அன்பாதவன்
வளவ. துரையன் வாழ்நாள் முழுவதும் மனிதரைப் படிப்பவர்; தொடர்ந்து
வாசிப்பவர்; எனவே சர்வ சாதாரணமாக பெருவலையோ தூண்டிலோ இல்லாமல் தோள்துண்டிலேயே அவருக்கு இலகுவாகக் கிடைத்து விடுகின்றன கதை மீன்கள்.
கவிதை, கதைகள், விமர்சனம், ஆன்மீக உரை, கட்டுரைகள், சிற்றிதழ் ஆசிரியர் எனப் பன்முகத் தரிசனம் காட்டும் வளவ. துரையனின் ஆறாம் சிறுகதைத் தொகுதியாக சந்தியா பதிப்பகம் “மீண்டும் ஒரு தொடக்கம்” எனும் நூலைத் தந்திருக்கிறது.
தொகுப்பில் 16 கதைகள். கதைகளின் வழியாக வாசகன் தரிசிப்பது மனிதர்கள்!. மனித முகங்கள்; மனித மன விசித்திரங்கள்; மனித குணங்கள் என எல்லாக் கதைகளிலும் சராசரி அல்லது சாமான்ய மனித வாழ்வின் மீதான ஒரு விசாரணையாக இத் தொகுப்பு.
16 கதைகளிலும் என்னைப் பிடித்த கதை “அந்தணர் என்போர்…….” அறம் என்பது யாவர்க்கும் பொது; ஆனால் “அந்தணர் என்போர் அறவோர்” எனக் கோடிட்டுக் காட்டியிருக்கிறது நம் தமிழிலக்கியம். ஆனால் என்ன? புண்ணியம் தேடும் ஸ்தலங்களிலும் பாவம் சேமிக்கும் அறம் குலைந்த மனிதரை அம்பலப்படுத்தியிருப்பது மிகச் சிறப்பு.
இன்றைய சமூகச் சூழலில் குறிப்பிட்ட எந்த ஒரு சமூகத்தையும் விமர்சிக்க வாய்ப்பே இல்லை. காரணம். அந்த சமூகம் சார்ந்த அமைப்புகள், கட்சிகள், சமயங்களில் இலக்கிய வியாதிகள் கூட வாளெடுத்து வருகிறார்கள் போர்த்தொடுக்க…. ஆனால் இந்தக் கதையில் ‘சுய சாதி விமர்சனம்’ எனும், வகையில் தவறிழைப்போரை அம்பலப்படுத்தியிருப்பது வளவ.துரையனின் அறச்சீற்றமெனில், கதைக்கு பின்புலமாகக் கொண்ட ராமேஸ்வரமும், காசியும் கூடுதல் கலைத்தன்மையைத் தருகின்றன. இங்குதான் வளவ. துரையன் எனும் கலைஞரின் பட்டொளி மின்ன ஒளிரும் தருணம்.
தொகுப்பின் சில கதைகள் நடுத்தர வர்க்க மனோபாவங்களை யதார்த்தமாய்ப் படம் பிடிப்பவை.
நன்றாற்றலுள்ளும்:
அசல் மத்தியதரவர்க்கத்தின் ஒதுங்கல், முனகல்; விதிவிலக்காய் ஒருவன் நியாயங்களைப் பேசுகையில் அவன் கோமாளியாகவோ, முட்டாளாகவோ கற்பிக்கப்படுவான். பிறகு அவனும் “எனக்கென்ன! எது நடந்தாலும் எனக்கென்ன போச்சு” என்கிற பொதுப்புத்தி மனோபாவத்துக்குத் தள்ளப்பட்டு விடுவான். இக்கதையின் முடிவில் எனக்கு சம்மதமில்லை; அக்கதையின் நாயகன் அறம் மிகுந்தவனாய் போராட்டங்களைத் தொடர்பவனாய் இருத்தலே கதைக்கு வலு சேர்க்கும்.
முத்தாபாய் காத்திருக்கிறாள்:
கதையில் சிலக் குறிப்பிட்ட சாதிகளின் சொற்கள் வெளிப்படையாகப் பேசப்படுகின்றன. சாதி மனிதர்களின் வாய்வழியாக அவர்களின் அழுக்குகள் தெரிய வருகின்றன. முடிவில் ஒரு எதிர்பாரா திருப்பம்; கதையின் நாயகியைக் காணவில்லை. வாசகன் ஊகிக்கப் பல்வேறு முற்றங்களை வசதியாக்கி, நகர்ந்து கொண்டதால் கலாபூர்வமாக வெற்றி பெற்ற கதை. எனக் கருதலாம். இதுவும் ஒரு நடுத்தர வர்க்க வாழ்வின் ஒரு துண்டுதான். வாசகன் மனத்தில் கேள்வியலைகளை உருவாக்கும் கதையிது.
வளவ. துரையனுக்கென்று வாகான ஒரு கதைப் பிரதேசமுண்டு. ஒரு நடுத்தர கிராமம் அல்லது குறுநகர். ஏரிக்கரை…சிறு கோயில் என. உழுகுடிகளின் வாழ்வை மேற்கண்ட பின்னணியோடு பேசும் கதைகளுமுண்டு.
உழுதுண்டு பின் செல்பவர்:
வழக்கமாய் விவசாயிக்கு மிஞ்சுவது பூச்சி மருந்துதான். ஆனால் இக்கதையில் மாரடைப்பு. முக்கியமானதொரு குறியீடாய் மையங்கொள்கிறது.
செவ்வியான் கேடும்:
உழுகுடிகள் வேளாண்மை தொலைத்து விவசாயக் கூலிகளாய் மாறும் பரிதாபம். கூடுதலாய்ப் பக்கத்து மாநிலத்திற்கு கூலி வேலைக்குப் போக்கையில் காவலரால் கைது செய்யப்படல் எனத் திருப்பங்களால் ஆன கதை. ‘புஷ்பா’ எனும் சமகாலத் திரைப்படத்தை சற்றே நினைவூட்டினாலும், இச்சிறுகதையில் ஒரு குறுநாவலோ, அல்லது பெருநாவலோ ஒளிந்திருப்பதாக உணர்கிறேன். வளவ. துரையன் வலை வீசினால் எதுவும் சிக்கலாம்.
பால்கார வாத்தியாரு:
கதையிலும் வேளாண் தொழிலின் உடன்பிறப்பான மாடு வளர்த்தல், பால் வியாபாரம் சார்ந்த கதை, நாயகனின் தன்னம்பிக்கைக்கு வாசகனின் ‘சபாஷ்’ நிச்சயம் கிடைக்கும்.
தொழிலைக் கொண்டு கேலி பேசுதல், படித்த வர்க்கமான ஆசிரியர் சமூகத்திலும் பரவியிருப்பது அவர்தம் அறிவு குறித்துக் கேள்வி எழுப்பச் செய்வதாகும்.
ப.ப.பா:
அவல நகைச்சுவை அல்லது நகைச்சுவைக்காக சொல்லப்பட்ட அவலம் எனலாம். பதிப்பகங்கள் படுத்தும் பாட்டைப் பதிகம் பாடலாம் இன்னும் அதிகம் பாடலாம்.
பாதுகாப்பு:
கதையுள் ஒரு நுண் உத்தி பொதித்திந்திருக்கிறது. “பெண் ஒருத்தி தனியே வாழ இயலுமா?…. முடியுமா?… எனும் பெருவினாவை எழுப்பும் சிறுகதை இது.
தன்னையே கொல்லும் சினம்:
மனித மன விகாரத்திற்கு மருந்து தரும் முயற்சி. சில நோய்க்கு சில மருந்துதான் கேட்கும். அத்தகைய நாட்டுமருந்துக் கதை.
அவர்கள் இருக்க வேண்டுமே:
கதை மாந்தர் கொண்டுள்ள ‘தன்முனைப்பு’ எனும் Ego—இலக்கியவாதிகளை இலக்கியவியாதிகளாக்கி விடும் கூத்தினைப் படம் பிடித்த பதிவு.
தன் ஊன் பெரிதென்பான்:
கதையிலும் பெருந்தனக்காரர் ஒருவரின் தன்முனைப்பு கதகளி. இந்த Ego எனும் அற்ப வஸ்து எது மாதிரி மனிதரையும் சிறுமனிதராய் ஆக்கிடும் என்கிற உண்மை புரியாதவரை தெருநாய்க் குரைப்புதான்.
நீச்சல்:
மீண்டும் ஏரிக்கரை….ரெண்டாம் மதகு….நினைவலைகள்…தொகுப்பாகக் கூடவே ”வாழ்க்கையிலதான் நீச்சலும் இருக்கு” என்கிற தத்துவ தரிசனம்
மீண்டும் ஒரு தொடக்கம்:
நன்னம்பிக்கை முனையாய் ஒளிரும் கதை.பதவி எனும் பெயர்ச்சொல் வினைச்சொல்லாக மாறும்போது நிகழும் விபரீதங்களைக் காட்சிப் பதிவாய்… கதை வடிவாய் வழங்கியிருப்பது வளவ. துரையனின் சிறப்பு. தொகுப்பின் சிறந்த கதைகளுள் இதுவும் ஒன்று.
கன்னி கழியாச் சாமி:
தொன்மம் ஒன்றினைப் பின் தொடந்து பாத்திரங்கள் சரியான முறையில் நிகழ்வுகளோடு கலக்க நல்லதொரு கதை….புதியதொரு பின்புலத்தில்.
வளவ. துரையனின் பலம் என நான் உணர்வது அவரின் எழுத்துமொழி. மிக எளிமையான புரிதலுக்கு எவ்வித சிரமங்களுமில்லா…கோணங்கித் தனமில்லா எழுத்து.
வாழ்வின் சிறுதுண்டங்களில் இருந்து கதைக்கான கச்சாப் பொருளைத் தேடிக் கண்டடைதல். சிறுகதைக்கான தேடலில் Observation எனும் கிரகித்தலுக்கு முக்கியப் பங்கு உண்டு. வளவ. துரையன் வாழ்க்கையை, மனிதர்களை, நிகழ்வுகளை… நிமிடங்களை உற்றுக் கவனிக்கிறார். உள் வாங்குகிறார்… எழுத்து இலக்கியமாகிறது. வளவ. துரையனின் தொடர்ச்சியான ஓய்வில்லாஇ படைப்பிலக்கிய முயற்சிகள் தமிழுக்கு வளம் சேர்ப்பவை.
“மீண்டும் ஒரு தொடக்கம்” தொகுப்பும் இதை நிரூபிக்கும்.
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 267 ஆம் இதழ்
- அவனை எழுப்பாதீர்கள்
- “அந்த நாட்களில் மழை அதிகம்” என்ற அஜயன் பாலாவின் புத்தகத்தை முன் வைத்து
- பட்டறை என்ற சொல்…
- உக்ரைன் மீது ரஸ்யாவின் ‘கைப்பர்சோனிக் ஏவுகணைத்’ தாக்குதல்
- எமிலி டிக்கின்சன் கவிதைகள் – 29
- ரஸ்ய அதிபர் புதினுடைய சொத்து மதிப்பு என்ன தெரியுமா?
- தீப்பிடித்த இரவில்
- எரிமலை, பூகம்பத்தை எழுப்பிடும் பூமியின் உட்கருப் பூத அணு உலை ! (Giant Geo-Reactor) (கட்டுரை -1)
- கதைகள் இல்லாத மனிதர்கள் ஏது? மனிதர்கள் இல்லாத கதைகள்தாம் ஏது? – வளவ. துரையன் கதைகள்
- ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- வானவில்(இதழ் 135) வெளிவந்துவிட்டது
- க்ரோ எனும் கிழவர்
- ஆடும் அழகே அழகு