இது போதும்..

author
0 minutes, 7 seconds Read
This entry is part 3 of 11 in the series 14 ஆகஸ்ட் 2022

 

 

 

அழகியசிங்கர்

குரு என்ற பெயரில் பாலகுமாரனின் இந்தப் பாக்கெட் நாவல் படிப்பதற்கு அற்புதமான அனுபவத்தைக் கொடுக்காமலில்லை.   இது பாலகுமாரன் தன்னைப் பற்றி எழுதிய புத்தகம்.  

இந்தப் புத்தகத்தில் முதலில் ஞானானந்தரை அறிமுகப்படுத்துகிறார் பாலகுமாரன்.  

பாலகுமாரன் என்ன சொல்கிறார்?  குருவாய் இருப்பது எளிதல்ல.  மிகப் பெரிய சோதனையெல்லாம் தாண்டி திடசித்தமாய் தன் மனதை ஒருமுகப்படுத்தி இறை மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து அவர்கள் வழி நடத்துகிறார்கள் என்று குறிப்பிடுகிறார் பாலகுமாரன்.

இன்றுவரை  நான் பாலகுமாரனின் எந்த நாவல்களையும் படித்ததில்லை. ஆனால் என் கைவசம் வைத்திருக்கிறேன்.  அதே போல் அவருடைய சிறுகதைகளைப் படித்திருக்கிறேன்.

இந்தப் புத்தகம் பாலகுமாரன் என்ற எழுத்தாளரைப் பற்றிய புத்தகம்.  பாலகுமாரனின் எழுத்துக்களைப் பற்றிய புத்தகம் அல்ல.

அதனால் எனக்கு இதைப் படிக்க அதிக ஆர்வம் ஏற்பட்டது.  

ஒரு நாள் பாலகுமாரன் எனக்கு போன் செய்தார்.  நான் ஒரு இலக்கியக் கூட்டத்திற்குப் போய்க் கொண்டிருந்தேன்.  அவர் வீட்டிற்கு வரச் சொன்னார் பாலகுமாரன்.  நான் பல முறை பொது வெளியில் பாலகுமாரனைப் பார்த்துப் பேசியிருக்கிறேன்.  ஆனால் அவர்  வீட்டிற்குப் போனதில்லை.

100வது இதழ் விருட்சம் அப்போது கொண்டு வந்திருந்தேன்.  அவர் வீட்டிற்குப் போனவுடன் என்னை வரவேற்று விருட்சம் 100வது இதழுக்காக 5000 ரூபாய் பணம் கொடுத்தார்.

ஏன் அவர் தரவேண்டும்? நான் அவர் கதைகளைப் படித்த வாசகனும் இல்லை.  ஏன் தரவேண்டும்?  100வது இதழ் விருட்சம் பார்த்து அவர் தருகிறார்.  

நான் விருட்சம் தயாரிப்பதற்காகப் பல இடங்களில் நன்கொடை கேட்டுப் பலனளிக்காமல் அலுத்துப்  போயிருந்தேன்.  தானாகவே பாலகுமாரன் கூப்பிட்டு நன்கொடை தருகிறார்.  என்னால் நம்ப முடியவில்லை.  ரூ.5000 தருகிறார்.  இது முக்கியமான விஷயம்.  நான் அவர் கதைகளைப் படித்ததில்லை.  படிக்கக் கூடாது என்பதல்ல. அவர் புத்தகங்கள் என்னிடம் இருக்கின்றன.  சிறுகதைத் தொகுப்புகள் இருக்கின்றன, பல பாக்கெட் நாவல்கள் இருக்கின்றன. 

இந்தப் பல்சுவை நாவலில் ஒரு பக்கம் முழுவதும் அவர் எழுதிய நாவல்களைûப் பற்றிய விளம்பரம்.  நூற்றுக் கணக்கில் அவர் நாவல்கள் எழுதியிருக்கிறார்.  நானும் சிலவற்றை வாங்கி வைத்திருக்கிறேன்.  எதாவது ஒரு நாவலை எடுத்து வாசிக்கத்தான் வேண்டும்.

அவரிடம் கேட்டேன். “நீங்கள் ஏன் விருட்சம் பத்திரிகைக்கு ரூ.5000 கொடுக்கிறீர்கள்?” அவர் விருட்சம் சந்தாதாரர் இல்லை.  அவருக்கு விருட்சம் அனுப்புவதுமில்லை. 

அவர் சொன்னார் : “யோகி ராம்சுரத்குமார் எனக்குக் கொடுக்கும்படி கட்டளை இட்டார்.  அவர் சொல்லி  கொடுக்கிறேன்.”

அவர் பதில் ஆச்சரியத்தைக்கொடுத்தது.  அந்த இடத்தை விட்டுக் கிளம்பும்போது, அவரிடம் ஒன்று கேட்டேன்.  ‘நீங்கள் எழுதிய புத்தகம் ஒன்றைக் கொடுக்க முடியுமா?’ என்று.

அவர் ‘இது போதும்” என்ற புத்தகத்தைக் கொடுத்தார்.  அவர் தன்னுடைய கையெழுத்திட்டுக் கொடுத்தார்.  கையெழுத்திட்டுக் கொடுக்கும்போது யோகி ராம் சுரத குமாரை ஸ்கெட்ச் செய்து கையெழுத்திட்டுக் கொடுத்தார்.

அவர் எதாவது நாவல்தான் படிக்கக் கொடுப்பார் என்று நினைத்திருந்தேன்.  அல்லது சிறுகதைத் தொகுப்பையாவது கொடுத்திருக்கலாம் என்று நினைத்தேன்.  ஆனால் அவர் கொடுத்தது ‘இது போதும்’ என்ற கட்டுரைத் தொகுப்பு. 

ஒரு சிறுகதைத் தொகுப்பையோ ஒரு நாவலோ படிக்கக் கொடுத்திருந்தால் நான் வாங்கி வைத்துக்கொண்டு உடனே படித்திருக்க மாட்டேன். ஆனால் பாலகுமாரன் கொடுத்ததோ ‘இது போதும்’ என்ற கட்டுரைத் தொகுப்பு.  உடனே இந்தப் புத்தகத்தைப் படித்து விட்டேன். இந்தப் புத்தகம் ஒரு பொக்கிஷம்.  இது கதா ஆசிரியரைப் பற்றி கதா ஆசிரியரே எழுதிய புத்தகம்.

‘பல்சுவை நாவல்’ என்ற புத்தகத்தில் ‘குரு’ என்ற தலைப்பில் பாலகுமாரன் எழுதியது அவரைப் பற்றித்தான்.  இதையும் விறுவிறுப்பாகப் படிக்க முடிந்தது.

 

“இரண்டாவது அத்தியாயத்தில் அகம்பாவம்தான் எல்லா பிரச்சினைக்கும் அடிப்படையான காரணம். அகம்பாவம்தான் மிகப்பெரிய அறியாமை என்கிறார்.

 

ஆரம்பத்தில் பாலகுமாரன் யோகி யாரைப் போய்ப் பார்க்கிறார்.  தான் ஒரு  எழுத்தாளர் என்ற ஹோதாவில்.  அவரை துரத்தி விடுகிறார் யோகியார்.   இந்தச் சம்பவத்தைச் சுவாரசியமான முறையில் விளக்குகிறார் பாலகுமாரன். அவரை விட்டு வெளியே வந்த பிறகு பாலகுமாரன் இப்படி நினைக்கிறார்.

 

‘என் மனம் மொத்தமும் அவரோடு விவாதம் செய்து என்னைப் பற்றி உயர்ந்த அபிப்பிராயம் உருவாக்குவதிலேயே இருந்தது’ என்கிறார்.

 

‘ஒரு குருவிடம் போனால்தான் என்னைத் தெரிந்துகொள்ள முடியும்’ என்கிறார் பாலகுமாரன்.

இன்னொரு இடத்தில், ‘மனம் ஒருமுகப்படவில்லையெனில், இடையறாது பதட்டம் அடையும்.  பதட்டமுள்ள மனம் ஆத்திரப்படும்.  நாசம் விளைவிக்கும்.  தானும் சந்தோஷமாயிராமல் பிறரையும் சந்தோஷமாய்  வைக்காமல் வெறும் துன்பக் கேணியாய் உழலும்’ என்கிறார்.

 

– என் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம் என் எழுத்திலும் தெரிந்தது.  என்ன எழுத வேண்டும் என்பது பற்றி நான் கருணையோடு யோசிக்கத் துவங்கினேன்.  எதை எழுதக் கூடாது என்பது பற்றிய தெளிவும், மனிதர்களின் மீது எனக்கு ஏற்பட்ட அன்பால் தீர்மானமாயின.  என் தெளிவு கூடியது.

 

– குரு தேவை என்று வேண்டுபவன் செய்ய வேண்டிய முதல் வேலை குருவைத் தேடுவதல்ல.  தனிமையில் இருப்பது.

 

– சற்குரு நாதா..கர்வம் தவறென்று எழுதத் தெரிகிறது.  ஆனால் கைக்கொள்ளத் தெரியவில்லை.  பிறருக்கு உபதேசிக்கத் தெரிகிறது . ஆனால் எனக்குப் பிடிபடவில்லை.

 

யோகி ராம் சுரத குமாருடன் அவருக்கு ஏற்பட்ட பல அனுபவங்களை அல்லது படிப்புகளை சுவைப்பட விவரித்துக் கொண்டு போகிறார்.

 

பாலகுமாரன் உணவு மீது உள்ள பற்று எப்படிப் போயிற்று என்று சொல்கிறார்.

 

மறுநாள் ‘வாங்கச் சார், சாப்பிட வாங்க’ என்று ஹோட்டல் வாசக நண்பர்கள் அழைப்பை, கடுமையாய் மறுதலித்துவிட்டு. விடியற்காலை குடித்த ஒரேயொரு காபியோடு யோகி ராம்சுரத்குமார் அவர்களின் சன்னதி தெரு இல்லம் போனேன்.  வரவேற்றார்.

 

வழக்கம் போல் அருகே, பாயில் இடம் கொடுத்து அமர்த்திக் கொண்டார். ”பாலகுமார், பாலகுமார் காலை உணவு எடுத்துக் கொண்டாயா?”

 

நான் காலை உணவை மறுத்ததற்கு இன்னொரு காரணமும் உண்டு.

 

“இன்றும் குருநாதருக்கு உணவு வரும்.  ஹோட்டல் உணவைவிட, குருநாதருக்கு பக்தர் வீட்டிலிருந்து வரும் உணவு சுவையாக இருக்கிறது.  எனவே, காலை உணவு குருநாதரோடு முடித்துக் கொள்ளலாம் என்று மனசு திட்டமிட்டது. 

 

நேத்திக்குச் சப்பாத்தியும், தயிர்ச் சாதமும், இன்றைக்குப் பூரியும் பொங்கலும் இருக்கும்.  கற்பனை செய்தது.

 

“எதுவும் சாப்பிடவில்லை பகவான்”

 

“ஒன்றுமே சாப்பிடவில்லையா?”

 

“விடிகாலை காபி மட்டும் குடித்தேன், பகவான்

 

“அதைத்தவிர வேறெதுவும் இல்லையா?”

 

“வேறெதுவும் இல்லை பகவான்.”

 

“நாம் இன்று காலை உணவை ஒதுக்கிவிடுவோம்.  இன்று நமக்கு உணவு தேவையில்லை” என்று என்னிடம் சொல்லிவிட்டு வேறு விஷயங்கள் பேசினார்.

 

கடிகாரத்தில் முள் நகர, நகர எனக்குப் பசி எடுத்தது.  பிற்பகல் ஒரு மணிக்கு யார் எது பேசினாலும், மனம் பசியையே பற்றிக் கொண்டிருந்தது.  மதியமும் என்னை வெளியே அனுப்பவில்லை.  தன்னோடே வைத்துக்கொண்டார்.  நான் அவருக்கு விசிறிக் கொண்டிருந்தேன். 

பசியின் உச்சக்கட்டத்தில் எனக்கு மிகச் சிறிய கல்கண்டு ஒன்றைக் கொடுத்தார்.  அந்தக் கல்கண்டு சுவையை வயிறு முழுவதும் உணர்ந்தேன்.

 

இந்த அனுபவத்திற்குப் பிறகு உணவின் மீதுள்ள முக்கியத்துவம் எனக்கு அழிந்தது.  பொன்னிறமான, முறுகலான தோசை என்னை ஏமாற்றுவதில்லை.  அளவு தாண்டி உண்பதே இல்லை.  ஆசைப்பட்டுக் கேட்பதேயில்லை. உயிர் வாழவே உணவு என்பது புரிந்து போயிற்று.

 

– குருவை உணர சரணடைவதுதான் முக்கியம். சரணடைதல் அறிவோடு சம்பந்தப்பட்ட விஷயமல்ல .  அது பூர்வ ஜென்ம வாசனையோடு சம்பந்தப்பட்ட விஷயம்.

 

இப்படியே போய்க் கொண்டிருக்கிறது இந்தப் புத்தம்.  படிக்கப் படிக்க ஆனந்தம்.  இன்னும் சில முறை இந்தப் புத்தகத்தைப் படித்துக்கொண்டே இருக்கலாம். 

 

ஏன் பாலகுமாரன் எனக்குக் கட்டுரைப் புத்தகம் படிக்கக் கொடுத்தார்.?

 

இனிமேல்தான் அவருடைய நாவல்களைப் படிக்க வேண்டும். 

——-

 

 

Series Navigationஅகம் புறம்தேன் குடித்த சொற்கள் ! 
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *