அசோகமித்திரனும் நானும்…

author
0 minutes, 5 seconds Read
This entry is part 1 of 11 in the series 21 ஆகஸ்ட் 2022

 

 

அழகியசிங்கர்

 

 

நான் சமீபத்தில் எழுதிக் கொண்டுவந்த புத்தகம் ‘அசோகமித்திரனும் நானும்’ என்ற புத்தகம்.  

 

அசோகமித்திரன் இறந்தபோது பல பத்திரிகைகள் அசோகமித்திரனைப் பற்றி எழுதும்படி என்னைக்  கேட்டுக்கொண்டன.  பல பத்திரிகைகளுக்கு அவர் நினைவுகளைக் கட்டுரைகளாக எழுதிப் பகிர்ந்து கொண்டேன்.

 

அப்போது ஒரு புத்தகம் அசோகமித்திரன் பற்றிக்  கொண்டு வந்தால் என்ன என்று தோன்றியது.  அவர் பற்றிய நினைவுகளுடன், அவருடைய படைப்புகளையும் பற்றியும்  எழுதிப் புத்தகமாகத் தயாரித்தேன்.

 

இப்புத்தகம்  குறித்து ஒரு சூம் கூட்டம் சேலத்தைச் சேர்ந்த இலக்கிய அமைப்பு சனிக்கிழமை (20.08.2022) நடத்தியது.  ஒரு பேட்டி மாதிரி அந்த  நிகழ்ச்சி.

 

ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்லும்போதும் ஒரு கேள்விக்குப் பதிலை எவ்வளவு நேரத்தில் சொல்வது என்று தடுமாற்றம் ஏற்பட்டது.

 

‘பிரமிளும் விசிறி சாமியாரும்’ என்ற புத்தகத்திற்குப் பிறகு ‘இந்திய இலக்கியச் சிற்பிகள்’ என்ற தலைப்பின் கீழ் ஞானக்கூத்தன் புத்தகத்தைக் கொண்டு வந்தேன்.அதை எழுத ஒரு வருடம் ஆகிவிட்டது.  “

 

அதன் பின் அசோகமித்திரன்.  நான் அவர் நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் அவர் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள்  என்று எல்லாவற்றையும் பற்றியும் எழுதியிருக்கிறேன் .

மானஸரோவர் என்ற நாவல் மட்டும் நான் ஒவ்வொரு முறை படித்துப் படித்து மறந்து போய்க் கொண்டிருந்தது.  மூன்றாவது முறை படித்தபோதுதான் இதை எப்படியாவது எழுதுவது என்று நாவலைப் பற்றி எழுதினேன்.

 

“அது மாதிரி ஒவ்வொரு நாவலைப் பற்றியும் எழுதினேன்.  அதேபோல் அவருடைய சிறுகதைகள்.

கேள்வி கேட்டவர் அசோகமித்திரனின் முக்கிய சிறுகதைகளைப் பற்றிச் சொல்லுங்கள் என்றவுடன் நான் தடுமாறிவிட்டேன். ரிக்ஷா  என்ற கதையைப் பற்றிச் சொன்னேன். ‘ விமோசனம்’  என்ற கதையைப் பற்றிச் சொல்லும்போது, விமோசனம் என்ற பெயர் சொல்ல  மறந்து போய்விட்டது.  ஒரு வழியாகச் சமாளித்தேன்.

 

ஒரு கூட்டத்தில் கலந்துகொள்ளும்போது எப்போதும்  நாம் எழுதித்தான் வாசிக்கவேண்டும்.  ஞாபகத்திலிருந்து சொல்வது ஆபத்தானது.  அதுவும் என்னைப் போன்றவர்களுக்கு ஞாபகம் மறதி அதிகம்.

 

இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பு என் புத்தகத்தை ஒருமுறை முழுவதும் படித்து விட்டேன்.  நான் அசோகமித்திரன் கதைகளைப் படித்து எழுதியது எல்லாம் ஞாபகத்திற்கு வந்து விட்டது.நான் சிறப்பாகவே இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறேன்.

 

அவர் நாவல்களைப் படித்தது ஞாபகத்திற்கு வந்தது. ஆனாலும் நான் எழுதியதைத் திருப்பிக்கூடச் சரியாகச் சொல்ல முடியவில்லையே என்று எனக்குத் தோன்றியது. உதாரணமாக ரிக்ஷா என்ற சிறுகதையைப் பற்றி  இன்னொரு எழுத்தாளர் எழுதுகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள்.  அதில் ஒரு வரியை யாரும் யோசித்திருக்க மாட்டார்கள்.  ‘உலகம் க்ஷண காலம் அசைவற்று இருந்தது’ என்ற வரிதான் அது.

 

பேசும்போது இதை எனக்குச் சொல்ல வரவில்லை.

எத்தனையோ முறை அவரைப் பார்க்கப் போயிருக்கிறேன். ஒவ்வொரு முறை போகும்போதும் அவருடன் உரையாடுவது எனக்குப் பிடிக்கும். அதையெல்லாம் புத்தகத்தில் எழுதியிருந்தாலும் திறமையாக எடுத்துச் சொல்ல வரவில்லை.

காந்தி கதையைப் பற்றிச் சொன்னேன்.  அக் கதையை மூன்று விதமாக அலசி புத்தகத்தில் எழுதியிருப்பேன்.  இதை எடுத்துக் கொண்டு பேசினாலே ரொம்ப நேரம் பேசியிருக்க முடியும். அவ்வளவு எழுதியிருப்பேன்.

 

அசோகமித்திரனின் காந்தி கதை அவருடைய மற்ற எல்லாக் கதைகளையும்  விட வித்தியாசமான கதை என்று எனக்குத் தோன்றுகிறது.  ஒருவர் இக் கதையைப் படிக்கும்போது ஒருவருக்கு இயல்பாகத் தோன்றக் கூடியது, இக் கதை காந்தியைப் பற்றிய கதையா அல்லது இரு நண்பர்களைப் பற்றிய கதையா அல்லது ஒரு ஓட்டலில் சர்க்கரைப் போடாத காப்பியைக் குடிக்காமல் வைத்துக்கொண்டிருக்கும் ஒருவரின் கதையா என்ற சந்தேகம் எழாமல் இருக்காது. 

இக் கதையை இப்படி மூன்று விதமாக யோசிக்கலாம்.  ஒருவர் ஒரு காபி சாப்பிட ஒரு  அசைவ ஹோட்டலுக்கு வருகிறார்.  காபி ஒன்றை ஆர்டர் செய்கிறார்.  அந்தக் காபியில் சர்க்கரை வேண்டாம் என்கிறார்.  பின் அதைக் குடிக்காமல் வைத்துக்கொண்டிருக்கிறார்…..

 

இப்படி சொல்லிக்கொண்டு போக வேண்டிய கதையை சொல்லத் தெரியாமல் முழித்தேன்.  

 

கடைசியில் காந்தி கதையைப் பற்றிய கட்டுரையை முடிக்கும் போது இப்படி அலசியிருக்கிறேன்.

 

அதனால் இக் கதையில் காந்தி மூன்று விதத்தில் சேர்க்கப் படுகிறார். 

மிலிடரி ஹோட்டல் – காபி – காந்தி

காபிப் கோப்பை – ஈ – காந்தி

நண்பர் – உயர்ந்த கருத்து – காந்தி

நண்பர் – எதிர்க் கருத்து – காந்தி

நண்பர் 1 – நண்பர் 2 – காந்தி ஒரு காரணம்.  நண்பரைப் பற்றி தூஷணை செய்ய.

 

என் கேள்வி? இதெல்லாம் ஏன் சிறப்பாகப் பேசத் தெரியவில்லை. 

நான் பொதுவாக அசோகமித்திரனைப் பார்க்கப் போகும்போது மிளகாய் பஜ்ஜி வாங்கிக்கொண்டு செல்வேன்.  இதை நான் அடிக்கடி எல்லா இடங்களிலும் சொல்லி  சொல்லி  நான் கிண்டலுக்கு ஆளாகியிருக்கிறேன். 

ஆனாலும் இங்கேயும் சொல்லத் தவறவில்லை.  ஒரு கட்டத்தில் அவர் மிளகாய் பஜ்ஜியைக் கண்டு பிடித்தவனுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என்பார்.  நான் அதைக் கேட்டுச் சிரிப்பேன்.  ஆனால் ஏன் அவ்வாறு சொல்கிறார் என்று எனக்குத் தோன்றாது.

ஆனால் இங்கே பேசும்போது ஒரு விஷயத்தைக் கண்டுபிடித்தேன்.

அசோகமித்திரனுக்குப் பரிசு பெறுவதில் நம்பிக்கை இல்லை.  இதை ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.

நோபல் பரிசுப் பெறுவதைப் பற்றி ஒரு முறை பற்றிப் பேசும்போது அந்த நாளில் இத்தாலிய எழுத்தாளர் ஆல்பர்ட்டோ மொராவியா பிரபலமாக இருந்தார்.  அவருடைய நாவல்களுக்கு மிகச் சிறப்பான ஆங்கில மொழி பெயர்ப்புகள் வெளிவந்து கொண்டிருந்தன.  அவருடைய பெயர் திரும்பத் திரும்ப நோபல் பரிசுப் பரிசீலனையிலிருந்தது.  ஆனால் அந்தக் குழுவிலிருந்த ஒருவர் மொராவியா மனித ஒழுக்கத்தைக் குலைக்கும் எழுத்தாளர் என்று சொல்லிக் கடுமையாக எதிர்த்து வந்தார். இலக்கியவாதிகள் மத்தியில் பிரபலமாக இருந்த மொராவியாவை இன்று படிப்பவர்கள் இருப்பார்களா என்பது சந்தேகம்.  ஆனால் ஜானகி ராமனுக்கு மொராவியாவைப் பிடிக்கவில்லை.       

இதையெல்லாம் ஏன் பேசாமல் போனோமே என்று தோன்றுகிறது. இப்படியெல்லாம் அசோகமித்திரனும் நானும் புத்தகத்தில் எழுதியிருக்கிறேன்.

ஆனால் சிறப்பாக இதையெல்லாம் சொல்ஙூ பேசியிருக்கலாம். ஏனோ தெரியவில்லை.

அதேபோல் நாவல்களைப் பற்றிப் பேசியபோது, இன்னும் சிறப்பாக நான் எழுதியதைப் பேசியிருக்கலாம்.  ஆனால் தவற விட்டதாகவே எனக்குத் தோன்றுகிறது.

கவிதையைப் பற்றி கேள்வி கேட்டபோது, அசோகமித்திரனுக்கு கவிதையைப் பற்றி பேசப் பிடிக்காது.  என்னவோ அவரைப் பார்க்கும்போது கவிதையைப் பற்றிப் பேச வேண்டாமென்று தோன்றும் என்று கூறினேன்.

கட்டுரையைப் பற்றிப் பேசும்போது முக்கியமாக இறந்துபோன படைப்பாளிகளைப் பற்றி அசோகமித்திரன் விருட்சத்திற்கு எழுதித் தருவார்.  அப்படி கனகச்சிதமாக பத்திரிகைக்கு என்ன தேவையோ அதை எழுதித்தருவார் என்று கூறினேன்.

வெங்கட் சாமிநாதனுக்கும் அவருக்கும் ஏற்பட்ட முரண்பாட்டைப் பற்றியும் இன்னும் எழுத வேண்டும் என்று இந்தப் பேட்டி முடிவில் தோன்றியது. 

அசோகமித்திரனும் நானும் என்ற இரண்டாவது தொகுதியும் எழுதலாமென்று தோன்றிது. சொல்ல வேண்டியதைச் சரியாக சொல்ல முடியாவிட்டாலும் பேசியது எல்லாம் சரியாகத்தான் இருந்தது என்று கேள்விகேட்டவர் சொன்னது எனக்கு ஆறுதலாக இருந்தது.          

21.08.2022

Series Navigationமுன்தொடக்கக் கல்விக்கு முன்னுரிமை வேண்டும்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *