யாரே  பெரியோர்  ? 

author
1
0 minutes, 12 seconds Read
This entry is part 13 of 19 in the series 30 ஜனவரி 2022

 

     – எஸ்ஸார்சி                      

 
‘  வருந்தாதே இலக்குமணா’   சமாதானப்படுத்தினாள் சீதை.
சமாதானம் அடையத்தான் முடியுமா. இலக்குவன் கண்ணீரோடு நின்று கொண்டிருந்தான். சீதையின் முகம் இயல்பாய் இல்லை.இப்படி சினம் கூட்டிக்கொண்ட அண்ணியாரின் குரலை  அவன் கேட்டதேயில்லை.   முதன் முதலாகக்கேட்கிறான்.
‘ சுய  சிந்தனை என்ற ஒன்று உங்கள் தமயனுக்கு உண்டா ?
 நீங்கள் அதனை தெரிந்துகொண்டீர்களா ? ’ சீதை கோபமாய்க் கேட்டாள்.
‘அண்ணியாரே என்ன பேசுகிறீர்கள்  நீங்களா   இப்படிப் பேசுகிறீர்கள். என் கண்களையே என்னால் நம்பமுடியாமல் தவிக்கிறேன் தாயே’ 
‘ திருமணத்திற்கு க்காத்திருக்கும் அரசகுமாரர்களே மிதிலைக்கு வாருங்கள்  வந்து உங்கள் பராக்கிரமத்தால்    என்னிடமுள்ள  சிவதனுசுவில் நாண் ஏற்றுங்கள். தகுதியானவர் தாரமாக்கி கொண்டு போங்கள் என் பெண்ணை அறிவித்தது  என் தந்தை..அங்கேயே ஆரம்பமானது என் பிரச்சனை.’
இலக்குவன் அதிர்ந்துபோய்க் காணபப்பட்டான்.
‘சிவ தனுசு  முறிக்கப்படுவதற்கு முன்பாகவே அவரைப் பார்த்து விட்டேன்.என்னை நான் அக்கணமே  இழந்தும் விட்டேனே.   பரமனின் வில் முறிபடுவதற்கு முன்பாகவே நான் முறிந்துபோனது மெய்’
இலக்குவன் கண்களை மூடித்திறந்தான்.
‘என்னை மணம் செய்தார்  நினது தமயன்.  அவரை மணம் முடித்து   யான்  பெற்ற நலம் யாது?’
 முன்னமேயே  இளவல்  இலக்குவன்   நொந்துபோயிருக்கிறான். தன் தமயனை அண்ணியார் முதன்முதலாக கணவன் என்று அழைப்பதை நிறுத்தியிருக்கிறார். ஆனால் இதற்குமேலும் ஒரு பெண்ணுக்கு அநீதி இழைக்கத்தான்  முடியுமா என்ன? 
அண்ணியாரின் பேச்சு  வழக்கத்திற்கு மாறாகத் தடமிறங்கிப்போனதுமெய் .அவனே மீண்டும் ஒரு  சமாதானம் சொல்லிக் கொண்டான் ‘ அண்ணியார் சரியாகத்தான் பேசுகிறார்களோ.’ 
தூரத்தில் சிறிய சிறிய குடிசைகள் தெரிந்தன. அந்த குடிசைகளுக்குள்ளேதான்  வால்மீகி முனிவரின் ஆஸ்மம் இருக்கிறது..ஆஸ்ரமரத்து மாணவர்கள் ஓரிருவர்  தேரில் வந்திறங்கிய  இருவரும் என்ன பேசிக்கொள்கறார்கள் என்பதைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தனர்.  
‘ இது தவறு’ என்றான் ஒருவன்.
‘ என்ன தவறு’
‘ இப்படி நாம் பார்த்ததில்லை’
‘ இருவருமே மகிழ்ச்சியாக இல்லை. அவர்களிருவரும்  கணவன் மனைவியாய் த்தெரியவும் இல்லை. அந்தப்பெண்மணி அதிர்ந்து  பேசிக்கொண்டே இருக்கிறாள். அவன் தலை குனிந்து கேட்டுக்கொண்டே நிற்கிறான். அவர்கள் வந்திரங்கிய  தேரும் வெள்ளைக் குதிரையும் தேரோட்டியும் தூரத்தில்  அதோ பார்’
‘ பார்த்தேன்.  நமது குருபெருமானிடம் இந்தச்சேதி சொல்லவேண்டும்’
‘ வினாக்களுக்கெல்லாம் விடை தெரிந்தவர் அவர் மட்டும்தானே. அவரிடம் இதை த் தெரிவிப்போம்       வா வா’
இருவரும் அங்கிருந்து கலைந்து போயினர்.
 அந்த மாணவர்களைச் சுற்றி  மான் குட்டிகள் ஒன்றையொன்று துரத்தி துரத்தி விளையாடிக்கொண்டிருந்தன.அவை தம் மாசிலா அன்பினை ஒன்றோடொன்று  வெளிப்படுத்திய.வண்ணம்    இருந்தன.
அருகில்  ஓங்கி வளர்ந்திருந்த  மாமரத்தின் கிளையில்  புறாக்களின் கூட்டம். அவை வெள்ளை நிறத்திலும் சாம்பல் நிறத்திலும் இரண்டு  விதமாய்ப்பிரிந்து தெரிந்தன.அவை ஏகத்துக்கு இரைச்சலிட்டுக்கொண்டும் இருந்தன. சில பறந்தன சில தத்தி த் தத்தி நடந்தன. தமது கூச்சலை நிறுத்தாமல்   அவை தொடர்ந்த வண்ணம் இருந்தன. 
ஆஸ்ரமத்தின் கோசாலைக் கொட்டகை இதோ  தெரிகிறது    பசுக்கள்  மேய்ந்து முடித்துப்படுத்துக்கிடந்தன. எல்லாமே கறவை மாடுகளாய் இருக்கலாம்.. .வெள்ளைகக்குதிரைகள்    இரண்டு பாதையோரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த  ரதமொன்றின் தேர்க்காலொடு கட்டிக்கிடந்தன.அவைகளுக்கு முன்னால் அருகன் புற்கள்  பச்சைப்பசேல் என்று முட்டு முட்டாய்க்கிடந்தன.  
பாதை ஓரம் துளசி மாடங்கள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன.அவை வேறு வேறு வண்ண இலைகளை த் தாங்கியிருந்தன.துளசிமாடத்தின் மத்தியில் வெள்ளையும் காவியுமானகோடுகளால் ஓம் என்று எழுதியிருந்தது.
சீதையை க்கூட்டிவந்த தேரின்பணியாளன் அவன் ஓட்டும் தேரின் குதிரையோடு பேசிக்கொண்டிருந்தான். அவன் குதிரை மொழி அறிந்தவனாக இருக்கவேண்டும்
‘ என்னைக் காட்டில் விட்டு விட்டு  வரச்சொன்னது யார்?’ சீதை வினவினாள்.
 ‘ எனது  மேன்மை தங்கிய தமயனார்’ .
‘ ஏன் என்று கேட்டீரோ’
‘ இல்லை அண்ணியாரே’
‘ அந்தப்பழக்கம்தான்    இல்லையே’
இலக்குவன் அமைதியாக நின்றுகொண்டிருந்தான்.
சீதை மீண்டும் வினவினாள்.’ காடு வந்தது நானும்  அரச ரதத்தினின்று இறங்கி விட்டேன். உமது பணி முடிந்தது. இன்னும் என்ன?  நீர் புறப்படலாம் அல்லவா’
‘ எனக்கிட்ட பணி இது மட்டுமே ‘ இலக்குவன்  உளம் சோர்ந்துபோய்க் காணப்பட்டான்
அவன் மிகவும் குழம்பிப்போயிருந்தான்..
‘ உமது தமயனாரிடம்   எனக்கு ச்சில கேள்விகள். அவற்றிர்க்கு விடை காணவேண்டும் கேட்பீரா’
‘ கேள்விகள் எனக்குத்தெரியவேண்டும்.விடை காண்பது  பற்றிப்பிறகு பார்ப்போம்’
‘ அன்னை கைகேயி உமது அண்ணனைக்காட்டிற்கு அனுப்ப மன்னன் தயரதனிடம் தான் பெற்ற  ஒரு வரத்தைப்பயன்படுத்தினாள். தனது மகன் பரதனை பட்டத்து அரசனாக்க இன்னொரு வரத்தை பயன்படுத்தினாள்.இந்த க்கைகேயி அன்னையின் நோக்கம் பற்றி அதன் நேர்மை பற்றி உமது அண்ணனுக்கு  அய்யமே எழவில்லையா.
 தந்தை  உன்னைக்காட்டுக்குப்போ என்று சொன்னதாய் அவள்தான்  அவரிடம் சொன்னாள்.அதனையே சிரமேற்கொண்டு முடிசூட்டுவிழா நாளன்று அதே முகூர்த்தத்தில் காவி உடுத்தி    அவர் வனம் செல்கிறேன் எனப்புறப்பட்டாரே  எந்தவகையில் அது  அரச தருமம்?”
இலக்குவன் திகைத்துப் போனான். அண்ணியாரா இப்படிப்பேசுவது? இங்கு நடப்பது ஒன்றும் கனவில்லையே அதனை  ஓர்முறை உறுதி செய்துகொண்டான்.
தேரோட்டி   பைய நடந்து வந்து இலக்குவனிடம் நின்றான்.
‘ செய்தி என்ன?’
‘ எஜமானரே வணங்குகிறேன். தேரின் குதிரைகள்  உடன் மழை வரலாம் என்பதை என்னிடம் தெரிவிக்கின்றன அதை உங்களுக்குச்சொன்னேன்.  .தங்கள் உத்தரவு.
‘ புறப்படவேண்டியதுதான்,’ 
தேரோட்டி அருகில் நின்றிருந்த. அயோத்தி பட்டத்து அரசி சீதையை உற்று நோக்கினான். அவள் தாய்மை அடைந்து இருப்பதையும் அவன் கவனிக்காமல் இல்லை. அவன் கண்கள் குளமாகின.அவன் தன் கண்களைத்துடைத்துக்கொண்டான். வேகவேகமாக நடந்தான்.தேர் அருகே போய்த் தயாராய் நின்று கொண்டான்.
சீதை மீண்டும் ஆரம்பித்தாள்.
‘ மாரீசன்  பொன் மானாய் உருவெடுத்து தண்டகாரண்ய ஆஸ்ரம வாயிலில் தாவிக்குதித்து  ஓடிய போது நான் ஏமாந்துபோனேன்  உ மது  தமயனார்க்கு  அது மாயமான் என்பது தெரிந்தும் இருக்கும். என்னை ச்சரியாக வழி நடத்தவேண்டியகடமை அவருக்கு உண்டுதானே. மாயமான் பின்னே தானும்  போனது எப்படிச்சரி.?
ராவணன்  ஒரு  அந்தணனாய் உரு  மாறி வந்து ஆஸ்ரம வாயிலில் பிச்சைக்கு நின்றபோது  தாங்கள்  எனக்கு  எச்சரிக்கையாய்போட்டு விட்டுபப்போன எல்லைக் கோட்டினை நான் தாண்டினேன்    யாசிக்கும்  அந்தணர்க்கு  பிட்சை இட ச் சித்தமானேன்.  பிச்சையிட இயல்பாய்  நீண்டன கரங்கள்.அதனை எப்படித் தடுப்பது என்று .தெரியாமல்  விழித்தேன். தவித்தேன். கோட்டைத்தாண்டினேன் . அங்கு  யாசிக்கும்   அந்தணனில்லை. ஏமாந்துபோனேன்.. மெய்யாய் அவன்  ஒரு  அசுரன்  இலங்கக்குப் பேரரசன். பாவி ராவணன்.  அவன் என்னைக்கவர்ந்து போனான்.
இலக்குவன் கற்சிலைபோல் சீதை முன்னே நின்றுகொண்டிருந்தான்.
‘ வாலியை மறைந்து நின்று அம்பெய்தி நின் தமயன்  கொன்று முடித்தார்.  அப்படித்தன்னைக்கொன்று  முடிக்க எய்திய அம்பினில் ராமா என்று எழுதியிருக்க அதனைக்கண்ட  வாலி  மனம் நொறுங்கி வீழ்கிறான்.
 ‘ ராமனா’  ராமனா’என்னைக்கொன்றது எனப் புலம்பித் தீர்க்கிறான்.’  இலங்கைக்கோன் ராவணனை பிடித்து க்கொண்டு வா என்று கட்டளை இட்டால்  நான் போய் நொடியில் அவனைக்கட்டிக்கொணர்ந்து உமது  காலடியில் சமர்ப்பிக்க  மாட்டேனா. 
குரங்கின் குலத்திற்கு மானிட ஒழுக்கம் பொருத்தி என் மீது   குற்றம் சுமத்துதல் நியாயமா.  ஒரு வேண்டுகோள்  மட்டும் வைக்கிறேன் என்னைப்போல் அல்லாமல்  என்  அன்பு இளவல்  சுக்ரீவன்  நிறைவழ்க்கை  வாழவேண்டும் ஒரு போதும் தனது அண்ணனைக்கொன்றவனென்ற பழி மட்டும் அவனுக்கு வந்துவிடக் கூடாது.’  மரணிக்கும்   வாலி  வேண்டுவது இதுதானே.
 இப்படிப்பட்ட  சத்யவான் வாலியை மறைந்து நின்று கொன்று முடித்தது எந்தவகை யுத்த  தருமம்? வாலியை    யுத்தத்தில் நேராக நின்று எதிர்த்த ஒருவனுக்கு அவனுடைய பாதி பலம் வாலிக்கே சென்று  சேர்ந்துவிடும் என்கிற விஷயம் அறிந்து அப்படிச்செய்தார் உன் தமயன் என்றால் அவருடைய மனசாட்சியின் கேள்விக்குப்பதில் சொல்வதெப்படி?  வாலி குரங்கினத்துக்காரன். இத்தனை த்தரம் கூடி  அவன் பேசும் போது  உயர்ந்த  மானிடர்தான்  எப்படிச் சிந்திக்கவேண்டிய கடமை உடையவர்கள்’.
இலக்குவன் ஆகாயத்தை முறைத்துப்பார்த்தான்.
‘ மழை வந்துவிடும் என்று பார்க்கிறீர்களா’ சீதை வினவினாள்.
‘ என்னால் நிற்க முடியவில்லை. தவிக்கிறேன்’
‘ ஏன்’
விடை  சொல்லாமல் இலக்குவன் ஆகாயத்தையே பார்த்தான்.
‘ நான் ராவணனால்  அசோகவனத்தில் சிறைவைக்கப்பட்டேன். அனுமன் என்னைக்கண்டு உம் தமயனுக்கு  சேதி சொன்னார்.  என்னை  மீட்க  பெரும் யுத்தம் வந்தது. ராவணன் அழிந்து போனான். 
உன் தமயன்  என்னைத் தீயில்  இறங்கி வரச்சொன்னார்.   நான் புனிதமானவள் என்று உலகிற்கு நிரூபிக்கக் கட்டளை தந்தார்.  நானும் அப்படியே தீயில் இறங்கி வெளிவந்தேன். உன் தமயனார் எப்படித்தன்  புனிதம் காத்தார் என்பதை உலகிற்கு நிரூபிக்கத் தீயில்  இறங்கி வரத் தேவையில்லயா?. அதனைத்தான் யாரும் என்றும்  ஆண்களிடம்  கேட்கவும் மாட்டார்கள். அது சரி ’
இலக்குவனுக்குக்கைகால்கள் நடுங்கத்தொடங்கின.
‘ ஒரு சலவைத்தொழிலாளி ப்பேசினானாம். வேற்று ஊருக்குச்சென்று ஓர்  இரவு தங்கிவிட்டு வீடு திரும்பிய தன் மனைவியைப்பார்த்து  ‘ நான்  ஒண்ணும் அயோத்தி ராசா இல்லை எத்தனை நாளு யாரு வூட்டுல தங்கியிருந்துட்டு    பொண்டாட்டி திரும்பி வந்தாலும் வச்சி குடும்பம் பண்றத்துக்கு” 
அதனை   உம்  தமயனார் வேதவாக்காக எடுத்துக்கொண்டு  வயிற்றில் குழந்தையோடு இருக்கின்ற  தன் மனையாளைக்கொண்டுபோய் க்காட்டில் விட்டுவிடக்கட்டளை  உங்களுக்குத்தந்தார். தாங்கள்  என்னை க் கொண்டு வந்து காட்டில்  விட்டு விட்டு நெட்டை மரமாய் நிற்கின்றீர்.’
இலக்குவன் தரைமீது வீழ்ந்து வணங்கினான்.கதிரவன் இன்னும் ஆகாயத்திலே இருக்க எப்படி எங்கும் ஒரே இருள் என  அதிர்ந்து போனான்.
‘ வருகிறேன்’ சீதை  சத்தமாய்ச்சொன்னாள்.ஐந்து    பூதங்களும் அதிர்ந்தன.
சீதை   நடக்கத்தொடங்கினாள். அடர்ந்த காட்டினுள்  விரைவாகச் சென்று உடன்  மறைந்தாள். 
இலக்குவன் தனித்து நிற்பதை நோக்கிய தேரோட்டி தன் தேரினை பைய ஓட்டிவந்து இலக்குவனிடம் நிறுத்தினான்.  இலக்குவன் ஏறித் தேரில் அமர்ந்து கொண்டான். குதிரைகள் வேகம் எடுத்து  ஓடத்தொடங்கின. 
சீதை நடக்கவே  முடியாமல் தள்ளாடி  நடந்தாள். நெஞ்சு கனத்தது.என்ன என்னனவோ வினாக்களை எல்லாம்  மொத்தமாய்க்  கொட்டி இலக்குவனை நோகடித்துவிட்டோமா என எண்ணினாள்.இனியொருதடவை அந்த அயோத்தி இளவல்   இலக்குவனைக் காண்போமா? என்று மட்டும் அவள்  ஆழ்மனம் சொல்லியது. தன்  கணவனைக்கூட  அவள்  இனி அந்தப் பழைய படி நிலையில் வைத்துக்குக்காணப்போவதில்லை. 
 ஒரு உயர்ந்த  அரசமரம் சமீபித்தது. மரத்தடியில் நீண்ட பலகையொன்று கிடந்தது.அதனில்  அயர்வுக்கு ச்சற்று அமரலாம் என தீர்மானித்தாள். மழை வருவதற்கான அனைத்து நிமித்தங்களும் அவள் கண் முன்னே தெரிந்தன. இனி மழையில்  நனைனந்தால்தான் என்ன  நனையாமல் தன்னைக்காத்துக் கொண்டால்தான்  என்ன. இதற்குமேலும் நிகழ  பாக்கியாய் என்னவிருக்கிறது?  சீதை  தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள். கண்களை மூடித் தனது தாய் பூமாதாவை எண்ணினாள். பூமி ஒருமுறை குலுங்கியதாய் சீதை  உணர்ந்தாள். கண்கள் சிவந்து போயிருந்தன.வயிற்றில்  தங்கி  வளர்ந்து   வரும் ஒரு உயிருக்காக இந்த உடலை ப்பேணித்தான் ஆகவேண்டும். பெண் என்பதற்கு அதுவே தருமம். பிறகு  வேறென்ன? அவளே விடையும் சொல்லிக்கொண்டாள். கட்டியதுணி ஒன்றோடு அந்த அரசமரத்தின் கீழ் கிடந்த பலகையில் அயோத்தியின் பேரரசி அமர்ந்துகொண்டாள். சீதையின் கண்கள் அவள் மிகக்  களைத்துப்போயிருந்ததை அறிவித்துக்கொண்டிருந்தன.
வால்மீகி முனிவர் என்றும் போல்   மாலை வன  உலா வருவதற்காய் ஆஸ்ரமத்தைவிட்டுக்கிளம்பி வேளியே வந்தார்.
சீதையை தேரில் அழைத்துவந்து காட்டில் இறக்கிவிட்டு  தேரோட்டியும் இலக்குவனும் கிள்ம்பிச்சென்றதை கண்ட ஆஸ்ரம மாணாக்கர் இருவர்  இந்த சேதியை  தமது  குருவாகிய முனிவர்பெருமானுக்குச்சொல்லிக்கொண்டிருந்தனர். 
வால்மீகி முனியோ  மனத்திரையில் இதற்கு எல்லாம்  விடைதான் யாது என ஆராய்ந்து கொண்டிருந்தா.ர். அந்தப்பெண்    சக்கரவர்த்தி  தயரதன் மூத்த குமாரன்  ராமனின் மனைவி  சீதை      அயோத்தி அரசன்  ராமன் அவளைக் கானகத்தில் விட்டு விட்டு வா என  இலக்குவனைப்பணித்ததும் அவருக்கு மனத்திரையில் தெரியலாயிற்று.
‘எங்கே அந்தப்பெண்?’ முனிவர் மாணவர்களை வினவினார்.
‘ அதோ  பாருங்கள் அந்த அரச மர நிழலில் நீண்ட பலகையில் உட்கார்ந்து கொண்டு ஏதோ யோசனையில் மூழ்கி இருக்கிறாள்’
சரியாகவே சொன்னார்கள் இரு மாணாக்கர்களும்.
‘ வாருங்கள்  அங்கு போவோம்’
வால்மீகி முனிவர்  பைய நடந்தார். அரசமரம் நோக்கி  அவர்கள் மூவரும்சென்றார்கள்.
அரசமரத்தின்  அடியில் அமர்ந்திருக்கும் சீதை மெதுவாக எழுந்தாள்.அந்த மூவரின் வருகையை ஆவலோடு எதிர்பார்ப்பவளாக அவள் காணப்பட்டாள். உடல் களைப்புற்று க்காணப்பட்டது. கண்கள் இன்னும்  சிவந்து இருந்தன.
‘இரு கரம் கூப்பி வணங்குகிறேன் மாமுனியே  யான்  சீதை   அயோத்தி மாமன்னரின்  மனைவி’
‘ அறிவேன் பெண்ணே. அனைத்தும் அறிவேன்’
‘ தங்களைக்காண்பேன் என்று நான் கற்பனைக்கூட செய்யவில்லை.தெய்வச்செயல் எனத்  தங்கள் வருகையைக் கருதுகிறேன்’
‘  நிகழ்பவை அனைத்துமே தெய்வத்தின் செயல்கள்தான்’
‘ அப்படியா மொழிகிறீர்கள்’
‘ ஆம் அதனில் என்ன அய்யம் உனக்கு’
‘ நான் இங்கு இந்த மரத்தடியில் அமர்ந்து தங்களைக்காண்பதுவும் கூடவா’
‘ ஆம். நிகழ்பவை அனைத்தும்  அந்த ஒரு விதிப்படியே’
‘ பிரச்சனையை  இக்கணம் பூதாகாரமாக எண்ணி எண்ணி வருந்தும் எனக்கு தங்களின் விடை அருமருந்தாக அமையுமெனவே  நினைக்கிறேன்.’
‘ மிகச்சரி. நீ என்னுடன் வா எனது கு டி லு க்கு ச் செ ல் வோ ம்.’
சீதை தனது கண்களை மூடித்திறந்தாள். கரம்பிடித்த கணவனே  தன்னைக் கைவிட திக்கற்றவளாக எண்ணிய நேரத்தில் தெய்வமென இந்த மாமுனிவர் தனக்கு முன்னே தோன்றியதைச்சற்று மகிழ்வோடு நினைத்துப்பார்த்தாள்.விதி என்கின்ற ஒன்று  வாழ்க்கையில் புதிராக அவிழ்வதை ஆழ்ந்து  நோக்கினாள்.
அயோத்தி நகர எல்லை யை த் தொட்டு க் கொண்டிருந்தது இலக்குவனின் ரதம். தேரின் குதிரை த்தன் இருப்பிடம் சமீபத்தில் என்பதுணர்ந்து சிட்டாய்ப் பறந்துகொண்டிருந்தது
இலக்குவன்  தீவிர யோசனையில் மூழ்கிக்கிடந்தான்.தேரோட்டியின் கண் முன்னே ஒரு பெண்ணுருவம்  தீடிரெனத்தோன்றியது. ஒரு நொடிப்போதில்
ஓடு தேரின் சக்கரத்தில்  தன் கழுத்தைக்கொடுத்தது.குருதி மேல் நோக்கிப் பீறிட்டது.தேரோட்டியின் முகத்தில் அது பட்டுத்தெறித்தது. தேரை சட்டென்று  நிறுத்திய தேரோட்டி’ ஐயோ’ என்று அலறி முடித்தான்.
‘ என்ன நடந்தது’ இலக்குவன் அதிர்ந்துபோய்க்கேட்டான்.
‘ பெண்ணொருத்தி தேரின் சக்கரத்தில் தலைகொடுத்தாள். இதோ பாருங்கள் மனிதக் குருதியை’ 
‘ என்ன சொல்கிறாய்  நீ ‘
‘ யாரது அய்யய்யோ கொடுமை   நீயா நீயா  மோசம் போணேனே   நான் மோசம் போனேனே என் மனையாட்டி என்னப்பா  பெருங்கொடுமை நான் ஓட்டும் தேரின் சக்கரத்திலா’.    
  உடன்  அவளைத்தூக்கி நிறுத்தினான்.  தோளில்  போட்டுக்கொண்டான். சிறிது நடந்து  பின் அமர்ந்தான்.
அவன் தன் தொடைமீது  அவளின் தலையை தூக்கி வைத்து க்கதறினான் அம்மாடி என்னம்மா இது  .ஓ வென்று  கத்தினான்.கதறினான்.
‘ நீங்கள் தானே  தாய்மையைத்தொட்ட அரச மாதேவி  சீதையை  தேரில்  அழைத்துப்போய் காட்டில் விட்டு விட்டு வந்தது’. அவள்  ஈன ஸ்வரத்தில் அவனிடம் பேசினாள்.
‘ உனக்கு யார் சொன்னார்கள்’
‘ யார் சொன்னால் என்ன’
‘ கற்பிணிப்பெண்ணை  அழைத்துப்போய் காட்டில் தன்னந்தனியாக தனியாகத் தவிக்க விட்டு விட்டு  திரும்புகிறவர்கள் எல்லாம்  ஆண்மக்களா?’ கேட்டாள்.
தேரோட்டி நிலைதடுமாறினான். பதில்  சொல்லத்தெரிந்தும் அவனுக்கு   நா  சொல்ல வராமல்  தவித்தான்.
இலக்குவன் தேரிலிருந்து இறங்கி அவர்களிடம் வந்து நின்றான்.
தேரோட்டியின் மனைவி   இலக்குவனைப்பார்க்கப்பிடிக்காமல் தனது   கண்களை மூடிக்கொண்டாள்.
‘ மன்னியுங்கள்  என்னை .   என்னால்    இனி தேரோட்ட இயலாது   தாங்கள்தான்  அரண்மனைத் தேரை  ஓட்டிக்கொண்டு   போகவேண்டும்’ அவன்  ஓங்கிச்சொன்னான். சொல்லிவிட்டு தன்துணைவியை நோக்கினான்.  அவன் கண்கள் குளமாயின.
தேரோட்டியின் மனைவி    தனது கடைசி மூச்சினை  வேக வேகமாக இழுத்து  விட்டுக்கொண்டிருந்தாள். அவன் மடியிலேயே கண்கள்   குத்திட்டுக் கிடந்தாள். கணப்போதில்  மரணித்தாள்.
இலக்குவன் தேரின்  சாரதி இருக்கையில் அமர்ந்தான். தேர் அயோத்தி அரண்மனைக்குச்செல்லவில்லை.’  நேர் எதிர் திசையில் செல்’.  அவன்  குதிரைக்கு க்கட்டளை தந்தான்.
குதிரை  நான்கு கால்களையும் உயர்த்திக் கொண்டு  வேகம் எடுத்தது .ஓங்கி  ஓங்கிக்கனைத்தது.
இலக்குவன்  தனது தேரை    எதிரே தெரியும் பச்சை மலைக்குச்செல்லும்  ஒரு அகலப் பாதையில் ஓட்டிச்சென்றான்     அதனைக்கண்ட  தேரோட்டி லேசாய்ப் புன்னகைத்தான்.
தன் மனைவியின் உடல் மீது விழுந்து  விழுந்து அழுதான்.  நெஞ்சில் வேக  வேகமாய்  அடித்துக்கொண்டான். அவனும் அவள்  சென்ற  வழியே   சென்றான்.
.,…………………………………………………
Series Navigationபாலைவன நகரத்திலிருந்து ஒட்டகங்களுக்காய் ஒரு குரல் பத்திரிக்கைச் செய்தி – ஓவியத்துறையில் இதுவரை பெண்கள் அதிக அளவில் வராதது ஏன்
author

Similar Posts

Comments

 1. Avatar
  S. Jayabarathan / சி. ஜெயபாரதன், கனடா says:

  எனது சீதாயண நாடகம் இதே துன்பியல் நிகழ்ச்சியை நாடக வடிவில் காட்டுகிறது.

  சீதாயணமுழுநாடகம் முன்பு திண்ணையில் வெளிவந்தது.

  https://jayabarathan.wordpress.com/seethayanam/

  அன்புள்ள நண்பர்களே,

  “சீதாயணம்” என்னும் எனது ஓரங்க நாடகத்தைத் தமிழ்கூறும் வலை உலகம் படித்தறிந்திட மீள் சமர்ப்பணம் செய்கிறேன். இந்த நாடகத்தில் வரும் இராமன், சீதா, இராவணன், அனுமான், வாலி, சுக்ரீவன் போன்ற அனைவரும் மனிதராகக் காட்டப் படுகிறார்கள். இராம பிரானைத் தேவ அவதாரமாகக் கருதும் அன்பர்கள் என்னை மன்னிக்க வேண்டும். வால்மீகி முனிவருக்கு ஆசிரமத்தில் தன் முழுத் துன்பக் கதையைச் சொல்லி, கணவனால் புறக்கணிக்கப்பட்டு இறுதியில் தன் உயிரைப் போக்கிக் கொண்ட சீதாவின் பரிதாபச் சம்பவம் இது.

  கனிவுடன்,
  ஜெயபாரதன், கனடா

  +++++++++++++

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *