்படி சின்ன வயசில் பயமில்லாமல் வெடி கொழுத்திப் பழகினபடியால்தானே எங்கடை அண்ணா, அக்காமாரெல்லாம் பெரிசா வளர்ந்தபிறகும் ஊரில எந்த வெடிச்சத்தத்திற்கும் பயப்பிடாமல் காடுமேடெல்லாம்  திரிஞ்சவை..!
 
மகள்: இங்கை எங்கடை தமிழ் ஆக்கள் எல்லாரும் பொங்குவினமே அம்மா?
 
தாய்: ஓம், அனேகமாய் எல்லாரும் பொங்குவினம்..
 
மகன்: அம்மா அங்கை எண்டால் பொங்கலண்டு அயலவை எல்லாம் வீட்டை வருவினமெல்லே..
 
தகப்பன்: இஞ்சையும் சொந்தக்காரர், நண்பர்கள் எண்டு வருவினம்தானே.. பின்னேரம் நாங்கள் கோயிலுக்குப் போவம்.
 
       (வாசல் அழைப்பு மணி அடித்துக் கேட்கிறது.)
 
அம்மா: யாரோ பெல் அடிக்கினம் யாரெண்டு பாருக்கோம்மா.
 
      (மகள் சென்று வாசல் கதவைத் திறக்கிறாள்.)
 
மகள்: அம்மா இங்கை பாருங்கோ, எங்கடை சினேகிதர் எல்லாம் வந்திருக்கினம்.
 
சினேகிதர்: பொங்கல் வாழ்த்துக்கள்.
 
மகள்: பொங்கல் வாழ்த்துக்கள்
 
மகன்: பொங்கல் வாழ்த்துக்கள்.
 
சினேகிதர் பீட்டர்: பெண்கள் வாழ்த்துக்கள்..!
 
மகன்: என்..ன..து..?
 
சினேகிதர் பீட்டர் : பெண்கள் வாழ்த்துக்கள்.
 
மகன்: அது பெண்கள் வாழ்த்துக்கள் இல்லை, பொங்கல் வாழ்த்துக்கள்,
 
சினேகிதர் பீட்டர் : (திருத்திச் சொல்லுதல்) பொங்கல் வாழ்த்துக்கள்.
 
தாய்: வாங்கோ பிள்ளைகள், இருங்கோ..
 
(சினேகிதர்களை இருக்கச் சொல்லி பலகாரம் பரிமாறவேண்டும்.)
 
மகள்:     இது வடை, இது முறுக்கு, இது லட்டு, இது வாழைப்பழம்.
 
பீட்டர்:     அது என்ன?
 
மகள்:     இது மோதகம்.
 
பீட்டர்:     மோ.. த.. க..ம். சரியா?
 
மகன்:     இப்ப பீட்டரும் எங்களோட சேர்ந்து தமிழ் கதைக்கப் பழகிட்டான்.
 
 
  (பலகாரம் சாப்பிட்டு முடிந்ததும்)
 
காட்சி – 3
 
சினேகிதி 1: நாங்கள் இப்ப என்ன செய்வம்..?
 
சினேகிதி 2: ஏதாவது கேம் விளையாடுவமா?
 
சினேகிதி 1: வேண்டாம் நாங்கள் ஒரு பாட்டுப் பாடிக்காட்டுவமே..
 
சினேகிதி 2: பாட்டுப்படுறதா..?
 
சினேகிதி 1: ஏன் உனக்குப் பிடிக்காதா?
 
சினேகிதி 2 : பாடிக்காட்டுறது என்ன நாங்கள் ஆடியே காட்டுவம்..
 
தகப்பன்:  என்ன பாட்டு, எந்திரனில ஐஸ் ஆடுற குத்துப்பாட்டே?
 
சினேகிதி 4: இல்லை அங்கிள், இது தமிழ்ப்பாட்டு..!
 
தகப்பன்:  அப்ப எங்கட பொங்கலைப்பற்றின பாட்டே..?
 
சினேகிதி 1: ஓம் அங்கிள், எங்களுக்குத் தமிழ் வகுப்பில பொங்கலைப் பற்றின பாட்டு    படிப்பிச்சவை, எங்கட ரீச்சர் அந்தப் பாட்டிற்கு நடனமும் சொல்லித் தந்தவா..
 
தகப்பன்:  டான்ஸோ..?
 
சினேகிதன்: ஓம், நாங்கள் இப்ப பாடி, ஆடிக்காட்டப் போறம் பாருங்கோ..
 
சினேகிதி 2: இங்கை பாருங்கோ நிறையப்பேர் வந்திருக்கினம். நாங்கள் ஆடுறதை    இவையும் பார்த்து ரசிக்கட்டுமன்..
 
காட்சி – 4
 
(பாடல் ஒலிக்கிறது – பிள்ளைகள் எல்லோரும் பாடி ஆடுகிறார்கள்.)
 
தைபிறந்தால் வழிபிறக்கும்
பொங்கலோ பொங்கல்
தமிழர்களின் திருநாளாம்
பொங்கலோ பொங்கல்..     (தைபிறந்தால்..)
 
கதிரறுத்துப் பொங்கிடுவோம்
பொங்கலோ பொங்கல்
கதிரவனை வணங்கிடுவோம்
பொங்கலோ பொங்கல்..     (தைபிறந்தால்..)
 
உழைப்பாலே உயர்ந்திடுவோம்
பொங்கலோ பொங்கல்
ஒன்றுபட்டு வாழ்ந்திடுவோம்
பொங்கலோ பொங்கல்..     ( தைபிறந்தால்..)
 
பாடல் ஒலிக்கப் பிள்ளைகள் ஆடிக் காட்டவேண்டும். பாடல் முடிவில் எல்லோரும் ஒன்றாக வந்து பார்வையாளர்களைப் பார்த்து  வணங்கவேண்டும்.
 
பெரியவர் ஒருவர் மேடைக்கு வந்து ‘பிள்ளைகளே நீங்கள் இங்கு பிறந்து வளர்ந்தாலும், எங்கள் தாய் மொழியாம் தமிழ் மொழியில் கதைத்து, ஆடிப்பாடுவதைப் பார்க்கப் பெருமையாக இருக்கிறது. எங்கள் மொழி, பண்பாடு, கலாச்சாரத்தை மறக்காமல் இருக்கும் உங்களுக்கு எங்கள் தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.’
 
அப்போது ஒரு பையன் பார்வையாளர்கள் மத்தியில் இருந்து ‘நில்லுங்க, நில்லுங்க’ என்று ஓடி வந்து மேடையில் ஏறி ‘நாங்கள் ஒரு செல்பி எடுப்பமே?’ என்று கேட்டு எல்லோருடனும் மேடையில் நின்று செல்பி எடுக்க  வேண்டும்.
 
(திரை மெல்ல மூடவேண்டும்)
 
சுபம்.
 
 
Series Navigationதைப்பொங்கல் தமிழர்களின் திருநாள்எமிலி டிக்கின்ஸன் கவிதைகள்
author

குரு அரவிந்தன்

Similar Posts

Comments

  1. Avatar
    எஸ்ஸார்சி says:

    நாடகம் படித்தேன்.இலங்கைத்தமிழர்கள் வாழ்க்கையை நினைக்க மனம் பாரமாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *