கொலுசு

author
0 minutes, 12 seconds Read
This entry is part 3 of 7 in the series 16 அக்டோபர் 2022

 

                           ஆ.மீனாட்சி சுந்தரமூர்த்தி                                        

 

               ஒருநாளும் இந்தப் பேருந்தில் உட்கார இடம் கிடைக்காது.எந்த மாதமானாலும் கூட்டம்தான்.ஏதாவது ஒரு திருவிழா கோவிலில் எப்போதும் இருக்கும். நேர்த்திக் கடன் செலுத்துவதற்கும், திருவிழாக் காணவும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இது தவிர கார்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தர்கள் சபரிமலை சென்று விட்டு வருபவர்கள் பழனி மலை ஏறிவந்து முருகனைத் தரிசிக்காமல் ஊர் திரும்ப மாட்டார்கள்  இத்தனை காரணங்கள் இருக்கிறது. . .சரி இதைத் தவிர்த்து நகரப் பேருந்துகளில் செல்ல முடியும் ஆனால் ஈரோட்டிலிருந்து பள்ளி சென்று சேர ஒருமணி நேரம் பிடிக்கும். பழனி செல்லும் பேருந்துகள் இருபது அல்லது இருபத்தைந்து நிமிடத்தில் கொண்டு சேர்த்துவிடும். அதனால் காலை, மாலை இவற்றில்தான் பயணம்.காலையில் எட்டு இருபதுக்கு பங்க்கில்(பெட்ரோல் பங்க்) ஏறுவது வழக்கம் அமுதாவும் உடன் வரும் தோழியரும்.ஓட்டுநரின் அருகில் உள்ள  எஞ்சின் பெட்டியின் மீதும், முன்பகுதியின் கண்ணாடிக்கு அருகிலும் சிலவேளைகளில் அமர்ந்தும் சில வேளைகளில் நின்றும் பயணம் செய்வதுண்டு. தினம் ஏறுவதால் சமயத்தில் ரெயில்வே காலனியிலிருந்து புறப்படும் அமுதா நாடார் மேடு வழியாக பங்க்  நிறுத்தம் வரத் தாமதமாகிவிட்டால்  நடுவில் எங்கு கை காட்டினாலும் ஓட்டுநர்கள் நிறுத்தி ஏற்றிக் கொள்வார்கள்.

            பள்ளி முடிந்து பத்து,பன்னிரண்டாம் வகுப்புகளுக்கு ஒரு மணி நேரம் கூடுதல் வகுப்பு உண்டு. யாருக்கு வகுப்பு என்றாலும் இவர்கள்  காத்திருந்து ஒன்றாகவே திரும்புவார்கள். அன்று அமுதா வகுப்பு முடித்து வந்ததும் தோழியர் பேருந்தில் ஏறி தீபாவளிக்கு என்ன பலகாரங்கள் செய்யலாம் என உற்சாகமாய் உரையாடிக் கொண்டு வந்ததில் நேரம் போனதே தெரியவில்லை .பங்க்கில் இறங்கி அவரவர் விடைபெற்றனர்.

              அமுதா ஓரிரு கடைகள்தான் தாண்டியிருப்பாள், காலில் ஏதோ இடறியது.மாலை மயங்கி விளக்குகள்  ஒளிரத் துவங்கிய அந்த அந்தி வேளையில் பளபளவென மின்னியது மங்கை டீச்சர் நெற்றியிலிடும் திருநீற்றுப் பட்டை போல் புத்தம்புது வெள்ளிக் கொலுசு. யார் இதைத் தவற விட்டிருப்பார்கள். கையிலெடுத்தாள், என்ன செய்வதெனத் தெரியவில்லை. அலைபேசியை எடுத்து எதிர் திசையில் நடந்துகொண்டிருந்த விமலாவை அழைத்துச் சொன்னாள்.

அவள் ,’ இது ஒண்ணும் பெரிய விஷயமில்ல ,எதிர்ல என்ன கடை இருக்கு?

‘ ம்ம் ஸ்ரீராம் மருந்து கடை’

‘ சரி அங்கே கொடுத்துச் சொல்லிடு.’

 ‘ நான் இங்க  பங்க் ஆட்டோகாரங்க கிட்ட சொல்லிட்டுப் போறேன்

‘தொலைச்சவங்க வந்து கேட்டா அங்க வாங்கிப்பாங்க’

‘சரி பா’

 

              இவள் பெரிய கண்ணாடிக் கதவைத் திறந்து கொண்டு மருந்துக் கடையின் உள்ளே சென்றாள். ‘வாங்க மேடம் என்றான் கணினியின் முன் அமர்ந்திருந்த இளைஞன் முப்பது வயதிருக்கலாம்.,

‘இந்த கொலுசு உங்கள் கடைக்கு முன் சாலையில் கிடந்தது.’

‘ஓ அப்படியா, எங்க கடைக்கு வந்திட்டுப் போனவங்க யாராவது தவற விட்டிருப்பாங்களோ’  யோசித்தான்.

‘இருக்கலாங்க, ‘

‘மேடம் உங்க செல் நம்பர் கொடுங்க, யாராவது வந்தா உங்களிடம் வாங்கிக்கச் சொல்றேன்.’

‘ இல்லை, இந்தாங்க உங்களிடமே இருக்கட்டும், யாராவது தேடிட்டு வந்தா  வசதியா இருக்கும்’

என்று கொலுசைத் தந்து விட்டு நடந்தாள் அமுதா.

இரண்டு நாள் கழித்து எதேச்சையாகத் திரும்பிப் பார்த்தாள், மருந்துக் கடையில் ஓர் அறிவிப்பு,

‘ ஒரு வெள்ளிக் கொலுசு கிடைத்துள்ளது,

தவற விட்டவர்கள் அடையாளம் சொல்லி வாங்கிக் கொள்ளலாம்’

இதற்குப் பிறகு இதை மறந்தே போனாள்.

        இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் மாலை பள்ளி முடிந்து வீட்டிற்குத் திரும்பும்போது,

‘மேடம் ! சார் உங்கள வரச்சொல்றார்’ என்று பின்னால் வந்து அழைத்தான் மருந்துக் கடையில் வேலை செய்யும் பையன் ஒருவன்.

‘என்னை யா, எதற்கு’ 

என்று கேட்டுக் கொண்டே கண்ணாடிக் கதவைத் திறந்து உள்ளே சென்றாள் ..

‘வாங்க மேடம், இந்த கொலுச கேட்டு யாருமே வரல, இந்தாங்க’ என்று தந்தான் அதே இளைஞன்.அப்போதுதான் அவளுக்கு இது நினைவிற்கு வந்தது. அவனது நேர்மையை மனதில் வியந்து கொண்டே வாங்கிக் கொண்டு வந்தாள்.

‘என்னதான் செய்வது, எப்படி இதை உரியவரிடம் சேர்ப்பது, ‘

“தொலைத்தவர்கள் வெகுதூரத்திலிருந்து வந்தவர்களோ. வசதியானவர்களோ, ஏழையோ?

   சரியில்லை என கவலைப்பட்டிருப்பார்களோ”இப்படிப் பலவாறாக எண்ணினாள். அன்று முதல் அமுதாவின் நிம்மதி தொலைந்து போனது.

            கணவரிடம் சொன்னதற்கு,’ இது ஒரு விஷயமா, யாரும் கேக்கலேன்னா என்ன செய்ய முடியும்  விடு’ என்றார்,

தோழியர்,

‘கோவில் உண்டியல்ல போட்டு விடு’,

 திருடினதா இருக்குமோ என்னவோ”கடையில தந்து மாத்தி வேற வாங்கிக்கோ’

‘எத்தன பேரு நடந்திருப்பாங்க,யாருக்கும் கெடைக்காம உனக்குதானே கெடச்சுது.’இத்தன நாள் யாரும் வாங்கலேன்னா ஒரு தப்பும் இல்ல, ஒரு பாவமும் வராது. என்றனர்.ஆனால்  எதுவும் செய்யத் தோன்றவில்லை இவளுக்கு.அந்தக் கொலுசு மனதில் நெருஞ்சி முள்ளாக உறுத்திக் கொண்டிருந்தது.

          அன்று வெள்ளிக்கிழமை ரஸியா காலையில் ஏழு மணிக்கே வந்து விட்டாள், சுற்றி வைத்திருந்த மல்லிகைச் சரத்தையும், ரோஜாக்களையும்  அள்ளி,  கை நிறைய தந்தாள்.எப்போதும் முழம் போட்டு அளந்து தரவே மாட்டாள்,எத்தனையோ முறை அமுதா சொல்லிவிட்டாள் எல்லோருக்கும் தரும் விலைதான் தனக்கும் தரவேண்டும் என்று, ஆனால் அதைக் காதில்  வாங்கிக் கொள்ளவே மாட்டாள். அன்றும் பிடிவாதமாக ஐம்பது ரூபாய்க்கான பூவிற்கு இருபது  ரூபாய் மட்டும் வாங்கிக் கொண்டு,

‘பரோட்டா கடை  நல்லா நடக்குதுன்னு அவரு சொல்லச் சொன்னாருக்கா’  என்று நகர்ந்தாள் ரஸியா, திடீரென மின்னல் ஒன்று பளிச்சிட்டது அமுதாவிற்கு.

அடுத்த வெள்ளிக்கிழமை  ரசியாவுடன் வந்த  எட்டு வயதுச் சிறுமி பர்வீனின்  பட்டுப் பாதங்களில் வெள்ளிக் கொலுசுகள் மின்னின.

Series Navigationவின்சியோட நாட்டுப்புறப்பாடல்!3 கவிதைகள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *