முதுமையை போற்றுவோம்

author
0 minutes, 1 second Read
This entry is part 15 of 17 in the series 23 அக்டோபர் 2022

 

முனைவர் என்.பத்ரி,

நிரந்தர உறுப்பினர்,தமிழ்நாடு முதியோர்கள் சங்கம்.

 

           1982 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சர்வதேச முதியோர் தினம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் அங்கீகரிக்கப்பட்டது. பின்னர், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரீகனால் 1988 ஆம் ஆண்டில் சர்வதேச முதியோர் தினம் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது.   டிசம்பர் 14, 1990 அன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் ஆகஸ்ட் 21 சர்வதேச முதியோர் தினம் என அறிவிக்கப்பட்டது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 21 அன்று மூத்த குடிமக்கள் தினம் உலகளவில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. மூத்த குடிமக்கள் என்போர் 60 வயது மற்றும் அதற்கு மேலுள்ள வயதான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் ஆவர்.

                வயது முதிர்ந்தவர்களை துஷ்பிரயோகம் செய்வதை தவிர்த்து, கண்ணியமாக நடத்துதல்,அவர்களின் சாதனைகளை அங்கீகரித்தல், அவர்களுக்கான சுகாதார ஏற்பாடுகளில் சமூக அக்கறையின் அவசியம், வயதானவர்களை பாதிக்கும் பிரச்சினைகள் போன்றவற்றில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு உலக முதியோர் தினம் உருவாக்கப்பட்டது.              

           மக்கள் விவசாயத் தொழிலை மறந்த பிறகு,கூட்டுக்குடும்ப வாழ்க்கையும் மறைந்தது. தனிக்குடும்பம்,ஒரு குழந்தை என்ற நிலை வந்த பிறகு முதியவர்களின் நிலை மிகவும் மோசமாகி முதியோர் இல்லங்களும்  சமூகத்தில் துளிர் விடத்தொடங்கியது துரதிஷ்டவசமானது.

          2050ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 20 சதவீதம் பேர் மூத்த குடிமக்களாக இருப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுக்கு தேவையான உதவிகள் அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசும்,மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.   அவர்களின் நிதிச் சுமையைச் சுலபமாக்க வருமான வரிச் சட்டங்கள் எளிமையாக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கான மருத்துவ  திட்டங்களிலும் பிரிமியம் தொகைக்கு இந்திய வருமான வரிச் சலுகை உண்டு. சில மாநில அரசுகள் மூத்த குடிமக்களுக்கான பேருந்து கட்டண சலுகைகளை அறிவித்துள்ளன. சில பேருந்துகளில் சில இருக்கை வசதிகளும் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளன.இவர்கள் முதலீடுகளின் மீது அதிக வட்டியைப் பெற முடியும்.மூத்த குடிமக்களின் வைப்புத் தொகைகளுக்கு வழக்கத்தில் உள்ள வட்டியை விடக் கூடுதலாக 0.5 விழுக்காடு வட்டி கிடைக்கும்.இவர்களின் தொலைப்பேசி கட்டணங்களுக்கு மானியமுண்டு. 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் முன்னுரிமை அடிப்படையில் புதிய தொலைப்பேசி இணைப்புக்குப் பதிவு செய்து கொள்ளலாம். பதிவுக்கட்டனத்திலிருந்து விலக்கும் அளிக்கப்படுகிறது.60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் தங்களது வழக்குகளின்போது, முன்னுரிமையான விசாரணைகள் கோரி நீதிமன்றத்திற்குக் கடிதம் எழுதலாம்.மூத்த குடிமக்களின் 18 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் வெளிநாட்டில் இருக்கும்போது பிள்ளைகளின் கடவுச்சீட்டு நகலுடன் விண்ணப்பித்தால் காவல்துறையின் சோதனையை ஒத்திவைத்து உடனடி கடவுச்சீட்டு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 2019 டிசம்பரில் மத்திய அமைச்சரவை கொண்டு வந்த பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் நலன் மசோதாவின்படி முதியோர் இல்லங்களில் மூத்த குடிமக்களின் பராமரிப்பு, நலனுடன் அவர்களின் தேவைகள், பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இவ்வளவு சலுகைகள் இருந்தாலும் ,உடலிலும்,மனதிலும் போதிய பலம் இல்லாததால் ,பெரும்பாலான முதியோர்கள் இவற்றை பயன்படுத்திக் கொள்ளும் நிலையில் இல்லை என்பதே உண்மை. எனினும், பொதுவான மக்கள் தொகை விகிதத்துடன் ஒப்பிடுகையில், முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால், பொருளாதார அடிப்படை கட்டமைப்பை அதற்கேற்ப மாற்ற வேண்டிய மிகப்பெரிய சவாலை இந்தியா எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

        சமூக அளவில் நகரமயமாக்கல், தாராளமய பொருளாதாரக் கொள்கை, குடும்ப அமைப்பு சிதைவு போன்றவற்றால் மூத்த குடிமக்கள் எண்ணற்ற துயரங்களை அனுபவித்து வருகின்றனர். உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஒரு ஆய்வில், உலகம் முழுவதும் ஐந்தில் ஒரு முதியவர், பொருளாதார ரீதியாகவும், மனநல ரீதியாகவும் வன்முறையைச் சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. குடும்ப வன்முறையின் அழுத்தத்தையும், வலியையும் தாங்கி கொள்ள முடியாமல் முதியோர்களிடையே தற்கொலை செய்து கொள்ளும் போக்கும் அதிகரித்து காணப்படுவதாக நான்காவது தேசிய மனநல கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

             குழந்தைகள் போன்ற முதியவர்கள் கூடுதல் கவனத்துடன்  பராமரிக்கப்படவேண்டியவர்கள். அவர்கள் கிடைத்தற்கரிய அனுபவக் கருவூலம்.அவர்களின் முதுமையையும், இயலாமையையும் காரணம் காட்டி அவர்களை ஒதுக்குவது சமுதாய சீர்கேடாகும். நாடுமுழுவதும் முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வருவதை, எந்த கோணத்தில் இந்த சமூகம் நியாயப்படுத்துகிறது என்று தெரியவில்லை. முதுமையையும் இயலாமையையும் வாழ்வின் ஒரு நிலையில் எல்லோருக்கும் ஏற்படும் அங்கம் என்று எடுத்துக் கொள்ளும் மனப்பக்குவம் இன்றைய தலைமுறைக்கு வரவேண்டும்.  முதுமையும், இயலாமையும் ஒரு பிரச்சனைதான் என்று இந்த சமூகம் ஒப்புக் கொண்டு அதற்கேற்ற தீர்வுகளை நடப்பில் கொண்டுவர உடனே  முயற்சிக்க வேண்டும்.  எந்தவித விவாதமும் இல்லாமல் மௌனமாய் காலத்தை கடத்தும் நமது  முதியோர்களின்  நிலை பரிதாபத்துக்குரியது.   இந்த நிலை உடனே மாறவேண்டும்.

     முதுமையும், இறப்பும் ஒவ்வொரு மனிதனின்வாழ்விலும் தவிர்க்க முடியாத நிலைகளாகும். வார்த்தைகள் தடுமாறினாலும் வாழ்க்கை தடுமாறாமல் வழிகாட்ட வல்லவர்கள் முதியவர்களாவர். இன்றைய நவீன உலகில் முதியோரின் முக்கியத்துவம் உணரப்படாதது துரதிஷ்டவசமானது.முதியோரைப் பேணிப்பாதுகாப்பதை இளைய சமுதாயம் தங்களது முக்கிய கடமையாக ஏற்க வேண்டும்.

        வீட்டிலும், சமுதாயத்திலும் தலைவர்களாக தங்கள் தோள்களில் நிறைய பொறுப்புகளை பல்வேறு பரிணாமங்களில் சுமந்து சமூக வளர்ச்சிக்கும்,குடும்ப வளர்ச்சிக்கும் உதவி வந்தவர்கள் இவர்கள்கள்தான். சமூகத்தின் மரபுகள், கலாச்சாரம், அறிவு போன்றவற்றை தமது அனுபவத்தின் மூலம் அடுத்த தலைமுறையினருக்கு எடுத்து செல்லும் திறமை பெற்றவர்களின் இவர்களது அறிவும், ஆலோசனைகளும் இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு மிகவும் அவசியமாகும்.இத்தகைய முதியோர்கள் வறுமையால் பாதிக்கப்படுவதுடன் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளையும் எதிர்நோக்க வேண்டியுள்ளது. பல சமயங்களில் துஷ்பிரயோகத்துக்கு ஆளாகின்றனர். இவற்றைத் தடுப்பதற்கு பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு தேவை. மூத்த குடிமக்கள் என்று பெருமையாகப் பேசப்படும் முதியோர்கள் அன்பு, பாசம், நேசத்துடன் கண்ணியமாகவும், கௌரவமாகவும் இனியாவது நடத்தப்பட வேண்டும். அதுவே இந்த நாளின் வெற்றியாக அமையும்.

                                                       

தொடர்புக்கு:63/2 ,A.E. கோயில் தெரு,செங்குந்தர்பேட்டை,

மதுராந்தகம்-603 306.கைப்பேசி

9443718043/7904130302nbadhri@gmail.com

 

 

  •  
Series Navigationரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்மலையக இலக்கிய முன்னோடி தெளிவத்தை ஜோசப்  நினைவுகள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *