அயலாள் தர்மினி கவிதைகள் – வாசிப்பு அனுபவம்:  அவதானிப்பின் ஊடாக உணர்வுகளை புரிந்துகொள்ளல்….!

author
0 minutes, 1 second Read
This entry is part 5 of 11 in the series 27 பெப்ருவரி 2022

               

                                 தேவா ஹெரால்ட்  – ஜெர்மனி

 

 

 

கவிதையை, ஓவியத்தை புரிந்துகொள்ள தனித்த ஒருமனமும், ரசிப்பும் வேண்டும். இவை ஒருவருக்குத் தரும் செய்தி இன்னொருவருக்கு வேறுமாதிரியான கருத்தைத் தரும். அவரவரின் அனுபவங்களுக்குள்ளால் கவிதையின் நாதத்தை , ஓவியத்தின் உயிர்ப்பை பெறமுடியும்.

 

கலைஆக்கதாரர்கள் முன்வைக்கின்ற பொருள் அல்லது சொல்ல முயலும் விடயம் என்னவென அங்கு அனுபவிப்போர் அதை  கிரகிப்பாக மட்டுமே செய்யலாம். கூற வேண்டிய கருத்தை அழுத்தம் தருவதற்கு கட்டுரையில்,  சிறுகதையில், நாவலில் சொற்களால் பல பக்கங்களுக்கு நீட்டலாம். கவிதையோ சுருக்கமான மொழியில், நுணுக்கமாக விடயத்தை சொல்கிறது. கவிதையிலே ஓவியத்திலே அழகும் காணலாம். ஆழமும்  காணலாம். அழுத்தமும் காணலாம்.

 

எனது இந்த முன்மொழிவுகளோடு தர்மினியின்,  அயலாளுக்குள் நுழைந்தேன்.

 

அட்டைப்பட ஓவியமும்,கவிதைதொகுப்பின் தலைப்பும்:

 

அயலாள் ஓவியம் அறிமுகப்படுத்தும்  பெண் அயலிலே இருப்பவர். நண்பி. அருகிருந்து வாழ்வை கவனிக்கிறார், வேறோரு பார்வையால்  இந்த உலகை கவனிக்கிறார், அல்லது பக்கத்து வீட்டுக்குள்ளால் படலைக்குள்ளால் எட்டிப் பார்த்து இன்னோரு வீட்டின் வாழ்வியல் பிரச்சினைகளை தன்  உணர்வுகளில் சித்தரிக்கிறார் என்ற பார்வையை உணர்த்தும் சித்திரம் என பல பொருள்  கொள்ளலாமோ. ?

அப்படி கவனிப்பதன் ஊடாகத்தானே மற்றவரின், சமூகத்தின் வாழ்வியலை, சந்தோசங்களை,  அல்லல்களை  உணர்வுபூர்மாக புரிந்துகொள்ளமுடியும். மனதில் சுமக்கின்ற சுமைகளை  மற்றவரிடம் பகிர கவிதை, ஓவியம், நாவல், சிறுகதை, இசை,  நாடகம் என இன்னும் பல வடிவங்கள் தேவையாகின்றன.

 

சொந்த நிலத்திலிருந்து கட்டாய பெயர்ப்பு, அகதிப்பயணத்தை ஆரம்பித்து வைக்கிறது. அது தொடங்கிய இடத்திலிருந்து, தற்காலிக இருப்புவரை தொடரும் துயரங்கள், வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் தவிப்பன. அகதிகளாக வாழ்தலை எவருமே தேர்ந்தெடுப்பதில்லை. அது அவர்கள் மேல் போர், வறுமை, தீ, வெள்ளம், காலநிலை மாற்றம், வாழ்நிலத்திலிருந்து துரத்தப்படல் போன்ற இன்னும் பல காரணிகளால் திணிக்கப்பட்டிருக்கிறது. தர்மினியின் கணப்பற்றவீடு உள்ளாலும், வரிசைக்குள்ளாலும் இன்னும் பல கவிதைகளுக்குள்ளாலும் அகதியாக்கப்பட்டோரின் தொடரும் துயரங்கள் கனக்கின்றன.

  

வந்தடைந்த நாட்டின் மொழியை நன்கு கற்று, சொந்தநாட்டு மக்களின் பண்பாடு, கலாச்சாரங்களை மதித்து வாழ்ந்தாலும், வாழும் நாட்டிலே சகிக்க முடியாத சந்தர்ப்பங்களும், நிலைமைகளும் ஏற்படுவதை தவிர்க்கமுடியாது. புகலிடத்தின் அந்நியம், அந்நியமாகத்தான் இருக்கிறது என்பதே உண்மை. இளம் சந்ததியும் வீட்டில் ஒரு காலும் வீதியில் ஒருகாலுமாய் நிற்கின்றனர். அவர்கள் சந்திக்கும் வெளியுலக சமூக

வாழ்வியல் இடர்ப்பாடுகள் நிறைந்தவை. ஒரிஜினலாக நீ யார்? அயலாள் கேட்கிறாள்.

மொழியின் சுழல்வுகளுக்குள்ளாலும்  உழல்வதும் வாழ்நாள் குழப்பமே.

குடைபிடிக்கும் அளவுக்கு பனிமழையிலும் கவிதையும்

தன்னை நிரூபிக்க மகளின் சாமத்தியசடங்கை நேர்முக வர்ணனையோடு கொண்டாடுவார் கவிதையும்

கேள்வியற்ற, விரிவான பார்வையை விரிக்க விரும்பாத வீம்புத்தனத்தின் முகங்களை முன்னிறுத்துகிறது.

 

தர்மினியின் கவிதை மொழியில்: அம்மா வாங்கிவரும் பச்சை தோடங்காய் மணம்.,எழுகின்ற வாசனை பசுஞ்சாறு உடலிலா, மனதிலா..?   

பழமையின், இளமையின் இனிய நினைவுகளை காலம் அடித்துச்செல்லாது.  செல்லவும் முடியாது. ஒட்டிக்கொண்ட நினைவுகளும்  சிலபல சமயங்களில் நம்மை உராயும். தர்மினியின் முதல் இரு கவிதைத் தொகுப்புக்களிலும் அவரின் மூன்றாவது தொகுப்பான அயலாளிலும் மனதிலும் உடலிலும் தாய்மண்ணின் மணத்தை பரப்பும் பல படைப்புக்கள் உள்ளன. முதலிரண்டு கவிதைத் தொகுப்புகளில் இருக்கும்  படைப்புக்களோடு மூன்றாவது தொகுப்பிலுள்ள கவிதைகளை ஒப்பிடும்போது,  ஒருமாற்றமொன்றை கவனிக்க முடிந்தது. காலம் யாவரையும் ஏதோ ஒருவகையில் மாற்றிக்கொண்டே போகும் வல்லமை கொண்டது. வாழும்சூழல் அனுபவங்கள், வாசிப்பு, சிந்தனைகள் ஆக்கங்களில் குவிவது இயல்பானதே. அயலாள் கவிதைகளில் இம்முயற்சிகள் நிகழ்ந்திருக்கின்றன. ஆமாம், மாற்றமில்லாதது எங்கே இருக்கிறது?

 

மேலும் கவிதைகள் வாழும் நாட்டின் அவதிகள், குழப்பங்கள், அவசரங்கள், மனிதரை நெருக்கும் சட்டங்களையும், உழைப்பு உன்னை விடுதலை செய்யும் ஹிட்லர் கூச்சல்களையும்  பதிவாக்கியுள்ளது.

 

பசி  தொடங்குகிறது கவிதையிலும் எழுதாமல் விட்டவைகளின் அனுதாபக்கரச்சல் பசியைவிட மோசம் வரிகளிலும் கவிதை ஆக்கம் நினைப்போடு அழிந்துபோகும் வேதனை புரிகிறது. பசி பரபரப்பில் கற்பனையை காற்றில் பறக்கவேண்டியதாகிறது.

 

 வெங்காயம் வெட்டிக்கொண்டிருந்தபோது தோன்றிய வரிகளை என்ன செய்வது? அடுப்புக்குள் போட்டு எரித்துவிட்டு கொதித்த குழம்பை இறக்கினேன். கறி நல்ல ருசி.  

குழம்பு மணக்கிறது. கவிதையும்தான்.

 

ரோஜாநீலக்கடல்ஊரிகள்சிப்பிகள் உறைந்த நட்சத்திர மீன்கள், விண்மீன் கவிதைவழி விரிகின்றன.

வீடொரு சிறைபோல……..,மனதில் கசிந்த வாசனை,…….நினைக்கும் சொற்கள் அழிபட்டுப் போகிற வேதனை,……நித்திரை வந்தால் கனவு வருகிறது. இப்படி… அயலாள் பேசிக்கொண்டே போகிறார். தொகுப்பின் கடைசிக் கவிதையான கோவிட்-19 உம் நம்மை சமாதானப்படுத்துகிறது.  பூமியின் மெளனப்போரை அது நடத்துகிறது. வீட்டுக்குள்ளேயே யுத்த முகாமிட்டு, மரணம் வரை மக்களை பயமுறுத்துகிறது. அதுதான் நம்மை பேசும்பொருளாக்கியிருக்கிறது.

 

இத்தொகுப்பை வாசித்தபின் எனக்குள் முளைத்த  சில கேள்விகள்:

பல கவிதைகளுக்கு தலைப்பு இல்லை. நுாலின் முதல் 8  பக்கத்தி லோ அல்லது கடைசிப்பக்கத்திலோ கவிதைகளை எண்                வரிசைக்கிரமமாக போட்டிருக்கலாம். மனசுக்குள் மிதந்தவைகளை இன்னொருதடவை புரட்ட வசதியாய் இருக்கும். நாம் வசதிக்கு பழக்கப்பட்ட சமூகமாக மாறியிருக்கிறோமில்லையா?

குறிப்பிட்ட நூல் பற்றிய எனது அவதானங்களை நூலாசிரியர் தர்மினியுடன் பகிர்ந்துகொண்டபோது, அவர் தெரிவித்த கருத்துக்களையும் கீழே பதிவுசெய்கின்றேன்.

—-  —–

 

உங்கள் வாசிப்பின் அவதானங்கள்  

 

மகிழ்வைத்தந்தது. தலைப்புகளைத் தேடுவதே ஒரு பிரச்சினையாயிருந்தது. தலைப்பு வைத்துவிட்டால் அதற்குள்தான் வாசிப்பு நிகழும்.

ஆகவே வலிந்து எதற்கு வைக்கவெண்டுமென்றுதான் பலவற்றுக்கு இல்லை. குறிக்க, பக்க இலக்கங்கள் உள்ளன தானே.

எடுத்துக்காட்டாக;

மாலைக்காட்சி என்று ஓவியத்தின் தலைப்பிருந்தால் காலைக்காட்சி என்று கற்பனை செய்யவோ தடுப்பது போலல்லவா? தலைப்பில்லாததும் கலைச்செயற்பாடு என்று தான் தலைப்புகள் இல்லாமலும் இருக்கட்டுமென நினைத்துத் தொகுத்தேன்.

நன்றி

அன்புடன்

தர்மினி

 

Series Navigationதக்கயாகப் பரணி [தொடர்ச்சி]உக்ரைன் நாட்டின் சில பகுதிகளை ரஸ்யா கைப்பற்றியதன் எதிர்வினை என்ன?
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *