குன்றக்குடியை உள்வாங்குவோம்

This entry is part 1 of 9 in the series 10 ஜூலை 2022

.                               –எஸ்ஸார்சி   

  

 

தவத்திரு  குன்றக்குடி அடிகளார் நூல்திரட்டு என்ற தலைப்பில் ஒரு கட்டுரை நூலை சாகித்ய அகாதெமி வெளியிட்டுள்ளது. தொகுப்பாசிரியர் மரு.பரமகுரு.

தவத்திரு குன்றக்குடி அடிகளார்(1925-1995) குன்றக்குடியிலுள்ள திருவண்ணாமலை ஆதீனத்தின் 45 வது குரு மகா சந்நிதானம் ஆவார்.

 அடிகளார் பல்வேறு விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றவர். சங்க காலம் தொடங்கிச் சமகாலம் வரைக்குமான தமிழ் இலக்கியங்கள் தத்துவங்கள் ஆகியவற்றைச்சமுதாய நோக்கோடு ஆய்வு செய்தவர். அடிகளார் எழுதிய தேர்ந்த  கட்டுரைகள்  சில அடங்கிய தொகுப்பே  இப்புத்தகம்.

சங்க காலத் தமிழர் வாழ்வியல் தொடங்கி சைவ சித்தாந்தமும் மார்க்சியமும் என்கிறவரைக்குமான  17 கட்டுரை மலர்களை இவண் நுகர வாய்க்கிறது. குன்றக்குடி அடிகளார் வாழ்க்கைக் குறிப்பு என்னும்  பகுதியிலிருந்து சில செய்திகளை நாம்  வாசிக்கிறோம். மனம் நிறைவெய்துகிறது.

குன்றக்குடி அடிகளார் 11 ஜூலை 1925ல் நடுத்திட்டு கிராமத்தில் தஞ்சைப்பகுதியில் பிறந்தவர்.இயற்பெயர் அரங்கநாதன்  அடி நாட்களில் சிதம்பரம் அண்ணாமலை நகரில் வாழ்ந்திருக்கிறார். ரா.பி சேதுப்பிள்ளை, சுவாமி விபுலாநந்தர் ஆகிய தமிழ் அறிஞர்களோடு தொடர்புகொண்டவர். இந்திய விடுதலைப்போராட்டத்தில் நாட்டம் மிக்கவர்.  பூதான இயக்கப்பெருந்தலைவர் வினோபாபாவே பெயரில் படிப்பகம் நடத்தியிருக்கிறார்.

தருமை ஆதீன 25 ஆவதுசந்நிதானம் தீட்சை தர  அரங்கநாதன், கந்தசாமித்தம்பிரான் ஆகிறார் பின்னர் தருமபுரம் தமிழ்க்கல்லூரியில் பயில்கிறார். 1949 ல் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீன இளைய பட்டம் ஏற்கிறார்.  ஸ்ரீலஸ்ரீ தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் என்கிற பட்டம் ஏற்கிறார். . 1952 ல் தமிழ்நாடு நாளிதழ் அய்யாவுக்குத் தவத்திரு குன்றக்குடி அடிகளார்  என்கிற பெயர் சாற்றி அப்பட்டப்பெயரைத்தொடங்கிவைக்கிறது.

1954ல் இராஜாஜி தலைமையில்  அடிகளார் அருள்நெறித் திருக்கூட்ட மாநாடு நடத்துகிறார்.1956 ல் அறிஞர் அண்ணா குன்றக்குடி மடத்துக்கு வருகை தருகிறார்.  அடிகளார் பின்னர்   நாத்திக இயக்கத்தலைவர் ஈ.வெ .ரா பெரியாரைச்சந்திக்கிறார். சர்வோதயத்தலைவர் வினோபாபாவே திருமடம் வந்து  அடிகளாரைக்காண்கிறார்.1958 ல் பாரதப்பிரதமர் நேரு குன்றக்குடி மடத்திற்கு விஜயம் செய்கிறார்.

 அடிகளார் 1961ல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தமிழ் அருச்சனை தொடங்கும் நிகழ்வில் பங்குகொள்கிறார். 1966ல் தமிழ் நாடு தெய்வீகப்பேரவை தோற்றம் பெருகிறது.

1969ல்  அன்றைய முதல்வர் மாண்புமிகு மு. கருணாநிதி  அவர்கள் விருப்பத்தின்படி அடிகளார் சட்டமேலவை உறுப்பினரானார். 1970 சாதி வேறுபாடின்றி அனைவரையும் அருச்சகர் ஆக்கவேண்டும் எனப்  புரட்சி உரைநிகழ்த்துகிறார்.

இராமநாதபுரம், மண்டைக்காடு புளியங்குடி ஆகிய இடங்களில் நிகழ்வுற்ற இனக்கலவரங்களுக்கு எதிராக  அடிகளார் அமைதிப்பணி ஆற்றியவர். தமிழகரசு நிறுவிய திருவள்ளுவர் விருதினைமுதன் முதலில் பெற்றவர். குன்றக்குடியில் அடிகளார் செய்திட்ட சமூக சேவை இந்திய அளவில் புகழ் பெற்று அது Kunrakkudi Pattern என்று அறிவிக்கப்பட்டது.

1989ல் அண்ணாமலைப்பல்கலைக்கழகம் அடிகளாருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கிப்பெருமை சேர்த்தது.1993ல் மதுரைக்காமராசர் பல்கலைக்கழகம் தமிழ் பேரவைச்செம்மல் என்கிற விருதினை வழங்கியது.

1995ல் அடிகளார் இறைநிலை எய்தினார்.

இக்கட்டுரைத்தொகுப்பில்

’சங்கத்தமிழர் வாழ்வியல்’ என்னும் முதல் கட்டுரை தமிழர்தம் தொன்மைச்சிறப்பு பேசுகிறது .தமிழ் மாந்தர் தம் அறம் பண்டு உச்சிமேல் வைத்து மெச்சத்தக்கதாய் இருந்தமையை எடுத்துவைக்கிறது.

புறம் 18  ’  நீரின்றி அமையா யாக்கைக்கு எல்லாம்

                   உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே

                   உண்டி முதற்றே உணவின் பிண்டம்

                  உணவெனப்படுவது நிலத்தொடு நீரே.’

என்று பேசும் குடபுலவியனார் கவிதை ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னரே தமிழர் நீர் ஆளுகையின் இன்றியமையாமையை அறிந்திருந்தனர் என்பதை அறிவிக்கிறது.

நாடென்ன காடென்ன மேடென்ன பள்ளமென்ன இவை கிடக்கடும் ஆடவர் நல்வழி செல்லுதல்மட்டுமே ஒரு நாட்டின் மாண்பினைப்பேணுகிறது என்கிறது சங்கப்பாட்டு.

தலைமுடி  ஒன்றுகூட நரைத்தலே இல்லாது ஒரு முதியவர் காட்சிதருகிறார். காரணம் யாது என வினவ, விடை வருகிறது.

’யாண்டு பலவாக நரையில ஆகுதல்

யாங்காகியர் என வினவுதிராயின்

மாண்டஎன் மனைவியொடு மக்களும் நிரம்பினர்

யான்கண்டனையர் என் இளையரும் வேந்தனும்

அல்லவை செய்யான் காக்கும்.அதன்தலை

ஆன்றவிந்தடங்கிய கொள்கைச்

சான்றோர் பலர் யான் வாழுமூரே’

புலவர் பிசிராந்தயர் பெருமையோடு குறிப்பிடும் இச்செய்திகள்நம்மை என்றும் வியக்கவைக்கின்றன.

கணியன் பூங்குறனாரின் தமிழர் பெருமை பேசும்பாடல் தொட்டு அடிகளார்பேசுகிறார்  யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர் தர வாரா என்று தொடங்கும் அந்தப்பாடல் என்றும் நம் சிந்தனையைக்கிறங்கவைக்கும்பாடலாகும். இறப்பு என்ன நமக்கு புதியதா வாழ்வது இன்பம் கொணர் மகிழ்ச்சி ஊற்றா என்று சொல்லிக்கொண்டே போகிறார். இறுதியாய்

மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே! என்று முடிக்கிறார்.

திறவோர் காட்சியில் நாங்கள்  அறிவில் தெளிந்தனம் ஆகவே பெரியோரை வியத்தலும் சிறியோரை இகழ்தலும் செய்யோம். சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே என்கிறாரே புலவர். இந்தப்பண்பாட்டின் உச்சத்தை எட்டிய தமிழ் மக்களின்று எப்படி எப்படி எல்லாம்  நடந்துகொள்கிறார்கள் என்பது அனுபவம் ஆகும் போது  அடிகளாருக்கு நெஞ்சம் நோகிறது.

‘செல்வத்துப்ப்யனே ஈதல்

துய்ப்பேம் எனினே தப்புந பலவே  (புறம் 189)

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இங்கே  தமிழ் மண்ணில் பொதுவுடமை துளிர்விட்டிருக்கிறது. இச்செய்தியை உலகத்திற்கு ஓங்கிச்சொல்லவேண்டியது தமிழ்மொழியை  ஆழ்ந்து படித்த  ஒவ்வொரு மனிதனுடைய கடமையேயாகும்.

பரிபாடல் 5.78-81 இப்படிப்பேசுகிறது.

..யாம் இரப்பவை

பொருளும் பொன்னும்போகமும் அல்ல நின்பால்

அருளும் அன்பும் அறனும் மூன்றும்

உருள் இணர்க்கடம்பின் ஒலிதாரோயே

 உலகம்மாயை என்று கூறிய ஆதிசங்கரர் கனகதாரா தோத்திரம் இயற்றி பொன்மழை பெய்ய அவாவுகிறார். ஆனால் பரிபாடல் தந்த தமிழ்க்கவியோ இறைவனிடம்  பொருளும்பொன்னும்   போகமும் எனக்கு  வேண்டாம் அருள் வேண்டும் அன்பு வேண்டும் அறன் வேண்டும் என்கிறார். எத்தனைப்பெரிய வேறுபாடு.

அடுத்துவரும் கட்டுரை ‘வாழ்விக்க வந்த வள்ளுவம்’. அது அறிவு நெறி, ஆள்வினை  பொருள், அன்பு நெறி,ஒழுக்க நெறி, ஒருமை நெறி, அருள் நெறி, என்று பல்வேறு தளங்களில் அடிகளாரால் இவண் திருக்குறள் ஆராயப்படுகிறது.

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு( குறள் 80)

இவ்வுலகில் உயிர் நிலைத்து நிற்பதற்கு அன்பு மட்டுமே ஆதாரம் என்கிறார் வள்ளுவர்.

திருக்குறள் போன்ற ஒரு முழுதுறழ் அறநூலைத் தர தகுதியடையதாக வாழ்ந்த இனம் தமிழினம் என்று சிறப்பாகப்பேசுகிறார் அடிகளார்.

மூன்றாவது கட்டுரை சிலம்பு நெறி.  அடிகளார் இக்கட்டுரையில் தீண்டாமை குறித்துப்பேசுகிறார்.அதன் கொடுமைகள் என்றேனும் முடிவுறுமா என்று ஏங்குகிறார்.மனித இனம் இன்னும் தன்னைத்திருத்திக்கொள்ளாதது ஏனோ என்று கேள்வி வைக்கிறார்.

‘தீண்டாமை குற்றம்.தீண்டாதார் என்று ஒதுக்குதல் கூடாது.சாதிவேற்றுமைகளை அறவே விலக்கவேண்டும்.எல்லாரும் ஓர்குலம் என்ற கருத்து சங்க காலத்திலிருந்து இலக்கியங்களில் ஒரேமாதிரியாக உரத்த குரலில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.யாராவது கேட்டார்களா? பின்பற்றினார்களா? படித்ததில் என்ன குறைவா?உரைகள் எழுதி அச்சிடவில்லையா?பட்டிமன்றங்களில் பேசி மகிழவில்லையா? ஆனால் நடைமுறை என்பது என்ன?’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பது என்னவாயிற்று? தெருச்சண்டைகள்தானே வளர்ந்தன.’

இப்படி அடுக்கிக்கொண்டே போகிறார் அடிகளார்.

நான்காவடாக வரும் கட்டுரை ’திருமுறைகளின் மாண்பு’   இவண் அப்பர் பெருமான் குறித்துச்செழுமையான விவாதம் வைக்கிறார்.

தமிழ்ச்சமூகத்தின் மொழிவழி நாகரிகத்தையும் அவர் பேணிக்காக்கப்பெருந்தொண்டாற்றியமை மறக்க முடியாதது.சமணத்தின் நுழைவினால் சைவமும் தமிழும் குன்றிக்குற்றுயிராகிக்காலப்போக்கில் மறைந்தொழிய ஏதுவாகுமெனக்கருதியே சமணர்களால் உண்டான இன்னல்களை எல்லாம் எதிர்த்துப்போராடினார்.இசையைத் துய்க்கத்தெரியாத அனுபவிக்கத்தெரியாத அன்றையச்சமணர்கள்’மலரை மணக்காதே’ என்பதுபோல்’இசையைப்பொழியாதே’ என்பதுபோல் ‘இசையைச்சுவைக்காதே’ எனத்தடைபோட்டார்கள். தடைவரினும் படைவரினும் தளராது தன்னம்பிக்கையால் உளவலிமையால் இன்னிசை பொழிந்து இசைத்தமிழ் வளர்த்தார் அப்பரடிகள்: என்று அரிய செய்தியை எடுத்து வைக்கிறார். இதுகாறும் இசைகுறித்துச்சமணம் என்ன விளக்கம் தருகிறது என்று  ஆய்வாளர்கள்யாரும் எடுத்து இயம்பியதாகத்தெரியவில்லை. இனி இது குறித்து செழுமையான விவாதம் எழுப்பப்படவேண்டும்.

சமணம் இப்படி  என்றால் பெளத்தம் மதம் இசை குறித்து என்ன நிலைப்பாடு கொண்டுள்ளது என்பதுவும் விவாதப்பொருள் ஆகி  கருத்தாக்கங்கள்  பெறப்படவேண்டும்.

தமிழர் திரள் மூன்று பெரியோர்களுக்கு என்றும் கடன் பட்டவர்கள். அவர்களன்றித் தமிழ் இல்லை. அவர்கள் திருவள்ளுவர்,திருமூலர்,மாணிக்கவாசகர் ஆகியோர்.  திருக்குறளும் திருமூலமும் திருவாசகமும் நமது  சிந்தனைச்செல்வங்கள்.மனிதகுல விழுமியங்கள் அவை.

திருவாசகத்தேன் என்பது அடுத்தக் கட்டுரை. அடிகளார் சராசரி மனிதனைக்குறித்துப் பேசுகிறார். மனிதன் விரும்புவது புகழ்.ஆசைப்படுவது புகழ்,ஆனால் புகழ் விருப்பம்கூடமனிதனைக்கெடுத்து வீழ்த்தி விடும் என்பதே அறநெறிதருமுடிவு என்கிறார்.

மாணிக்கவாசகர் உயிருண்ணிப்பத்து என்னும் பகுதியில் இறைவனிடம் இப்படியாய் விண்ணப்பம் வைக்கிறார்.

வேண்டேன் புகழ் வேண்டேன் செல்வம்

வேண்டேன் மண்ணும் விண்ணும்

வேண்டேன் பிறப்பிறப்புச்சிவம்

வேண்டார் தமை நாளும்

தீண்டேன் சென்று சேர்ந்தேன் மன்னு

திருப்பெருந்துறை இறைதாள்

பூண்டேன் புறம் போகேன் இனிப்

புறம்போகல் ஒட்டேனே.

அடுத்துவரும் இராமனும் சீதையும் என்னும் கட்டுரையில் கம்பனின் கருத்துப்படி இராமன் ஒரு சிறந்த தலைமகன் தெய்வத்தன்மை உடையவன். ஆனால் வால்மீகியின் கருத்துப்படி இராமன் ஒரு சாதாரண மனிதனே. வால்மீகி இராமனைத்தெய்வத்தன்மையுடையவனாக யாண்டும் குறிப்பிடவில்லை என்று எடுத்துவைக்கிறார் அடிகளார். தந்தைபெரியாரின் இராமாயணக்கருத்துக்கள் குறித்து

நல்லதொரு மறுப்பு விவாதமும் செய்கிறார் அடிகளார்.

பெரியார் வலிந்து மரபு மீறி பாத்திரங்களைக்களங்கப்படுத்துகிறாரே என்று ஒரு விமரிசனத்தையும் அடிகளார் வைக்கத் தவறவில்லை.

ஏழாவது கட்டுரையாக மலர்ந்திருப்பது’ குமரகுருபரரின் உயிர்க் கொள்கை’. உயிர்கள் என்றும் உள்ளவை. உயிர்கள் வளர்வதற்கு உணர்வு தேவை.உணர்வுக்குத்துணையாயிருந்து தூண்டிச்செய்வது ஆற்றுப்படுத்துவது கடவுள். இந்தச்செய்தியை குமரகுருபரரின் உயிர்க்கொள்கையாக அடிகளார் வாசகனுக்குத்தெரியவைக்கிறார்.

அடுத்துவரும் கட்டுரை தாயுமான சுவாமிகள் .  மனித உயிர் ‘அறியாமைச்சாரின் அதுவாய் அறியும்,  நெறியான போது அதுவாய் நிற்கும்’ என்கிறார் தாயுமானவர். ஆணவம் உயிரின் கண்ணை மறைத்துவிடும்.  அந்த ஆணவமே அறியாமை, உயிர் சிவ நெறி பட்டபோது ஆணவம் தானே மறைந்துபோகும்.

‘ஆரியம் கதவைச்சாத்தும்,தமிழ் கதவைத்திறக்கும்’ என்கிற ஒரு பிரத்யேக மொழிப்புரிதலை அடிகளார்  நமக்கு வழங்குகிறார்.

தொடர்ந்துவரும் வள்ளலார் நெறியில்  சமூக சிந்தனையைச்சொல்லிச்செல்கிறார் . ’நம் நாட்டிலே அர்ச்சகர் வீட்டிலே அர்ச்சகன் பிறந்துவிடுகிறான்.அவனுக்கு ஞானம் வேண்டாம் ஒழுக்கம் வேண்டாம்,ஆனால் தாசில்தார் வீட்டிலோ தாசில்தார்பிறப்பதில்லை.தண்டல் நாயகம் வீட்டில் தண்டல் நாயகம் பிறப்பதில்லை’ தண்டல் நாயகம் எனில் அது மாவட்ட ஆட்சியர் என்பதறிவோம்.

வள்ளற்பெருமான் கண்ட பொதுமை நெறி வையகத்தில் மலரவேண்டும் என அவாவுகிறார் அடிகளார். வள்ளற்பெருமான் கண்ட பொதுமை நெறி கடவுள் நம்பிக்கையில் தோன்றிய பொதுமை நெறி என்று பேசுகிறார். எள்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம் உயிர் போல் எண்ணி உள்ளத்தில் பூரணமாய் ஒத்து அவ்வுயிர்  முழு உரிமை உடையதாய் உவக்கின்ற மனம் வேண்டுகிறார் வள்ளலார்.

10,11,12 ஆகிய மூன்று கட்டுரைளுமே பாரதி பற்றியன. பெண் விடுதலைக்குக்குரல் தந்த பாரதியைப் புகழும் அடிகளார்’ எந்தக்காரணத்தைமுன்னிட்டும் பெண்ணை ஒரு விளம்பரப்பொருளாகப் பயன்படுத்துகிற கவர்ச்சிப்பொருளாகப் பயன்படுத்துகிற அனைத்தும் தடை செய்யப்பட்டால் ஒழிய இந்த நாட்டினுடைய பெண்களுக்குத் தரமான தகுதி வராது.’ என்கிற எச்சரிக்கையை நமக்கு விடுகிறார்.

ரஷ்யப்புரட்சியை ‘ஆகா என்று எழுந்ததுபார் யுகப்புரட்சி’ என்று  வரவேற்ற முதல் இந்தியக்கவிஞன் பாரதியைப் புகழ்கிறார் அடிகளார்.

வாணவேடிக்கைகள் அழகொழுகும் பேச்சுக்கள்,பகட்டான பேரணி,அணி அணியாக ஊர்ந்துவரும் கார்கள் இவைகள் மக்களாகிய மன்னர்களின் அதிகாரத்தைக்கெடுக்கும் முதலாளித்துவத்தின்  நச்சுப்பூச்சிகள் என்கிறார் அடிகளார். நாம் என்றுதான் விழித்துக்கொள்வது என்று வினா வைக்கிறார்.

அடுத்துவருவது குடும்பவிளக்கும் குறளும் என்னும் கட்டுரை. பாரதிதாசனின் குடும்ப விளக்கு  தமிழில் ஒரு சாகா இலக்கியம் என்று பேசுகிறார் அடிகளார். அடுத்துவரும் பட்டுக்கோட்டையின் பாடல்கள் என்னும் கட்டுரை  பொதுமைக்கவிஞர் கல்யாணசுந்தரம்   கவிதைபற்றி ச்சிறப்பாகப்பேசுகிறது.

‘எல்லோருக்கும் நம்பும்படி சொல்லும் திறனிருந்தால்

சொல்லிலே உண்மையில்லை

உள்ளதை உள்ளபடி சொல்லும் மனிதனிடம்

உணர்த்திடும் திறமையில்லை

உண்மையும் நம்பவைக்கும் திறனும் அமைந்தவனை

உலகம் ஏற்பதில்லை.’

பட்டுக்கோட்டையின் இக்கவிதை வரிகளை ச்செம்மையுறக்காட்டி அடிகளார் அக்கவிஞரை நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.

அடுத்து வரும் இரு பெரும் கட்டுரைகள் ஒன்று நமது நிலையில் சமயம் சமுதாயம், இரண்டு சைவ சித்தாந்தமும் மார்க்சியமும் என்பன.

சேக்கிழார் நந்தனார் வரலாற்றில் நந்தனாரைச்சிந்தை குளிரச்செவி குளிர ‘ஐயர்’ என்று பலதடவை போற்றுவது எண்ணத்தக்கது என்கிறார் அடிகளார்.

’தீண்டாமையை நமது சமயத்திலிருந்து அறவே அகற்றிக்கோடானுகோடி மக்களின் வாழ்க்கையில் ஒளியேற்றத்தவறிவிடுவோமானால் நமது கடமையை நாம் செய்யத்தவறியவர்கள் ஆவோம்’ அடிகளாரின் அறிவுரை நம் மனம் தொட்டுப்பேசுகிறது. தொடர்கின்றன வினாக்கள்.

தமிழ் நிலத்தில், பழுத்த அனுபவத்தில் தோன்றிய இறைவழிபாடு, இன்று முதிராப்பிள்ளைகளின் சிறு விளையாட்டுப் போல் அமைந்துவிட்ட கொடுமையை நினைந்து உட்கி வெட்கமுறாதார் நெஞ்சம் என்ன நெஞ்சம்?’ அடிகளாரின் இக்கேள்வி சிந்திப்பாளர்களை உறங்கவும் விடுமா என்ன?

புழுதியில் கிடக்கும் மனிதர்களைப்பற்றிச்சிந்திக்காத இத்திருமடங்கள் என்னதான் செய்யவிருக்கின்றன?

மக்களைத்தழுவி வளர்க்காத சமய நிறுவனங்கள் எதற்காக?

நடமாடும் கோயில்களை நாடிப் போற்றாத நிறுவனங்கள் எதற்காக?

‘பதவுரையும் பொழிப்புரையும் எழுதினார்கள் இலக்கணக்குறிப்புகள் எழுதினார்கள் தெளிவாகச்சொன்னால் இலக்கியச்சிந்தனை என்ற பெயரால் திருவள்ளுவர் ஏற்றி வைத்த புரட்சி விளக்கை அணைத்தே விட்டார்கள். இன்னும் திருக்குறள் தந்த திருவள்ளுவர் வழிபாட்டுக்குத்தான் பயன்படுகிறார்.கவியரங்கம் பட்டிமன்றங்களுக்குத்தான் பயன்படுகிறார்.  படிக்கப்படிக்க வாசக  மனம் வலிக்கிறது.

விருத்தாச்சலம் நகரில் பழமலநாதர்  கீழைக் கோபுரம் முன்பாய் முற்போக்கு எழுத்தாளர் சங்க மேடையில் அடிகளார்,’ இந்த தமிழ் சமூகத்தைச்சற்றாவது  உயர்த்திவிட யான்  அவாகொண்டேன் முடியவில்லை. என்னை வளர்த்து ஆளாக்கிய இச்சமூகத்தை ஒரு அங்குலம்  கூடப் பண்பாட்டில் உயர்த்தாமல் என் வாழ்க்கை முடியப்போகிறதே என் செய்வேன்?’ இப்படிக் கண்ணீர் மல்கி அழுத பெரு உள்ளம் அல்லவா அது. பிறகு மேடைஎதுவும் ஏறினாரில்லை. சிந்திப்பதை அவர் நிறுத்திக்கொண்டார்

Series Navigationபார்த்துப் பேசு                 
author

எஸ்ஸார்சி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *