மீனாட்சி சுந்தரமூர்த்தி
வள்ளி வள்ளி அழைத்துக் கொண்டே வீடு முழுவதும் தேடினாள் அமிர்தம். கேஸ் வாசனை வருது பாரு என்று சொல்ல வந்தவள் சமையலறை வந்ததும் நின்றாள். பால் பொங்கி வழிந்து அடுப்பு அணைந்து போயிருந்தது. அதனால்தான் கேஸ் வாசனை வீடெங்கும். எச்சரிக்கையுடன் முதலில் சிலிண்டரை மூடிவிட்டு அடுப்பின் குமிழியையும் மூடினாள். பின்னர் கதவு சன்னல் அனைத்தையும் திறந்து வைத்தாள்.நல்ல வேளை பிள்ளைகள் யாரும் இல்லை.வாசல் கதவு திறந்து விட்ட
போர்டிகோவில் இருந்த மல்லிகைப் பந்தலுக்கு வந்தாள். நேற்றுப் பறிக்காத சாதிமல்லி பூத்து மணந்து கொண்டிருந்தது. இவளுக்கு இதிலும் கேஸ் வாசம் சேர்ந்திருப்பது போலவே தோன்றியது. தபால் ஏதும் வந்துள்ளதா என்று பெட்டியைத் திறந்து பார்த்தாள். ஒன்றும் இல்லை.அரளிச்செடி குறுமரமாக வளர்ந்து பன்னீர் ரோஜாப் போல் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தது.அதனருகில் வரிசையாய் ஐந்து வாழை மரங்கள், கற்பூரவாழை இரண்டு குலை தள்ளியிருந்தது.நெல்லி மரம் அதனருகில் படர்ந்து உயர்ந்திருந்தது.அப்படியே திரும்பி வீட்டின் அடுத்த பக்கம் வந்தாள்.இடுப்பளவு உயர்ந்து வளர்ந்திருந்தன துளசிச் செடிகள்.காற்றில் இப்போது துளசியின் மணம் தெரிந்தது. முள்ளில்லாத ரோஜாச் செடி ஆளுயரத்திற்கு வளர்ந்திருந்தது.பத்துப் பன்னிரண்டு பூக்கள் சிவப்பாய் பூத்திருந்தது..இங்கும் ஒரு மல்லிகைக் கொடி மாடிக்கு ஏற்றி விட்டது.ஆம்பூர் மல்லி என்று சொல்லியிருந்தான் விற்றவன்.ஒவ்வொரு பூவும் ரோஜா போல் பெரியதாய் அடுக்காக மலர்வது.நல்ல வாசனை.
அதனருகில் வெற்றிலைக் கொடி மூன்று வரிசையாய் கயிற்றில் படர்ந்திருந்தது.இதையெல்லாம் பார்த்துப் பார்த்து வளர்ப்பதில் அலாதிப் பிரியம் இவளுக்கு.
பார்த்துக் கொண்டே வந்தவள் துணி துவைக்கும் கல்லின்மீது அமர்ந்திருந்த வள்ளியைப் பார்க்கிறாள். இங்கே என்ன செய்கிறாள் பாலை அடுப்பில் வைத்துவிட்டு என்று நினைத்தவள், ‘வள்ளி இங்க என்ன பண்ற’ என்று குரல் கொடுக்க, திடுக்கிட்டு நிமிர்ந்த வள்ளி,’ ஒண்ணுமில்ல அத்தை’ என்று சொல்லிக் கொண்டே நிதானமாய் எழுந்து போகிறாள்.வங்கியில் வேலை பார்க்கும் ஒரே மகன் சுதாகருக்குத் தன் தம்பியின் மகள் வள்ளியை மணம் முடித்து வைத்திருந்தாள். ஒரு பையன் ஒன்பதாம் வகுப்பு பயில, பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸில் இரண்டாமாண்டு பயில்கிறாள் மகள். மற்றவர்கள் பார்த்துப் பொறாமைப் படும் அளவு அமைதியான, அழகான குடும்பம். அமிர்தத்தின் கணவர் இறந்து மூன்று ஆண்டுகளாகிறது. அப்போது இவள் ஆசிரியப் பணி நிறைவு பெற்று இரண்டே மாதம்தான் ஆகியிருந்தது.மகனும், மருமகளும், குழந்தைகளும் காட்டிய பாசத்தில் மனம் தேறியிருக்கிறாள்.
அடடா பால வச்சிட்டு மறந்தே போயிட்டேன்.’ சொல்லிக் கொண்டே துடைத்துச் சுத்தம் செய்தாள். தனக்கும், அத்தைக்கும் இரண்டு கோப்பைகளில் காபி கலந்து எடுத்துக் கொண்டு வந்து அமிர்தத்திடம் தந்து விட்டு எதிரில் அமர்ந்தாள். ‘இராத்திரிக்கு என்ன செய்யலாம் அத்தை’
தோசை மாவு இருக்குதில்ல,கொத்தமல்லி சட்டினி அரைச்சிடு மா போதும்.
சரிங்க அத்தை.
நான் கோயிலுக்குப் போயிட்டு வந்திடறேன்.
தினமும் தேவாரம் படிக்கும் சிவநேயச் செல்வர் கூட்டத்தில் அமிர்தம்மாள் முக்கியமானவர்.
இவள் கோவிலிலிருந்து வர ஏழரை ஆகிவிட்டது. பேரன் சேகர் டியூஷனிலிருந்து வந்திருந்தான். சுதாகர் விடுதியில் தங்கிப் படித்துக் கொண்டிருந்த மகளோடு அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தான்.
‘பாட்டி வந்துட்டாங்க இந்தா பேசு’
‘பூரணி எப்படி இருக்க,’
‘நல்லாருக்கேன் பாட்டி, ‘
‘சரியா சாப்பிடு, பத்திரமாய் இரு’ என்று சொல்லிவிட்டு மகனிடம் தந்தாள்.
‘சரிடா செல்லம்’ என்று சொல்லி முடித்தான் சுதாகர்.வள்ளி முதலிலேயே பேசிவிட்டிருந்தாள்.
‘அத்த சாப்பிடவாங்க ‘ சுதாக்கு முதல்ல கொடேன் ‘
வரேம்மா, என்றவன் அம்மாவிற்கு தட்டில் .சட்டினியும் மிளாகாய்ப் பொடியும் வைத்து தந்துவிட்டு தானும் எடுத்துக் கொண்டு அமர்ந்தான்.வள்ளி இருவருக்கும் சுடச்சுட தோசை வார்த்துக் கொண்டு வந்து தந்தாள்.
‘ வள்ளி நீ வா ,நான் வார்த்துத் தரேன்’
ஒரு இரண்டு விள்ளல்தான் உண்டிருப்பாள். எங்கோ வெறித்துக் கொண்டிருந்தாள் வள்ளி.’ ஏய் என்னாச்சு, ஏன் சாப்பிடல’
‘வள்ளி வள்ளி என்னம்மா பண்ணுது’ பதறினர் இருவரும்.
பதிலே சொல்லாமல் கண்கள் நிலையாய் வெறித்துக் கொண்டிருக்க அசையாமல் இருந்தாள் வள்ளி.
‘ஈசுவரா என்னாச்சு இவளுக்கு அப்பா நீயே துணை’ என்று நெற்றியில் திருநீறிட்டாள் அமிர்தம். கையும், காலும் சில்லென்றிருந்தது.சுதாகர் யூகலிப்டஸ் தைலத்தைப் பாதங்களில் தேய்த்து விட்டான்.’ சேகர் ஆட்டோ கூப்பிடு’
‘என்னாச்சு யாருக்கு ஆட்டோ? வள்ளிதான் கேட்டாள்.
அம்மாவும் பிள்ளையும் அதிர்ந்தனர். சேகர் ‘அம்மா நீ சாப்பிடல’ என்று சமாளித்தான். இயல்பாக உண்டு முடித்து
படுக்கப் போனாள் வள்ளி.
உறக்கம் வராமல் அம்மாவின் அறைக்கு வந்தான் சுதா.
என்னாச்சுமா இவளுக்கு? ஏதாவது பேய் படம் பார்த்து பயந்திருப்பாளோ?
தெரியலையே,
சாயந்திரம் பாலை வழிய விட்டதைச் சொன்னாள் அமிர்தம்.
நிறைய வேலை செய்யறதால பலவீனமாய் இருக்குமோ?
இதற்கெல்லாம் விடை கிடைத்தது இரவு ஒருமணிக்கு.
திடீரெனத் தூக்கத்திலிருந்து எழுந்த வள்ளி கணவனை எழுப்புகிறாள்.
‘ இந்தாங்க ஒடனே கிளம்புங்க” திடுக்கிட்டு எழுந்தவன் ‘ என்னாச்சு வள்ளி?
வண்டிய எடுங்க உடனே எம் பொண்ண பார்க்கணும்.
எட்டு மணிக்குதான் பேசினாளே?
இல்ல எனக்கு இப்பவே அவள பார்க்கணும்.
கார் இல்லையே, சர்வீசுக்குப் போயிருக்கே,
பைக்கிருக்கு அதுல போலாம்.
விடியட்டும் கொஞ்சம் பொறுமையா இரு,
இல்ல இப்பவே போகணும்.
கையில் கிடைத்ததை எடுத்து வீசுகிறாள்.
அமிர்தம் திகைத்திருக்க,’ அம்மா கதவைத் தாள் போட்டுக்க’
கட்டின சேலை கூட மாற்றாமல் கணவனின் பின்னால் அமர,
கெட்டியாப் பிடிச்சுக்கோ’ என்று சொல்லி வண்டியை ஓட்டினான் சுதா.
சென்னைக்கு அருகிலிருந்த அந்தப் பொறியியல் கல்லூரிக்கு.
மூன்று மணிநேரப் பயணம்.விடியற்காலை நான்கு மணிக்கு விடுதி வார்டனிடம் அலைபேசியில் பேசி மனைவியின் நிலை சொல்லிக் கெஞ்சிட தூக்க கலக்கத்தில் எழுந்து வரவேற்பரை வந்தாள் பூரணி. மகளைக் கண்டதும் வள்ளி,
‘சாமானெல்லாம் எடுத்துட்டு கிளம்பு’
‘எதுக்குமா?
வீட்ல இருந்து படிச்சுக்கலாம், ஹாஸ்டல் வேணாம்?
ஒரு வாரத்தில் தேர்வு முடிந்ததும் அழைத்துக் கொள்வோம் என்று பகீரப் பிரயத்தனம் செய்து வள்ளியை சமாதானம் செய்து மகளை விட்டுவிட்டு வந்தான் சுதாகர்.
இந்த மாதிரியெல்லாம் தொந்திரவு செய்தால் மற்ற பிள்ளைகள் பயந்துவிடுவார்கள் என்று சொன்ன வார்டனிடம் இனி இப்படி நடக்காது என்று மன்னிப்பு கேட்டுக் கொண்டான்.
வீடு திரும்பியதும் முதல் வேலையாக மருத்துவரிடம் அழைத்துச் சென்றான்.நான்கு நாட்களுக்கு முன்னர் விடுதியில் தங்கிப் படித்துக் கொண்டிருந்த பெண் ஒருத்தி திடீரென இறந்து விட்ட செய்தி பரபரப்பாகப் பேசப்பட்டது.அதன் தாக்கமே வள்ளியின் மனநிலைப் பிறழ்விற்கு காரணம் என அறிந்த சுதாகர்.
—-
- நங்கூரி
- ஷோபாசக்தியின் புதிய நாவல் ஸலாம் அலைக்
- ‘பண்ணையில் ஒரு மிருகம்’ – எழுதியவர் டாக்டர் நடேசன்
- பொங்கியது பால்
- இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் இமயச் சரிவில் உலகிலே உயர்ந்த இரும்பு வளைவு இரயில் பாலம்
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- ஐனநாயகச் சர்வாதிகாரம்
- பூதக்கோள் வியாழன், வெள்ளிக்கோள் இடையே உள்ள ஈர்ப்பு விசை மாறுதலால், பூமியின் சுற்றுப்பாதை மாறிப் பெருத்த உயிரினப் பாதிப்பு நேரலாம்
- மேடம் இன்னிக்கு…
- கைவசமாகும் எளிய ஞானம்
- ரசவாதம்
- உன்னுள் இருந்து எனக்குள்