சொல்லட்டுமே

This entry is part 1 of 8 in the series 7 ஆகஸ்ட் 2022

 

                 மீனாட்சி சுந்தரமூர்த்தி.                               

ஜெனிபர் வேகமாக சர்ச்சை விட்டு வெளியில் வந்தாள். லேனும், லேலாவும்  பின் இருக்கையில் இருந்தார்கள். முன் பக்கம் ஏறினாள்.மார்க் முகம் இறுகியிருந்தது எதுவும் பேசாமல்  காரை எடுத்தான். தேவாலய வளாகத்தை விட்டு வெளியில் வந்து கடை வீதிகளில் பயணித்தது வண்டி.’ஏதாவது சாப்பிடுகிறாயா?என்றான் மார்க் ,

குழந்தைகள்…?

 நாங்கள் வீட்டிலேயே மதிய உணவு முடித்து விட்டுதான் வந்தோம்.

இல்லை எனக்குப் பசிக்கலை,

எனக்குப் பசிக்கிறது அம்மா இது லேன்.ஜெனிபருக்குத் தெரியும் தனக்காகவே அப்படிச் சொல்கிறான்.என்று. அதோடு கணவனும் எதுவும் உண்டிருக்க மாட்டான் என்று, இவள் பதிலுக்குக் காத்திராமலே  ஏழு மணி நேரம் ஆகும் நாம் போய்ச் சேர என்று சொல்லிக் கொண்டே சைனீஸ் உணவகம் ஒன்றில் நிறுத்தினான் மார்க்..

ஜெனிபர் கலக்கத்தில் இருந்தாள், மார்க்கின் மனமும் அப்படிதான் இருந்தது.குழந்தைகள் ஐஸ்க்ரீம் வாங்கினர். இவர்கள் ஏதோ பேருக்கு உணவை முடித்தனர்.மீண்டும் வண்டியை எடுத்த போது ,’நான் ஓட்டுகிறேன்,

களைத்திருப்பாயே,

இல்லை எனக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். அப்படியானால் சரி.

ஜெனிபருக்குக் காரோட்டுவது பிடித்தமான ஒன்று.மனம் சரியில்லை என்றால் வண்டியை எடுத்து ஒரு சுற்று சுற்றிவிட்டு வந்தாலே சற்று இலேசாகும் மனது..விதி மீறாமல் வண்டியை பூப்போலவும், புயலாகவும் ஓட்டுவதில் கைதேர்ந்தவள். படகில் பயணிப்பது போல் இருக்கும் உடன் வருபவர்களுக்கு.

இப்போதும் அப்படிதான், நகரத்தை விட்டு வெளியில் வந்து நெடுஞ்சாலையில  வழுக்கிச் சென்றது வண்டி.’என்னால் நம்ப முடியவில்லை.’ எனக்கும் அப்படிதான் உள்ளது’ சர்ச்சுக்கு வந்த வேலை சரியாய் முடிந்ததா? முடிந்தது, நான்கு பிள்ளைகள் வரவில்லை.அவர்களுக்கு  நாளை வந்ததும் தரச் சொல்லி தந்துவிட்டு வந்துள்ளேன்.

மார்க் ஜெனிபரின் முகத்தைப் பார்த்தான்  எத்தனை மாற்றம்,   நினைவுகள் பின்னோக்கி ஓடியது,நிறம் மாறவில்லை,ஆனால் கொடி போன்ற உடல் பருத்துவிட்டது, பொன்னிறமாய் ஜொலிக்கும் கூந்தல் பாதிக்கு மேல் வெளுத்துவிட்டது, குறும்புச் சிரிப்புத் துள்ளும் நீல விழிகள், கருவளையத்தில் அடங்கி விட்டன. பாதிநிலா நெற்றியில் பூமி வாங்கிய ரேகை போல மூன்று கோடுகள், ஆனாலும் அதே குணம். மிஷிகன்தான் இருவருக்கும் சொந்த ஊர்.ஜெனிபரை முதலில் இவன் பார்த்தது நான்காம் வகுப்பு படிக்கும் போதுதான். அப்போதுதான் வனத்துறை அதிகாரியான ஜெனிபரின் தந்தை மனைவியை விபத்து ஒன்றில் பறிகொடுத்து விட்டு சொந்த ஊருக்கு மகளோடு வந்திருந்தார் .பெற்றோர் வற்புறுத்தியும் மறுமணம் செய்து கொள்ளாமல் அவர்களுடனே தங்கி விட்டார்..

 

        மார்க் படித்த அதே பள்ளியில் அவளும் அதே வகுப்பில் சேர்ந்தாள்.ஜெனிபர் படிப்பில் மட்டுமல்லாது விளையாட்டிலும் கெட்டிக்காரி. மார்க் சராசரி மாணவன்தான் ஆனால் பியானோ வாசிப்பதில் கெட்டிக்காரன். நினைவு கலைந்தது.’காபி குடிக்கலாமா மார்க்’ வழியிலிருந்த ஒரு உணவகத்தில் நிறுத்தியிருந்தாள் ஜெனிபர். குழந்தைகள் தூங்கி விட்டிருந்தார்கள். ஓ.சரி என்று இறங்கினான்.அது நவம்பர் மாதம் வெளியில் நல்ல குளிர்.கோட்டை போட்டுக் கொண்டாள் அவள்.மீண்டும் பயணம் துவக்கிய வேளை,’ஜெனி நான் ஓட்டுகிறேன்

இன்னும் மூன்று மணி நேரம்  ஆகும் நாம் போய்ச் சேர.’  ‘சரி பா’ பக்கத்து இருக்கையில் அமர்ந்தவள்  ஐந்து நிமிடத்தில் உறங்கிப் போனாள்.

 

     நெடுஞ்சாலை பளீரென விளக்கொளியில் மின்னியது, இவன் மனமோ நினைவுகளில் அமிழ்ந்தது. ஆறாம் வகுப்பிலும் ஒரே வகுப்பில் இருவரும்.அப்போதுதான் நட்பு மலர்ந்தது இருவருக்கும்.ஒருவர் மீது ஒருவர் அதிக பாசம் வைத்தனர்.மார்க்கின் வீட்டிற்கு ஜெனி வந்தால் போதும்,அவன் அம்மாவிற்கு பெண் குழந்தைகள் இல்லாததால் இவளைக் கொண்டாடுவாள். அதே போல் மார்க்கின் நிதானமான பேச்சும், நல்ல குணமும் ஜெனியின் அப்பாவிற்குப் பிடித்துப் போனது.ஜெனியின் அப்பா வனத்துறை அதிகாரி என்பதால் இவர்களையும் சில சமயங்களில் அழைத்துச் சென்று ஜீப்பில் காட்டுப் பகுதிகளைச் சுற்றிக் காட்டுவார்.

ஜெனியின் செர்ரி பழத் தோட்டத்தில் சுற்றுவதில் இவனுக்கு அலாதி இன்பம். கனிந்து உதிரும் பழங்களை எடுத்து ஒட்டியிருக்கும் மண் போக ஊதித் தின்பது ஒரு சுகம். ஏனோ தெரியவில்லை ஜெனியின் தாத்தாவிற்கு மட்டும் இவனைப் பிடிப்பதில்லை. நாட்கள் நகர்ந்தன, இருவரும் ஒரே கல்லூரியைத் தேர்ந்து எடுத்தனர். மார்க்கிற்கு கல்லூரிப் படிப்பில் அவ்வளவாக நாட்டமில்லை.இருந்தாலும் ஜெனிக்காகவே சேர்ந்தான். இப்போது இருவரும் வளர்ந்திருந்தனர்,நட்பும்  வேறு பரிமாணம் பெற்றிருந்தது.ஜெனியின் அழகும், பண்பும், அறிவும் அனைவரையும் ஈர்த்தது. கல்லூரிக் காலம் முடிந்ததும்  ஜெனி ஒரு அலுவலகத்தில் பணியேற்றாள் .மார்க் வேலை எதிலும் நாட்டம் கொள்ளவில்லை.பியானோ வாசிப்பதில் அதிக நேரம் செலவாகிறது. இவனுக்கும் சம்பாதித்து ஆக வேண்டியது எதுவும் இல்லை.நகரில் ஒரு உணவகமும்.பண்ணை நிலங்களும் அது போக குதிரைகள் ஓர் இருபதும் ,வாடகைக்கு விடப்பட்ட ஐந்து வீடுகளும் இவனின் தந்தையின் உடைமை. மார்க்கின் தமையன்களில் ஒருவர் உணவகமும், இன்னொருவர் குதிரைச் சவாரி கற்றுக் கொடுக்கும் பயிற்சியகத்தையும் பார்த்துக் கொள்கிறார். தந்தை விவசாயத்தைக் கவனிக்கிறார். 

ஜெனி காபி குடிப்போமா கேட்டுக் கொண்டே திரும்பினான். அவள் கண்களிலிலிருந்து வழிந்த கண்ணீர் கன்னங்களில்  அடையாளமிட்டிருந்தது’ஓ நீ தூங்கிட்டேனு நெனச்சேன்’,

‘இல்ல தூக்கம் வரல’

 கடவுள நம்பற இல்ல, தைரியமா இரு நல்லதே நடக்கும்.’சொல்லிக் கொண்டே ஆதரவாய் அவளைத் தோளில் சாய்த்துக் கொண்டான்.

மீண்டும் நினைவுகள் தொடர்ந்தன… ஒரு விடுமுறை நாளில் ஏரிக்கரை சென்று விட்டு கடைவீதியின் வழியாக வந்து கொண்டிருந்தபோது இரண்டு சிறுவர்கள் நான்கு வயதும் இரண்டு வயதுமாய் மூச்சுத்திணறலில் இருந்த ஆதரவற்ற பெண்ணின் அருகில் அழுது கொண்டிருந்தனர். ஆம்புலன்ஸ் வருவதற்குள் அவள் மூச்சு அடங்கி விட்டது.ஜெனி அந்தக் குழந்தைகள் காப்பகம் செல்வதை விரும்பவில்லை. மார்க்கும் சம்மதிக்க வளர்ப்பதற்கு சட்டபூர்வமாக ஏற்றுக்கொள்கின்றனர்.

சர்ச்சில் திருமணம் முடிந்தவுடன் இருவரும்,;தங்களுக்கெனக் குழந்தைகள் பெற்றுக் கொள்வதில்லை’ என்று உறுதிமொழி செய்து கொள்கின்றனர்.

மார்க்கின் தந்தை இதனால் பெருங்கோபத்திற்கு ஆளாகிறார். அனாதைகளுக்காகவா சம்பாதித்துச் சேர்த்து வைத்துள்ளேன்.ஊரும் உறவும் என்ன சொல்லும் ,

சொல்லட்டுமே, அதனால் என்ன?’

மறுநாளே மிஷிகனை விட்டு வெளியேறி. சிகாகோவில் ஒரு பெரிய மாலில் எலெக்ட்ரீஷியனாக  பொறுப்பேற்றதும், சில மாதங்களில் விபத்து ஒன்றில் பெற்றோரை இழந்த மூன்று மாதக் குழந்தையான எமிலியை வாங்கிக் கொண்டதும் இப்போதுதான் நடந்ததுபோல் உள்ளது..

இருபத்தைந்து ஆண்டுகள் ஓடிவிட்டன.டேனியல் டெக்சாஸ் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராகவும்,. மேத்யூ மருந்தகத்துறை உயர் ஆய்வாளராகவும் இருக்க எமிலி மிஷிகனில் வேளாண் துறையில் பணி புரிகிறாள்.

இன்று காலை எமிலிக்கு நேர்ந்த விபத்து பதற வைத்துவிட்டது, நல்லவேளை ஆண்டவன் கருணை காட்டிவிட்டான்.. இப்போது லேனையும்,  லைலாவையும் நல்லபடியாக வளர்த்துவிட்டால் போதும்  .. நினைவு கலையும் வேளை மருத்துவமனை வந்துவிட்டது.தூக்கம் கலைந்தெழுந்த மனவளர்ச்சி குன்றிய லேன் முதலில் இறங்கி ஜெனியோடு எமிலியைப் பார்க்க ஓடினான். லைலாவைத் தூக்கிக் கொண்டு நடந்தார் மார்க்.

 

 

 

Series Navigationபாப் கார்ன் 00.45

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *