தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

This entry is part 5 of 8 in the series 19 ஜூன் 2022

 

                

 

                                             பாச்சுடர் வளவ. துரையன்

 

                   பாழி வாய்மதி தன்னைப் பரிப்பதோர்

                  ஆழி  ஈரப்பிறை இரண்டாகவே.                         688

 

[பாழி=வட்டம்; மதி=சந்திரன்; பரித்தல்=சுமத்தல்; ஈரப்பிறை=குளிர்நிலா]

 

வட்ட வடிவமான ஒரு விமானத்தில் சந்திரன் வந்தான். பூதகணங்கள் அவ்விமானத்தையே அவன்மீது ஏவ அதுவே அவனை இரண்டாகப் பிளந்தது.

=====================================================================================

                  மாறு கூர் வடகீழ்த்திசை வானவன்

                  ஏறு மார்பம் திறப்ப இறப்பவே.                          689

 

[மாறுகூர்=மாறுபட்ட;வானவன்=ஈசானன்; ஏறு=எருது]

 

வடகிழக்குத் திசைக்காவலன் ஈசானன் தன் வெண்ணிற எருதை விட்டுக் கருப்பு எருதின் மீது ஏறிவர, அவனையும் அந்த எருதை விட்டே அவனுடைய மார்பைக் கிழித்து மாளச்செய அவனும் இறந்தான்.

============================================================================

                  அங்கிகள் மூவரும் நேர்அட்ட வசுக்களும்நேர்

                  எங்குள தேவரும் நேர்கின்னர் யாவரும்நேர்.            690

 

ஆசுவனீயம், காருகபத்தியம், தக்கினாக்கினி. எனும் மூன்று நெருப்புகளும் அவிந்தழிந்தன. எண்திசைக்காவலர்களும் அட்டவசுக்களும் அழிந்தனர். மற்றுமுள்ள தேவர்களும் வித்தியாதரர்களும் அழிந்தனர்.

=====================================================================================

                        

                  இந்திர முராரிகள்நேர் யம வருணாதிகள் நேர்

                  சந்திர திவாகரர் நேர் தாரகை யாவையும் நேர்.            691

 

[முராரி=திருமால்; திவாகரர்=சூரியர்கள்; தாரகை=நடசத்திரம்]

 

இந்திரர்கள், திருமால்கள், எமதருமர்கள், வருணன் முதலானோர் மற்றும் சந்திர சூரியர்கள், நட்சத்திரக் கூட்டங்கள் எல்லாருமே வந்து வந்து மாண்டனர்.

=====================================================================================

                  மண்தலம் அடிஇடநேர் தோள்இட மாதிரம்நேர்

                  விண்தலம் முடிஇடநேர் விண்ணவரே இனிநேர்.           692

 

[மண்தலம்=பூமி; மாதிரம்=திசை]

 

 பூதகணங்களின் காலடியில் அழுந்திப் பூமி அழிந்தது. தோள்கள் தாக்கத் திசைகள் அழிந்தன. தலைகள் முட்ட விண்ணுலகம் உடைந்தழிந்தது. இவ்வளவுக்குப் பின்னும் தேவர்கள் இன்னும் அழியவில்லை.

====================================================================================

                  பொக்கம் தவிர்வியாழன் சுக்ரன்போல் வீழப்

                        பூகண்டகர் கோவோடு ஆகண்டலன் மாயத்

                  தக்கன் தலையானார் பக்கம்படை போதச்

                        சதுரானன் வெள்ளம் சூழத்தான் வந்தே.             693

 

[பொக்கம்=வஞ்சகம்; தவிர்=இல்லாத; வியாழன்=குரு; சுக்கிரன்=அசுரர் குரு; பூகண்டர்=பொல்லாத அசுரர்; கோ=அரசன்; ஆகண்டலன்=இந்திரன்; தலையானவர்=திருமால்; சதுரானன்=நான்முகன்]

 

வஞ்சகம் இல்லாத வியாழ பகவானும், தேவர்களின் குருவான சுக்கிரன் போல அழிய, தேவர்களின் தலைவனான இந்திரனும், அழிய, தக்கனுக்குத் துணையாகப் பிரமன் முதலான துணைப்படையுடன் திருமால் வீரபத்திரரை எதிர்க்க வந்தார்.

=====================================================================================  

            காரில் துளியால் ஓர்அசனிக் கதழ்ஏறும்

                  கடலில் திரையால் ஓர்வடவைக் கனல்மாவும்

            பாரில் துகளால் ஓர்படநாகமும் ஆகப்

                  பரமன் பூரிக்கப் பிரமன் பாரித்தே.                     694

 

[கார்=மேகம்; அசனிஏறு=இடி ஏறு; கதழ்=விரைவு; திரி=அலை வடவைக்கனல் ஊழிக்கால நெருப்பு; பார்=பூமி; துகள்=தூள்; பரமன்=திருமால்; பூரிக்க=உருவாக்க பாரித்தல்=ஆர்ப்பரித்தல்]

 

திருமால் மேகமூட்டத்தில் ஒரு மழைத்துளியை விரைந்து  முழங்கும் இடியாகவும். கடல் அலையில் ஒன்றை ஊழிக்கால நெருப்பாகவும், பூமியில் ஓர் அணுவைப் பாம்பாகவும், மாற்றி ஒரு பெரும்படையை உருவாக்கினார். பிரமன் அப்படையை முறையாக அணிவகுத்தார்.

=====================================================================================

            சதுரானன் வெள்ளம் சூழ்ந்தான் முற்றும்

                  தந்திரங்களும் எல்லா யந்திரங்களும் உட்கொண்டு

            எதிராய் அவியக்கண்டு ஈரைவரையும் கொண்டு

                  இறையோன் எதிர்சென்றான் மறையோர் இறையோனே.   695

 

[சதுரானன்=பிரமன்; வெள்ளம்=ஓர் எண்ணிக்கை அளவு; அவிய=பயனற்றதாக; இறையோன்=வீரபத்திரர் ;மறையோர் இறையோன்=திருமால்]

 

திருமால் இப்படி உருவாக்கிய பிரம்மாக்களும், திருமால்களும், கற்று முடிந்த போர்க்கலைகள், மாயப்படைக்கலங்கள் எல்லாம் பயன்படுத்தியும், அவை பூதகணங்களின் முன்னால் பயனற்றுப் போனதைக் கண்டு உண்மையான திருமால் பத்து மெய்ப்பிரமதேவர்களுடன் வந்து வீரபத்திரரை எதிர்த்தார்.

=====================================================================================

                 

 

                  சாதித் தழலாம் முத்தொகையும் முக்குடுமிச்

                        சத்திப் பிழையாமே குத்தித் தனிநெற்றிச்

                  சோதித் தழலில் பண்டெரி முப்புரம் ஒப்பச்

                        சுட்டுக் ககனத்தே விட்டுத் துகள்செய்தே.           696

 

[சாதித்த=உண்டாக்கிய; அழல்=வடமுகாக்கினி; இடி=நாகப்பாம்பின் நஞ்சு; அழல்,நெருப்பு,நஞ்சு=இவையே முத்தொகை; ககனம்=ஆகாயம்; துகள்=பொடி]                 

 

திருமால் தம் மாயத்தால் உண்டாக்கிய இடி, அழல், நஞ்சு ஆகிய மூன்றையும், வீரபத்திரர் தம் கையில் உள்ள மூவிலைச் சூலத்தால் குத்தி, நெற்றிக்கண் நெருப்பால் முன்னர் முப்புரம் எரித்ததைப் போல எரித்து சாம்பலாகச் செய்து அச்சாம்பல் பொடியை ஆகாயமெங்கும் தூவினார்.

                                        

             பத்துத் தலையோடும் பதின்மர்க்கும் தத்தம்

                  பறியா உயிர்போகப் பதுமத்திறை வர்க்கும்

            கொத்துத் தலைநாலும் கலனாகிய முன்னைக்

                  குறளைத் தலையாகக் கொளைவிற்குனி வித்தே.         697

 

[பறியா=பறித்த; பதுமத்திறைவர்=தாமரை மலரில் இருக்கும் இறைவன்; குறள்=புறம் கூறல்; கொளை=அம்புத்தொடை; குனித்து=வளைத்து]

 

பத்துப் பிரமர்களின் கொத்தாக உள்ள நான்கு தலைகளையும் ஒரு கொத்தாகச் சேர்த்து ஓர் அம்பால் வீரபத்திரர் அறுத்துத் தள்ளினார். அவர்கள் உயிர் தலைவழியே போனது. முன்னர் திரிபுரமெரிக்க பரமன் புறப்பட்ட போது சிவவில்லை இகழ்ந்த தலை இப்போது அந்த வில்லாலேயே அறுபட்டது.

=====================================================================================

            செந்தாமரையோனை  கிளையோடு உயிர்வவ்வித்

                  திருமால்வருக என்றுஎம் பெருமான் அறைகூவத்

            தந்தாமரை உந்திப் புதல்வன் கொலை உண்ணத்

                  தரியார் இவர்எனக் கரியார் எதிர்சென்றே.                698

 

[கிளை=கூட்டம்; வவ்வி=கவர்ந்து; தந்தார்=பெற்றவர்; உந்தி=கொப்பூழ்; தரியார்=தாங்க இயலாதவர்; கரியார்=திருமால்]

 

தாமரை மலராரான திருமாலை “நீர் போர் செய்ய வருவதாயின் வரலாம்” எனக் கூவி அழைக்க அவர் தம் கொப்பூழிலிருந்து தோன்றிய பிரம தேவர்கள் பதின்மரும் கொலை செய்யப்பட்டு விட்ட கொடுமையைத் தாங்கிக் கொள்ள இயலாமல் வந்திருக்கிறார் என என்ணுபடியாக கரிய திருமால் வீரபத்திரர் முன் வந்து நின்றார்.

————————————————————————————————————————————————-

            பொரு தரங்கம் வீங்கு சிலம்படை சேவடிப்

                  புரை அடங்க ஊன்ற விழுந்தது மேதினி

            இரு விடும்பு தூர்ந்துற உந்திய மோலியின்

                  இடை கழிந்து கூம்பினது அண்ட கபாலமே.              699

 

[தரங்கம்=கடல் அலை; புரை=பள்ளம்; மேதினி=உலகம்; இரு விசும்பு= பெரிய ஆகாயம்; மோலி=தலைமுடி; கூம்பினது=சுருங்கியது; அண்ட கபாலம்=முகடு]

 

திருமால் பேருருக் கொண்டு நிற்க, அவரது சிலம்பணிந்த பாதத்தில் உள்ள ரேகைக்குள் கடல்கள் எல்லாம் அடங்கின. திருவடிகளை  நிலத்தில் ஊன்ற, பூமி பிளந்து பாதாளத்தில் விழுந்தது. அவர் தலைமிடி விரிந்த வான முகட்டை முட்டியது. அண்ட கோளம் உடைந்தது.

====================================================================================

                  தன்பொன் மகுடம் அண்ட கோளகை

                        சங்கு திகிரி சந்திர சூரியர்

                  செம்பொன் அறுவை குன்ற வேதிகை

                        சென்ற திருமன் நின்ற கோலமே.                  700

 

[அண்ட கோள்கை=வான் முகடு; திகிரி=சக்கரம்; அறுவை=ஆடை; குன்ற வேதிகை=சக்கரவாளக்கிரி; திருமன்=திருமால்; நின்ற கோலம்=பேருருக் காட்சி]

 

தான் சூடியிருந்த தங்க மகுடம் வான் முகடாகவும், சந்திர சூரியர்கள் சங்கு சக்கரமாகவும், சக்கரவாள மலையே உடுத்திய பட்டுப் பீதாம்பரமாகவும், விளங்கத் திருமால் நெடிதுயர்ந்து நின்றார்.

——————————————————————————————————————————————————

                      

                   எங்கும் உலகு நுங்கு தீஎன

                        இன்று கனல்நின்ற நீர்ஒரு

                  பங்கு பெறுக இங்குதான் இது

                        பண்டு மறையில் உண்டு பார்மினே.               701

 

[நுங்கு=பருகும்= கனல்=கோபிக்க= பண்டு=பழமை; மறை=வேதம்; பார்மின்=பாருங்கள்]

 

உலகையே உண்டு ஏப்பமிட்டு விடும் ஊழிக்காலத் தீ என வெகுண்ட வீரபத்திரர் நீர் தீயில் ஒடுங்க வேண்டும் என்பதுதான் விதி; ஆதலால் நீரான திருமால் வெங்கனலான வீரபத்திரரில் ஒடுங்கி அடங்க வேண்டியவர் ஆனதைப் பாருங்கள்.

===================================================================================  

            என்றுபோதும் ஒருபுட்கொடி எடுத்தும் ஒருபேர்

                  இடப நற்கொடி எடுத்தும் இருவர்க்கும் இருதேர்

            குன்று போல்வன விசும்புகெட மேல்வருபெருங்

                  கொண்டல் போல்வன புகுந்தன கொடிப்படையொடே.      702

 

[என்று போதும்=என்றுள்ள சமயத்தில்; புட்கொடி=கருடக் கொடி; இடபம்=காளை; விசும்பு=ஆகாயம்; கொண்டல்=மேகம்]

 

கருடக் கொடி கொண்ட திருமால் படையும், காளைக்கொடியைக் கொண்ட வீரபத்திரர் படைகளும் இரண்டு பெரிய மலைகள் போன்ற வானளாவ உயர்ந்து நின்ற தேர்களில் ஏறிக் கொள்ள இருவர் கொடிப்படையும் மலை சூழ்ந்த மேகம் போல இருவரையும் சூழ்ந்து நின்றன.

 

     

            தண்துழாய் மார்பர் சங்குஒன்றுமே ஊதவும்

                  தமனியக் கொன்றையார் தம்திருத் தேர்மிசைப்

            பண்டு மால்வரக் கொண்டநாள் இடும்இடும்

                  படைவிடா அலகில்சங்கு இடைவிடாது ஊதவே.        703

 

[தண்=குளிர்ச்சி; தமனியம்=பொன்; பண்டு=முன்பு; படைவிட=படைகள் விடாது பற்றியிருந்த; அலகில்=அளவற்ற]

 

குளிர்ச்சியான துளசிமாலை அணிந்த மார்புடைய திருமால் ஒரு சங்கெடுத்து ஊத, பொன்னிறமான கொன்றை மலர்மாலை அணிந்த வீரபத்திரர் தேரில் வீற்றிருக்க, முன்னர் பிரமன் ஈண்டும் மீண்டும் படைத்தனுப்பிய பல திருமால்கள் போரில் மடிய, அவர்கள் விடாது பற்றியிருந்த அளவற்ற சங்குகளைத் தமதாக்கிக் கொண்ட பூதப்படைகள் அவற்றை இடைவிடாது ஊதி ஒலி எழுப்பின.

=====================================================================================

            நின்றவில்லி கொடியில் கருடன் ஆர்த்த பொழுதே

                  நிமிர்சிறைக் கருட லோகம்உடன் ஆர்த்தெழவே

            குன்றவில்லி கொடிமேல் இடபம் ஒன்றுகுமுறக்

                  கோவுலோகம் மகலோகம் அடையக் குமுறவே.           704

 

[ஆர்த்தல்=ஆர்ப்பரித்தல்; சிறை=சிறகு; குன்றவில்லி= வீரபத்திரர்]

 

திருமாலின் கொடியில் இருந்த கருடன் ஆர்ப்பரித்து எழுந்தபோது, கருடலோகத்தில் இருந்த எல்லாக் கருடன்களும் ஆர்ப்பரித்து எழுந்தன. அதேபோல வீரபத்திரரின் மலைபோன்ற தேரின் மீது இடபக்கொடியில் இருந்த இடபம் ஊங்காரம் இட, மேலுலகம் ஏழில் ஒன்றாக உள்ள மகாலோகத்தில் உள்ள இடபங்கள் எல்லாம் ஒரு சேர முழக்கமிட்டன.

===================================================================================

            நேமியங்கிரி நெரிந்தது முரிந்த திடையே

                  நின்ற மேருகிரி எக்கிரியும் எக்கடலும் நேர்

            பூமிகம்பமும் எதிர்ந்தன உதிர்ந்தன உடுப்

                  பொருபுராரியும் முராரியும் உடன்ற பொழுதே.             705

 

[நேமி=சக்கரம்; கிரி=மலை; பூமி கம்பம்=பூமியின் நடுவில் உள்ள மேருமலை; புராரி=சிவன்; வீரபத்திரர்; முராரி=திருமால்; உடன்ற=போரிட்ட]

 

திருமாலும் வீரபத்திரரும் போரிடத் தொடங்கியபோது, சக்கரவாளைக் கிரி முறிந்தது; நடுவே பிளந்தது; பூமியின் நடுவே இருக்கும் மேருமலையும் எல்லாக் கடல்களும் அதனை எதிரொலித்தன. நிலம் நடுங்கிற்று. நட்சத்திரங்கள் உதிர்ந்து சிதறின.

 

 

 

                 

            சந்திராதிகள் ஒன்பதின்மர் இருபத்தெட்டு நாள்

                  தாரகா கணித ராசிசோதி சக்கரமென்று

            இந்திராதிகள் விமானம் ஒருமுப்பத்து நால்

                  இருவர் தேரினும் மடிந்தன கொல் எங்கும் இலவே.        706

 

சந்திரன் முதலான் ஒன்பது கிரகங்களும், ‘அபிசித்து’ என்னும் துணை நட்சத்திரத்துடன் சேர்த்து, இருபத்தெட்டு நட்சத்திரங்களும், கணக்கற்ற நட்சத்திரக் கோள்களும், இராசிகள் பன்னிரண்டும், துருவ சக்கரமும், இந்திரனுடன்  முப்பத்து முக்கோடி தேவர்கள் ஆக முப்பத்தி நால்வர் விமானங்கள் எல்லாமும் எங்கும் காணப்படாது மறைந்தன.

=====================================================================================

            ஞாலநேமி திசைநேமி வரைநேமி இவையே

                  நடைகழன்று இடைகழன்றன சுழன்றிலது தம்

            காலநேமி ரதநேமி இருகாலும் முடுகக்

                  கடவுள் வீதியில் விசுமிடை படக்கடுகியே.             707

 

[ஞாலம்=பூமி; வரை=மலை; நேமி=வட்டம்; நடைகழன்று=திசைமாறி; காலநேமி=காலச்சக்கரம்; ரதநேமி=தேர்ச்சக்கரம்; இருகாலும்=இரு சக்கரமும்; முடுக=விரைய; கடுகி=விரைந்து]

 

காலச்சக்கரத்தைச் சுழற்றிக் கதியை நிர்ணயிக்கும் வீரபத்திரரின் இரு தேர்ச்சக்கரங்களும் விரைந்து சென்ற வேகத்தில், பூமிவட்டம், திசைவட்டம், மலைவட்டம் எல்லாம் அவற்றின் இயல்பான நியதிப்படி சுழலாமல் தேவருலங்களில்சுழன்றன. =====================================================================================

            வேறநேகவித தாரகை அநேகம் இடையே

                  வீசு மாருதம் அநேகம்மினல் மேககுலமே

            அறநேகம் இரதங்களும் அநேகம் அவர்தாம்

                  ஆர்பதங்கள் எதிர்நீறுபட வேறுபடவே.                 708

 

[வேறநேகவித=வேறு அநேகவித [பலவிதமான]; தாரகை=நட்சத்திரம்; மாருதம்=காற்று; மினல்=மின்னல்; ஆர்பதம்=வாழுமிடம்; நீறுபட=பொடிப்பொடியாக]

 

வேறுபல அண்டங்களில் உள்ள பல கோடி நட்சத்திரங்கள். காற்றுகள், மின்னல்கள், மழை மேகக் கூட்டங்கள் பல ஆறுகள், இரதங்கள், மற்றும் இவற்றிற்கு உரியோர் வாழும் இடங்கள், எல்லாமும் வீரபத்திரர்,  திருமால் இவர்கள் தேர்கள் ஓடிய வேகத்தில் எதிர்பட்டுப் பொடிப்பொடியாகப் போயின.

=====================================================================================

            எம்ம்பாய் புரவிஇற்றெமது தேரும்இறுமேல்

                  இடபமாய் வாஎழுந்து சுமவீர் எங்களுக்கு             

            அம்ம்பாய் வருகிலீர் சிலைபுகுந்து பிடியீர்

                  அஃது போலும் இனி எம்மோடுறும் உம்மதுறவே.        709

 

[எம்ம்=எம்முடைய; புரவி=குதிரை; இறுதல்=அழிதல்; இடபம்=காளை; அம்ம்பாய்=அம்பு ஆகி; சிலை=வில்]

                                                                    

”எம்முடைய குதிரைகள் இறந்து, தேரும் அழிந்து விடுமானால் நீர்தான் இடபமாய் எம்மைச் சுமக்க வேண்டி வரும். நீவீர் இப்போது அம்பாய் இல்லை. வில்லை ஏந்துங்கள். இதுதான் நமக்குள்ள உறவு முறை” என்று திருமாலை நோக்கி வீரபத்திரர் கூறினார்.

=====================================================================================

            புனலன் மேனியில் நிசிந்தன் விடும்அம்படையவும்

                  புரைஅடங்கும் இனிஅப்பரசு பாணி புரைதீர்

            அனலன் மேனியில் முகுந்தன்விடும் அம்படையவேம்

                  ஆதலால் அவர்வலம் தெரிவது அம்ம அரிதே.           710

 

[புனலன்=நீர் வடிவினன்; நிசிந்தன்=வீரபத்திரர்; புரை=உட்துளை; பரசுபாணி=வீரபத்திரர்; புரைதீர்=குற்றமற்ற; அனலன்=நெருப்பு வடிவினன்; முகுந்தன்=திருமால்; வேம்=வேகும்; வலம்=வலிமை]

 

நீர் வடிவம் கொண்ட திருமால் மீது வீரபத்திரர் விட்ட அம்புகள் அவர் உடலில் பாய்ந்து துளைக்கும். ஆனால் குற்றமற்றவரான வீரபத்திரர் மீது திருமால் விட்ட அம்புகள், வீரபத்திரர் நெருப்பு வடிவம் கொண்டவர் ஆதலின், அவர் உடம்பில் பட்டவுடன் வெந்தழிந்தது. இதனால் வீரபத்திரர் வலிமை அறிவதற்கு அரியதாகும்.

==================================================================================

              

            மாயோன் விடும்விடும் பகழிசெய்ய எரிமேல்

                  வந்து வந்தடைய வெந்துபொடியாய் மடியவே

            சேயோன் விடும்விடும் பகழிமாயன் உகத்

                  திருவுடம்பு புகமூழ்கி உருவச் செருகவே.               711

 

[சேயோன்=சிவந்த வடிவினன்; பகழி=அம்பு; மாயன்=திருமால்; உகம்=நீர்]

 

திருமால் செலுத்திய அம்புகள் நெருப்பில் வெந்து அழிந்தன. அதேபோல் நெருப்பு உருவான வீரபத்திரர் விட்ட அம்புகளும் மாயவனான திருமாலின் நீர் வடிவான உடலில் தைத்து உள்ளே சொருகுகின்றன.

=====================================================================================

            அறும் அறும் பிரமர் நாரனர் கபாலம் நிரையே

                  ரார மார்புடைய வீர்ர்திருமேனி அருகே

            உறுமுறும் பகழி வெந்து பொடியானபடி கண்டு

                  உள்ள பஞ்ச ஆயுதங்களையும் ஒக்கவிடவே.              712

 

[அறும்=அறுபடும்; கபாலம்=மண்டை ஓடு; நிரை=வரிசை; பேராரமார்பு=பெரிய மாலை அணிந்த மார்பு; உறும்=அடைந்த பஞ்ச ஆயுதம்=சங்கு, சக்கரம், கதை, வாள், வில்;  ஒக்க=ஒன்றாக]

 

      அறுபட்டு அறுபட்டு விழுந்த பிரமர்கள், நாரணர்கள் தலை ஓடுகளை வரிசையாகக் கோர்த்து மாலையாக அணிந்த மார்பினரான வீரபத்திரர் உடம்பில் தைக்க என்று மேலும் மேலும் எய்த அம்புகள் எல்லாம் உடைந்து பொடிப் பொடியாகத் தூள்களானதைக் கண்டு திருமால் தம்மிடம் உள்ள ஒப்பற்ற ஐந்து ஆயுதங்களை ஒரே சமயத்தில் வீரபத்திரர் மீது விட்டார்.

=====================================================================================

            தண்டு தோள்வளை கழுத்து நுதல்சாபம் விழிவாள்

                  சக்கரம் ஆன்னம் எனத்தேவர் தானவர்களைப்

            பண்டுநீர் அமுது அருத்தும் உருவத்தில் இவையே

                  பஞ்ச ஆயுதமும் அல்லது இவை என்ன படையே.         713

 

[வளை=சங்கு; சாபம்=வில்; ஆனனம்=முகம்]

 

”முன்னொரு காலத்தில் தேவர்களையும், அசுரர்களையும் அமுதம் உண்ணச் செய்ய நினைத்து, அவர்களில் அசுரர்களை ஏமாற்றித் தேவர்கள் மட்டும் அமுதம் உண்பதற்காக மோகினி உருவம் எடுத்துவந்து, அசுரர்களுக்கு வஞ்சனை செய்தாய். அதேபோல இப்பொழுது பெண்களின் தோள், கழுத்து, நெற்றி, கண், முகம் இவற்றை நினைவூட்டும் பஞ்ச ஆயுதங்களை ஏவி உள்ளாய்; இவை என்ன ஆயுதங்களா” என வீரபத்திரர் திருமாலை நோக்கி எள்ளி நகையாடினார்.

=====================================================================================

            சங்கம் எங்குள் குழை வில்எமது சக்கரம் எமதே

                  தண்டம் எங்கள் எமதண்டம் மழுவின் சாதிவாள்

            பொங்கு கண்ணா! இவை ஐம்படையும் எங்களுடனே

                  போதும் எங்ஙனம் இனிப்பொருவது என்றபொழுதே.        714     

 

 

[குழை=காதணி; வில்=ஒளி; மேருமலை; பொருவது=போரிடுவது]

 

”கண்ணா! ஐம்படைகளை எம்மீது ஏவி உள்ளாயே. சங்கு எம் காதுக்குக் குழை; வில் எம் மேருவில் உள்ளது; சக்கரம் உமக்கு நாங்கள் அருளியது. தண்டு எமனோடு வந்து எம்மிடம் உதைபட்டு விழுந்தது. வாளாயுதமும் எம் மழுவாயுதமும் ஒரே இனம். எனவே உன் ஐந்து படைகளும் எம்மோடுதான் சேரும். நீர் இனி எவற்றைக் கொண்டு எம்முடன் போரிடுவீர் “ என வீரபத்திரர் கேட்டார்.

=====================================================================================

            பொரும் அம்புசிலை கொள்வதில்லை இவ்வுலகையும்

                  பொருபினாகத்தையும் ஒருபெரும் பன்றியாய்

            இருகொம்பின் ஒருகொம்பின் நுதியினால் மறியவிட்டு

                  இற மிதிப்பன நின்மதிப் பொழிக என்று இவையே.     715

 

[பொரும்=போரிடும்; சிலை=வில்; பினாகம்=சிவதனுசு; நுதி=நுனி; மறியவிட்டு=மீண்டெடுத்து; இற=அழிய; மதிப்பு=பெருமை; இகல்=மறித்துப்பேச]

 

திருமால், “போரிட நாம் வில்லும் அம்பும் எடுப்பதில்லை; முன்பு வராக அவதாரமாகத் தோன்றி இரண்டு கொம்புகளால் அல்ல; ஒற்றைக் கொம்பு நுனியாலேயே இவ்வுலகை மீட்டெடுத்தேன்; அதனாலேயே உன் பினாகம் என்னும் வில்லையும் உன்னையும் மிதித்து அழிப்பேன்; வீண் பெருமை பேச வேண்டாம்” என்று எடுத்துரைத்தார்

=====================================================================================

                          

                    

                  கொம்பிரண்டு முகம்ஒன்று நடை நாலுமுதுகும்

                        கூறு இரண்டுபட விழ்புடவி நீறுபடவோர்

                  அம்பிரண்டு எயிறும்இன்றி வெறும்ஓர் எயிறுகொண்டு

                        அடைய வெட்டுதலும் ஆதிஉரு எய்தி அரிவே.      716

 

[கொம்பு=தந்தம்; நடை=கால்; புடவி=பூமி; நீறுபட=அழிய]

 

திருமால் தாம் உரைத்தபடி, பெரிய வராகமாக உருவெடுத்தார். வீரபத்திரர் உடனே அந்த வராகத்தின் இரண்டு தந்தக் கொம்புகள், ஒரு முகம், நான்கு கால்கள், ஒரு முதுகு எல்லாம் இர்ண்டாகிப் பதினான்கு துண்டுகளாய் விழும்படி, ஒரே மழுவால் மண்ணில் விழ வெட்டி வீழ்த்தத் திருமால் தம் சுய உருவுடன் புறப்பட்டார்.

            மண்ணும்நீ புனலும்நீ அனலும்நீ மாருதம்நீ

                  மதியும்நீ ரவியும்நீ அவை அனைத்தும் வழிபோம்

            விண்ணும் நீஎன அகண்டமும் விழுங்க அரிவாய்

                  விட்டவிட்ட அவன் ஐம்படையும் மீளவிடவே.            717

 

நிலமும் நீ! நிரும்நீ! காற்றும் நீயே! நிலவு நீ! கதிரவன் நீ! இவை நீந்திவரும் ஆகாயமும் நீ! என்று பலரும் போற்ற வீரபத்திரர் படைக்கலங்கள் பலவற்றையும் அழித்த போதும் திருமால் முன்பு விட்ட ஐந்து படைக்கலங்களையும் மீளவும் உருப்பெற்று வரச் செய்து அவற்றை வீரபத்திரர் மீது ஏவினார்.

            நின்றுநின்று படைஐந்தும் அவைஐந்தின் வழியே

                  நெடிய மாயன்விட நாயகன் விலக்கிவிடலும்

             சென்றுசென்று பதினால் உலகமும் புகவிழச்

                  செய்ய வாயும் மிடறும் புரைஅறச் செருகவே.            718

 

[மாயன்=திருமால் மிடறு=கழுத்து; புரைஅற=அறூவைசெய்து]

 

திருமால் திரும்பத் திரும்ப தமது ஐந்து படைக்கலங்களையும் ஏவ, வீரபத்திரர் அவற்றைத் தன் மீது படாது விலக்கிக் கொள்ள, அவை திருமாலின் சிவந்த வாயையும், கழுத்தையும் அறுத்துக் கொண்டு போய்ப் பதினான்கு உலகங்களிலும் சென்று வீழ்ந்தன.

——————————————————————————————————————————————————

            சிங்கமும் கற்கியும் பன்றியும் செற்றவன்

                  திரிய நீர் செல்கஎனச் சென்றுமால் சினஎரிச்

            சங்கமும் சக்கரமும் தண்டமும் கட்கமும்

                  சாபமும் பொடிபடத் தகனமே ககனமே.             719

 

[செற்றவன்=அழித்தவன்; திரிய=திரும்பவும்; கட்கம்=வாள்; சாபம்=வில்; தகனம்=எரித்தல்; ககனம்=வானம்]

 

திருமாலே மீண்டும் நரசிம்மம், கல்கி, வராகம், என்னும் ஐந்து படைக்கலங்களை அழித்த அவனைப் போய் அழிவு செய்யுங்கள் எனக் கோபம் கொப்பளிக்கக் கூறியபடி, மீண்டும் சங்கு, சக்கராயுதம், தண்டாயுதம், வாள், வில்  இவற்றை ஏவ, வீரபத்திரர் அவற்றைப் பொடியாகப்  போகப் பற்றி எரியச் செய்ய வான மண்டலமே எரிந்தது.

————————————————————————————————————————————————-

            பார்ஏழும் நதிஏழும் மலைஏழும் மலைவயின்

                  படுஏழும் நடுஏழும் கடல்ஏழும் பகுவிதக்

            கார்ஏழும் மினல்ஏழும் எனஅரும் கனல்எழக்

                  கண்டுமே ருவரையில் கடவுள் கங்கைவிடவே.           720

 

[பார்=உலகம்; பூலோகம், புவனலோகம், சுவலோகம், சனலோகம், தபலோகம், சத்தியலோகம் ஆகிய ஏழு லோகங்கள்/ கங்கை, யமுனை. நருமதை, காவேரி, குமரி, கோதாவதி ஆகிய ஏழு நதிகள்/ கயிலை. இமயம். மந்தரம், விந்தம், நிடதம், ஏமகூடம், கந்தமாதனம், ஆகிய ஏழு மலைகள், பாற்கடல், தயிர்க்கடல், நெய்க்கடல், தேன்கடல், கருப்பஞ்சாற்றுக்கடல், நன்னீர்க்கடல், உப்பு நீர்க்கடல், ஆகிய ஏழு கடல்கள்; பகுவித=மிகுதியான; கார்=காற்று; மின்னல்=மின்னல்]

 

உலகம் ஏழும், நதிகள் ஏழும், மலைகள் ஏழும், சுனைகள் ஏழும், கால்கள் ஏழும், மேகங்கள் ஏழும் ஆகிய எல்லாம் வானில் பற்றி எரிந்த நெருப்பால் வெந்தழியும் என்பதை உணர்ந்த வீரபத்திரர் அதனைத் தடுக்கத் தம் சடை முடியில் உள்ள கங்கையை மேருமலை மீதிருந்து பாய விட்டார்.

——————————————————————————————————————————————————

                       

              மேல்விசும் புடையவும் கீழ்நிலம் கரையவும்

                  மிடை விலங்கல் இறவும் குலவிலங்கல் எவையும்

            கால்பரிந்து இளகவும் கடல்கரந்து ஒழுகவும்

                  கடவுள்யாரு பதினாலு லகமும் கவ்வவே.            721

 

[விசும்பு=ஆகாயம்;விலங்கல்=மாலை; கால்=காற்று; பரிந்து=வீசி]

 

வீரபத்திரர் பாயவிட்ட கங்கை வெள்ளம் வானுலகத்தை அடைந்தது. பாதாள உலகம்வரை  கரைந்தது. இடையில் குறுக்கிட்ட மலைகளை எல்லாம் சூறைக்காற்றில் கலகலத்துப் போகச்செய்தும், கடல்களை எல்லாம் விழுங்கியும் பதினாலு உலகங்களில் பாய்ந்தோடியது. ==================================================================================

            அப்பெரும் புனலில் அவ்எரி வராக உருவிட்டு

                  ஆமையாய் உலகளந்த வடிவாயதும் விட்டு

            ஒப்பரும் பழைய சேல்வடி கொள்ள இறையோன்

                  ஒருசுறா வடிவுகொண்டெதிர் உடன்று உகளவே.           722

 

[வராகம்=பன்றி; பழைய=முதலில் எடுத்த; சேல்வடிவம்=மச்சாவதாரம்; உடன்று=சினந்து; உகாள=குதித்து]

 

திருமால் இப்பொழுது வராகம், ஆமை உலகளந்த திரிவிக்ரமன் என உருவெடுப்பதை விட்டுவிட்டு முதலில் எடுத்த மீன் வடுவம் கொண்டு கங்கை வெள்ளத்தைக் குடிக்க முயல, வீரபத்திரர் ஒரு சுறா வடிவெடுத்து நீருள் குதித்து அம்மீனைத் தாக்கினார்.

==================================================================================

            பூதம்ஐந்தும் இருகோளும் இயமானனும் எனப்

                  புகலும் எங்களை விழுங்குக புகுந்துனதுடல்

            பேதம் ஐந்து அமளியும் தெளியும் ஓதமும் உடன்

                  பின்னும் மன்னுயிரும் உண்டுயிர் உயப்பெறுதுமே.        723

 

[இயமானன்=தலைவன்; புகலும்=சொல்லப்படும்; பேதம் ஐந்து=இரத்தம், சதை, நரம்பு, மூச்சுக்காற்று, உடல்கனல்; அமளி=இடம்; ஓதம்=வெள்ள நீர்]

 

திருமால் ”ஐம்பூதங்கள் சந்திர சூரியர் எனும் இரு கோள்கள் இவற்றின் தலைவன் என்று கூறப்படும் எம்மை முடிந்தால் விழுங்குக. அப்படி விழுங்கும்போது, ஐந்து தாதுக்களாலான உம் உடலையும், இந்த நீர்ப்பெருக்கையும் உண்டு உயிர் வாழ்வோம்” என்றார்.

=====================================================================================

            கொண்டு வாபொர இறப்பன பிறப்பனிவிடாய்

                  கொய்த நின்முடிப்பழைய கோவை குறியாய்

            தண்டு வாள்வளை தனுத்திகிரி என்னும் ஒருநின்

                  தவிரும் ஐம்படையும் ஐயதிரியத் தருதுமே.               724

 

[பொர=போரிட; கொய்த=அறுத்த; முடி=தலை; தனு=வில்; திகிரி=சக்கரம்; திரிய=திரும்பவும்]

 

   வீரபத்திரர் திருமாலைப் பார்த்து, “நீர் ஏன் செத்துச் செத்து மடிந்த அப்பழைய வடிவங்களையே எடுத்து வருகிறீர்? உம் பழைய இறந்த வடிவங்கள் எம் மார்பில் மாலையாய்ப் புரள்கின்றன. நீர் இழந்த உம் ஐந்து ஆயுதங்களை மீண்டும் தருகிறோம். அவற்றை வைத்துக் கொண்டு போரிடுங்கள்; பார்க்கலாம்” என்றார்.

=====================================================================================

            என்று மேருதரன் ஐம்படையும் ஈயநெடியோன்

                  ஏறிய ஊதைவிழ மோதிவர வெய்ய மழுவாள்

            ஒன்றுமே அவை அனைத்தையும் ஒடுக்க நெடியோன்

                  உள்அழிந்து தலையைச் சிலையில் வைத்து உளையவே.   725

 

[மேருதரன்=மேருமலையை வில்லாக உடையவன்; ஊதை=ஊழிப்புயல்; ஒருக்க=அழிக்க; உளையவே=வருந்தவே]

 

வீரபத்திரர் அளித்த ஐம்படைகளையும் திருமால் வேகமாக அவர் மீது ஏவினார். அவை ஊழிக்காற்றென விரைந்து வீரபத்திரரைத் தாக்க வர, அவர் அவற்றைத் தம் மழுவால் வலிமையற்றவையாய் அழியச் செய்தார். திருமால் உள்ளம் குழைந்து வில்லை நிலத்தில் ஊன்றி தலைகவிழ்ந்து வருந்தியபடியே இருக்க;

=====================================================================================

 

                      

            விதைக்கும் அப்பகழி விற்பொருநன் வைத்த முடியால்

                  மிகவளைந்து குதைபோய் நெகிழவிண்ணும் நிமிர்ந்து

            உதைக்கும் அத்தலை குதைகவ்வியது வான்

                  உற்ற சந்த்ரனையும் ராகுவையும் ஒக்கும் எனவே.         726

 

[விதைக்கும்=அம்புவிட வளைத்த; பகழி=அம்பு; முடி=தலை;குதை=வில்பகுதி; உதைக்கும்=தாக்கும்]

 

அம்புகள் எய்ய வளைத்து வைக்கப்ப்ட்ட வில்லின், ஒருமுனை தரையில் ஊன்றியிருக்க, மறுமுனையில் தலையை வைத்து அழுத்தியதால், வில் வேகமாக வளைய நாண் கழன்று ஆகாயத்தை நோக்கி வில் வேகமாக நிமிர்ந்தது. அப்பொழுது வில்லால் திருமாலின் தலை அறுபட்டது. அத்தலையை நாண் பற்றியது. இது சந்திரனை ராகு விழுங்கியதைப் போல இருந்தது.

=====================================================================================

            ”இன்னவாறு அமரர் யாகபலம் உண்டபடி” என்று

                  இறைவியைத் தொழுதி ருந்தழுத பேய்க்கு இதனைநீ

            சொன்னவாறு அழகிது என்றருளி வென்றருளும்அத்

                  தொல்லை நாயகனை நாயகி நினைந்து தொழுதே.        727

 

[இன்னவாறு=இன்னவிதமாக; யாகபலம்=அவிர்ப்பாகம்; வென்றருளும்=வெற்றி தரும்]

“தக்கன் செய்த வேள்வியில் அவிர்ப்பாகம் பெற விரும்பிப் போன தேவர்கள் அவி உணவு உண்டது இப்படித்தான்” என்று தேவி முன் நின்று சொல்லிப் பேய் கண்ணீர் வடிக்க, அதனைக் கேட்ட தேவி அப்பேயைப் பார்த்து நீ சொல்லிய தக்கயாகக் கதை நன்றாக இருந்தது” என்று கூறி, வென்றருளும் பரம்பொருளை எண்ணித் தேவி தொழுதனள்.

 

Series Navigationஜன்னலுக்கு வெளியே வெண்ணிலாவடகிழக்கு இந்தியாவில் பருவ காலப்  பேய்மழை வெள்ளத்தால் பேரழிவுகள்
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *