உணர்வுடன் இயைந்ததா பயணம்? – அத்தியாயம்.3  

author
0 minutes, 0 seconds Read
This entry is part 10 of 14 in the series 25 செப்டம்பர் 2022

 

சியாமளா கோபு 

அத்தியாயம்.3  

வந்தியத்தேவனைப் போல மகாபலிபுரத்தில் இருந்து தான் நானும், என் கணவர் மற்றும் தோழியுடன் அதிகாலையில் என் பயணத்தை தொடங்கினேன். என்ன, என்னிடம் ஆதித்த கரிகாலன்  தன் தந்தை சுந்தர சோழருக்கு எழுதிய ஓலை இல்லை அவ்வளவு தான்.

சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் அல்லது தில்லைக் கூத்தன் கோயில்.

இது பொன்னியின் செல்வனில் குறிப்பிடப்படவில்லை. எனினும் ரெண்டாயிரம் வருடங்களுக்கு முன்பதாக இருந்த ஊர். சோழர்கள் கட்டிய கோயில். பிற்காலத்தில் பல்லவர்களும் விஜய நகர அரசுகளால் புனரமைக்கப்பட்டது. முதலாம் ஆதித்த கரிகால சோழனின் மகன் முதல் பராந்தகன் பொன் கூரை வேய்ந்தான் என்று திருவாலங்காட்டு செப்பேடுகள் கூறுகின்றன.

சிதம்பரத்தை அடைந்தோம்.

தில்லை கூத்தனின் ஆலயத்தில் மூலவருக்கு முன்னிருக்கும்  பஞ்சாட்சரப்படியில் தான் சோழ மன்னர்கள் பட்டாபிஷேகம் நடை பெறும். மன்னனாக இருந்தாலும் மறையோனுக்கு கீழ் தானே.

இங்கே நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் சோழ சாம்ராஜயமானது, இன்றைய  தென்னிந்தியா, மால்தீவ்ஸ், ஸ்ரீ லங்கா, சிங்கப்பூர், இந்தோனேசியா தாய்லாந்த் கம்போடியா மலேசியா பங்களாதேஷ் மியான்மர் மற்றும் வியெட்னாம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது. இவ்வளவு பரந்துப்பட்ட சாம்ராஜ்யத்தின் மன்னர்கள் தான் இந்த பஞ்சாட்சர படியில் அமர்ந்து முடி சூட்டிக் கொண்டார்கள்.

வாசகர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது. இன்றைய மாநில முதலமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொள்ள எத்தகைய ஆடம்பர விழாக்கள் எடுக்கிறார்கள் என்பதை. ஆனால் சோழ மன்னர்களின் எளிமையையும் பக்தியும் நாம் இங்கே எண்ணிப் பார்த்திடல் வேண்டும்.

சிதம்பரம் கோயிலில் கோவிந்தராஜப் பெருமாள். தில்லையம்பலத்தானின் கோயிலில் நடராஜனின் அருகிலேயே குடிக் கொண்டிருக்கும் பெருமாள். ஒரே கோவிலில் சைவமும் வைஷ்ணவமும்.! என்னவொரு மத நல்லிணக்கம். தமிழர்களின் சகிப்புத்தன்மை போற்றுதலுக்குரியது.

பிற்கால சோழர்கள் காலத்தில் சைவமும் வைஷனவமும் ஏழாம் பொருத்தமாக இருந்ததை பொன்னியின் செல்வனில் ஆழ்வார்க்கடியான் பாத்திரத்தால் விளக்கியிருப்பார் ஆசிரியர் கல்கி. பொதுவாக சோழ மன்னர்கள் மிகப் பெரிய சைவ பக்தர்களாக இருந்த போதும் ஆங்காங்கே வைஷ்ணவ விண்ணகரங்களையும் நிர்மானிக்கவே செய்திருக்கிறார்கள்.

தசாவதாரம் படத்தில் வரும் கோவிந்தராஜப் பெருமாள் இவர் தான். இவரைத் தான் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் ரெண்டாம் குலோத்துங்கன் அப்புறப்படுத்தியதாக செவி வழி செய்தி உள்ளது.

அங்கேயிருந்து, பரந்துபட்ட கீழை உலகத்தை முழுவதும் தன் ஒற்றை கொற்றை கொடியின் கீழ் ஆண்ட சோழ பேரரசர்களின் வாரிசுகள் பிற்காலத்தில் ஒரு சிறு ஜமீனாக தங்களை சுருக்கிக் கொண்டு விட்ட பிச்சாவரம் ஜமீன் சென்றேன்.  இன்றைய தேதிக்கு அங்கே ராஜராஜனின் வம்சாவளியினர் வசித்து வருகிறார்கள்.

பிச்சாவரத்தை சுற்றுலா தளமாக ஆக்கியிருக்கிறார்கள். அலையாத்திக் காடுகள் கொண்ட மிகப் பெரிய நீர்நிலை அது. போட்டிங் போகலாம். நீருக்குள் மரங்கள் வளர்ந்திருக்கிறது. படகில் செல்கையில் காட்டிற்குள் போவதைப் போன்ற உணவேற்ப்பட்டது

அங்கேயிருந்து மீண்டும் வந்தியத்தேவனின் பாதையில், வீர நாராயான ஏரி எனப்படும் இந்நாளைய வீராணம் ஏரிக்கரையில் வீரநாராயண சதுர்வேதி மங்கலம் எனப்படும் காட்டுமன்னார்கோயிலில் உடையார்குடி ஆனந்தீச்வர் கோயிலுக்குப் போனேன். இங்கே கருவறையின் மேற்கு அதிட்டானத்தில் ஆதித்திய கரிகாலனை கொன்ற ரவிதாசன் மற்றும் அவன் சகோதரர்கள் மூவரைப் பற்றிய கல்வெட்டுக் காணக் கிடைக்கிறது.

இந்த சிவன் கோயிலில் ஒரு எருமை மாடு பலியிடுவதற்கு தலையைக் குனிந்து கொண்டிருப்பதைப் போன்ற சிலை இருக்கிறது. தட்சிணாமூர்த்தி வழக்கத்திற்கு மாறாக கால் மேல் கால் போட்டு அமர்ந்தவாக்கில் இருக்கிறார்.

ஆழ்வார்க்கடியானின் வீர வைஷ்ணவ பக்திக்கும், வீர சைவர்களுடன் தொந்த யுத்தம் செய்ததாக பொன்னியின் செல்வனில் வரும் வீராணம் ஏரிக்கரையில் அமர்ந்திருக்கும் வீர நாராயண பெருமாள் கோயிலுக்கு சென்றோம்.

பொதுவாக சோழ அரசர்கள் ஏரி குளம் குட்டை போன்ற நீர்நிலைகளை உருவாக்கும் போது அதை பாதுகாத்திட நீர்நிலைகளின் கரையில் பெருமாள் கோவில் அமைப்பது வழக்கம். மதுராந்தகத்தில் ஏரிக் காத்த ராமர் கோவில் இருக்கிறதைப் போல. இது உபரி தகவல். 

 

அங்கேயிருந்து நேரே ஆதித்த கரிகாலனுக்கு எதிராக பழுவேட்டரையரும் சம்புவரையரும் மற்றும் ஏனைய குறுநில மன்னர்களும் சதியாலோசனை செய்த செங்கண்ணர் சம்புவரையரின் கடம்பூர் மாளிகை இருந்த கீழக்கடம்பூர் சென்றோம்.  

பொன்னியின் செல்வனில் இந்த நகரத்தை அறிமுகப்படுத்தும் விதமாக ஆசிரியர் கல்கி எழுதியிருப்பார்.  வந்தியத்தேவன் தன் நண்பன் கந்தமாறனைக் காண்பதற்கு கடம்பூருக்கு வருகிறான். மிகப்பெரியதும் நீண்டதுமான  விஸ்தாரணமான கோட்டை மதில் சுவர்கள் உடைய கடம்பூர் அன்றிரவு சோழ நாட்டின் மிகப் பெரிய முக்கியஸ்தர்களின் வருகைக்காக தடபுடலாக அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது என்று.

நாங்கள் போன போது அந்த சிறு கிராமம் இப்படிப்பட்ட பெரிய கோட்டை சுவருடன் இல்லை. அங்கே தடபுடலான வரவேற்பும் இல்லை. நானும் வந்தியத்தேவன் இல்லையே. 

அடர்ந்த வயல்வெளிக்கிடையே மரங்களடர்ந்த மண் மேடாக இருக்கிறது இந்த மாளிகை இருந்ததாக சொல்லப்பட்ட இடம். வயல்களிடையே எப்படி இத்தனை இடத்தை விட்டு வைத்தார்கள் இன்றைய காலகட்டத்தில் அங்கே வசிக்கும் மக்கள் என்ற எண்ணம் மனதிற்குள் தோன்றியது.

ஒன்று, இந்த இடம் அரசாங்க பதிவேடுகளில் யாருக்கும் சொந்தமானதாக இருந்திருக்காது. அல்லது ஆழ உழும் போது அங்கே புதைந்து கிடந்த மாளிகையின் செங்கற்கள் வேலையை செய்ய விடாமல் தடுத்திருக்கும்.

அல்லது ஒரு எழுத்தாளனாக என் கற்பனை இப்படி விரிந்தது. ஆதித்த கரிகாலனின் கொலை நடந்த அன்றிரவு அந்த மாளிகை தீப்பற்றிப் பிடித்து எரிந்ததாகவும் எப்படி என்பது புதிராக இருந்ததாகவும் ஆசிரியர் கல்கி எழுதியிருப்பார்.  அப்படி தீக்கிரையான மாளிகை இருந்த இடத்தில் ஆதித்த கரிகாலனின் ஆவியானது உலாவிக் கொண்டிருப்பதால் அங்கே அதுவே ராஜ்ஜியம் செய்து கொண்டிருப்பதால், மற்றவர்களை அங்கே வர விடாமல் செய்திருப்பானோ என்று தோன்றியது.

செங்கண்ணர் சம்புவரையர் எதிராளிகளுடன் சேர்ந்து கொண்டு தனக்கு எதிராக சதி செய்தாரே என்று ஆதித்தனின் ஆவி கோபம் கொண்டிருக்கும்.

செங்கண்ணன் கெட்டுப் போகப் போவதினால் தான் சதியாலோசனையை இங்கே வைத்துக் கொண்டிருப்பான் என்று தான் தோன்றியது. ஏனெனில் கெடுவான் கேடு நினைப்பான் அல்லவா!   

இந்த மாளிகையில் தான் பலருக்கு பல பாடங்களை கற்றுக் கொடுக்கக்கூடிய சம்பவங்கள் நடந்தேறியது. சோழ மகா சரித்திரம் இந்த சம்பவங்களுக்குப் முன் பின் என ரெண்டாக வகுக்கப்படுகிறது. பொன்னியின் செல்வனின் மிக முக்கிய சம்பவமான ஆதித்த கரிகாலனின் மரணம் தான் கதையின் மையப்புள்ளி. பின்பு அருண்மொழித் தேவன் பட்டத்திற்கு வருவது மீதிக்கதை.

ஆதித்தனின் மரணம் நடந்தேறிய அன்று இரவு அங்கே ரவிதாசன் மட்டுமன்றி நந்தினி மணிமேகலை வந்தியத்தேவன் பெரிய பழுவேட்டரையர், சம்புவரையர் என எல்லோருமே அங்கே இருந்தார்கள்.

ஆயிரம் வருடங்களுக்கு முன்பு நடந்த கொலை. 

இந்த கொலையை செய்தது யார்?

மேலே குறிப்பிட்டதைப் போல நந்தினியா, ரவிதாசனா மணிமேகலையா பெரிய பழுவேட்டரையரா, அல்லது தனக்கே பட்டம் கட்ட வேண்டும் என்ற பேராசையில் இருந்த உத்தம சோழன் என்னும் மதுராந்தகனா அன்றி அவனைப் பெற்ற செம்பியன் மாதேவியா, குந்தவையின் தூண்டுதலினால் அருண்மொழிவர்மனா அல்லது வந்தியத்தேவனா என்று பல கேள்விகளை பல வரலாற்று ஆசிரியர்கள் முன் வைத்துள்ளனர்.

இதன் பதிலாக தான் ஆனந்தீஸ்வரர் கோயிலில் காணப்பட்ட கல்வெட்டு மட்டுமே கிடைக்கப் பெற்ற ஒரே ஒரு ஆதாரம். உடையார்குடி கல்வெட்டு மிகவும் ஆதாரபூர்வமான ஒன்று.

”பாண்டியன் தலை கொண்ட கரிகால சோழனைக் கொன்று துரோகிகளான முன்குடுமி அந்தணர்கள் எனப்படும் கேரள அந்தணர்களும் வீரபாண்டியனுக்கு மிகவும் நெருக்கமானவர்களுமான சோமன், தம்பி ரவிதாசன் என்னும் பஞ்சவன் பிரம்மாதி ராஜனும், இவன் தம்பி பரமேஸ்வரன் பிரம்மாதிராஜனும், இவர்கள் உடன் பிறந்த மலையனூரானும்  சகோதரர்கள் அவர்கள் உறவினர்கள், இவர்களுக்கு பெண் கொடுத்தவர்கள், இவர்களிடம் பெண் எடுத்தவர்கள் மட்டுமல்லாது மாமன் மற்றும் பங்காளி முறையினர் என சுமார் முன்னூறு குடும்பத்தார் அனைவரின் சொத்துக்களையும் உடமைகளையும் விற்று அவர்கள் அனைவரையும் நாடு கடத்திட உத்தரவிட்டு ராஜராஜனின் ஆட்சிக்காலத்தின் ரெண்டாம் ஆண்டில் ஒரு நிருபம் அனுப்பி வைக்கப்பட்டு அது இந்த கோயில் சுவற்றில் பொறித்து வைக்கப்பட்டிருக்கிறது.

கீழ்கடம்பூர் என்னும் சிற்றூரில் ருத்ரகோட்டீஸ்வரர் அதாவது இந்த ஒரு சிவலிங்கமானது ஆயிரம் சிவனுக்கு சமமானதாம் என்னும் சிறு ஆலயம் சிதிலமடைந்திருக்கிறது. ஓரளவு செப்பனிட்டு வைத்திருக்கிறார் ஒரு முதியவர். அங்கே ஒரு நிலவரை இருந்தது. சிவன் கையில் உடுக்கையும், காதில் தோடும் வாயில் புன்னகையுமாக மாப்பிள்ளைக் கோலத்தில் நிற்கிறார். அருகில் ஊழி நடனமாடிய சிவன் தன் காதில் இருந்து கழண்டு விழுந்த தோடை நடனத்தை நிறுத்தாமலே வலது காலால் எடுத்து அப்படியே அதை கொண்டு போய் காதில் மீண்டும் அணிந்து கொள்ளும் சிலையும் காணக் கிடைக்கிறது.

எல்லா ஊரிலும் கற்சிலைகள் உண்டு. ஆனால் இந்த சிலைகள் கற்களால் ஆன போதும் தட்டிப் பார்க்கையில் செம்பொன் சிலையை தட்டியதைப் போன்ற ஓசை கேட்கிறது அதிசயமாகத்தான் இருக்கிறது. அந்த சிதைக்கப்பட்ட கோயிலில் உடைக்கப்பட்ட சிலைகளை எடுத்து உள்ளேயே வைத்திருக்கிறார் அந்த முதியவர்.

அங்கேயிருந்து மிக அருகில் ஆறாம் நூற்றாண்டை சேர்ந்த மேல் கடம்பூர் அமிர்தகடேச்வர் கோயில் உள்ளது. திருக்கடையூருக்கு சமமானது இது. தேர் போல மூலவர் சன்னதி உள்ளது. இங்கே ஜேஷ்டா தேவி எனப்படும் தெய்வம் அதாவது ஸ்ரீ தேவியின் மூத்தவள் அதாவது அக்கா, சகல சம்பத்தும் கொடுக்க கூடியவளாம். மூத்தாள் தேவி, மூதேவி என திரித்து ஒரு முலையில் உட்கார வைத்து விட்டோம். உண்மையில் அவளை ஒவ்வையார் போன்ற தமிழ் புலவர்கள் பாடி வைத்திருப்பதில் இருந்து மூத்தாள் தேவி தமிழர்கள் வணங்கும் தெய்வம் என அறியலாம். முதலாம் குலோத்துங்கனின் கல்வெட்டு காணக்கிடைக்கிறது. திராவிட கட்டிடக்கலையில் கரக்கோயிலாக கட்டப்பட்டது. உத்தம சோழ சதுர்வேதி மங்கலம் என்பது  புராணப்பெயர்.  

இங்கே வந்தியத்தேவன் ஆழ்வர்க்கடியானைப் பிரிந்து திருவையாறு போகிறான்.அவன் பின்னால் போவதை நிறுத்தி விட்டு நாம் இப்போது ஆழ்வார்க்கடியானை பின் தொடர்வோம். அவனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் உண்மைத்தன்மையை ஊர்ஜிதப்படுத்திக் கொள்வதற்காக திருப்புறம்பியம் போகிறான். நாமும் அவனோடு திருப்புறம்பியம் போவோம்.

வலது புறம் வடவாறு உடன் வந்து கொண்டிருந்தது. இந்த ஆற்றில் இருந்து தான் வீராணம் ஏரிக்கு நீர் போய் சேருகிறது. அங்கேயிருந்து சென்னை மாநகருக்கு தாகம் தீர்க்க வரும் வாராது வந்த மாமணி. ஒரு நன்றியுணர்ச்சியுடன் மனம் நெகிழ வடவாற்றுடன் சென்று கொண்டிருந்தோம். ஆள் அரவமற்ற மிகவும் சிறிய ஆற்றங்கரையோர மண் சாலை. கரையோரம் அடர்ந்த மரங்கள் பகலையும் இருட்டென அடித்திருந்தது. பதினொரு கிலோமீட்டர் நீள சாலை. ஒருவித அமானுஷ்யமான நிஷப்தம் சூழ்நிலையை இன்னும் கலவரமாக்கியது. நாங்களோ நான்கு பேர் காரில் பயணித்துக் கொண்டிருந்தோம். ஆனால் பாவம் இதில் தானே ஆழ்வார்க்கடியான் தனியாளாக பயணித்திருப்பான். எவ்வளவு வம்பு பேசுவான்! எத்தனை பேரை வீண் வம்புக்கு இழுப்பான்! இப்போது பேச்சுத்துணைக்கு ஆளில்லாமல் செல்கிறான். அவன் நிலையை எண்ணி மனதிற்குள் சிறு சிரிப்பு வரத் தான் செய்தது.  

நாங்கள் பயணித்தது டிசம்பர் மாதமாதலால், இதமான  வெய்யிலும் மிதமான குளிருமான நல்ல அருமையான பருவநிலை. மழை பெய்து விட்டிருப்பதினால் மண் குளிர்ந்திருந்தது. ஆற்றில் சலசலவென நீர் ஓடிக் கொண்டிருப்பதால் காற்றும் குளிர்ந்திருந்தது.  

அடுத்ததாக, காவிரிக்கும் கொள்ளிடத்திற்கும் இடையில் ஓடும் மண்ணாற்றின் வடகரையில் இருக்கும் திருப்புறம்பியம், அதாவது கல்கியின் வார்த்தைகளில் சொல்வதென்றால் உலக சரித்திரம் அறிந்தவர்கள், சரித்திரத்தின் போக்கை மாற்றியதாக சொல்லப்பட்ட வாட்டர்லூ பானிபட் பிளாசிக் சண்டைகளைப் போன்றே திருப்புறம்பியம் என்ற இந்த இடத்தில் நடந்த சண்டையும் சோழர்களின் சரித்திரத்தை மாற்றியது.

அதாவது ராஜராஜ சோழனின் தாத்தாவிற்கு தாத்தா விஜயாலய சோழன் குறுநில மன்னனாக ஆண்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் வரகுணவர்ம பாண்டியனுக்கும் அபராஜித பல்லவனுக்கும் நடக்கும் சண்டைகள் எல்லாமே சோழ நாட்டில் தான் நடக்கும். அதுபோல ஒரு போரில் பல்லவனுக்கு கங்க மன்னன் பிரதீவிபதியுடன் விஜயலாயனின் மகன் ஆதித்தன் கலந்து கொண்டான். பாண்டியன் வெற்றி பெற்றால் சோழர் சர்வ நாசமாகிப் போவர். உடல்நலம் குன்றிய கிழ சிங்கம் விஜயாலயனின் கடைசி நேர வீரத்தினால் இறுதியில் பல்லவன் வெற்றிப் பெற்ற இடம் இது.

அங்கேயே மடிந்து போன கங்க மன்னனுக்கு இங்கே ஒரு பள்ளிப்படை இருக்கிறது. இப்போது அது அய்யனார் கோயில் எனப்படுகிறது. கோயில் சிதிலமைந்திருக்கிறது. கோயிலின் முன்பு வேலும் சூலமும் குத்தி அந்த இடமே ஒரு அமானுஷ்யமாக இருந்தது. பகல் பொழுதிலே கூட அந்த இடம் கொஞ்சம் இருட்டாக அச்சம் தட்டுவதைப் போல இருக்கவே சட்டென்று அங்கேயிருந்து நகர்ந்து விட்டோம்.

பழந்தமிழ் நாட்டில் போர்க்களத்தில் உயிர்துறந்த மகாவீரர்களின் நினைவாக ஒரு கல்லை நட்டு வைத்து படையலிட்டு வழிப்படுவது என்பது நடுகல் என்பர். அதையே கல்லின் மீது ஒரு கோயில் கட்டப்பட்டிருந்தால் அது நடுகற் கோயில் என்று அழைப்பர். அதுவே அரசர்கள் போரில் இறந்தால் அவர்களை புதைத்த இடத்தில் ஒரு சிவலிங்கத்தை நட்டு ஒரு கோயிலை எழுப்பி அதற்கு பள்ளிப்படை என்பார்கள். 

நாங்கள் போன போது மாலை மணி ஐந்தரை. சாதாரண கிராமத்து மண்சாலை. சாலையின் இருபுறமும் பச்சைபசேல் என்று விளைந்து நிற்கும் நெற்பயிர்கள். பாலைப் பிடித்திருந்த நெற்கதிரின் வாசமும், கிராமத்து மண்சாலையில் தூறல் விழுந்ததினால் உண்டான மண் வாசமும், சாணி வாசம், ஆட்டாம்புழுக்கை வாசனை என்று மொத்தமும் கிராமத்தின் மண் வாசனை காற்றில் பரவியிருந்தது. மூக்கை விரித்து காற்றை இழுத்து நெஞ்சை நிரப்பிக் கொண்டேன். அப்பா..! மாசு மருவில்லாத காற்று. மாலையும் இரவும் சந்திக்கப் போகும் அந்திப் பொழுது. இளம் வெளிச்சம். பகலெல்லாம் இரையெடுக்க சென்றிருந்த பறவைகள் திரும்ப தங்கள் இடத்திற்கு வந்து அடையும் கண் கொள்ளாக் காட்சி. பட்சிகளின் ஒலி அந்த அமைதியான பிரதேசத்தில் மிகுந்த சப்தமாகவே ஒலித்தது.

சிவன் சாட்சிநாதேஸ்வர் என்று கோயில் கொண்டிருக்கிறார். கோயிலும் கற்றளியாக பரந்து விரிந்து கிடக்கிறது. மதில் சுவர்கள் ஓங்கி உயர்ந்து நிற்கிறது. பார்க்கவே பிரமிப்பாக இருந்தது.    

தரிசனம் முடிந்து பிரகாரம் சுற்றி விட்டு, கொடிமரத்தின் அடியில் விழுந்து தெண்டனிட்டு விட்டு சற்று நேரம் அமர்ந்தோம். சட்டென்று இருட்டத் தொடங்கிய நேரம். வானம் நிர்மலமாக இருந்தது. நட்சத்திரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக கண் சிமிட்ட தொடங்கியிருந்தது. சாயரட்சை பூஜைக்கான காண்டாமணி டாண் டாண் என்று ஓங்கி ஒலித்தது. கோயிலுக்குள் எண்ணி பத்தி பத்து பேர் தான் இருந்திருப்போம். ஆளற்ற அமைதியான அந்த இடத்தில் மணியோசை தெய்வீக உணர்வை எழுப்பி சிலிர்க்க வைத்தது. எத்தனை வருடங்கள் ஆகிறது இதுப்போல சாயரட்சை மணியோசைக் கேட்டு. இவ்வளவு அமைதியும் எத்தனை விலை கொடுத்தாலும் கிடைத்திடுமா!

கூகுள் அக்காவின் வழிகாட்டுதலின் படி மண்ணாற்றங்கரையின் இடது புறம் பயணித்தோம். பௌர்ணமி முடிந்து சில நாட்கள் ஆகி விட்டிருந்ததினால் நிலா இன்னும் வரவில்லை. மணி பின்மாலை ஏழு தானிருக்கும். அதற்குள் லேசான இருட்டானது கும்மிருட்டாகி விட்டிருந்தது. அக்கம்பக்கம் வீடுகளோ வெளிச்சமோ சுத்தமாக இல்லை. சலசலவென ஓடிக் கொண்டிருந்த மண்ணாறு,நந்தினியைப் போன்று அழகாக இருந்தாலும் அவளைப் போன்றே ஆபத்தானதாகவும் இருந்தது.  என்ன செய்வது? அழகிருக்கும் இடத்தில் தானே ஆபத்தும் இருப்பது. இயற்கையின் படைப்பே அப்படித் தானே.!

ஒரே ஒரு ரெட்டை மாட்டு வண்டி மட்டுமே பயணிக்க இயலும் சாலை. சற்றே தடுமாறினாலும் மண்ணாறு தான் அடைக்கலம். இருட்டு. ஆளில்லாத பிரதேசம். பேச்சு மூச்சில்லாமல் அமைதியாகவே பயணித்தோம். பதினாறு கிலோமீட்டர் பயணம் பிரதான சாலைக்கு வண்டி வந்த பின்பு தான் மூச்சே வந்தது.

கங்க மன்னனின் பள்ளிப்படை காடாக இருந்தது. ரவிதாசன் அவன் அண்ணன் சோமன் கடம்பூர் மாளிகையின் காவல்காரன் இடும்பன்காரி மற்றும் சிலர் இங்கே கூடித் தான் ஆதித்தனையும் அருண்மொழியையும் ஒரே நேரத்தில் கொன்று விட திட்டம் தீட்டுகிறார்கள். இவர்களுக்கு சோழர்களின் தனாதிகாரியான பெரிய பழுவேட்டரையரின் இளம் மனைவி நந்தினி தேவி தான் தங்க காசுகள் கொடுத்து உதவுகிறாள். நந்தினியை தங்களிடமிருந்து பிரித்துக் கொண்டு போக திட்டமிடும் ஆழ்வார்க்கடியானை எங்கே கண்டாலும் கொன்று  விட வேண்டும் என்று ஆணையிடுகிறான் ரவிதாசன்.

இதை அறிந்து  திடுக்கிட்ட ஆழ்வார்கடியான் அங்கே இருந்து தப்பி ஓடுகிறான். அவனை விட்டு விடுவோம். அவன் சாமர்த்தியசாலி. பிழைத்துக் கொள்வான். அவனுக்கு நம் உதவி தேவையில்லை. மேலும் அவனுக்கு அநேக வேலைகள் இருக்கிறது. இன்னும் செம்பியன் மாதேவியை சந்திக்க வேண்டும். நந்தினியை பார்க்க வேண்டும். இறுதியில் ராமேஸ்வரத்தில் அநிருத்த பிரும்மராயரை சந்திக்க வேண்டும்.  

ஆகையினால் அவனை அவன் போக்கில் விட்டு விட்டு நாம் வந்தியத்தேவன் பின்னால் திருவையாறு செல்வோம்.

 

Series Navigationமெட்ராஸ்  டூ  தில்லிசிமோன் அப்பா
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *