ஒரு சிறைக்கைதியின்  வாழ்வியல் அனுபவங்கள் சாந்தாராம் !

author
0 minutes, 7 seconds Read
This entry is part 15 of 15 in the series 6 பெப்ருவரி 2022

 

 

வி. எஸ். கணநாதன்                                                                                        

SHANTARAM  என்ற தலைப்பில் 2003 -ஆம் ஆண்டு 936 பக்கங்கள் கொண்ட ஒரு பெரும் ஆங்கில நாவல் வெளிவந்தது.   அதன் தலைப்புக் கீழே  இருந்த  குறிப்பிட்ட இரண்டு வரிகள் என்  கவனத்தை  ஈர்த்தன.

(வி. எஸ். கணநாதன்)

He was Australia’s most wanted man.

Now he has written Australia’s most wanted novel.    

ஆஸ்திரேலியா மெல்போர்ன் நகர் வாசி   க்ரெகரி டேவிட் ராபர்ட் என்பவரைப் பற்றிய கதை இது. தன் பயங்கர வாழ்க்கையை,  அதனால் தான் அனுபவித்த தாங்கொணா துன்பங்களை, ஒளிவுமறைவின்றி சுய சரிதை வடிவில் இவர்   எழுதியுள்ளார். ஆஸ்திரேலியாவில் கதை ஆரம்பிக்கிறது. அவர் செய்த மாபெரும் குற்றங்களுக்காக ஆஸ்திரேலியா மெல்போர்ன் கடுங்காவல் சிறையில் 1978- ஆம் ஆண்டு, அவருக்கு  19 வருட சிறை  தண்டனை விதிக்கப்பட்டது.

சிறைக்காவலர்கள் கையிலிருக்கும் பொல்லுகளை, எந்நேரமும்  தம்  இஷ்டப்படி கைதிகளை அடித்து வதைக்கத் தயங்கார்கள். அடி வாங்கிய கைதி,  திரும்பி அவர்களை தற்செயலாய் முறைத்துப்   பார்த்தானெனில்,   அவனை இரக்கமின்றி மேலும் மேலும் சித்திரவதை செய்வார்கள். அவனைச் சாடிவிடுவார்கள். இதுமட்டுமல்லாமல்,  நன்நடத்தைக்காக விடுவித்த கைதிகள் சிலரை, அதே சிறைச்சாலை  வேலைகளில் அமர்த்தி, கைதிகளின் அடாவடித்தனத்தையும்,  அவர்களிடையே நடக்கும் சண்டைகளையும் அடக்க,  இந்தக் கும்பலைப் பயன்படுத்தினர்.

இந்தக் கும்பல், தாம் சிறையில் பட்ட துன்பங்களை, தங்கள் முன்னைய  ஆதங்கத்தை, பின்னர் வந்த கைதிகள் மீது கரப்பான் பூச்சியை நசுக்குகிற மாதிரி பரிதாபமின்றி கொட்டித்தீர்ப்பார்கள். நிஜத்தில் அங்கிருக்கும் கரப்பான் பூச்சிகளுக்கும் மூட்டைப் பூச்சிகளுக்கும் ஒரே கொண்டாட்டம். அவற்றுக்கும் குறைவில்லை.  காயம் அடைந்த கைதிகள் இரத்தக் கறையுடன்   உணர்வற்று அரை உயிருடன் தூங்கும் வரை காத்திருந்து,  அந்தப் பூச்சிகள் தங்கள் தாகத்தையும் பசியையும் தங்கு தடையின்றி உறிஞ்சி   அனுபவித்தன.

சில கைதிகளுக்கு  சிறைச்சாலையிலே அப்படி வாழ்வதை விட, செத்துத் தொலையலாம்  என்ற எண்ணம் தோன்றும்.  ஆனால் க்ரெகரிக்கோ  தான் எப்படி சிறையிலிருந்து தப்பிக்கலாம் என்ற எண்ணமே தோன்றும்.

ஒரு நாள் அவனது உடம்பு முழுவதும் காயம் அடைந்து சிறைச்சாலை  மதில் ஓரத்தில் உணர்வற்றுக் கிடந்தான். சில மணிநேரத்துக்குப்  பின்னர், அவனுக்கு சற்று நினைவு வரத்துவங்கியது.    ஆனாலும் உணர்வற்றவன் போல கண்களை மூடிக்கொண்டு பாசாங்கு பண்ணினான்.  சில நிமிடங்கள் கழித்து,   அங்கிருந்த சிறைக்காவலர் சற்றும் எதிர்பாராதநேரம்,  அவர்களைத் தாண்டி சிறை முன் மதில் மேல் பாய்ந்து   வெளியே ஓடத்துவங்கினான்.  இந்த அதிசய சம்பவம்  1980   ஆம் ஆண்டு பட்டப்பகலில் நடந்தது.

அன்று முதல் அவன் தேடப்படும் கைதி ஆனான்.  ஆஸ்திரேலியா பொலிஸ் பிடி வாரண்ட் பிறப்பித்தார்கள்.  அவனோ போலிப் பெயருடன், வேறு கடவுச் சீட்டு, விசாவுடனும், சாமர்த்தியமாய்  நியூஸிலாந்துக்கு தப்பிச் சென்றான். 

ஆனால்,  க்ரெகரி  நியூஸிலாந்தில் நெடுங்காலம்  தங்கவில்லை. அங்கிருந்து வேறுமொரு கடவுச்சீட்டுடனும்,  இன்னுமொரு போலி பெயருடனும் விசா எடுத்து ஆசியா கண்டத்துக்குப் பயணித்தான்.   நாளடைவில் இந்தியாவில் பம்பாய் நகரத்தை வந்தடைந்தான்.

ஓர் உல்லாசப் பயணி,  ஊர் சுற்றி பார்க்க வந்தவன் போல அவன் பம்பாய் விமான நிலையத்திற்கு  வெளியே வந்தான். அந்நேரம், பிரபாகர் என்றொரு  உல்லாசப்பயணிகளின் வழிகாட்டி  அவனுக்கு உதவி புரிய முன் வந்தான்.   பிரபாகர் ஓர் அனுபவசாலி. க்ரெகரி போன்ற பல ஹிப்பீஸ்களை சந்தித்திருந்தவன்.

“எங்கே போதைப் பொருள், கஞ்சா, மருஜுவானா கிடைக்கும்?” என்று க்ரெகரி  கேட்டவுடன்,  பிரபாகர் தங்கு தடையின்றி தானே அவ்விடங்களுக்கு   அவனைக் கூட்டிச் செல்வேன் என்றான்.

க்ரெகரி மும்பாயில் தடம் பதித்ததும் தன் பெயரை லின்சேய் என்று மாற்றிக்கொண்டான்.

மும்பாயில் மிக வறுமைக்கோட்டின் அடித்தளத்தில் வாழும்  ஏழை மக்கள் சேரிக்கு  பிரபாகர் அவனை கூட்டிச் சென்றான். மும்பாயில் அவ்விடம் ஒரு குப்பைக்கிடங்காகத் தோற்றம் அளித்தது. தொழுநோயாளிகள் முடங்கி வாழும் பகுதிக்கு சற்று அருகாமையில் உள்ளது இந்தச் சேரி.

இங்கே தான் போதை மாத்திரை  இரகசியமாய் விற்கப்படும் தளங்கள்  உள்ளன. பல வெளிநாட்டு வெள்ளையினத்தவரும்,  கள்ளக் கடத்தலில்  ஈடுபடுவோரும் மலிந்து  கிடக்குமிடம் .   

சர்வதேச பொலிசாரால் தேடப்படும்  லின்சேய் என்ற க்ரெகரி  போன்றவனுக்கு, பதுங்கி வாழ  எல்லா  வசதிகளும் இம்மாதிரி சேரிகளில் கிடைத்தன .  ஆகவே   பிரபாகரின் யோசனைப்படி  லின்சேய்  இங்கே  தனக்கொரு இருப்பிடத்தை அமைத்துக்கொண்டான்.

அவனுக்கு ஹொரா என்ற பெயரைச்  சூட்டினார்கள் .  சேரிகளில். சிங்களத்தில்  ஹொரா என்றால் கள்ளன்.   ஆனால்,  இவ்விடத்தில் வெள்ளைத்தோல் படைத்தவர்களை ஹோரா என்றுதான் குறிப்பிடுவார்கள்.  

இந்தக் காலனியின் முடிசூடா  இராசாவாக விளங்கியவன் காதர் பாய். இவன் மாபியாக் கும்பலின் மறைமுகத் தலைவன். எல்லோருக்கும் நல்லதையே சொல்பவன், நல்லதையே செய்பவன். ஆகவே மக்களின் அன்பையும் மரியாதையையும் இவன் பெற்றவன்  என்பதில் ஆச்சரியம் இல்லை. காதர் பாய்  தலைமையில்தான் கள்ள நோட்டு தயாரிக்கப்பட்டது.  கள்ள அமெரிக்க  டொலர் நோட்டுகளை அசல் நோட்டுகள்  போன்று தயாரிப்பதிலும், போதை மருந்துகளை வாங்கி விற்பதிலும் பெருந்தொகை சம்பாதித்துப் பதுக்கி இவன் வைத்திருந்தான்.

அம்பானி இத்தனை கோடி வைத்துள்ளார் என்றால், காதர் பாய் அவற்றிலும் மேலதிகமாக பதுக்கி வைத்திருக்கிறான் என்று சொல்லுவார்கள். 

பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கும் ஈரான் தீவிரவாதிகளுக்கும் பணத்துடன், போராளிகளையும் அனுப்புவான் என்றும் கூறுவார்கள். ஆகவே அவனுக்கு எதிரிகள் இல்லாமல் இல்லை. அடிக்கடி பிராந்திய போர்  நடக்கும். கொசுவை அடித்துக் கொல்லுவது போல எதிரிகளை உடனுக்குடன் களை பிடுங்குவார்கள்.

லின்சேய்  காதர் பாய் கட்சியைச் சேர்ந்தவன்.

 மடாம் சொயுசு என்றொரு இளம் பெண்,  தருணத்துக்கு ஏற்ப தன் பெயரை மாற்றி, வெளிநாட்டு இளம் பெண்களைக் கவர்ந்து விபச்சார விடுதி நடத்துபவள். இவள்  பல அபலைப் பெண்களைக் கெடுத்து தெருவில் விடுவதுமட்டுமல்லாமல், அவர்கள் வாழ்வையே அழிப்பவள்.  சிவசேனா கட்சியினர்  இவளின் மாளிகையைத் தீக்கிரையாக்கி அழித்தொழித்தார்கள் என்று பரவலாகப்  பேசப்பட்டது  அந்த  வட்டாரங்களில்.

பம்பாய்  சேரி  மக்கள் நாள் கூலி வேலை செய்து வயிறு வளர்ப்பவர்கள்.  அவர்கள் பிற ஊர்களிலிருந்து இங்கு வந்து கட்டிட வேலையிலும் தெருக்கள் அமைக்கும் வேலையிலும் ஈடுபடுவர். வேலை இல்லா நாட்களில் வீட்டில் பட்டினி. அல்லது பிச்சை எடுப்பர்.

இவர்களுக்கு தங்க இருப்பிடமில்லாதுபோனால்,  சாலை ஓரத்தில் படுத்துறங்குவார்கள்.  அல்லது வெற்றிடம் கண்டால் அதில் ஒரு குடிசை அமைத்து வாழ்வார்கள்.   பம்பாய்  பொலிஸ்  அடித்து விரட்டினாலும்,  காளான் முளைத்த மாதிரி சீக்கிரம் வேறு   வெற்றிடம் தேடியோ, வேறு சாலை ஓரமாகவோ வாழ்க்கையுடன் போராடுபவர்கள்.  தங்கள் சொற்ப உடைமைகளை முதுகில் சுமந்து வாழும் பரிதாபத்துக்குரிய சனங்கள் இவர்கள்.

இவர்களுக்கு குழாய்த்  தண்ணீரோ   மலசக்கூட வசதிகளோ  கிடையாது. சமூக நலன்கருதி பம்பாய் நகர சபை சில வேளைகளில் அவர்களுக்கு போதிய வசதிகள் அமைத்துத் தருவார்கள் என்று உத்தரவாதம் கொடுப்பார்கள். தேர்தல் நேரத்தில் அது ஒரு வாக்கு வங்கியாக உருவெடுத்து, அங்கிருக்கும் தாதாக்கள் யாருக்கு வாக்கு அளிக்கவேண்டும் என்று நியமிப்பர். ஆனால்,  தேர்தல் முடிந்த கையோடு அவர்கள் அந்தப் பக்கமே வரமாட்டார்கள்.

“லின் பாய், உன்கிட்டே ரொம்ப நாளா கேட்க வேண்டுமெண்டிருந்தேன்,” என்றான் காதர் பாய் ஒரு நாள்.  பீடா வெற்றிலைச் சுருளை வாயில் திணித்து.   “உன் பின்னணி என்ன? நீ எந்த ஊரைச்சேர்ந்தவன்? நீ ஏது சொன்னாலும் எனக்கு உன் மீதிருக்கும் பாசம், உன்மீதிருக்கும் மரியாதை இம்மியளவும் குறையாது, லின்.” என்றான்.

லின் காதர்பாயை சிறிது நேரம் மௌனமாய் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு காதர்பாயின் சிநேகிதம் கிட்டியது ஒரு வரப்பிரசாதம் என்றே எண்ணினான்.

“நான் ஏன் கேட்கிறேன்னா, நீ எப்படி இந்தச்   சேரி கூட்டத்தோடு ஒருவனாக வாழ்கிறாய்? உனக்கு போதிய வசதி இருக்கு. ஆகவே  ஏன்  நல்ல ஹோட்டல்லயே தங்காமல், இந்தமாதிரியிடங்களில் இருந்து, உன் இளமைக் காலத்தை வீணாக்குகிறாய்?”

“என் இளமைப் பருவத்தில் கெட்ட சகாக்களுடன் தொடர்பு கொண்டு,    போதைப் பொருள் பாவிப்புக்கு நான் அடிமையானேன். அதன் விளைவால் என் திருமண வாழ்க்கை பாதிக்கப்பட்டது.  இதனை அடுத்து, என் பாசத்துக்குரிய அன்பு மகளின் பராமரிப்பை நான் இழக்க நேர்ந்தது  என்னை மிகவும் பாதித்தது.  

“அந்த நாட்களில் எனக்குப் பைத்தியம் பிடித்திடுமோ என்று அஞ்சினேன். இந்த நிலைப்பாடு என் போதைப்பொருள் பாவிப்பை மேலும்  அதிகரித்தது. இல்லற வாழ்வு மட்டுமல்ல,  இருந்த வேலையும் தொலைந்து போனது என் நடத்தையால்.  அப்போ போதை மருந்து வாங்க பணம் இல்லாத கட்டத்தில், கொள்ளை அடிக்கத் துவங்கினேன்.

“இதன் காரணமாக ஆஸ்திரேலியா மெல்போர்னில் பத்தொன்பது வருட சிறைத்தண்டனை எனக்கு விதிக்கப்பட்டது. அந்த நரக வாழ்க்கையிலிருந்து தந்திரமாகத் தப்பினேன்.

பொலிசாரிடம் இருந்து பதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கையில்,  ஒரு நாள் என் பல்கலைக்கழக,   என் அபிமான   பேராசிரியரைத்  தேடிச்சென்றேன்..

அவர் ஒரு philosopher. அவர் எனக்கு நல்ல அறிவுரை அளித்தார். “உன் வாழ்க்கை இனிமேல்தான் துவங்குகிறது.   யார் கிட்டேயும் உதவி வேணும் என்றால் கேட்கத்  தயங்காதே. ஆனால், கொள்ளை, கொலை செய்வதை அறவே விட்டிடு. இனிமேல் கையில் துவக்கு எடுக்கப் படாது ” என்றார்.

அவர் சந்திப்பு எனக்கு ஒரு புதிய திருப்பமாய்  அமைந்தது.  கெட்ட சிநேகிதரிடம் இருந்து விலகினேன் என்றாலும், போதைப் பொருள் பாவிப்பை சடுதியில் விட முடியவில்லை, காதர் பாய்.

“அதிலிருந்து என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக விடுவிக்க எத்தனிக்கிறேன். அப்படிச் செய்தால்தான் என் மகளை மீண்டும் சந்திக்க வாய்ப்பு கிட்டும். நான் என் ஊருக்குத் திரும்பிப்போனால்,   சிறைவாசம் காத்திருக்கும்.  அதை ஒழுங்காய் நான் முடித்த பின்னர்,  மகள் என்னைக் கட்டாயம் மன்னித்து விடுவாள்  என்ற   நம்பிக்கையுடன் சதா படுக்கைக்குப் போறேன், பாய்.”

ஒரு நாள் காதர் பாய் வீட்டில் லின்சேய் தேநீர் அருந்திக்கொண்டிருந்தான். அப்போ ஒரு சிறுவன் அங்கே வந்தான். “இவன் என் சகோதரி மகன், தாரிக்,” என்றான் காதர் பாய். “இவனை நீ கூட்டிச் சென்று உன் வீட்டில் வைத்திரு. இவனுக்கு ஆங்கிலம் பேச எழுத கத்துக்கொடு,” என்றான்.

அந்தப் பையன் லின்சேயைப் பார்த்து பயந்து மிரண்டான்.

“வேண்டாம். இவனை என்னுடன் கூட்டிச் செல்ல மாட்டேன். இந்த மாதிரி மாளிகை வீடுகளில் இருக்கும் வசதி என் குடிசையில் இல்லை,”. என்றான் லின்சேய்.

“இது வேண்டுகோள் இல்லை. இதை நீ கண்டிப்பாய் செய்யணும் லின். சேரியில் வாழும் ஜனத்துக்கு எவ்வளவு கஷ்டம் உள்ளன என்று இவன் அறிய வேண்டும். அப்போதான் மனிதாபிமானம் பிறக்கும் எங்கள் குழந்தைகளுக்கு,” என்றான்  காதர் பாய்.

வந்த கோபத்தை லின் அடக்கி, “நீங்கள் எங்கள் இருவர் வாழ்வுடன் விளையாடுறீர்கள். நான் கூட்டி போக மாட்டேன்,” என்று எழுந்தான்.

ஆனால்,  காதர்பாய் சிறுவனை வற்புறுத்தி லின்னொடு அனுப்பினான்.

“மூன்றே மாசங்களில் இவனுக்கு  ஒழுங்கா ஆங்கிலம்  பேச,  எழுதக் கத்துக்கொடு. நானே அங்கு வந்து இவனை திருப்பி வீட்டுக்கு கூட்டியாந்திடுவேன்.”

செய்வதறியாது லின் அவனை வெளியே கூட்டிச்சென்றான். பையன் தன் துணிமணி  பேக்கையும் புத்தகம் ஒன்றையும் எடுத்துக்கொண்டு  லின் பின்னாலே நடந்தான்.

சிறிது தூரம் இருவரும் நடந்து கொண்டிருக்கையில்,  ஓட்டம் எடுத்தான் பையன். லின்னுக்கு கோபம் வந்து அவனைத் துரத்திப் பிடிக்கமுன்னர்  சிறுவன் தப்பி ஓடினான்.  அவன் பள்ளிவாசல் உள்ளே கால் அலம்பிவிட்டு தொழச் சென்றான்.

தாரிக் என்ற அந்தச்சிறுவன்  வெளியே வந்ததும் லின்  தணிந்த குரலில், “இனிமேல் என்னை கேளாமல் இப்படி ஓடி விடாதே, “ என்று எச்சரித்தான்.

அச்சிறுவன் சேரி அருகே வந்ததும், கொஞ்சம் தடுமாறினான். தெருவில் மலசல நாற்றம் மூக்கைத் துளைத்தது. மூக்கைப் பொத்தியவாறு  லின் பின்னாலே  அவன் நடந்தான். லின்னின் இருப்பிடம் வந்ததும்,  அந்தச் சிறிய இடத்தில் சிறுவனுக்கு தனிப் படுக்கையும், படிக்க வசதியும் ஒதுக்கிக்  கொடுத்தான் லின்சேய். .

ஆரம்பத்தில் இருவர் இடையே பேச்சுவார்த்தை குறைவாய் இருந்தது. ஆனால்,  நாட்கள் செல்லச்செல்ல சிறுவன் படிப்பில் ஆர்வம் காட்டினான். அது லின்னுக்கு மிக்க சந்தோசத்தை அளித்தது.

ஹிந்தி உருது பாஷையில் பேச்சு வார்த்தையை நிறுத்தி, தனியே ஆங்கிலத்தில் மட்டுமே உரையாடினார்கள். அவனுக்கு ஏற்ற சாப்பாடு, பால் என்று லின் வாங்கி கொடுத்தான். லின் வெளியே போகும் போது,  தாரிக்கை பக்கத்தில் குடியிருந்த தன் நெருங்கிய நண்பர் பாதுகாப்பில் விட்டுச் செல்வான். சிறுவன்  அங்கிருந்து படிப்பான். லின் திரும்பி வந்ததும் இருவரும் லின்னின் இருப்பிடத்துக்கு  வந்துவிடுவார்கள்.  ஒரு நாளில்  பல முறை தாரிக்  தொழுகை செய்வான். அவன் வணங்கும் மசூதிக்கு வெள்ளிக் கிழமை நாட்களில் லின் கூட்டி சென்று  அழைத்து வருவான்.

இப்படி மூன்று மாதங்கள் ஆனதும்,  ஒரு நாள் இரவு காதர் பாய் லின் வீட்டுக்கு  வந்தார். தன் மருமகனின் சந்தோசமான தோற்றத்தைக்கண்டு மனமகிழ்ந்தார்.

அவர்கள் பலதை பற்றியும் பேசிக்கொண்டிருக்கையில்  சேரி வாசி ஒருவன் ஓடி வந்தான். “லின்பாய், என் மவனுக்கு பாம்பு கடிச்சிட்டுது. அவனை காப்பாத்துங்க,” என்றதும், உடனே லின் தன் மருந்துப்  பெட்டியுடன்  அவன் பின்னே  விரைந்தான்.  

லின்சேய் ஒரு quack doctor.  பூச்சி கடி, காய்ச்சல் போன்றவற்றுக்கு உடனே நிவாரணம் அளிக்க ஏராளமான மருந்து வகைகளை தன் செலவில் வாங்கி வைத்திருந்தான். இரவோ, பகலோ, கொட்டும் மழையோ, எவர் அவனிடம் உதவி கோரினாலும் அவர்களுக்கு  மருத்துவ உதவி அளிக்கத் தயங்கான்.

இவன் பம்பாயில்  Arthur Road   சிறையிலும் சித்திர வதைக்குள்ளானான். அவனைப் பட்டினி போட்டார்கள்.  இருந்த எடையிலும் பார்க்க அவனுக்கு  பாதி எடை குறைந்தது அந்தச் சிறையில். அவன் சாகக் கிடந்த நிலையில் காதர் பாய்  தன் நண்பன் லின்சேயை விடுவிக்க சிறை அதிகாரிகளுடன்   தொடர்பு கொண்டான். இதனை அடுத்து லின்சேய்க்கு  சிறையிலிருந்து விடுதலை கிடைத்தது.   

இந்த அசாதாரண மனிதன்,   லின்சேய் என்ற க்ரெகரி டேவிட் ராபர்ட், பற்றி நிறைய விடயங்கள் உள்ளன.

இவன் SHANTARAM  என்ற ஆங்கில நாவல் மட்டுமல்ல, வேறு புத்தகங்களும்  எழுதியிருக்கிறான்.

SHANTARAM  திரைப்படமாகவும் தொலைக்காட்சித் தொடராகவும் தயாராகியிருக்கிறது.

 

—0—

Series Navigationகவிதையும் ரசனையும் – 26
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *