முகவரி

This entry is part 13 of 14 in the series 20 நவம்பர் 2022

30 ஆண்டுகளுக்கு முன் நான் சிங்கப்பூர் புறப்பட்டபோது அத்தா சொன்னார்.

‘நல்லபடியாகப் போய்வா. அங்கே நிரந்தரமாகக்கூட இருக்கும்படி  ஆகலாம். ஆனால் இந்த மண்ணில் உனக்கென்று முகவரி எப்போதும் இருக்க வேண்டும்.’

செடி வைக்க குழி பறித்தபோது, புதையல் கிடைத்ததுபோல், சிங்கப்பூரில் இருக்கும் என் தூரத்து உறவினர், நாணயமாற்று வியாபாரி இஸ்மாயில்,  என்னை குடும்பத்தோடு சிங்கப்பூருக்கு அழைக்க எல்லா ஏற்பாடுகளும் செய்தார். மிகப் பெரிய கூட்டுக்குடும்பத்தில் நான், என் மனைவி, மூன்று மகள்கள் இருக்கிறோம். இறைக்கும் நெல்லைப் பொறுக்க, என் முதுகிலேறி மற்ற குஞ்சுகள் முந்தினாலும், அது சுகமாகவே இருந்தது.  தனிக்குஞ்சாகத்தான் சிங்கப்பூரில் இருக்கவேண்டும்.. நினைக்கும்போது வலித்தது. இன்னும் ஒரு வாரத்தில் பயணம். அத்தா மேலும் சொன்னார்.

‘ஆவிடையார் கோவில் ரோட்டில் காதர்பாவா மில்லுக்கு கிழக்கே உன்  அம்மா பேரில் 50குழி இடம் இருக்கிறது (7000 சதுர அடி) அது, எப்பவோ நான் வாங்கி உன் அம்மா பேரில் எழுதிவைத்தது.’

சொல்லிவிட்டு சுற்றுமுற்றும் பார்த்தார். யாருமில்லை. பின் தொடர்ந்தார்.

‘உன் அம்மாவுக்குப் பிறகு உன் கூடப்பிறந்த 11 பேருக்கும் அதில் பங்குண்டு. அப்படி அந்த இடத்தைப் பிரிக்கக் கூடாது. நாளையே ரெஜிஸ்ட்ரார் ஆபீசுக்கு உங்க அம்மாவை அழைத்துப் போய், உன் பெயருக்கு அந்த இடத்தை மாற்றிக்கொள். பத்திரம்  எழுதும் வெங்கடேசனிடம் மூலப்பத்திரத்தைக் கொடுத்துவிட்டேன். நாளை 3 மணிக்கு உன் பெயரில் பத்திரம் எழுதி தயாராக வைத்திருப்பான். எல்லாவற்றையும் வெங்கடேசன் பார்த்துக் கொள்வான். காதும் காதும் வச்சதுமாதிரி காரியத்தை முடித்துவிட்டு நீ சிங்கப்பூருக்குப் போ. சொந்த மண்ணில் உனக்கு முகவரி வேண்டும்.’

சிங்கப்பூர் வந்த  6 ஆண்டுகளில் அத்தா வஃபாத் ஆகிவிட்டார். தொடர்ந்து அடுத்த ஆண்டு அம்மாவும் வஃபாத் ஆகிவிட்டார்கள். பிடுங்கி நடப்பட்ட நான் சிங்கப்பூரில் வளர்கிறேன். ஒரு நாள் முதலாளி இஸ்மாயிலிடம், அத்தா சொன்னதைச் சொன்னேன்.  அவர் சொன்னார்.

‘முகவரி என்றால் வீடுதான். இப்போதுதான் நான் வீடு கட்டிமுடித்தேன். அந்த  எஞ்ஜினியரிடமே சொல்லி, உன் இடத்தில் உனக்கான வீட்டைக் கட்டச் சொல்லுவோம். உன் மாமானாரிடம் தகவலைச் சொல்லி, அவருக்குத் தேவையானவற்றை ஏற்பாடு செய்யச் சொல். காசு இங்கிருந்து உன் கணக்கில் அனுப்பிவிடுகிறேன். ஒரே வருடத்தில் உனக்கு வீடு தயாராகிவிடும்.’

அவர் சொன்னதுபோலவே வீடு ஒரே வருடத்தில் முடிந்துவிட்டது. பால் காய்ச்சி முறைப்படி குடிபோகும் சடங்கு செய்யவேண்டுமாம். நான் குடும்பத்தோடு ஊருக்குச் சென்றேன். கூடப்பிறந்த எல்லாருக்கும் ஏற்கனவே தகவல் சொல்லி அழைத்துவிட்டேன். நெருங்கிய உறவுகளுக்கும் சொல்லிவிட்டேன். முக்கியமான  மற்றவர்களை என் சார்பாக என் மாமனாரே அழைத்துவிட்டார். கூடப்பிறந்தவர்களிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. பால் காய்ச்சும் அந்த சடங்கை என் மனைவியின் குடும்பம்தான் செய்தது. அரைமணி நேரத்துக்கு முன் என் குடும்பத்தார் எல்லாரும் வந்தார்கள். யாரும் முகம் கொடுத்துப் பேசவில்லை.  நான் பேசினாலும் உதறிவிட்டார்கள். அரைமணி நேரத்தில் சென்றுவிட்டார்கள். நான் பயணம் வந்ததுபற்றியோ, என் குடும்பநலன்களைப் பற்றியோ கூட எதுவும் விசாரிக்கவில்லை. எல்லாரும்  சென்றபிறகு என் மாமனார் சொன்னார்.

‘நீங்கள் உங்கள் தாயாரிடமிருந்து யாருக்கும் தெரியப்படுத்தாமல், திருட்டுத்தனமாய் இடத்தை எழுதி வாங்கிவிட்டதாக அவர்கள்  நினைக்கிறார்கள். உண்மையை நாம் சொன்னால், உங்க அத்தா பிள்ளைகளிடம் பாரபட்சம் காண்பிக்கிறார் என்று ஆகிவிடும். காலம் வரும்போது புரிந்துகொள்வார்கள். அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான். நீங்கள் கவலைப்படாதீர்கள்.’

1000 சதுரஅடியில் வீடு. 6000 சதுரஅடி காலியிடம். சுற்றிலும் வேம்பு, சவுக்கு, மா, தென்னை மரங்கள் வளர்ந்துகொண்டிருக்கின்றன. சில வருடங்களுக்குப்பின் அந்த இடம் எப்படி இருக்கும் என்ற எண்ணமே இனித்தது. ஒரு கயிற்றுக் கட்டிலில் ஆயுள் முழுக்க அங்கேயே படுத்திருக்கலாம் என்று தோன்றியது. குளுமையான காற்று. 10 வயதில் அந்த இடத்தில் பட்டம் விட்ட ஞாபகம் வந்தது. ஆசையைப் பேசி என்ன ஆகப்போகிறது. மாமனாரிடம் சொன்னேன்

‘இந்த இடமும் வீடும்  நான் நினைத்ததைவிட அழகாக இருக்கிறது. எனக்கு சிங்கப்பூர்  போகவே இஷ்டமில்லை. ஆனாலும் என்னால் இங்கு  இருக்கமுடியாது. ஏகப்பட்ட வேலைகள் அங்கே இருக்கிறது. வீட்டை என்ன செய்வது?’

‘வீட்டை பூட்டிப்போட்டால் வீணாகிவிடும். என் வகையில் யாரையும் இங்கே இருக்கச் சொல்லமுடியாது. அது நன்றாகவும் இருக்காது. உங்கள் வகையில் யாரையாவது இருக்கச் சொன்னால் நாளைக்கு உரிமை கொண்டாடுவார்கள். காலிபண்ண மாட்டார்கள். மளிகைக்கடை ஜமாலண்ணன் வீடு கேட்டார். 4000 ரூபாய் வாடகைக்கு ஒப்புக்கொண்டார். அவர் வீட்டில் இருக்கட்டும். உங்கள் அண்ணன் மகன் குலாம், பாவம், பிறவி ஊமை. இப்போது ஆவிடையார் கோயிலில் ஒரு தையல்காரரிடம் காஜா பட்டன் கட்டிக் கொண்டிருக்கிறான். இரண்டு பிள்ளைகள் அவனுக்கு.  அவன் மனைவி ஒரு தையல் மிஷினை வைத்து கொஞ்சம் சம்பாதிக்கிறது. கஷ்டப்படுகிறான். வாடகையை அவன் வாங்கிக் கொள்ளட்டும். வீடு பாதுகாப்பாக இருக்கும். உங்க அண்ணன் மகனுக்கும் உதவியதுபோல் இருக்கும். முறைப்படி வாடகைப் பத்திரம் எழுதி ஒப்பந்தம் செய்துகொண்டுதான் வாடகைக்கு விடவேண்டும். ஒரு பாதுகாப்புக்காக நம் பள்ளிவாசல் நாட்டாமையை சாட்சிக் கையெழுத்துப் போடச் சொல்லுவோம்.’

யோசனை சரியென்றே பட்டது. பத்திர வேலைகள் முடிந்தன. ஜமாலண்ணன் வீட்டை ஒப்புக்கொண்டார். குலாமையும் வரச்சொல்லி, வாடகையை அவனிடம் கொடுக்க ஏற்பாடுகள் செய்துவிட்டு நான் சிங்கப்பூர் திரும்பிவிட்டேன்.

பத்து ஆண்டுகள் ஓடிவிட்டன. ஒரு நாள் மாமனார் அழைத்தார்.

‘ஜமாலண்ணனுக்கும், குலாமுக்கும் சண்டை முற்றி கைகலப்பாகிவிட்டது. என்ன நடந்துச்சின்னே தெரியல. வீட்டுக்கு  வேறெ ஏற்பாடு செய்யணும். ஒரு வாரம் தங்குறது மாதிரி  புறப்பட்டு வாங்க’ என்றார்

ஊர் புறப்பட்டேன். வீடு பூட்டி இருந்தது. மாமனார்  வீட்டைத் திறந்துவிட்டார். இது என்ன, நான் கட்டிய வீடுதானா? என்னால் நம்பமுடியவில்லை. தரை அப்படியே பள்ளமாய் உட்கார்ந்துவிட்டது. மொசைக் தளம் ஆங்காங்கே பெயர்ந்திருந்தது. சுவர்களில் தண்ணீர் ஒழுகி காரை படிந்திருந்தது. எங்கு பார்த்தாலும் ஒட்டடை. அந்த அழகான சுற்றுவெளியெல்லாம் வேலிக்கருவை மண்டிக்கிடந்தது. பத்து ஆண்டுகளுக்கு முன் நான் கட்டிய வீடா? திகைப்பு அடங்குவதற்கு முன்  மாமனார் சொன்னார்.

மாதத்தின் கடைசி நாளிலேயே அடுத்த மாத வாடகைக்கு வந்து குலாம் நின்றுவிடுகிறானாம். அவனோடு நாலைந்து பேர் வருகிறார்களாம் எல்லாருமே அவனோடு ஊமைப் பள்ளிக்கூடத்தில் படித்த சுற்றுக் கிராமத்தில் உள்ளவர்களாம். மண்டை தெறிக்க குடிக்கிறானாம். வாடகை வாங்குவதோடு சரி. வீட்டைப்பற்றியோ அதை சீர்படுத்திக் கொடுப்பது பற்ற்றியோ அவனுக்குக் கவலையில்லையாம். ஜமாலண்ணனுக்கு  இனிப்பு நீர் முற்றிப்போய், மருத்துவமனையில் சேர்த்து காலில் இரண்டு விரல்களை எடுத்துவிட்டார்களாம். மருத்துவமனைக்குப் போய் ஏகப்பட்ட தகராறு செய்து, சாமான்களை எடுத்து வீசி, காவல்துறை சம்பந்தப்பட்டு சமாதானம் செய்யும்படி ஆகிவிட்டதாம். வீட்டை ஜமாலண்ணன் காலி செய்துவிட்டாராம். இனி வேறு யாரையாவதுதான் வாடகைக்கு வைக்கவேண்டுமாம்.

இவ்வளவையும் மாமனார் சொல்லி முடித்தார். மலை உச்சி, பார்ப்பதற்கு அழகாகத்தான் இருக்கிறது. ஏறும்போதுதானே தெரிகிறது. பாதையில் ஆபத்தும், பாம்புகள் நெளிவதும். நடந்துவிட்ட எதையுமே நம்பமுடியவில்லை. திரைப்படங்களில் நடப்பது போலல்லவா நடந்திருக்கிறது. உதவி செய்ய நினைத்ததற்கு இத்தனை பெரிய விலையா? இப்போது என்ன செய்வது?

வீட்டைப் பூட்டிப்போடவும் கூடாது. வேறு யாரையாவது வாடகைக்கு வைக்கவேண்டும். வீட்டை சரிசெய்யவே 2 லட்சம் வேண்டும். வாடகையை கணக்கில் போடச் சொல்லலாம். அல்லது வேறு யாரிடமாவது கொடுக்கச் சொல்லலாம். அல்லது மாமனாரே கூட வாங்கி கணக்கு வைத்துக் கொள்ளலாம். மாமனாரிடம் பேசினேன்.

‘உங்கள் உறவுகள் இத்தனை பேர் இருக்கும்போது நான் வாங்குவது முறையாக இருக்காது. வேறு  யாரை வாங்கச் சொன்னாலும் குலாம் ஒதுங்கிக் கொள்வான் என்று நம்ப முடியாது. சுகம்  கண்டுவிட்டான். யாரைக் குடி வைத்தாலும் அவனால் அவர்களுக்கு பிரச்சினைதான். அவன் விடமாட்டான். குடிகாரனுக்குக் காசில்லையென்றால் கொலைகூட செய்வான். நான் சொல்லவில்லை. அவனைப்பற்றி ஜமாலண்ணன் சொன்னதைத்தான் சொல்கிறேன். நீங்களே ஒரு யோசனை சொல்லுங்கள்’

என்றார் மாமனார். பேசிக்கொண்டிருக்கும்போதே குலாம் வந்துவிட்டான். யார் கறந்தாலும் எந்தப் பிரச்சினையும் கொடுக்காமல் 3 படி பால் கறக்கும் பசுபோல் அமையதியாக இருந்தான். இவனாலா இவ்வளவு பிரச்சினைகள்? அவன் மனைவியும் கூட வந்திருந்தது. பாவமாக இருந்தது. தப்பு. பாவப்படக்கூடாது.  குலாமின் மனைவி குலாமை, ஏதோ செய்யச் சொல்லி சைகை காட்டினாள். 

‘இனிமேல் அப்படியெல்லாம்  செய்யமாட்டேன்’ என்ற தோரனையில் தன் உள்ளங்கையின்மேல் இன்னொரு கையால் அடித்து சத்தியம் செய்து இரண்டு சொட்டு கண்ணீரை வீணாக்கினான் குலாம்.

நம்பலாமா? எனக்கு சிங்கப்பூரில் ஏகப்பட்ட வேலைகள். இப்படி திடீர் திடீரென்று ஏதாவது நடந்தால் என்ன செய்வது? ‘யோசித்துச் சொல்கிறேன்’  என்று மட்டும் அவன் மனைவியிடம் சொல்லி போகச் சொல்லிவிட்டேன்.

வேலிக்கருவைகளை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும். வீட்டை முழுதுமாக புதுப்பிக்க வேண்டும். அதற்கு  ஒரு பெரும் தொகை வேண்டும். எல்லாம் செய்து மீண்டும் குலாமிடம் மாட்டிக்கொண்டு விழிப்பதா? இல்லை வீட்டை அப்படியே கிடக்கட்டும் என்று விட்டுவிடுவதா? எந்த வீட்டில் ‘காலமெல்லாம் இருக்க ஆசையாக இருக்கிறது’ என்று சொன்னேனோ, அந்த  வீட்டில் கொஞ்ச நேரம் நிற்கவே பயமாக இருக்கிறது. நாலைந்து நாட்கள் மாமனார் வீட்டில்தான் இருந்தேன். வீடு பூட்டித்தான் கிடந்தது. இன்னும் இரண்டு நாட்களில் சிங்கப்பூர் புறப்படவேண்டும். ஏதேனும் ஒரு முடிவை எடுத்தே ஆகவேண்டும்

அடுத்தநாள் காலை பள்ளிவாசல் நாட்டாமை என்னைப் பார்க்க வந்தார். சொன்னார்

‘உங்கள் வீட்டுப் பகுதியில் இருப்பவர்கள் தொழுவதற்கு பெரிய பள்ளிக்குத்தான் வரவேண்டியிருக்கிறது. ரொம்ப தூரம். அங்கிருக்கும் பிள்ளைகள் ஓதுவதற்கு பெரிய பள்ளியில் மட்டும்தான் மதரஸா (அரபுப் பள்ளி) இருக்கிறது. பல பிள்ளைகள் பெரிய பள்ளிக்கு வரமுடியாமல் தொடர்ந்து ஓதுவதில்லை. பேசாமல் அந்த இடத்தை பள்ளிவாசலுக்குத் தந்துவிடுங்கள். நான் பொறுப்பெடுத்துக்கொண்டு உங்கள் வீடு இருக்கும் இடத்தில் ஒரு பள்ளிவாசலையும் மதரஸாவையும் கட்டிவிடுகிறேன். பள்ளிவாசல் கமிட்டியிடம் அப்படி ஒரு திட்டம் இருக்கிறது. இடம் வாங்கமுடியாததால் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது. தவிர நம்ம ஊருக்கு உங்கள் வீடு இருக்கும் பகுதியில் பள்ளிவாசல் அவசியம். இது என் யோசனைதான். மற்றபடி நீங்கள் முடிவு செய்துகொள்ளுங்கள்.’

எனக்குப் பக்கத்தில் அத்தா வந்து நிற்கிறார். மகனே என்று அழைக்கிறார். சிரிக்கிறார். அட! பிரமையா? இந்த நிமிடம்வரை ஓர் இருள் அல்லவா சூழ்ந்திருந்தது. உடனே பத்திரம் எழுத ஆள் வரச்சொன்னேன். அந்த இடத்தை அப்படியே பள்ளிவாசலுக்கு இனாம் சாசனம் செய்துவிட்டு சிங்கப்பூர் புறப்பட்டுவிட்டேன்.

மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டன.  ஒரு நாள், நாட்டாமை அழைத்தார். பள்ளிவாசல், மதரஸா  வேலைகள் முடிந்துவிட்டதென்றும், இந்த மாதம் 29ஆம் தேதி பள்ளிவாசல் திறப்புவிழா வென்றும், அழைப்பிதழ் அனுப்புகிறேன் என்றும், என்னால்தான் இது  சாத்தியமாகி இருக்கிறதென்றும், நான் வர இயலாவிட்டால், நான் வரமுடிந்த தேதியில் திறப்புவிழாவை வைத்துக் கொள்வதென்றும் சொன்னார்.

என்னால் திறப்புவிழா தள்ளிப்போவதா? கூடாது. அவ்வளவு முக்கியத்துவமா எனக்கு? மீண்டும் ஊர் புறப்பட்டேன். திருச்சி விமான நிலையத்துக்கு பள்ளிவாசல் கமிட்டி சார்பாக சிலர் என்னை வரவேற்க வந்திருந்தார்கள். அவர்களோடு நேராக புதிய பள்ளிவாசலுக்குச் சென்றேன்.

‘யூசுப் ராவுத்தர் பள்ளிவாசல்’ என்ற பெயர்ப்பலகையைப் பார்த்தவுடன் முகம் பொத்தி அழுதேன். என்னைத் தோளில் சாய்த்துக்கொண்ட என் மாமனார் கண்களிலும் கண்ணீர். அந்த சுற்றுச் சுவருக்குள்ளே அழைத்துச் சென்றார். ‘யூசுப் ராவுத்தர் அரபி மதரஸா’ என்ற இன்னொரு பெயர்ப்பலகையைப் பார்த்து குலுங்கிக் குலுங்கி அழுதேன்.

ஓ! என் அத்தா சொன்ன முகவரி இதுதானோ?

யூசுப் ராவுத்தர் ரஜித்

Series Navigationஆன்ம தொப்புள்கொடி துபாய் முருங்கை
author

யூசுப் ராவுத்தர் ரஜித்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *