பிரியாவிடை (Adieu)

This entry is part 8 of 11 in the series 21 ஆகஸ்ட் 2022

      

  • கி மாப்பசான்

  • தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா

 

நண்பர்கள் இருவரும் இரவு உணவை முடித்துக் கொண்டிருந்தனர். உணவகச் சன்னலில் இருந்து  பார்க்க வெளியே பெருஞ்சாலையில் கூட்டம் கூட்டமாக மனிதர்கள். கோடை இரவுகளில் பாரீசில் வீசும் இதமான காற்று உடலைத் தொட்டது. பாதசாரிகள் தலைகளை உயர்த்தி நடப்பதற்குரிய காரணம் விளங்க, உணவகத்திலிருந்து வெளியேறவேண்டும் என்கிற உந்துதல். அங்கே செல்லவேண்டும், காற்றுதரும் கனவுகளில் ஏதேதோ வருகின்றன : தழையத் தழைய இலைகளுடன் நிற்கும் மரங்கள்,  நிலவொளியில் ஜொலிக்கிற நதிகள், மின்மினிப் பூச்சிகள், வானம்பாடிகள், இவற்றிறில் எதைத் தேர்ந்தெடுப்பது, எங்கே செல்வது என்பதில் நண்பர்கள் இருவருக்கும் குழப்பம்.  

அவர்களில் ஒருவரான ஹாரி சிமோன் ஆழ்ந்த பெருமூச்சுடன் கூறினார்:

–  ம்,  எனக்கு வயதாகிவிட்டது, தற்போது அதுபற்றிய கவலைதான். முன்பெல்லாம், இதுபோன்ற மாலைவேளைகளில்,  துர்த்தேவதை இறங்கினதுபோல எனதுடல் இருக்கும். தற்போது மனதில் விசனத்தைத் தவிர வேறொன்றுமில்லை. வாழ்க்கை வேகமாக ஓடுகிறது.

மனிதருக்குக் கனத்த உடல், நாற்பத்தைந்து வயது இருக்கலாம், தவிர வழுக்கையும் அதிகம்.

மற்றவர், பியர் கர்னியெ, கொஞ்சம் கூடுதலான வயது, நன்கு மெலிந்திருந்தார், அதேவேளை உற்சாகமான ஆசாமி.  நண்பர் சொல்லி முடிக்கட்டுமெனக் காத்திருந்தவர்போல இவர் தொடர்ந்தார்:

” அன்பிற்குரிய சினேகிதரே, எனக்கும் வயதாகிவிட்டது,  அதைச் சிறிதும் உணராமலேயே நானும் இருந்திருக்கிறேன்.  மகிழ்ச்சி, திடகாத்திரமான உடல், சுறுசுறுப்பென்று பலவும் என்னிடம் இருந்தன. இருந்தும் கண்ணாடிமுன் நிற்கிற ஒவ்வொரு நாளும்    ​​வயது தனது கடமையை நிறைவேற்றுவது கண்களுக்குப் புலப்படுவதில்லை, காரணம்  அப்பணியை மெதுவாகவும், அதற்கான நியதிகளின் அடிப்படையிலும் நிறைவேற்றுகிறது. மாற்றங்களை உணரமுடியாத வகையில் மெல்ல மெல்ல நம் முகத்தை அது திருத்தி எழுதுகிறது.

இந்த ஒரு காரணத்திற்காகவே வயதின் இரண்டு அல்லது மூன்றாண்டுகால கபளீகரத்திற்குப் பிறகு  நாம் அதிகம் மனம் உடைந்துபோவதில்லை. அதேவேளை  இம்மாற்றங்களை நாம் கொண்டாடவும் இயலாது. குறைந்தது ஆறு மாதங்கள் கண்ணாடி முன் நின்று முகத்தைப் பார்க்காமலிருக்க நமக்குப் பொறுமை வேண்டும், அப்போதுதான்  இப்பிரச்சினையின் உண்மை தெரியவரும்.  அன்று,  தலையில் இடி விழுந்திருக்கும்!

சரி பெண்கள் நிலமை என்ன, அருமை நண்பா!, அதை  எப்படிச்சொல்ல?, மிகவும் பரிதாபத்திற்குரிய ஜீவன்கள் அவர்கள்! அவர்களுடைய  ஒட்டுமொத்த மகிழ்ச்சியும்,  பலமும், உயிர்வாழ்க்கையும் எதில் அடங்கியுள்ளது  தெரியுமா? சுமார் பத்துவருடகாலம் மட்டுமே நிலைத்திருக்கிற அவர்களுடைய அழகில்.

என் விஷயத்திற்கு வருகிறேன்,  நானும், எப்படியென்று சந்தேகிக்காமலேயே முதுமையை அடைந்துவிட்டேன், இன்னமும் நானொரு பதின் வயது இளைஞன் என்று எண்ணிக்கொண்டிருக்க, ஐம்பதுவயதை நெருங்கியிருந்தேன். குறைபாடுகள் ஏதுமின்றி வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் சென்றது. முதுமையின் வருகை கவனத்தைபெற்றதில்லை, இருந்தபோதிலும் அது கொடுமையானது, உண்மையைப் புரிந்துகொண்டபோது கிட்டத்தட்ட ஆறுமாதங்கள்  அந்த அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாமல் கிடந்து, பிறகு அதன் வழியில் செல்வதென முடிவெடுத்தேன்.

எல்லா ஆண்களையும் போலவே நானும் அடிக்கடி காதல் வயப்பட்டிருக்கிறேன், அவற்றில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒன்று உண்டு.

சுமார் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, யுத்தம் முடிந்து சிறிதுகாலமிருக்கும், ஏத்ருத்தா(Etretat) கடலோரம்   அவளைச் சந்தித்தேன்.  காலைவேளையிலும், கடல் நீராடுகிறபோதும் அக்கடற்கரையின் அழகே தனி. குதிரை இலாடம்போல வளைந்து, செங்குத்தான வெண்ணிற பாறைகளால் சூழ்ந்திருக்கும். ஆங்காங்கே புதுமையான வகையில் வெடிப்பில் உருவான சிறு சிறு பிளவுகள். அவற்றுக்குக் ‘கதவுகள்’  என்று பெயடரிட்டிருக்கிறார்கள்.  செங்குத்தான பாறைகளில் ஒன்று மிகப்பெரியது, கடல் நீருக்குள், ஒரு பக்கம் தன்னுடைய பிரம்மாண்டமான காலை நீட்டிக் கிடத்தியதுபோலவும்,எதிர்பக்கம் மற்றொரு காலை, குத்துக்காலிட்டு அமர்ந்திருப்பது போலவும் தோற்றம் தரும் ; கடற்கரையெங்கும் பெண்கள் திரண்டிருப்பார்கள், சிறு நாக்குகள்போல பரவிக்கிடக்கும் கூழாங்கற்கள் நிறைந்த கடற்கரையில், பாறைகளுக்கிடையில் பெண்கள் குவிந்திருக்கும் காட்சி ஜொலிக்கும் வெள்ளாடைகளால் ஆன தோட்டமோ எனும் வியப்பைத் தரும். போதாதற்கு கடற்கரையும், பச்சை நீல வண்ணங்கள் கலவையிலான   கடல் நீரும், நிழலுக்கென விரித்திருந்த விதவிதமான குடைகளில் முழுவீரியத்துடன் காய்கிற சூரியனும் கண்களுக்கு விருந்தென்பதோடு, அக்காட்சி பரவசத்தையும் புன்னகையையும் நமக்கு அளிப்பவை.  கடல் நீருக்கு எதிரே  அமரலாமென்று செல்கிறோம். நீராடும் பெண்களைப் பார்க்கிறோம்.  சிலர் நீரை நோக்கிச் செல்கிறார்கள், பெரிய அலைகளைத் தவிர்த்துவிட்டு சிற்றலைகளின் நுரை விளிம்பை நெருங்குகையில், தங்கள் உடலைச் சுற்றியிருந்த மெல்லிய பருத்தித் துவாலையை  ஒயிலாக அவிழ்த்து எறிகிறார்கள். நீருக்குள் அடியெடுத்துவைப்பதில் பதற்றம் தெரிகிறது, தவிர நீரின் குளிர்ச்சி தரும்  சுகமான சிலிர்ப்பும், கணநேர சுவாச நெருக்கடியும் சிற்சில சமயங்களில் அவர்கள் தயக்கத்திற்கு காரணமாகின்றன.

கடல் நீராடலின் இச்சோதனையில், வீழ்பவர்களே அதிகம்.  கெண்டைக்கால் தசைப்பகுதியிலிருந்து மார்புவரை அதனை அவதானித்து தீர்மானிக்க முடியும். என்னதான்  மென்மையான  சரீரங்களுக்கு கடல் நீர் ஒரு சக்திவாய்ந்த பாதுகாப்ப்பென்கிற போதும் நீராட விரும்பாமல் கரைக்குத் திரும்புவதென்பது ஒரு சிலரின் பலவீனத்தையே காட்டுகிறது.  அந்த இளம் பெண்ணைக் முதன்முறையாகப் பார்த்தகணத்திலேயே  மனதில் பரவசம், ஒருவித மயக்கம். கடல் நீரின் சோதனைக்கு அவள் தாக்குப் பிடித்தாள், உறுதியாக நின்றாள். தவிர சிலரின் தோற்றங்களுக்கென்று ஒருவித வசீகரம் உள்ளது, அது கணத்தில் நமக்குள் நுழைந்து, எங்கும் பரவி நிரம்பும். நாம் எந்தப்பெண்ணைக் காதலிக்கப் பிறந்தோமோ அவளே நமக்கு அறிமுகமாகிறாள் என்பதென் கருத்து. இவ் உணர்வு தோன்றிய மறுகணம் உடலில் ஒரு சிலிர்ப்பு.

என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். முதன் முறையாக பெண்ணொருத்தியின் பிடிமானத்தில்சிக்குண்டது அப்போதுதான். எனது இதயத்தை  சூறையாடியிருந்தாள் கபளீகரம் செய்திருந்தாள்.  இப்படி ஒரு பெண்ணின் ஆதிக்கத்திற்கு அடிபணியும் அனுபவம் என்னை பயமுறுத்தியது என்கிறபோதும் அது இனிமையானது. கிட்டத்தட்ட ஒரு வகையில் சித்திரவதை,  அதே நேரத்தில், நம்பமுடியாத வகையில் மகிழ்ச்சி. அவள் பார்வை, புன்னகை, காற்றில் எழுந்தடங்கும் அவள் புறங்கழுத்து தலைமயிர், முகத்தில் காண்கிற மெல்லிய கோடுகள், முகக்கூறின் எந்த ஒரு சிறிய மெலிதான  அசைவும் என்னை மகிழ்வித்தன, புரட்டிப்போட்டன, பைத்தியமாக்கின. அவளுடைய தனித்தன்மையும், முகபாவமும், சமிக்கையும், செயல்பாடுகளும் என்னை ஆட்கொண்டிருந்தன, ஏன் உடைகளும், அணிகலன்களுங்கூட  என்னை வசியம் செய்திருந்தன. மரத்தளவாடத்தின் மீது கிடந்த அவளுடைய முகத்திரையையும், ஒரு நாற்காலியில் வீசப்பட்டிருந்த அவள் கையுறைகளையும்கண்டு  என் மனம் சலனப்பட்டிருக்கிறது. அவளுடையை ஆடைகளைப்போல  உடுத்தவேண்டுமென  எந்தப் பெண்ணாவது முயற்சித்தால்  அவளுக்குத் தோல்வி நிச்சயம் என நான் நினைப்பேன்.  விதவிதமான தொப்பிகள் அவளிடமிருந்தன, அவற்றைப் பிறபெண்களிடம் கண்டதில்லை.

அவள் திருமணமானவள், கணவன் வார இறுதியில் மட்டும் வீட்டிற்கு வருவான், என்னைக்கண்டும் காணாமலிருந்தான். எனக்கு அம்மனிதனிடத்தில் பொறாமையில்லை, அதற்கான பதிலும் என்னிடத்தில் இல்லை. மிக் கேவலமான ஓரு பிறவி,  சிறிதளவும் பொருட்படுத்தவேண்டிய மனிதனே அல்ல. அப்படியொரு மனிதனை என் வாழ்நாளில் அதற்கு முன் சந்தித்த தில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

அவளைத்தான் நான் எப்படி நேசித்தேன்! அவள்தான் எவ்வளவு அழகு, எத்தனை நேர்த்தி, இளமை! அதாவது அவளே இளமையும், வனப்பும், புத்துணர்ச்சியுமாக இருந்தாள். பெண்ணென்றாலே அழகானவள், மென்மையானவள், தனித்தவள், வசீகரமும் கருணையும் ஒரு சேர உருப்பெற்றவள் என்றுணர்த்தியதும் அவள்தான், முன்னெப்போதும் அப்படியொரு எண்ணம் உதித்ததில்லை. தவிர கன்னங்களின் வளைவிலும், உதட்டின் அசைவிலும்,  சிறிய காதுகளின் வட்டமான மடிப்புகளிலும், மூக்கெஎன்று நாம் அழைக்கும்  இந்த கவர்ச்சியற்ற உறுப்பின் வடிவத்திலும்  என்னை மயக்கும் அழகு இருக்கிறதென்று ஒருபோதும் நான்புரிந்து கொண்டதில்லை.

இது மூன்று மாதங்கள் நீடித்தது, பின்னர் நான் அமெரிக்காவிற்கு புறப்பட்டேன், என் இதயமோ விரக்தி காரணமாக  நொறுங்கிப்போனது. இருந்தபோதும், அவளைப்பற்றிய நினைவுகள் உறுதியாகவும், வெற்றிக்களிப்புடனும் என்னுள் இருந்தன, அருகில் இருக்கையில் என்னை தன் வசம் எப்படி வைத்திருந்தாளோ அதுபோலவே நான் வெகு தூரத்திலிருந்தபோதும் என்னை  தன்வசம் வைத்திருந்தாள். வருடங்கள் கடந்தன.  அவளை மறந்தவனில்லை. அவளுடைய வசீகரமான உருவம் என் கண்ணெதிரிலும், இதயத்திலும் குடிகொண்டிருந்தது. என்னுடைய காதல் உண்மையாக இருந்தது, ஒருவகையில்  ஆரவாரமற்ற அன்பு. இன்றைக்கு அது   நான் சந்தித்த மிக நேர்த்தியானதும் கவர்ச்சியும் மிக்க  ஒன்றின் நினைவுப்பொருள்.

ஒரு மனிதனின் வாழ்க்கையில் பன்னிரெண்டு வருடங்கள் என்பது  மிகவும் சொற்பம்! எப்படி போனதென்றே நமக்குத் தெரியாது! ஒன்றன் பின் ஒன்றாகச் வருடங்கள் உருண்டோடுகின்றன, அமைதியாகவும் வேகமாகவும், மெதுவாகவும், அவசரமாகவும், ஒவ்வொன்றும் நீண்டதென்கிறபோதும், கணத்தில் முடிந்துவிடும்!   வருடங்களின் எண்ணிக்கை வெகுசீக்கிரத்தில்  அதிகரித்துவிடும், அவை விட்டுச் செல்லும் தடயங்களும் மிகவும் சொற்பம். காலம் கடந்துவந்த பாதையைத் திரும்பிப் பார்க்க, அங்கே ஒன்றுமிருக்காது, அவை முற்றாகத் தொலைந்திருக்கும், நமக்கு முதுமையை வருடங்கள் எப்படித் தந்தன என்பதையே  புரிந்துகொள்ள முடியாது.

கூழாங்கற்கள் நிறைந்த ஏத்ருதா(Étretatetat)கடற்கரையில் கழித்த அந்த அழகான காலத்தை விட்டு விலகி சில மாதங்களே ஆகியிருந்தனபோல எனக்குத் தோன்றியது.

கடந்த வசந்த காலத்தில் நண்பர்களுடன் விருந்துண்ண  மெய்சோன்-லாஃபித்(Maisons-Laffitte)வரை செல்லவேண்டியிருந்தது.

இரயில் புறப்படவிருந்த நேரத்தில், கனத்த சரீரம்கொண்ட  பெண்மணி,  நான்கு சிறுமிகளுடன் எனது பெட்டியில்  ஏறினார். ஓரிரு நொடிகள் கவனம் அவரிடம் சென்றது: நல்ல அகலம், கையெது காலெது என்று சொல்லமுடியாத அளவிற்கு பருமன், முழு நிலவை யொத்த பெரிய  முகத்திற்குப் பொருத்தமாக ரிப்பன் கட்டியத் தொப்பி, தலையில். வேகமாக நடந்துவந்திருக்கவேண்டும் மூச்சிரைத்தது, குழந்தைகள் சளசளவென்று பேச ஆரம்பித்தனர். நான் தினசரியைப் பிரித்து வாசிக்கத் தொடங்கினேன்.

எங்கள் இரயில் அனியேர்(Asnières) நிலையத்தைக் கடந்திருக்கும், என் பக்கத்து இருக்கைப் பெண்மணி   திடீரென்று என்னிடம் :

–மன்னிக்கவும், நீங்கள் மிஸியெ கர்னியெ தானே? எனக்கேட்டாள்.

–  ஆமாங்க…நீங்க?

என்று நான் இழுக்க கலகலவென சிரிக்க ஆரம்பித்தாள். அது துணிச்சலான பெண்களுக்கே உரிய சிரிப்பு என்கிறபோதும், சிறிது வருத்தம் தோய்ந்திருந்தது. 

– உங்களுக்கு என்னைத் தெரியவில்லை?

அந்த முகத்தை நான் எங்கோ பார்த்திருக்கிறேன் என்பது உண்மை, ஆனால் எங்கே ? எப்போது ? என்கிற கேள்விகள் இருந்ததால் பதிலளிக்கத் தயங்கினேன்.

— ம்… என்ன சொல்ல … உங்களை அறிந்திருக்கிறேன் என்பது  நிச்சயம், ஆனால் பெயரை நினைவு கூர இயலவில்லை.

பெண்மணியின் முகம் வெட்கத்தால் சிறிது சிவந்தது.

–  நான் மதாம் ழூலி  லெஃபேவ்ரு.

முகத்தில் அறைந்ததுபோல இருந்தது, இதற்கு முன்பு அப்படியொரு அனுபவமில்லை. ஒரு நொடியில் எனக்கு எல்லாம் முடிந்துவிட்டதென தோன்றியது. என் கண்களுக்கு முன்பாக முகத்திரையொன்று கிழிந்தது போலவும் கொடுமையான, மனதுக்கு ஒவ்வாத செய்திகளை   அறியப்போவதாகவும் உணர்ந்தேன்.

அவளா இவள்! பருமனான இந்தச் சராசரி பெண்மணி, அவளா? நான் கடைசியாக பார்த்தபிறகு இந்த நான்கு  பெண்களைப் பெற்றிருக்கிறாள். இந்த நான்கு சிறு ஜீவன்கள்  தங்கள் தாயைப் போலவே என்னை அன்று ஆச்சரியப்படுத்தின. அவர்கள் அவள் வயிற்றில் பிறந்தவர்கள்; நன்கு வளர்ந்தும் இருந்தார்கள், வாழ்க்கையில் அவர்களுக்கென்று விதிக்கபட்ட இடத்தையும் பிடித்தாயிற்று. மாறாக எழிலும், நேர்த்தியும், பகட்டுமாக இருந்த அற்புதப் பெண்மணியின் கதை முடிந்திருந்தது, நேற்றுதான் முதன்முறையாக அவளைச் சந்தித்தது போல் இருக்கிறது, இதற்குள் இப்படியொருமாற்றம்.  இது சாத்தியமா? கடுமையான வலியொன்றை இதயத்தில் உணர்ந்தேன், அவ்வலியை   கொடூரமானதொரு படைப்பை, இழிவானதொரு அழிவைக் கண்முன்னே நிறுத்திய இயற்கைக்கு எதிரானதொரு கிளர்ச்சி அல்லது பகுத்தறியப்போதாத ஒரு கோபம் எனவும் எடுத்துக்கொள்ளலாம்.

அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தேன். அவளுடைய கைகளைப் பற்றினேன்.  என் கண்களில்  நீர்கோர்த்தது. அவளுடைய இளமைக்காகவும், அதன் மரணத்திற்காவும்  அழுதேன், காரணம் என்னைப் பொறுத்தவரை கனத்த சரீரத்திற்குரிய பெண்ணை நான் அறிந்தவனில்லை.

அவளிடமும் சலனம் தெரிந்தது,  தடுமாற்றத்துடன் வார்த்தைகள் வெளிப்பட்டன:

“நான் நிறைய மாறிஇருக்கிறேன், இல்லையா? என்ன செய்வது, நமக்காக எதுவும் காத்திருப்பதில்லை. நீங்கள்தான் பார்க்கிறீர்களே, இன்று நானொரு தாய், அதாவது தாய்மட்டுமே ;  ஆம் நல்ல தாயாக இருக்கிறேன், பிறவற்றுக்கெல்லாம் பிரியாவிடை கொடுத்தாயிற்று,  எல்லாம்  முடிந்தது.  உண்மையில் நாம் மறுபடியும் சந்திக்க நேர்ந்தால் நீங்கள் என்னை அடையாளம் காண்பது கடினம் என்றுதான்  நினைத்திருந்தேன். நீங்கள் மட்டும் என்ன, அன்றிருந்தது போலவா இருக்கிறீர்கள், நிறைய மாற்றம் ;  தவறுதலாக எதையும் சொல்லிவிடக்கூடாது என உறுதிபடுத்திக்கொண்டு உங்களிடம் பேச எனக்கும் சிறிது நேரம் பிடித்தது. தலை, முகம் அனைத்திலும் நரை தெரிகிறது . யோசித்துப்பாருங்கள், பன்னிரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன! பன்னிரண்டு ஆண்டுகள்! என் மூத்த மகளுக்கு தற்போது பத்து வயது.

அவள் மகளைப் பார்த்தேன். தாயின் முந்தைய  அழகை சிறுமியிடம் கண்டேன், இருந்தும் அவ்வுருவில்   முழுமையில்லை, சில முடிவு செய்யப்படாமலும், அடுத்து நிகழலாம் என்பதுபோலவும் எனக்குத் தோன்றியது. வாழ்க்கையை அன்று வேகமாகக் கடந்து செல்லும் இரயிலாகத்தான் கண்டேன்.

மெய்சோன் லாஃபித் நிலையத்தில் இரயில் நின்றது. என்னுடைய அந்த நாள் தோழியின் கையில் மெல்ல முத்தமிட்டேன். மனம் உடைந்திருந்ததால்,  அசட்டுத்தனமான சில உளறல்கள் அன்றி பெண்மணியிடம் சொல்லிக் கொள்ள  அன்று என்னிடம் வார்த்தைகளில்லை.  

மாலை, தனித்து என் வீட்டில், கண்ணாடி முன் நின்றவன் அகலவேயில்லை, நீண்டநேரமாக என்னை நானே பார்த்துக்கொண்டிருந்தேன். இறுதியில் இளமை பூரித்த எனது உடலும் முகமும்,  பழுப்பு மீசையும், கருத்த தலை முடியும்  மனதில் நிழலாடின.  தற்போது நான் முதியவன், அனைத்திடமிருந்தும் விடைபெற்றாயிற்று.

—————————————————-

Series Navigationகுறளின் குரலாக சிவகுமார்அணுப்பிணைவு முறை மின்சக்தி உற்பத்திக்கு கட்டுப்பாட்டுத் தூண்டியக்கம் முதன்முதல் கண்டுபிடிப்பு.
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Comments

  1. Avatar
    Jananesan says:

    எல்லாவற்றுக்கும் பிரியாவிடை கொடுத்தாயிற்று ; நான் தற்போது எனது பிள்ளைகளுக்கு தாய் மட்டுமே என்று அவளும்,எனது இளமையும் விடைபெற்றுவிட்டது என்றும் அவனும் சொல்வதும் பொருள் பொதிந்த மாப்பசான் தொடுகை.!வாழ்த்துகள் திரு.நாகரத்தினம் கிருஷ்ணா அவர்களே.

Leave a Reply to Jananesan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *