பாச்சுடர் வளவ. துரையன்
சாய்வது இன்மையின் நெருக்கி மேருமுதல்
தாமும் நின்ற; அவர்தாள் நிலம்
தோய்வது இன்மையின் இடம் கிடந்தபடி
தோயுமேல் அவையும் மாயுமே. 426
பூதப்படைகள் களைப்படைந்து எதன் மீதும் சாய்வது இல்லை. அதனால் மேருமலை போன்ற மலைகள் எல்லாம் அசையாமல் நின்றன. பூதப்படைகளின் கால்கள் நிலத்தைத் தொடுவதில்லை. அப்படி நிலத்தில் படிந்திருந்தால் இப்பூமியே அழிந்திருக்கும்.
நிலத்தினும் பல பிலத்தினும் சுரபி
நிலையினும் திகிரி மலையினும்
சலத்தினும் கனகலத்தினும் புடை
அடங்கி நின்றதுஉயர் தானையே. 427
[பிலம்=பாதாளம்; சுரபி=காமதேனு என்னும் தெய்வப் பசு இருக்கும் இடம்; திகிரி=சக்கரம்; சலம்=கடல்; கனகலம்=தக்கன் வேள்வி செய்யும் இடம்; புடை=பக்கம்]
பூதப்படைகள் மண்ணுலகத்திலும், பாதாளத்திலும், காமதேனு இருக்கும் கோலகத்திலும், சக்ரவாள கிரி மலையிலும், தக்கன் வேள்வி நடத்தும் கனகலம் எனும் இடத்திலும், நிறைந்து நெருங்கி நின்றன.
காமதேனு இருக்கும் இடத்தை, கோலகம் என்று வழங்குவர். இதை ஆனிலை என்று தமிழ் இலக்கியம் கூறும். புறநானூற்றில் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை வாழ்த்திய, காரிக்கிழார்
”நீர்நிலை நிவப்பின் கீழும்மேலது
ஆனிலை உலகத் தானும் ஆனது” என்று பாடுகிறார்.
ஊழி ஏறுகடல்நீர் அண்டகோள்கை உடைந்து
உம்பர் நீரொடு கலந்தனையது ஒக்கும் உடனே
பாழி ஏறுதினி தோள்வீர பத்ரகணமும்
பத்ரகாளி கணமும் படை எழுந்தபடியே. 428
[ஊழி=யுகமுடிவு; உம்பர்=வானவர்; பாழி=வலிமை; கணம்=கூட்டம்]
ஊழிக்காலத்தில் கடல்கள் பொங்கி எழுந்து அண்ட முகட்டையும் உடைத்துக் கொண்டு வானவர் நாட்டில் உள்ள கங்கை ஆற்றோடு கலக்கும். அது போல வலிமை கொண்ட வீரபத்ரரின் படைகளும் பத்ரகாளியின் படைகளும் ஒன்றோடு ஒன்று கலந்தன.
கார்முகக்கும் இரவென்ன இருள்குஞ்சி விரிவார்
கடல்முகக்கும் அகல்வாயன கபாலம் உடையார்
பார்முகக்கும் உருமுக் கழுநிரைத்த படையா
பலமுகக் குமுதவாய் இறைவி பைரவர்களே. 429
[குஞ்சி=தலைமுடி; உகக்கும்=கொள்ளும்; கபாலம்=மண்டை ஓடு; முக்கழு=திரிசூலம்; குமுதம்=ஆம்பல் மலர்]
கார்காலத்தின் இருளைப் போல விரிந்த தலைமுடியை உடையவர்கள், கைகளில் கடல் நீர் முழுதும் கொள்ளும் அளவிற்குப் பெரிய கபாலம் ஏந்தியவர்கள். அவர்களின் திரிசூலம் இப்பூமியைப் பிளந்து எறியக் கூடியது. பலமுகங்களையும் செவ்வாம்பல் மலர்கள் போன்ற சிவந்த வாயையும் உடையவர்கள் தேவியின் படை வீர்ர்கள் ஆவர்.
பாரப் பணைமுலைக் கொலையினும் சிலபுரூஉப்
பங்கத்தினும் அடுப்பன வடுப்பகவினும்
கூரப் புறவ முல்லைமுகை நகையினும்
கொல்லுகை தவிரா இறைவி சாகினிகளே. 430
[பணை=பருத்த; புரு=புருவம்; பங்கம்=அசைவு; வடு=மாவடு; பகவு=பிளப்பு; புறம்=முல்லை; நகை=சிரிப்பு]
பெண் பூதப் படையினராகிய சாகினிகளின் பெரிய பருத்த மார்புகள் சிலரைக் கொல்லாமல் கொல்லும். அவர்தம் புருவங்களின் அசைவுகளில் சிலர் தாக்குண்டு தவிப்பர். மாவடுப் பிளவு போன்ற கண்கள், முல்லை அரும்பு போன்ற பற்களின் மோகனச்சிரிப்பு; இவற்றால் பலரையும் சாகினிப் படைகள் வருத்தின.
வெளிப் படப்பட முகிழ்த்து எயிறெறிக்கும் நிலவார்
விழிபடக் குழிசுடச் சுடர்எரிக்கும் வெயிலார்
அளிவளர்த்தன வெறிக்குழல் எரிக்கும் இருளார்
அறுமுகத்ரி புரபயிரவி அகம்படியரே. 431
[முகிழ்த்து=குவிந்து; எயிறு=பல்; எறிக்கும்=ஒளிவிடும்; குழை=காதணி; அளி=வண்டு; வெறி=மணம்; அறுமுகத்ரி பயிரவி=கௌமாரி]
சாகினிகள் பற்கள் அவர்கள் சிரிக்கையில் நிலவு போல ஒளிவிடும் தன்மை உடையன. அவர்கள் காதணிகளில் உள்ள மாணிக்கக் கற்கள் வெயில் போல ஒளிவீசும் தன்மையனவாகும். பல மணம் வீசும் மலர்களைச் சூடி உள்ள அவர்தம் கூந்தலோ காரிருளைப் பரவி விடும். அவர்கள் எல்லாரும் கௌமாரி என்னும் பயிரவிக்கு அடிமைத் தொண்டு புரியும் படையினர் ஆவர்.
அடவி யாகிவருவார் அசலமாகி வருவார்
அமரராகி வருவார் அவுணராகி வருவார்
புடவியாகி வருவார் புணரியாகி வருவார்
புவன நாயகிதன் யாமள புராதனர்களே. 432
[அடவி=காடு; அசலம்=மலை; அவுணர்=அசுரர்; புடவி=பூமி; புணரி=கடல்; புராதனர்=பழமையானவர்]
உலகநாயகியான தேவியின் யாமளை என்னும் பெண் படைகள் காடாகி வருவர்; மலையாகி வருவர்; தேவராகி வருவர்; அசுரரராகி வருவர்; பூமியாகி வருவர்; கடலாகி வருவர்.
இடிபொறாமல் ஒருபால் அதிர்வர் சாகிகளே!
எரிபொறாமல் ஒருபால் நகுவர் டாகினிகளே!
படிபொறாமல் ஒருபால் வருவர் யோகினிகளே!
பகரு மாறியார் நாயகி பதானிகளே! 433
[அதிர்தல்=ஒலி எழுப்புதல்; எரி=நெருப்பு; நகுதல்=சிரித்தல்; படி=பூமி; பகருதல்=சொல்லுதல்; பதாகினி=கொடிப்படை]
தேவியின் சாகினிப் படைகள் இடி ஓசையே அடங்குபடி முழக்கமிடுவர்; இடாகினிப் பேய்கள் தீ எரிவது போலச் சிரிப்பர்; யோகினிப்படையோ இப்பூமி கொள்ளாதபடி எங்கும் இருப்பர்; கொடிப்படைகளின் ஆற்றல் சொல்லும் தரமன்று.
இப்படை யோடும் ஐயன் மகரா லயத்தில்
ரவிபோல் எழுந்தருளும் என்று
அப்படையோடு நின்று சுரர்சென்று தங்கள்
அரசற்கு இசைத்த பொழுதே. 434
[ஐயன்=சிவபெருமான்; மகராலயம்=கடல்; ரவி=சூரியன்; சுர்ர்=தேவர்; இசைத்தல் சொல்லுதல்]
இப்படியாகத் தேவியின் படைகளும் வீரபத்ரரின் படைகளும், ஒன்று சேர்ந்து திரண்டு வருவதைக் கண்ட தேவர்கள் தம் அரசனான தேவேந்திரனிடம் சென்று, சிவபிரானின் படை ஒன்று வருகின்றது. அதன் நடுவில் சூரியன் தோன்றினாற் போல ஒரு வீரனும் வருகின்றான் என்று உரைத்தனர்.
ஆவ! புகுந்த ப்ரத்தம் அறியாது அடுப்பது
அறியாத தேவர் எதிர்தன்
பாவ மனம் கவற்ற அறிவின்மை கொண்டு
சில வச்சிர பாணி பகர்வான். 435
[ஆவ=இரக்கக்குறிப்பு உணர்த்தும் சொல்; ப்ரத்தம்=ஊழ்வினை [பிரார்த்தம்]; அடுப்பது=வரவிருப்பது; கவற்ற=வருத்த; வச்சிரபாணி=வச்சிராயுதம் தரித்தவன்]
“ஓ1 அப்ப்டியா” என்று இகழ்ச்சி தோன்ற ஊழ்வினை வந்து அவனை உறுத்த, வரவிருப்பது என்னவென்று தெரியாத தேவேந்திரன், தேவர்களிடம் பாவப் பட்ட மனம் வருந்த, தம் அறியாமையால் சொல்வான்.
பேதை மணந்தகௌரி அழையாமல் இங்கு
வருவாள் இகழ்ந்து பெரிதும்
தாதை முகம்கொடாது விடுவான் நமக்கும்
உலகுக்கும் என்கொல் தவறே. 436
[பேத=இளஞ்சிறுமி; கௌரி=பார்வதி தாதை=தந்தை; விடுவான் அனுப்பினான்]
”இளஞ்சிறுமியான உமையவள் தக்கன் அழைக்காமல் அவளாகவே இங்கு வந்தாள். அவளிடம் தந்தை முகம் பார்த்துப் பேசாமல் இகழ்ந்து பேசி அவமதித்து அனுப்பினான். இதில் நாமோ இந்தத் தேவலோகமே என்ன தவறு செய்து விட்டோம்”
முகடு தகர்ந்து சிந்த மூரிசக்கர வாள
கிரியே பிடித்து முகில் எண்
பகடும் எழுந்து பெய்யும் மகராலயங்கள்
அவை செய்வது யாவர் பணியே. 437
[முகடு=உச்சி; மூரி=பெருமை; எண்பகடு=எட்டுத்திக்கு யானைகள்; மகராலயங்கள்=கடல்கள்]
உச்சி வானம் இடிந்து விழ மிக உயரமான சக்கரவாளக் கிரி முதலிய எட்டுத்திக்கு மலைகளும் அழியுமாறு எரு மழை பெய்து கடல்கள் பொங்கி எழுவதும் ஆகிய செயல்களைச் செய்வது யார்? [நான்தானே]
தரையை அகழ்ந்து நின்றுகடல் ஏழும் நக்கி
வடமெரு வாதி தடமால்
வரையை வளைந்து தின்னும் வடவானலத்தின்
வலியே நமக்கு வலியே. 438
[நக்கி=குடித்து; மேருஆதி= மேரு முதலான; தடமால் வரி=மிக உயர்ந்த மலை;தின்னும் =அழைக்கும்] வடவானலயம்=வடமுகாக்கினி]
இந்தப் பூமியிப் பிளந்து சென்றும், ஏழு கடல்களையும் குடித்து வறளச் செய்தும், வட மேரு முதலான் மலைகளைச் சுற்றி வளைத்துச் சுட்டுப் பொசுக்கும் வடமுகாக்கினி வலிமை நமக்குள்ள வலிமையன்றோ?
அடைஅடையப் பறித்த குல பூதரங்கள்
அழியாக ஊழி அறையும்
படிஅடையப் பிதிர்க்கும் ஒரு வாதராசன்
அவன் நிற்க யாது பகையே? 439
[அடிஅடைய=தலைகீழாக; பூதரம்=மலை; அழி=வைக்கோல்; ஊழி=யுகம்; அறையும்=பறக்கும்; படி=பூமி; பிதிர்க்கும்=சிதறச்செய்யும்; வரதராசன்=வாயு தேவன்]
தலைகீழாக விழும்படிக்கு மலைகளை வைக்கோல் கூளங்கள் போல ஒதுக்கித் தள்ளும், பூமி முழுவதையும் தூளாக்கிப் பறக்கச் செய்யும், வாயுதேவன் நம் பக்கம் இருக்கையில் நம்மை எதிர்க்க ஏது பகை?
மாயிர நேமிஆதி மலைசுட்டு வேலை
நிலைசுட்டு அயின்றும் மடியா
ஆயிரமான வெய்யகதிர் ஆறிரண்டும்
எவன் ஏவல் செய்வது அவரே? 440
[மாயிரம்=பின் பார்த்த முகம்; ஆதி=முதலான; வேலை=கடல்; அயின்று=உண்டு; மடியா=அடங்காத; வெய்ய=வெப்பமுள்ல; ஆறிரண்டு=பன்னிரண்டு சூரியர்கள்; [தாத்துரு, சக்கரன், அரியமன், மித்திரன், வருணன், அஞ்சுமான், இரணியன், பகவான், துவச்சுவான், பூடன், சவித்துரு, துவட்டா]
தொடக்கம் முதல் இருக்கும் எல்லா மலைகளையும் சுட்டுப் பொசுக்கிக் கடல் நீரை எல்லாம் ஆவியாகிப் போகும்படி வறளச் செய்தும் தாகம் தணியாது மேலும் எவற்றைச் சுட்டுப் பொசுக்க வேண்டும் என்று ஆணைக்குக் காத்திருக்கும் ஆயிரம் வெப்பக் கதிர்க்களைக் கொண்ட பன்னிரண்டு சூரியர்கள் எவர் கட்டளைப்படி நடக்கின்றனர்? என் கட்டளைப்படி அன்றோ?
உம்பரும் ஏனையோரும் மலைமத்தில் இட்ட
உரகம் பிடிக்கும் அமுதத்
தம்பம் அமைத்து உடம்பு சலியாது நின்ற
தனி மன்னன் யாவர் தமரே? 441
[உரகம்=பாம்பு; தம்பம்=கட்டுத்தறி; தமர்=உறவினர்]
தேவர்களும், மற்றவரும், மந்தார மலையை மத்தாக நட்டுவைத்து வாசுகி என்னும் பாம்பை நாணாகக் கொண்டு அமுதம் பெறக் கடைந்த போது மத்தில் கட்டுத்தறியாக உடல் சலிக்காமல் நின்ற சந்திரன் யாருக்கு உறவினன்?
பருதிபடப் புரந்து புகைகண் கடப்ப
உலகங்கள் மூடு பகுவாய்
நிருதி செருக்குறிக்கின் உளரே தெரிக்கின்
இனி என் படைக்கு நிகரே. 442
[பருதி=சூரியன்; பகுவாய்=பெரிய வாய்; செருக்குறின்=பொரிட வெகுண்டால்]
சூரியனே மறையும் அளவிற்கு புகை பரந்து எல்லா உலகங்களையும் மூடச் செய்து விடும்படி தென்மேற்கு அதிபதியான நிருதி போர் என்று எழுந்து விட்டது தெரிந்தால் எதிர்த்து நிற்கக் கூடியவர் யார்?
மதுநுரை வார்கடுக்கை ஒருகண்ணி சூடி
மழுவாள் வரத்து வரநம்
பதினொரு தேவர்ஏறு பதினொன்றும் ஏறின்
உலகங்கள் யாவர் பரமே. 443.
[மதுநுரை=தேன் பொங்கும்; கடுக்கை=கொன்றை; கண்ணி=மாலை; ஏறு=இடபம்; பரம்=காப்பு; பதினொரு ருத்திரர்கள்= மகாதேவன், அரன். ருத்திரன்; சங்கரன், நீலலோகிதன், ஈசானன், விசயன், வீமதேவன், பலோற்பலன்; கபாலி, சௌமியன்]
தேன் நிறைந்து ததும்பி வழிகின்ற கொன்றை மலர்மாலை சூடி, மழுப்படையைத் தன் வலக்கையில் ஏந்தி, நம்முடைய பதினோரு ருத்திரர்களும், பதினோரு காளைகளில் ஏறி உலகை அழிக்கப் புறப்பட்டு விட்டால் இவ்வுலகை அழியாமல் காப்பவர் யார்? [எவருமில்லை என்பது குறிப்பு]
சொற்பல சொல்லி என்கொல்! உயிர்வீசு பாசம்
விடுகாலன் யாவர் துணையே!
பற்பல கோடி அண்டம் ஒருதண்டில் ஏற்றும்
யமராசன் யாவர் படையே. 444
[பாசம்=பாசக்கயிறு; தண்டு=தண்டாயுதம்]
பல சொற்களைச் சொல்லி என்ன பயன்? உயிர்களைக் கொல்ல பாசக் கயிறு வீசும் யமன் யார் பக்கம்? பல கோடி அண்டங்களையும் தன் கைத் தண்டாயுதம் ஒன்றினாலேயே அடித்துப் பொடியாக்கும் எமதருமன் எவர் படையின் பக்கம் உள்ளான்?
=====================================================================================
கருடர் இயக்கம் சித்தர்கடி பூதநாதர்
நிசிசரர் தானவர் கிம்
புருடர் முதற்குலத்த பதினெண் பதாதி
புடையே பரந்த படையே. 445
[புடை=பக்கம்; பரந்த=பெரிய]
கருடர், இயக்கர், சித்தர், பூதர், அசுரர், வித்தியாதரர், அமரர், தைத்தியர், கின்னரர், நிருதர், கிம்புருடர், காந்தருவர், பைசாசர், அந்தரர், முனிவர், உரகர், வானவர், போகபூமியர், முதலான பதினெட்டு கணங்களும் நமக்குள் பெரிய படையல்லவா?
முனிவரும் ஆழியானும் இமையோரும் யானும்
இளையோனும் நிற்க ரவிமுன்
பனிவரும் என்னஇங்கு வருகின்றது என்கொல்
ஒரு சூலபாணி படையே. 446
[ஆழியான்=திருமால்; ரவி=சூரியன்; சூலபாணி=சிவபெருமான்]
முனிவர்களும் திருமாலும் வானுலகத் தேவர்களும் என் தம்பி உபேந்திரனும், இங்கே இருக்கும்போது சூரியன் முன்னே பனி வந்து நிற்பது போல இங்கே சிவபெருமான் படை ஒன்று எழுந்து வருவது எதற்காக?
வறுமை எவன்கொல் என்கண்? ஒருதன் படைக்கு
வலியாவது என்கொல்? இமையோர்
சிறுமை எவன்கொல்? என்னை மதியாது சேனை
விடுவான் எவன்கொல் சிவனே. 447
[வறுமை=இல்லாமை; சிறுமை=அற்பம்]
என்னிடம் இல்லாமையே இல்லையன்றோ? என் படையை விட வலிமை எங்கு உள்ளது? என்னை மிக அற்பமாக நினைத்தது ஏன்? என்னை மதிக்காமல் சிவன் ஏன் இங்கு படையை விட வேண்டும்?
யான் ஆள்பதி அமராவதி; ஈமம்தனது; எனதுஏழ்;
கான் ஆள்குலகிரி; தன்மலை கயிலை சிறுகறடே. 448
[ஈமம்=சுடுகாடு; கானாள்=புகழ் வாய்ந்த; ஏழு மலைகள்: கயிலை, இமயம், மந்தரம், விந்தம், நிடதம், ஏமகூடம், கந்தமாதனம். கரடு=குன்று]
நான் அமராவதி பட்டணத்தை ஆள்பவன்; அந்த ஈசனோ மயானத்தில் வாழ்பவன்; எனக்கு புகழ் கொண்ட ஏழு மலைகள் உள்ளன. அவனுக்கோ சிறு குன்றான கயிலாயம் மலைதான் உள்ளது.
குல என்பணி யானேபணி கொள்வேன் அணிகொள்ளும்
சில வெண்பனி அவையும் சிலர்விடுத்தனர் பண்டே. 449
[பணி=பாம்பு; எண்=எட்டு; அவை: வாசுகி; அனந்தன்; தக்கன்; சங்கபாலன், குளிகன், பதுமன்; மகாபதுமன், கார்க்கோடகன்; சிலர்=தாருகா முனிவர்; பண்டு=பழங்காலம்]
என் கட்டளைக்குக் கீழ்படிந்து இப்பூமியைத் தாங்கும் எண்வகைப் பாம்புகள் நடக்கின்றன. ஆனால் சிவபெருமான் அணிந்திருப்பதோ எப்பொழுதோ ஒருகாலத்தில் தாருகா வனத்து முனிவர்கள் ஏவிய சில வெண்ணிறப் பாம்புகள்.
சுரும்பூத விழும் பேயோடு சூழ்பூதம் அவற்கு; ஐம்
பெரும்பூதமும் எல்லீரும் எனக்கே படை பெரிதே. 450
[சுரும்பு=வண்டு; ஐம்பூதம்=நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம்]
சிவபிரானின் பூதப் படைகள் வண்டுகள் ஊதினாலே கீழே விழுந்து விடும். எனக்கோ ஐம்பூதங்கள் எல்லாமே என் படைகள். எனவே என் வலிமை மிகப்பெரியதாகும்.
- தங்கத் தமிழ்நாடு – இசைப்பாடல்
- எமிலி டிக்கின்சன் கவிதைகள் -32, வாலாட்டும் நாய்க்குட்டி
- மா அரங்கநாதனின் மைலாப்பூர் என்ற கதை
- தமிழர் புத்தாண்டு சித்திரை முதலா ? தை திங்கள் முதலா ?
- நீ வருவாய் என…
- நான்காவது கவர்
- யாரோடு உறவு
- சிப்பியின் செய்தி
- தமிழர்களின் புத்தாண்டு எப்போது?
- திரு பாரதிராஜா “தி தமிழ் ஃபைல்ஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தினார்.
- வாய்ச்சொல் வீரர்கள்
- சொல்லத்தோன்றும் சில
- வடகிழக்கு இந்திய பயணம் – 4
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- கும்பகோணத்திலிருந்து ஒரு தேள்