டில்லி நிருபர் பாண்டியன்

This entry is part 9 of 9 in the series 16 ஜனவரி 2022

 

 

 

தாரமங்கலம் வளவன்

 

பாண்டியன் ஒரு பிரபல தனியார் தமிழ் டிவி சேனலின் டில்லி நிருபர்.

 

கிழக்கு டில்லியின் மயூர் விஹாரில் வீடு.

 

நார்த் பிளாக், உள் துறை அமைச்சகத்தில் இருந்து அவனுக்கு ஒரு செய்தி கிடைத்தது. 

 

உள் துறை அமைச்சகத்தின் முயற்சியால், அசாம் மாநிலத் தலைநகர் கவுகாத்தியில், அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள், தங்களிடமிருந்த ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு சரணடையப் போவதாக.

 

கவுகாத்தி போய், அந்த செய்தியை தன்னுடைய சேனலுக்காக கவர் செய்யலாமா என்று நினைத்து, மேலும் விவரங்களைக் குறிப்பெடுக்க ஆரம்பித்தான் பாண்டியன்.

 

இத்தனை தடை செய்யப் பட்ட இயக்கங்கள், இத்தனை தீவிரவாதிகள், இத்தனை துப்பாக்கிகளுடன் சரணடைகிறார்கள் என்று வந்த கொண்டிருந்த செய்தி, திடீரென்று, மேலும் சுவாரசியமானது. 

 

காணாமல் போனதாகக் கருதப் பட்டு, பின் இறந்து போயிருக்கலாம் என்று முடிவு செய்யப்பட்ட ஒரு ராணுவ வீரனை,  அந்த தீவிரவாதிகள் கடந்த மூன்று வருடங்களாக தங்களின் பிடியில் வைத்திருந்ததாகவும், அந்த ராணுவ வீரனை,   அந்த தீவிரவாதிகள் கூட்டி வந்து ஒப்படைக்கப் போவதாகவும் சொன்னார்கள்.

 

இன்னும் ஒரு செய்தி வந்தது.

 

விடுதலை செய்யப்படும் அந்த ராணுவ வீரன், கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்த ஒரு மலைக்கிராம இளைஞன் என்று தெரிய, பாண்டியனுக்கு மேலும் மேலும் சுவாரசியம் ஏற்பட்டது.

 

இதை வைத்து, தன்னுடைய சேனலுக்கு, புரோகிராம் ஒன்று செய்ய முடியுமா.

 

கடந்த மூன்று வருடமாக காணாமல் போனதாக சொல்லப் பட்டு, இப்போது தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுதலை ஆகி வரும் அந்த ராணுவ வீரன், விடுதலை ஆனவுடன், தன்னுடைய வீட்டிற்கு ஓடோடிப் போவான் அல்லவா.  கேமராவை எடுத்துக் கொண்டு அவனுடன் கூடவே சென்று, அந்த வீரனின் குடும்பத்தார் அவனைக் கண்டவுடன் காண்பிக்கப் போகும் மகிழ்ச்சியை, அந்த இன்ப அதிர்ச்சியை, தங்களது டிவியில் கவர் செய்து ஒளிபரப்பினால் எப்படி இருக்கும். கல்யாணமானவனாக இருக்கும் பட்சத்தில், அவனுடைய மனைவி மற்றும்  குழந்தைகள் அவனைப் பார்த்தவுடன் எப்படி மகிழ்ச்சி அடையப் போகிறார்கள் என்பதை கேமராவில் பிடிக்கலாமே..

 

புரோகிராம் டைரக்டரிடம் பேசி அனுமதி வாங்கினான்.

 

யார் கேமரா மேன் என்று அவரிடம் கேட்ட போது, அதற்கு,

 

“ கேமரா மேன் இல்லை.. கேமரா உமன்..” என்றார். 

 

கேமரா உமன் என்று அவர் சொன்னவுடன், மின்னலாய் ஒரு மகிழ்ச்சி வந்தது அவனுக்கு.

 

“ யார்..” என்றான் அவன் சற்று எதிர்பார்ப்புடன்.

 

“ வசந்தி.” ” என்றார் அவர்.

 

அந்த பெயர் அவனுக்கு சற்று உறுத்தலாக இருந்தது.

 

அந்த வசந்தியைப் பற்றி அவன் கேள்விப் பட்டு இருக்கிறான்.

 

வசந்திக்கு என்ன..  

 

அவளுடைய பெயர் இப்போது வசந்தி தான்..

 

இதற்கு முன்னால் அவளுடைய பெயர் சுரேஷ்..

 

ஆமாம்.. ஆணாகப் பிறந்தவள். அறுவை சிகிச்சை செய்து கொண்டு, பெண்ணாக தன்னை மாற்றிக் கொண்டவள்..

 

பாண்டியன் இந்த டிவி சேனலின் டில்லி நிருபராக சேருவதற்கு முன்னரே இருந்து, இந்த சேனலுக்காக பகுதி நேர கேமரா உமனாக வேலை செய்கிறவள்.

 

வசந்தியும் ஒரு தமிழ்ப் பெண். 

 

இரண்டு தலைமுறையாக டில்லியில் இருக்கும் தமிழ்க் குடும்பம்.

 

விஷயத்தை போனில் சொன்னவுடன், சரி என்ற வசந்தி, ஏற்கனவே  இந்தி சேனலின், ஒரு நிகழ்ச்சிக்காக கல்கத்தாவில் தான் இருப்பதாகவும், அங்கிருந்து தானே கவுகாத்திக்கு நேரிடையாக வந்து சேர்ந்து விடுவதாகவும் சொன்னாள்.

 

ராஜ்தானியில் டிக்கெட் எடுத்து, நீண்ட பயணத்திற்கு பிறகு ரயில் கவுகாத்தி போய்ச் சேரும் போது, பாண்டியன் களைத்துப் போயிருந்தான். 

 

கல்கத்தாவில் இருந்து வந்து சேர்ந்த வசந்தியைப் பார்த்து அசந்து போய் விட்டான் பாண்டியன். அப்படி ஒரு அழகு அவள்.

 

ஆணாய் இருந்து பெண்ணாக மாறியவள் என்று யாராவது சொன்னால் தான் தெரியும்.

 

அடுத்த நாள் காலையில் பத்து மணிக்கு தீவிரவாதிகள் சரணடையும் நிகழ்ச்சியும், அந்த ராணுவ வீரன் ஒப்படைப்பும் என்றார்கள்.

 

ஒரு ஆடிட்டோரியத்தில் இந்த சரண்டர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருப்பதாகச் சொன்னார்கள்.

 

இருவரும் அந்த ஆடிட்டோரியத்திற்கு சற்று முன்பாகவே, போய்ச் சேர்ந்து விட்டார்கள். 

 

சில இந்தி சேனல்காரர்களும், உள்ளூர் சேனல்காரர்களும், இரண்டு, மூன்று ஆங்கில சேனல்காரர்களும் வந்து இருந்தார்கள். 

 

தீவிரவாதிகள் சரணடைவது, அந்த ராணுவ வீரன் ஒப்படைக்கப் படுவது எல்லாவற்றையும் வசந்தியின் கேமராவின் துணையுடன் கவர் செய்தான்.

 

ராணுவத்தினரின் பார்மாலிட்டீஸ் முடிந்தவுடன், பாண்டியன் அந்த ராணுவ வீரனிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டு பேசினான். தனது பெயர் முருகன் என்றும், தமிழ் தனக்கு தெரியும் என்றும் சொன்ன அந்த ராணுவ வீரன், கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் அட்டப்பாடி மலைப்பகுதியில் இருக்கும் சீலையூர் தனது கிராமம் என்றும் சொன்னான். 

 

முருகனுடன் அவனுடைய மலைக்கிராமம் வரைக்கும் வந்து, தான் செய்ய திட்டமிட்டு இருக்கும் டிவி புரோகிராமைப் பற்றி பாண்டியன் விளக்க, முருகன் அதற்கு சம்மதித்தான். அவனுடைய குடும்பத்தாருக்கு அவன் விடுதலை ஆனது குறித்து இப்போது எதுவும் அவன் சொல்ல வேண்டாம், அவனின் வருகை அவர்களுக்கு திடீர் ஆச்சர்யத்தை கொடுக்க வேண்டும்  என்று பாண்டியன், முருகனிடம் கேட்டுக் கொண்டான். அதற்கு சரி என்ற சொன்ன முருகன்,  தனது கிராமம், வெளி உலகத்துடன் தொடர்பு இல்லாத மலைக்கிராமம், தான் விரும்பினால் கூட தன் குடும்பத்தாருக்கு எந்த வித செய்தியும் முன் கூட்டியே சொல்ல முடியாது என்றான். மொபைல் போனோ, டிவியோ, செய்தித் தாளோ இன்னும் தன் கிராமத்தில் நுழையவில்லை என்றும் சொன்னான்.

 

வசந்தியை காமிராவை எடுக்க சொன்ன பாண்டியன்,  முருகனுடன் பேசி பதிவு செய்ய ஆரம்பித்தான்.

 

முருகன் தன்னைப் பற்றிய விபரங்களை முழுவதும் காமிராவின் முன் சொன்னான். தான் வருடம் ஒரு முறை ஊருக்கு போய் வந்ததாகவும், கடைசியாக மூன்று வருடத்திற்கு முன் போய் இருந்த போது, தன் மனைவிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்ததாகவும் முருகன் சொன்னான்.

 

திருவனந்தபுரம் எக்ஸ்பிரசில் மூன்று பேருக்கும் டிக்கெட் போட்டான் பாண்டியன். மீண்டும் நீண்ட ரயில் பிரயாணம். 

கவுகாத்தியில் இருந்து தொடர்ந்து ரயில் பயணத்தையும் காமிராவில் கவர் செய்தான் பாண்டியன். ரயில் பயணத்தின் போது வசந்தி தன்னைப் பற்றிய உண்மையை அதாவது ஆணாக இருந்து பெண்ணாக மாறியதைச் முருகனிடம் சொன்னாள். ஆச்சர்யத்துடன் கேட்டுக் கொண்டான் முருகன்.

பாலக்காடு ஸ்டேஷனில் மூவரும் இறங்கினார்கள்.  கார் வைத்துக் கொண்டார்கள். முருகனின் கிராமமான சீலையூரை நோக்கி மூன்று பேரும் போகும் போது, அட்டப்பாடியில் வாரச்சந்தை என்று தெரிய வந்தது.

 

இப்படி ஒரு கிராமிய  வாரச் சந்தையை பார்க்க தனக்கு விருப்பம் என்று வசந்தி சொன்னாள்.  அட்டப் பாடி வாரச் சந்தையையும், கேமராவில் கவர் செய்யலாமே என்றான் பாண்டியன்.

 

அந்த சந்தைக்குள் மூவரும் காமிராவோடு நுழையும் போது, திடீரென்று முருகன் யாரையோ பார்த்து அதிர்ச்சி அடைவதை, மற்ற இருவரும் கவனித்தார்கள்.

 

அதையும் வசந்தியை காமிராவில் கவர் செய்யச் சொன்னான் பாண்டியன்.

 

முருகன் அப்படி ஸ்தம்பித்து நின்றது, மும்முரமாக திணை வியாபாரத்தில் ஈடுபட்டு இருந்த ஒரு பெண்ணைப் பார்த்து.

 

“ யார் அந்த பொண்ணு..”  வசந்தி கேட்க,

 

“ அது தான் என்னோட மனைவி.. அருக்காயி..” என்றான் முருகன்.

 

“ அப்படியா.. கூட இருக்கற அந்த ஆளு யாரு..” 

 

“ தெரியல.. யார்னு பாக்கறேன்..”  என்று சொல்லி விட்டு முருகன் உற்றுப் பார்த்தான்.

 

அந்த ஆள் பக்கத்து ஊர்க் காரன் என்பது அவனுக்குப் புரிந்தது. போன முறை ஊருக்கு வந்த போது, அவனைப் பார்த்ததும் ஞாபகம் வந்தது முருகனுக்கு. 

 

அந்த பக்கத்து ஊர்க்காரனுடன், அருக்காயி நெருக்கமாய் உட்கார்ந்து கொண்டு இருக்கிறாளே.. அந்த இரண்டு பேரும் சேர்ந்து வியாபாரம் செய்கிறார்களே. பக்கத்தில் ஒரு ஆண் குழந்தை விளையாடிக் கொண்டு இருக்கிறதே.. விளையாடிக் கொண்டு இருக்கும் ஆண் குழந்தை தன் குழந்தைதான் என்பதும் புரிந்தது முருகனுக்கு.

 

“ எனக்கு ஒரு உதவி செய்ங்க.. என்னோட அருக்காயிக் கிட்ட போய் பேச்சு கொடுத்து, அவ கூட இருக்கிற அந்த ஆளு  யார்னு விசாரிங்க..” என்று முருகன், பாண்டியனையும், வசந்தியையும்  கேட்டுக் கொண்டான்.

 

பாண்டியனும், வசந்தியும் அருக்காயிடம் போய் முதலில் குழந்தையைப் பற்றி அன்பாக விசாரித்து விட்டு, நைசாக அவளுடன் இருக்கும் ஆண் யார் என்று விசாரித்தார்கள். அருக்காயி சொன்ன பதில் அவர்களுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

 

திரும்பி வந்த வசந்தியும், பாண்டியனும் முருகனிடம் எப்படி அதைச் சொல்வது என்று தயங்கி நின்றார்கள்.

 

“ சொல்லுங்க.. என்ன சொன்னா என்னோட அருக்காயி..” ஆவலாக கேட்டான் முருகன்.

 

 “ சொல்றதுக்கு கஷ்டமா இருக்கு. நீ செத்துப் போய்ட்டதா நெனச்சி, உன்னோட அருக்காணிக்கு வேற கல்யாணம் செஞ்சி வைச்சிட்டாங்களாம்.. எவ்வளவோ அருக்காயி கெஞ்சிப் பார்த்தாளாம்.. அவளைக் கட்டாயப் படுத்தி கல்யாணம் செஞ்சி வைச்சிட்டாங்களாம்.. போன மாசம் தான் கல்யாணம் நடந்துச்சாம்..”  

 

அதிர்ச்சியின் உச்சிக்கு போன முருகன் சிறிது நேரம் எதுவும் பேசவில்லை.

 

மூன்று பேரும் காரை நோக்கி மெளனமாக நடந்தார்கள்.

 

திடீரென்று வசந்தியைப் பார்த்து, “ எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா..” என்றான் முருகன்.

 

வசந்திக்கு சற்று நெருடலாக இருந்தது.

 

ஒரு வேளை, தன்னைக் கல்யாணம் செய்து கொள்ளுமாறு கேட்கிறானோ..

 

“ வசந்தி மேடம்.. நீங்க எந்த ஆஸ்பிட்டல்ல ஆபரேசன் செஞ்சிகிட்டு பெண்ணா மாறினீங்க..”

 

“ எதுக்கு கேக்கறீங்க… டில்லியில தான். பட்பர்கண்ஞ்ல ஒரு ஹாஸ்பிட்டல்ல..”

 

“ என்னை அந்த பட்பர்கண்ஞ் ஆஸ்பிட்டலுக்கு கூட்டிக் கிட்டு போங்க.. நானும் உங்களை மாதரி, ஆபரேசன் செஞ்சிக்கிட்டு பொண்ணா மாறிடறேன்…”

 

இருவருக்கும் முருகன் சொல்வது ஒன்றும் புரியவில்லை.

 

“ ஏன்.. இதுக்கும் அதுக்கும் என்னா சம்மந்தம்.. அப்படி பொண்ணா மாறிக்கிட்டா என்ன உபயோகம்..” வசந்தி கேட்டாள்.  

 

அதற்கு முருகன் சொன்னான்.

 

“ எங்க கிராமத்திலயே அருக்காணியோடவும், என் மகனோடவும் நான் தங்கி இருக்கத் தான். அருக்காணியோட அக்கா சின்ன வயசிலே காணாம போயிட்டா.. ஒரு டிரைபைல் விழா பெங்களூர்ல நடந்திச்சி. அதில, மலை வாழ் மக்களோட நடனம் ஆடறதுக்கு, எங்க கிராமத்தில இருந்து, ஒரு குரூப்  போனாங்க..  அந்த குரூப் திரும்பி வரும் போது, அருக்காணியோட அக்கா திரும்பி வரல.. அவ பெங்களூர்ல காணாம போயிட்டான்னு சொன்னாங்க.. நான் பொம்பளையா மாறி, நான் தான் அந்த காணாம போன அருக்காணியோட அக்கா, திரும்பி வந்திட்டேன்னு சொல்லிடறேன்..  அப்படி செஞ்சிட்டா, என் குடும்பத்தில ஒருத்தனா.. இல்ல…  ஒருத்தியா இருந்து, வாழ் நாள் முழுவதும், என் மனைவி அருக்காணியையும், மகனையும் கூடவே இருந்து கண் குளிர பார்த்துக் கொண்டே இருக்க முடியும்..”

 

————————————————————–

 

Series Navigationதோழி
author

தாரமங்கலம் வளவன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *