காலமுரணில் முகிழ்த்த கதைகள் (நூல்மதிப்புரை)

author
0 minutes, 0 seconds Read
This entry is part 9 of 11 in the series 27 பெப்ருவரி 2022

 

  ஜனநேசன் 

 

   “ கடல்வனம்  “ தேனி.சீருடையான் எழுதிய எட்டாவது சிறுகதைத் தொகுப்பு.முற்போக்கு எழுத்தாளராக முளைவிட்ட சீருடையானை “ கடை “ நாவல் மூலம்  தமிழ்கூறும் நல்லுலகிற்கு   நவீன தமிழ்ப்பதிப்புலகின் முன்னோடியான கவிஞர். மீரா அறிமுகப்படுத்தினார். கடையிலிருந்து சீருடையானின் எதார்த்தவியல் படைப்பு நான்குநாவல்கள், எட்டுசிறுகதை நூல்களாக விநியோகம் தொடர்ந்து தமிழ்கூறும் நல்லுலகின் வாசகப்    பரப்பை ஈர்த்து வருகிறது.

 முரண் படைப்பூக்கத்துக்கு முக்கியமானது.இன்றைய நடப்பு காலமே முரண்கள்  நிறைந்தது என்கிறபோது எதார்த்தவியல் எழுத்தாளர் தேனி. சீருடையான்  படைப்புமனம் சும்மா இருக்குமா….? சீருடையான் தன்னைச் சுற்றி நடந்தது, கண்டது , கேட்டது, வாசித்ததை எல்லாம் தான் வாழும் மண்ணின்வாசம் மாறாமல்,  மக்களின் இயல்பு மாறாமல் அவர்கள் சிக்கலான வாழ்வை எதிர்கொண்டு கரை ஏறுவதை கதைகளாக்கியுள்ளார். தேனிப்பகுதி  வட்டார மொழிக்கும் பொதுமொழிக்கும் இடைப்பட்ட மண்ணின்மணமும் இயல்பான ஆற்றொழுக்கான கவித்துவமும் இயைந்த பழகு மொழியைக் கையாண்டு சரளமான வாசிப்பனுபவத்தைத் தருகிறார்.

 அன்றாடவாழ்வில் எழும் பொருளாதார. நெருக்கடிகளால் தோன்றும் பாசமுரணும் உட்பகையும், பொருளாசையும், காமத்துக்கும் காதலுக்கும் உடல் தேவைக்குமான முரணிடும் போராட்டமும்,வயிற்றுப்பாட்டுக்கான வேலைதேடும் போராட்டமும், சமூகரீதியிலான மூடநம்பிகை எதிர்ப்பும், வைதீக, அவைதீக முரண்களும், வணிக மருத்துவக் கலாச்சார, மாற்றுமருந்துக் கலாச்சார முரண்களும் ,   அனைத்து வாழ்வியல் முறைமைகளையும் சிதைத்த பெருந்தொற்று சூழல் என இன்றைய தனிமனிதர்களை அலைக்கழிக்கும் சுழற்சியிலிருந்து மீளும் தனிமனித அனுபவங்கள் தாம் இத்தொகுப்பில் உள்ள பனிரெண்டு சிறுகதைகள்.! இக்கதைகளை வாசிக்கும் வாசகர்கள்  தங்கள் வாழ்வனுபவத்தோடு யோசிக்கும்போது வாசகமனதில்  புத்துணர்ச்சியும் புது வெளிச்சக்கீற்றும் தோன்றும்  சாத்தியம்  உண்டு,

  “சந்தைலோளாயி “ என்று இழிவுப்படுத்தப்பட்ட   மக்கள்  தம் வாழ்வியல் சூழலில் நீந்திக் கரையேறுவதை எதார்த்தம்மீறாக் காவியத் தன்மையோடு குடும்பம் என்ற கதையில்  சீருடையான் சொல்கிறார் . இத்தகைய கலைநேர்த்தியை  தங்கை கதையிலும் காட்டி சாதீயச்சுவர் உடைபடுவதையும் பால்யமும் பாசப்பிணைப்பையும் மீறிய தாண்டலையும் கலையாக்கியுள்ளார்.இக்கதையில் டில்லி ஜந்தர்மந்தர் பகுதி அடித்தட்டு மக்களின் வாழ்வியலை கண்முன் கொண்டுவந்துள்ளார். மூடநம்பிக்கை, ,பொருளாதார நெருக்கடி இடையிலும் வெல்லும் பாசப்பிணைப்பை பிறைநிலா  எனும் கதையாக்கியுள்ளார். இதேபோல பொருளாதாரச் சூழலில், கணவனின் மிரட்டலுக்கு மீறிய அத்தையின் பாசத்தை “அங்கியின் மகனி”ல் கலைப்படுத்துகிறார். இக்கதையில் வெற்றிலை விவசாயியின் வாழ்வும் வெற்றுஇலைச் சருகாகிப் போவதை உணர்த்துகிறார் சீருடையான். கடல்வனம்  தலைப்பே  நல்லபடிமம்.! .நின்றான் கதை பழவியாபாரியின் பாடுகளை நெகிழ வைகவும் அழகியகனவோடும் சொல்கிறது. மஞ்சுளா கதை பார்வையற்றபெண் தன்சுயமுயற்சியில் வாழமேற்கொள்ளும் பாடுகள் வாசக மனத்தை உருக்குகிறது..

 பொதுவாக. இத்தொகுப்பிலிலுள்ள கதைகள் வெறும் கதைநிகழ்வுகளாக நின்றுவிடாமல் வாசகமனத்தில் மனிதநேயத்தினை பற்றி படர விடுகின்றன.இதுவே தேனி.சீருடையானின் படைப்பாளுமைக்கு வெற்றியாகும்.இதை இந்நூலை வாங்கி வாசிப்பவர் நிச்சயம் உணருவர்..

மாற்றுமருத்துவரும்படைப்பாளியும் தமுஎகச அறம் கிளையின் செயலருமான உமர்பாருக் அருமையான அணிந்துரை வழங்கியுள்ளார்.

கடல்வனம் என்ற பெயருக்கேற்ப கருத்தைக்கவரும் அட்டைப்படத்துடன் அருமையாக இந்நூலினை கட்டமைத்துள்ள மீரா.கதிரின் வெளியீட்டுதிறன் முத்திரை நூலுக்கு பலம் சேர்க்கிறது.

 கடல்வனம்.- சிறுகதைகள் : ஆசிரியர் – தேனி.  சீருடையான்.

பக் :176 .விலை :ரூபாய்.200/.

 வெளியீடு : அகரம், தஞ்சாவூர்.613 007 தொடர்புஎண் .9443159371

 

  

 

 

Series Navigationபுத்தகக் காட்சி சிந்தனைகள்ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *