வாக்குகடன்

author
1
0 minutes, 0 seconds Read
This entry is part 3 of 14 in the series 3 ஜூலை 2022

 

                ஜனநேசன்

 

  இராமேஸ்வரம் – புவனேஸ்வரம்  விரைவுரயில் பத்துநிமிடம்  தாமதமாக  காரைக்குடி சந்திப்புக்குள்  நடுப்பகல் பனிரெண்டுமணிக்கு   நுழைந்தது; மூன்றாம்வகுப்பு பெட்டி  நிற்குமிடத்தில் நில்லாமல்  சற்று முன்னே நகர்ந்து  நின்றது. வண்டி இரண்டேநிமிடம் நிற்குமென்பதால்  மனைவியை அழைத்துக்கொண்டு இருதோளிலும்,கையிலும் சுமைப் பொதிகளை ஏந்திக்கொண்டு ஓடினேன். B.1 .பெட்டியில் ஏறும்போது  அவசரமாக தண்ணீர் பிடிக்க பாட்டில்கள் ஏந்தி மூவர் அழுக்குடையில்  இறங்கினர். சுமைப்பளு இழுப்பும், மனைவியை  பதவுசாக முன்னால ஏறச் செய்யனுங்கிற படபடப்பும் உந்த பொங்கிய கோபத்தை  அவரவர்பாடு அவரவருக்கு என்ற எண்ணம் கடிவாளம் போட்டது. அழுக்கர்கள்  இறங்க வழிவிட்டு நின்றோம். 

  நிதானித்து மனைவியை மெல்ல பெட்டியில் ஏறச்செய்து,சுமைப் பொதியை ஒவ்வொன்றாக உள்ளே தள்ளி நானேறும்போது  தண்ணீர் பிடிக்கப் போனவர்கள்  என்னை உள்ளே தள்ளிக்கொண்டு  ஏறினர். எரிச்சலை அடக்கி , கைகழுவும் இடத்தில் ஒதுங்கி அவர்கள்  உள்ளே   செல்லவும்  வழிவிட்டோம். கிளம்பும் ரயிலின் உலுக்கலில் மனைவி விழுந்துவிடாமல் பிடித்துக்கொண்டேன். வண்டியோட்டம் சீராகவும் கண்ணாடிக்கதவைத்  தள்ளி மனைவியை உள்ளே நகர்த்தி, பொதிகளை உள்ளே தள்ளி நகர்த்திக் கொண்டே வண்டிக்குள் ஊர்ந்தோம்.

   எங்களது இருக்கைகள் ஒன்பதையும், பதினொன்றையும்  அழுக்கர்களே  ஆக்கிரமித்திருந்தனர். மனைவி கோபம் கொதிக்க   என்னைப் பார்த்தாள். அவளைக் கையமர்த்தி  ஆங்கிலத்தில் ஒன்பதும், பதினொன்றும்  எங்களது சீட்டுகள் என்று பதிவுத்தாளைக் காண்பித்தேன். உக்காருங்கோ என்று சைகை காட்டி  கொஞ்சம்  நகர்ந்து உட்கார்த்தார்கள்.

“ இந்த வடக்கத்திக்காரனுகளே  இப்படித்தாங்க; அவனுகளை துரத்தி விடுங்க . டிக்கட்டில்லாம ஏறி உட்கார்ந்துருவானுக ; உஷாரா இல்லாட்டி நம்மலையே  துரத்திருவானுக “ என்று ஆவேசப்பட்ட மனைவியை ஆசுவாசப்படுத்தி, பெண்கள் இருந்த  இடத்தில் உட்கார வைத்தேன். ஆண்களை விலக்கி படுக்கையை விரித்து மனைவியை படுக்கச் செய்தேன். மனைவியின் கால்மாட்டில் இருபெண்கள்  ஒட்டிக்கொண்டனர்.

  ஒன்பதாம்  இருக்கையில் உட்கார்ந்த ஒருபெண்ணையும் இருஆண்களை யும்  ஒதுக்கி நான் படுக்கையை விரித்து உட்கார்ந்தேன். அழுக்கர்கள் எங்களை சுயநலக்காரர்களைப்போல்  ஏக்கப்பார்வையால் வறுத்தார்கள். பார்வைச்சூட்டை  தணிக்க முதியவரிடம்  பேச்சுக் கொடுத்தேன்.           “ நாங்க ரெண்டுபேரும்  விசாகப்பட்டினம் போறோம் ;இந்த வண்டியில முதல்வகுப்பு பெட்டியில்லை; இரண்டாம் வகுப்பு பெட்டியில் இடம் கிடைக்கவில்லை. இந்தப்பெட்டிக்குதான் டிக்கட் கிடைத்தது. வயசானதால நாங்க ரொம்பநேரம் உட்கார்ந்திருக்க முடியாது ; படுத்திட்டோம் . நீங்க எங்க போறீங்க.“ 

 “நாங்க கயா போறோம் ஸாப் ; இந்தவண்டியில  புவனேஸ்வரம் போயி மாறிக்குவோம். எங்களுக்கு  நடுபடுக்கை; அதை விரித்தால் நீங்க நிமிர்ந்து உட்கார்றது சிரமங்கிறதால கொஞ்சநேரம் கீழ்சீட்டில் உட்கார்ந்திருந்தோம்.”  உச்சந்தலையைத் தடவிக்கொண்டேன்

  அந்த முதியவர்  ஜன்னல்வழி  விரியும் நிலக்காட்சிகளை ஊடுருவியபடி பேசிக் கொண்டிருந்தார்.   முதுமையும், படபடப்பும் எங்களை அழுத்திய  மனஅலுப்பும் வண்டியின் தாலாட்டலில்  கண்சொருகியது. மனைவி படுத்தநொடியில் குறட்டையில் ஆரோகண  அவரோகணங்களில் சஞ்சரித்திருந்தாள். உச்சிமேகம் கலைந்ததுபோல் எனக்கு சிறுதூக்கம்தான் , டிக்கட்பரிசோதகர் வந்ததும் எங்களது அடையாள அட்டைகளையும் , டிக்கட் நகலையும் காண்பித்தேன். தலையாட்டியவரிடம்  இரண்டாம் வகுப்புபெட்டியில்  இடம்கிடைக்கச் செய்யக் கோரினேன். சென்னையில் தான் காலியிடம்  தெரியவரும்  என்று நழுவினார். வெளியே  பார்த்தேன் வண்டி  திருச்சியைக்  கடந்து  தஞ்சாவூரை நெருங்கியதைக்  கோபுரம் காட்டியது.  பெரியவர்  வாயும் விழிகளும் விரிய  ஓடும் வயல்களையும்,  உயர்ந்தோங்கிய கோபுரத்தையும்  நோக்கினார். 

   பெண்கள் நால்வரும்  நீளவச ஓரத்து இருக்கையில் ஒண்டி இருந்தனர். மேல்தட்டுகளிருந்து  இறங்கிய  சிறுவர் சிறுமியர் நால்வரும் கீழிறங்கி பசிக்குதென்றனர் .எனக்கும் குடல் கிள்ளியது. மனைவியை எழுப்பினேன் . முதியபெண் ஒருத்தி , இளையவளிடம்  ஒரு வெள்ளைத்துணியை நனைத்து வரச்சொன்னாள். ஒருபெரிய பாலிதீன்பையிலிருந்து காரம் கலந்த அரிசிப்பொரியை  பத்துகை  அள்ளிப்போட்டு  அதில் இரு கை நிலக்கடலையையும் போட்டு  நனைந்த துணியின் நான்குமுனைகளையும்  இறுகப்பிடித்து குலுக்கினாள். மற்ற இருபெண்களில் ஒருத்தி                             இரு காரட்டுகளை  சிறு சிறு பத்தைகளாக அரிந்தாள்  .இன்னொருத்தி  பெரியவெங்காயம் இரண்டை சிறுசிறு துண்டுகளாக நறுக்கினாள்  . முதியவளின் கலக்கலில் பொரிகள் துணியின் ஈரமுருஞ்சி உப்பின. காரட்டு, வெங்காயத் துண்டுகளை வாங்கி பொரியில் கலந்து மும்முறை குலுக்கினாள்.                                                                           இளையபெண்  கையகலத் துண்டு செய்தித்தாள்களை சிறியவர், பெரியவர்  அனைவருக்கும் ஒவ்வொன்றாகக்  கொடுத்தாள் . தாளை வாங்கிய ஒவ்வொருவரும் முதியவளிடம்  சென்று ,   ஒரு பொரி உருண்டையை வாங்கினர் ; அவரவருக்கு கிடைத்த இடத்தில் உட்கார்ந்து  லாவகமாக ஒரு பொரிகூட சிந்தாமல் வாயில் கவ்வி மென்று தின்றனர். எல்லாருக்கும் கொடுத்தபின் முதியவள் அந்த வெள்ளைத்துணியை விரித்து மிஞ்சியதை  சிறுகவளங்களாகப் பிடித்து நான்கு சிறுபிள்ளை களுக்கும்  கொடுத்தாள்’. மிஞ்சிய  துகள்களை வாயில்போட்டு மென்றாள். எவருடைய முகத்திலும் போதாமை நிழலிலை .மூதாட்டியின்  முகத்தை உற்று கவனித்தேன். நான் பார்த்த எந்த சாமி படத்திலும் அத்தகைய சாந்தமும் அருளும் பார்த்த நினைவில்லை . என்னால் படுத்திருக்க முடியில்லை ; மேனிசிலிர்க்க  எழுந்து உட்கார்ந்தேன்.

  மனதில் பசியில்லை ; குடல் புரண்டு  நினைவூட்டியது. ஓரளவு நல்ல உணவு கிடைக்காத வறுமையிலும்   திருப்தியாக உண்ட இந்த மனிதர் முன்  நெய்மணக்க செய்த தக்காளி சாதத்தையும், உருளைக்கிழங்கு வறுவல்களையும்  எப்படி தின்பது ? வயிற்றையும் விஞ்சி மனது பிசைந்தது. மனைவியும் நடந்ததை எல்லாம் பார்த்திருப்பாள் போலிருக்கு ; மதியம், இரவு என இருவேளைக்கு ஒரு பெரிய சம்படத்தில்  கொண்டுவந்த   சாதத்தில், மூடியில்  கொஞ்சம்  எடுத்து வைத்துக் கொண்டு ,எல்லாவற்றையும் அந்த மூதாட்டியிடம் மனைவி கொடுத்து எல்லாரும்  பகிர்ந்து சாப்பிடுங்கள் என்றாள்.                          என் மனைவியை  ஊடுருவிய மூதாட்டி “, நாங்க சாப்பிட்டுட்டோம்மா ; பசியடங்கியிருச்சு. நீங்க பிரியமா செஞ்சுவந்ததை  வாசமே  சொல்லுது. நீங்க தின்னுங்கம்மா. “

  கர்வமடங்கிய மனைவி, ” எம்மா நீங்க இதை வச்சிருந்து எப்ப பசிக்குதோ  அப்ப சாப்பிடுங்க. நாங்க இறங்கும்போது பாத்திரத்தை  திருப்பிக் குடுத்தா போதும். “ அவர்கள் எல்லாரும்  அமைதியாக இருந்தார்கள் ; மூதாட்டி , முதியவரை  நோக்கினாள்; அவர்  தலையசைத்தார். முதியவள்  கைகூப்பி  எங்களை நோக்கி ‘ ராம் ,ராம் ‘ என்றாள் .சிறுவரிலிருந்து, பெரியவர்கள் வரை எங்களை நோக்கி  ‘ ராம், ராம்’ என்றனர். நாங்கள்  இருவரும் கண்கள் கசிந்து  கரைந்து போனோம் . எங்களிடையே அழுக்கர்கள் ,சுத்தமானவர்கள்  என்ற அபத்தசுவர்  காணவில்லை.

  இவ்வளவு  வறுமையிலும் ,இராமேஸ்வரத்துக்கு   குளிர்பதன பெட்டியில் ஏன் பயணிக்கணும் ? குளிர்பதப்பெட்டிக்கான  மிகைக் கட்டனத்தை மிச்சப்படுத்தி ,ஓரளவு வயிறார  தின்றுகொண்டு பொதுப்பட்டியில் வந்திருக்கலாமே   என்று கேட்க நினைத்தேன். மனம் துணியவில்லை.

  வண்டி கும்பகோணத்தைக் கடக்கையில்  முதியவர் ,கண்ணில் படும்  கோபுரங்களைப் பற்றியெல்லாம்  விசாரித்தார். சொன்னேன்.                 புலகாங்கிதத்தோடு கேட்டு கைகூப்பி ‘ ராம்,ராம்’ என்றனர்.

  “ நீங்கள் பிகாரில் விவசாயம்  செய்றீங்களா ?”

  “ இல்லைங்க ஸாப் , கயா  பக்கத்தில் ராம்பூர் எங்க கிராமம். நாங்க பரம்பரையாக   எங்களுக்கிருந்த துண்டுதுக்காணி நிலத்தில்  விவசாயம் செஞ்சு வந்தோம். ஒரு வருஷம் வெள்ளம் போகும்; மறு  ரெண்டுவருஷம்  காஞ்சு பஞ்சம் வரும். நிரந்தரமா தண்ணி தேக்கி நிலத்தடி நீரைப்பெருக்கி  விவசாயம் பண்ணவும் , மனுசமக்களைக் காக்கிற ஏற்பாடுமில்லை. மனுஷன் வாழ்ந்தாகணுமே , நிலங்களை வித்துட்டு ,ஜார்கண்ட் ஏரியாவில தனியார் சுரங்கத்தில்  தொழிலாளிகளாக  வேலை செய்யிறோம். எதோ உசுரைக் காத்துக்கிட்டிருக்கோம் . துர்காபூஜை, எலக்சனுக  நடக்கிறப்ப சொந்த கிராமத்துக்குப் போய் சொந்த பந்தங்ககளோட சந்தோசமா  இருப்போம். “

 இத்தருணத்தில்  இவர்களைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள்  வாசலில் உட்கார்ந்து கைப்பேசிக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் , கண்ணாடிக் கதவைத்  தள்ளி பதட்டத்தோடு உள்ளேவந்து  அங்கிருந்த  அவர்களது உறவுகளிடம்  ஏதோ கிசுகிசுத்தார்கள் . என்னிடம்  பேசிக்கொண்டிருந்த  பெரியவரின்  காதுகள் விடைத்து  அவர்களது  பேச்சைக் கவனித்து  உடல்  சிலிர்த்தது.!

 “ ஆமாம், போனவாரம்  உங்க பிகார்ல  எலக்சன் நடந்ததே, நீங்க ஒட்டு போட்டீங்களா …”

“ ஆமாம் ஸாப் . ஓட்டுப் போடுறதும்  எங்களுக்கு ஒரு திருவிழாதானே . என்ன, ஒருவார சந்தோசம், அவ்வளவுதான். அப்புறம் பழையபடி வகுத்துப்பாட்டுக்கு  அலைச்சல்தான். “ என்று  பெரியவர் சிரித்தார்.

 அந்த சிரிப்பில்  தோய்ந்திருந்தது  சந்தோசமா, சங்கடமா என்று இனம் காணமுடியவில்லை . அவரை உற்றுநோக்கினேன்.

“ எங்கள் தொகுதியில்  வேட்பாளாராக  நாங்க வேலைசெய்யும் சுரங்க முதலாளியின் மைத்துனர்  நின்றார். பெரும்பாலும்  நாங்க எங்க ஜாதி ஆளுக்கே  வோட்டுப் போடுவோம் . இந்த தடவை  சுரங்கமுதலாளியின் மைத்துனருக்கு  வோட்டு போட்டால் வோட்டுக்கு  ஆயிரமும் குடும்பத்தோட  இராமேஸ்வரம் போய்வர ரயில்டிக்கட்டும்  தருவதாக உறுதி அளித்தார். எங்காளுக சுமார் நூறுகுடும்பம் வேலைசெய்யிறோம். குறைஞ்சபட்சம் நானூறு வோட்டுக  தேறும்; ஜெயிச்சிறலாமுனு பணமும், ரயில்டிக்கட்டும் கொடுத்தாங்க. 

   பல தலைமுறையா இராமேஸ்வரம் போகணுங்கிற கனவும் நிறைவேறனும், பாரம்பரியமா எங்க வோட்டுகளை வாங்கி, ஜெயிச்சாலும், தோத்தாலும்  எங்களுக்கு அப்பப்ப வந்து உதவுற சாதிக்காரருக்கும்  உதவனுமுன்னு  ரெண்டுபேத்துக்கும்  சமமா வோட்டு போட்டுட்டு இராமேஸ்வரம் கிளம்பி வந்துட்டோம்.                                       இப்போ  எலக்சன் முடிவுல நாங்க வோட்டுபோட்ட ரெண்டுபேரும்  தோத்துட்டாங்கலாம் .! புதுசா போட்டியிட்ட  இளவயசுக்காரர் முன்னூறு வோட்டு வித்தியாசத்தில ஜெய்ச்சிட்டாராம் !. அதைத்தான் இந்த இளந்தாரிக முனுமுனுத்துட்டுப்  போறாங்க. இப்போ சுரங்க முதலாளிகிட்ட  வேலைக்கு போறதா, வேணாமான்னு  கேள்வி வந்துருச்சு. அந்த சிந்தனைதான்  ஓடிகிட்டிருக்கு  “ மீண்டும் அதே  சிரிப்பை  உதிர்த்தார்.

 

  

Series Navigationஈரான், ஈராக் எல்லையில் இதுவரை நேராத மிகப்பெரும் 7.3 ரிக்டர் அளவு பூகம்பம்கம்பருக்கே கர்வம் இல்லை
author

Similar Posts

Comments

  1. Avatar
    Jananesan says:

    “வாக்குகடன் “கதையை பிரசுரித்த திண்ணை இணைய இதழ் ஆசிரியர்குழு நண்பர்களுக்கு நன்றியும், வணக்கமும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *