‘பண்ணையில் ஒரு மிருகம்’ – எழுதியவர் டாக்டர் நடேசன்

author
0 minutes, 9 seconds Read
This entry is part 3 of 12 in the series 24 ஜூலை 2022

 

 

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்.

டாக்டர் நடேசனின் ‘ பண்ணையில் ஒரு மிருகம்’ நாவல் அண்மையில் வெளியாயிருக்கிறது. அவர் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு 1985ம் ஆண்டு அகதியாகப் போயிருந்த கால கட்டத்தில் ஒரு மிருகப் பண்ணையில் உத்தியோகம் பார்த்ததைப் பற்றிய அனுபவத்தின் பின்னணியில் கதையொன்றைப் படைத்திருக்கிறார்.

இவர் படைத்த பல புத்தகங்கள் உலகத் தரமான அற்புத படைப்புக்கள்.புலம் பெயர்ந்த தமிழனின் எழுத்து மேம்பாட்டை பல்வேறு தளங்களில் பதிவு செய்திருக்கிறார் என்பதற்கு இவரின், ‘அசோகனின் வைத்தியசாலை,’ ‘ கானல் தேசம்’ போன்ற சில நாவல்களைப் படித்தால் புரிந்து கொள்ளலாம்.

‘ பண்ணையில்’ ஒரு மிருகம்’ என்ற நாவலிலும் வழக்கம்போல் மிகவும் தர்மசங்கடமான விடயங்களைத் தன் கதைமூலம் யதார்த்தமாகச் சொல்கிறார். ஓரு வைத்தியனாக, ஒரு மனிதநேயவாதியாக, முக்கியமாக ஒரு அழகிய கலைஞனாக இந்நாவலைச் செதுக்கியிருக்கிறார். வெங்காய நிறச் சேலையில் மூக்குத்தி பளபளக்க நள்ளிரவிலும் அதிகாலையிலும் நடேசனிடம் கனவாகவும் நனவாகவும் வந்து சூசகமாகப் பல புதிர்களைச் சொல்லும் கற்பகம் எங்களிடமும் விடை தெரியாமலிருக்கும் பல நிகழ்வுகளுக்கு விடை தேடத் தூண்டமாட்டாளா என்ற ஆவலைத் தரும்படி திகிலூட்டும், அதேநேரம், இறுக்கமாகக் கதையுள் நுழைந்து கற்பகத்தின் கதையை ஆராயத் தூண்டப் பண்ணுகிறார்.

பண்ணையில் பலர் பொய்மையாக நடந்து கொள்கிறார்கள். பண்ணையில் அவர் தனது உத்தியோக ரீதியான மிருக வைத்தியர் வேலை செய்ய முடியாது. ஆனால் அங்கு இவரை அந்த மாதிரிதான் எதிர் பார்க்கிறார்கள். இந்தியச் சமுதாயத்தில் ஆழமாகப் பதிந்து மனிதர்களை மிருகங்களைவிடக் கொடுமையாக நடத்தும் நிலைகண்டு தர்மா வேசம் கொண்ட ஆவேசச்சிதறல்களின் பிரதிபலிப்பு இந்த நாவல்

கதையைப் படிக்கத் தொடங்கியதும் ஒரு டாக்டரிடமிருந்து அமானிஸம் சார்ந்த ஒரு கற்பனைக் கதை வருமா என்ற யாரும் கேட்கவேண்டாம்.

எழுத்தாளன் என்பவன்,அவனின் கற்பனையை எப்போது, எங்களை எழுதத் தூண்டிய பாரம்பரிய இதிகாச, புராண நடையில் கொண்டிருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது தேவையற்றது. இக்கதை, ஒரு பண்ணையில் தொடரும், இன்றும் பல பண்ணைகளில் தொடர்ந்து கொண்டிருக்கும் பல தரப்பட்ட தளங்களை விளக்குகிறது. வேலையாட்களின் தகுதிகள், தராதரங்கள், சாதி, வர்க்கம், பெண் அடக்குமுறை,(பெண்ணை,தனது பாலியல் வக்கிரத்துக்காக ‘ஏதோ’ ஒரு வழியில் தனது ஆணுறுப்பைத் திணிக்கும் அதர்மம்?),கௌரவக்கொலை, கடைசியில் செய்த பாவங்களுக்காக அவர்கள் அனுபவிக்கும் தண்டனைகள் என்பன கதையம்சங்களாக வாசகனைத் திணறப் பண்ணுகின்றன.

 

இது ஒரு துப்பறியும் கதையல்ல,பெண்ணுரிமைக் கோட்பாட்டுக் குரலல்ல, மனித உரிமைப் போர்க்களமல்ல,சாதியை ஒழிக்க ஓங்கிக் குரல் கொடுக்கும் புரட்சிப் பிரசாரமல்ல, பதினைந்து வயதுப்பாலகர்களின் குதங்களைத் தன் பாலியல் வக்கிரத்தால் குருதி வழியப் பண்ணியதற்காக அந்தக் கொடியவனை நீதி நிலையம் கொண்டு செல்லவேண்டு என்ற தர்மம் சார்ந்த அழுகைக் கூப்பாடல்ல. ஆனால் இந்தக் கதையைப் படிக்கும்போது ஒரு வாசகனுக்கு அத்தனை கோபங்களும் தன்பாட்டுக்கு வருவதைத் தடுக்க முடியவில்லை.

 

தனது சொற்களால் ஒரு பண்ணையில் வேலை செய்யும் பலரின் வாழ்க்கையை ஒரு சொற்காவியமாக வரைந்திருக்கிறார் .நடேசன் தனது கதைகளில் பல திருப்பங்களை மிகவும் இலகுவாகப் புகுத்தி வாசகனைத் தனது புத்தகத்தை வாசிக்கும்வரை கீழே வைக்க உன்னால் முடியுமா என்ற மானசீகமாக அன்புக்கே கேள்வியைப் புகுத்தித் திணற வைப்பவர்.அதே மாதிரியே இந்தச் சிறு நாவலும் அமைந்திருக்கிறது.

 

1985 மாசி மாதம்; ஆண்டு 60 மாடுகள் கொண்ட பண்ணைக்குச் செல்கின்ற மருத்துவர் நடேசன்..முதல் சில நிமிடங்களிலேயே அங்கிருந்து கறுப்பையா என்ற மேஸ்திரி இவரிடம்,’அங்கு முன்னிருந்த டாக்டர் ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதால் அவள் தற்கொலை செய்து கொண்டதையும் டாக்டர் வெளியேற்றப் பட்டதையும் சொல்கிறார்.

அந்த அதிர்ச்சியை இவர், உலர்ந்த நாக்கில் வார்த்தைகள் சிக்காமல்.கள்ளன்,பொலிஸ் என ஒளிந்து விளையாடின. தளர்ந்து போயிருந்த எனது உயிருக்கு,கையிலிருந்த எனது பெட்டி ஈயக்குண்டாகியது'(பக்22) என்ற ஆரம்ப வார்த்தைகள், மூலம் தொடங்கி வைக்கிறார்.அந்த நிமிடத்திலிருந்து இவர் அங்கு கேள்விப்பட்ட, கண்ட நிகழ்வுகள் என்பனவற்றிற்கு பாதையமைத்து எங்களையும் மிக ஆர்வத்துடன் தனது நாவலுக்குள் அழைத்துச் செல்கிறார்.

 

பண்ணையில் பலவிதமான பிரிவுகளான வேலைகளுக்குப் பல விதமான வேலையாட்கள் இருக்கிறார்கள். சாதி ரீதியாகப்பிரிக்கப்பட்ட மனிதர்களின் அன்றாட வாழ்க்கை அமைதியாக அந்தப் பண்ணையில் தொடர்கிறது. அங்கிருக்கும் அறுபது மாடுகளும் இவர்கள் போடும் உணவுக்கு அமைதியாகத் தங்கள் வாழ்க்கையைத் தொடர்வதுபோல் அங்கு மனிதமற்ற விதத்தில் நடத்தப்படும் வேலையாட்களின் நிலை இவரை வாட்டுகிறது.’இவர்களிடையே சாதிப் பாகுபாடு வெளித்தெரியாத காற்றைப்போல் எங்கும் நிறைந்திருக்கிறது’என்று துயர் படுகிறார்.(பக்38)

 

இந்த நாவல் முழுதும் அழகான, ஆத்திரமான,குழப்பமான நிலையை விளக்க,மனிதரின் குணா பாவங்களைத் தெரிந்து கொள்ள,இயற்கையை இரசிக்கும் விதமாகவென்று நாவல் முழுதும் பற்பல விடயங்களையும் நூற்றுக்கணக்கான கவிதை வடிவ வசனங்கள் இதயத்தைத் தடவிச் செல்கின்றன. அவற்றில் சிலவற்றை இங்கு பதிவிடுவதால் இவரின் நாவலை நீங்கள் ஏன் படித்து இரசிக்கவேண்டும், ஆத்திரப் படவேண்டும், கையாலாகத் தனத்துடன் பெருமூச்சுவிடவேண்டும் என்று குறிப்பிடுகிறேன்;.

 

ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த தொழிலாளி வீட்டுக்கு இவர் சென்றபோது தங்கள் வீட்டில் இவர் சாப்பிடுவாரா என்ற தயக்கம் அவர்கள் முகத்தில் தெரிந்தபோது,’கருவாட்டுக் குழம்பின் வாசனை,  வயிற்றில் பகாசுரனை எழுப்பிவிட்டிருக்கிறது.பசியிருந்தால் எங்கும் சாப்பிடுவேன்’ (பக்59)என்று,சாதி மதத்திற்கு அப்பாற்பட்டவன் என்ற அவரது நிலையை அவர்களுக்கு இலகுவாகச் சொல்கிறார்.

 

அங்கு பெய்த தொடர் மழையை விவரிக்கும்போது,’விவிலியத்தின் பிரளயத்தைக் கற்பனையில் நிலைக்க வைத்தது’ (பக்61) என்றும்,மழை விட்டபோது,’தொடர்ச்சியாக விடாத மழை பெய்தபோது, ஆரம்பக்காதலின் கிளுகிளுப்புகள்,விசித்திரங்கள் எல்லாம்,மோகவெள்ளம் வடிந்து,காய்ந்து, வறண்ட தாம்பத்தியமாகக் குறைந்து விட்டது’ என்று குறிப்பிடும்போது, பழைய கால வேத புரணத்தையும்,தாம்பத்தியத்தின் இணைவையும் சொல்கிறார். இரு விடயங்களும் ஒன்றுக்கொன்று முரணானவை ஆனால் ஆரம்பித்த மழை ஓய்ந்தபோது அவரின் கற்பனை எப்படி மாறுகிறது என்பதை அவரின் ஒளிவு மறைவற்ற ஒப்பிடல்கள் குறிப்புகளுடன் இரசித்தேன்.

 

இவர் இரசித்த மழையை அங்கு வேலை செய்யும் ஏழைத் தொழிலாளி எப்படிப் பயந்து நோக்குகிறான் என்பதை,'(வீரராகவன் பக் 63))அவனது வழமையான சிரிப்பு, மழையில் கரைந்து  வாடிய முகமிருந்தது.’குளத்திற்கு அடுத்த புறத்திலிருந்த எங்கள் கிராமம் குளத்தின் மடையுடையதால் அழிந்துவிடும்’ என்று துயருடன் பதிவிடுகிறார்.

பாலியல் கொடுமை செய்யப் பட்ட பையன்களைப் பற்றி அங்கு வேலை செய்யும் ஒரு முதியவர் குறிப்பிடும்போது,(பக்81)’பாம்பைப் பிடித்து விளையாடும் இந்த வயதில் இப்படியான விடயங்கள் நடப்பதுதானே,இவற்றைக் கடந்துதானே நாம் வளர்ந்தோம்,’ என்கிறார். எந்தக் குற்ற உணர்வும் கிடையாது.அந்த அளவுக்கு இந்திய மனசாட்சி மரத்துக் கிடக்கிறது.

 

‘இந்தப் பையன்களுக்கு.ஏற்கனவே இந்தப் பண்ணையின் வேலை மூலம் விளையாட்டுப் பருவம்,கல்வி என்பன சூறையாடப்பட்டு விட்டன.இப்போது பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட இவர்கள் வளர்ந்து பெரியாளாகும்போது தங்களுக்கு அநியாயம் செய்த சமூகத்தை எப்படிப் பார்க்கப் போகிறார்கள்,இவர்களது பாலியல் உணர்வுகள் எப்படிக் காயமடைந்திருக்கும்?. நாளை இவர்களும் அடுத்த கறுப்பையாக்களாக மாறுவார்களா?  அவை வன்முறையாகவிருக்காதா’ என்று குமுறுகிறார்.(பக்.81). இப்படியே எத்தனையோ கேள்விகள் எழுப்பப் படுகின்றன. ஆனால் அவற்றை வெளிக் கொணர்ந்து நீதி கேட்டால் அங்கு அதற்கு இடமில்லாத அளவு அந்த வாழ்க்கை அமைப்புக்கள் கட்டமைக்கப் பட்டிருக்கின்றன.

 

தனது மகள் சாதி குறைந்தவனைக் காதலித்ததால் அவனைத் தொலைத்துக் கட்டி விடுகிறார் நீலமேகம்  என்ற வசதி படைத்த கொடியவன். மகள் தனது காதலனின் பரிசான ஆடு போட்ட குட்டியை அணைத்து முத்தமிட்டுத் தனது காதலனை நினைத்தும் கொண்டு விதவையாக வாழ்கிறாள் இதனால் நீலமேகம் அந்த ஆட்டையும் தொலைத்துக் கட்டத் துடிக்கிறார்.

 

நாவல் முழுவதும் இப்படி எத்தனையோ போராட்டங்கள், துயர்கள். வழி தெரியாத தொழிலாளர்களின் வாழ்க்கைமுறை சித்தரிக்கப் படுகின்றன. பாலியல் வன்மம் கர்ப்பவதியையும் விட்டு வைக்காத கொடுமையால் அவளும் இறக்க நேரிடுகிறது. அவளுடைய ஆவி நீதி தேடி அலைகிறது.

இதிகாசங்களாம் புராணங்களும் நாடு பூராவும் போலியான சமயவாதிகளும் தங்கள் போதனையைத் தொடரும் இந்தியாவில், இப்படியான நாவல்கள் ஒவ்வொருநாளும் ஏதோ இடத்தில் எழுதப்படாத கதைகளாக நடந்து கொண்டிருக்கிறது.  உலகம் தலைகீழாக மாறினாலும் இந்தியச் சாதி அமைப்பு முழுக்கவும் மாறாது. மாற விடமாட்டார்கள்.இக் கதைகள் ஒரு இலங்கையனின் கண்ணோட்ட பதிவு. இலங்கையிலும் இப்படி எத்தனையோ கதைகள் நாவலாகப் படைக்கப்படவேண்டியிருக்கிறது என்பதை முற்போக்கு சிந்தனையாளர்கள் உணர்வார்கள்.

 

இந்த நாவல்,பிரசாரத் தன்மையற்றது.போதனை கடந்த பகுத்தறிவை உலுக்குவது. ஒரு சமுதாயக் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டது. இறந்து விட்ட பெண் கற்பகம் ஆவியாக வந்து பல விடயங்களைச் சொல்கிறது.அவள்தான் கதையின் கதாநாயகி.ஆனால் இந்தியாவின் வர்ணஸ்ரம கோட்பாடுகளால் கதாநாயகியாக வாழ அனுமதிக்கப்படாதவள்.

 

‘இந்தியாவில் மிருகங்களைக் கதாபாத்திரமாக்கி ஜாதகக் கதைகள் உருவாக்கியிருக்கிறார்கள்.அதன் பின்பு இராமாயணத்தில் குரங்கு வருவது மட்டுமா?  அனுமானும் கடவுளாகி விட்டது  

 

‘நான் யார்? இந்தக் கதையை உலகிற்குக் கொண்டு வருவதற்கான பாத்திரமா,பாத்திரமாகவும் கதை சொல்லியாகவும் வரும் மகாபாரத வியாசரா?’ என்று தன்னைத் தானே கேள்வி கேட்கிறார்.(பக்107).

 

 இந்நாவல் அவரின் இந்திய வாழ்க்கையின் அனுபவத்தின் மனம் நொந்த துயரத்தை வெளிப்படுத்தும் ஒரு குறிப்பு. இலகுவான,அதே நேரம் சுவாரசியமாகவும்,கவிதை வடிவிலும் கதை நகர்கிறது.படித்து முடிந்ததும்,இக்கதை சார்ந்த பல சிந்தனைகள் வாசகனின் மனத்தையும் அழுத்துவது கதை சொல்லியின் வெற்றியாகும்.

Series Navigationஷோபாசக்தியின் புதிய நாவல் ஸலாம் அலைக்பொங்கியது பால்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *