வைதீஸ்வரனின் ஆவணப்படம்….

author
0 minutes, 2 seconds Read
This entry is part 4 of 17 in the series 9 அக்டோபர் 2022

 

       அழகியசிங்கர்

 

 

          சமீபத்தில் கவிஞர் வைதீஸ்வரனுடைய ஆவணப்படம் ஒன்று அவர் பிறந்த நாள் போது காட்டப்பட்டது.  குவிகம் என்ற இலக்கிய அமைப்பு தயாரித்த ஆவணப்படம். நிழல் பத்திரிகை ஆசிரியரான நிழல் திருநாவுக்கரசு இயக்கிய படம். அறை முழுவதும் கூட்டம் நிரம்பி வழிந்தது. சிறப்பாக எடுத்திருந்தார் நிழல் திருநாவுக்கரசு.ஒரு மணிநேரம் எடுக்கப்பட்ட இந்த ஆவணப்படம் கொஞ்சங்கூட தொய்வில்லாமல் எடுக்கப் பட்டிருக்கிறது. இது முக்கியம்.  வைதீஸ்வரனையே மையப்படுத்தி எடுக்கப் பட்டிருக்கிறது.   

          இப்போது வைதீஸ்வரனுக்கு நெருக்கமாக இருக்கிற நண்பர்களையும் ஒரு நிமிடமாவது ஆவணப்படத்தில் பேச வைத்திருக்கலாம் என்பது என் கணிப்பு.

          1935ல் செப்டம்பர் 22 ஆம் தேதி வைதீஸ்வரன் பிறந்தார்.  அவருக்கு இப்போது 87 வயது . 

          இன்னும் கவிதைகள் எழுதிக்கொண்டிருக்கிறார்.  அவருடைய மொத்தக் கவிதைகளையும் சேர்த்து மனக்குருவி என்ற பெயரில் ஒரு புத்தகம் வந்திருக்கிறது.

          அப் புத்தகத்தில் அற்புதமான அவருடைய ஓவியங்களும் இன்னும் பலருடைய ஓவியங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

          வைதீஸ்வரன் ஒரு சிறுகதை ஆசிரியர்.  ஒரு கவிஞர். ஒரு கட்டுரையாளர்.  எல்லாவற்றையும் விட சிறப்பு அவர் ஒரு ஓவியர். ஏற்கனவே அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் பகுதியில் உபதேசம் நமக்கு என்ற கவிதையை எடுத்து எழுதியிருக்கிறேன்.

          அவருடைய கவிதைகளை முழுக்கப் பார்த்தால் பல செய்திகளைச் சொல்கின்றன.  

          கவிஞனின் மன ஆழத்தை அவர் கவிதைகள் சுட்டிக் காட்டுகின்றன.

          இவர் கவிதையைப் படிப்பவருக்கு எந்தச் சிரமமும் கொடுக்கவில்லை.  சிக்கலைத் தோற்றுவிக்கவில்லை.  

          இயற்கையைப் பற்றி, சமூக விழிப்புணர்வு பற்றி மெலிதான சத்தமில்லாத குரல் இவருடைய கவிதைகளில் தெரிகிறது. 

          ‘ஞானம்’ என்ற கவிதையை எடுத்துப் பார்க்கலாம். 

         

          வீட்டுக்கு வீடு வந்து

          ஓட்டுக் கேட்டபோது

          வேடிக்கையென்றிருந்தேன்.

          போட்டோவில் கள்ளமற்ற

          புன்சிரிப்பைப் பார்த்தபோது

          சிரிக்கட்டும் என்று விட்டேன் –

          இன்று சாக்கடை நீர் வழிந்து

          தெருவுக்குள் நுழைந்த பின்தான்

          வாக்கிழந்த மடையன்

          நானேதான் என்றறிந்தேன்.

 

          இது ஒரு அரசியலைப்பற்றிப் பேசும் கவிதை. எல்லோருக்கும் புரிந்து கொள்ளும்படியான கவிதை.  இந்த இடத்தில் க.நா.சு எழுதிய ‘விலை’ என்ற கவிதையைப் பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன்.

 

 

          ஓ! ஓ! ஓ! ஓ!

          இவனுக்குத் தேச பக்தி

          நிறைய வுண்டு. தேசத்தை

          விற்கும்போது

          நல்ல விலை போகும்படி

          பார்த்துக் கொள்வான்

          இவனுக்குத் தேசபக்தி

          நி றை ய வுண்டு 

          ஓ! ஓ! ஓ! ஓ

 

          இப்படிக் கிண்டலாக எழுதி உள்ளார். 

 

          இதுமாதிரி சமூக விழிப்புணர்வு கவிதை பலராலும் பல சந்தர்ப்பங்களில் காலம் காலமாக எழுதப்பட்டுள்ளன.  அரசியல் வாதிகள் என்றால் பணம் சம்பாதிப்பார்கள் என்றும் மக்களுக்கு நல்லது பண்ணுவதுபோல் பணம் அதிகமாகக்  கொள்ளை அடிப்பார்கள் என்றும் பொதுப்புத்தி பொதுவாக எல்லோர் மனதிலும்  இருக்கிறது.  கவிஞர்களிடம் இது கூடுதலாகக் கவனம் பெறுகிறது.

          மைலாய் வீதி என்ற நீண்ட கவிதை உலக அரசியலின் அவலத்தைப் பேசுகிறது. 

          பூங்காவில் முதியவர்கள் என்ற கவிதை வினோதமான கவிதையாக இருந்தது. அக் கவிதை இதோ:

 

                    வித வித உயரங்களில்

                    மூன்று பேர் வருகிறார்கள்

                    அவர்கள் பேச்சின் தரங்களும்

“                   வித விதமானவை.

                    எப்போதாவது

                    ஒருவரையொருவர் ஒப்புக்கொண்டதுபோல்

                    நிழலில் நிற்கிறார்கள்.

 

                    பிறகு குழப்பம் தீராதது போல்

                    அண்ணாந்து பார்த்து

                    விவாதங்களுடன் மேலும் தொடருகிறார்கள்

 

                    பேச்சிடையில்

“                   குறுக்கிடும் சின்ன வேலிகளை

                    உயர்ந்தவர் தாண்டிக் குதிக்கிறார்

                    குள்ளமானவர் 

                    குனிந்து தாண்டுகிறார்

 

                    வேலியை தாண்டிய பின்னும்

                    விவாதங்கள் முடிவுக்கு வராமல்

                    நாற்சந்தியில் நிற்கிறது

                    பேச்சு.

 

                    பொழுதில் 

                    பாதை தெளிவற்றுப் போக மீண்டும்

                    நாளைக்கு தொடருவதற்கான நம்பிக்கையுடன்

                    வெவ்வேறு வழிகளில்

                    பிரிகிறார்கள் வீட்டை நோக்கி

 

                    இப்படித்தான் பல நாட்களுக்கு

                    அவர்கள் விவாதம் முடிவுக்கு வராதென்று

                    தோன்றுகிறது – அவர்கள் ஆயுளைப் போலவே

 

                    விவாதம் என்றாவது முடிந்து விடுமோ?

                    கவலையாகவும் இருக்கிறது.

 

          கடைசி வரி கவிகுரலோன் வரி.  கவிகுரலோன் இந்த விவாதம் முடிவதை விரும்பவில்லை என்று முடிக்கிறார்.

 

                    பூ வாங்க ஒரு யோசனை என்ற கவிதை.

 

                    பூக்காரிகளின் 

                    இடுப்புக் கூடைகளில்

                    அடுக்குக் கதம்பங்கள்

                    விதவிதமாய் குலுங்கி வரலாம்.

                    அவரோடு கூட வரும்

                    கூவலுடன் மிதந்து வரும் பூமணமும்

                    குரல் இழைந்த 

                    சரச விலைப் பேச்சும்

                    உங்களை 

                    அவசரப் படுத்தலாம், பொறுங்கள் சற்று –

                    அந்த 

                    வாய் அளப்புக்கு வளைந்து விடாமல்

                    மனதுக்குள் அவள்

                    முழங்கையைப் பிடித்து

                    முழம் போட்டுப் பாருங்கள்,

                    முதமுதலில்

 

                    ஏனென்றால்,

                    எந்தக் கைகளுக்கும் ஒரு

                    நியாயமான

                    நீளம் இருக்க வேண்டும்!

         

 

          இங்குக் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு கவிதைகளிலும் கவிகுரலோன் வாயிலாகக் கவிஞரின் போக்கைக் காட்டுகிறது.  இதுதான்  இங்குக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.  கவிதையை எழுதுவதுமூலம் தன்னை அறியாமல் தன் மனநிலையை வெளிப்படுத்து விடுகிறார்.  இதெல்லாம் கவிஞருக்குத் தெரியுமா? தெரிந்துதான் எழுதுகிறாரா என்ற கேள்வி எழாமலில்லை.    

—           

                                       09.10.2022 

Series Navigationநாட்டுப்புற பாடல் – இனிக்க சேதிகொண்டு வருவேனுங்கஅச்சம்(La Peur)
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *