லதா ரகுநாதன்
“இன்றைய தலைப்புச்செய்திகள்”
முதலமைச்சர் இலவச காணொளி திட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட தொலைக்காட்சி பெட்டி உரக்கக் கர கரத்துக்கொண்டிருந்தது.
அது மிகச் சிறிய ஒற்றை அறை கொண்ட ஹவுசிங் போர்ட் குடி இருப்பு. அதன் ஏதோ ஒரு முதல் மாடி வீட்டில், அறையின் மூலையில் பெரிய பெரிய பாத்திரங்கள் கொண்டு அமைக்கப்பட்டிருந்த மேஜை போன்ற ஓர் அமைப்பின் மீதிருந்து அந்த காணொளி. மற்றொரு மூலையில் ஒருக்களித்து, அது சாய்ந்த நிலையா அல்லது படுத்த நிலையா என்று தெரியாவண்ணம் ஏதோ ஒரு அசெளகர்ய விதத்தில் கண்ணாத்தாள் விழுந்து கிடந்தாள். அந்த சத்தம் அவளிடம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தியது போல் தெரியவில்லை. இப்போது அவள் காதுகள் தோடு போடுவதற்கு மட்டுமே உபயோகப்படுகின்றன. காது கேட்காமல் போனதால் ஒரு நிரந்தர அசட்டுச்சிரிப்பு முகத்தில் அப்பிக்கிடக்கிறது. அதனால் தான் காணொளியில் கூறப்படும் செய்திகளுக்குச் சற்றே முரணாக இப்போதும் அவள் முகத்தில் அந்தச் சிரிப்பு.
கொரோனாவின் எண்ணிக்கை அதிகரிப்பு என்ற செய்தியுடன் ஆரம்பிக்கப்பட்ட அன்றைய அறிக்கை, மேலும் அங்கிருந்தவர்களுக்குப் பிடிக்காத அல்லது பயம் ஏற்படுத்தக்கூடிய விஷயங்களைக் கூறிக்கொண்டிருந்தது. கூட்டமாக அந்த குடி இருப்பின் பல குடும்பங்களின் பெண்கள் இந்த ஓர் இடத்தில் குவிந்திருந்தார்கள்.
ஊரடங்கு உத்தரவு என்று கூறப்பட்டபோது, அனைவரும் சொல்லி வைத்தார் போல் அய்யோ சத்தம் இட்டார்கள்.
“என்னாடி செல்வி, என்ன கூத்து இது. வேலைக்கு போகக்கூடா தாமில்ல?அப்ப வேளா வேளைக்கு சோற்றுக்கு இன்னா செய்யணுமாம்?”
குரல் கொடுத்த பாப்புவிற்கு, மூன்று குழந்தைகள். எந்தக்குழந்தை யாருக்குப்பிறந்தது என்பது இறைவன் கூட அறியா ரகசியம். அவளுக்கு நிரந்தர கணவன் என்று எப்போதும் ஒருவர் என்று இருந்ததில்லை. லிவிங் டுகெதர் என்பது இல்லாமையும் இயலாமையும், இவர்களிடம் ஏற்படுத்திய ஒரு பழக்கம் .அவளால் குழந்தைகளுக்கு அரை வயிற்றுச் சாப்பாடு மட்டும் தான் கொடுக்க முடிந்திருக்கிறது. இப்போது. கூட, குடியிருப்பின் ஏதோ ஒரு வீட்டு வாசலில் நின்று அவை மூன்றும் கைகளை நீட்டியபடியே நின்றிருக்கக்கூடும். இந்த நிலையைச் சமாளிக்க யாரோ ஒருவனுடன் சேர்ந்து வாழ்ந்து, ஒரு குழந்தையைக் கொடுத்துவிட்டு அவன் காணாமல் போகும்போது அந்தக்குழந்தையை வரமாக நினைத்து அதற்கும் சேர்த்து உழைப்பது என்பது பாப்புவிற்கு மட்டுமே இயலும்.
செல்லி பலமாக உஷ்ஷிட்டு அனைவரின் சத்தத்தையும் நிறுத்தினாள்.
“அட, இன்னா சொல்றாங்க கேப்போமுல்ல”
செல்லி புரசைவாக்கத்தில் இருந்த ஒரு தையற் தொழிற்சாலையில் தினக்கூலி வேலையில் இருந்தாள். வாரத்தில் ஏழு நாளும் வேலை. ஆனால் வீட்டிற்கு வரும் போது கைகளில் அடுத்த நாளுக்கான தேவை பொருட்கள் வாங்கி வரும் அளவிற்குப் பணம் இருக்கும். ஒரு வாரமாக அவளை வர வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்.
ஊரடங்குச்சட்டம் அமலுக்கு வருகிறது. யாரும் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது.
அவளுக்குத் திக்கென்று வந்தது. அப்போது வேலைக்குப் போக முடியாதா? ஒரு கார் ஷெட்டில் மெக்கானிக்காக வேலை பார்க்கும் அவள் புருஷனின் நிலை? அவனுக்கு மாத சம்பளம் வருமா? பையன் இஸ்கோல் பீஸ் ஜூன் மாசம் கட்டவேண்டுமே? அதற்குள் நிலைமை சரியாகி விடுமா? இந்த வாரம் சமாளித்து விடமுடியும். அடுத்த வாரம் பொருட்கள் வாங்கப் பணம்? வருமா இல்லை வராதா?
இவை எதுவும் காதில் விழாமல் கண்ணாத்தாள் அனைவரையும் பார்த்து தன் சிரிப்பைப் படர விட்டாள்.
“இன்னா, அம்புட்டு பேர் மொகத்துலேயும் ஒரு சிரிப்பைக்கூட காணோம். ஏண்டி செல்லி, இந்த சானலை இன்னாதுக்கு வெச்சுகிட்டு. அதான் அந்த சேனலு….ஆங்…பேர் இன்னா…. கவுண்டமணி செந்தில் சிரிப்பு படமெல்லாம் காட்டுவாங்களே….அத்தைதான் வைக்கிறது….”
“அட, கிழவி, சும்மா கம்முனு கிட” மாமியாரைக் கிழவி என்று செல்லமாகக் கூப்பிடும் செல்லி, அதட்டிப்பேசி அவளை நிறுத்தினாள்.
“ரேஷன் அரிசி போடுவாங்காளா? சுத்தமா காலி ஆயிடுச்சுபா” வள்ளி சந்தேகம் எழுப்பியபடி எழுந்து நின்றாள்.
வாயில் அதக்கி வைத்திருந்த புகையிலை கூடிய வெற்றிலைச்சாற்றை வாசலுக்குச்சென்று “பச்” என்று வெகு சத்தத்தோடு துப்பியபின், உதட்டோரம் வழிந்து நின்ற சாரை புடவை தலைப்பால் துடைத்து எடுத்தபடி உள்ளே வந்து அமர்ந்த வள்ளியின் மடிமேல் சென்று அமர்ந்தது சிட்டு என்று அழைக்கப்படும் மூன்று வயதான செல்லியின் பெண். அதே புடவை தலைப்பால் சாக்லேட் அப்பி நின்ற சிட்டுவின் முகத்தை வள்ளி துடைத்துவிட்டாள்.
“சாக்கேத்து….சாக்கேத்து….”
“ஏய் சிட்டு, வாய மூடிகினு கம்முனு கிடக்கனும், இல்லாகாட்டி…..ஆமாம் சொல்லிபுட்டேன்” செல்லி சிட்டுவை அதட்டி நிறுத்தினாள்.சிட்டுவை பாதி நேரம் பார்த்துக்கொள்ளுவது வள்ளிதான். காலையில் தையல் வேலைக்குச்சென்று திரும்பி வரும் வரையில் இந்தக்காது கேட்காத கிழவியை நம்பி குழந்தையை விட்டுப்போக முடிவதில்லை. பையன் சமாளித்துக்கொள்கிறான். பெரியவனாகிவிட்டான். குழந்தை இல்லாத வள்ளி, சிட்டுவை நன்றாகத்தான் கவனித்துக்கொள்கிறாள்.
எதுவும் கேட்காத கண்ணாத்தாளின் காதுகள் ஒரு சில நேரம் ஏதோ சில வார்த்தைகள் தெளிவாக வந்து விழும். சிட்டு கேட்ட சாக்லேத்து அவள் காதுகளில் தெளிவாக விழுந்தது. மெதுவாகப் புடவையைச் சேர்த்துப்பிடித்தபடி எழுந்து நின்றாள். ஊக்கு வைக்கப்படாமல் தைக்கப்பட்டிருந்த ஜாக்கெட், அதன் வேலையைச் சரியாகச் செய்யாமல் மேலே உருண்டு சுருண்டு கிடந்தது. லாவகமாக இழுத்து
விட்டு இடுப்பில் இறுக்கி ஓர் முடிச்சிட்டாள்.
“இந்த புள்ள, நா வேலை பாக்கும் ஊடு வரை போய்யாந்துரேன்.”
விலுக்கு என்று செல்லி சத்தம் வந்த சுவர் ஓரம் திரும்பினாள்.
“இன்னா கிழவி இது ரோந்து பண்ணாதே. ஊரே திமிலோக பட்டுக்கிடக்கு, அதுலே இது வேலைக்கு போகுதாமில்ல, சும்மா படு…அக்காங்.”
கிழவிக்கு எந்த வார்த்தையும் காதில் விழவில்லை. உஷ் என்று ஒரு சத்தம் மட்டும் மருமகள் ஏதோ சொல்வதைக் கூறியது.அசட்டுச்சிரிப்பைத் தவழ விட்டபடி வாசலுக்குச்சென்றாள்.
“அய்ய, போகாதே…..நில்லு” செல்லி மிக அதிக சத்தமாக வார்த்தைகளை உதிர்த்தாள். அவை கிழவியின் காதுகளுக்குள் சென்று அமர்ந்தது.
“கண்ணு, வேலை பாக்குற வீட்டு அம்மா இந்நாளுக்கு முத நா ஊர் வந்திருக்கும். போய் ஒரு நட இன்னான்னு பாத்துபுட்டு வாரேன். அந்த அய்யா வெளிதேசம் போய் வந்திருக்காரு. நம்ம சிட்டுக்கு நிறைய சாக்கலேட் வாங்கியாறேன்னு சொன்னாரு. அதைப்போய் எடுத்தாரேன்…” செல்லி பேசத்தொடங்கும் முன் அவள் வயதிற்கு யாரும் எதிர்பாராத அவசர நடையில் கண்ணாத்தா வெளியே சென்றாள்.
“செல்லி, இந்தக்கிழவியை எப்படித்தான் வேலைக்கு வெச்சிருக்காங்களோ? நான் அம்மாம் வேலை செஞ்கினிருக்கேன். அத்தையும் தாண்டி இது சரி இல்ல, அது சரி இல்லேன்னு ஒரே இம்சை….இந்தக்கிழவி அப்படி இன்னா வேலை தான் செய்யும்?” கூட்டத்தில் ஒரு பெண் கேள்வி எழுப்பினாள்.
“அட, நீ வேற. கிழவி ரொம்ப வருஷமா அந்த வூட்டுலேதான் வேலை செய்யுது. பெரியம்மா காலத்துலே ஆரம்பம். அந்த மகராசி போய் சேர்ந்துட்டாங்க. புது மருமக பொண்ணு. வடக்கே இருந்து வந்திருக்கு. புருசன்காரன் கிழவியைப் பத்தி நிறைய சொல்லியிருக்கிறான் போல. கை சுத்தம், லீவு போடாது….இப்படித்தான். அந்தப்பொண்ணும் இதுக்கு காது கேக்காது இருந்தாலும் இவளை வரச்சொல்லுது. வேலை ஒண்ணும் அம்புட்டு இல்லை.புருசன்காரன் பாதி போது வெளிநாடு போயிடுவான். அந்தப்பொண்ணும் ஆத்தா வூட்டுக்கு மூட்டையைக் கட்டிடும். கிழவி பாடு கொண்டாட்டம்.வேலை செய்யாமலே பணம். பாரேன்,அதான் ஓடுது.”
“அட, நானும் ஒரு நடை போயாந்துர்றேன். அந்த அம்மா சரியான ரவுசு பார்ட்டி. ஆள் வரலைன்னு காரணம் காட்டி சம்பளத்தில் கை வெப்பாங்க.பாதி மாசம் வேலை பாத்துருக்கேன் இல்ல, விட்டுடவனா?”
மெதுவாக அனைவரும் கலையத்தொடங்கினர்.
“டுடேஸ் ஹெட்லைன்ஸ்”
சுவரில் மாட்டப்பட்டிருந்த அந்த 54 இன்ச் எல் சி டி கானொளிப்பெட்டி மெதுவான டெசிபலில் செய்தி வாசித்துக் கொண்டிருந்தது.
அது இரண்டு அடுக்குகொண்ட தனி வீடு. அழகான தோட்டத்தில் ரோஜாக்கள் வளைந்து பூத்திருந்தன. வான் உயர நின்ற மரமல்லி, வாசல் முழுவதும் பூக்களை இஷ்டத்திற்குச் சிதற விட்டுக் கண்டபடி சுகமான வாசனையைப் பரப்பிக்கொண்டிருந்தது.
உள்ளே ஹால் சோபா முழுவதும் திறந்து கிடந்த சில பெட்டிகள் தங்கள் அந்தரங்களைப் பறை சாட்டிக்கொண்டிருந்தன. செண்ட் பாட்டில்கள், புது உடைகள், சாக்லேட் பெட்டிகள்….தாறு மாறாக இறைந்து கிடந்தன. உள்ளே படுக்கை அறையில் விக்கி இழுத்துப்போர்த்தியபடி உறங்கிக் கொண்டிருந்தான். ஜெட் லாக்கில் அப்போது மதிய நேரம் என்பதைப் பதிவு செய்யாத அவன் மூளை நடு இரவு கணக்கைக் காட்டிக்கொண்டிருந்தது. ஏசியின் கும்மென்ற சத்தம் மட்டும் அங்கே விழித்துக் கொண்டு இருந்தது. கதவை மெதுவாக திறந்து லேசாகத் தலையை நீட்டி அவன் உறக்கத்தில் இருப்பதை நிச்சயம் செய்துகொண்டாள் ஆஷா.
கைப்பேசியின் அழுத்தல்கள் நம்பர் ஒன்றுக்கு உயிர் கொடுக்க
” பா, ஹாங், ஆஷா போல் ரஹி ஹூம்.”
” ….”
” இல்லை பா, தூங்கிக் கொண்டிருக்கிறான்”
“….”
தெரியவில்லை. க்வாரந்டைன் செய்யப்படவில்லை. அனுப்பிவிட்டார்கள்”
“….”
“ஆமாம், வீட்டை விட்டுச் செல்வதற்கு அனுமதி இல்லை. ஹாங்…பயமாகத்தான் இருக்கிறது. இவன் வேறு இத்தாலியில் இரண்டு நாட்கள் இருந்திருக்கிறான்.”
“……”
“ஒத்துக்கொள்ள மாட்டான் பா”
“…..”
“அது சரியாக இருக்காது. பாவம் விக்கி. இரண்டு மாதம் தனிமையில் கஷ்டப்பட்டிருப்பான். எதைக்காரணம் சொல்லி நான் கிளம்பி வருவது?”
“…..”
“இல்லை, என் பக்கம் வரவில்லை. நடுராத்திரி தான் வந்தான். நிறையத் தூக்கங்களையும் சேர்த்து எடுத்து வந்திருந்தான். பெட்டிகளைத் திறந்து சாமான்களைக் காட்டத்தொடங்கினான். தூக்கம் மீறி வர, எல்லாவற்றையும் அப்படியே போட்டு விட்டுத் தூங்கிக்கொண்டிருக்கிறான்.”
” …..”
“இல்லை, விமானநிலையத்தில் நெற்றியில் தெர்மாமீட்ட்ர் வைத்துச் சோதித்துப்பார்த்தார்களாம். ஆமாம், நார்மல் டெம்பரேசர் தான்.”
“…”
“அவன் சொன்னது கொஞ்சம் கவலையாகத்தான் இருந்தது. பாராசிடமால் போட்டுக்கொண்டு வந்தானாம். அப்போதுதான் உடல் சூடு குறைத்துக்காட்டுமாம். அவனுடைய நண்பர்களும் இதைத்தான் செய்தார்களாம்…. ஆமாம், அதேதான். அனாவசியமாக பதினைந்து நாள் தனிமைப்படுத்தப்படுவதைத் தவிர்க்கத்தான்”
“…”
”இல்லை, இது வரையில் இருமல் தும்மல் எதுவும் இல்லை. சாதாரணமாகத்தான் இருக்கிறான்.
“…”
“அது சரியாக இருக்காது பா. நானும் நேற்று தான் நம்ம வீட்டிலிருந்து திரும்பி வந்திருக்கிறேன். இப்போது எதைக்காரணமாகச்சொல்லி உடனடியாக கிளம்புவது?”
“….”
“வேண்டாம், உங்களுக்கு உடம்பு மோசமாக இருக்கிறது எனும் பொய் வேண்டாம். சீக்கிரம் கண்டு பிடித்துவிடுவான். பேசாமல் உண்மையைச்சொல்லி விடுகிறேன். நீங்கள் மிகவும் கவலைப்படுவதால், நான் போக வேண்டியது கட்டாயமாகிறது என்று சொல்லி விட்டுக்கிளம்பி விடுகிறேன்.”
“……”
“இல்லைபா…நான் எந்த சாமானையும் தொடவில்லை. சரி, என் பெட்டியை அடுக்கி வைத்துக்கொள்கிறேன். நாநாஜியை இன்னும் மூன்று மணி நேரத்திற்குப்பின் காரை எடுத்துக்கொண்டு வரச்சொல்லுங்கள்…..புரிகிறது. காரிலேயே வந்து விடுகிறேன்….ஆமாம், ப்ளைட்ஸ் எல்லாம் கான்சல். …. ரொம்ப சரி, போக விட மாட்டார்கள்….காரிலேயே வந்து விடுகிறேன்.”
வாசலில் சத்தம் கேட்டது.
“அம்மா….அம்மா….நாதாம்மா கண்ணாத்தா.”
ஆஷா அவசரமாக வாசலுக்கு வந்தாள்.
“அம்மா, வந்துடீங்களாந்னு பாத்துட்டு போக வந்தேன். வாசல்லாம் குப்பையா இல்ல இருக்குது. வாரிப் போடட்டுமா?”
கண்ணாத்தாள் ஆஷாவின் பதிலுக்குக்காத்திராமல் வாசலைச் சுத்தமாகப் பெருக்கத்தொடங்கினாள். அவளின் அவசர தள்ளலுக்குப் பயந்த நீள நீள மரமல்லிகை மலர்கள் ஒன்றுகூடிக் குவிந்து தங்களுக்குள் பேசத்தொடங்கின. தண்ணீர் தெளித்து மிக அழகான புள்ளி கோலம் ஒன்றை அந்த மதிய நேரத்தில் வாசலில் இட்டாள்.
அஷா சத்தமாகக் குரல் கொடுத்தாள்
“வேற வேலை எதுவும் இல்ல, இப்போ வேலை ஏதும் செய்ய வேண்டாம். போய்டு வாங்க. கொஞ்ச நாள் வர வேண்டாம். எல்லாம் சரியாகப் போகட்டும்.அப்புறம் சொல்லி அனுப்புறேன்”
கண்ணாத்தாள் காதுகளில் விழவில்லை. அசட்டுச் சிரிப்புடன் விழித்துக்கொண்டு நின்றாள்.
ஆஷா கைகளையும் கால்களையும் விரித்து, அவள் முன் சொன்ன வார்த்தைகளுக்கு உயிர் கொடுத்தாள்.
கண்ணாத்தாளுக்கு புரிந்தது
“ஹாங்….அப்போ சரித்தா , நா போயாறேன்….” போகாமல் தலையைச் சொரிந்து கொண்டு நின்றாள்.
அஷா கேள்விக்குறியோடு என்ன என்று கேட்பது போல் கை அசைத்தாள்.
“அய்யா சாக்கலேட்டு தாரன்ன்னு சொன்னாரு, அதான் வந்துட்டாரா?”
ஆஷா உள்ளே சென்று நாலைந்து சாக்லேட்டுக்களை வெகு ஜாக்கிரதையாக கைகளில் படாமல் எடுத்தாள். பக்கத்தில் இருந்த விக்கியின் கை குட்டையில் அவற்றைச் சுற்றி எடுத்து வந்தாள். திறந்த நிலையில் பாதி சாப்பிடப்பட்ட சாக்லேட் பார் ஒன்றையும் அவற்றுடன் சேர்த்துப்போட்டுக் கட்டினாள்.
“ரொம்ப டாங்க்ஸும்மா” கண்ணாத்தாள் அவசரமாக மூட்டையை கைகளில் வாங்கினாள்.ஆஷா உள்ளே சென்று கைகளை நன்றாக சோப் போடு கழுவி, பின் தனக்கான பெட்டியை அடுக்கத் தொடங்கினாள்.
கண்ணாத்தாள் வீட்டுக்கு வந்த உடன் சிட்டுவிற்கு ஒரு சாக்லேட் பிரித்துக் கொடுத்ததையும், பாதி சாப்பிடப்பட்டு இருந்ததை தான் சாப்பிட்டதையும், சிட்டு சாக்லேட் அப்பிய முகத்துடன் வள்ளியின் மடியில் தவழ்ந்து ஏறியதையும், அவள் தன் புடவை தலைப்பால் அதைத்துடைத்து எடுத்து பின் தன் மூக்கை அதில் சிந்தியதையும்…
இவற்றை எல்லாம் நான் சொல்லப்போவதில்லை .
சொல்லப்போவது இது ஒன்று மட்டும்தான்
உள்ளே தூக்கத்தில் படுத்திருந்த விக்கி பின் இரும்பத்தொடங்கினான். வறட்டு இருமல் நிற்காமல் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை,விக்கி ஆரம்பப்புள்ளி இட்டு துவைக்கி வைத்த அந்த பெரும் தொற்று, பல அலைகளாகத் தொடர்ந்தது அந்தக்குடியிருப்பின் பல மனிதர்களின் உயிரைக் குடிக்கப்போகிறது என்பதை.
லதா ரகுநாதன்
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 280 ஆம் இதழ் இன்று
- ஸ்ரீரங்கம் பூங்கா !
- நாட்டுப்புற பாடல் – இனிக்க சேதிகொண்டு வருவேனுங்க
- வைதீஸ்வரனின் ஆவணப்படம்….
- அச்சம்(La Peur)
- தில்லிகையின் அக்டோபர் மாத கூடுகை அழைப்பிதழ்
- பூவம்மா
- தொடரும்…..!!!!
- உறவே! கலங்காதிரு…
- இரு நூல்களின் வெளியீட்டு விழா நிகழ்வு
- மழைப்பொழியா மேகங்கள்
- காற்றுவெளி ஐப்பசி 2022
- 2 கவிதைகள்
- கபுக்கி என்றோர் நாடகக்கலை
- அன்னம் நடராஜனும் ,இலக்கியா நடராஜனும் அவரின் நாகராஜன்கள் கதைகளும்
- கனா கண்டேன்!
- அமரர் கே. எஸ். சிவகுமாரன் வாழ்வை கொண்டாடுதல்