பேரா. செ. நாகேஸ்வரி
இலொயோலா கல்லுரி
வேட்டவலம்.
கண்ணுக்குள்ள கனவு வச்சி, கண்ட கனவ ஒதுக்கி வைச்சி
நித்தம் நித்தம் செத்தேனே மவனே என் நெலம புரியலயா?
கல்லுவாரி, மண்ணுவாரி கண்ணெல்லாம் பூ மாறி
எமன தேடி காத்திருக்கும் இந்த பாவி மொகம் பாருமய்யா!
சந்தோசம் கெடய்க்கிதுன்னு சாவத்தேடி போய்ட்டீங்க
சஞ்சலம் அடஞ்சி நா சக்கயாகி இத்துப்போறன்!
எலும்பொடச்சி குடுத்த காச கண்ட எடம் போய் சேந்து
காணா பொணமா போறதுக்கு கட்டணமா கட்டிப்புட்ட!
அன்னாடம் பொங்கி தின்னும் அநாதி பெத்தபுள்ள
ஒன்ன விட்டா எனக்கேது நாதி இங்க இருக்குதய்யா!
காடு கர வெட்டி கையெல்லாம் காப்பு காச்சி
கலங்காம ஒன்ன கண்ணுக்குள்ள வச்சி காத்தேனே!
தாய் வருத்தம் தெரிஞ்சி, புள்ள தலையெடுத்து பாக்குமுன்னு
தவமா தவமிருந்து உன்ன தவிச்சி நின்னு வளத்தேனே!
நாலெழுத்துப் படிச்சா நம்ம தரித்தரம் தீரும்னு
நாளும் நாளும் சொன்னேனே! நா ஏமாந்து நின்னேனே!
கல்லு கரையழுக கண்ட எடம் நானழுக மனம் மாறி போனேனே
மவராசா உன்ன எண்ணி மணிக்கணக்கா நின்னேனே!
பொட்டச்சி வளத்த புள்ளன்னு போறவன்லாம் சாட பேச
ஊரு நெனப்புகேப்ப என் பொழுப்பு சிரிச்சிடுத்தே!
மண் சுமந்தா வலிக்குமுன்னு, மார்மேல சுமந்தபுள்ள
மார உதச்சித்தள்ளி எம் மவராசா எங்க போற!
யார்யாரோ கால புடிச்சி கடன் வாங்கி ஒடன் வாங்கி
கல்லூரிக்கு அனுப்பி வச்சன் அந்த கடவுளுக்கும் கண் இல்ல !
நீ கூடாதவன் கூட கூடி என் கூடழிஞ்சி போகுமுன்னு
நான் ஒரு நாளும் நெனைக்கலையே ஒலகம் ஒனக்கு புரியலியே!
எம்புள்ள படிச்சி வந்து எங்கொறய தீக்குமுன்னு
ஏறாத கோயில் இல்ல சாமி நா கேட்காத வரமுமில்ல!
வேலை வெட்டி பாத்தா, புள்ள மனம் வெதும்பி போகுமுன்னு
உன்ன வெயிலுக்கு காட்டாம பந்த போட்டு நின்னேனே!
நீ சின்னா பின்னமாகி சீரழிஞ்சி நிக்கறயே இந்த
சிறுக்கி மவ பெத்த புள்ள சித்தமெல்லாம் கலங்கி போவ!
கூடாதவன் கூட கூடி குடியழிஞ்சி வந்திருக்க மவனே
நான் என்ன குத்தம் பன்னன் எனக்கேதும் தெரியலயே!
காட்ட திருத்தி வந்து காவவுறு கஞ்சி ஊத்த
கடங்காரன் பெத்தபுள்ள கைகழுவி வுட்டுடுச்சே!
என் அய்யாவே தாய் மொகம் பாருமையா
தருதல சொல் கேக்காம தாய தாங்கி நில்லுமையா!
மூஞ்ச காட்டினா மொகம் சுருண்டு நிக்குமுன்னு
மூச்சடக்கி வளத்தப் புள்ள இப்ப முட்டாளா நிக்குதுங்க!
படிக்க வைச்ச பணமெல்லாம் பாழா போகுதுன்னு
பாவி மனம் அறியலயே எந்த பாதகத்தியும் சொல்லலியே!
பொம்பள வளத்தப் புள்ள புத்திகெட்டு போகுமுன்னு
பக்கம் அக்கம் போகாம உன்ன பாத்து பாத்து வளத்தேனே!
தலையெழுத்து மாத்துமுன்னு தலதலயா அடிச்சேனா
தாய் படும் பாட்ட மறந்து தருதலயா போய்ட்டியடா!
தப்பான பாதையில தலைவிதின்னு போறிங்களே
தாய் படும் பாட்ட நீயும் தலை நிமிந்து பாருமய்யா!
கொழா தண்ணி குடிச்சி கொல பட்டினி நான் கெடந்தது
கட்டினவனுக்கும் புரியலையே இந்த கடங்காரனும் அறியலயே!
வாய்க்கா வரப்பு வெட்டி வம்பாடு பட்டு வந்தன்
முச்சூடும் நாம் பட்ட பாடு உன் பாழ் மனசு அறியலயா!
யார் சொன்னா கேட்பீக! எவன் சொன்னா செவி சாய்ப்பீக
நான் எமன்கிட்ட போய் அழவா என் ராசாவே நீயே சொல்லு!
- பொன்.குமார் “சந்ததிப் பிழை” நூலறிமுகம்
- ஈரான், ஈராக் எல்லையில் இதுவரை நேராத மிகப்பெரும் 7.3 ரிக்டர் அளவு பூகம்பம்
- வாக்குகடன்
- கம்பருக்கே கர்வம் இல்லை
- இணையத் தமிழ் எழுத்தாளர்க்கு விருதுகள் – அறிவிப்பு
- தாயின் தவிப்பு
- மாய யதார்த்தம்
- பெருமை
- இது என்ன பார்வை?
- கவிதைகள்
- கவிதை
- சந்திப்போம்
- எழுத்தாளர் அகிலன் ( 1922 – 1988 ) நூற்றாண்டு ஆரம்பம் !
- அசாம் – அவதானித்தவை