நம்பிக்கை நட்சத்திரம்

author
0 minutes, 2 seconds Read
This entry is part 1 of 17 in the series 23 அக்டோபர் 2022

 

அ. கௌரி சங்கர்

சாந்தா. பெயருக்கேற்ற மாதிரி ஒரு அமைதியான பெண். வழக்கம் போல அன்றும் அவள் மாலை நான்கு மணிக்கு தனது வீட்டில் இருந்து தலையில் ஒரு பாத்திரத்தை வைத்துக்கொண்டு செல்ல ஆரம்பித்து விட்டாள். அவள் இடுப்பிலும் ஒரு பாத்திரம் இருந்தது. தலையில் உள்ள பாத்திரத்தில் இருப்பது சுண்டல்; அவளுக்கு தெரிந்த ஆசீர்வாத நாடார் கடையில் இருந்து தான் அவள் சுண்டல் வாங்குவது வழக்கம். வேறு எங்கும் வாங்குவது கிடையாது. சுண்டல் வாங்கும் போது பார்த்து வாங்கவேண்டும். அதனுடன் கல், வெள்ளை சுண்ணாம்பு போன்றவற்றையும் கலந்து எடை போடும் கடைக்காரர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். தனது வாடிக்கையாளர்களுக்கு தரமான பொருட்கள் கொடுக்கவேண்டும் என்பதில் ஆசீர்வாத நாடாரை மாதிரி பிடிவாதக்காரரை பார்க்க முடியாது.

வாங்கிய சுண்டலை நன்றாக புடைத்து, தூசிகளை நீக்கி, வேக வைத்து அத்துடன், மசாலா கலந்து எண்ணையில் ஓரளவு வதக்கி, அத்துடன் துருவிய தேங்காய், பிய்த்துப்போட்ட கொத்தமல்லி பிசிறுகள் இவை கலந்து கொடுக்கும்போது அதை வாங்கி சாப்பிடுபவர்கள் ருசித்து சாப்பிடுவார்கள். அவர்கள் குறைவாக வாங்கி சாப்பிடுகிறார்களோ அல்லது அதிகம் வாங்கி சாப்பிடுகிறார்களோ என்பது முக்கியம் அல்ல. அவர்களுக்கு உண்டு முடித்தபின் ஒரு நிறைவு இருக்கவேண்டும்.

 

தலையில் இருப்பது சற்று முன்னர் தயாரித்து எடுத்து வந்த சுண்டல் என்றால், இடுப்பில் உள்ள பாத்திரத்தில் இருப்பது பருப்பு வடைகள். அவளுடைய வாடிக்கையாளர்கள் இருக்கும் இடம் சென்னையின் முக்கிய இடமான மெரினா பீச். மாலை நேரத்தில், குழந்தைகளுடன் வருகின்ற பெற்றோர்கள்; தனிமையை நாடிவரும் பிரம்மச்சாரிகள்; அமைதியை நாடி வரும் சம்சாரிகள் – இவர்கள் எல்லோருக்கும் மேலாக காதலை வளர்ப்பதற்காக வருகின்ற வித விதமான காதல் ஜோடிகள் – இவர்களை நிறைய நிறைய பார்க்கலாம்.

 

இவர்கள் எல்லோரிடமும் இருக்கும் ஒரே ஒற்றுமை  – கடலை பார்த்து தான் அமர்வார்கள். அடுத்த ஒற்றுமை – நேரம் கழிவதற்காக, பர்சில் இருந்து பணம் எடுத்து கொடுத்து சுண்டல், பயறு, வடை போன்றவற்றை வாங்கி வாங்கி சாப்பிடுவார்கள். எப்படி தான் இவர்களுக்கு அவ்வளவு நேரம் கிடைக்கிறதோ தெரியவில்லை.

சாந்தாவிற்கு அவர்களின் குலம் கோத்திரம் பற்றி கவலையே இல்லை. வியாபாரம், வியாபாரம் – இது தான் அவளுடைய நோக்கம். அவளுடைய சக போட்டியாளர்களிடம் இருந்து தனது வியாபாரத்தை காப்பாற்றிக்கொள்ள அவள்  கையாளும் ஆயுதம்- அன்பாகவும் பணிவாகவும் பேசுதல்; தரமான பொருட்களை விற்றல் போன்றவை தான். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக வந்து கொண்டிருக்கிறாள். இவளுக்காகவே தாமதித்து, சுண்டல் வாங்கும் வாடிக்கையாளர்கள் பெருகி விட்டார்கள்.  சில நேரங்களில் ஒரு மணி நேரத்தில் விற்று விடும். பல நேரங்களில் முழுவதும் விற்க ஆறு மணிக்கு மேல் ஆகிவிடும். இருட்டிவிட்டால், கூட்டம் பெரும்பாலும் கலைந்து  சென்று விடும்.  நல்ல வியாபாரம் என்றால் ஒரு நாளைக்கு அவளுக்கு லாபம் மட்டும் ரூபாய் 500 தேறும்.

 

இப்பொழுது சாந்தாவிற்கு வயது நாற்பது. இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள். ஒரு பெண் 16 வயது; அடுத்தவள் 14 வயது. கணவன் கணேசன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி பத்து வருடங்களுக்கு முன்பாகவே இறந்து விட்டான். இவர்களை வளர்க்கும் பொறுப்பை சாந்தாவிற்கு  கொடுத்துவிட்டு சென்று விட்டான். இரண்டு பெண்களும் நன்றாக படிப்பவர்கள். தாய் படும் சிரமத்தை  நன்கு அறிந்தவர்கள். ஆனால் என்ன? அவர்களின் படிப்பு செலவு; துணிமணி செலவு இவற்றிற்காக சாந்தா என்ன என்ன பாடு படுகிறாள் என்பது அவளுக்கே  சில சமயங்களில் மறந்து விடும். அதாவது மரத்து போய்விடும்.

 

கணவன் இறந்த பின்னர், வீட்டு  வேலைக்கு சென்று வந்தாள் சாந்தா. நான்கு வீடுகளில் வேலை பார்த்து வந்தாள். காலை ஒன்பது மணிக்கு போனால், மாலை ஐந்து மணி வரை ஆகி விடும். மாதம் ரூபாய் 8000 வரை வருமானம் வரும். திடீர் திடீர் என்று, அவர்களில் யாராவது  ஒருவர் வீட்டை காலி செய்து சென்று விட்டால் இவள் பாடு திண்டாட்டம் தான். வேறு வீட்டுக்காரர்களை அணுக வேண்டும்.

 

சில மாதங்கள் சென்றன. திடீரென்று ஒரு நாள் வீட்டு வேலையை நிறுத்தி விட்டு, தனது வீட்டிலேயே இட்லி, தோசை  போன்றவற்றை தயாரித்து விற்று வந்தாள். ஆனால், சில விஷமிகளின் தொல்லை தாங்க  முடியாமல் போய்  விட்டது. கடன் வைத்தவர்கள் கடனை திரும்பி செலுத்துவதில்லை. திடீரென்று ஒரு தினம் முடிவுக்கு வந்தாள் –  காலையில் மட்டும் வீட்டில் இட்லி, தோசை தயாரித்து விற்று வந்தாள். மாலையில் மெரீனாவிற்கு வந்து விற்க தொடங்கினாள். இதன் மூலம் மாதத்திற்கு அவளுக்கு கிட்டத்தட்ட ரூபாய் 15000 வரை கிடைத்தது. மெரினாவில் அதிக பட்சம் அவளுக்கு வேலை இரண்டு மணி நேரம் தான்.

 

அன்று கூட்டம் அவ்வளவாக இல்லை. “நாம் சீக்கிரமாக வந்து விட்டோமா?” என்று கூட நினைத்தாள்.   சிறிது தூரம் சென்று கடல் அலை கண்ணில் படும் தூரத்தில் சென்று அமர்ந்தாள். பழைய நினைவுகள் இங்கும் அங்கும் வந்து போயின.

“ஏன் இன்னும் தேவிகா வரவில்லை?” – மனம் சந்தேகத்தை கிளப்பியது. தேவிகா கடந்த ஒரு வருடமாக இவளுக்கு பழக்கம். நல்ல பெண் தேவிகா; மிகவும் சாதாரணமான குடும்பம்; அப்பா அம்மாவிற்கு ஒரே பெண்; ஒரு தனியார் பள்ளியில் வேலை பார்க்கிறாள். அரை மணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை கடற்கரை வந்து விட்டு செல்லுவாள். எல்லாம் காதல் செய்யும் லீலை தான். அவள் காதலிப்பது கண்ணன் என்பவரை. கண்ணன் தேவிகாவை விட வசதி அதிகம் உள்ளவன். அவன் மெரீனாவிற்கு வருவதே தனது காரில் தான். இவள் வருவதோ ஆட்டோவில் அல்லது தனது ஸ்கூட்டரில். பணம் என்ற அளவுகோலை வைத்து பார்த்தால், தேவிகாவுக்கும், கண்ணனுக்கும் மடுவுக்கும் மலைக்கும் உள்ள தூரம். தெரிந்தோ அல்லது தெரியாமலோ காதலித்து தொலைத்து விட்டார்கள். நாள் தவறாமல் மெரினா வந்து அரை மணி நேரமாவது பேசிவிட்டு செல்வது தான் அவர்களுடைய வழக்கம்.

 

சாந்தா அவர்களை கவனிக்க தவறவில்லை. இவர்களை மட்டும் அல்ல. இவர்கள் மாதிரி தினமும் காதலர்கள் வருகிறார்கள்; காணாமலும் போய் விடுகிறார்கள்; ஒரு சிலர் திருமணம் செய்து கொண்டு அதன் பின்னர் இங்கு வந்து தங்களுடைய பழைய நினைவுகளை அசை  போட வருகிறார்கள்.

 

தேவிகாவிடம் சாந்தாவிற்கு ஆர்வம் வரக்காரணம் இது தான். தேவிகா அவளுடைய தங்கை மஞ்சுளா மாதிரி இருந்தது தான்.

 

மஞ்சுளா சாந்தாவை விட ஐந்து வயது சிறியவள். அப்பொழுது சாந்தாவுக்கு இருபத்தைந்து வயது இருக்கும். மஞ்சுளாவுக்கு இருபது வயது இருக்கும். மஞ்சுளா படிப்பில் கெட்டிக்காரி. அவர்களுடைய தகப்பனார் மளிகை கடை வைத்து இருந்தார். காச நோயினால் பீடிக்கப்பட்டு இருந்ததால், அடிக்கடி அவர் படுக்கையில் இருக்க வேண்டியிருந்தது. சாந்தா பத்தாம் வகுப்பு வரை படித்து விட்டு நிறுத்தி விட, மஞ்சுளா கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்தாள். சாந்தா தகப்பனாருக்கு உதவியாக கடைக்கு சென்று வந்து கொண்டிருந்தாள். கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த மஞ்சுளா காதல் வயப்பட்டாள். காதல் வயப்பட்டதோ ஒரு பணக்கார வாலிபனுடன். இவளை திருமணம் செய்து கொள்ளுவதாக வாக்கு தந்து விட்டு, திடீரென்று ஒரு நாள் மஞ்சுளாவை கூட்டிக்கொண்டு சென்று விட்டான் அந்த வாலிபன். மஞ்சுளா எழுதி வைத்த கடிதம் தான் அவர்களுக்கு விளக்கத்தை கொடுத்தது. கிட்டத்தட்ட ஒரு வருடம் மஞ்சுளாவை பற்றிய தகவல் எதுவும் இல்லை. வீட்டில் இருந்ததோ சாந்தாவும், அவளுடைய தந்தையும். தாயார் மஞ்சுளா வீட்டை விட்டு சென்று விட்ட துக்கத்தில் உயிரை விட்டு விட்டார்.

ஒரு நாள் இரவு நெருங்கும் நேரம். ஒரு ஆட்டோ வீட்டின் முன் வந்தது. தகப்பனாருக்கு மருந்து கொடுத்துவிட்டு வாசலுக்கு வந்த சாந்தாவுக்கு தெரிந்தது மஞ்சுளா வீட்டிற்கு வந்து கொண்டிருக்கிறாள் என்று. வந்தவள் எதுவும் பேசவில்லை. ஒரு மூலையில் சென்று அமர்ந்து விட்டாள். சாந்தாவுக்கு ஒன்றும் புரியவில்லை. மஞ்சுளாவிடம் விபரங்கள் கேட்கும் அளவுக்கு அவளுடைய தகப்பனாருக்கு தெம்பு இல்லை. இரண்டு நாட்கள் பித்து பிடித்தவள் போல அமர்ந்து இருந்த மஞ்சுளா மூன்றாவது நாள் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாள். மஞ்சுளாவை திருமணம் செய்து கொள்ளுவதாக கூட்டிக்கொண்டு சென்ற வாலிபன் அவளை கர்ப்பமாக்கிவிட்டு வீட்டை விட்டு துரத்தி விட்டு, வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டது தான் மஞ்சுளாவின் நிலை என்பது பின்னர் தான் தெரிந்தது. அடுத்த ஒரு மாதத்தில் சாந்தா தனது தந்தையையும் பறிகொடுத்தாள்.

தனி மரமாக இருந்த அவளுக்கு அவள் மேல் பிரியம் கொண்ட உறவினர்கள் கண்ணனுடன்  திருமணம் செய்து வைத்தனர். பத்து வருடங்கள் குடி பழக்கம் என்பதே தெரியாமல் இருந்த கண்ணன், தவறான பழக்கத்தினால், அந்த பழக்கத்திற்கு அடிமையாகி அவனும் இறந்து விட்டான். சாந்தாவை பொறுத்தவரையில் அடிமேல் அடி தான். அவளுடைய மகள்கள் தான் அவளுக்கு நம்பிக்கையை இப்பொழுது தந்து கொண்டிருக்கிறார்கள்.

 

தேவிகாவை பார்க்கும் போதெல்லாம் மஞ்சுளாவின் நினைவு வந்து கொண்டே இருக்கும். அவளும் மஞ்சுளாவை போல தனது வாழ்க்கையை இழந்து விடக்கூடாது என்பதில் சாந்தாவுக்கு மிகவும் கவலையாய் இருந்தது. தேவிகாவுக்கு நல்ல வாழ்க்கை அமையும் பட்சத்தில் அவள் அடையப்போகும் சந்தோசத்திற்கு அளவே இருக்காது.

 

நினைவுகள் கடலில் இருந்து வந்து கொண்டிருந்த அலை போல மாறி மாறி கிளம்பிக் கொண்டிருந்த நிலையில், தேவிகா வந்து சேர்ந்தாள். சாந்தாவின் அருகில் அமர்ந்தாள். தேவிகாவின் நெற்றியில் இருந்த திலகம் சிறிது கலைந்திருந்தது. அதை சாந்தா எழுந்து வந்து சரி செய்தாள். இருவரும் ஒன்றும் பேசவில்லை. மஞ்சுளாவின் வாழ்க்கை பற்றிய விபரங்கள் எதுவும் தேவிகாவுக்கு தெரியாது. அவள் இன்று வரை ஒரு சுதந்திர பறவை. வெளுத்ததெல்லாம் பால் என்று மயங்கும் விபரம் அறியாத சுதந்திர பறவை.

 

வழக்கம் போல தேவிகா ஜோடிகளுக்கு வேண்டிய சுண்டல் பொட்டலங்களை சாந்தா கொடுத்து முடிக்கவும், கண்ணன் வரவும் சரியாக இருந்தது.

 

காதலர்கள் நிலை உணர்ந்த சாந்தா எழுந்து செல்ல முயற்சிக்கவும், கண்ணன் அவளை கூப்பிடவும் சரியாக இருந்தது.

“அக்கா, ஒரு நிமிஷம் இருங்க.”

“என்ன தம்பி, என்ன விசேஷம்?”

“அக்கா, ஆறு மாதமாக அப்பா அம்மா எனது திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காமல் இருந்தவர்கள், நேற்று சரி என்று சொல்லி விட்டார்கள். அவர்களுக்கு தேவிகாவை பிடித்து விட்டது. இனி நான் தேவிகாவை திருமணம் செய்வதில் எந்த பிரச்சினையும் இல்லை”.

சொல்லிவிட்டு, சாந்தாவின் கையில் ஒரு இனிப்பு பொட்டலத்தை திணித்தான். சாந்தாவுக்கு மகிழ்ச்சி கரை புரண்டு ஓடியது. என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

“ரொம்ப சந்தோசம் தம்பி” என்று சொல்லி விட்டு எழுந்து நடக்க ஆராம்பித்தாள்.

சாந்தாவின் கண்களும் கண்ணனின் கண்களும் பேசிக்கொண்டதை தேவிகா அறிந்து கொள்ளவில்லை; அறிந்து கொள்ளவும் முடியாது.

கண்களில் இருந்து வழிந்த  கண்ணீரை துடைத்துக்கொண்டே சென்று கொண்டிருந்தாள் சாந்தா. அவளைப்பார்த்த அங்கு கடை விரித்திருந்த மற்ற கடைக்காரர்கள் காரணம் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தனர்.

அவர்களுக்கு தெரியாது அவை ஆனந்தக்கண்ணீர் என்று.

தேவிகாவை அவளுடைய காதலனுடன் சேர்த்து வைப்பதற்கு எத்தனை எத்தனை முயற்சிகள் சாந்தா எடுத்திருந்தாள் என்பது தேவிகாவுக்கு தெரியாது. வேறு யாருக்கும் தெரியாது. சாந்தாவுக்கு தெரியும்; கண்ணனுக்கு தெரியும், அந்த கடவுளுக்கும் தெரியும். கடந்த ஆறு மாதங்களாக கண்ணனிடம் பேசி பேசி, அவனுடைய மனதை மாற்றியவள் சாந்தா. பெற்றோர்கள் சம்மதம் இல்லை என்று தெரிந்து அவன் பின் வாங்கி விடக்கூடாது என்பதில் சாந்தா தீவிரமாக இருந்தாள்.

அவளுடைய பிடிவாதமும், விடா முயற்சியும் வெற்றியை தேடி தந்தன.  அவளை பொறுத்தவரையில் தேவிகாவின் திருமணம் என்பது மஞ்சுளாவின் திருமணம் போல தான்.

தேவிகாவிற்கு அவள் அறியாத ஒரு நம்பிக்கை நட்சத்திரம்- சாந்தா.

===

Series Navigationதெளிவத்தை ஜோசப்- எனது நினைவுகள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *