காலம் மாறலாம்..

author
0 minutes, 2 seconds Read
This entry is part 5 of 13 in the series 30 அக்டோபர் 2022

 

மீனாட்சிசுந்தரமூர்த்தி                                    

 

 இன்னும் ரெண்டு மாசம் பொறுத்து அழைச்சிட்டுப் போயேன் தம்பி.

இல்லமா எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன்.

வீட்டு வேலைக்கும், பாப்பாவை குளிக்க வைக்கவும் ஆள் வராங்க.

மேகலா சமையல் மட்டும் செய்தா போதும்.

கண்ணனுக்கு ஒரு வயசு ஆனப்பிறகுதான கூட்டிட்டுப் போன,

அப்போ நிறைய விவரம் தெரியாதுமா

இப்படி ஒரு உரையாடல்  சந்த்ருவுக்கும் அவன் அம்மாவிறக்கும் நடந்தது.சொல்லப் போனால் இரண்டு வீட்டிலும் மூன்று மாதக் குழந்தையோடு மேகலாவையும், இரண்டரை வயதுக் கண்ணனையும்  லக்னோ அனுப்பத் துளியும் விருப்பமில்லை. அதற்கு ஒரு காரணமும் இருந்தது.

 

ஆறு மாதத்திற்கு முன்னர் லக்னோவிலிருந்து விடுமுறைக்கு ஊருக்கு வருவதற்கு விமானப்படை அதிகாரி ஒருவர் இரவு சபர்மதி விரைவு வண்டியில் ஏறினார். மேல் படுக்கையில் படுத்து உறங்கி விட்டார்.சற்று நேரத்தில் ஒரே கூச்சல் குழப்பம். மூன்று கொள்ளையர் புகுந்து அந்தப் பெட்டியிலிருந்தவர்களிடம் பணம்,நகைகளைப் பறித்துக் கொண்டிருந்தனர்.  இவர் இறங்கி அவ்ர்களைத் தடுத்துத் தாக்கியதில் சங்கிலியைப் பிடித்திழுத்து ரயிலை நிறுத்தி இருவர் இறங்கி ஒடிவிட்டனர்.ஒருவன் மட்டும் பிடிபட்டான். ஆனால் அவனும் தன்னிடமிருந்த  கைத்துப்பாக்கியை எடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் சுட்டதில் மூன்று குண்டுகள் மார்பில் பாய்ந்து வீரமரணம் அடைந்தார் திருமணமாகி  பிள்ளைப்பேறுக்காக மனைவியை சென்னையில் விட்டிருந்த அந்த இளம் அதிகாரி.

சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளையர்களின் கூடாரமாக இருந்த நிலை இன்னும் மாறவில்லை என்பது மட்டும் உண்மைதான்.

 

அதே விமானப்படையில் பணிபுரியும் மதன் இரண்டு மாதத்திற்குப் பின்னர் மனைவியையும் மகனையும் ஊருக்கு அழைத்து வந்தான். குட்டிப் பாப்பா பிறந்த ஒரு வாரத்தில் விடுமுறை முடிந்து திரும்பினான்.இப்போது கூட்டிச் செல்ல வந்துள்ளான். பெற்றவர்கள் இவனுக்கும் வேறு இடத்திற்கு சீக்கிரம் மாறுதல் வரவேண்டுமென வேண்டிக் கொண்டிருக்கிறார்கள்.

 

மேகலா நீ என்ன சொல்கிறாய்? நம்மால் குழந்தையைப் பார்த்துக் கொள்ள முடியாதா?

அதெல்லாம் ஒன்றுமில்லை, பார்த்துக்கலாங்க.

ஒருவழியாக  ஏற்கெனவே முன்பதிவு செய்திருந்த நாளில் சென்னையிலிருந்து லிங்க் எக்ஸ்பிரசில் புறப்பட்டனர் நால்வரும். மேகலா தாலிச்சரடு மாற்றி மஞ்சள் கயிறு போட்டிருந்தாள்.

மாமனார் கொலுசு கூடப் போட வேண்டாமெனச் சொல்லி விட்டார்.

அடுத்த நாள் இரவு  இவர்களிருந்த பெட்டியோடு இரண்டு பெட்டிகள் ஜான்சி வந்ததும் கழற்றி விடப்பட்டு அகமதாபாதிலிருந்து வந்த சபர்மதி எக்ஸ்பிரசோடு இணைக்கப்பட்டது. மறுநாள் மதியம் லக்னோ சென்று சேர்வார்கள்.ஜான்சி வந்ததும் மதன் மேகலா போட்டிருந்த தோடு, வளையல், மூக்குத்தி அனைத்தையும் வாங்கி கைக்குட்டையில் முடிந்து பேண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டான். சென்னையிலிருந்து ஜான்சி வரையில் செய்த பயணம் இனிமையானது, சுகமானது. ஆனால் இங்கிருந்து தொடங்கும் பயணம் அச்சம் தருவது.

 முன்பதிவு செய்திருந்தாலும் எவர் வேண்டுமானாலும் ஏறுவார்கள். கேட்காமலே இருக்கையில் அமர்வார்கள், படுத்திருந்தாலும் எழுந்து இடம் தந்தே ஆக வேண்டும்.

இந்த இடம்தான் என்ற நியதி இல்லாமல் வண்டி எங்கும் நிற்கும். பத்து, இருபது பேரெனப் பெரும்பாலும் கூட்டமாகவே ஏறுவார்கள். சட்டதிட்டம் பேச முடியாது, துப்பாக்கியும், கத்தியும் இடுப்பில் செருகி வைத்திருப்பார்கள்.கோபம் வந்தால் வாய் பேசாது கைதான் பேசும்.

பெரிய பால் கேன்களை சைக்கிளில் கட்டி வைத்திருப்பார்கள், அந்த சைக்கிளின் ஹேண்டில் பாரை சன்னலில்  எப்படியோ இலாவகமாக விழாமல் மாட்டி வைத்துவிட்டு ஏறுபவர்களும் உண்டு.இறங்க வேண்டிய இடத்தில் சங்கிலியை இழுத்து இரயிலை நிறுத்தி நிதானமாக இறங்கி சைக்கிளை எடுத்துக் கொண்டு செல்வது ஒருவகையில் வேடிக்கைதான், யாரும் ஒன்றும் செய்ய இயலாது.

மேகலா பயப்படுகிறாயா , நமக்கு கடவுள் துணை இருப்பார்.

இல்லீங்க நீங்க இருக்கும்போது எனக்கென்னங்க பயம்?

ஆதரவாக அணைத்துக் கொண்டான் மதன்.

சரிமா நீயும் பாப்பாவும் கீழ படுங்க, கண்ணன மேல படுக்க வைக்கிறேன்.

என்று சொல்லி படுக்கையை விரித்துப் படுக்க வைத்துப் போர்த்தி விட்டான். அது நான்கு படுக்கை வசதிகள் கொண்டது. இவர்களுக்கு மூன்று படுக்கைகள், இன்னொன்றில் வந்தவர் ஜான்சியில் இறங்கி விட்டதால் காலியாக இருந்தது. எதிரில் மேலும் கீழுமாக இரண்டு படுக்கைகள் அதில் ஒரு கணவன் மனைவி நடுத்தர வயதிருக்கலாம்.காசிக்குப் போகிறார்கள். கேரளாவைச் சேர்ந்தவர்கள், இந்த இரண்டு நாள் பயணத்தில் அன்போடு அக்கரையை குழைத்திருந்தார்கள்.மதன் உறங்காமல் அமர்ந்து ஆனந்த விகடனைப் புரட்டிக் கொண்டிருந்தான்.

 

இரவு இரண்டு மணியைத் தாண்டிக் கொண்டிருந்தது. உறக்கம் வந்தாலும் விரட்டிக் கொண்டிருந்தான். திடீரென ஒரு கும்பல் தடதடவென ஏறியது, காவலுக்கிருந்த போலீஸை நெட்டித் தள்ளியது. ஏய் எழுந்திரு, என்று மலையாளியை மிரட்டினான் ஒருவன். அவர் எழுந்து இது ரிசர்வேஷன் கம்பார்ட்மென்ட் தெரியுமா என்றார். உடனே அவன் அவரை பளார் என ஒரு அறை விட்டான்.இன்னொருவன் இத்தனா ஹிம்மத் ஹே என்று கத்தியை எடுத்தான்.எதிர்பாராத தாக்குதலில் நிலைகுலைந்த மனிதரின் கடைவாய்ப் பற்கள் இரண்டு தெறித்து இரத்தம் ஒழுகியது.வேகமாய் எழுந்த மதனின் கரம் பற்றி அழுத்தினாள் மேகலா, ‘அதோடு மாப் கரோ பையா’ என்றாள் அந்த முரடனைப் பார்த்து,சரி நகைகளை எடுங்க என்றது கும்பல்.அந்தப் பெண்மணியிடமும் எதுவுமில்லை,மேகலாவிடமும் ஒன்றுமில்லை.ஏய் கஹாஞ் சுப்பாக்கே ரக்காஹே என்று சீறினான் ஒருவன்.குழந்தை விழித்துக் கொண்டு அழுதது, கண்ணனும் எழுந்து மிரண்டு பார்த்துக் கொண்டிருந்தான்.மதன் எதுவுமே பேசாமல் நகைகளை எடுத்துக் கொடுத்தான். கண்ணிமைக்கும் நேரத்தில் குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டிருந்த மேகலாவை ஒருவன் தரதரவென இழுத்து கீழே இறக்கி விட்டான்,தடுக்க முயன்ற மதனைச் சூழ்ந்து கொண்ட கும்பல்,நகைகளை  ஒளித்து வைத்ததற்கு இதுதான் தண்டனை’ என்றது. இரயில் வேகமெடுத்தது. சிறுவன் பெருங்குரலில் அழலானான்.

 

மினுக் மினுக்கென அழுது வடியும் விளக்கொளியிலிருந்த சின்ன ஸ்டேஷன் அது,இரயில் வேகமெடுத்து கண்ணிலிருந்து மறைந்ததும் ,அழுகின்ற குழந்தையோடு திகைத்து நின்றவள்  ஆறெனக் கண்ணீர்ப் பெருகிடத் திகைத்து நின்றாள்.அதற்குள் ஏழெட்டு பேர் பெண்களும் ஆண்களுமாய்ச் சூழ்ந்து கொண்டனர் பாமர மக்கள்.ஆறுதலாய்ப் பேசினது தெரிந்தது புரியவில்லை. முருகனை மனதார வேண்டிக் கொண்டு ஸ்டேஷன் மாஸ்டர் அறை நோக்கி நடந்தாள் மேகலா.பேச்செழாமல் ஆங்கிலத்தில் சொல்ல முற்பட , அதற்குள் அடுத்த ஸ்டேஷனில் இறங்கியிருந்த மதன் அலைபேசியில் அழைத்து, 

“பயப்படாதே, தைரியமா இரு. நான் வரேன்’ என்றான்.

இரண்டு நிலையத்தினரும் பேசி முடிவெடுத்து மதனிடம்,’உன் மனைவி, குழந்தையைப் பத்திரமாக உன்னிடம் சேர்ப்பது எங்கள் பொறுப்பு என்றனர்.

மேகலாவை அந்த நிலைய அதிகாரி இரண்டு பெண் காவலர்களின் துணையோடு தனது காரில் தானே அழைத்துச் சென்று மதனிடம் சேர்த்தார்.கண்ணனும்,மதனும் இருவரையும் கட்டிக் கொண்டனர். கணவனின் கண்களில் அன்றுதான் கண்ணீரைக் கண்டாள் மேகலா.சுற்றி நின்றவர்களின் கன்னங்களில் உருண்டோடியது நீர் முத்துகள்.

காத்திருந்த இரயிலும் புறப்பட்டது நிம்மதியாய்.

 

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த  நிகழ்வை மேகலாவிற்கு நினைவூட்டியது  நாளிதழில் கண்ட இந்த செய்தி .

‘சம்பல் பள்ளத்தாக்குகளைக் காக்க நாங்க ரெடி!, பொறுப்பு தர நீங்க ரெடியா– முன்னாள் கொள்ளையர் அரசிடம் கோரிக்கை.

—————-

Series Navigationநம்பிக்கை நட்சத்திரம்           பத்தினி மாதா
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *