தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

This entry is part 9 of 13 in the series 29 மே 2022

பாச்சுடர் வளவ. துரையன்

                 

                   திங்கள் தண்மையின் தேரோன் அவிந்தனன்

                                          தங்கள் வெம்மையின் தண்மதி வேவவே.               581

 

[தேரோன்=மன்மதன்]

 

நெருப்பில் சந்திரன் வெந்து அழிந்தான். அவனுடன் வந்த மன்மதனும் வெம்மையினால் மாண்டான்.

                                          கால்கொளுத்தும் அச்செந்தீக் கடவுளும்

                                          மேல்கொளும் தகர் வீழ்ந்துழி வீழவே.                   582

 

[கால்=காற்று; தகர்=ஆடு]

 

காற்றின் துணையால் விரைவாகப் பற்றி எரிகின்ற நெருப்புக் கடவுளான அக்கினியும் தன் ஆட்டுக்கிடா வாகனத்துடன் வீழ்ந்தழிந்து அழிந்தான்.

                                 

              ஏறுதூக்கும் இடிஎரிந்து தீந்துஅவர்

                             ஆறுதூக்கும் அம்மேகம் அடங்கவே.                         583

 

[ஏறு=இடி; தூக்கும்=இடிக்கச் செய்யும்; எரி=மின்னல்; நீத்து=இழந்து; ஆறு தூக்கும்=மழை உண்டாக்கும்]

 

இடி இடித்து நெருப்புபோல மின்னும் மேகங்கள் வறண்டு போய்க் கிடந்தன. ஏனெனில் அவை முன்னமே பூதப் படைகளால் விழுங்கி வறட்சி உற்றவையாகி விட்டதால்.

                            காந்த மூளத்திருக்கண் கதிர்க்கு எதிர்

                            போந்த எல்லாப் பொருப்பும் பொரியவே.                      584

 

[காந்தம்=நெருப்புச் சுடர்; மூள=மிக; பொருப்பு=மலை]

 

பூதகணங்களின் கண்களில் மூண்டெழுந்த பெரு நெருப்பை எதிர்கொள்ள இயலாமல் எல்லா மலைகளும், பொசுங்கித் தீய்ந்து பொடிப் பொடியாய்ப் போயின.

                                           

                  எப்புத் தேளும் இடும்எப் பணிகளும்

                                          வெப்புத் தீயில் விரவி எரியவே.                        585   

 

[புத்தேள்=தேவர்; பணி=பாம்பு; வெப்புத்தீ=சுடும் நெருப்பு]

 

தேவர்கள் எல்லாரும் எடுத்து வீசிய பாம்புகள் எல்லாம் அக்கினி நெருப்புக்கு ஆளாகி எரிந்தன.

                                                        அனிக மாய்வரும் ஆகண் டலன்விடும்

                                                        முனிக ணத்தவர் தம்முதழல் மூழ்கவே.           586

 

[அனிகம்=படை; ஆகண்டவன்=இந்திரன்; முத்தீ=ஆசுவனீயம், கார்காபத்தியம், தக்கணாக்கியம்,; பூதங்களின் முத்தீ=பசி நெருப்பு, கோப நெருப்பு, கையில் ஏந்திய நெருப்பு]

 

இந்திரனால் அனுப்பி வைக்கப்பட்ட பெரும்படையும் தவ முனிவர்களின் முத்தீயும், பூதப்படைகளின் முத்தீயால் அவிந்து அழிந்தன.

                                                        விரிமுகக் கடல் ஏழ்பெரு வெள்ளமும்

                                                        பரிமுகத் தொரு செந்தீப் பருகவே.                587

 

[விரிமிகம்=பரந்தகன்ற; பரி=குதிரை]

 

விரிந்து பரந்திருக்கும் ஏழு கடல் நீரையும், குதிரை முகம் கொண்ட பேய் ஒன்று குடித்து வறண்டு போகச் செய்து விட்டது.

                                                 

                           வேட்டுத் தீ வரவிட்டன காட்டுவெங்

                                                        காட்டுத் தீ இனம் மூடு கதுவவே.                 588

 

[வேட்டு=வேள்வி செய்து; காட்டு=பாழுங்காடு= கதுவுதல்=அழிதல்]

 

வேள்வியினால் எழுந்த தீ நெருப்பு எல்லாம் பூத கணங்கள் எழுப்பிய பாழுங்காட்டுத் தீயில் சிக்கி வெந்தழிந்தன.   

                                                        பெருக வெந்தன செந்தீப் பிழம்பெழ

                                                        உருக வெந்தன தாரகா லோகமே.                 589

 

[தாரகாலோகம்=நட்சத்திர மண்டலம்]

 

வேள்வித் தீயை அழித்தெழுந்த பெரு நெருப்பு பற்றி எரிந்து பரவ, நட்சத்திர மண்டலம் வெந்துருகி அழிந்தது..

                                                        முன்னமுன்ன அடைய முனியுமால்

                                                        பின்னை யார்அவர் கையில் பிழைப்பரே.          590

 

[முன்ன=நினைக்க; அடைய=எண்ணியதைச் செய்து முடிக்க; முனியும்=துணியும்]

 

இந்தப் பூதப்படைகள் நினைத்த உடனேயே நினைத்ததை முடித்து விடும் உயிர்களைக் கொல்லும் ஆற்றலுடையவர்களாக இருக்கின்றபோது யார்தான் இவர்களிடமிருந்து தப்பிப் பிழைக்க இயலும்?

                                          பாவகாரப் பதின்மரும் யாவரும்

                                          வேவ வேவப்படைத்தனர் மீளவே.                       591

 

[பாவகாரப் பதின்மர்=பிரமனார் பதின்மர் என்பர்]

 

பாவத்துக்கு ஆளான பிரமாக்கள் பத்துப் பேரும் தேவர்கள் வெந்தழிய அழிய அவர்களை மீண்டும் மீண்டும் படைத்தனர்.

                                                      

                  படைத்துவிட்ட சுரர் சேனையைத் தலைவி

                                                        பத்ரகாளி படைகண்டு பண்டு

                                          அடைத்து விட்டபடி யன்றியே இறைவர்

                                                        முன்பு நின்றனபின் பாகவே.                      592

 

[சுரர்=தேவர்; பண்டு =முன்பு; அடைத்துவிட்டபடி=ஆணையிட்டபடி]

 

பத்துப் பிரமர்கள் படைத்தளித்த சேனையைக் கண்ட தேவி பத்ரகாளியின் தலைமையில் வந்த தேவியின் படை முன்னே நின்ற வீரபத்திரரின் படையைத் தள்ளிவிட்டு அவற்றின் முன் வந்து நின்றது.

                                          மோக மோகினிகள் யோக யோகினிகள்

                                                        யாக சம்மினிகள் முலைவிடா

                                          நாக சாகினிகள் வீர பைரவிகள்

                                                        நாத சாதகர்கள் நண்ணியே.                      593

 

[மோகம்=இச்சை; யோகம்=தியானம்; யாகம்=வேள்வி; நாகம்=சுவர்க்கம்; வீரம் ஆற்றல்; நாதம்=ஒலி; சாதகம்=பண்ணுதல்; நண்னுதல்=அடைதல்]

 

மோகத்தை ஊட்டும் மோகினிகள், யோகத்திற்குத் துணை செய்யும் யோகினிகள், வேள்வித்தீயில் இடப்ப்டும் அவி உணவைத் தேவர்கள் அடையச் செய்யும் சம்மினிகள், சுவர்க்கலோகம் அடையச் செய்யும் சாகினிகள், வைரவ மதத்தைச் சேர்ந்த வைரவிகள், நாதத்துக்குத் தலைவியான நாத சாதகிகள் என்போர் பத்ர்காளிப்படையில் சேர்ந்திருந்தனர்.

                                          யானை யாளிபரி ஏதி தேர்கள்என

                                                        எண்ணில் கோடிபல பண்ணிஇச்

                                          சேனை ஆள்என அநேக பூதமொடு

                                                        செய்த  பேய்களொடு செல்லவே.                  594

 

[யாளி=சிங்க உடல் யானைத்துதிக்கை கொண்ட விலங்கு, பரி=குதிரை; ஏதி=வாள்]

 

யானைப்படை, யாளிப்படை, குதிரைப் படை, வாள் முதலான கருவிகள், தேர்க்கூட்டம் என அளவிட முடியாத படைகளுடன், சேனை—காலாட்படை வீர்ர்களாகப் பூதங்களோடும் பேய்களோடும் தேவியர் படை புறப்பட்டது.

                                          கொண்ட திருக் கோலங்கள் இருக்கும்

                                                        படிஅடியோமே கூற இருப்போம்

                                          அண்டம் அனைத்தும் சூழ வரும்பேர்

                                                        ஆழிக ளாமே ஆழி அவர்க்கே.                      595

 

[திருக்கோலம்=தோற்றப் பொலிவு; அடியெம்=அடியவர்களாகிய நாங்கள்; அண்டம்=உலகம்; ஆழி=சக்கரம்]

 

இவ்வுலகையே சூழ்ந்திருக்கும் சக்கரவாளகிரியே தேவியர் ஒருவர் கையில் சக்கராயுதமாகவும், விரலில் அணியும் மோதிரமாகவும் இருக்கும் எனில் அவர்களின் முழுத் திருக்கோலத்தையும் எம்மால் கூற இயலுமோ?

                                             

                  உலகு வகுப்பார் உலகு தொகுப்பார்

                                                        உலகு படைப்பார் உலகு துடைப்பார்

                                          அலகு வகுப்பார் அலகில் கலைக்கூறு 

                                                        அடைய விடுப்பார் அவள டியாரே.                  596

 

[வகுத்தல்=வகை பிரித்தல்; தொகுத்தல்=ஒன்றாகச் சேர்த்தல்; அலகு வகுத்தல்=அளவை வரையறை செய்த்ல்]

 

பத்ரகாளியின் அடியவர்களான படைவீரர்கள் உலகங்களை வகுப்பார்கள்; ஒன்றாகத் தொகுப்பார்கள்; படைப்பார்கள்; அழிப்பார்கள்; பல கலைச்செல்வங்களை உண்டாக்குவார்கள்; பின் அதுவிடுபட மறைப்பார்கள்

             

                                          பொய்யானையும் ஆளும் உடன்று பொரா

                                          மெய்யானையும் ஆளும் விழுங்கினவே.              597

 

[உடன்று=போரிட்டு; பொரா=பொருக்கமாட்டாது]

 

போரிட இயலாத் தேவியின் படைகளின் முன் பொய்மையாகிய யானையும், அதனைச் செலுத்துபவரும், மெய்மையான யானை விழுங்க அழிவது போல  புதிய படைகள் தோற்றன,

                                          பொய்யாளியில் ஆள்இடும் எஃகுஇடைபோய்

                                          மெய்யாளியொடு இற்றனர் விஞ்சையரே.               598

 

[உடன்று=போரிட்டு; பொரா=பொருக்கமாட்டாது]

 

மரத்தால் செய்யப்பட்ட யாளிப்படையின் மீதிருந்து, தேவியின் படைவீர்ர்கள் எரிந்த ஈட்டி பாய்ந்து நிசமான யாளிகள் மேலமர்ந்து போரிட வந்த கந்தருவர்கள் மடிந்தனர்.

                                          பொய்த்தோணி முட்ட வெறும் பொடியாய்

                                          மெய்த்தோணி அற்றனர் விண்ணவரே.                 599

 

[தோணி=தேர்க்கூட்டம்; அற்றனர்=அழிந்தனர்]

 

தேவியின் படைகள் மாயாசக்தியால் உண்டாக்கிய தேர்க்கூட்டத்தின் முன்னர் நிற்க இயலாமால் வானவர்களின் உண்மையான தேர்ப்படை பொடிப் பொடியாகப் போயிற்று

                                          பொய்வாரி பரந்து புகப்புரளும்

                                          மெய்வாரி பிறங்கி விசும்புறவே.                       600

 

[வாரி=கடல் பிறங்கி=பிறகிட்டு; விசும்பு=ஆகாயம்]

 

தேவியின் படைகள் உண்டாக்கிய பொய்யான மாயக் கடல்கள் பொங்கி எழுந்து அலைகள் புரள மெய்யான கடலரசன் வருணன் புறமுதுகிட்டு விண்ணில் போய் ஒளிந்து கொண்டான்.

                                           

      

                  பொய்வந்த பதாதியுள் ஆவிபுகா

                                          மெய்வந்த பதாதி விழுந்தறவே.                       601

 

[பதாதி=காலாட்படை வீர்ர்கள்; ஆவி=உயிர்]

 

மாயத்தால் உருவாக்கப்பட்ட காலாட்படை வீர்ர்கள், மெய்யான உண்மைப் படைவீரர்கள் உடலுள் புகுந்து உயிரை வருத்திக் கொல்ல, அவைகளும் அப்படைகளும் அழிந்தன.

                                          பொய்ஆய்த வாய்உமிழ் பொங்கழலால்                         

                                          மெய்ஆய்தம் யாவையும் வெந்தறவே.                 602

 

[ஆயுதவாய்=படைக்கலங்களிடம்]                                       

 

மாயத்தோற்றமாகிய பொய்ப் படைக்கலங்களிடம் அகப்பட்டு, அவை சிந்திய பெரு நெருப்பில் பிரமன் படைத்த உண்மையான ஆயுதங்கள் வெந்தழிந்தன.

                   பொய்ந்நின்ற பதாகினி தந்தது போய்

                                          மெய்நின்ற பதாகினி மெய்கெடவே.                    603

 

[பதாகினி=சேனைவீர்ர்கள்; மெய்=உடம்பு]                

 

மாயாசக்தியால் உருவக்கப்பட்ட, பொய்யான சேனைப்படைகள் சென்று, பிரமதேவன் படைத்த உண்மையான நான்கு வகைப் படைகளையும் அழியச் செய்தன.

                                          நுங்கள் கூறுகொன் றிர்இனி நொய்யகூறு

                                          எங்கள் கூறு எமக்கே விடும் என்னவே.                604

 

 

கூறு=பங்கு; நொய்ய=சிறிய]

 

இவ்வாறு பிரமதேவன் புதிதுபுதிதாகப் படைத்த படைகள் எல்லாம் அழிந்துவிட, போர் ஓய்ந்த நிலையில், பறவைகள் தேவியின் படைத்தலைவிகளிடம், உங்கள் பங்கான கொலைத்தொழில் முடிந்தது, இனி எம் பணி சிறிதே ஆயினும் அதைச் செய்ய விடுக என்றன.

                                          பால்நிலாவைப் பசுங்கதிர்க் கொத்தொடு

                                          மேல்நிலாவும் சகோரங்கள் மேயவே.                  605

[கொத்து=ஒளிக்கற்றை; சகோரம்=நிலவின் ஒளியையே உணவாகக் கொள்ளும் பறவை]

 

பால்போல் வெளுத்த வெண்ணிலவின் குளிர்ந்த ஒளிக்கிரணங்களைக் கொத்தாகப் பற்றி உணவாக்கும் வானுலாவும் சகோதரங்கள் மேய்ந்தன.

                                           

                  கோன் அம்போதரம் கும்போதரம் புக

                                          வானம் பாடியே கூடி மடுப்பவே.                    606

 

[கோன்=அரசன்; அம்போதரம்=மேகம்; கும்போதரம்=குடம் போன்ற வயிறு]

 

மேக அரசன் பொழிந்த மழைநீரைக் குடம் போன்ற தம் வயிறு அடங்கக் குடித்தன வானம்பாடிப் பறவைகள்.

                                          ஏறும் ஏறும் மலைகள் எல்லாம்புக

                                          வேறு வேறு கபோதங்கள் மேயவே.                      607

 

[ஏறு=இடி; ஏறும்=மோதி முழங்கும்; கபோதம்=கருப்புப் புறா; மேய=இரையுண்ண]

 

இடிகள் முழங்கும் மலைகளின் உடைந்த சிறு சிறு கற்களைத் தனித் தனியே சில புறாக்கள் உண்ணும்.

                     பதங்கர் வெங்கதிர் பன்னிரண் டாயிரம்

                            கதங்கொள் நீகலிகைக் கிள்ளை கவரவே.             608                                    

 

[பதங்கர்=சூரியன்; வெங்கதிர்=வெப்பமுடைய கிரணங்கள்; கதம்=உக்கிரம்; நீலி=காளி; கிள்ளை=கிளி]

 

பன்னிரு சூரியர்கள் வெளியிடும் வெப்பக்கதிர்கள் பன்னிரண்டாயிரத்தையும், பத்ரகாளியின் படைத்தலைவிகளின் கைகளில் இருந்த கிளிகள் கவர்ந்து தின்றன.

                                          யூதநாயக ரோடுஉர கேசரை

                                          வேதநாயகி தோகை விழுங்கவே.                   609

 

[யூதம்=படை; நாயகர்=தலைவர்; உரசேனர்=நாகராசாக்கள்; தோகை=மயில்]

 

நாகப்படைகளோடு நாகராசாக்களையும் வேதங்ளுக்கெல்லாம் தலைவியாகிய வேத நாயகி அமர்ந்து வரும் மயில் விழுங்கியது.

                                          முன்நரம்பினும் முத்தர் மிடற்றினும்

                                          கின்னரம் சுரர் நெஞ்சம் கிழிக்கவே.                       610

 

[முன்நரம்பு=வீணை நரம்பு; முத்தர்=சிவபெருமான்; மிடறு=தொண்டை; கின்னரம்=தேவர் உலகின் பறவை’; சுரர்=தேவர்]

 

வீணையின் இசை நரம்புகளிலும், மேலாகச் சிவபெருமான் தொண்டைவழி இசைத்த இன்னிசைக்கு இணையாகத் தேவியின் படைகள் கின்னரப் பறவைகளாக உருமாறிப் பாடித் தேவர்களை மதிமயங்கச் செய்து உயிரிழக்கச் செய்தனர்.

                                                                                                              

                           

                  சக்ர மாயச்சென்று சக்ர வாகங்களே

                                          விக்ர மாயுத வெள்ளத்தை வெட்டவே.                  611

 

[சக்ரவாகம்=பாடும் பறவை; விக்ரமாயுதம்=வெற்றி தரும் படைக்கலம்]

 

சக்கரவாகப் பறவைகள், சக்கரம் போலச் சுழன்று சென்று திருமால்களின் சக்ராயுதங்களை வெட்டி வீழ்த்தின.

                                          திருடன் இந்திரன் உய்ந்து திரியுமோ

                                          கருடன் ஆயிரம் கண்ணும் கவரவே.                     612

 

[உய்ந்து=உயிர் தப்பி; கவர்தல்=கொள்ளுதல்]

 

தேவியின் படைத்தலைவி கருடனாய் உருவெடுத்து அவன் ஆயிரம் கண்களையும் கவர்ந்த பிறகு, இந்திரன் உயிர் தப்பிப்பிழைக்க திருட்டுத் தனமாக குயிலாக உருவெடுத்துப் போய் தப்பிக்க முடியுமா?

                                          ஆளி ஏறி அகிலாண்ட நாயகி

                                          வாளி ஏவி உலகை வளைப்பவே.                         613

 

[ஆளி=ஒரு மிருகம்; வாளி=அம்பு]

 

யாளி எனும் தம் வாகனத்தின் மீது ஏறி அமர்ந்து, அகில உலகுக்கும் தலைவியான் பத்ரகாளியே வந்து அம்பெய்ய, அம்புமழை உலகைச் சுற்றி வளைத்தது.

                                          எக்க வந்தமும் எப்பிண மும்கிரி

                                          ஒக்க வந்தொரு வாளிக்கு உதவவே.                     614

 

[கவந்தம்=தலையற்ற முண்டம்]

 

அன்னை ஏவிய அம்பு ஒன்றுக்கு இரையாகிப் பிணங்களும் முண்டங்களும் மலைபோல அங்கே குவிந்தன.

                                          பூமிவட்டமும் போர் எரிவட்டமும்

                                          நேமி வட்டமும் நேரொத்து நிற்கவே.                     615

 

[எரி=நெருப்பு; நேமி=சக்கரம்]

 

அன்னையின் அம்பு முன்பாக, பூமண்டலம், அக்கினி மண்டலம், சக்கரவாளகிரிச் சுற்று வட்டம் மூன்றும், எல்லை காண முடியாது ஒன்று போலாயின்,

                                              

                   கொன்றதன்று இமையோர்பிணம் கூளிகள்

                                          தின்ற சீர்தம் திருவுள்ளம் சேர்த்தியே.                     616 

 

[கூளி=பேய்; சீர்=பெருமை]

 

ஊழியின் முடிவில் உயிர்களைக் கொன்று குவித்தது போலன்று கூளிப்பேய்கள் தின்ற தேவர்கள் உடல்களின் அளவு. இது ஊழியன்று; இது தேவியின் திருவுள்ளம் அருளிய செயல்; இதுவும் ஓர் ஊழி போலானது

                                          புங்கவாளி ஒன்றினல் புரத்ரயம் சகத்ரயம்

                                          சிங்கவாளி ஒன்றினால் இருவரும் சிதைப்பவே.          617

 

[சகம்=உலகம்; திரயம்=மூன்று; சிங்கவாளி=வலிமை உடைய அம்பு; சிதைப்பு=அழிப்பு]

 

சிவபெருமான் ஓர் அம்பினால் திரிபுரங்களை அழித்தார்; ஓர் வலிமை மிக்க அம்பினால் மூன்று உலகங்களையுமே அழித்தாள் அன்னை. இருவரும் புரிந்த அழித்தல் தொழில் இதுவாகும்.

                                          இப்படிப் பட்ட பின்னும்

                                                        இமையவர் படை கண்டு ஐயர்

                                          ”அப்படை இன்னம் நின்றது

                                               என்கொல்” என்று அருளிச் செய்ய.                   618

 

[ஐயர்=பெரியோர்; [வீரபத்திரர்;]  நின்றது இருப்பது; என்கொல்=எவ்வாறு]

 

இப்படை போரிட்டு அழித்த பின்னரும் தேவர்களின் படையானது முழுதும் அழியாமல் இருப்பதற்கு என்ன காரணம் என வீரபத்திரர் கேட்டார்.

                                          ”படப்பட அயனும் மக்கள்

                                                        பதின்மரும் படையா நின்றார்

                                          விடப்பணி அணியோய்” என்று

                                                        விண்ணப்பம் செய்யக் கேட்டே.                  619

 

[படப்பட=இறந்து போக; அயன்=பிரமன்; விடப்பணி=நஞ்சுடைய பாம்பு; அணியோய்=ஆபரணமாக அணிந்தரே; விண்னப்பம்=மறுமொழி]

 

”படமெடுக்கும் பாம்புகளை ஆபரணமாக அணிந்தவரே! நாம் படைகளை அழிக்க அழிக்கப் பிரமனும் அவன் பிள்ளைகள் பத்துப் பேரும் புதிது பதிதாகப் படைத்துப் போருக்கு அனுப்புகின்றனர்” எனப் பூதகணங்கள் கூறக் கேட்டு,

                                          சீறிய சினத்தீ உண்ணத்

                                                        திரிபுரம் எரித்த நாளில்

                                          ஏறிய திருத்தேர் நின்றும்

                                                        இழிந்தனன் எங்கள் வீரன்.                       620

 

[திரிபுரம் முப்புரம்; இழிந்தனன்=இறங்கினன்; வீரன்=வீரபத்திரர்]

                                                                                                              

பூதகணங்கள் கூறக் கேட்ட எம் தலைவரான வீரபத்திரர் கோபத் தீ பற்றி எரிய முப்புரங்களை எரிக்கப் புறப்பட்டபோது ஏறிச் சென்ற தேரை விட்டு இறங்கினார்.

Series Navigationஉள்ளங்கைப்புண்வடகிழக்கு இந்தியப் பயணம் : 11 
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *