-முனைவர் என்.பத்ரி,
NCERT விருது பெற்ற ஆசிரியர்
இந்திய அரசியலமைப்புச் சாசனம் உருவாக்கப்பட்ட பொழுது, அடுத்த 10 ஆண்டுகளுக்குள் (1960) அனைத்துக் குழந்தைகளுக்கும்இலவசக் கல்வி வழங்க திட்டமிடப்பட்டது. இக்குறிக்கோளை நாம் இந்நாள் வரை எட்ட இயலவில்லை. அனைவருக்கும் கல்வித் திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு,முன்னூறு பேர் வாழும் சிறு குடியிருப்புகளிலும் பள்ளிகளை ஏற்படுத்தியுள்ளது.நலிந்த பிரிவு மக்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு, அவர்கள் பள்ளியின் இறுதி வகுப்பு வரை, வேறுபாடு எதுவுமின்றிப் படித்துப் பயன்பெற வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன.படிக்கும் பெண் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை, இலவசக் கல்வி, இலவசப் பாடநூல்கள், இலவசச் சீருடைகள், இலவச விடுதிகள்,பள்ளிசெல்ல இலவச பேருந்து பயணம், இலவச மருத்துவ சோதனை, நண்பகலில் மாணவர்களுக்குச் சத்துணவு ஆகியன வழங்கி ஊக்குவிக்கப்பட்டும், அனைவரும் இன்னும் எழுத்தறிவு பெறவில்லை என்பது கவலை அளிகிறது.
தொடக்கக் கல்வித்துறையில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவது வழக்கம். ஆனால் தற்போதைய மாணவர்கள் எண்ணிக்கையை ஒப்பிடுகையில், 9000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக சமீபத்தில் நடந்த ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்விற்கு பிறகு, தமிழகத்தின் பல்வேறு ஊரகப்பகுதிகளில் அதிகளவில் ஒராசிரியர் பள்ளிகள் அதிகம் இருப்பதுவும் தெரியவந்துள்ளது. மழலையர் வகுப்புகளில் பயிலும் குழந்தைகளை கையாள்வதில் சிக்கல்களும் சரியான புரிதலின்மையும் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த கரோனா தீநுண்மிக் கால கற்றல் இழப்பை முறைப்படி சரிசெய்ய குறைந்தது மூன்று வருடங்களாவது் ஆகும். ஒரு வருடத்திலேயே சரி செய்ய வேண்டுமென்று அரசோ, பள்ளிக்கூடங்களோ நினைத்தால், அது மாணவர்களுக்கு பெருஞ்சுமையாக இருக்கும்
“தமிழ்நாடு தேசிய அளவிலான அடைவு சோதனை முடிவுகளில் தமிழ்நாடு 27 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. தொடக்கப்பள்ளிகளில் 2022-2023 ம் கல்வி ஆண்டில் 23,40,656 மாணவர்கள் பயில்வதாக கூறப்படுகிறது. 69,640 இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் இவர்களுக்காக பணியாற்றி வருகின்றனர். 2019-2020ஆம் கல்வியாண்டில் 52,933 மாணவர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய, நகராட்சி மற்றும் அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்திற்குள் இயங்கி வந்த 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி, மற்றும் யு.கே.ஜி வகுப்புகள் சோதனை முறையில் துவங்கப்பட்டன. தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணிபுரிந்த இடைநிலை ஆசிரியர்கள், மாற்றுப் பணி மற்றும் பணி மாறுதல் மூலம் எல்.கே.ஜி, மற்றும் யு.கே.ஜி ஆகிய இரண்டு வகுப்புகளையும் ஒரு சேர ஒரே ஆசிரியர் கையாளும் வகையில் பணியமர்த்தப்பட்டனர். அதனால் தொடக்கப்பள்ளி மாணவர்களின் கற்றல் பாதிக்கப்பட்டது என்பது உண்மை.ஆனால் தற்போது எல்.கே.ஜி, மற்றும் யு.கே.ஜி ஆகிய இரண்டு வகுப்புகளும் அரசு பள்ளிகளிலே தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.இது மகிழ்ச்சி அளிக்கும் அறிவிப்பு என்றாலும், அதற்கான உள்கட்டமைப்புகளும் இல்லை, புதிய ஆசிரியர்கள் நியமனமும் இதுவரை இல்லை.
சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அரசின் ‘எண்ணும் எழுத்தும்’ திட்டமும் முதல் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவே செயல்படும் எனத் தெரிகிறது.சத்தில்லாத வேர்கள் கொண்ட மரத்தால் சுவையான பழத்தை எவ்வாறு தர முடியும்? தொடக்கக் கல்வியில், குறிப்பாக மழலையர் கல்வியில்அதிக சீர்த்திருத்தங்கள் தற்போது தேவைப்படுவது காலத்தின் கட்டாயம். தாய் மொழி வழியே பாடங்களைக் கற்பிக்கும் முயற்சி கடைப்பிடிக்கப்பட்டாலும், குழந்தைகளின் ஆங்கில வழிக்கல்வியில் பெற்றோர்களின் நாட்டம் அதிகமாகாகவே உள்ளது.
குழந்தைகள் வீட்டை விட்டு முதன்முதலாக வெளியே வந்து சமூகத்திற்கு அறிமுகமாவது மழலையர் பள்ளிகளில்தான். எனவே,அவர்கள் இவ்வகுப்புகளில் பெறும் கற்றல் அனுபவங்கள் நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும்.அப்போதுதான் தொடர்ந்து பள்ளிக்கு வருவார்கள். தொடக்கப்பள்ளி வளாகங்களில் 2முதல்3 வயதுவரையிலான மழலையர்களுக்கான அங்கன்வாடிகள் சமூக நலத்துறையின் கீழ் செயல்படுகின்றன. இதனுடன் முன்தொடக்கக்கல்வி வகுப்புகளான எல்.கே.ஜி, மற்றும் யு.கே.ஜி வகுப்புகளும் செயல்பட உடனடி நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.முன்தொடக்கக் கல்விக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்போது பிள்ளைகளின் சேர்க்கை, தொடக்கப் பள்ளியில் இறுதி வகுப்பை முடிக்கச் செய்தல், தேக்கம், இடைநிறுத்தம் ஆகியவை தவிர்க்கப்பட வாய்ப்புகள் ஏராளம். மழலையர்,முன் தொடக்க கல்விமாணவர்களுக்கு மாண்டிசோரி, முன் தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பு முடித்த பெண் ஆசிரியர்களை நியமனம் செய்வதன் மூலம் நல்ல பலன்களை அறுவடை செய்ய முடியும். பள்ளி முடியும் நேரம் அடிக்கும் மணி,மாணவனுக்கு பள்ளி தொடங்கும் மணியை விட அதிக மகிழ்ச்சியை தருவது ஏன்? இந்த வினாவிற்கு விடை தெரிந்தால் தொடக்கக் கல்வி சவால்களுக்கு தீர்வு கிடைக்கும். மேலும், மாற்றுத் திறனாளி, மனநலம் குன்றிய, பிரச்சனைக்குரிய நெறிபிறழ் நடத்தையுடைய குழந்தைகள் தொடக்கப்பள்ளிகளில் இணக்கமாகத் தொடர்ந்து கற்க நடவடிக்கைகள் தேவை.கரோனா தீநுண்மியின் பாதிப்புக்கு பிறகு, பெற்றோர்களின் பொருளாதார சிக்கல்கள், அரசுபள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது.இவர்களை தொடர்ந்து அரசு பள்ளிகள் தங்களிடமே தக்கவைத்துக் கொள்ள தேவையான முயற்சிகளை பள்ளி நிர்வாகங்கள் உடனே எடுத்துக் கொள்வது நல்லது.
பெற்றோர்களின் ஏழ்மைநிலை,பெற்றோர்களின் கல்வி அறிவின்மை, சில சமூக இனத்தவர்களிடையே காணப்படும் சமூக, பழக்க வழக்கங்கள், சிலரின் சமயப்பழக்கம் ஆகியவை குழந்தைகள் பள்ளியில் சேருவதற்குத் தடையாக உள்ளன. ஒரு சில மதப்பிரிவினர் தங்களின் பெண் குழந்தைகள் வயதுக்கு வந்துவிட்டால், படிப்பை நிறுத்திவிடுகின்றனர். வறட்சியால் பாதிக்கப்பட்ட மலைப்பகுதிகளிலுள்ள பள்ளிகளில் சேரும் குழந்தைகளின் எண்ணிக்கை மிகக்குறைவாகவே உள்ளது. மேலும் இப்பகுதிகளில் பள்ளிகளும் அதிகம் இருப்பதில்லை. மாணவர்கள் தொலைதூரம் செல்ல வேண்டியுள்ளது. இக்குறைகள் பள்ளிகள் மேற்பார்வை, படிப்பில் தர உத்தரவாதம், அலுவலர்களின் நிர்வாகத் திறன்மேம்பாடு முதலியவற்றால் நேர் செய்யப்பட வேண்டும்.
கல்வியின் பல்வேறு நிலைகளில், கற்பதில் ஆசிரியரை மட்டுமே சார்ந்திருப்பவர்கள் முன் தொடக்க மற்றும் தொடக்கக் கல்வி மாணவர்களே.மேல் வகுப்புகளுக்கு செல்ல, செல்ல அவர்கள் ஆசிரியரை சார்ந்திருப்பது குறையும்.எனவே,அவர்களின் கற்றலுக்கு நாம் முன்னுரிமை கொடுக்கும் பட்சத்தில்,இடைநிற்றல் போன்ற கல்விமுறையில் உள்ள பெரும்பாலான சிக்கல்கள் காணாமல் போகும் என்பதை திடமாக நம்பலாம்.
தொடர்புக்கு:63/2 ,A.E. கோயில் தெரு,செங்குந்தர்பேட்டை,
மதுராந்தகம்-603 306.கைப்பேசி
9443718043/7904130302nbadhri@gmail.com
- அசோகமித்திரனும் நானும்…
- முன்தொடக்கக் கல்விக்கு முன்னுரிமை வேண்டும்
- குரு அரவிந்தன் எழுதிய ‘ஆறாம் நிலத்திணை’ நூலுகுப் பரிசு
- அம்மன் அருள்
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 276 ஆம் இதழ்
- மனப்பிறழ்வு
- குறளின் குரலாக சிவகுமார்
- பிரியாவிடை (Adieu)
- அணுப்பிணைவு முறை மின்சக்தி உற்பத்திக்கு கட்டுப்பாட்டுத் தூண்டியக்கம் முதன்முதல் கண்டுபிடிப்பு.
- குரல்
- வாசிப்பு அனுபவப்பகிர்வு : எழுத்தாளர் நடேசனின் புதிய நாவல்