மனோ. பணி ஓய்வு பெற்றவர். எழுபதை நெருங்கிவிட்டார். தேக்காவில் வாசம். பணியில் இருக்கும்போது நேரம் அவருக்குப் பிரச்சினையாக இருந்தது. காசு கிள்ளியதில்லை. இப்போது நேரம் இருக்கிறது. காசு அவ்வப்போது கிள்ளலாம். இரண்டு மகள்கள். மதிப்புமிக்க வேலை, பணிப்பெண் வசதிகளுடன் தனித்தனி இடங்களில் தனித்தனி வீடுகளில் இருக்கிறார்கள். வார இறுதியில் ஒன்றுகூடல்கள் நடக்கும்.
மனோவின் மனைவி மாது என்கிற மாதவி. அவரும் அறுபதைத் தொட்டுவிட்டார். குளிக்கும் சோப்பு தேய்ந்து ஒட்டாகிவிட்டால் அதைப் புதிய சோப்புடன் ஒட்டிவைத்து முழுதுமாகப் பயன்படுத்திவிடுவார் மனோ. ஆனால் மாது ‘சோப்பே 60 காசுதான், அந்த ஒட்டு என்ன 6 காசுகூட இருக்காது’ என்று சிரிப்பார். கருவேப்பிலை, ஓமவள்ளி, வெற்றிலை எல்லாம் மதன் தொட்டியில் வைத்து வளர்க்கிறார். ஒவ்வொரு துளிர் புறப்படுவதையும் பார்த்துப்பார்த்து ரசித்து தண்ணீர் ஊற்றுவார். ஆனால் மாது? தாளிக்க கருவேப்பிலை இல்லையென்றால், படக்கென்று ஒரு இணுக்கை உருவிக்கொண்டு வந்துவிடுவார். ‘நம்ம செடி. நாம தண்ணி ஊத்தி வளக்கிறோம். ஆர்கானிக் தெரியுமா?’ என்பார். இரண்டு கிலோ கனோலா எண்ணெய்தான் மனோ வாங்குவார். கால்வாசி இருக்கும்போதே அதுத்த இரண்டு கிலோ வீட்டில் வந்து உட்காரவேண்டும் மாதுக்கு. ஆனால் மனோ ‘அடுத்தவாரம் வாங்குவோமே’ என்பார். ஒரு வீட்டுத் தேவைக்குச் செல்வதென்றால், அடுத்த வீட்டுக்குச் செல்வதுபோல் அலுங்காமல் குலுங்காமல் ‘க்ராப்’ ல் செல்வதையே மாது விரும்புவார். நேரடியாக பேருந்து இருந்தால் பேருந்தில் செல்வதையே மனோ விரும்புவார். மனோ சொல்வது மனோவுக்கு சரி. மாது சொல்வது மாதுவுக்கு சரி. யார் சரி என்று யார் தீர்மானிப்பது? அவர்களுக்குள் இப்படி அடிக்கடி உறவில் சூடு கிளம்பினாலும், அடிப்பிடிக்காமல் இருவருமே பார்த்துக் கொள்வார்கள். தன் மகள்கள் கவனிக்கிறார்கள் என்ற அக்கறை இருவருக்குமே உண்டு.
மனோவின் நண்பர் உத்தமன், தன் அறுபதாவது பிறந்தநாளை டெப்போ ரோட்டில் இருக்கும் ருத்ரகாளியம்மன் கோயிலில் கொண்டாடுகிறாராம். 11 மணி வரை பூஜைகள் இருக்கும். 11 மணிக்கு வந்தால்கூட போதும் என்ற குறிப்புடன் புலனச்செய்தி அனுப்பியிருந்தார். அன்று காலை மனோ, மாது புறப்படத் தயாரானார்கள். மனோ ஒரு பட்டைக்கரை வேட்டி, குர்தாவில் தன்னை நுழைத்துக்கொண்டு தயாராகிவிட்டார். மாதும் தயாராகிக் கொண்டிருக்கிறார். பட்டுப்புடவை உடுத்தியாகிவிட்டது. நகைகள் அணிந்தாகிவிட்டது. கோயில் என்பதால் கொஞ்சம் அதிகமாகவே அவர் சிரத்தை எடுத்துக் கொண்டார். லேசான ஒப்பனையும் முடிந்துவிட்டது. ‘புஸ்புஸ்’ என்ற ஒலியுடன் ‘பில்காரி’ வாசனை காற்றில் மிதந்துவந்தால், மாது தயாராகிவிட்டார் என்று மனோவுக்குத் தெரியும். அறையிலிருந்து வெளியே வரும்போதே மாது சொன்னார்.
‘க்ராப்’ வர்றதுக்கு மூணு நிமிஷம் இருக்கும்போது எறங்குவோம். கீழ போயி இந்தக் கோலத்துல நிக்கவேணாம்.’
‘இல்ல மாது. நாம பேருந்துலதான் போறோம். 57ல போனா கோயில் வாசல்ல எறங்கலாம்.’
‘பேருந்துலயா? அப்ப நா………..’ ஏதோ மாது சொல்ல ஆரம்பிக்கும்போது, மாதுவின் கைப்பேசி ‘என்னை எடு’ என்றது. மகள்தான் பேசுகிறார்.
‘என்னம்மா. வீட்லதானே இருக்கீங்க. தேக்காதான் வர்றேன். கொஞ்சம் சாமாங்க வாங்கணும். நீங்க வீடல இருந்தா வீட்டுக்கு வந்துட்டு அப்பொறம் போவேன். தெரிஞ்சுக்கத்தாம்மா போட்டேன்.’
‘இப்ப வீட்லதாம்மா இருக்கேன். அப்பாவோட நண்பரு கோயில்ல பொறந்த நாளு கொண்டாடுறாராம். டெப்போ ரோடு ருத்ரகாளியம்மன் கோயிலாம். கோயிலா இருக்கேன்னு பட்டுப்பொடவெ நகைகளோட தயாரா இருக்கேன். அப்பா பேருந்துல போகணும்னு சோல்றாரு. எனக்குப் புடிக்கலமா.’
‘என்னம்மா இப்புடி சொல்றீங்க. ஒரே பேருந்து 57. ‘க்ராப்’ ல 40 வெள்ளிக்குக் கொறயாம வரும். எனக்கு ஒருவார காய்கறி செலவு தெரியுமா? என்ன பெரிய வித்தியாசம். க்ராப்ல போனா ரெண்டு பேரு தனியா போவீங்க. பேருந்துல போனா பல பேரோட சேந்து போகணும். அவ்வளவுதான். நேத்துகூட நம்ம அகிலா மகளுக்கு பொறந்தநாள்னு கூப்பிட்டா. ஈசூன்ல இருக்கு வீடு. பட்டுப்பொடவெ நகைகளோடதான் போயிட்டு வந்தேன். போகவரச் செலவே 4 வெள்ளிதான். அப்பா சொல்றதுதாம்மா சரி. பேசாமெ பேருந்துலயே போங்க.’
மாதுவுக்கு இரண்டு கன்னங்களிலும் மாற்றி மாற்றி அறை விழுந்ததுபோல் இருந்தது. மனோ சொல்வதே சரியென்று ஆகிவிட்டது ஒன்று. தன் மகள் அப்பா பக்கம் பேசுவது இன்னொன்று.
பேருந்து 57. இருவரும் போய்க்கொண்டிருக்கிறார்கள். இப்படி பிரச்சினைகள் ஏற்படும்போது அவர்களுக்கிடையே ஒரு பாதுகாப்பு இடைவெளி ஏற்பட்டுவிடும். அது சரியாவது பிரச்சினையைப் பொருத்தது. நடந்ததை மாது மறந்துவிட்டாரா என்பதை சோதிக்க மனோ ஏதாவது பேச்சுக் கொடுத்துப் பார்ப்பார். பேருந்து பீச் ரோடை நெருங்கும்போது,
‘இங்க பாரு மாது, இந்தக் கட்டடத்தெ. இந்தக் கோணத்துல பாத்தா பிரம்மாண்டமான ஒரு தகட்டெ நிக்க வச்சதுமாரி இருக்கு.’ என்றார்.
மனோ பேசியதை மாது கண்டுகொள்ளவில்லை. இன்னும் அவருக்கு அந்த இடைவெளி தேவைப்படுகிறது. பேருந்து சன்டெக் தாண்டி, கெப்பல் ரோடு தாண்டி செந்தோசாவை நெருங்கிக் கொண்டிருந்தது.
‘என்ன! அந்தக் கோயிலு சிங்கப்பூர்லதான் இருக்கா இல்ல ஜெபில இருக்கா. போயிக்கிட்டே இருக்கு’ என்றார் மாது.
‘அதான் தூரம்னு சொன்னேன்ல. கிட்டத்தட்ட 1 மணிநேரமாகும். அதுனாலதான் பத்து மணிக்கே பொறப்பட்டோம். துலோ ப்ளாங்கா தாண்டி, அலெக்சாண்ட்ரா ரோட்டையும் தாண்டி டெப்போ ரொட்ல திரும்பும். அதுலயும் நாலாவது நிறுத்தத்ல நாம எறங்கனும்.
பேருந்து டெப்போ ரோடு திரும்பியது. ஓட்டுநரிடம் ‘கோயிலுக்குப் போக எந்த நிறுத்தத்தில எறங்கணும்னு’ திரும்பத் திரும்ப மனோ கேட்டுக் கொண்டார். தப்பான நிறுத்தத்துல இறங்கி நடக்க விட்டுட்டா, பாதுகாப்பு இடைவெளி மட்டுமல்ல. பிசிஆர் சோதனையே எடுக்கவேண்டி வந்துவிடலாம்.
சரியான நிறுத்தத்தில் இறங்கி கோயிலுக்குச் சென்றபோது பூஜை முடியும் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. உத்தமன் உடம்பெல்லாம் ஈரமாக ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். அவர் தலைக்கு மேலே தேங்காய் பழத்துடன் ஒரு தாம்பாளத்தைப் பிடித்திருந்தார்கள். மாவிலை மஞ்சளில் அலங்கரிக்கப்பட்ட ஒரு செம்பில் எல்லாரும் அந்தத் தாம்பாளத்தின் மீது தண்ணீர் ஊற்றினார்கள். அந்தத் தண்ணீர் தாம்பாளத்திலிருந்து வழிந்து உத்தமனைக் குளிப்பாட்டியது. செம்பை மனோவிடம் கொடுத்து அவரையும் ஊற்றச் சொன்னார்கள். அரைச்செம்பு ஊற்றிவிட்டு, மீதியை மாதுவிடம் கொடுத்து ஊற்றச்சொன்னார். சம்பிரதாயங்கள் எல்லாம் ஒருவழியாக முடிந்தது. உத்தமன் ஒரு தனி அறைக்குச் சென்று உடைகளை மாற்றிக்கொண்டு பளபளப்பாக கோயிலுக்கு வந்துவிட்டார். அவருக்காக வைத்திருந்த காகித உரையைக் கொடுத்தபோது சட்டென்று உத்தமன் தன் காலில் விழுந்ததில், மனோ திகைத்துவிட்டார். அது அவர்களுடைய கலாச்சாரம். தன்னைவிட மூத்தவர்களாக இருந்தால் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவார்கள். எல்லாம் முடிந்தது. நல்ல வேளையாக கார் வைத்திருக்கும் ஒரு நண்பர் அந்தத் தேவைக்கு வந்திருந்தார். அவருடைய காரிலேயே எந்தப் பிரச்சினையும் இல்லாமல் வீட்டுக்குத் திரும்பிவிட்டார்கள்.
அடுத்த வாரமே இன்னொரு அழைப்பு. மனோவின் வீட்டுத் தொகுதியிலேயே இருந்த செல்வா சுவாசூகாங்கில் ஐந்தறை வீடு வாங்கி பால் காய்ச்சுகிறாராம். மனோவையும் மாதுவையும் அழைத்திருந்தார். செல்வா அவர்களுக்கு குடும்ப நண்பர். தவிர்க்க முடியாது. ஒரு ஞாயிற்றுக் கிழமை இருவரும் புறப்படத் தயாரானார்கள். ஒரு முறை மனோ விருப்பத்திற்கு ஒன்று நடந்துவிட்டால், அடுத்த முறை மாது விருப்பத்திற்குத்தான் நடக்க வேண்டும் என்பது அவர்களுக்கிடையே உள்ள எழுதப்படாத விதி. இந்த முறை க்ராபில்தான் செல்ல வேண்டுமென்று மனோ ஏற்கனவே முடிவு செய்துவிட்டார். இருவரும் புறப்படத் தயாராகிவிட்டார்கள்.
‘நாம கிராப்லதான் போறோம். மூணு நிமிடம் இருக்கும்போது சொல்றேன். எறங்கிடுவோம். கார் எண் 1162’
‘அட! 1162 என்னோட பொறந்த மாதம் வருஷம்’ என்று சொல்லி குழந்தையாகிப் போனார் மாது.
சுவாசூகாங்கில் ஒரு பேருந்து நிறுத்தத்தில் வந்து க்ராப் நின்றது. அவர்களுக்கு முன்னே நின்ற பேருந்திலிருந்து பாருஆச்சி என்கிற பார்வதிஆச்சி தன் பேரனுடன் இறங்கினார். பார்வதிஆச்சியும் ரொம்ப நெருக்கமானவர்தான். அவர் பாசிர் ரிஸ்ஸிலிருந்து பேருந்தில் வருகிறார். மாதுவின் பட்டுச்சேலைக்கரை சாண் அகலம்தான். பாருஆச்சியின் பட்டுச்சேலைக்கரை முழ அகலம். மாதுவின் எல்லா நகைகளையுமே ஆச்சியின் அட்டிகைக்குள் அடக்கிவிடலாம். அவர் இறங்கியதும், மனோவும் மாதுவும் வேகமாக அவரை நெருங்கினார்கள்.
‘நல்லா யிருக்கீங்களா ஆச்சி? என்ன பேருந்துல வர்றீங்க’ மனோ பேச்சுக் கொடுத்தார். அதற்குக் காரணம் இருந்தது. அவர் மாதுவை ஓர் அர்த்தத்தோடு பார்த்ததில் அது புரிந்தது.
‘ஆமா மனோத்தம்பி. எனக்கு இதுதான் வசதி. நாம எங்கெ வெளியே போறோம். இப்புடி ஏதாவது ஒரு தேவெ வந்து தொணெக்கி பேரனும் இருந்தா வேடிக்கெ பாத்துக்கிட்டே வரலாம்.’
திடீரென்று மாது கலவரப்பட்டார்.
‘ஏங்க என் கைப்பேசி ஒங்கள்டயா இருக்கு?’
‘இல்லெ மாது. எனக்கிட்ட எப்பக் குடுத்தெ?’
மீண்டும் கலவர்த்துடன் தன் பையில் குடைந்து குடைந்து பார்த்துவிட்டார். கைப்பேசி இல்லை. கைப்பேசியை அந்த க்ராபில் விட்டுவிட்டார் என்பது புரிந்தது. பாருஆச்சியிடம் பேசக்கூட முடியாமல் உடைந்துபோனார்.
மனோ உடனே மாதுவின் பேசிக்கு அழைத்தார். ஒலி கேட்கிறது. யாரும் எடுக்கவில்லை. மாது பேசியை அமைதிப்படுத்தி யிருக்கலாம். உடனே ஸ்டார்ஹப்புக்கு தொடர்பு கோண்டு மாதுவின் எண்ணைத் துண்டிக்கச் சொன்னார். மீண்டும் மாதுவின் கைப்பேசிக்கு அழைத்தார். அது துண்டிக்கப்பட்ட செய்தியை சொன்னது. மனோ திருப்தி அடைந்தார். க்ராப் எண் ஞாபகம் இருக்கிறது 1162. காவல்துறையைத் தொடர்பு கொண்டு நடந்ததைக் கூறிவிட்டார்.
‘நீ பேருந்துல வந்தியின்னா பாத்தவங்க சொல்லியிருப்பாங்க. என்னெப் பாரு பாசிர் ரிஸ்லேருந்து பேருந்துலதான் வர்றேன். இங்கெ இருக்குற தேக்காவுலேருந்து வர்றதுக்கு எதுக்கு க்ராபு. பரவாயில்லெ. நீ கவலப்படாதெ. கெடச்சுரும்.’ என்றார் ஆச்சி.
மனோ சொல்வது மனோவுக்கு சரி. மாது சொல்வது மாதுக்கு சரி. எது சரி என்று எவர் சொல்வது? யார் சொன்னாலும் யாரையும் மாற்ற முடியாது. அவரவர்கள் போக்கில் ஏதாவது ‘அடி’ வாங்கினால்தான் மாறுவார்கள். அதுவரை மாறமாட்டார்கள்.
இப்போதெல்லாம் எல்லா இடங்களுக்குமே பாதுகாப்பு இடைவெளி இல்லாமல் இன்னும் நெருக்கமாக மனோவும் மாதுவும் சேர்ந்தே பேருந்தில் பயணிக்கிறார்கள் தெரியுமா?
யூசுப் ராவுத்தர் ரஜித்