கொரனாவின்பின்னான பயணம்

0 minutes, 2 seconds Read
This entry is part 3 of 13 in the series 29 மே 2022

நடேசன்

வாழ்வில் பயணங்கள் என்பது  நூறு புத்தகங்களைப் படிப்பதற்குச் சமனானது என்று எங்கோ படித்த நினைவு. அதே நேரத்தில் புத்தகங்களை வாசிப்பதும்,  இருந்த இடத்திலிருந்தே  யாத்திரை செய்வது போன்றது என்பார்கள்.  எனது பயணம் எப்பொழுதும் புத்தகங்களுடனேயே  இருக்கும் என்பதால் இரட்டை சந்தோசம் என நினைப்பேன். ஆனால்,   இம்முறை எனது வெளிநாட்டுப் பயணம் எதிர்பார்த்ததை விடப்  பல விடயங்களை எனக்குப் போதித்தது. பலவற்றை நினைக்க வைத்தது. வாழ்வின் மகத்துவத்தைப் புரியவைத்தது.

வழமையாக என்னுடன் வரும் மனைவி  சியாமளா இம்முறை வராதபோது தனியாகப் புறப்பட நினைத்தேன். பல காலம் ஒன்றாக பிரயாணம் செய்தபின்னர்   தனியாகச் செல்வது இலகுவானதா? முடியுமா? என  இப்படிச்சில வினாக்கள் இருந்தபோதிலும்,  முக்கிய காரணமாக இருந்தது : உலகளாவிய கொரோனோ பெருந்தொற்றின் காரணத்தால் இரண்டு வருடங்களாக வீட்டில் இருந்தபோது இனிமேல் எனது வயதில் வெளிநாடு போக முடியுமா? அதற்கான மனத்திடம் உடல் நலம் என்னிடம் உள்ளதா என்று நினைத்தபடி இருந்தேன். தடிப்பான கண்ணாடிக் கூண்டுக்குள் அடைத்து வைத்தது போன்ற மன நிலையிலிருந்த இரு வருட வாழ்வை உடைத்துக்கொண்டு வெளிவர நினைத்தேன்.

இலங்கைக்கு செல்ல    விமானப்பதிவும் செய்திருந்தேன். ஆனால் இலங்கையிலிருந்து எனது சிங்கள நண்பர்கள்,  “  இது வருவதற்கான காலமில்லை. மக்களிடம் குழப்பம் உள்ளது.  மின்வெட்டு, போக்குவரத்து சீர்குலைவு   முதலான காரணங்களை சொன்னார்கள்.

மருந்துகளுக்குத் தட்டுப்பாடான இடத்திற்குப் போக வேண்டாம் என சியாமளாவின் வேண்டுகோள். நானோ முன்வைத்த காலை பின்னே வைக்காது,  காலியில் மூன்று நாட்கள் தங்குவதற்கு முன்னேற்பாடுகள் செய்திருந்த போதிலும்,  இறுதியில் மனம் மாறினேன்.  எனது சிறுகதைத் தொகுப்பும் ஒரு நாவலும் சென்னையில்  வெளிவரவிருப்பதால் அதையாவது பார்ப்போம் என  நினைத்து இந்தியா செல்ல  விசாவுக்கு  விண்ணப்பித்தேன்.  அடுத்த நாளில் விசா கிடைத்தது. கொழும்பிலிருந்து சென்னைக்கு விமான பயணத்தை மாற்றினேன்

சென்னையில் கத்தரி வெயில் காலம்.  அதிக காலம் அங்கு  நிற்க முடியாது என்பதால் இதுவரையும் அதிகம் தெரியாத , நான் பயணம் செய்யாத இந்தியாவின் வட கிழக்குப்பகுதிக்குப் போவதற்குத் தீர்மானித்தேன். அதற்கான பயணத்தை இந்தியாவிலிருந்து ஒரு முகவர் செய்தார். அவர் ஏற்கனவே இரு வருடங்கள் முன்பாக குஜராத்தில் எனது பயண ஒழுங்குகளை செய்தவர்.

பதினைந்து நாட்கள் அசாம்,மேகாலயா,  அருணாசலப் பிரதேசம் செல்வதற்கு ஏற்பாடாகியது. இதில் அருணாசலப்பிரதேசம் சீன எல்லைப் பிரதேசமானதால் வெளிநாட்டவர்  விசேட அனுமதி பெறவேண்டும். எல்லாம் முறையாக  ஒழுங்கு செய்யப்பட்டது. எனது பாடசாலை நண்பர் டாக்டர் திருச்செல்வம் தற்பொழுது சென்னையில் இருப்பவர். அவர் என்னுடன் வருவதற்குச் சம்மதித்தார்.

பயணத்தின் ஆரம்பமே பிரச்சினையில் தொடங்கியது. இந்திய விசாவுடன் மெல்பன் விமான நிலையத்தில் என்னை இறக்கிவிட்டு சியாமளா சென்றதும், ஶ்ரீலங்கன் ஏயார் லைன்ஸ்  விமானத்தினரின் போடிங் பாஸ் வினியோகப் பகுதிக்குச்  சென்றபோது எனக்கு அதிர்ச்சி காத்திருந்து. இந்தியா செல்வதற்கான   எனது  ஆரோக்கிய அத்தாட்சி பத்திரத்தை  (Air Suvidha Self Declaration Form)  நிரப்பிக் கொடுத்தால் தான் விமானத்தில் பயணம்செய்யமுடியும் என்றார்கள்.  என்ன செய்வது என மலைத்த எனக்குத் தொலைபேசியில் நிரப்பமுடியும் என்றார்கள்.  அதை எனது தொலைபேசியில் நிரப்பிக் கொடுக்க முயன்றபோது மிகவும் பிரயத்தனப்பட்டேன். முடியவில்லை.  இறுதியில் குழந்தையுடன் நின்ற  ஒரு இந்திய  இளம் பெண்ணிடம் கேட்டபோது,  அவளே  எனது தொலைபேசியில் நிரப்பித் தந்தபோது அவளுக்கு  நன்றி கூறிவிட்டு  எனது பிரயாணத்தை  தொடர்ந்தேன்.

இதுவரை காலமும் பயணங்களை என்னால் இலகுவாகச் செய்யமுடியும் என்ற எனது  அசையாத நம்பிக்கை,  இந்த டிஜிற்றல் வகையறாக்களால் தரையில் விழுந்த கண்ணாடியாகச்  சிதறடிக்கப்பட்டது. இக்காலங்களில் கம்பியூட்டர் என்னை ஒரு முட்டாளாக்கிவிடும். இலங்கையிலும் அவுஸ்திரேலியாவிலும் சிறந்த பல்கலைக்கழகங்களில் படித்துப்பெற்ற பட்டங்கள் நூலறுந்த பட்டங்களாகக் காற்றில் பறந்து,  எழுத்தறிவற்ற பாமரன் ஒருவனது நிலைக்குத்  தள்ளிவிடும் என நான் எதிர்பார்க்கவில்லை.

விமானம் கொழும்பில் இடைத் தங்கியபோது வழமையாகக் கூட்டம் இருக்கும்.  விமான நிலையம்  காலியாக இருந்தது.  அமைதியாக இருந்த இடத்தில் ஒரு வெள்ளைக்கார இளைஞன் இருந்தான்.

அவனிடம்,    “ போகிறாயா இல்லை,  இலங்கைக்கு வாருகிறாயா? ‘“ எனக்கேட்டேன்

  “விடுமுறையை முடித்துவிட்டு பாரிசுக்கு போகிறேன்  “  என்றான்

 “ விடுமுறை நன்றாக இருந்ததா?  “

  “ ஆமாம்   “  என்றான்.

அவனைப் பொறாமையுடன் பார்த்தேன். நான் இலங்கைக்குப் போகவேண்டியவன்,  ஆனால்,   தவிர்த்து இந்தியா போகிறேன். ஆனால்,  அவன் பிரச்சினையான நாட்டிற்குப் போய் திரும்புகிறான்.

ஒருவிதத்தில் அவனுக்கு அதிகமான விடயங்கள் தெரியாது. அத்துடன் அவனுக்கு முகநூலில் தமிழில் பார்க்கமுடியாது என்பதால் அவன் நல்லதை  மட்டுமே அறிந்திருப்பான் என ஆறுதலடைந்தேன்.

சென்னையில் இறங்கியதும் எனது நண்பர் என்னை அழைத்துப்போக வந்திருந்தார். அதிகாலையில் இறங்கியபோது துபாய்  விமான நிலயத்திலிருந்து வெளியேறியது போன்று அனல் தாக்கியது .

சென்னையில் இறங்கியதும் அன்று இரவு மகாபலிபுரத்திற்குச் சென்றேன். சென்னையிலிருந்த காலத்தில் மகாபலிபுரம் சென்று அங்குள்ள பல்லவர் சிற்பங்களைப்  பார்த்த காலத்தில் சிற்பங்கள் பற்றிய  அறிவு இருக்கவில்லை. அத்துடன் ஐந்து ரதங்கள் உள்ள பகுதியை மட்டும்  அப்போது பார்த்திருந்தேன். இப்பொழுது மீண்டும் அவற்றைப் பார்க்க நினைத்தேன்

அரைவிலையில் அங்கு ஹோட்டல் பதிவு இருந்ததால் அதை எனது நண்பரது மருமகன் பதிவு செய்தான். அங்கு  சென்று பார்த்தால்  அந்த ஹோட்டல் பிடிக்கவில்லை. காலைநேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்து சாரி சாரியாக பெண்களுடன் இறங்கினார்கள். ஏற்கனவே பணம் கொடுத்துப் பதிவு செய்தாகிவிட்டது என்பதால்  இறுதியில் அங்கிருந்தேன்.

அன்று இரவே மகாபலிபுரக் கடற்கரைக்குச் சென்றபோது  மக்களால் நிறைந்து வழிந்த காட்சியை தரிசிக்க முடிந்தது. பலர் முகக்கவசம் போட்டிருக்கவில்லை. அதைப் பார்த்தபோது கடந்த இரண்டு வருடங்களாக  மக்களைப் பயமுறுத்திய கொரோனோ வைரஸ் ,  தற்பொழுது புறமுதுகு காட்டும் நிலைக்கு வந்துவிட்டதோ என யோசித்தேன்.  நாட்டின் பொருளாதாரம் மக்கள் பணத்தைச் சேமிப்பதில் இல்லை,   செலவழிப்பதிலேயே  தங்கியுள்ளது. அதற்கு உல்லாசப் பிரயாணிகள் முக்கியமானவர்கள். இதைவிட உலகப்பொருளாதாரத்தில்  பத்தில் ஒரு மடங்கு பயணிகளில் தங்கியுள்ளது.

நான் வாழும் அவுஸ்திரேலியார்கள் உலகம்  எங்கும்  பயணிப்பவர்கள்.  ஆனாலும் கொரனாவின் பின் இங்கு கண்ட  மக்களது தயக்கத்தை இந்தியாவில் நான் காணவில்லை என்பது மனதுக்குச் சந்தோசமாக இருந்தது.

மகாபலிபுரத்தில் மூன்று இரவுகள் தங்குவது என்பது எனது திட்டமாக இருந்தது. அதிகாலை எழுந்து தயாராகி, காலை                       ஆறரை மணியளவில் அனுமதிச் சீட்டு வாங்கப் போனபோது  அங்கே சீட்டுக் கொடுக்க எவருமில்லை. முழு இந்தியாவையும் பிரித்தானியர்கள் தாமதமாக எழும்ப வைத்துவிட்டார்கள்.  இலங்கை,  அவுஸ்திரேலியா போன்ற காலனி நாடுகளில் எட்டரைக்குப் பாடசாலைகள்,  ஒன்பது மணிக்கு அலுவலகங்கள் தொடங்கும்போது இந்தியாவில் மட்டும் பத்து மணிக்குத் தொடங்குவதன் சூட்சுமம் ஏன்  எனப் பலகாலமாக  நான் வியந்தது உண்டு . மனித மனத்தின் மிகவும் விழிப்பான நேரம் சப்பாத்தி தோசை சுடுவதில்  வீணாய்ப்போகிறது என்பதை யாராவது சிந்தித்ததுண்டா? அதைவிட இந்த வெப்ப காலத்தில் மதியத்தில் ஏதாவது செய்யமுடியுமா ?

இதை யாராவது தலைவர்கள் யோசிப்பார்களா? அல்லது இதற்கு நியாயமான காரணம் உண்டா?

  அதிகாலை ஆறுமணிக்கு ஆயத்தமாகப் போக நினைத்த எனக்கு ஓட்டோ  சாரதி  அரைமணி நேரம் தாமதம். அதன்பின்பு சென்றால் அங்கு  ஏழுமணிக்குத்தான் சீட்டு கொண்டு வருபவர் வந்தார். ஆரம்பத்திலிருந்து ரதப்பகுதிக்கு சென்றபோது ஒரு மணிநேரமும் நான் ஒருவனே தனியாக நின்றேன் . அது மிகவும் சந்தோசத்தைக் கொடுத்தது. ஒரு மணி நேரம் தனி ஒருவனாக அக்காலத்தில் மகேந்திர பல்லவனாலும் அந்த இடத்தில் வலம் வரமுடியாது.

 இறுதியில்  கடற்கரையோரத்தில் உள்ள இரட்டைக் கோபுரக் கோயில் சென்றேன். அங்கிருந்தே எனது குறிப்பு வருகிறது.

இந்தக் கடற்கரைக் கோவிலே திராவிட சிற்பக்கலையில் பல கற்களால் (masonry construction) கட்டப்பட்ட முதல் கோவிலாகும். இதற்கு முந்தியவை குகைக்கோவிலாகவோ அல்லது தனிக்கல்லில் செதுக்கப்பட்டவையாகவோ இருந்தன.  கட்டிடக்கலையின் முதல் வெளிப்பாடு எனும்போது  அது திராவிடர்களின் கட்டிடப் பொறியியலின் ஆரம்பமாகும் . ஐந்து தளத்தில் கருங்கல்லில் ஒவ்வொன்றாக வைத்துக் கட்டப்பட்ட இந்த கட்டிடம்  இயற்கை,  சுனாமி மற்றும் படையெடுப்புளை  எதிர்த்து 1300 வருடங்கள் நிலைத்து நிற்கிறது என்பதும் அதிசயமே. தற்காலத்தில் பல கட்டிடங்கள் இந்தியாவில் இடிந்துபோவதை நாம் கேள்விப்படுவோம்.

இந்தக் கோயிலே உலகமெங்கும் தென் இந்தியர்களால் இலங்கையர்களால் கட்டப்பட்ட பல கோவில்களின்  கொள்ளுப்பாட்டனாகும். எட்டாம் நூற்றாண்டில் மாமல்லனால் கட்டப்பட்டது. இதைப்போல் ஏழு கோவில்கள்  இருந்தன.  பிற்காலத்தில் சுனாமியால் அழிந்துவிட்டன. தற்போது இரட்டைக்கோபுரத்துடன் மூன்று கோவில்கள் மட்டும் உள்ளன.

சிறுவயதில் கல்கியின் சிவகாமியின் செல்வனை அம்மாவும் நானும் போட்டி போட்டு கல்கியில் வாராவாரம் வாசித்து வளர்ந்தேன். அக்காலத்தில் மாமல்லனை கதாநாயகனாகவும் புலிகேசியை வில்லனாகவும் எனது சிறுவயதில் கனவு கண்டேன். சிவகாமி கற்பனைப் பாத்திரமாக இருந்தாலும்,  பலரது மனங்களில் சிவகாமியை  கல்கி வாழவைத்து வைத்துவிட்டு சென்றார். கல்கியின் பல கதாநாயகிகள் தமிழ் மக்களின் மனங்களில் வாழுகிறார்கள். எழுத்தாளர் சுந்தர ராமசாமி சிவகாமி சபதத்தை  முடித்தாளா என  நகைச்சுவையாக எழுதியபோதிலும்,  தமிழில் கல்கியின் சிவகாமியின் பின்னர் வேறு  எந்த பாத்திரங்களும்  மனதில் வாழவில்லை

இங்கு வரலாறு அல்லது மத அறிவில்லாத என்னைக் கவர்ந்த விடயங்களை என்னைப் போன்றவர்கள் ரசிக்க வேண்டும் என்பதால் மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன். இலக்கியம்,  நடனம் , மொழி போன்றவை பாமரரையும் சென்றடையவேண்டும்.  அல்லாதபோது அவற்றுக்கு மதிப்பில்லை. ஐந்து ரதங்களில் ஏறி தங்களைப் படமெடுத்த இளைஞர்களையும் பெண்களையும் பார்த்தபோது,  அந்த சிற்பங்களை வடித்த சிற்பிகள்  அக்காட்சியைப் பார்த்திருந்தால் இரத்தக்கண்ணீர் விடுவார்கள் என நினைத்தேன்.

கோவிலின் அமைப்பை விடக் கவர்ந்த இரு விடயங்கள் பற்றியும் இங்கே குறிப்பிடல் வேண்டும்.

ஒரே கல்லில் வடிக்கப்பட்ட சிங்கம் ஒன்றின் நெஞ்சுப்பகுதி குகையாகத் தெரிந்தது.  அதனுள்ளே துர்க்கையின் அவதார உருவம் செதுக்கப்பட்டிருந்தது. தற்போதைய இயந்திரங்களால் செதுக்குவதற்குக்கடினமான மிகவும் நுண்ணியமான சிற்ப வேலையாகத்தோன்றியது. அதனருகே தலையற்ற மானின் சிற்பம் இருந்தது. அதைவிடச் சிங்கத்தின் வலது பக்கத்தில் துர்க்கை,  சிங்கத்தின் பின்பகுதியால் ஏறமுயற்சிப்பதான சிற்பம்  தெரிகிறது.

மற்றையது  புலிகேசியைத் தோற்கடித்த மாமல்லன் சாளுக்கியர் வாராகச் சின்னத்தை வணங்குவதுபோல் அமைத்துள்ளது.

புலிகேசியின் மகனும்  சாளுக்கிய அரசனாகிய விக்கிரமாதித்தன் 32 வருடங்கள் பின்பாக  பல்லவரை   தோற்கடித்தான்.  தலைகுனிந்து நின்ற அந்த வாராகச் சிலை அடித்து நொருக்கப்பட்டுளளது.

 பிற்காலத்தில் அந்த வராகம் மீள் உருவாக்கம் செய்யப்பட்டபோதும் உடைவுகள் தெரிகிறது.

மெல்பனில் தற்பொழுது ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டுப் பல கோவில்கள் உருவாகியுள்ளன. ஆனால் கோவில்களது இந்த அமைப்புகள் – விமானங்கள் 1500 வருடங்களாக மாமல்லனது சிற்பிகளின் சிந்தனைக்குப் பின்பு ஒரு அங்குலமும் மாறவில்லை.  நமது வீடுகளின் அமைப்புகள் எவ்வளவு மாறியிருக்கிறது?

சூடான நாட்டிற்கு ஏற்ப  நாற்சார் வீடுகள் அக்காலத்தில் இருந்தன.  இக்காலத்தில் சீமெந்தால் நாலு பக்கமும் கற்றுப்போகாத  வீடுகளையே  இந்தியா எங்கும் காணமுடியும்.  கோடையில் இருக்க முடியாது. மொட்டை மாடிக்கு வருவார்கள்.

இதை விட ஒரு சுவாரசியமான விடயத்தையும் சொல்லத்தான் வேண்டும்.   இலங்கையில்  போர்க் காலத்தின் பின்பு யாழ்ப்பாண நகரமண்டபத்தை கட்டுவதற்கான வரைபடத்தை எனது கட்டிடக்கலை நிபுணத்துவம் மிக்க  நண்பர் ஒருவர்  பல நாள் உழைப்பில் வடிவமைத்து எடுத்துச் சென்றபோது,  அவர்கள் சொன்ன பதில்:  “ நாங்கள் திராவிட கலையைத்தான்  பின்பற்றுவோம்   “

ஆனால்,  அவர்களுக்கு திராவிடக்கலை என்றால் என்ன எனத்தெரியாது.   இதனது ஆரம்பத்தை பார்க்கவேண்டுமென்று அப்பொழுது நினைத்தேன். சில வருடங்கள் முன்பாக விஜயநகர சாம்ராச்சியத்தின் ஹம்பிக்கு சென்றபோது அங்கு தமிழ்நாட்டின் சிற்பக்கலைஞர்கள் பலர் இந்த சிற்பங்களைச் செய்தார்கள் என்ற பொருட்பட அங்கு எழுதப்பட்டிருந்ததை அவதானித்தேன்.  ஹம்பி பல்லவர்களுக்கு 500 வருடங்கள் பின்பாக உருவானது.

 

(  மிகுதி தொடரும் )

Series Navigationவானத்தில் ஓர் போர்ஹைக்கூ
author

நடேசன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *